Loading

06

மிதிலா கோபத்துடன் எழுந்து செல்வதைக் கண்டவனின் இதழ்கள் மலர்ந்தன.

அவனை முறைத்த சிரஞ்சீவி, “என்னை எப்படியோ சென்னை போறதுக்குள்ள கீழ்பாக்கத்துல அட்மிட் பண்ணிருவ போல டா” எனப் புலம்பினான்.

“எதுக்கு மச்சான் அவ்ளோ தூரம் அலையணும், ஒரு போன் கால் போதும். நாய் பிடிக்கிற வண்டில வந்து உன்னை அப்படியே அள்ளிட்டு போய்ருவாங்க” என்க,

“நீ எல்லாம் நண்பனா டா…” என முறைக்க, “இல்லயா பின்ன!” என்றான் ரகுநந்தன்.

“எனக்கு எல்லாம் தேவ தான் டா. உன் கூட வந்து ரெண்டு வருஷம் குப்பை கொட்றேன்ல, எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்” என அவன் புலம்ப,

“நண்பன்டா” என்றான் ரகுநந்தன். “போதும் டா உன் சங்காத்தமே வேண்டாம். நான் நாளைக்கே சென்னை கிளம்பறேன்” என சிரஞ்சீவி முறுக்கிக் கொள்ள,

“அப்போ டிக்கெட் புக் பண்ணிறவா டா” என்றான் ரகுநந்தன்.

அவனை முறைத்த சிரஞ்சீவி எதுவும் பேசாமல் அங்கிருந்து எழுந்து செல்ல, “பயபுள்ள உண்மைலயே கோபப்படுது போல” என நினைத்தவன், அவனை அழைத்துக் கொண்டே பின்னால் சென்றான் ரகுநந்தன்.

அவனோ கோபம் என்ற பொய் போர்வையை போர்த்திக் கொண்டு செல்ல, “நைட் வீட்டுக்கு வந்து தான ஆகணும். அப்போ பார்த்துக்கிறேன்” என்றவன் அடுத்த வகுப்பு அவனுக்கு இருக்க, அதற்கு தயாரானான் ரகுநந்தன்.

அன்றைய நாள் நறுமுகைக்கு கொண்டாட்ட கோலாகலமாய் அமைய, இங்கு மிதிலாவோ கோபக் கனலில் மூழ்கி கொண்டிருந்தாள்.

அவளைக் கண்ட நறுமுகை, “என்ன குட்டச்சி, யார் மேலயோ கோபமா இருப்ப போல” என்றாள்.

“அதெல்லாம் ஒன்னுமில்ல” என முகத்தை திருப்பிக் கொள்ள,

“என்னமோ சரியில்ல டி நீ, காலேஜ்க்கு போக ஆரம்பிச்சதுல இருந்தே நீ என்னமோ என்கிட்ட மறைக்கிற. பார்த்துக்கலாம், என்கிட்ட சொல்லாமயா போய்ருவ” என்றவள் அதற்கு மேல் அவளை மேலும் துருவ மனமில்லாமல் விட்டு விட்டாள்.

வீட்டிற்கு இருவரும் ஒன்றாக வந்தாலும் சிரஞ்சீவி இன்னும் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டிருக்க, “இவன் ஒருத்தன் எப்போ பார்த்தாலும் மூஞ்ச உர்ருனு வச்சுக்கிறான்” எனப் புலம்பியவன்,

“இப்போ என்ன டா மச்சான் உனக்கு பிரச்சனை?” என்றான் ரகுநந்தன்.

“ஏன் டா என்கிட்ட இருந்து இத மறைச்ச?” என்க,

“எத டா?” என்றான் ரகுநந்தன்.

“நான் எத கேட்கிறேனு உனக்கு தெரியாது!” என அவன் மீண்டும் இடக்காய் கேட்க,

“கண்டுபிடிச்சுட்டியா!” என அவன் அசடு வழிய,

“உன்னைப் பத்தி தெரியாத ஆளா இருந்தா பரவாயில்ல, எனக்கு தான் எல்லாம் தெரியுமே” என்றான் சிரஞ்சீவி.

“தெரியல டா. எனக்கே என்னமோ ரொம்ப குழப்பமா இருக்கு” என்க,

“இன்னும் என்ன டா குழப்பம்?” என்றான் சிரஞ்சீவி.

“தெரியல டா, ஆனா குழப்பம்” என்க, தலையில் அடித்துக் கொண்ட சிரஞ்சீவி,

“சரி அத விடு. அப்பா போன் பண்ணாரு” என்றான்.

“ம்…” என்றவன் ரெபிரஷ் ஆகி உடை மாற்ற, “என்னடா வெறும் ம் கொட்ற?” என்றான் சிரஞ்சீவி.

“வேற என்ன டா சொல்ல சொல்ற?” என அவன் கோபமாய் வினவ,

“இன்னும் உனக்கு அவங்க மேல உள்ள கோபம் போகலயா?” என்றான் சிரஞ்சீவி.

“ப்ச்… இப்போ அதப் பத்தி பேச வேண்டாமே! திரும்ப பழசை நினைச்சா நைட் புல்லா தூக்கம் வராது” என்றவன் தொலைக்காட்சிப் பெட்டியை ஆன் செய்தவன் இசையருவி சேனலில் ஓடிக் கொண்டிருந்த பாடல் ஒன்றை முணுமுணுத்துக் கொண்டிருந்தான்.

“அப்போ உன் முடிவுல எந்த மாற்றமும் இல்ல” என்க,

“இல்ல” என அவன் ஒற்றை வார்த்தையில் முடிக்க,

“அத அம்மாகிட்டயாவது சொல்லலாம்ல டா, வயசான காலத்தல அவங்களயும் ஏன் கஷ்டப்படுத்தற?” என்றான் சிரஞ்சீவி.

“நான் பட்ட கஷ்டங்கள விட இது கம்மி தான்” என்றவன் மீண்டும் டீவியில் மூழ்கி விட,

ரிமோட்டை எடுத்து அதனை அணைத்தவன், “அவங்க பண்ணது தான் தப்புனு உன்கிட்ட சாரி கேட்டுட்டாங்கல்ல டா. அப்புறமும் ஏன் இன்னும் பிடிவாதம் பிடிக்கிற?” என சிரஞ்சீவி கோபமாக வினவினான்.

“அவள இங்க சுமக்கிறேன் டா” என தன் நெஞ்சைத் தொட்டு காண்பித்தவன், “அவ்ளோ ஈசியா தூக்கி எறிஞ்சுட்டு வா’னு சொல்றாங்க, அதுக்கு என்னை சாவ சொல்லிருக்கலாம்” என கோபத்தில் தொடங்கி ஆற்றாமையுடன் முடிக்க,

‘கடவுளே, தலை கால் புரியல. எனக்கே இப்படி இருந்தா அவங்க என்ன தான் பண்ணுவாங்க, இவன பெத்தாங்களா இல்ல செஞ்சாங்களானே தெரியல’ என நினைத்தவன்,

அதற்கு மேல் அங்கு நிற்காமல் வெளியே வந்தான் சிரஞ்சீவி.

அவன் கதவை திறந்து கொண்டு வெளியே வரவும், அவர்களின் எதிர் பிளாட்டில் இருந்து காலையில் வந்து உணவு கொடுத்த பெண் வரவும் சரியாக இருந்தது.

“அடுத்ததா” என அவன் நினைக்க, எதிரில் இருந்தவளோ,

“அத்தான் கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றாள்.

“ஏன் மா, அவன் கொஞ்சம் நஞ்சம் உயிரோட இருக்கிறதும் உங்களுக்கு பிடிக்கலயா? மொத்தமா ஏன் எல்லாரும் அவன இப்படி டார்கெட் பண்றீங்க” எனக் கோபத்தில் கூற,

“ஸாரி அண்ணா, அவரோட நிலைமை எனக்கும் புரியுது. ஆனா, அண்ணி தான் காலைல சாப்பாடு கொடுக்க சொன்னாங்க, அதான் நான் வந்தேன்” என்க,

“எங்க உன் அண்ணி? எல்லாம் பண்ணிட்டு உள்ள இருக்காளாக்கும்” என இவன் கோபத்தில் வினவ,

அவனின் கோபத்தை உணர்ந்தார் போல் எதிர் பிளாட்டில் இருந்து கதவை திறந்து கொண்டு வந்தாள் ஒருவள்.

“வாங்க மேடம்… ஏற்கெனவே அவன் கொதி கலனா இருக்கான், இதுல நீ என்ன ஆசிட் ஊத்த வந்த?” என்றான் எகத்தாளமாய்.

“உனக்கும் நான் பண்ணது தப்புனு தான் தோணுதுல்ல ண்ணா” என்க,

“உடனே முகத்த மட்டும் தூக்கி வச்சுக்க, நீயும் அம்மாவும் பண்ணது தான் இந்த அளவு கொண்டு வந்து விட்ருக்கு. கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி கூட அவன் என்ன சொன்னான் தெரியுமா?” என்றவன்,

ரகுநந்தன் கூறிய வார்த்தைகளை அப்படியே கூற,

“நான் இவ்ளோ எதிர்ப்பார்க்கல ண்ணா” என்றாள் குற்றவுணர்ச்சியுடன்.

“என்னிக்கு தான் அவன புரிஞ்சுக்கிட்டீங்க, அவனும் முதல்ல இருந்து சொல்லிக்கிட்டே தான இருக்கான். ஆனா நீங்க தான் பொறுக்க மாட்டாம இதோ உன் நாத்துனார் கூட நிச்சயதார்த்தம் வரை கொண்டு போனீங்க. பட்டு தான் ஆகணும் இப்போ” என்றான் சிரஞ்சீவி.

அதற்குள் உள்ளிருந்து ரகுநந்தன் அழைக்க, “இதுக்கும் சேர்த்து எனக்கு மண்டகப்படி கிடைக்கும். போய் நீங்க ரெண்டு பேரும் சந்தோசமா இருங்க, அவன் நிம்மதிய கெடுத்துட்டு!” என்றவன் கதவை சாற்றிக் கொள்ள,

“அங்க என்னடா வேல?” என்றான் ரகுநந்தன்.

“ஒன்னுமில்ல டா, சும்மா காத்து வாங்குனேன்” என இவன் சமாளிக்க,

“நீ என்ன காத்து வாங்குனேன்னு எனக்கு தெரியும். மூடிட்டு உள்ள வா” என்றவன்,

“நைட் சப்பாத்தி போடலாம் வா” என்றவாறே கிட்சனுக்குள் நுழைய, போகும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தான் சிரஞ்சீவி.

“ம்… என்ன வாழ்க்கை டா சாமி இது, இவன் ஒரு பக்கம் மூஞ்சத் தூக்கி வச்சுக்கிறான், வெளிய போனா அதுங்க ரெண்டும் உம்முனு வந்து முன்னாடி நிக்கிதுங்க. இதுல நான் எங்க போய் முட்டிக்கிறது” எனப் புலம்ப,

“எதிர்ல இருக்கிற சுவத்துல முட்டிக்கோ” என்றவாறே ரகுநந்தன் குரல் கொடுக்க,

“எல்லாம் தேவ தான் டா” என்றவன் அவனுக்கு உதவி செய்ய சமையலறைக்குள் நுழைந்தான் சிரஞ்சீவி.

மிதிலாவோ இரவு உறக்கத்தைத் தொலைத்தவள், தன் தலையணையின் அடியில் வைத்திருந்த புகைப்படம் ஒன்றை எடுத்துப் பார்த்தாள்.

அவளும் அவளின் ராமனும் ராமர் – சீதா வேடமணிந்த புகைப்படம் அது. அதில் தன் ராமனை வருடிக் கொடுத்தவள், “என்னைப் பார்க்க வருவியா ராம், இல்ல எப்பவும் போல என் கனவுல மட்டும் தான் வருவியா? எனக்கு உன்னைப் பார்க்கணும் ராம்” என அதனை தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள்.

போர்த்தி இருந்த போர்வையை விலக்கி தன் அக்காவைப் பார்த்தாள் நறுமுகை.

தினமும் இரவு அவள் அக்கா செய்யும் பஜனை இது. எப்பவும் போல் இன்றும், “டே மாமா, நீ எங்க தான் இருக்க? இங்க ஒருத்தி தினமும் உன் புராணம் பாடி என்னைத் தூங்க விட மாட்றா. சீக்கிரம் எனக்காகவாவது வாயேன்” என தன் மாமன் ராமனிடம் ஒரு அப்ளிகேஷனைப் போட்டவள் மீண்டும் போர்வைக்குள் சுருண்டாள் நறுமுகை.

மிதிலாவோ, தன் ராமனின் நினைவில் கண்களை மூடினாள்.

கடலன்னையின் மடியில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த ஆதவனை தட்டி எழுப்பி தன்னை மறைத்துக் கொண்டது நிலவு.

சென்னை மாநகரமே, பரபரப்பாக இருக்க வளசரவாக்கத்தில் இருந்த ஒரு இல்லத்தில் வேங்கடேச சுப்ரபாதம் ஒலித்துக் கொண்டிருந்தது.

கௌசல்யா சுப்ரஜா ராம
பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட நர ஸார்தூல
கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்

உத்திஷ்டோத்திஷ்ட கோவிந்த
உத்திஷ்ட கருடத்வஜ
உத்திஷ்ட கமலா காந்தா
த்ரைலோக்யம் மங்களம் குரு

என உருகிப் பாடிக் கொண்டிருந்தார் அம்பிகா.

எப்பொழுதும் போல் இன்றும் தன் மனைவியின் இனிய கானத்தை மெய் மறந்து ரசித்துக் கொண்டிருந்தார் ராஜாராம்.

அப்பொழுது தான் இரவுப் பணி முடிந்து வந்த துகிலன், “டெய்லியும் அம்மா இதே பாட்ட தான் பாடறாங்க. நீங்களும் இத ரசிக்கிறீங்க, போர் அடிக்கலயா ப்பா” என்றான்.

“வா டா மகனே! ஏன் டா காலைலயே உன் அம்மாகிட்ட என்னைக் கேர்த்து விட பார்க்குறியா?” என்க,

“ச்சே, ச்சே உங்கள போய் அப்படி கோர்த்து விடுவனா! சரி இன்னிக்கு என்ன பூஜைலாம் ரொம்ப தீவிரமா இருக்கு?” என்றான் துகிலன்.

“தெரியல டா, நைட் உன் அம்மா கெட்ட கனா கண்டேனு சொன்னா. அதுனால கூட இருக்கலாம்” என்க,

“அது சரி, அப்போ இன்னிக்கு யாரும் எதையும் சொல்லி அவங்க கிட்ட வாங்கி கட்டிக்கக் கூடாது. பீ கேர்புல் மிஸ்டர். ராஜாராம்” என்றவன் தன் அறைக்குச் சென்றான்.

துகிலன், இருபத்தி ஐந்து வயதான கண்ணைக் கவரும் கள்வன். சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் பகுதி நேர மருத்துவனாய் பணியாற்றிக் கொண்டிருக்கிறான்.

கூடிய விரைவில் தனியாக கிளீனிக் ஒன்றை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளான்.

தன் பூஜை எல்லாம் முடித்துவிட்டு வெளியே வந்த அம்பிகா, “ஏங்க நம்ம நித்திக்கு போன் பண்ணி பேசிருங்க. காலைல இருந்தே மனசு சரியில்ல” என்றவாறே சமையற்கட்டிற்குள் புகுந்து சிறிது நேரத்திலே கையில் மணமணக்க காஃபியுடன் வந்தார்.

தன் கணவனிடம் ஒரு கப்பை நீட்டியவர், “துகிலன் வந்துட்டானாங்க?” என்றவாறே அவன் அறைப் பக்கம் செல்ல,

“வந்துட்டேன் ம்மா” என்றவாறே அவன் அறையில் இருந்து முகத்தை துடைத்துக் கொண்டே வந்தான் துகிலன்.

“இந்தா கண்ணா காஃபி” என அவர் நீட்ட,

“குட் மம்மி” என அவர் கன்னம் கிள்ளியவன்,

“ம்மா, கொஞ்சம் வெளிய வேலை இருக்கு. நான் போய்ட்டு வர லேட்டாகும், நீங்க எனக்காக சமைச்சுட்டு காத்திருக்க வேண்டாம், உங்க ராஜாவோட சேர்ந்து சாப்பிட்ருங்க” என்றான் தன் அன்னை கொடுத்த காஃபியை பருகிய படியே.

“நைட் புல்லா வேலைப் பார்த்துட்டு இப்போ வெளிய போறேனு சொல்றியே கண்ணா, கொஞ்சம் தூங்கி எந்திரிச்சுட்டு போகலாம்ல” என்றார் அவனின் தலையை கோதியவாறே.

“இல்ல ம்மா, ரொம்ப நாள் கழிச்சு ப்ரண்ட்ஸ் எல்லாம் கெட் டூ கெதர் மாதிரி அரேன்ஜ் பண்ணிருக்காங்க. அதுனால நான் கண்டிப்பா போயாகணும், ப்ளீஸ். என் செல்லம்ல” என அவர் தாடையை பிடித்து கெஞ்ச,

“சரி கண்ணா, பார்த்து போ” எனும் போதே அங்கிருந்த போன் ஒலித்தது.

 

07

போன் ஒலிக் கேட்டு அதனை, “ஏங்க, நம்ம நித்தி’யா தான் இருப்பா. எடுத்து பேசுங்க” என்றார் அம்பிகா.

தன் மனைவியின் கட்டளைக்கு “சரி ம்மா” என்றவர், அலைப்பேசியை எடுத்துப் பார்த்தார்.

அவர்களின் செல்வப் புதல்வி தான் அழைத்திருந்தாள். அழைப்பை ஏற்றவர்,

“ஹலோ, எப்படி மா இருக்க நித்தி?” என்றார் ராஜாராம்.

“நான் நல்லா இருக்கேன் ப்பா… நீங்க எப்படி இருக்கீங்க? அம்மாவும் தம்பியும் நல்லா இருக்காங்களா?” என்றாள் நித்தி என்றழைக்கப்படும் நித்திலவள்ளி.

“உன் அம்மா தான் காலைலயே உன்கிட்ட பேசணும்னு சொல்லிக்கிட்டே இருந்தா மா, அதுக்குள்ள நீயே கூப்பிட்டுட்ட” என்றவர்,

“மாப்பிள்ளையும் தர்ஷூ குட்டியும் எப்படி இருக்காங்க?” எனும் போதே அவரின் மூன்று வயது பேத்தியான தர்ஷினி, “தாத்தா… தாத்தா…” என அவள் அம்மாவை பேச விடாமல் அழைத்துக் கொண்டிருந்தாள் தன் தாத்தாவை.

“குட்டிமா கிட்ட போன குடும்மா” என்றார் ராஜாராம்.

போன் அவள் கைக்கு கை மாறியவுடன், “ஹலோ ராஜா தாத்தா, இந்த அம்மா பேட் மம்மி. நான் ஐஸ்கிரீம் கேட்டா வாங்கி தரவே மாட்டேங்கிது” என தன் தாத்தனிடம் புகார் பட்டியல் வாசித்தாள் அந்த பேத்தி.

“குட்டிமா, தாத்தா உனக்கு சீக்கிரமா ஐஸ்கிரீம் வாங்கிட்டு உன்னை வந்து பார்ப்பனாம். அதுவரை அம்மா கூட சண்டைப் போடாம சமத்தா இருக்கணும், ஓ.கே வா குட்டிமா!” என்றார் ராஜாராம்.

“சரி தாத்தா, ஆனா நீயும் என்னை ஏமாத்திற மாட்டீல” என்றாள் அழுகுரலில்.

“இல்ல குட்டிமா” என்றவர், “இந்தா உன் அம்மாச்சி பேசணும்னு சொல்றா, அவக்கிட்ட போன கொடுக்கிறேன்” என்றவர் தன் மனையாளிடம் கொடுக்க பேத்தியும் அம்மாச்சியும் சிறிது நேரம் கதைத்து விட்டு பின் அலைப்பேசியை தன் அம்மாவிடம் கொடுத்து விட்டு விளையாட ஓடினாள் தர்ஷினி.

“ம்… சொல்லுங்க ம்மா” என்றாள் நித்திலவள்ளி.

“அவன பார்த்தியா ம்மா, ஏதாவது பேசுனானா?” என அவர் கவலைத் தோய்க்கும் குரலில் வினவ,

“இல்ல ம்மா, அவன் இன்னமும் கோபமா தான் இருக்கான். நேத்து காலைல அவனுக்கும் சிரஞ்சீவி அண்ணாக்கும் நம்ம ஊர்மி கிட்ட டிபன் கொடுத்து அனுப்பி விட்டேன். ஆனா அண்ணா அவகிட்ட ரொம்ப கோபமா பேசி இருக்காங்க, காலைல சாப்பிடாம கூட காலேஜ் போய்ருக்கு அண்ணன். நேத்து நைட் தான் சிரஞ்சீவி அண்ணாகிட்ட பேசுனேன் ம்மா, அண்ணா இன்னும் எதையும் மறக்கல” என்றவளின் குரல் உள்ளே போய் இருக்க,

“அவன் வாழ்க்கை நல்லா இருக்கணும்னு தான நாம இப்படி பண்ணோம், ஆனா அவன் புரிஞ்சுக்காம…” என அதற்கு மேல் அம்பிகாவால் பேச முடியவில்லை.

கண்களில் நீர்த்துளி படர, அதனைக் கண்ட ராஜாராம் “அம்பிகா, என்ன இது சின்னப்புள்ளயாட்டம் அழுதுட்டு. அவன் எங்க போய்ற போறான், திரும்ப நம்மக்கிட்ட ஒருநாள் வருவான் ம்மா… நீ ஏன் இவ்ளோ பீல் பண்ற?” என்றார்.

தன் கண்களைத் துடைத்துக் கொண்டவர், “சரி ம்மா, மாப்பிள்ளை எப்படி இருக்காரு? ஊர்மி எப்போ அங்க வந்தா? லீவுனு சொன்னா, ஆனா அங்க வர்றத சொல்லல” என்றார் அம்பிகா.

“அவளுக்கு ஒரு வாரம் லீவாம் ம்மா, அதான் தர்ஷூ கூட இருக்கலாம்னு வந்தா. அவரு நல்லா இருக்காரு மா, வேலைக்கு கிளம்பிக்கிட்டு இருக்காரு ம்மா” என்றாள் நித்திலவள்ளி.

“மாப்பிள்ளைய கேட்டேனு சொல்லு மா” என்றவர் சிறிது நேரம் பேசி விட்டு அலைப்பேசியை வைக்க,

வெளியே கிளம்ப தயாராகி வந்த துகிலன், “காலைலயே மகள் கிட்ட பேசி அழுகாச்சிய ஆரம்பிச்சாச்சா. ஏன் ம்மா, இப்படி நீங்களே உடம்ப கெடுத்துக்கிறீங்க?” எனக் கோபப்பட,

“என்ன டா பண்ண சொல்ற, கண்ணீர் மட்டும் தான் எனக்கு சொந்தமா இருக்கு. உன் அண்ணன் இந்த வீட்ட விட்டு போய் மூணு வருஷம் ஆகப் போகுது, அவன பார்க்காம என்னால இருக்க முடியல டா” என அவர் வருந்த,

அவரை பின்னிருந்து அணைத்து கொண்ட துகிலன், “அண்ணா சீக்கிரம் வருவான் ம்மா… கவலப் படாத” என்றவன், மனதினுள் ‘அவன் தேடிப் போன விசயம் அவனுக்கு கிடைச்சோனே உன் முன்னாடி வந்து நிப்பான் ம்மா… இன்னும் கொஞ்சம் காலம் இந்த கஷ்டத்த நம்ம அனுபவிச்சு தான் ஆகணும்’ எனக் கூறிக் கொண்டான்.

“சரி ப்பா, நீ கிளம்பு. பார்த்து போய்ட்டு வா” என்றார் அம்பிகா.

“சிரிச்ச முகத்தோட சொன்னா நல்லா இருக்கும்” என அவர் தாடையைப் பிடித்து கெஞ்ச,

“ம்… சரி டா, பார்த்துப் போ” என புன்னகைக்க முயன்றார் அம்பிகா.

“அப்பா பாய், அம்மா போய்ட்டு வரேன்” என்றவன் தன் ராயல் என் பீல்டின் சாவியை சுழற்றிய வண்ணம் வீட்டில் இருந்து கிளம்பினான் துகிலன்.

இங்கு ரகுநந்தனோ, காலையில் எழுந்ததிலிருந்தே ஒருவித யோசனையுடன் வலம் வர, அவனைக் கவனித்த சிரஞ்சீவி,

“என்ன மச்சான் காலைலயே தீவிரமா யோசிச்சுக்கிட்டு இருக்க?” என்றான்.

“ஒன்னுமில்ல டா, காலைல இருந்தே மனசு ஏனோ பாரமா இருக்கு” என்றவன் வெளியே பால்கனியில் வந்து நின்றான்.

சுற்றி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க, அவன் கண்ணில் பட்டாள் மிதிலா.

மிதிலாவும் நறுமுகையும் வாக்கிங் சென்று கொண்டிருந்தனர்.

நறுமுகையோ, “ஏன் டி, என்னை இப்படி டார்ச்சர் பண்ற? இழுத்துப் போர்த்தி தூங்கிட்டு இருந்தவள இப்படி அரைகுறைத் தூக்கத்தோடயே எழுப்பி இழுத்துட்டு வந்ததுமில்லாம நடக்க வேற சொல்ற” என்றாலும் தன் அக்காவின் நடைக்கு ஈடு கொடுத்து நடந்தாள் நறுமுகை.

“நடக்கிறதுல ஒன்னும் தப்பில்ல, தேவையில்லாத கொழுப்பெல்லாம் குறையும்” என்றவாறே அந்த பிளாட்டில் இருந்த பூங்காவில் இருவரும் நடைப் பயின்றனர்.

தன் அக்காளின் பதிலில் நறுமுகை அவளை முறைக்க, “என்னை ஏன் டி குண்டச்சி முறைக்கிற?” என்றாள் மிதிலா.

“நான் கரெக்ட் வெய்ட் டி குட்டச்சி. உன்னையாட்டமா ஓட்டடைக்குச்சியாட்டம் இருக்கேன்” என முறைக்க,

“சரிங்க மேடம், நீங்க கரெக்ட் வெய்ட் தான். நான் தான் ஒட்டடைக்குச்சி, இப்போ முதல்ல நட” என்றாள் மிதிலா.

“இவ அவ்ளோ சீக்கிரம் ஒத்துக்க மாட்டாளே! என்ன இன்னிக்கு இவ்ளோ அமைதியா இருக்கா” என்ற யோசனையிலேயே அவளுடன் நடந்தாள் நறுமுகை.

அவர்களின் சம்பாஷணைகள் புரியா விட்டாலும் இருவரும் ஏதோ தீவிரமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பது மட்டும் புரிந்தது ரகுநந்தனுக்கு.

அவன் பார்வை மிதிலாவின் மேல் படர்ந்தது. அதிக உயரமும் இல்லாமல், குட்டையாகவும் இல்லாமல் அளவான உயரம். கை தேர்ந்த சிற்பி ஒருவனால், செதுக்கப்பட்ட அழகிய சிற்பம் போல் இருந்தாள் மிதிலா.

அந்த அதிகாலை தென்றல் அவள் தேகத்தை தீண்டிச் செல்ல அத்தோடு அவனின் பார்வையும் அவளைத் தீண்டிச் சென்றது.

மேகத்தைப் பிடித்து அதனைக் கடைந்து காதுகளின் இரு மருங்கிலும் அது உலவுமாறு விடப்பட்ட கூந்தல், அதனை அவளின் வெண்டை விரல்கள் அடிக்கடி ஒதுக்கி விட அவளை பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல்! எனத் தோன்றியது அவனுக்கு.

அவளுக்கு ஏதோ ஓர் உள்ளுணர்வு தோன்ற சுற்றும் முற்றும் பார்த்தாள் மிதிலா.

ஆனால் அந்த கள்வனோ அந்த பிளாட்டில் ஏழாவது மாடியின் பால்கனியில் இருந்ததால், அவளால் அவனைக் கண்டறிய முடியவில்லை.

சிறிது நேரத்திலே அவள் தன் தங்கையை அழைத்துக் கொண்டு செல்ல, “உன் பக்கத்துல வந்துட்டேன். கூடிய சீக்கிரம் உன்னை நெருங்கிருவேன்” என அவன் மனம் கூற, அதனை தடை செய்யும் விதமாக, சிரஞ்சீவியின் அழைப்பு தடுத்தது.

“என்ன டா?” என்றான் ரகுநந்தன்.

“இயற்கையை ரசிச்சது போதும். சீக்கிரம் கிளம்பு, காலேஜ்க்கு கிளம்பணும்” எனும் போதே ரகுநந்தனின் அலைப்பேசி ஒலிக்க அதனை எடுத்துப் பார்த்தான் ரகுநந்தன்.

‘துகிலன்’ என திரையில் மின்ன, அழைப்பை ஏற்றவன் “விசயம் காத்து வாக்குல சென்னை வர வந்துருச்சு போல?” என்றான் ரகுநந்தன்.

“நீ எல்லாம் ஒரு அண்ணனா டா. தம்பி ஆசையா போன் பண்ணி குசலம் விசாரிக்க கூப்பிடுவான்னு இல்ல, எடுத்த உடனே கேட்கிறத பாரு” என அந்த பக்கம் கடுகடுத்தான் துகிலன்.

“சரிங்க டாக்டர் சார், எப்படி இருக்கீங்க?, அங்க இருக்க எல்லாரும் நல்லா இருக்காங்களா? இது போதுமா! இல்ல இன்னும் பக்கத்துல வீட்டுல இருக்கிற பாட்டி, அடுத்த வீட்டு பியூட்டி, எதிர் வீட்டு பப்பினு எல்லாரையும் கேட்கணுமா?” என்றான் ரகுநந்தன்.

“அய்யோ, ஆண்டவா. போதும் டா இதுவே! சரி நீ எப்படி இருக்க?” என்றான் துகிலன்.

“ம்… இருக்கேன் டா, அம்மா, அப்பா எப்படி இருக்காங்க?” என்றான் ரகுநந்தன்.

“அம்மா எப்பவும் உன்னை நினைச்சு தான் புலம்பி கிட்டு இருக்காங்க, காலைல கூட நித்தி போன் பண்ணி இருந்தா” என்றான் துகிலன்.

“ம்…” என்ற பதில் மட்டுமே வர, “இன்னும் உன் கோபம் போகலயா ண்ணா?” என்றான் துகிலன்.

அவனின் ‘அண்ணா’ என்ற அழைப்பிலே, அவனின் மனவருத்தத்தை உணர்ந்து கொண்டவன், “இல்ல டா. கோபம் இல்ல, வருத்தம் மட்டும் தான்” என்றான் ரகுநந்தன்.

ரகுநந்தனை விட நான்கு வருட இளையவன் துகிலன். ஆனால் அவனை அண்ணா என்று அழைத்ததை விட அதிகமாக ‘டா’ போட்டு தான் பேசுவான். இருவருக்குமிடையே அண்ணன், தம்பி என்ற உறவைத் தாண்டி நட்பு மலர்ந்திருந்தது. நித்திலவள்ளியும் துகிலனும் இரட்டையர்கள்.

“நீ தேடுற விசயம் என்னாச்சு ரகு?” என்றான் துகிலன்.

“20 சதவீதம் வெற்றி டா. ஆனா இனி நான் எடுத்து வைக்கிற ஒவ்வொரு அடியும் ரொம்ப கவனமா இருக்கணும், இல்லைனா என்னை விட்டு மொத்தமா போய்ருவா அவ” என்றான் ரகுநந்தன்.

“கண்டிப்பா அண்ணி உன்னைப் புரிஞ்சுக்குவாங்க டா. சரி, டைம் ஆச்சு, நீ கிளம்பு” என்றவன் தன் நண்பர்களைக் காண சென்றான்.

ரகுநந்தன் பேசி முடிக்கும் வரை அமைதியாக இருந்த சிரஞ்சீவி, “எல்லாம் சரியா வருமா டா?” என்றான்.

“ப்ச்… தெரியல டா, அவ எனக்கு தான். அத யாராலயும் மாத்த முடியாது, அவளால கூட” என அழுத்திச் சொன்னவன் தன்னை குளியல் அறைக்குள் புகுத்திக் கொண்டான்.

“கடவுளே, என்ன கருமம் டா இந்த காதல். இதுக்கு தான் இத பண்ணியே தொலையக் கூடாது, முரட்டு சிங்கிளா இருக்கணும் என்னை மாதிரி” என்றவன் அவனும் கல்லூரி கிளம்பச் சென்றான்.

ஆனால் அவனும் ஒரு நாள் காதல் வயப்பட்டால்!

நறுமுகையும் மிதிலாவும் கல்லூரிக்கு கிளம்பிக் கொண்டிருக்கும் போது, “முகி பக்கத்துல மளிகை கடை வரை போய் கொஞ்சம் பச்ச மிளகாய் வாங்கிட்டு வரியா? சட்னி அரைக்க மிளகா இல்ல” என்றார்.

அவரை முறைத்தவள், “அப்பா கிட்ட சொல்ல வேண்டியது தான?” என்க,

“அப்பா ஏதோ முக்கியமான விசயம்னு வெளிய போய்ருக்காரு முகி. கொஞ்சம் போய் வாங்கிட்டு வாயேன்” என்றார் பூங்கோதை.

மிதிலாவோ இன்று தான் எடுக்க வேண்டிய வகுப்பிற்கு குறிப்புகள் எடுத்துக் கொண்டிருக்க, “சரி, போய் தொலைறேன். எவ்ளோ வாங்கணும்” என்றாள் நறுமுகை.

“ஒரு நூறு வாங்கிட்டு வா” என்றவர் அடுப்படிக்குள் சென்றிருக்க, “சரி” என்றவாறே மின்தூக்கியின் உதவியுடன் கீழ் தளம் சென்றாள்.

எதிரே தள்ளுவண்டியில் ஒருவர் காய்கறிகளைக் கொண்டு வர, அவரிடம் சென்ற நறுமுகை “அண்ணா நூறு பச்ச மிளகாய் கொடுங்க” என்க,

அவரும் நூறு கிராம் பச்சை மிளகாயை எடுத்து ஒரு செய்திதாளில் கட்டிக் கொடுக்க அவளோ அதனை வாங்காமல் அவரை முறைத்தாள்.

“ஏம்மா, நீ தான கேட்ட? இந்தா நூறு பச்ச மிளகா” என அவர் நீட்ட,

“சின்னப் புள்ளையா இருக்கேனு ஏமாத்தலாம்னு நினைச்சீங்களா! இந்த நறுமுகைய அவ்ளோ சீக்கிரம் உங்களால ஏமாத்த முடியாது” என இடுப்பில் கை வைத்துக் கொண்டு கூற, அப்பொழுது தான் பால் பாக்கெட் வாங்க வந்த சிரஞ்சீவியின் காதுகளில் இவளின் குரல் கேட்க, திரும்பி பார்த்தான்.

அவரோ, “நான் ஏன் மா உன்னை ஏமாத்த போறேன். நூறு பச்ச மிளகா தான் போட்ருக்கேன்” என்றார் அந்த அப்பாவி காய்கறி வியாபாரி.

“நான் கணக்குல கொஞ்சம் வீக் தான். ஆனா அதுக்காக பத்து மிளகாய கொடுத்துட்டு நூறு மிளகானு சொன்னா நம்பிட்டு போற அளவு முட்டாள் இல்ல” என்றாள் நறுமுகை.

அவளின் பதிலில் வந்த சிரிப்பை அடக்க பெரும்பாடுப்பட்டான் சிரஞ்சீவி.

“காலைல எனக்கு எங்க இருந்து தான் இப்படி வந்து சிக்குதுங்களோ!” எனப் புலம்பிய அந்த காய்கறிக்காரர், “இந்தாம்மா கூடை. நீ பொறுமையா எண்ணி நூறு மிளகா எடுத்துக்கோ” என்றார்.

“ஏமாற ஆள் கிடைச்சா போதுமே. தலைல ஏறி மிளகா அரைச்சுருவீங்க” என முணுமுணுத்தவள் நூறு பச்சை மிளகாயை எண்ணிப் போட்டுக் கொண்டு அதற்கான பணத்தைக் கேட்டு கொடுத்து விட்டு கிளம்பினாள் நறுமுகை.

“போண்டாகோழி விவரமா தான் இருக்கா” என நினைத்தவனுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

அவன் அவள் பின்னாலே செல்ல, மின்தூக்கியினுள் நுழைந்தாள் நறுமுகை. அவள் வாய் அந்த காய்கறிக்காரரை திட்டிக் கொண்டிருந்தது.

அந்த நேரம் பார்த்து சிரஞ்சீவியும் லிப்டினுள் நுழைய, அவனைக் கண்டு அதிர்ந்தாள்.

“இவரு எங்க இங்க?” என்ற பார்வைப் பார்த்து வைக்க, “நானும் இந்த பிளாட் தான்” என அவள் பார்வைக்கு பதிலளித்தான் சிரஞ்சீவி.

அவளோ எந்தவித ரியாக்ஷனும் காட்டாமல் அமைதியாக நிற்க, “இந்த போண்டாகோழி இந்த பிளாட் தான்னு தெரியாம போச்சே. இவ எந்த பிளாட்னு தெரியலயே! கேட்டாலும் பதில் வராது” என நினைத்தவனின் பார்வை அவள் கையில் பிடித்திருந்த பாலிதீன் பையின் மீது சென்றது.

அவள் சண்டையிட்டு வாங்கிய நூறு பச்சை மிளகாய் அவனைப் பார்த்து சிரிக்க, “பச்சை மிளகாய் சட்னி வைக்க போறீங்களா மேடம்? இல்ல பச்சை மிளகாய் கம்பெனி ஏதும் ஆரம்பிக்கப் போறீங்களா?” என்றான் நக்கலாய்.

“நான் சட்னி வைப்பேன், ஏன் ஜீஸ் போட்டு கூட குடிப்பேன். இது என் பிளாட். நீங்க இங்க மென்டார் இல்ல, நான் உங்களுக்கு பதில் சொல்லணும்னு அவசியமும் இல்ல” என ஏற்கெனவே இருந்த கோபத்தில் இவனை கடுகடுத்தாள் நறுமுகை.

“கொஞ்சமாவது மென்டார்னு பயம் இருக்கா பாரு, இவள பெத்தாங்களா! இல்ல செஞ்சாங்களா!. டாடி லிட்டில் பிரின்சஸ் போல! அதான் நூறு கிராம் மிளகா கேட்டா நூறு மிளகாய எண்ணி வாங்கிட்டு போறா” என நினைத்தாலும் அவன் வாய்க்குள் சிரிப்பை அடக்க முயன்றான்.

“இவக்கிட்ட எந்த ஜீவன் வருங்காலத்துல மாட்ட போகுதோ! அவனுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்” என அந்த அறியா ஜீவனுக்காய் இவன் மனதினுள் வருத்தப்பட்டான்.

நான்காவது தளம் வந்தவுடன் அவள் வெளியேற, “போர்த் பிளாட்ல தான் இவ இருக்காளா!” என நினைத்துக் கொண்டான் சிரஞ்சீவி.

அவளோ கோபத்துடன் வீட்டினுள் நுழைய, பூங்கோதையோ “ஏன் டி, ஒரு நூறு கிராம் மிளகா வாங்கவா இவ்ளோ நேரம்” என்றவாறே அடுப்படிக்குள் இருந்து வெளியே வர,

“இந்தா நீ கேட்ட நூறு மிளகா” என அவள் நீட்டிய பையைக் கண்டு அதிர்ந்தார்.

“அம்மா…” என்றவாறே தன் தாயை அழைத்துக் கொண்டு வந்த மிதிலாவும் சேர்ந்து அதிர்ந்தாள் தன் தங்கையின் கையில் இருந்ததைக் கண்டு.

“ஏன் டி, சட்னில போட மிளகா வாங்கிட்டு வந்தியா? இல்ல மிளகா சட்னி அரைக்க வாங்கிட்டு வந்தியா?” என அதிர்ச்சியுடனே அவள் வினவ,

“அம்மா தான் நூறு மிளகா வாங்கிட்டு வர சொல்லுச்சு டி குட்டச்சி” என்றாள் நறுமுகை அவள் கிண்டலடிப்பது புரியாமல்.

பூங்கோதையோ தலையில் அடித்துக் கொண்டு, “நூறு கிராம் மிளகா வாங்கிட்டு வர சொன்னா நூறு மிளகாய வாங்கிட்டு வந்துருக்காளே, இவள” என அடிக்க ஏதாவது சிக்காதா என அவர் தேட,

“வர வர நீ சரியில்ல ம்மா, நீ சொல்லும் போது ஒழுங்கா சொல்லாம விட்டது உன் தப்பு. இப்போ என்னை குத்தம் சொல்ற” என நறுமுகை கோபத்துடன் வினவ,

மிதிலாவோ வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிக்க ஆரம்பிக்க, அவளோ “முகி எஸ்கேப்” என அவள் வெளியே ஓடினாள்.

“எங்க போனாலும் திரும்ப இங்க வந்து தான ஆகணும். அப்போ இருக்கு உனக்கு” என்றவாறே தன் வேலையைப் பார்க்கப் போனார் பூங்கோதை.

அவளோ, வெளியே தலைத்தெறிக்க ஓடி வந்து எதிரே வந்தவன் மேல் மோதி நின்றாள்.

 

08

‘யார் மீது மோதினோம்?’ என்று நறுமுகை நிமிர்ந்துப் பார்க்க, அவளின் ஹெச். ஓ. டி ரகுநந்தன் தான் நின்றிருந்தான்.

“சாரி… சாரி சார்” என அவள் வாய் குழற, “பார்த்து போகலாம்ல மா… அவ்ளோ அவசரமா” எனும் போதே மிதிலா,

“குண்டச்சி” என்ற அழைப்போடு தன் பிளாட்டில் இருந்து வெளியே வந்தாள்.

இருவரும் அவளைப் பார்க்க, அவளோ “காலேஜ்க்கு டைம் ஆச்சு, சாப்பிட்டு சீக்கிரம் வா. கீழ பார்க்ல வெய்ட் பண்றேன்” என்றவாறே செப்பலை போட்டுக் கொண்டு நிமிர, அப்பொழுது தான் ரகுநந்தனை கண்டாள் அவள்.

அவனைப் பார்த்தும் பார்க்காதது போல், நறுமுகையிடம் “அம்மா உன்ன கூப்பிட்டாங்க, உள்ள போ” என்றாள் சற்று கடுகடுப்புடன்.

அவளின் கோபம் ஏனென்று புரியாமல், ரகுநந்தனிடம் “சாரி சார்” எனத் திரும்ப மன்னிப்பு கேட்டு விட்டு வீட்டிற்குள் சென்றாள் நறுமுகை.

ரகுநந்தனோ மிதிலாவைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

ஆனால் அவளோ, அங்கு ஒரு ஜீவன் நிற்பதையே கவனிக்காதது போல், அவனைக் கடந்து லிப்டின் அருகில் சென்றாள்.

“மிது…” என அவன் அழைக்க, அவளோ அவனை முறைத்தாள்.

அந்த பார்வைக்கு அவன் எதிர்பார்வைப் பார்க்க, அதில் மேலும் கோபமுற்றவள் லிப்டின் பட்டனில் தன் கோபத்தைக் காட்டினாள் மிதிலா.

அவனோ அவள் ஏதாவது பேசுவாள் என்ற எதிர்ப்பார்ப்பாடே அவளைப் பார்க்க, அவளோ மேலே சென்று கொண்டிருந்த லிப்டின் பட்டனை தன் கோபம் தீரும் அளவு அதனை அழுத்தி விட்டு அதன்பின் அவனை முறைத்தவள், படியிலேயே இறங்க ஆரம்பித்தாள்.

அந்த பிளாட் மொத்தம் பதிமூன்று அடுக்குகளைக் கொண்டது. பார்க், விளையாட்டு மைதானம் என அனைத்து வசதிகளையும் தன்னுள்ளே கொண்டது அந்த “வசந்தம் பிளாட்ஸ்”.

கீழே இறங்கியவள் அங்கு இருந்த பார்கில் சென்று அமர்ந்து கொண்டாள்.

அவள் மனமோ கோபக் கனலில் வெந்து கொண்டிருந்தது. யாரை தன் வாழ்வில் சந்திக்கக் கூடாது என்று இருந்தாலோ இன்று அவனே அவள் கண்முன். அதுவும் அவனின், “மிது” என்ற அழைப்பில் அவளின் கோப அளவு எல்லையைத் தாண்டிச் சென்று கொண்டிருந்தது.

அவள் மனதில், “கிருஷ்ணா…” என ஒலிக்க அந்த பெயரை நினைத்தவுடனே அவளால் கோபத்தை அடக்க முடியாமல் அமர்ந்திருந்த பெஞ்சிலே ஓங்கி அடித்தாள்.

இதனை அனைத்தையும் சற்று தொலைவில் இருந்து கவனித்து கொண்டு தான் இருந்தான் ரகுநந்தன். அவன் கரங்கள் அவளை அணைக்கத் துடிக்க அவளின் கரங்களோ அவன் மேல் உள்ள கோபத்தை பெஞ்சில் வெளிக்காட்டிக் கொண்டிருந்தது.

“நீ சீக்கிரமே என்னைப் புரிஞ்சுக்குவ டி” என்றவன் அவளின் பெயரை தன் மனதினுள் உருப் போட்டான்.

அவனின் தோளில் கைப் போட்ட சிரஞ்சீவி, “என்னடா பார்க்’க அப்படி வெறிச்சு பார்த்துக்கிட்டு இருக்க?” என்றவன்,

“ஒன்னுமில்ல டா. வா கிளம்பலாம்” என அவனே பதிலும் கூறிக் கொள்ள,

“ஏன் டா கேள்விய கேட்டுட்டு நீயே பதில் சொல்லிக்கிற” என்றான் ரகுநந்தன்.

“வேற என்ன டா பண்றது, உன்னை மாதிரி ஆளுங்க எனக்கு பிரண்டா இருந்தா இதான் என் நிலைமை” என தலையில் அடித்துக் கொண்டவன்,

“சரி வா. கிளம்பலாம்” என்றான் சிரஞ்சீவி.

அவனோ, “இதெல்லாம் சகஜம் மச்சான்” என அவன் தோளில் கை போட,

“என்ன சகஜமோ!” என்றவன் வண்டியை ஸ்டார்ட் செய்தான் சிரஞ்சீவி.

நறுமுகையும் வந்திருக்க மிதிலாவும் கல்லூரிக்கு புறப்பட்டாள்.

எப்பொழுதும் போல் வகுப்புகள் நடந்து கொண்டிருக்க, மிதிலாவிற்கு இளங்கலை விலங்கியல் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்பு இருக்க அதற்கான குறிப்புகளோடு வகுப்பிற்குள் நுழைந்தாள்.

அப்பொழுது தான் ரகுநந்தனும் ரௌண்ட்ஸ் வந்திருந்தான். அந்த கல்லூரியில் ஒரு குழு உள்ளது. அதில் அனைத்து துறைகளிலும் ஓர் பேராசிரியர் என தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வகுப்புகள் இல்லாத நேரத்தில் மற்ற வகுப்புகளை கண்காணிக்க வேண்டும்.

எந்த துறை வகுப்புகளுக்கு வேண்டுமானாலும் அவர்கள் செல்ல உரிமை அளிக்கப்பட்டிருந்தது. அந்த வகுப்பை அந்த ஆசிரியர் எவ்வாறு கையாள்கிறார், மாணவர்கள் எவ்வாறு கவனிக்கின்றனர் என அறிக்கை சமர்ப்பிக்கப் படும்.

அந்த குழுவில் ரகுநந்தனும் இருந்தான். அப்பொழுது அவனுக்கு வகுப்புகள் இல்லாத காரணத்தால், ரௌண்ட்ஸ் சென்றிருந்தான்.

மிதிலாவின் வகுப்பைக் கடந்து போகும் போது என்ன தோன்றியதோ அவனும் அந்த வகுப்பிற்குள் நுழைந்தான்.

மாணவர்கள் எழுந்து வணக்கம் தெரிவிக்க, “உட்காருங்க” என சைகையில் தெரிவித்தவன் கடைசி பெஞ்சில் சென்று மாணவர்களோடு அமர்ந்து கொண்டான்.

அவன் பார்வை முழுவதும் அவள் மீது இருந்தாலும் அவளோ அவனை ஒரு பொருட்டாக மதிக்காமல் தன் வகுப்பைத் தொடர்ந்தாள் மிதிலா.

“ஹேப்பி மார்னிங் ஸ்டூடண்ஸ்… நான் எடுக்கப் போற பேப்பர் எம்ப்ரியாலஜி. நம்ம பாடத்துக்குள்ள போறதுக்கு முன்னாடி இந்த பாடத்தைப் பற்றின சில அடிப்படை விசயங்கள பத்தி இப்போ நாம பேசப் போறோம்” என்றவள்,

வகுப்பின் நடுவே நின்று கொண்டு, “நீங்க ஏன் ஸ்வாலஜி எடுத்தீங்கனு கேட்டா உங்களோட பதில் என்னவா இருக்கும்?” என்றாள் மிதிலா.

அதற்கு ஒரு மாணவன் எழுந்து, “எனக்கு உயிரினங்கள பத்தி படிக்க ரொம்ப பிடிக்கும் மேம். அதோட பரிணாம வளர்ச்சில இருந்து அந்த உயிரினத்தோட ஆயுட் காலம் முழுவதும் படிக்க இன்ட்ரெஸ்ட்டிங்கா இருக்கும்” என்றான்.

“ம்… அப்போ உங்களுக்கு உயிரினத்தோட பரிணாம வளர்ச்சிய பத்தி படிக்க பிடிக்கும். இதுல மனிதனும் அடக்கம் தான, அதாவது நீங்க சொன்ன உயிரினத்துல மனிதனும் அடக்கம் தான?” என்றாள் மிதிலா.

“கண்டிப்பா மேம், மனிதனோட பரிணாம வளர்ச்சியும் தான்” என்றான் அந்த மாணவன்.

“ஓ.கே, நீங்க உட்காருங்க” என்றவள், “இப்போ நம்ம பார்க்க போற விசயம் மனிதர்களப் பற்றியது தான். மனிதர்கள்ள முக்கியமான இரண்டு பிரிவு ஆண், பெண். ஆம் ஐ கரெக்ட்?” என்றாள் மிதிலா.

“எஸ் மேம்…” என கோரசாக பதில் வர, “நோ, இட்ஸ் ராங். மனிதர்கள பாலினம் முறைப்படி பிரிச்சா ஆண், பெண். இது மட்டும் தான்னு நாம நினைக்கிறோம். அது தப்பில்ல, ஏன்னா இதப் பத்தி மட்டும் தான் நாம படிக்கிறோம். ஆனா இதை எல்லாம் தாண்டி இன்னும் பல பாலினங்கள் இருக்கு. இன்றைய நடைமுறைல ஓரளவு திருநங்கைகள மூன்றாம் பாலினமா ஏத்துக்கிறோம். ஆனா இந்த மூன்றுலயும் இல்லாத பல பாலினம் நம்ம மனிதர்கள்ள இருக்கு”

“அதப் பத்தி பேசவே நம்மள்ள பலர் வெட்கப் படறோம். இதப் பத்தி தான் நாம பேச வெட்கப்படறாமானு பார்த்தா இல்ல. நம்ம பிரிச்ச இந்த ஆண், பெண் வேறுபாட்டுலே அவர்களோட பருவ வயது உடலியல் மாற்றங்கள பத்தி பேச தயங்கிறோம். உண்மை தான!” என்றாள் மிதிலா.

அனைவரும் அமைதியாக இருக்க, “இங்க இருக்கிற பசங்ககள்ள எத்தனை பேருக்கு மென்சஸ் பத்தி தெரியும்?” என்றாள் மிதிலா.

அவளின் கேள்வியில் சில மாணவிகள் கூச்சத்தில் நெளிய, சில மாணவர்களோ அவர்களுக்குள் முணுமுணுக்க ஆரம்பித்தனர்.

“நான் ஏதாவது தப்பான கேள்வி கேட்டுட்டனா?” என்றாள் மிதிலா.

ஒரு மாணவன் எழுந்து, “நோ மேம். எனக்கு தெரிஞ்சத நான் சொல்றேன் மேம்” என்க,

“குட். இத்தனை பேர் தங்களுக்குள்ளயே முணுமுணுக்கும் போது அதப் பத்தி பேச தைரியமா எழுந்ததுக்கே நான் பாராட்டறேன். சொல்லுங்க” என்றாள் மிதிலா.

“என் அம்மா மந்த்லி மூணு நாள் தனியா படுத்துக்குவாங்க மேம், அந்த நேரத்துல அப்பா தான் எங்களுக்கு சமைச்சு தருவாரு. எனக்கு அதப்பத்தி அப்போ என்னனு தெரியல, அதுக்கப்புறம் தான் அறிவியல் பாடம் படிக்கும் போது அதப் பத்தி தெரிஞ்சுக்கிட்டேன். என்டோமெட்ரியம் எனும் கருப்பைச் சுவற்றில் ஏற்படும் மாற்றங்கள பொறுத்து இந்த மென்சஸ் வரும்னு தெரிஞ்சுகிட்டேன் மேம். இது ஒரு இயல்பான விசயம்” என்றான் அந்த மாணவன்.

“இயல்பான விசயம். ஆனா அதப் பத்தி பேச ஏன் இவ்ளோ தயக்கம்?” என்றாள் மற்றவர்களைப் பார்த்து. அனைவரும் அமைதியைத் தொடர,

“இப்படியே நம்ம அமைதியா இருக்கிறதால தான் நாட்டுல தொடர் வன்புணர்வுகள், பாலியல் தொல்லைகள் நடக்குது. இதப் பத்தி நீங்க தெரிஞ்சுக்க வேண்டிய விசயம் ஸ்கூல் படிக்கும் போது. அப்போ தான் ஆண், பெண் உடலியல் மாற்றங்கள பத்தி புரிஞ்சுக்க முடியும். ஆனா அதுக்கான புரிதல் நம்ம மாணவர்கள்ட்ட மட்டும் இல்ல, சில ஆசிரியர்கள்ட்ட கூட இல்ல. நிறைய பேர் இந்த டாபிக் வந்தோனே படிச்சுப் பாருங்க, உங்களுக்கே புரியும்னு சொல்லிட்டு போய்ருவாங்க”

“நம்ம பசங்க எப்படி தெரியுமா. எத சொல்லாம போறாங்களா அதப் பத்தி தெரிஞ்சுக்க தான் ஆர்வம் அதிகம் காட்டுவாங்க, ஆனா அது நல்ல வழில இருந்தா பரவாயில்ல. தவறான வழில தெரிஞ்சுக்க முற்படும் போது தான் பிரச்சனைகள் ஆரம்பிக்கும். ஆண், பெண் ரெண்டு பேருமே மனுசங்க தான், சில உடல் அளவுல மட்டும் தான் வித்தியாசப்படுத்தப் படறாங்க”

“ஒரு பதின் பருவ வயதில ஆணுக்கு எப்படி குரல் மாற்றம், மீசை வளர்தல் இருக்கோ அதே மாதிரி தான் ஒரு பதின்பருவ பெண்ணுக்கும். அதப் புரிஞ்சுக்கிட்டாலே போதும், இங்க இருந்து நிறைய பேர் ஆசிரியர்களா போகப் போறவங்க இருப்பீங்க, நீங்க தான் இந்த வித்தியாசங்களையும், பாலினம் பற்றிய விபரங்களையும் மாணவர்களுக்கு புரியும் படி எடுத்துச் சொல்லணும்”

“பேசத் தயங்க கூடிய விசயங்கள்னு இங்க எதுவுமே இல்ல, பாலியல் கல்வி உட்பட. மேலை நாடுகள்ள இத ஒரு பாடமாவே வச்சுருக்காங்க, ஆனா நம்ம பாடத்துல இலை மறை காயா சொல்லிட்டு போய்ருவாங்க. அந்த இலை மறை காயா சொல்றதையும் நம்ம தான் மாணவர்களுக்கு புரியும் படி சொல்லணும். எந்த ஒரு விசயத்தையும் அது ஆண் சம்பந்தப்பட்டது, பெண் சம்பந்தப்பட்டது என பிரிக்கக்கூடாது. மனிதனோட மாற்றங்களா படிக்க கத்துக்கணும்”

“இவ்ளோ ஏன் சொல்றனா நான் எடுக்கப் போற பாடம் எம்ப்ரியாலஜி முழுக்க மென்சஸ், ரீப்பொரட்க்சன் சிஸ்டம், மேல் அண்ட் பீமேல் ஆர்கன்ஸ் பத்தி. அதுனால தான் இவ்ளோ சொன்னேன்” என்றவள், தன் பாடம் சம்பந்தப்பட்ட விசயங்களைப் பற்றி கூறத் தொடங்கினாள்.

ரகுநந்தனோ அவளை வேறு ஒரு பரிணாமத்தில் கண்டான். ‘முதன்முறையா டீச்சிங் பீல்டு. அதுவும் பயாலஜில இந்தளவு அவ மாணவர்களும் புரிஞ்சுக்கிற மாதிரி. செம டி செல்லம், அப்படியே அத்தான் மாதிரியே பிரிலிண்ட்டா இருக்கியே டி பட்டு’ என அவன் மனதினுள் கொஞ்சிக் கொண்டவன், வகுப்பு நடக்கும் போதே எழுந்து சென்றான்.

அவன் வந்த போது எப்படி அவனை அவள் கண்டு கொள்ளவில்லையோ அதேப் போல் தான் அவன் செல்லும் போது அவள் கண்டு கொள்ளவில்லை.

மாணவர்களுடன் அவள் பேசிக் கொண்டிருந்தாள். வகுப்பு முடிய, “தேங்க் யூ ஸ்டூடண்ட்ஸ். பாடத்துல எந்த டவுட்’னாலும் என்கிட்ட தயங்காம வந்து கேட்கலாம்” என்றவள் டிபார்ட்மெண்ட்டிற்கு சென்றாள்.

அங்கு ரகுநந்தன் அந்த துறையின் ஹெச். ஓ. டி ரவிக்குமார் அவரிடம் பேசிக் கொண்டிருக்க அவள் உள்ளே நுழைந்ததைக் கண்ட அவர், “மிதிலா இங்க கொஞ்சம் வா மா” என அழைத்தார்.

“சொல்லுங்க சார்” என அவள் அவர் அருகில் செல்ல, “இப்போ தான் மா நந்தா உன் கிளாஸ் பத்தி சொல்லிட்டு இருந்தாரு. நல்லா கிளாஸ் எடுக்கிறனு சொன்னாரு மா, வாழ்த்துக்கள்” என்றார் ரவிக்குமார்.

“இது என் கடமை சார், மாணவர்களுக்கு பாடத்த சொல்லிக் குடுக்கிறது தான என் வேலையே சார். இதுக்கு எதுக்கு பெரிய வார்த்தைலாம் சொல்லிக்கிட்டு” என அவள் இயல்பாய் மறுக்க,

“ஓ.கே மா. நீ போய் உன் வேலைய பாரு” என்றார் புன்னகையுடன்.

“தேங்க்ஸ் சார்” என்றவள் தன் இருக்கையில் சென்று அமர அவளை ரகுநந்தனின் பார்வைத் தீண்டிச் சென்றது.

“நல்ல பொண்ணு நந்தா, நான் தான் இன்டர்வியூ எடுத்தேன். கண்டிப்பா எங்க பீல்ட்ல நல்ல பேர் எடுப்பாங்க” என மனதார கூற அவன் மனமோ குத்தாட்டம் போட்டது.

“ஓ.கே சார்” என்றவன், அவள் அருகில் சென்று “எனக்கு இப்படி ஒரு பயாலஜி டீச்சர் கிடைக்காம போய்ட்டாங்களே. ஸோ சேட், நீ லன்அக்கி பாய் மிஸ்டர். ரகுநந்தன்” என அவன் தன்னைத் தானே கூறிக் கொள்ள,

“பொறுக்கி…” என முணுமுணுத்தது அவளின் இதழ்கள்.

“இதுவும் நல்லா தான் இருக்கு!” என்றவாறே அவன் செல்ல செல்லும் அவனையே கொலைவெறியுடன் பார்த்தாள் மிதிலா.

அந்நேரம் பார்த்து யாரோ, ‘கிருஷ்ணா’ என அழைக்க இருவரின் பார்வைகளும் ஒரே நேர்க்கோட்டில் சந்தித்தது.

அவன் இதழ்கள் மர்ம புன்னகையை சிந்த, அவளோ அவனை ஏகத்துக்கும் முறைத்து வைத்தாள்.

‘பார்க்கிறப்பலாம் இப்படி முறைச்சா அப்புறம் இந்த அழகான முகம் கோணிக்கிட்டு போய்ருமே!’ என நினைத்தான் ரகுநந்தன்.

அவளோ, அவனைப் பார்க்காமல் தன் வேலையைப் பார்க்க இவனோ மர்ம புன்னகையுடன் அங்கிருந்து சென்றான்.

நறுமுகையோ அன்று முழுவதும் ஏனோ முகம் வாடியே இருக்க, அவளைக் கண்ட மிதிலா ‘இவ ஏன் முகத்த தூக்கி வச்சுகிட்டு இருக்கா?’ என நினைத்தவள் அவள் வகுப்பிற்கு வெளியே நின்றாள்.

அவளைக் கண்ட நறுமுகை, வகுப்பிலிருந்து வெளியே வந்தாள்.

“ஏன் ஒரு மாதிரி டல்லா இருக்க டி?” என்றாள் மிதிலா.

“போ, நான் சொன்னா நீ சிரிப்ப!” என முகத்தை திருப்ப,

“சரி, சிரிக்க மாட்டேன். சொல்லு” என்றாள் மிதிலா.

“அது நான் கேன்டீன் போய்ருந்தேன் காலைல” என்க,

“அங்க சோறு தீந்து போச்சா!” என்றாள் நமட்டு சிரிப்புடன்.

“போடி, நீ சிரிக்க மாட்டனு தான சொன்ன. இப்போ சிரிக்கிற” என அவள் கோபம் கொள்ள, “சரி சரி, சிரிக்கல. சொல்லு” என்றாள் மிதிலா.

“அங்க, எங்க மென்டார் என்னைப் பார்த்து பச்சை மிளகாய் ஜீஸ் எப்படி இருந்துச்சுனு கேட்கறாரு” என்றாள் கண்ணைக் கசக்கியபடி.

மிதிலாவோ வந்த சிரிப்பை அடக்கியபடி, “அவருக்கு எப்படி டி தெரியும் 100 பச்சை மிளகாய் விசயம்?” என்றாள் மிதிலா.

“அவரு காலைல என்னைப் பார்த்தாரு டி, நம்ம பிளாட் தான் போல!” என்க,

“கடவுளே! என்னால சிரிப்ப அடக்க முடியல” என அவள் சிரிப்பை அடக்க முயன்று முடியாமல் சிரிக்க அப்பொழுது அந்த வழியே வந்த சிரஞ்சீவி அவர்கள் இருவரையும் கண்டு அருகில் வந்தான்.

“வாங்க சிரஞ்சீவி சார், உங்களப் பத்தி தான் பேசிக்கிட்டு இருந்தோம், நீங்களே அதுக்குள்ள வந்துட்டீங்க. உங்களுக்கு நூறு ஆயுசு” என்றாள் மிதிலா.

“நூறா! இதக் கேட்டாலே உங்க தங்கச்சிக்கு கோபம் வருமே மேம்” என்றான் அவன் பதிலுக்கு.

இருவரையும் சேர்த்து முறைத்த நறுமுகை, “எனக்கு ஒரு நாள் காலம் வரும். அப்போ பார்த்துக்கிறேன் உங்கள!” என்றவாறே வகுப்பிற்குள் சென்று உட்கார்ந்து கொண்டாள்.

“சாரி சார், அவ கிளாஸ்ல நடக்கிறதப் பத்தி தினமும் வந்து சொல்லுவா. கொஞ்சம் வாய் தான், மத்தப்படி அவ மனசுல எதையும் வச்சுக்க மாட்டா. தப்பா எடுத்துக்காதீங்க” என தன் தங்கைக்கு ஆதரவாக பேச,

“நோ ப்ராப்ளம் மேம். சின்னப் பொண்ணு தான, சுட்டித் தனமா இருக்கா. என்கிட்ட பேசற மாதிரி வேற ஸ்டாப் கிட்ட பேசிட்டா தான் பிரச்சனை, அத மட்டும் பார்த்துக்கோங்க” என்றான் சிரஞ்சீவி.

“அவ உங்க கிட்ட மட்டும் தான் சார் அதிகம் பேசறா, ஆமா நீங்க எங்க ப்ளாட்னு சொன்னா. நீங்களும் அங்க தானா?” என்றாள் மிதிலா.

“ஆமா மேம்…” என்றவன் சிறிது நேரத்திலே இருவரும் நண்பர்களாகி விட,

“ஓ.கே சார், எனக்கு நெக்ஸ்ட் கிளாஸ் இருக்கு. அப்பறம் பார்க்கலாம்” என அவள் கிளம்ப,

“இப்படிபட்ட அக்காக்கு இவ எப்டி தங்கச்சியா பொறந்தா!” என நினைத்தவனின் பார்வை நறுமுகையை தீண்டிச் சென்றது.

அவளோ புத்தகத்தை விரித்து வைத்து அதில் முகம் புதைத்திருந்தாள். ஆனால் அவன் அறியவில்லை. மிதிலாவின் சேட்டைகளைக் கண்டு தான் இவள் இப்படி வளர்ந்தாள் என்று!.

 

09

கல்லூரி முடிந்திருக்க தன் அக்காவிற்காக பார்கிங்கில் காத்திருந்தாள் நறுமுகை.

அப்பொழுது அங்கு வந்த சிரஞ்சீவி, ‘போண்டாகோழி இங்க என்ன பண்ணுது?’ என யோசிக்க,

‘நீ அவள போண்டாகோழினு சொல்றத அவ மட்டும் கேட்டா உன் மண்டை முடிய ஆஞ்சுருவா. அப்பறம் சேதாரத்துக்கு நான் பொறுப்பில்ல’ என்றது அவனின் மனசாட்சி.

“உண்மைய சொன்னா கோபம் வருமா! அவ அப்படி தான இருக்கா, வேற எப்படி சொல்றதாம்” என அவன் மனசாட்சியுடன் வாக்குவாதம் நடத்த,

‘டேய் அவ உன் ஸ்டூடண்ட் டா, அதோட நிறுத்திக்கோ. அதுக்கு மேல கொண்டு போன அப்புறம் நீ தான் வருத்தப்படணும். சொல்லிட்டேன்’ என மனசாட்சி எச்சரிக்கை விடுக்க,

“என்னனு தெரியல, அவ என்கிட்ட வம்பிழுக்கும் போது எனக்கும் அவ கூட சரிசமமா வம்பிழுக்கத் தோணுது. ஒரு மென்டார் கிட்ட பேசற மாதிரியா பேசறா, ஏதோ அவ கிளாஸ் பையன வம்பிழுக்கிற மாதிரி பேசுனா இந்த சின்ன பையன் தாங்குவானா சொல்லு!” என்றான் சிரஞ்சீவி.

‘யாரது சின்னப் பையன்?’ என மனசாட்சி கேள்வி தொடுக்க, “ஹலோ, ஹலோ. நான் தான் வேற யாரு!” என்றான் சிரஞ்சீவி.

‘டேய்! உனக்கே இது ஓவரா தெரியல? இருபத்தியெட்டு வயசாச்சு. இன்னும் சின்னப் பையனாம்’ என்றது மனசாட்சி.

“சரி, சரி அதப் பத்தி அப்புறம் டிஸ்கஸ் பண்ணிக்கலாம். பச்ச மிளகா என்ன பண்ணுதுனு கேட்டுட்டு வரேன்” என்றவன் அவள் அருகில் சென்றான் சிரஞ்சீவி.

அவளோ அலைப்பேசியில் மூழ்கி இருக்க, “ஹேய் பச்ச மிளகா, இங்க என்னப் பண்ற?” என்றான் சிரஞ்சீவி.

“ம்… பச்சை மிளகாய் ஜீஸ் போட்டுக்கிட்டு இருக்கேன் சார், உங்களுக்கும் வேணுமா?” என்றாள் நறுமுகை நக்கலுடன்.

‘ரொம்ப காரமா இருப்பா போலயே!’ என நினைத்தவன்,

“சரி, காலேஜ் முடிஞ்சும் வீட்டுக்கு போகாம இன்னும் இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க? ஒருவேளை பாய் ப்ரண்ட்க்கு வெய்ட் பண்றியோ!” என கேள்வியாய் அவன் நோக்க,

அவளோ கொதிநிலையில் இருந்தாள். ஏற்கெனவே தன் அக்கா வர தாமதமாகிக் கொண்டிருக்க, இதில் இவர் வேறு வந்து கடுப்படிக்கிறாரே எனக் கோபம் வந்தது.

“ஆமா சார், ஆனா பாய் ப்ரண்ட்காக இல்ல. என் புருஷனுக்காக வெய்ட் பண்றேன்” என்றாள் அவள்.

“வாட்!” என அதிர்வது அவனின் முறையாயிற்று. “அப்பறம் என்ன சார், அக்கா வரலயேனு நானே கடுப்புல உட்கார்ந்துருக்கேன். பாய் ப்ரண்ட் அது இதுனு” என அவள் கோபப்பட,

“சரி சரி, காலைல குடிச்ச பச்ச மிளகாயோட எபெக்ட் இப்ப தான் தெரியுது போல. நான் போய்ட்டு வரேன், நீ பத்திரமா வீடு போய் சேரு, இடைல அம்மா கடுகு வாங்கிட்டு வர சொன்னாங்கனு கடைல நூறு கடுகெல்லாம் எண்ணிக்கிட்டு இருக்கக் கூடாது பாரு!” என்றான் சிரஞ்சீவி நக்கலுடன்.

அவனை கொலைவெறியுடன் அவள் பார்க்க, அவனோ அந்த இடத்தை காலி செய்திருந்தான்.

ரகுநந்தனுக்கு வேலை இருக்க இவன் மட்டும் தனியாக கிளம்பியவன், மீண்டும் ஒருமுறை நறுமுகையைப் பார்த்தான்.

அவளோ தன் அக்காவிற்கு அலைப்பேசியில் தொடர்பு கொள்ள முயற்சிக்க மிதிலாவே வந்து கொண்டிருந்தாள்.

அதன்பிறகு தான் அவன் தன் வண்டியில் புறப்பட்டான்.

மிதிலா வந்தவுடன், “ஏன் டி, இவ்ளோ லேட்? கடுப்பாகுது” என்க,

“சாரி டி குண்டச்சி, கொஞ்சம் வொர்க் இருந்துது. அதான் லேட்டாகிருச்சு” என்றவாறே தன் இருசக்கர வாகனத்தை உயிர்பித்தாள் மிதிலா.

இருவரும் போகும் வழியில் விளாங்குறிச்சி சாலையில் ஒரு மாந்தோப்பு கண்ணில் பட, “குட்டச்சி” என தன் அக்காளின் முதுகை சொறிய,

அவளோ நெளிந்தவாறே, “என்னை ஒழுங்கா வண்டி ஓட்ட விடு டி குண்டச்சி” என்றாள் மிதிலா.

அவளோ திரும்பவும், “குட்டச்சி” என்க, மிதிலாவோ கோபத்தில் வண்டியை ஓரம் கட்டி, அவளின்புறம் திரும்பியவள்,

“என்ன டி குண்டச்சி?” என்றாள் மிதிலா.

“அங்க பாரு” என அவள் கை நீட்ட, அவள் காட்டிய திசையை பார்த்தாள் தன் ஹெல்மெட்டை கழட்டியபடியே.

சற்று தூரத்தில் மாந்தோப்பு கண்ணில் பட, “மாந்தோப்பு டி” என்றாள் மிதிலா.

“அது என்னனா உன்னை கேட்டேன், அங்க பாரேன். கொத்து கொத்தா மாங்கா தொங்குது டி குண்டச்சி, ப்ளீஸ். ப்ளீஸ், ஒரே ஒரு மாங்கா டி” என்க,

“சரி, போகற வழில சேரன் மா நகர்ல வாங்கி தரேன். இப்போ சீசன் தான!” என்க,

“எனக்கு அது வேண்டாம். இது தான் வேணும்” என அவள் மீண்டும் அவளை சொரண்ட,

“தோப்புக்காரன் வித்தா வாங்கலாம். ஈ, காக்காய கூட கண்ணுல காணோம், அப்புறம் எப்படி வாங்கறது?” என்றாள் மிதிலா.

“நீ தான் பறிச்சு தரணும்” என்றாள் நறுமுகை.

“என்னது, நானா!” என அவள் அதிர,

“ஊர்ல இருக்கும் போது நீ தான தோப்புல மாங்கா பறிச்சு தருவ, இப்போ எனக்கு மாங்கா வேணும்” என அவள் சிறு பிள்ளை போல் அடம்பிடிக்க,

“நம்ம இருந்தது கிராமம் மாதிரி டி, அங்க தோப்புல போய் திருடுனாலும் பிரச்சனை இல்ல. எப்படியாவது தப்பிச்சு ஓடிறலாம், ஆனா இங்க எப்படி டி? அதுவும் மெயின் ரோட்டு மேல இருக்கு தோப்பு” என அவள் மறுக்க,

நறுமுகையோ விடுவதாயில்லை. “அதெல்லாம் எனக்கு தெரியாது, நீ தான திருட்டு மாங்கா ருசியா இருக்கும்னு எனக்கு பழக்கி விட்ட. அப்போ இப்பவும் நீ தான் எனக்கு மாங்கா பறிச்சு தர” என்றாள் தீர்மானமாய்.

“எப்படியோ என் மானத்தை வாங்க முடிவு பண்ணிட்ட. சரி வா, பறிச்சு தரேன்” என்றவள் வண்டியை சாலையோரம் நிறுத்திவிட்டு அந்த தோப்பை ஆராய்ந்தாள்.

சுற்றி வேலி தடுப்பு போடப்பட்டிருக்க, அந்த தோப்பிற்கு செல்லும் வழியோ அதன் மறுபக்கத்தில் இருக்கும் போல. கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஆள் நடமாட்டம் இல்லாமல் இருக்க, நறுமுகையிடம்,

“இங்கயே பத்திரமா நில்லு டி குண்டச்சி, நான் இந்த சந்துல உள்ள போய் பறிக்கிறேன்” என ஒரு ஓரமாக இருந்த சிறு சந்து போல் இருந்ததில் உள்ளே நுழைந்தாள் மிதிலா.

முன்னால் இருந்த மரத்திலே மாங்காயை பறிக்க அவள் எட்ட, அதுவோ அவள் கரங்களுக்கு சிக்கவில்லை.

சுற்றி முற்றி பார்த்தவள், யாரும் இல்லாததை உறுதி செய்து விட்டு கட்டியிருந்த புடவையை சற்று மேலே தூக்கி இடுப்பில் நன்கு சொருகி கொண்டவள், மரத்தின் மீது ஏற ஆரம்பித்தாள்.

புடவை வேறு இடையிடையே தடுக்க, அதனை ஒரு கையில் பிடித்து கொண்டு மறு கையில் மரத்தை பிடித்த வண்ணம் லாவகமாக மரம் ஏறினாள் மிதிலா.

அவளைக் கண்ட நறுமுகைக்கோ சிரிப்பு தான் வந்தது. கல்லூரி பேராசிரியர் தன் அக்காள் என்றால் யார் நம்புவார்கள்?. அவள் மரம் மீது ஏறி இருப்பதை அவள் மாணவர்களே கண்டால் கூட மூக்கில் விரல் வைப்பார்கள் என நினைத்தவள்,

“குட்டச்சி, அந்த கிளைல இருக்கிற மாங்காய பறி டி. பார்க்கவே எச்சி ஊறுது” என தடுப்பிற்கு வெளியே நின்று குரல் கொடுக்க,

“கொஞ்சம் இரு டி, இந்த புடவை வேற தடுக்குது” என்றவள் அந்த கிளையை தன் பக்கம் இழுத்து மாங்காயைப் பறிக்க முயன்றாள் மிதிலா.

அதே வழியில் வந்து கொண்டிருந்த ரகுநந்தனின் பார்வையில் விழுந்தாள் நறுமுகை.

“முகி இங்க என்ன பண்றா?” என்றவன் அவள் பார்வை செல்லும் இடத்தில் இவன் பார்வையை செலுத்த அங்கோ மிதிலா புடவையை ஒருபுறம் பிடித்துக் கொண்டு மறு கையில் மரக்கிளையை இழுத்துக் கொண்டிருந்தாள்.

அவளைக் கண்டவனுக்கு கோபம் வந்தாலும் மறுபுறம் சிரிப்பு வந்தது. ‘இவ இந்த பழக்கத்த விடவே மாட்டாளா!’ என எண்ணியவன் தன் வண்டியை நிறுத்திவிட்டு நறுமுகையின் அருகில் செல்லும் போது தான் கவனித்தான்.

மிதிலா சப்போர்ட்டிற்காக அமர்ந்த வண்ணம் இருந்த மரக்கிளை உடையும் தருவாயில் இருந்தது.

அதனைக் கண்டவன், “ஹேய்! அங்க பாரு, கிளை உடையப் போகுது” என இவன் குரல் கொடுக்க,

அவளோ அவனின் குரல் கேட்ட பதட்டத்தில் வேகமாக நகர முற்பட அந்த மரக்கிளையோ முற்றிலும் உடைய சில நொடிகளே இருந்தது.

‘இவள…’ என மனதினுள் திட்டியவன் வேகமாக அந்த வேலி தடுப்பைத் தாண்டி மரத்தின் அருகே செல்வதற்குள் அந்த மரக்கிளை ஒடிந்து அதில் அவள் புடவை நுனி மாட்டி இருக்க அவளும் தொப்பென்று கீழே விழ,

விழப் போகும் அதிர்ச்சியில் அவள் கண்களை இறுக மூடி இருந்தாள்.

பூக்குவியலாய் அவன் கரங்களில் வந்து விழுந்திருந்தாள் மிதிலா.

கீழே விழப் போனவளை அவன் தாங்கிப் பிடித்திருக்க, அவளோ ‘இன்னுமா கீழ விழல!’ என கண்ணை மெதுவாக திறந்து பார்க்க ரகுநந்தனின் முகம் தான் அருகாமையில் இருந்தது.

அவள் அதிர்ச்சியில் அவனைப் பார்க்க, “அறிவிருக்கா உனக்கு. காலைல ரொம்ப மெர்ஜுடா கிளாஸ் எடுத்துட்டு இப்போ சின்னப் புள்ளத் தனமா திருட்டு மாங்கா பறிக்க மரத்துல ஏறி இருக்க! இன்னும் குழந்தைனு மனசுல நினைப்போ” என இவன் ஒருபக்கம் திட்டிக் கொண்டிருக்க அவளோ இமைக்க மறந்திருந்தாள்.

அதற்குள் நறுமுகையும் தடுப்பைத் தாண்டி வந்திருக்க, “அக்காக்கு ஏத்த தங்கச்சி. அவ புடவை கட்டி இருக்காளே, அத யோசிச்சாவது வேண்டாம்னு சொல்லி இருக்கலாம்ல நீ!” என நறுமுகையுடன் கோபப்பட,

அப்பொழுது தான் அவள் அவன் கரங்களில் இருந்ததை உணர்ந்து துள்ளிக் குதித்து எழுந்தாள்.

தன்னை சரிப்படுத்திக் கொள்ள, அவள் ஏற்றி சொருகி இருந்த புடவையின் மேல் ரகுநந்தனின் பார்வை செல்ல அவளோ அவசர அவசரமாக புடவையை சரி செய்தாள்.

“மாங்கா வேணும்னா கடைல வாங்கிக்க வேண்டியது தான. இப்படியா மரத்தில ஏறணும்?” என அவன் கோபப்பட,

நறுமுகையோ தன்னால் தான் தன் அக்கா கீழே விழப் பார்த்தாள் என்றெண்ணி அவளிடம் மன்னிப்பு கோரும் பாவனையில் பார்க்க, அவளோ “ஒன்னுமில்ல டி குட்டச்சி” என்றாள்.

“நான் வரலனா இந்நேரம் கால ஒடச்சுக்கிட்டு விழுந்துருப்ப” என்றவன் அடுத்து கூறிய வார்த்தையில் அதிகம் அதிர்ந்தது நறுமுகை தான்.

“இனி மாங்கா வேணும்னா என்கிட்ட சொல்லு, நான் வாங்கிட்டு வந்து தரேன். இல்ல திருட்டு மாங்கா தான் வேணும்னாலும் அந்த கருமத்தையும் பண்றேன், இனிமேல் மரம் ஏறுன காலை உடைச்சு அடுப்புல வச்சுருவேன்” எனத் திட்டிக் கொண்டிருக்க,

“என்ன மாங்கா வாங்கி தர்றாறா!” என அதிர்ச்சியில் இருந்தாள் நறுமுகை. ஆனால் மிதிலாவோ எந்த வித ரியாக்ஷனும் இல்லாமல் இருக்க,

நறுமுகை தான் கோபமானாள். “ஹலோ, சார். ஏதோ அக்காவ காப்பாத்துனதுக்காக நீங்க திட்றத பொறுத்துக்கிட்டா அதுக்குனு ஓவரா பேசக் கூடாது. நீங்க ஏன் என் அக்காக்கு மாங்கா வாங்கி தரணும், கொஞ்சம் கூட சொல்றதுக்கு முன்னாடி யோசிக்க மாட்டீங்களா!” என தன் ஹெச். ஓ. டி எனவும் பாராமல் தன் அக்காவின் மேல் உள்ள பாசப்பிணைப்பில் இந்த பாசமலர் அவனிடம் சண்டைக்கு கிளம்ப,

“ஏன் கண்ணம்மா, உனக்கும் சேர்த்து மாங்கா வாங்கி தரணுமா!” என அவன் கேட்ட கேள்வியில் இவள் பத்ரகாளியானாள்.

“இங்க பாருங்க, ஹெச். ஓ. டி ங்கிறதால தான் என் வாய் பேசிக்கிட்டு இருக்கு, அதுக்காக ஓவரா பேசுனீங்க, அவ்ளோ தான். எந்த தைரியத்துல என் அக்காக்கு மாங்கா வாங்கி தரேனு சொல்லலாம் நீங்க?” என அவள் பொங்கியவள்,

“ஆமா… கண்ணம்மா. இத என் அக்கா மட்டும் தான் என்னை அப்படி கூப்பிடுவா! நீங்க யாரு என்னை அப்படி கூப்ட?” என கொதித்தெழுந்தாள் நறுமுகை.

“அத உன் பாசமலர் அக்காகிட்டயே கேட்டு தெரிஞ்சுக்கோ கண்ணம்மா!” எனக் குறும்புடன் கூறியவன்,

“ஒழுங்கா ரெண்டு பேரும் வீடு போய் சேருங்க. உங்க பின்னாடி தான் வருவேன், எங்கயாவது வண்டி நின்னுச்சு அவ்ளோ தான்” என ஒற்றை விரலை நீட்டி எச்சரித்தவன் முன்னே நடக்க நறுமுகையோ கோபத்துடன் தன் அக்காளைப் பார்த்தாள்.

அவளோ செய்து வைத்த சிலை போல் அதிர்ச்சியில் இருக்க, ‘இவ ஏன் இப்போ ப்ரீஸ் ஆகி நிக்கிறா!’ என நினைத்தவள்,

“குட்டச்சி” என்றாள். ஆனால் அப்பொழுதும் அவள் நகராமல் இருக்க, “அடியேய் குட்டச்சி” என தோளை உலுக்க அப்பொழுது தான் அவள் தெளிந்தாள்.

“ஆங்…” என அவள் முழிக்க, “ஒழுங்கா வந்து வண்டிய எடு” என்றவள் முன்னே நடக்க மிதிலாவோ அதிர்ச்சி இன்னும் விலகாமல் அவளுடன் சென்று வண்டியை உயிர்ப்பித்தாள்.

அவள் அதிர்ச்சியில் இருப்பதைக் கண்ட நறுமுகையும் எதுவும் பேசாமல் இருக்க, அவள் வண்டியை செலுத்தத் தொடங்க அவர்கள் பின்னே ரகுநந்தன் வந்து கொண்டிருந்தான்.

அவர்களின் பிளாட்டை அடைந்தவர்கள் வண்டியை பார்க் செய்துவிட்டு, லிப்டினுள் நுழைந்தனர் மூவரும்.

மூவரும் வெவ்வேறு மனநிலையில் இருக்க அதனை யாரும் கலைக்க விரும்பவில்லை.

நான்காம் தளம் வந்தவுடன் நறுமுகையும் மிதிலாவும் வெளியேற ரகுநந்தனின் பார்வை மிதிலாவின் மேல் இருக்க அதனைக் குறித்துக் கொண்டாள் நறுமுகை.

ஆனால் இதனை எதையும் மிதிலா உணரும் நிலையில் இல்லை. அவளுள் ஏதேதோ ஞாபகங்கள் அலை மோத, அவள் நடை தடைபடாமல் சென்று அவர்களின் வீட்டின் முன் நின்றது.

வீட்டிற்குள் சென்றும் அவள் பேசாமல் இருக்க, “இதப் பத்தி அப்புறம் அவக் கிட்ட கேட்கலாம்” என நறுமுகையும் தன் வேலையைப் பார்த்தாள்.

மிதிலாவோ உடை மாற்றி படுத்தவள் யாரிடமும் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, “இவளுக்கு என்ன தான் ஆச்சு? நந்தன் சார ஏற்கெனவே தெரியுமா இவளுக்கு? அவர் கிட்ட கோபப்பட்டா அவரு இவக்கிட்ட கேட்க சொல்றாரு. இவ என்னடான்னா பிரம்மை பிடிச்சவ மாதிரி இருக்கா! என்ன டா நடக்கிது இங்க! தலையும் புரியல, வாலும் புரியல!” என அவள் பாட்டுக்கு புலம்பிய வண்ணம் இருக்க, அவளின் குட்டி நண்பர்கள் விளையாட அழைத்தனர்.

எப்பொழுதும் அவர்களுடன் மிதிலாவும் நறுமுகையும் சேர்ந்தே விளையாடுவார்கள். அந்த பிளாட்டில் இருந்த பத்து சிறுவர்கள் இவர்களுக்கு நண்பர்களாகி இருந்தனர்.

அவர்கள் வந்து அழைக்க, “அவளுக்கு வொர்க் இருக்கு, வாங்க நம்ம மட்டும் விளையாடலாம்” என அவர்களை பார்க்கிற்கு அழைத்துச் சென்றாள் நறுமுகை.

சற்று நேரத்திலே மற்றதை மறந்து விளையாட்டில் கவனம் செலுத்த தொடங்கி இருக்க, ஒரு குட்டிப் பையன் அவள் அருகே வந்தான்.

“என்ன டா சில் வண்டு, எங்க போய்ட்டு வர?” என்றாள் நறுமுகை.

“எங்க என் பொன் வண்டு, என் ஆளு என்னைப் பார்க்க வராம எங்க போனா!” என்றான் சில் வண்டு என நறுமுகையால் அழைக்கப்பட்டவன்.

“உன் பொன் வண்டுக்கு இன்னிக்கு வேலை டா, அதான் வரல” என்க,

“சரி, சரி” என்றவன், “பொன் வண்ட ஒழுங்கா சாப்பிட சொல்லு” என்றவனைக் கண்டவளுக்கு சிரிப்பு தான் வந்தது.

ஐந்து வயது கூட தேறி இருக்க மாட்டான். இருபத்தி நான்கு வயதான பொன் வண்டு என அழைக்கப்படும் தன் அக்காள் அவனுக்கு ஜோடியா! என நினைக்கும் போது அவள் இதழ்கள் புன்னகையில் விரிந்தது.

அவர்கள் இந்த பிளாட்டிற்கு வந்து இரண்டு வாரங்கள் தான் ஆகி இருந்தது. ஆனால் அதற்குள் அக்கா, தங்கை இருவரும் அந்த பிளாட்டில் உள்ள சிறுவர்களுக்கு நண்பர்களாகி இருந்தனர்.

இதோ இந்த சில் வண்டு மிதிலாவிற்கு பிடித்தமானவன். காரணம் அவன் பெயர் தான். அவனின் பெயர் ராம்! அவனுக்கு சில் வண்டு என அவள் பெயரிட, அவனோ அவளை பொன் வண்டு என அழைக்கலானான்.

நறுமுகையும் அந்த குட்டி சிறுவர்களோடும் தன் அக்காவோடும் சேர்ந்து கொண்டு பண்ணாத சேட்டைகள் இல்லை.

சிறிது நேரம் அவர்களுடன் நேரத்தை செலவிட்டவள், “எல்லாரும் வீட்டுக்கு கிளம்புங்க, டைம் ஆச்சு. ஒழுங்கா போய் ஹோம் வொர்க் பண்ணனும்” என அவர்களை அனுப்பி வைத்தவள் அருகில் இருந்த மளிகை கடைக்கு சென்றாள் நறுமுகை.

அங்கு சிரஞ்சீவியோ மளிகைப் பொருள் வாங்கி கொண்டிருக்க, அவனை எல்லாம் கண்டு கொள்ளாமல், அந்த கடைக்காரரிடம் “அண்ணா தேன் மிட்டாய் வந்துருச்சா?” என்றாள் நறுமுகை.

“என்ன மிட்டாய்?” என அவன் அதிர்ச்சியோடு அவளைப் பார்த்தான்.

 

10

“என்ன மிட்டாய்!” என அவன் அதிர்ச்சியோடு பார்க்க,

“ம்… தேன் மிட்டாய்” என்றவள், “அண்ணா, தேன் மிட்டாய் வந்துருச்சா, இல்லையா?” என்றாள் நறுமுகை.

“இன்னும் இல்ல மா, நாளைக்கு வந்துரும் மா. நாளைக்கு வந்து வாங்கிக்கோ” என்றார் அந்த கடைக்காரர்.

அவளோ, “என்ன அண்ணா நீங்க, இதே பதில தான் ஒரு வாரமா சொல்லிக்கிட்டு இருக்கீங்க. நாளைக்கு மட்டும் தேன் மிட்டாய் வரல, அவ்ளோ நாள்” என்றவள் கிளம்ப,

இவன் தான் வாங்கிய பொருட்களுக்கு பில்லை வாங்கியவன், பணத்தை எடுத்துக் கொடுத்துக் கொண்டே, “என்ன அண்ணா, அந்த பொண்ணு ரெகுலர் கஸ்டமரா… இவ்ளோ உரிமையா சொல்லிட்டு போறா” என்றான் சிரஞ்சீவி.

“அட நீங்க வேற தம்பி, இந்த பொண்ணு பக்கத்துல இருக்கிற அப்பார்மெண்ட்க்கு வந்து ஒரு வாரம் தான் ஆகுது போல. ஆனா இந்த ஒரு வாரத்துல தேன் மிட்டாய் கேட்டு பத்து தடவைக்கு மேல வந்துருச்சு. அது நேரமோ என்னமோ, அந்த மிட்டாய் கிடைக்கவே மாட்டேங்கிது” எனப் புலம்ப,

“இப்ப தான் குழந்தைனு நினைப்பு போல, சின்னப் புள்ள மாதிரி தேன் மிட்டாய் கேட்டு சண்டை போட்டுக்கிட்டு இருக்கா பச்ச மிளகா” என நினைத்தவன் தன் பிளாட்டிற்கு சென்றான் சிரஞ்சீவி.

அவளோ, கோபமாக வீட்டினுள் செல்ல மிதிலாவோ தலையணையை அணைத்த வண்ணம் படுத்திருந்தாள்.

“குட்டச்சி…” என இவள் அழைக்க அவள் காதுகளை இவளின் அழைப்பு எட்டவில்லை.

“இவளுக்கு என்ன தான் ஆச்சு? ஆல்ரெடி தேன் மிட்டாய் கிடைக்கலையேனு நானே கவலைல இருந்தா இவ வேற ஏதோ பிரம்மை பிடிச்சவ மாதிரியே இருக்காளே” என அவளை மீண்டும் அழைக்க, அப்பொழுதும் அவள் இவளைக் கண்டு கொள்ளாமல் இருந்தாள்.

“அடியேய் குட்டச்சி…” என அவளை உலுக்க, அதில் இவளைப் பார்த்தவள் “என்ன டி” என்றாள் மிதிலா.

“உனக்கு என்ன தான் டி ஆச்சு, ஏன் சாயந்திரத்துல இருந்து இப்படியே இருக்க?” என்றாள் கோபமாய்.

“ஒன்னுமில்ல, நான் தூங்கணும்” அவள் படுக்க,

“என்ன கருமமோ. போ!” என்றவள் அடுத்து தன் தாயை வம்பிழுக்கச் சென்றாள் நறுமுகை.

இங்கு சிரஞ்சீவியோ அவள் ஞாபகத்தில் தான் இருந்தான். அவனைக் கண்ட ரகுநந்தன், “என்ன டா, பலத்த யோசனைல இருக்க?” என அவன் அருகில் சோஃபாவில் அமர,

“எல்லாம் அந்த பச்சை மிளகாயால தான் டா” என்க,

“என்ன பச்சை மிளகாயா! பச்சை மிளகாய நீ ஏன்டா நினைக்கிற” என அவன் குழம்ப,

“உனக்கு என்ன நடந்துச்சுனு தெரியாதுல்ல” என்றவன், அன்று காலை நடந்ததைக் கூற,

ரகுநந்தனோ விழுந்து விழுந்து சிரித்தான். “ஆனாலும் இவ்ளோ அறிவு இருக்க கூடாது டா” என்க,

“இப்போ என்ன டான்னா தேன் மிட்டாய் கேட்டு கடைக்காரர் கிட்ட சண்டை போடறா. இப்ப தான் பொறந்த குழந்தைனு நினைப்பு போல” என்க,

“அவ சின்னப் பொண்ணு தான டா. விடு, வீட்டுல கொஞ்சம் ஓவர் செல்லம் போல” என்றான் ரகுநந்தன்.

“மிதிலா மேம் எப்படி தான் இந்த பச்சை மிளகாய்க்கு அக்காவா பொறந்தாங்களோ! அவங்க எவ்ளோ சைலண்ட்டா இருக்காங்க, இதுவும் தான் இருக்கே” என்றவனின் கூற்றில் அதிர்ந்தான் ரகுநந்தன்.

‘யாரு, அவ சைலண்ட்டா! இந்த உலகம் தாங்காது டா சாமி’ என நினைக்க,

“என்னமோ போ டா. எனக்கு ஒரு டைம் பாஸ் கிடைக்குது அந்த பச்சை மிளகாயால” என்றவன் போனில் விளையாட ஆரம்பிக்க, ரகுநந்தனோ மிதிலாவின் நினைவில் மூழ்கினான்.

இங்கு மிதிலாவோ, தலையணையை அணைத்த வண்ணம் பழைய நினைவுகளில் மூழ்கினாள்.

2005

கோயம்பத்தூர் மாநகரத்தில், சரவணம்பட்டியில் அமைந்திருந்த அந்த மெட்ரிகுலேஷன் பள்ளியில் வகுப்புகள் நடந்து கொண்டிருக்க ஐந்தாம் வகுப்பு மாணவிகள் சிலர் மட்டும் அந்த பள்ளியின் சுற்று சுவரை ஆராய்ந்து கொண்டிருந்தனர்.

அதில் ஒருவள், “மிது, காம்பவுண்ட் சுவர தாண்டுனா தான் மாங்கா பறிக்க முடியும் டி, இந்த பக்கம் எட்டவே மாட்டேங்கிது” என எக்கி பறிக்க முயன்று கொண்டிருந்தவள் கூற,

ஒன்பதே வயதான மிதிலா, “ஏய், இரு டி. நான் காம்பவுண்ட் சுவர் ஏறுறேன், நீங்க யாராவது வர்றாங்களானு மட்டும் பாருங்க” என்றவள்,

அருகில் கிடந்த கல்லின் மேல் ஏறி ஒருவாறு அந்த காம்பவுண்ட் சுவற்றில் ஏறி இருந்தாள்.

பள்ளியின் சுற்றுசுவர் சற்று சிறியதாக இருக்க, மூன்றரை அடி உயரம் கொண்ட மிதிலா தன் பலத்தை முழுவதுமாய் பிரயோகப்படுத்தி அதில் ஏறி இருந்தாள்.

அந்த சுற்று சுவருக்கு பின்னால் இருந்த ஒரு வீட்டில் தான் ஒரு பெரிய மாமரம் ஒன்று இருந்தது. பள்ளியினுள் இருந்து பார்த்தால் அந்த மாமரத்தின் காய்கள் கொத்து கொத்தாக தொங்குவது தெரியும்.

அதனைக் கண்ட மிதிலாவும் அவளது தோழிகளும் மாங்காய் பறிக்க திட்டமிட்டனர்.

தன் தோழிகளுடன் வகுப்பாசிரியரை ஏமாற்றிவிட்டு இங்கு வந்திருந்தனர். மிதிலா அந்த பக்கம் குதித்து மரம் ஏற ஆரம்பித்தாள்.

அவளால் முடிந்த மட்டும் ஏறியவள், அவள் கைக்கு எட்டிய மாங்காய்களைப் பறித்து தன் தோழிகளிடம் வீச, அவர்களோ ஆர்வமாக எடுத்துக் கொண்டனர்.

அப்பொழுது தான் அந்த பக்கம் வந்த மிதிலாவின் ராமன் பார்த்து விட்டு, “இவ திருந்தவே மாட்டாளா! குரங்கு மாதிரி எப்படி மரம் ஏறிருக்கா பாரு” என மனதினுள் திட்டிக் கொண்டவன்,

அங்கு செல்ல அவனைக் கண்ட மிதிலாவின் தோழிகளோ தெறித்துக் கொண்டு ஓட, பாவம் அவள் மரத்தில் மாங்காய் பறிப்பதில் இருந்த முயற்சியில் இவனைக் கவனிக்க தவறி இருந்தாள்.

அவன் நிமிர்ந்து மேலே பார்க்க, பாவாடை சட்டையில், இரட்டை ஜடை பின்னலிட்டு அவள் மாங்காய் பறிக்க இடையிடையே இடையூறு செய்த பின்னலை பின்னுக்கு தள்ளிக் கொண்டே எக்கி மாங்காய் பறித்துக் கொண்டிருந்தாள் குட்டி மிதிலா.

இவனோ அந்த காம்பவுண்ட் சுவரை ஒரே எட்டில் தாண்டி அந்த பக்கம் குதிக்க அதில் கேட்ட சப்தத்தில் அவள் பயத்தோடு கீழே பார்க்க முயலும் போது அவள் கால் மரத்திலிருந்து வழுக்க ஆரம்பித்தது.

“பார்த்து, ஜா…” என கூறி முடிப்பதற்குள் அவள் கீழே விழத் தயாராய் இருந்தாள். கீழே விழச் சென்றவளை தன் கரங்களில் தாங்கினான் அவன்.

அவளோ கண்களை இறுக மூடி இருக்க, “லூசு, எவ்ளோ தைரியம் உனக்கு. இப்படியா மரம் ஏறுவ?” என அவன் திட்டத் தொடங்க, அவளோ

“சாரி ராம்…” என்றாள் மிதிலா. “உடனே இத சொல்லிரு, கேட்டா நான் பறிச்சு தந்துருப்பேன்ல. பாரு உன் கூட வந்த உன் உயிர் தோழிகள் என்னைக் கண்டவுடனே ஓட்டம் பிடிச்சுருச்சுங்க” என்றான் மிதிலாவால் ராம் என அழைப்பட்டவன்.

“சாரி…” என அவள் இரு காதிலும் கைகளை வைத்து கொண்டு மன்னிப்பு வேண்ட,

“முதல்ல இறங்கு டி, எனக்கு கை வலிக்குது” என அவன் கூறிய பின் தான் அவள் கவனித்தாள் அவனின் கரங்களில் இருப்பதை.

அவள் இறங்கி கொள்ள அவளுக்கு எந்தவித மாற்றமும் தெரியவில்லை என்றாலும் பதினான்கு வயது விடலை பையனாக இருந்த ராமிற்கு தான் ஏனோ கூச்சமாக இருந்தது.

“நீ பண்ற ஒவ்வொன்னையும் கண்டுபிடிச்சு உன்னைத் தேடி வர்றதுக்குள்ள உயிரு போய்ருது டி. இனி மரம் ஏறுன காலை உடைச்சு அடுப்புல வச்சுருவேன்” என அவன் திட்ட, அவளோ தன் யூனிபார்மில் மறைத்து வைத்திருந்த ஒரு மாங்காயை எடுத்துக் கொண்டிருந்தாள்.

“நான் சொல்றத கவனிக்கிறாளா பாரு” என அவன் அவளை காதை திருக,

“சாரி, சாரி ராம். இனி மரம் ஏற மாட்டேன், ப்ராமிஸ்” என்க,

“இத்தோட பத்து தடவ ப்ராமிஸ் பண்ணிட்ட” என்றான் அவன் கோபமாய்.

“காத கொடேன்” என ரகசியம் பேச வருவது போல் அவள் அவன் அருகே வர, ‘என்ன’ என அவன் அவளவுக்கு குனிந்தான்.

அவன் கன்னத்தில் முத்தமொன்றை வைத்தவள், “இனி மரம் ஏற மாட்டேன், ப்ராமிஸ்” என கிண்கிணியாய் சிரித்தவள் அங்கிருந்து ஓட,

“கள்ளி. ஏமாத்து காட்றீல, இரு உன்னை விட மாட்டேன்” என அவளை பிடிக்க அவன் அவளை துரத்த, அவளோ முயல் குட்டியாய் அவனிடமிருந்து தாவி ஓடி விட்டாள்.

அவன் சிரித்த வண்ணம் தன் வகுப்பிற்கு செல்ல, மதிய உணவு இடைவேளையின் போது பள்ளி வளாகத்தில் ஏதோ சலசலப்பு கேட்க அவனும் அவன் நண்பர்களும் அங்கு சென்றனர்.

அங்கு ஏற்கெனவே சில வாண்டுகள் சுற்றி நின்றிருக்க ராம் என்னவென்று பார்த்தான்.

அங்கு இரு பெண்மணிகள் பள்ளியின் முதல்வரிடம் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்.

“என்ன சார் பிள்ளைகளுக்கு சொல்லி கொடுக்குறீங்க. மாங்காய பறிக்க சுவர ஏறி குதிச்சு வருதுங்க, அத்தோட விடுதுங்களா அங்க வைச்சுருந்த மண்பானை எல்லாம் உடைச்சு போட்ருச்சுங்க” என சத்தம் போட்டுக் கொண்டிருந்தனர்.

பள்ளி முதல்வர் அவர்களை சமாதானப்படுத்திக் கொண்டிருக்க ராமோ மிதிலாவை தேடினான்.

அப்பொழுது அவன் பின்புறத்தில் இருந்து யாரோ அவனை சொரண்ட, “யாரு” என்றவாறே அவன் திரும்ப அவன் இடுப்பளவில் இருந்த குட்டி மிதிலா தான் அவனை சுரண்டிக் கொண்டிருந்தாள்.

“ஹே, முதல்ல நீ வா…” என அவளை சற்று தள்ளி அழைத்துப் போனவன், “நீ மரத்துல மட்டும் தான ஏறுன, அப்புறம் ஏன் அந்த அம்மா மண்பானைலயாம் உடைச்சுட்டேனு சொல்லுது” என்க, அவளோ திருட்டு முழி முழித்தாள்.

“என்ன பண்ண, ஒழுங்கா சொல்லு” என அவள் திருட்டு முழியைக் கவனித்தவன் வினவ,

“அதுவந்து. அந்த அம்மா ஒருநாள் என் பிரண்ட்ஸ் மாங்கா பறிக்கப் போகும் போது குச்சியால அடிச்சு விரட்டிருச்சு… அதான்” என அவள் தயங்க,

“அதுக்கு நீ என்ன பண்ண?” என்றான் ராம்.

“அங்க வச்சுருந்த பானை எல்லாம் நான் தான் எடுத்து உடைச்சேன். அந்த அம்மா எப்படி என் பிரண்ட்ஸ்ஸ திட்டலாம், அதுக்கு தான் பண்ணேன். அப்பப்பா… அந்த பானை செம வெயிட் ராம், என்னால ரெண்டு கையால தூக்கவே முடியல. சிலதுல நானே அது மேல ஏறி நின்னு உடைக்க வேண்டியதா போச்சு” என இதழ் வளைத்துக் கூறுபவளைக் கண்டு அவனுக்கு சிரிப்பு தான் வந்தது.

அவன் சற்று அந்த பெண்மணி சத்தமிடுவதைக் கண்டவன், பின் அவள்புறம் திரும்ப அவளோ திருடிய மாங்காயில் உப்பும் மிளகாய் தூளும் கலந்து சப்புக் கொட்டி சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

பாதி மாங்காய் அவள் வயிற்றினுள் இறங்கி இருக்க, “இந்தா ராம், நீயும் சாப்டு. செம டேஸ்ட்டா இருக்கு” என பாதி கடித்த வண்ணம் இருந்த மாங்காயை அவன்புறம் நீட்ட அவனோ மறுக்காமல் வாங்கி கொண்டான்.

“சாப்பிடு ராம், செம டேஸ்ட்… இன்னொரு நாள் திரும்ப நம்ம மாங்காய ஆட்டய போடலாம்” என்றவாறே அவள் இதழில் ஒட்டி இருந்த மிளகாய் தூளை துடைத்துக் கொண்டிருந்தாள்.

“கைய மிளகா தூள்ள வச்சுட்டு அப்பறம் அதயே கண்ணுல வைப்ப, அப்புறம் கண்ணு எரியுதுனு சொல்லுவ. இரு நானே துடைச்சு விடறேன்” என அவன் துடைத்து விட,

“நீ முதல்ல மாங்காய சாப்பிடு ராம்” என அவளே அவனுக்கு ஊட்டிவிட, அவள் இதழ் கடித்திருந்த அதே பகுதியில் அவனுக்கும் அதனை ஊட்டி விட்டாள்.

அவன் மறுப்பேதும் சொல்லாமல் உண்க, அங்கோ இந்த மாங்காய் திருடின குற்றத்திற்காக அந்த பெண்மணி பள்ளி முதல்வரை கண்டமேனி திட்டிக் கொண்டிருந்தார்.

.
.
.

பழைய ஞாபகங்களில் மூழ்கி இருந்த மிதிலாவோ, தலையணைக்கு அடியில் இருந்த புகைப்படத்தை எடுத்துப் பார்த்தாள்.

“ஐ லவ் யூ ராம். நீ எனக்காக என் ராமனா வரணும், வருவியா ராம்…” என அவள் இதழ்கள் முணுமுணுக்க, அவள் விரல்கள் அந்த படத்தில் இருந்தவனை வருடியது.

“நான் வயசுக்கு வர்றதுக்கு முன்னயே என் மனசுல காதல விதைச்சவன் ராம் நீ, ஆனா என் காதல நான் உணர்ந்த நேரம் நீ எங்க போன ராம்? என்னை பார்க்கவே வர மாட்டியா? என் ராமனா எனக்காக திரும்ப வரணும் ராம்… உனக்காக தான் இவ்ளோ நாளா காத்திருக்கேன், ப்ளீஸ் ராம். என்கிட்டயே வந்துரு ராம்”

“எனக்கு கிருஷ்ணா வேண்டாம். நீ தான் வேணும், நீ வருவியா ராம்” என்றவளின் கண்களில் இருந்து கண்ணீர் வழிய அதில் ஒருசில கண்ணீர் துளிகள் அவள் ராமின் முகத்தில் பட்டது.

அங்கோ தன் முகத்தில் தண்ணீரைக் கொட்டியவனை முறைத்த வண்ணம் அமர்ந்திருந்தான் ரகுநந்தன்.

“ஏன்டா, என் மேல தண்ணிய ஊத்துன” என எதிரே நின்றிருந்த சிரஞ்சீவியை அவன் கோபமாக வினவ,

“ஏன் டா. உன்னை எத்தனை தடவை தான் கூப்பிடறது, கண்ண முழிச்சுக்கிட்டே தூங்கிட்டியா? என்ன பண்ணாலும் நீ அசையவே இல்ல, அதான் பாட்டில்ல இருந்த தண்ணிய முகத்துல ஊத்துனேன்” என்றான் சிரஞ்சீவி.

“உன்னை… ஏதோ ஞாபகத்துல உட்கார்ந்துருந்தேன், அதுக்காக இப்படி தான் தண்ணிய மூஞ்சில ஊத்துவியா” என்றவன் அவன் மேல் கோபப்பட,

“நீ அப்புறமா கோபப்படு. முதல்ல எனக்கு சாப்பிட ஏதாவது பண்ணு” என்றான் சிரஞ்சீவி.

“ஏன், நீ தான் ஏதாவது செய்ய வேண்டியது. ஒழுங்கா இன்னிக்கு நீ தான் சமைக்கிற” என்க, அவனோ “அப்போ நான் ஆன்லைன்ல ஆர்டர் பண்ணிக்கிறேன்” என்றவாறே அவன் தன் மொபைலையை நோண்ட,

“கண்ட கருமத்தையும் ஆர்டர் பண்றேங்கிற பேர்ல என்னை சாப்பிட விடாம பண்ணிருவ டா. இரு நானே ஏதாவது செஞ்சு தொலைறேன்” என்றவாறே ரகுநந்தன் சமையலறைக்குள் நுழைந்தான்.

தன்னறையில் மிதிலாவோ, அந்த புகைப்படத்தை அணைத்த வண்ணமே கண்களை மூடினாள்.

இரவு உணவையும் அவள் தவிர்த்து உறங்கி கொண்டிருக்க, நறுமுகை அவள் தூங்குவதைக் கலைக்க விரும்பாமல், தன் தாயிடம் வாய்க்கு வந்த காரணத்தைக் கூறியவள் தன் தந்தையிடமும் அதே காரணத்தை ஒப்பித்து விட்டு தங்கள் அறைக்குள் வந்தாள்.

உறங்கும் தன் அக்காவைக் கண்டவள், அவள் அருகில் சென்று அமர்ந்தாள் நறுமுகை.

அவள் அணைத்திருந்த புகைப்படத்தை எடுத்து அதனை அவள் தலையணை அடியில் வைத்தவள்,

“உனக்கு நந்தா சார முன்னமே தெரியுமா க்கா? அவரு உன்கிட்ட அவ்ளோ உரிமையா பேசறாரு. ஆனா நீ ஏன் அமைதியா இருக்க. எனக்கு தெரிஞ்சு அவரு உன்னோட ராமனா இருக்கணும், இல்லைனா நீ அதிகமா வெறுக்கிற கிருஷ்ணனா இருக்கணும். இந்த இரண்டு பேர்ல யாரோ ஒருத்தர் தான் நந்தா சார்னா நீ ஏன் இன்னும் இப்படியே இருக்க. எனக்கு ரொம்ப குழப்பமா இருக்கு க்கா” என துயில் கொள்ளும் தன் அக்காவிடம் புலம்பிக் கொண்டிருந்தாள் நறுமுகை.

அன்றைய இரவு நீண்டு கொண்டே செல்ல, மறுநாள் ஆதவன் புலப்பட தயாரானான்.

அதிகாலையிலே மிதிலாவிற்கு விழிப்புத் தட்ட எழுந்து கொண்டாள்.

நறுமுகையை எழுப்பி விட்டவள், கல்லூரி கிளம்ப தயாராக, “ஏன் டி என்னை இவ்ளோ சீக்கிரம் எழுப்பி விட்ட. டைம் இருக்குல்ல, மெதுவா போய்க்கலாம்” என அவள் மீண்டும் போர்வைக்குள் சுருள,

“ஒழுங்கா சீக்கிரம் கிளம்பு டி குண்டச்சி. கோவிலுக்கு போய்ட்டு போகலாம், எனக்கு மனசு சரியில்ல” என்க, அவள் முகத்தைப் பார்த்தாள் நறுமுகை.

அவள் முகம் பல குழப்பங்களை தத்தெடுத்திருக்க, “சரி, கிளம்பி தொலைறேன்…” என்றவள், எழுந்து கிளம்பினாள் நறுமுகை.

இருவரும் கோவிலுக்கு சென்று வழிபட்டு விட்டு அதன்பின் கல்லூரி சென்றனர்.

கல்லூரியிலும் மிதிலா மௌனத்தையே கடைப்பிடிக்க நறுமுகைக்கு தான் மண்டை வெடிப்பது போல் இருந்தது.

“என்ன டா நடக்கிது இங்க. ஒன்னுமே புரிய மாட்டேங்கிது, பேசாம நந்தா சார்கிட்டயே போய் நேரடியா கேட்ருவோமா!” என அவள் யோசித்துக் கொண்டிருக்க வகுப்பு எடுத்துக் கொண்டிருந்த சிரஞ்சீவியோ,

“நறுமுகை, கிளாஸ் கவனிக்க இஷ்டம் இருந்தா உட்காரு. இல்லைனா எந்திரிச்சு வெளிய போ, சும்மா இங்க உட்காந்து கனவு கண்டுக்கிட்டு இருக்காத” என்றான் சற்று கோபத்துடன்.

அவனும் அந்த வகுப்பிற்கு வந்ததில் இருந்து கவனித்துக் கொண்டு தான் இருந்தான். அவள் ஏதோ சிந்தனையிலேயே இருக்க அவன் அவளைப் பார்ப்பதைக் கூட கவனிக்கவில்லை.

அவள் அருகே அமர்ந்திருந்த உமையாள் கூட, அவன் பார்ப்பதை தன் தோழிக்கு தெரியப்படுத்த அவள் கைகளில் சுரண்டினாள்.

ஆனால் அவள் அதனையெல்லாம் கவனிக்க கூட இல்லை. அதில் கோபமுற்றவன் அவ்வாறு கூற, அவளோ மறுப்பேதும் கூறாமல் தன்னுடைய பையை எடுத்துக் கொண்டு வகுப்பை விட்டு வெளியேறினாள் நறுமுகை.

‘என்னாச்சு போண்டாகோழிக்கு, இந்நேரம் நம்மகிட்ட மல்லுக் கட்டி தான நிப்பா. இப்போ என்னடான்னா அமைதியா வெளிய போறா’ என நினைத்தவாறே தன் பாடத்தை எடுத்தான் சிரஞ்சீவி.

அவளோ கல்லூரி வளாகத்தில் இருந்த ஒரு சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்து கொண்டாள்.

தன் வகுப்பு முடிந்தவுடன் மிதிலாவை சென்று பார்த்தான் சிரஞ்சீவி.

“மிதிலா மேம், உங்க கிட்ட ஒன்னு கேட்கலாமா” என்க,

“சொல்லுங்க சிரஞ்சீவி சார்” என்றாள் மிதிலா.

“உங்களுக்கும் உங்க சிஸ்டருக்கும் ஏதாவது பிரச்சனையா? இன்னிக்கு கிளாஸ் கூட ஒழுங்கா கவனிக்கல, எந்திரிச்சு வெளிய போனு சொன்னவுடனே எந்திரிச்சு வெளிய போய்ட்டாங்க. அதான் உங்களுக்குள்ள ஏதாவது சண்டையானு கேட்க வந்தேன்” என்றான் சிரஞ்சீவி.

“அப்படி எதுவும் இல்லயே சார், சரி அவக்கிட்ட நான் பேசறேன்” என்றவள் அவளைத் தேடி சென்றாள்.

அவளோ மரத்தடியில் அமர்ந்திருக்க, “குண்டச்சி, இங்க என்ன பண்ற?” என்றவாறே அவள் அருகில் அமர,

“என்கிட்ட பேசாத டி…” என அவள் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள் நறுமுகை.

“என்ன கண்ணம்மா ஆச்சு?” என அவள் முகத்தை திருப்ப,

“நந்தா சார் யாரு?” என்றாள் நறுமுகை. அவள் கேள்வியில் அவள் சற்று தடுமாறி, பின் தன்னை சமாளித்து கொண்டவள்,

“உங்க ஹெச். ஓ. டி சார பத்தி என்கிட்ட கேட்டா எனக்கு என்ன டி தெரியும்” என்றாள் மிதிலா.

“அப்போ அவர உனக்கு முன்னமே தெரியாதுல்ல?” என்றாள் நறுமுகை அவளை ஆழம் பார்க்கும் விதமாக.

“தெரியாது…” என அவள் எங்கோ பார்த்துக் கொண்டு கூற,

“சரி, அத நான் நம்பிட்டேன். இதுக்கு மட்டும் பதில் சொல்லு, அவரு ராமனா! இல்ல கிருஷ்ணனா?” என்க அவளின் கேள்வியில் திகைத்தாள் மிதிலா.

“அத அவர தான் போய் கேட்கணும்” என்றாள் மிதிலா.

“நான் அவர கேட்க எனக்கு ரொம்ப நேரம் ஆகாது, ஆனா என் அக்காவே என்கிட்ட பொய் சொல்றப்போ நான் ஏன் கண்டவங்க கிட்டயும் போய் கேட்கணும்” என்றவள் எழுந்து செல்ல,

“குண்டச்சி, ப்ளீஸ் டி. அப்படி ஏதும் இல்ல” என்றவாறே அவள் பின்னால் சென்றாள் மிதிலா.

அவளோ கல்லூரி வாசலைத் தாண்டி சாலையை கடக்க முயல, மிதிலாவும் அவளை அழைத்த வண்ணம் அவள் பின்னே செல்ல எதிரே வந்த லாரியை கவனிக்கத் தவறினாள்.

அதற்குள் நறுமுகை சாலையை கடந்திருக்க, நடுரோட்டில் நின்றிருந்தாள் மிதிலா. அவளை நெருங்கி கொண்டிருந்தது அசுர வேகத்தில் வந்து கொண்டிருந்த லாரி ஒன்று.

அவள் அப்பொழுது தான் அந்த லாரியை கவனிக்க,

“ஜானு…” என ஒருவன் தன் உயிரே போய் விடும் அளவிற்கு கத்திக் கொண்டே அவள் அருகே ஓடி வர, “ஜானு…” என்ற அழைப்பில் அவள் கால்கள் அந்த இடத்தை விட்டு நகர மறுத்தன.

ஆனால் லாரியோ அவளை நெருங்கி இருந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அனைத்தும் நடந்தேற, “ஜானு…” என்ற கத்தலில் சாலையோரம் சென்றிருந்த அனைவருமே ஒரு நிமிடம் திரும்பி பார்த்திருந்தனர்.

நறுமுகையோ, “மிது…” என அதிர்ச்சியில் கத்தினாள்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
8
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்