Loading

        திகைத்து நின்றிருந்த அழகி, ஒரு நொடியில் சுதாரித்து அருகில் நின்றிருந்த மகிழுந்தின் பின் மறைந்துக் கொண்டு சாலையில் நின்றிருந்த வெள்ளைநிற மகிழுந்தை கண்டாள். ஏதேதோ காட்சிகள் கண்முன் நிழலாட, அவள் நெஞ்சம் ஏறுக்கு மாறாய் துடித்தது. படபடவென இதயம் துடிக்கும் ஓசை அவள் செவிக்குள் கேட்டது. முகத்தில் வியர்வை துளிகள் முத்து முத்தாய் முளைத்திருந்தன. யாரை தன் வாழ்நாளில் காணவே கூடாது என்று எண்ணினாளோ அவர்களை கண்டதும் சில நினைவுகளால் முதலில் படபடவென்று வந்தாலும் இறுதியாக அவர்கள் செய்த செயல் நினைவு வந்து சினத்தைக் கிளறியது. இப்பொழுது அம்மகிழுந்தில் இருந்த நபர்களை காணும்போது அவள் கண்களில் ரௌத்திரம் தாண்டவமாடியது. சினத்தைக் கட்டுப்படுத்தியபடி அவர்கள் அங்கிருந்து செல்லும் வரை காத்திருந்தாள். அவர்கள் சென்றதும் ஆழ மூச்சை இழுத்து விட்டு சினத்தைக் கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்து வெற்றியும் கண்டாள். 

 

      முந்தானையில் முகத்தை துடைத்துக் கொண்டு மறைவு விட்டு வெளி வந்தபோது கதிரவன் அவள் வண்டிக்கருகில் அவளை தேடியபடி நின்றிருந்தான். அவனை கண்டதும் முனுக்கென்று அவன்மீது கோபம் எழ, விறுவிறுவென அவனிடம் சென்றாள்.

 

    “கால் பண்ணா எடுக்க மாட்டியா?”, எரிந்து விழுந்தாள்.

 

    “உன் கால் வந்ததுமே நான் வெளிய வந்துட்டேன். வண்டி மட்டும் நிக்குது உன்னை காணோம். எங்க போன நீ? எவ்வளோ நேரமா உன்னை தேட்றது?”, எரிச்சல் முகம் காட்டினான்.

 

     அவன் எரிச்சலாகப் பேசியது அவளுக்கு வருத்தம் தந்தது. ஆனால் தான் தேவையில்லாது எரிந்து விழுந்ததால் தான் தன்னிடம் அவன் அப்படி பேசினான் என்று அவளுக்கு புரியவில்லை. தன்னிடம் கோபம் கொண்டானே என்று வருத்தம் மட்டும் கொண்டாள். 

 

      “அது ஒரு கால் வந்தது பேச போனேன்.”, இப்பொழுது அவள் குரல் தணிந்து ஒலித்தது.

 

     “கள்ளூளிமங்கி”, உள்ளுக்குள் முணுமுணுத்து அவளை ஆழ்ந்து பார்த்தவனின் பார்வை அவளுக்கு புரியவில்லை. அவளது உள்ளத்தின் வருத்தம் சிறு இழையாக குரலில் ஒலித்ததை உணர்ந்தவனின் கோபம் தொலைந்து போனது. 

     

    “ரொம்ப நாள் உன்னால எனக்கான உணர்வ ஒளிச்சு வைக்க முடியாது செல்லம்!” என்றெண்ணி உள்ளுக்குள் சிரித்து,

 

     “சரி வா. வண்டிய எடு. உள்ள போகலாம்.”, மிக நிதானமாக அவளை ஏறிட்டான்.

 

    அவள் குழப்பமாக அவனை காண, “உள்ள தான் அதி இருக்கான். அதி பர்த்டேக்கு நாம இங்க தான் தங்க போறோம்.”, என்றான்.

 

     “யாரைக் கேட்டு இப்படிலாம் நீ முடிவு பண்ற?”, கோப முகம் காட்டினாள்.

 

    “யாரை கேக்கணும்?”, புருவம் உயர்த்தி உறுத்து நோக்கினான்.

 

     அவள் ஏதும் கூறாது அவனை முறைக்க, “ஓஓ உன்னை கேக்கணுமா? உன்னைலாம் கேக்க முடியாது. அதி சந்தோஷமா இருக்கான். என்னால அதை கெடுக்க முடியாது. அதி அவன் அம்மா கூட இருக்கணும்னு ஆசை பட்றான். அவன் ஆசை முக்கியம்னு பட்டா உள்ள வா. இல்லை என்னை கேக்காம நீ எப்படி முடிவு பண்ணலாம்னு சண்டை போட்ற ஐடியா இருந்தா உன் வீம்ப கட்டிக்கிட்டு நீயே சண்டை போடு. எனக்கு நிறைய வேலை இருக்கு. நான் உள்ள போறேன்.”, விட்டேத்தியாக தோளை குலுக்கியவன் நொடியும் அவளின் பதிலுக்கு காத்திருக்காது திரும்பி விறுவிறுவென உள்ளே சென்றான்.

 

      “அடேய்…” என்று கோபத்தில் பல்லைக் கடித்து, “எல்லாம் என் நேரம்.”, என்று தலையில் அடித்துக் கொண்டு வண்டியை தள்ளிக் கொண்டு உள்ளேச் சென்றாள்.

 

    அது ஒரு தனியார் இடம். அங்கிருக்கும் மர வீடு மிக பிரபலம். அனைத்து வசதிகளும் கொண்ட வீடு அது. குடும்பமாகவோ அல்லது நண்பர்களாகவோ அல்லது தன் இணையுடனோ அமைதியாக தனியே நேரம் கழிக்க தகுந்த இடமது. அங்கு தங்கும் விடுதிகளும் உண்டு. அதோடு அவ்விடத்திற்குள் டீ எஸ்டேட்டும் அழகிய அருவி ஒன்றும் உண்டு. அவ்வருவிக்கு ட்ரெக்கிங் செல்லும் வசதியும் உண்டு. கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் அதிகமில்லாத இடத்தில் அமைதியாக அழகாக நேரம் செலவிட வேண்டுமென்று நினைப்போரும் ட்ரெக்கிங் செய்ய விரும்புவோரும் அவ்விடத்தை தேர்வு செய்வர். வாடகை கொஞ்சம் அதிகம் என்றாலும் தனிமைக்காகவும் அழகான சூழலுக்காகவும் அவ்விடத்தை தேர்வு செய்யலாம். 

 

        அந்த மர வீட்டை தான் அதிரனின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக இரண்டு நாட்களுக்கு முன்பதிவு செய்திருந்தான் கதிரவன். உள்ளே வாகனங்கள் நிறுத்த ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் தன் வண்டியை நிறுத்திய அழகி, கடுப்புடன் அம்மரவீட்டிற்குள் நுழைந்தாள்.

 

      “வீம்பா அன்பானு வர்றப்ப அன்பு தான் ஜெயிக்கிது இல்ல. பரவால்ல குட்.”, அழகி வந்ததை கண்ட கதிரவன் வேண்டுமென்றே அவளை வெறுப்பேற்றினான்.

 

      “இது உன் நேரம்னு ரொம்ப ஆடாத. எனக்கும் நேரம் வரும் அப்போ இந்த அழகி யார்னு முழுசா தெரியும்.”, கனல் கக்கும் வார்த்தைகளை உதிர்த்து அவனை சினம் பொங்க பார்த்தாள்.

 

     “ம்ப்ச் அதுக்கு வாய்ப்பே உனக்கு கிடைக்க போறதில்லை செல்லம். நீ எப்படிப்பட்டவனு நல்லாவே தெரியும். நல்லா தெரிஞ்சுக்கிட்டு தான் புலி வாலை புடிச்சுருக்கேன்.”, கைக்கட்டி அவளை பார்த்து மிதப்பாக புன்னகைத்தவன் புன்னகை அவளுக்கு எதையோ உரைப்பது போலிருந்தது.

 

     அவனை கூர்ந்து பார்த்தவளை நோக்கி அவன் புருவம் உயர்த்த, அவள் கண்களில் பயம் மின்னலென தோன்றி மறைந்தது. அதனை குறித்தவன் புன்னகை மேலும் விரிந்து அவளுள் பதற்றத்தை விதைத்தது. பதற்றத்தில் நில்லாமல் அங்குமிங்கும் விழிகள் சுழல, வழக்கம் போல் கோப முகமூடி அணிந்து அவனை எரித்து விடுவது போல் முறைத்து விட்டு வீட்டினுள் முன்னேறினாள்.

 

      “அதி அண்ணா!” என கத்திக் கொண்டு ஓடி வந்த கவி அழகியின் மேல் முட்டி நிற்க, 

 

      “கவி பாப்பா! நீங்க என்ன டா பண்றீங்க இங்க?”, கவியை தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டே கேட்டாள்.

 

    “அதி அண்ணாவும் நானும் விளையாடுதோம்.”, மழலை மொழியில் பதில் கூறிய குழந்தையின் கன்னத்தில் கச்சிதமாய் முத்தம் பதித்தாள் அழகி.

 

    “விளையாடுறீங்களா! சரி பார்த்து கீழ விழாம மெதுவா விளையாடுவீங்களாம் கவி பாப்பா! சரியா?”, விழி விரித்து செல்லம் கொஞ்சினாள்.

 

    “ம்ம் தரி அத்த.”, கவி பாப்பா வேகமாக தலையாட்ட, சிரிப்புடன் அவளை இறக்கி விட்டாள்.

 

     கவி பாப்பாவை துரத்திக் கொண்டு வந்த அதிரன் அழகியை கண்டதும் “அழகி ம்மா!” என ஓடி வந்து அவள் கால்களை கட்டிக் கொள்ள, கீழே குனிந்து அவனுக்கு முத்தமிட்டு அவள் பூரித்து சிரித்தாள்.

 

     “அழகி ம்மா! ஹீரோ என் பர்த் டேவ இங்க செலிப்ரேட் பண்ண போறாராம். இங்க பாரு கலர் கலர் பேப்பர் ஓட்டிருக்காங்க. எல்லாம் எனக்காகவாம். சூப்பரா இருக்குல்ல. அப்புறம் உள்ள ராம் மாமா, மிருதுளா அத்தை, தாத்தா எல்லாம் கலர் கலரா நிறைய பலூன் ஊதுறாங்க. நானும் கவி பாப்பாவும் ஜாலியா அதுல விளையாண்டோம் தெரியுமா!”, விழி விரித்து குதூகலாமாக கூறிக் கொண்டிருந்த அதிரனின் முகபாவங்களில் அழகிக்கு பழைய நினைவுகள் எழுந்து சோகத்தை அளித்தது.

 

     அகத்தின் சோகத்தை முகத்தில் காட்டாது அதிரனின் மகிழ்ச்சி பொங்கும் பேச்சை மட்டும் மென்சிரிப்போடு கேட்டுக் கொண்டிருந்தாள்.

 

    “அதி குட்டி ரொம்ப ஹேப்பியா ஜாலியா இருக்கீங்க போலருக்கே! ம்ம்.”, அழகி புருவம் உயர்த்தி மென்மையாக சிரித்தாள்.

 

   ‌‌ “ஆமா அழகி ம்மா! அதி இஸ் வெரி வெரி ஹேப்பி. அழகிய தான் மிஸ் பண்ணேன். இப்போ அழகி ம்மாவும் வந்தாச்சு. அதி ஜாலி ஜாலியா இருக்கேன்.”, சிரித்து தன் கன்னத்தில் முத்தம் வைத்தவனை கட்டித் தழுவினாள்.

 

    “கவி பாப்பாவோட சமத்து பாயா விளையாடணும். பாப்பாவ துரத்தக் கூடாது. கீழ விழுந்துடுவா. சரியா? அழகி உள்ள போய் மாமா, அத்தை எல்லாரையும் பார்த்துட்டு வரேன். ம்ம்.”, அழகி கேட்கவும் அதிரன் வேகமாக தலையாட்டிவிட்டு கவி பாப்பாவின் கையை பிடித்துக் கொண்டு விளையாடச் செல்ல, அழகி அங்கு செய்யப்பட்டிருக்கும் அலங்காரங்களை பார்த்த வண்ணம் உள்ளேச் சென்றாள்.

 

     அந்த வீடு ஒரு கூடமும், கீழே இரண்டு அறைகளையும் முதல் தளத்தில் இரண்டு அறைகளையும் கொண்டிருந்தது. கீழே இருந்த ஒரு அறையில் ராம்குமார், மிருதுளா, சக்கரவர்த்தி மூவரும் பலூன்களை ஊதித் தள்ளிக் கொண்டிருந்தனர். 

 

    “அப்போ எல்லாரும் ப்ளான் பண்ணி தான் செஞ்சுருக்கீங்க இல்ல?”, கேட்டவாறே அறையின் உள்ளே சென்றாள் அழகி.

 

    அழகியின் குரலில் நிமிர்ந்த மூவரும் அவளின் கேள்வியில் திடுக்கிட்டனர்.

 

    “தாயே! நான் சொல்றத கேட்டுட்டு அப்புறம் நீ என்ன வேணா கேளு.”, மிருதுளா எழுந்து அவளருகில் வந்தாள்.

 

    “நாங்களும் உன்னை மாதிரி வந்து பார்த்து ஷாக்காகி நின்னோம். அப்புறம் அதி குட்டி பர்த் டேக்குனு சொல்லவும் தான் சரி ஜாலியா செலிப்ரேட் பண்ணலாமேனு அவன் சொல்றதெல்லாம் செஞ்சுட்ருக்கோம். நீ எது கேக்கறதா இருந்தாலும் கதிர தான் கேக்கணும்.”, மிருதுளாவின் பதிலால் சங்கடமாக உணர்ந்த அகவழகி,

 

   “சாரி அண்ணி! சாரி அண்ணா! சாரி அப்பா! அவன் பண்ணதுக்கு உங்களை எல்லாம் தப்பா நினைச்சுட்டேன். சாரி!”, என அவர்களும் கதிரவனுடன் சேர்ந்து தான் செய்தார்களோ என்று சந்தேகம் கொண்டதற்கு மனதார மன்னிப்பு வேண்டினாள்.

 

   “பரவால்ல விடு அழகி! நாங்க பெருசா எடுத்துக்கல. உன் இடத்துல நான் இருந்துருந்தா நானும் இப்படி சந்தேக பட்ருப்பேன். கதிர் எந்த நேரத்துல எதை பண்ணுவான் என்னத்த பேசுவான்னு தெரியாது. அவன் இஷ்டத்துக்கு தான் எல்லாம் செய்வான். ஆனா அவன் என்ன நினைக்கிறான் என்ன செய்றான்றது ஒருத்தருக்கு நல்லா தெரியும். சோ அவர் மேல சந்தேகப்பட்டது தப்பில்ல.”, என்ற ராம்குமார் தன் தந்தையை குறுகுறுவென்று பார்க்க, அழகியும் மிருதுளாவும் கூட சக்கரவர்த்தியை சந்தேகத்தோடு பார்த்தனர்.

 

   “நீ சொன்ன எல்லாமே சரி தான்டா மகனே! ஆனா என்கிட்டயும் சொல்லாம சில விஷயங்கள் அவன் செய்வான். அதுல இதுவும் ஒன்னு.”, சக்கரவர்த்தி நிதானமாக மூவரையும் பார்த்தார்.

 

    “அவனுக்கு உடம்பு முழுக்க திமிரு. தன்னை கேக்க யாரும் இல்லைன்ற திமிரு. அதான் இப்படி எல்லாம் பண்ண சொல்லுது. நான் உங்கள நம்பறேன் ப்பா.”, என்று அழகி கூறவும் 

 

   “ச்ச ச்ச அப்படி சொல்லாதம்மா. அவன் எதுவும் சொல்லாம செய்வானே தவிர அவனுக்கு திமிரெல்லாம் இல்ல. ரொம்ப அடக்கமான பையன்.”, சக்கரவர்த்தி கதிரவனுக்கு வக்காலத்து வாங்கினார்.

 

   “நீங்க தான் மாமா அவன மெச்சிக்கணும். அழகி சொன்னதுல ஒரு தப்பும் இல்ல. யாருக்காவது அடங்குறானா அவன். அவன் வீட்டு பக்கம் வந்து ஆறு மாசம் ஆச்சு ஒரு எட்டு வந்துட்டு போக சொல்லுமா அவனனு அம்மா டெய்லி கால் பண்ணி புலம்புறாங்க. பெத்தவங்கள்ட்ட இவனுக்கு என்ன அவ்வளோ வீம்பு? சரி அவன் இஷ்டத்துக்கு எல்லாம் செய்யட்டும். ஆனா அவங்க நல்லார்க்காங்களா சாப்பிட்டாங்களானு ஒரு ஃபோன் பண்ணியாச்சும் கேக்கலாம்ல. அதுவும் பண்ண மாட்றான். நான் பண்ணி குடுத்தாலும் பேச மாட்டேங்கிறான். அவனுக்கு நீங்க ரொம்ப சப்போர்ட் பண்ணாதீங்க மாமா.”, மிருதுளா தன் கவலையை கொட்டித் தீர்த்தாள்.

 

   “மறுபடியும் ஆரம்பிச்சுட்டியா? ஏன் க்கா உனக்கு வேற வேலையே இல்லையா? எதுக்கு மாமாக்கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணிட்ருக்க என்னை பத்தி? போ போய் வேற வேலை இருந்தா பாரு. இல்லனா கவி என்ன பண்றானு பாரு போ.” என்றபடி உள்ளே வந்த கதிரவன் மிருதுளாவை விரட்டாதக் குறையாக கூறினான்.

 

   “எத்தனை நாளைக்கு இப்படி என்னை விரட்டிட்டே இருப்பனு நானும் பார்க்கறேன் டா.”, என்ற மிருதுளா அவனை முறைத்துவிட்டுச் சென்றாள்.

 

    அவனை எரித்து விடுவது போல் பார்த்த அழகியை பார்த்து மெலிதாக புன்னகைத்தான். அப்புன்னகையின் பொருளை விளங்க முடியாது திணறிய அழகிக்கு எதுவோ சரியில்லை என்று தோன்ற, உள்ளே திக்கென்றானது. அச்சம் அவளை கவ்விட, நிமிர்ந்து பாராது அவனைக் கடந்து வெளியே சென்றவளை மர்மப் புன்னகையோடு பார்த்திருந்தான்.

 

    ராம்குமார் தன் தந்தையையே இன்னும் குறுகுறுவென்று நோக்கிக் கொண்டிருக்க, “என்ன டா?” என்று சக்கரவர்த்தி வினவவும் அவரையும் கதிரவனையும் மாறி மாறி பார்த்தவன், “எனக்கு இன்னும் டவுட் இருக்கு. களவாணித்தனம் பண்ணும்போது கையோட சிக்குவீங்கல்ல அன்னைக்கு பார்த்துக்குறேன் உங்க ரெண்டு பேரையும்.”, என எச்சரிக்கை விடுத்து ராம்குமாரும் அறை விட்டு வெளியேற, அறையை மூடி தாழிட்டான் கதிரவன்.

 

     இருள் கவியும் வரை அவ்வறை கதவு திறக்கப்படவேயில்லை. ஏற்பாடு செய்திருந்த இரவு உணவு வரவும் மிருதுளாவும் அழகியும் குழந்தைகளுக்கு ஊட்டி விட்டனர். பின் மிருதுளா சென்று அறைக்கதவை தட்டி உள்ளிருந்த இருவரையும் சாப்பிட அழைக்கவும் தான் சக்கரவர்த்தியும் கதிரவனும் வெளியே வந்தனர். 

 

    உணவு உண்ணும்போது அகவழகி கதிரவனை ஐயத்தோடும் அச்சத்தோடும் அவ்வப்பொழுது நோக்க, கதிரவன் அவளை நிமிர்ந்தும் பார்க்கவில்லை. ஏதேதோ சிந்தனையில் அழகி சரியாக உண்ணாது எழுந்துச் செல்ல, “உனக்கு டவுட் வந்துருச்சுனு எனக்கு தெரியும் அழகி. அது தானே நானும் எதிர்பார்த்தேன்.”, என்றெண்ணியபடி அழகி சென்ற திசையை வெறித்த கதிரவன் மீண்டும் உண்ணுவதில் கவனமானான்.

 

    உண்டதும் சிறிது நேரம் அமர்ந்திருந்த சக்கரவர்த்தி மாத்திரை போடவும் உறக்கம் தள்ள, உறங்குகிறேன் என கீழிருந்த அறைக்குச் சென்றுவிட, அழகியும் மிருதுளாவும் உறங்காமல் விளையாடிக் கொண்டிருந்த அதியையும் கவியையும் உறங்க வைக்க, ராம்குமாரும் கதிரவனும் மீதமிருந்த அலங்காரங்களை செய்தனர்.

 

     பிள்ளைகள் இருவரும் உறங்கியதும் பெண்களும் அவர்களுக்கு உதவி செய்ய, வேலை சீக்கிரமாக முடிந்தது. மேல இருந்த பால்கனியில் மிருதுளாவும் அழகியும் அமர்ந்திருந்தனர்.

 

    “இன்னும் எவ்வளோ நாளைக்கு அழகி இப்படியே இருக்க போற?”, எங்கோ வெறித்திருந்த அழகியை வினா தொடுத்து தன்புறம் திரும்பச் செய்தாள் மிருதுளா.

 

    “ஏன் அண்ணி இப்படியே இருந்தா தப்பா? இல்லை இருக்கக் கூடாதா?”, அசராது பதில் வினா தொடுத்தாள்.

 

    “அப்படி இல்லை அழகி. உன் பக்கமே வரேன். அதி வளர்ந்து பெரியவனாகி அவனுக்கு கல்யாணம் குழந்தைனு ஆகுற வரைக்கும் ஓகே. அதுக்கப்புறம் என்ன பண்ணுவ அழகி? அதுவரை உன்கூட இருந்த அதி குடும்பம் குழந்தைக்கு தான் முதல் இடம் தருவான். உன்னை அவன் கூடவே வச்சு கண்ணும் கருத்துமா பார்த்துக்கிட்டாலும் ஒரு தனிமையும் வெறுமையும் நிச்சயம் வரும் அழகி. சாயுறதுக்கு ஒரு தோள் தேடி மனசு ஏங்கும். அப்போ நீ வருத்தப்பட்ருக்கூடாதுன்றது தான் எங்க எல்லார் கவலையும். நீ புத்திசாலி பொண்ணு. அவசரமில்ல. நிதானமா யோசி.”

 

    மிருதுளா கூறுவது புரிந்தாலும் அதனை ஏற்றுக் கொள்வேனா என்று தான் அழகியின் மனது அடம்பிடித்தது. அவள் கொண்ட வைராக்கியம் அவள் இலட்சியத்திற்கு துணை நின்றாலும் அவளின் வாழ்க்கைக்கு முட்டுக் கட்டையாக மாறுவதை தான் அவள் உணர மறுத்தாள். எதுவும் கூறாது தலை குனிந்த அழகியை கண்டு மிருதுளாவால் பெருமூச்சு மட்டுமே விட முடிந்தது.

 

    இருவரையும் அழைக்க வந்து அவர்கள் பேச்சில் தேங்கி நின்ற கதிரவனுக்கு அழகியின் மேல் அடக்க முடியாத கோபமே எழுந்தது.

 

   “கல்நெஞ்சக்காரி. என்ன தான் அப்படி வைராக்கியமோ? நானும் உனக்கு சளைச்சவன் இல்ல டி. உன் வீம்ப உடைச்சு சுக்கு நூறாக்கி உன் மனசுல உள்ளத எல்லார் முன்னாடியும் சொல்ல வைக்கல. வைப்பேன் டி. அதுவரைக்கும் இந்த சின்ன சின்ன கஷ்டத்தையும் வலியையும் நீ தாங்கி தான்டி ஆகணும்‌. அன்னைக்கு உனக்கு உரிமையோட ஆறுதல் சொல்லி நீ சாஞ்சுக்க என் தோள் தருவேன்.”, மனதில் சபதமேற்றவன் ஒன்றுமறியாதவன் போல் இயல்பாக முகத்தை வைத்துக் கொண்டு,

 

    “அக்கா கேக் வெட்ட நேரமாச்சு. கீழ எல்லாம் ரெடி. அதியையும் கவியையும் எழுப்பிட்டு வாங்க.” என்றான்.

 

   கதிரவனை ஒருசேர பெண்கள் இருவரும் திரும்பி பார்த்தனர்.

 

   “கவிய எழுப்பினா அழுவா டா. காலைல கேக் குடுத்துக்கலாம். அழகி நீ போய் அதிய எழுப்பி கீழ கூட்டிட்டு வா. நாங்க கீழ இருக்கோம்.”, என்ற மிருதுளா கீழே சென்றாள்.

 

   அழகி கதிரவனை காண, அவனோ அவள் மீது பார்வைத் திருப்பாது தன் அக்காவை தொடர, அழகியின் முகத்தில் ஏமாற்றத்தின் சாயல். அவளறியாது ஏக்க பெருமூச்சு தானாக நாசியிலிருந்து வெளியேற, அதிரனை எழுப்பச் சென்றாள்‌.

 

    அகவழகியும் அதிரனும் கீழே வந்தபொழுது நிரஞ்சனும் அங்கு மற்றவர்களோடு நின்றிருந்தான். தூக்கக் கலக்கத்தில் கண்களை கசக்கிக் கொண்டிருந்த அதிரன், “ஹேப்பி பர்த் டே அதி குட்டி!” என்று அனைவரும் ஒரு சேர ஒலி எழுப்பவும் உறக்கம் கலைந்து உற்சாகமாக சிரித்தான். கூடத்தில் செய்திருந்த அலங்காரங்களை கண்டு விழி விரித்த அதிரன், கீழே நிறைந்திருந்த பலூன்களை தூக்கிப்போட்டு விளையாட ஆரம்பித்தான்.

 

   “அதி குட்டி! எல்லாரும் நீ கேக் கட் பண்றதுக்காக வெயிட் பண்றாங்க பாரு. கேக் கட் பண்ணிட்டு விளையாடலாம்.”, சிரிப்போடு அழகி அதிரனின் கைப்பிடித்தாள்.

 

   “ஹா! எவ்வளோ பெரிய கேக்கு. எனக்கா?”, ஆச்சர்யம்பொங்க கேட்ட அதிரனின் கன்னம் கிள்ளி, “உனக்கு தான் குட்டி. வா வந்து சீக்கிரம் வெட்டு.” என்று மிருதுளா கூறிட, “ஹே ஜாலி!” என்று கத்தியபடி கேக் வைத்திருந்த மேசை முன் வந்து நின்றான் அதிரன்.

 

    அகவழகியும் கதிரவனும் அதிரனின் இருபுறமும் நிற்க, மற்றவர்கள் அவர்களை சுற்றி நின்று கைத்தட்டி பிறந்தநாள் பாடல் பாட, அழகி அதிரனின் கைப்பிடத்து கேக்கை வெட்ட உதவினாள். கேக்கை வெட்டியதும் சிறு துண்டை எடுத்து அதிரனுக்கு ஊட்டிய அகவழகி,

 

    “ஹேப்பி பர்த்டே அதி குட்டி!” என அவன் நெற்றியில் இதழ் பதிக்க, அவன் அழகாய் சிரித்து சிறு துண்டு கேக்கை எடுத்து தன் பக்கத்தில் புன்னகையோடு நின்றிருந்த கதிரவனுக்கு ஊட்ட, அகவழகியின் முகத்தில் அப்பட்டமான அதிர்ச்சி. தனக்கு ஊட்டுவான் என எதிர்பார்த்தவளுக்கு ஏமாற்றமளித்து கதிரவனுக்கு ஊட்டிய அதிரனை கண்டபோது அவளுக்கு அச்சமும் அதிர்ச்சியும் ஒருசேர எழுந்தது. 

 

    கதிரவனுக்கு ஊட்டிவிட்டு தனக்கு ஊட்ட திரும்பிய அதிரனின் முன் தன் அதிர்வை மறைக்க முயன்று புன்னகைத்தவளின் புன்னகையில் வலியின் சாயல் இழையோடியதை கதிரவனும் கவனித்தான் தான். ஆனால் கண்டுகொள்ளாது இருந்து விட்டான். அதிரன் ஊட்டிய கேக்கை விழிகளில் நீர்திரையிட வாங்கியவள் மெல்ல நிமிர்ந்து முகத்தைத் திருப்பிக் கொண்டாள். பின் ராம்குமார், மிருதுளா, சக்கிரவர்த்தி, நிரஞ்சன் என அனைவரும் அதிரனை சூழ்ந்துக் கொள்ள, அகவழகி அங்கிருக்க முடியாது மெல்ல மாடிப் படிகளில் ஏறினாள். அதிரன் தந்த அதிர்ச்சி அவள் மூளையை வேலை நிறுத்தம் செய்ய வைத்திருந்தது. நிலைக்குத்திய பார்வையோடு படியேறிய அழகியை கவலையோடு பார்த்திருந்த ராம்குமாரும் அவளைத் தொடர்ந்து படிகளில் ஏறினான்.

வருவாள்….

 

     

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்