
நள்ளிரவு தாண்டிய வேளையில், அமைச்சரின் வீட்டிலிருந்து ஆண்கள் எடுக்கப் போன தாள்களுக்காகக் காத்திருந்த பெண்களில், ஆரு தவிர மற்றவர்கள் சேரிலேயே அமர்ந்து உறங்கி விட்டனர்.
‘இவனுங்க கடத்தலே ஒழுங்கா பண்ணல… மினிஸ்டர் வீட்டுல போய் ஒழுங்கா திருடுனானுங்களா? இல்ல கேவலமா மாட்டிகிட்டானுங்களான்னு தெரியலயே!’ எனச் சிந்தனையில் இருந்தவள், பின், ‘ம்ம்ஹும்! இவனுங்க வேஸ்ட்… எப்படியும் எடுத்திட்டு வரமாட்டானுங்க.’ என்று அறைநோக்கி செல்லுகையில், நால்வரும் அங்கு வந்த சேர்ந்தனர்.
தேவா ஆருவிடம், அவள் ஆராய்ச்சி செய்த தாள்களைக் கொடுக்க, “வாவ் எடுத்துடீங்களா? நான் கூட நீங்க இதையும் சொதப்பிடுவீங்களோன்னு நினைச்சேன்.” என விழி விரித்து அவனிடமே கூற, தேவா அவளை முறைத்தான். வைஷு தவிர மற்ற இருவரும் இந்தச் சத்தத்தில் விழித்திட, “தேங்க் காட்! இதை வச்சு அந்த மினிஸ்டர ஒரு வழி ஆக்கிடலாம்.” என்று குதூகலித்தனர்.
விஷ்வாவும் அருணும் தான், ‘அய்யயோ பாவம் புள்ளைங்க… ரொம்ப சந்தோசப்படுதுங்களே’ என்று பாவப்படும் போதே, ஆராதனா அந்தத் தாள்களை திருப்பித் திருப்பி பார்த்தாள் பதட்டத்துடன்.
“இதுல முக்கியமான பேப்பர்ஸ்லாம் இல்ல… அது தான் இம்பார்ட்டண்ட்” என்று தேவாவிடம் கூற, அவன் தோளைக் குலுக்கி, “இதான் அந்த மினிஸ்டர் வீட்டுல இருந்துச்சு. நாங்க எடுத்துட்டு வந்துட்டோம், தட்ஸ் இட். அதுல என்ன என்ன பேப்பர்ஸ் இருக்குன்னு எங்களுக்கு எப்படி தெரியும்?” என்று அசட்டையாகக் கூறியதில், கோபமானவள், அந்தப் பேப்பரை தூக்கி எறிந்து, “இதை வச்சு, ஒரு மண்ணும் பண்ண முடியாது. சே! ஒரு வேலையும், உருப்படியா செய்யத் தெரியாத உங்க கிட்ட போய் வேலையைக் குடுத்தேன்ல என்னைச் சொல்லணும்.” என்றாள். தேவா “லுக், அங்க இது மட்டும் தான் இருந்துச்சு. மே பீ! நீங்க முக்கியமா நினைக்கிற பேப்பர்ஸை, அவன் அழிச்சுருக்கலாமே” என்க, அம்மு “இருக்கலாம் ஆரு. இதை அப்படியே வச்சுருக்க, அவனுக்கு என்ன லூசா புடுச்சுருக்கு? இப்போ என்ன பண்றது?” என்றாள் குழப்பமாக.
விஷ்வா தான், ‘அட பக்கி, அவன் சொன்னதை உடனே நம்பிட்டியே…’ என மானசீகமாகத் தலையில் அடித்துக் கொண்டான். தமியும், “மறுபடியும் ரிசர்ச் தான்!” என்றிட, ஆரு தேவாவை சந்தேகமாகப் பார்த்தாள்.
அவனோ சலனமின்றி அவளைப் பார்த்தான். ஆராதனா மேலும் ஏதோ பேச வருகையில் அவளைத் தடுத்தவன், “இங்க பாரு! நீ சொன்ன மாதிரி நான் ஒரு வேலையைச் செய்து விட்டேன்.
இப்போ நான் சொல்றமாதிரி நீ ஒரு வேலை பார்க்கணும். நாளைக்கு காலைல ரெடியா இரு. நம்ம கடத்தப் போகணும்…” என்று சாதாரணமாகக் கூறியதில், “டேய்! நீ கொண்டு வந்தது வேஸ்ட். அதை வச்சு ஒண்ணுமே பண்ண முடியாது.” என்றாள் காட்டமாக.
“அது என் பிரச்சனை இல்ல. நீ கேட்ட மாதிரி ரிஸ்க் எடுத்து மினிஸ்டர் வீட்டுக்கு போய்த் திருடிட்டு வந்தாச்சு. அது உனக்குத் தேவையானதா, இல்லையான்றது எனக்குத் தேவையே இல்ல” என்றவன், “எல்லாரும் போய்த் தூங்குங்க…!” என்றான் பொதுவாக. அருணும் விஷ்வாவும் உள்ள சென்றிட, நிஷாந்த் உறங்கும் வைஷுவையே பார்த்துக்கொண்டு இருந்தான்.
அவன் அதே இடத்தில் நிற்பதைக் கண்ட தேவா அழுத்தமாக “நிஷாந்த்” என்றழைக்க, அவன் பதறி, “என்ன மச்சான்?” என்க, அவனை ஒரு மாதிரியாகப் பார்த்து “போய்த் தூங்கச் சொன்னேன்…” என்றதும், அவன் அடுத்த நொடி அறைக்குள் இருந்தான்.
அவனை முறைத்திருந்த ஆருவை பார்த்து, “ம்ம்” என அவளின் அறை நோக்கிக் கண்ணைக் காட்ட, அம்முவும் தமியும், அவளை உள்ளே இழுத்துச் சென்றனர்.
பின், எவ்வளவு கஷ்டப்பட்டாவது இந்த ஆராய்ச்சியை முடிக்க வேண்டும் என்று உறுதி எடுத்துக்கொண்டவள், வைஷுவை எழுப்பச் சொல்ல,
அம்மு, ‘எத்தனை நாளைக்கு தான், இவங்க ரெண்டு பேருக்கும் நம்ம தூது போறது’ என்று எண்ணிக்கொண்டு , “எனக்குச் செம்மையா தூக்கம் வருது. நீ போய் எழுப்பு” என அங்கிருந்த கயிற்று கட்டிலில் படுத்ததும், தமியும் புரிந்து கொண்டு கண்ணை மூடிப் படுத்துக்கொண்டாள்.
அதில் பெருமூச்சு விட்டவள், வைஷுவை எழுப்புகையில், நிஷாந்த் வேகமாக வெளியில் வந்து, “அவள் இங்கயே தூங்கட்டுமே! பாதி தூக்கத்துல இருந்து எழுந்தா பயந்துடுவா.” என உளறி வைக்க, ஆரு அவனை கூர்மையாகப் பார்த்தாள்.
‘சே, இப்படி சொதப்புறோமே’ என்று நொந்தவன், “அது இல்ல பொதுவா தூங்கும்போது எழுப்புனா எல்லாரும் பயந்துருவோம்ல அதான்” என்று சமாளிக்க, அவள் அவனை மேலும் கீழும் ஒரு எக்ஸ்ரே பார்வை பார்த்து விட்டு, போர்வையை எடுத்து அவளுக்குப் போர்த்தி விட்டுச் சென்றாள்.
அவள் ஆழ்ந்து உறங்குவதே என்றாவது தான். அதிலும் பல வருடம் கடந்து இன்று தான் அவள் நிம்மதியாக உறங்குகிறாளென உணர்ந்த ஆருவும், அவளை எழுப்பாமல் விட்டு விட, நிஷாந்த், தன்னை மறந்து துயிலும், அவனின் மனம் கவர்ந்தளின் தலையை ஆதரவாகக் கோதப் போனான்.
ஆனால், ‘ம்ம்க்கும்’ என்ற தேவாவின் குரல் கனைக்கும் சத்தத்தில் சட்டென்று திரும்பியவன், பேந்த பேந்த முழிக்க,
அவன் “இன்னும் தூங்காம என்ன பண்ற? போ!” என்று உத்தரவாய் சொன்னதும், ‘தப்பித்தோம் பிழைத்தோம்’ என ஓடி விட்டான்.
அந்த ஒரு நாள் பொழுதே அனைவருக்கும் பல ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் கொடுத்து விட்டு அஸ்தமனம் ஆகி, மறுநாள் பொழுது மேலும் பல புதிய அதிர்ச்சிகளை தர அழகாகப் புலர்ந்தது.
வைஷுவும் அம்முவும் குளிரில் கையைக் கட்டிக்கொண்டு வெளியில் வர, தமி ஒரு பெரிய போர்வையை போர்த்திக் கொண்டு, “ஐயோ எனக்கு ரொம்ப குளுருது! யாராவது சூடா நல்ல ஒரு ஃபில்டர் காஃபி கொடுங்களேன்.” என்று நடுங்க, அருண், “ப்ளாக் காஃபி தான் இருக்கும்… ஓகே வா?” என அபிப்ராயம் கேட்டான்.
“நீங்க போடுற ஃபில்டர் காஃபியே அப்டித்தான் இருக்கும்.” என்று முணுமுணுத்தவளை முறைத்த அருண், பின் மெலிதாகப் புன்னகைத்து விட்டு, பிளாக் காஃபியோடு வந்து அவளைப் பார்த்துக் கொண்டே கொடுத்தான்.
வைஷு, “நம்ம சீக்கிரம் ரிசர்ச் பண்ண வேண்டிய இடத்துக்குப் போகணும். அதுவும் நம்ம போன தடவை போன வழியில போக முடியாது. அங்க சுத்தி அந்த மினிஸ்டர் ஆளுங்களை போட்டிருக்கான். அந்த முள்ளு பாதை வழியா தான் போகணும். சீக்கிரம் கிளம்புங்க” என்றாள் இரு தோழிகளிடமும்.
அப்போது தேவா வந்தவன், “இப்போ யாரும் எங்கயும் போக முடியாது.” என்றான். அதில் மூவரும் குழப்பமாகப் பார்க்க, “நீங்க போகப் போறது பேன்(ban) பண்ண இடத்துக்கு. அங்க இப்படி தான் பட்ட பகல்ல போவீங்களா? உங்க ரிசர்ச்ச இருட்டுனதுக்கு அப்பறம் தான் பண்ண முடியும்.” என்றவனிடம்,
அம்மு, “இருட்டுனதுக்கு அப்பறம் எப்படி அந்த முள்ளு பாதையில போக முடியும். அது போக, வெயில் உச்சிக்கு வரும்போது தான், அந்த இடத்துல இருக்குற மண்ணை எடுத்து…” எனப் பேச ஆரம்பிக்கும் போதே, “அம்மு” என்ற ஆருவின் குரல் கேட்டது அதட்டலாக. கூடவே சொல்லாதே என்ற கண் அசைவுடன்.
தேவா, ‘ஓ எங்களுக்குத் தெரியக்கூடாதாம்’ என மனதில் நக்கலடித்துக்கொண்டு அவளைப் பார்க்க, “உங்க அக்கறைக்கு மிக்க நன்றிகள்… எப்போ, என்ன பண்ணனும்னு எங்களுக்குத் தெரியும். சோ யூ கைஸ் டூ யுவர் ஓன் பிசினெஸ்!” என்றவள் தோழிகளைக் கிளம்பச் சொல்லி விட்டு உள்ளே செல்லப் போகையில், தேவா அவள் கையைப் பிடித்து இழுத்தான். “எங்க மேடம் போறீங்க? நீங்க எல்லாரும் இருக்குறது என் இடத்துல. இங்க நான் எப்போ என்ன பண்ணச் சொல்றேனோ அதைத் தான் பண்ணனும்…” என்றவன், “உனக்கு 5 நிமிஷம் டைம். அதுக்குள்ளே கிளம்பி வெளிய வர்ற. அப்படி லேட் ஆனா, நான் உள்ள வந்துடுவேன்.” என்று மிரட்டி அவளை அறைக்குள் தள்ள, அவளுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது.
மற்ற மூன்று பெண்களும் செய்வதறியாமல் அவனைப் பார்க்க, அவன், “நீங்க மூணு பேரும் முதல்ல வழியில இருக்குற முள்ளை எல்லாம் க்ளியர் பண்ணுங்க. அந்த வழியில எந்த ஆட்களும் பாதுகாப்புக்கு இல்ல சோ, தைரியமா போகலாம்.” என்று விட்டு,
அவன் நண்பர்களிடம் “நீங்க மூணு பேரும் அவங்க கூடப் போங்க. இன்னைக்கு 2 கிலோ மீட்டர் மட்டும் உள்ள போய் முள்ளுப்பாதையை க்ளியர் பண்ணி, வழியை மார்க் பண்ணிட்டு வாங்க. இப்படியே ஒரு 5 டேஸ் தொடர்ந்து முள்ளை க்ளியர் பண்ணதுக்கு அப்பறம், ஒரு நாள் பிளான் பண்ணி அங்க போய் ரிசர்ச் பண்ணலாம்…” என்றான் யோசனையாக.
உள்ளே இருந்த படியே ஆராதனா, “அவ்ளோ நாள் எல்லாம் வெய்ட் முடியாது. உடனே பண்ணனும்.” என்று கத்த, அவன், “உனக்குக் குடுத்த 5 மினிட்ஸ் முடிஞ்சுருச்சு. இப்போ நீ வெளிய வர்றியா? இல்ல நான் உள்ள வரட்டுமா?” என்று எச்சரித்தான். நிஷாந்த், ‘ஹை நம்மாளு கூட வெளிய போறோமா’ என ஏதோ அவுட்டிங் செல்லும் ரேஞ்சில் சந்தோசப்பட, விஷ்வாவும் அருணும் தான், ‘என்னாது இவளுங்க கூட காட்டுக்கா’ என்று மிரண்டனர்.
ஆருவோ, “டேய் உள்ள வந்துடுவியா? வந்து தான் பாரேன்… மூஞ்சியை பேத்துடுவேன்” என்றதில், “அடிங்க” என்று கதவை திறக்கப் போனான். அவள் சட்டென்று கதவை மூடி, “இன்னும் ஒரு 5 மினிட்ஸ்” என்றாள் அமைதியான குரலில்.
அவன் “ம்ம்” என்று விட்டு, மற்றவர்களைப் பார்க்க, அவர்களோ திருதிருவென இவனையே பார்த்தனர்.
அவன் அதனைக் கண்டுகொள்ளாமல், அவர்களைக் கிளம்பச் சொன்னான், மதியத்திற்குள் இங்கே வந்திருக்க வேண்டும் என்ற உத்தரவோடு.
தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு ஆறு பேரும் ஆருவின் அறையை பாவமாகப் பார்த்துக்கொண்டு வெளியில் சென்றனர்.
முன்னால் மூன்று பெண்களும் நடக்க, பின்னால் வந்த ஆண்கள் மூவரும், ‘நடுக்காட்டுல இவளுங்ககிட்ட சிக்கிட்டோம்’ என புலம்பிக் கொண்டே செல்ல, விஷ்வா, ‘போனி டெய்லி’ல் அடக்கிய அம்முவின் கூந்தலையே பார்த்துக்கொண்டு வந்தான். ஏதோ தோன்றியதில், அவன் புறம் திரும்பியவள், அவன் பார்ப்பதை கண்டு கொண்டு, அவனைக் காரமாக முறைத்து விட்டு நடக்க, அவன் குறுநகை புரிந்தான் தலையை ஆட்டி. சரியாக அந்த முட்பாதை ஆரம்பிக்கும் இடத்திற்கு சென்ற பெண்கள் திகைத்து விட்டனர். ஏதோ நடை பாதையில் முள் இருக்கும் என்று நினைத்திருந்தவர்கள், இப்படி காட்டையே அடைக்கும் படி முட்கள் மட்டுமே இருக்கும் என்று எண்ணவில்லை.
இதனை சரி செய்யாமல் நிச்சயம் இந்த வழியே செல்ல முடியாது! என உணர்ந்தவர்களுக்கு நம்பிக்கையே போய் விட்டது. தமி, “போச்சு, இந்த முள்ளை எல்லாம் எப்போ அப்புறப்படுத்தி? நம்ம எப்போ இங்க இருக்குற மண்ணை ரிசர்ச் பண்ணி? நம்ம மேல தப்பு இல்லைன்னு ப்ரூவ் பண்ணப் போறோம். கண்டிப்பா, இதுல எதுவுமே நடக்கப் போறது இல்ல…!” என்று நொந்தவள் அங்கிருந்த மரக்கிளையில் அமர,
அம்முவும், “ம்ம் இதை ஒரு கிலோமீட்டர் சரி பண்ணவே எப்படியும் ஒரு வாரம் ஆகும் போல. நம்ம டிபார்ட்மென்ட்ல நமக்குக் குடுத்துருக்குற டைமே ஒரு மாசம் தான். அதுக்குள்ள, எந்த ஆதாரமும் ரெடி பண்ண முடியலைன்னா, நம்ம ஊழல் பண்ணோம்னு பச்சையே குத்திடுவாங்க.” என்றாள் கலங்கிய குரலில்.
வைஷுவோ, “ஆமா, இது என் அப்பாவுக்குத் தெரிஞ்சா அவ்ளோ தான்… நம்மளை கொலை பண்ணிட்டு தான் பேசுவாரு” என்றிட, மூவருமே அப்போது தான் முதல் முதலில் பயத்தை வெளியில் கொட்டினர். எப்போதும் ஆரு உடன் இருப்பாள். அவள் அவர்கள் எதிர்மறையாகப் பேசுவதை என்றுமே ஆதரிக்கமாட்டாள். அப்படி பேசினாலும், உண்டு இல்லை என்று ஆக்கி விடுவாள்.
அதனாலேயே, இந்த பிரச்னையைப் பற்றி உள்ளுக்குள் பயம், வருத்தம் இருந்தாலும் வெளியில் காட்டிக்கொள்ளாமல் இருந்தனர்.
ஆனால், இப்போது அவர்களையும் மீறி வார்த்தைகள் வெளியில் வர, அவர்களைப் பார்த்திருந்த ஆடவர்களுக்கு தான் பாவமாகப் போய்விட்டது.
அருண், “இப்போ என்ன ஆச்ச?. இவ்ளோ தூரம் தைரியமா வந்துட்டீங்கல்ல… இன்னும் எதுவுமே ஆரம்பிக்கல அதுக்குள்ளே இப்படி சோர்ந்து போனா எப்படி?” என்றிட, விஷ்வா, “இந்த முள்ளை சரி பண்றதுலாம் பெரிய விஷயமே இல்ல. உங்களுக்கும் வழி தெரியணும்னு தான் உங்களை எங்க கூட தேவா அனுப்பிருக்கான். இல்லைன்னா, முதல்ல நாங்க தான் வந்து இந்த வழியை சரி பண்ணிட்டு, அப்பறம் உங்களை அனுப்பிருப்போம்” என்றான், தன் நண்பனின் எண்ணம் இதுதான் என்று உணர்ந்து.
நிஷாந்த், “இந்த வழியை விட்டால் வேற வழியும் இல்ல… நீங்கத் தைரியமா பேசுறீங்கன்னு நினைச்சா இப்படி எடுத்ததும் நம்பிக்கையைக் கை விடுறீங்க?” என்றதும், வைஷு அவனை உதட்டைக் கடித்துக்கொண்டு பார்த்தாள். அம்முவும் அவர்கள் பேசியதில் சற்று தெளிய, தமி தான் உம்மென்று இருந்தாள். அவளை சரி செய்வது கஷ்டம் என உணர்ந்த அம்மு, “தமி வா, நம்ம வந்த வேலையை ஆரம்பிக்கலாம்.” என்று கையைப் பிடித்து இழுக்க, அவள், “ப்ச் போ” என்று கையை இழுத்துக்கொண்டு, கன்னத்தில் கை வைத்து சோகமாக அமர்ந்தாள்.
அருண் அவளை சமாதானப்படுத்தலாம் என்று ஏதோ பேச போகும்போது, விஷ்வாவுக்கு என்ன தோன்றியதோ! சட்டென்று அவள் அருகில் சென்று அமர்ந்தவன், தீவிரமாக முகத்தை வைத்து, “காலைல விலக்குறோம் பல்லு! இதுக்குலாம் பயப்படலாமா சொல்லு!” என்று அவனின் மொக்கையை எடுத்து வீச, தமி அவனை முறைத்தாள். மேலும், “உங்களை மாட்டிவிட மினிஸ்டர் பண்ணுனான் சதி!, நீங்க எங்க கிட்ட மாட்டுனது அவனோட விதி!” என்றிட, அவள், “டேய்ய்ய்” என மேலும் கடுப்பானாள்.
அவனோ விடாமல், “கோவில்ல இருக்கு நந்தி! சிங்கப்பெண் நீ தமயந்தி!” என்க, அவள் பட்டெனச் சிரித்து விட்டாள். அவன் மேலும் பேச வருகையில், தமி, “விஜயகாந்த் நடிச்ச படம் சின்ன கௌண்டரு! எங்க கழுத்தை அறுக்குது உன் மொக்கை கௌண்டரு!” என்றவள் ‘எப்புடி’ எனக் காலரை தூக்கி விட்டுக்கொள்ள, விஷ்வா, “பேஷ் பேஷ் ரொம்ப நன்னாருக்கு” என்று சிரித்தான்.
வைஷு, “ஐயோ போதும் சாமி முடியல… வந்த வேலையைப் பார்ப்போமா?” என்று விஷ்வா பேசியதில் சிறு சிரிப்புடன் அழைக்க, தமி, “ஓ பார்க்கலாமே” என உற்சாகமாக எழுந்தாள். அம்மு, விஷ்வாவை முறைப்புடன் பார்த்துக்கொண்டு, அந்த முட்களை நகர்த்த, அருண் முகம் லேசாக வாடியது.
“எவ்ளோ நேரம்டி கிளம்புவ…? இப்போ வெளிய வரப்போறியா இல்லையா?” எனப் பத்தாவது முறையாக அறைக்கதவை தட்டிய தேவா, “ஒருத்திய நிம்மதியா கிளம்ப விடுறியா?” என்று திட்டிக்கொண்டு வெளியில் வந்த ஆருவை மேலிருந்து கீழ் வரை அளவெடுத்தான்.
முழுக்கை டீ ஷர்ட்டும், ப்ளாக் ஜீன்ஸும் அணிந்திருந்தவள், ஸ்போர்ட்ஸ் ஷூவின் லேசை வெளியில் வந்து அவனை முறைத்துக்கொண்டே கட்டியவள், கழுத்தில் சிவப்பு நிறத்தில் துணிபோல் எதையோ கட்டி ‘நாட்’ போட்டிருந்தாள்.
“பக்கா ஃபிராடு மாதிரியே இருக்க. வாயில பிளேடு மட்டும் வச்சுக்கிட்டா, இந்தக் காட்டோட தாதா நீதான்.” என்று கேலி செய்தவனை முறைத்தவள், “இப்போ எங்க போறோம்?” என்றாள் எரிச்சலாக. அவன் பதில் பேசாமல், அவளைக் காரில் ஏற்றி ‘சிட்டிக்குள்’ இருக்கும் ஒரு பெரிய மாலிற்கு அழைத்துச்சென்றான்.
ஆரு, “இங்க எதுக்குடா வந்துருக்கோம்? ஷாப்பிங் ஏதாவது பண்ணப்போறோமா?” எனக் கேட்டிட, அவன், “இல்ல சாப்பிட வந்தோம்.” என்றதும், அவள், “ரியலி! வா வா” என்று ஃபுட் கோர்ட்டிற்கு சென்று க்ரில் சிக்கனை வாங்கி வந்து அமர்ந்தவள்,
அதனை ரசித்து ருசித்து சாப்பிட, தேவாவின் கண்கள் அங்கு யாரையோ தேடியது.
பின், எதையோ கண்டு கொண்டவன், “கம் ஃபாஸ்ட்” என்று அவளை இழுத்துக்கொண்டு போக, ஆரு, “டேய் நான் இன்னும் சாப்பிட்டு முடிக்கலைடா…” என்று கத்திட, அவன் ஒரு இடத்தில் மறைந்து கொண்டு, “அதுக்குலாம் டைம் இல்ல… சீக்கிரம் வெளிய போகனும்.” என்று மீண்டும் அவளை இழுத்துக்கொண்டு யாரையோ பின் தொடர்ந்து சென்றான். “அட, வீணாப்போனவனே கையையாச்சு கழுவிட்டு வரேண்டா! விட்டுத் தொலைடா!” என்று அவள் கத்தியதை காதில் வாங்காமல் ஓடினான்.
நேராக ‘பார்க்கிங்’ சென்றவன், ஆருவிடம் “அங்க நிக்கிற பொண்ணுகிட்ட போய் ஏதாவது பேச்சு குடு!” என்றான். அவள் “நான் அதெல்லாம் பண்ண முடியாது. நான் எதுக்குடா நீ சொல்றதை கேட்கணும்?” என்று வீம்பு பண்ண, அவன், “இடியட் அவள் கார்ல ஏறப் போறாள்… போ!” என்று தள்ளினான்.
“முடியாது டா… திருட்டுப்பயலே” என்று வாதிட,”இப்போ நீ போகலை…” என்று இழுத்தவனிடம், அவள், “என்னடா போகலைன்னா என்ன? மினிஸ்டர் கிட்ட போட்டுக்கொடுப்பியா…? என்ன வேணா பண்ணிக்கோ, ஆனா, நான் நீ சொல்றதை கேட்கமாட்டேன்.” என்று முரண்டு பிடித்தாள்.
அதில் கடுப்பானவன், அந்த ‘பார்க்கிங்’கில் இருந்த பில்லரில் அவளைச் சுவற்றோடு சுவர் தள்ளி அவளை நெருங்க அவள் திகைத்துப் பார்த்தாள்.
அவன் மூச்சுக்காற்று அவளைத் தீண்டும் படி அவளை நெருங்கியவன், அவள் காதோரம் சென்று, “என்கிட்ட உன் வீடியோ ஒன்னு இருக்கு. அதை யூடியூப்ல ஷேர் பண்ணிடுவேன்… பண்ணவா மை டியர் கேர்ள்?” என்று கிசுகிசுப்பாகக் கேட்க, அவன் வயிற்றிலேயே ஓங்கி ஒரு குத்து குத்தினாள்.
அதில் அவன் வயிற்றை தேய்த்துக்கொண்டு, அந்தப் பெண்ணை நோக்கிக் கண் காட்டியதில் ஆரு, “நீ ரொம்ப ஓவரா பண்றடா… இப்படிலாம் என்கிட்டே காரியம் சாதிக்கலாம்னு நினைக்காத! நான் உன்னைக் கொலையே பண்ணிடுவேன்!” என்று தீப்பிழம்புடன் மிரட்ட, அவன் அதற்கு எல்லாம் அசையவே இல்லை.
அவள் ‘சே’ என்று கோபத்துடன் செல்லப் போக, அவன் அவளைப் பிடித்து சில இன்ஸ்ட்ரக்ஷன் சொன்னான். அதைச் சலனமின்றி கேட்டவள் அவனைப் பார்வையாலேயே எரித்து விட்டு, அந்தப் பெண் நிஷிதாவை நோக்கிச் சென்றாள்.
“எக்ஸ்கியூஸ்மீ… உங்க கிட்ட ஒரு டீலிங் பேசணும்” என ஆரு சொன்னதும், நிஷிதா சுற்றி முற்றி பார்த்து, “உங்களுக்கு என்ன வேணும்? என்கிட்ட என்ன பேசணும்…?” என்றிட, “இல்லை சின்னு சார் தான் என்னை அனுப்புனாரு.
உங்க கிட்ட பேசச் சொல்லி” என்று தேவா சொல்லிய வசனத்தையே பேச, அதில் யோசித்த நிஷிதா, “ஓ… அவர் அனுப்புனாரா?” என்றவள்,
“இது என் கார்ட். இங்க வந்து என்னைப் பாரு இப்படி பப்லிக் பிளேஸ்ல, வந்து பேசிக்கிட்டு இருக்காத…” என்று எச்சரித்தவள் காரினுள் செல்லும் போதே, தேவா அவளின் காரின் பின் பக்க இரண்டு டயர்களை பழுதாக்கி இருந்தான். கார் ஸ்டார்ட் ஆகாமல் இருக்கவும் இறங்கி வந்து டயரை பார்த்த நிஷிதா “ஷிட்” எனக் கோபத்தை வெளிப்படுத்த, ஆரு, “கார் பஞ்சர்ன்னு நினைக்கிறன். நீங்க வாங்களேன்! நான் உங்களை டிராப் பண்றேன்…” என்றாள் சாந்தமாக.
அதில் சிறிது யோசித்த நிஷிதா, தான் அவசரமாகச் செல்ல வேண்டும் என்பதை உணர்ந்து, அவள் காரின் டிக்கியில் இருந்த ஒரு அட்டைப்பெட்டியை எடுத்துக்கொண்டு அவள் சொன்ன காரில் பின் பக்கம் வந்து அமர்ந்தாள். அதன் பிறகே, ட்ரைவர் சீட்டில் இருந்த தேவாவை கண்டவள், மிரண்டு “ஹே நீயா?” என்னும் போதே, தேவா அவள் முகத்தில் மயக்க மருந்து ஸ்ப்ரேயை அடிக்க, ஆரு அரண்டு போய், “டேய் என்னடா பண்ணுன அந்தப் பொண்ணை?” எனக் கத்தினாள்.
“வாயை மூடிட்டு உள்ள வந்து உட்காரு… இல்லைன்னா உனக்கும் இந்த ஸ்ப்ரே தான்” என்றவனை திட்டிக்கொண்டே, முன் பக்க சீட்டில் அமர்ந்தாள். கார் அந்தக் காட்டை நோக்கி, அசுர வேகத்தில் சீறிப்பாய, தேவாவை மனதில் கேவலமாகத் திட்டிக்கொண்டு வந்தவள், கோபம் தாங்க முடியாமல் அவன் தோளில் அடிக்க ஆரம்பித்தாள்.
அவள் அடித்தது அவனுக்கு எறும்பு கடித்தது போல் இருக்க, அதனைச் சட்டை செய்யாமல் இருந்தவனிடம் “என்ன வீடியோ டா அது? அதை ஒழுங்கா டெலிட் பண்ணிடு… சே! வெட்கமா இல்ல உனக்கு? ஒரு பொண்ணை வீடியோ எடுத்துக் காரியம் சாதிக்கற, நீ எல்லாம் மனுஷனே கிடையாது…!” என்று வார்த்தைகளைத் துப்ப அவளை ஒரு நொடி அமைதியாகப் பார்த்தவன், அவன் மொபைலை கொடுத்து “இதுல உன் வீடியோ இருக்கு நீயே டெலிட் பண்ணிக்கோ” என்க, அதனை வெடுக்கெனப் பிடுங்கினாள். பின் வீடியோ ஃபோல்டரில் சென்று பார்த்தவள், பார்த்ததும் சிவந்து விட்டாள்.
அவளுக்கு வெட்கம் வேறு வந்து தொலைத்திட, தேவாவை பாராமல் ஜன்னல் வழியே தன் சிவப்பை மறைக்க முயன்றவள், அதனை அழிக்கத் தோன்றாமலேயே, போனை டேஷ் போர்டில் வைத்து விட்டாள். ஆனால், தேவா உடனே அதனை எடுத்து அழித்து விட்டு, மேலும் கோபத்துடன் காரில் சீறிப்பாய்த்தான்.
