அத்தியாயம் 5
“டேய்! கதிரு… கதிரு…” மயக்கத்தில் இருந்த கதிரவனை எழுப்பினாள் நிதர்ஷனா.
அவனோ பசி மயக்கத்தில் எழாமல் இருக்க, “அய்யய்யோ! இவனுக்கு ஒரு வேளை சோறு போடலைனா கூடச் சொங்கியாகிடுவானே…” எனப் பதறியவள், அறைக்கதவைத் திறக்க முயல அதுவோ சற்றும் நகரவில்லை.
“ஹலோ… யார்னா இருக்கீங்களா? ஹெல்ப்!” என்று நிதர்ஷனா கத்த,
“ஆலம்பனா…” என அழைக்க வந்தவள், பின் “எலிசா! உன் பாஸக் கூப்பிடு…” என்றாள்.
எலிசா பாஷை தெரியாமல் தடுமாற, “ஷப்பா… இதுக்கு ஒரு எழவும் தெரிய மாட்டுது. பேர மட்டும் பாலிசா எலிசான்னு வச்சிருக்கான் அந்தக் கலப்படக் கண்ணுக்காரன்…” எனத் திட்டிக் கொள்ள, அவளது தவிப்பை அலைபேசியின் வழியே கண்டபடி காபியைக் குடித்துக் கொண்டிருந்த யாஷ் பிரஜிதனுக்குப் புரை ஏறியது.
“யூ சில்லி கேர்ள்…” புசுபுசுவெனக் கோபம் எழ, காபியைப் பாதியில் வைத்து விட்டுப் பக்கத்து பங்களாவிற்குச் சென்றான்.
அதிகபட்சக் கோபத்துடன் யாஷ் அறைக்கதவைத் திறக்க, “அப்பாடா, வந்துட்டீங்களா… பாருங்க சார், கதிரு எந்திரிக்க மாட்டுறான்.” எனப் புகார் அளிப்பதைக் காதில் வாங்காதவனாக அவளது கழுத்தைப் பற்றினான்.
“எலிசாவைத் திட்டுனதும் இல்லாம, என்னையும் அவன் இவன்னு பேசுறியா? யூ ப்ளேம் மை இன்வென்ஷன்…” எனச் சிவந்த விழிகளுடன் இறுக்கமாகப் பிடிக்க,
அவளது கால்கள் தரையில் இருந்து இரண்டடி மேலே ஏறி இருந்தது ஆடவனின் பிடியில்.
அவன் கைகளில் எலும்புக் கூடாகத் தொங்கிக் கொண்டிருந்தவளோ அந்நிலையிலும், “இன்வென்ஷன்னா சாமான்ய மக்களும் யூஸ் பண்ணுற மாதிரி இருக்கணும். இ…இங்கிலிஷ் தெரிஞ்சா தான் யூஸ் பண்ண முடியும்னா, அதுக்குப் பேர் இ…இன்வென்ஷன் இல்ல… லக்ஸென்ஷன்!” எனத் திக்கித் திணறி மூச்சு விட இயலாமல் பேசியவளை மெல்ல விடுவித்தான்.
(Luxention – பணக்காரர்கள் மட்டுமே உபயோகிக்கக் கூடிய கண்டுபிடிப்பு அல்லது பொருள்கள்)
அவன் விட்டதுமே அவளது பூப்பாதம் பூலோகத்தைத் தொட, வேகமாக மூச்சு வாங்கியவள், “யோவ் ஏஐக்கு ஏலம் போனவனே, எதுக்குயா என்னைக் கொலை பண்ணப் பாக்குற?” என்றதில் மீண்டும் அவன் ஆக்ரோஷத்துடன் அவளருகில் நெருங்கினான்.
அவளோ, “ஐயோ! அரக்கனுக்கே அண்டர் டேக்கர் வேலை பாக்குறவன் மாதிரி, பாடி பில்டரா இருப்பான் போலயே… திரும்பக் கழுத்தோட தூக்குனா, கழுத்து கழண்டு கையோட வந்துடும்.” எனப் புலம்பியபடி அவனிடம் சிக்காமல் அறை முழுக்க ஓடினாள்.
கட்டிலுக்கு ஒரு முனையில் அவள் நிற்க, மறுமுனையில் யாஷ் நின்றான் கோபத்துடன்.
“ஏய்… ஒழுங்கா பக்கத்துல வா!” விரல் நீட்டி எச்சரிக்க,
“ம்ம்ஹும்! வர மாட்டேன்.” தலையை வேகமாக ஆட்டியவளை அவன் பிடிக்க முயல, அவள் ஓடி மற்றொரு முனைக்கு வந்தாள்.
“கடன்காரி, மரியாதையா நில்லு.” யாஷின் முகம் எண்ணெயில் போட்ட கடுகாட்டம் வெடித்தது.
“யப்பா கலப்படக் கண்ணுக்காரா… கோபத்தைக் கம்மியா படுயா… ரொம்பச் சிவந்து போற. ஆமா, பொம்பளப் பசங்க மாறி நீ ஏன்யா இம்மாம் செவப்பா இருக்க? ம்ம்க்கும், ஏசிலயே குந்துனா எருமை மாடும் தான் கலரா மாறும்…” என்னும் போதே, யாஷ் பிரஜிதன் அவளைப் பிடித்து விட்டான்.
நிதர்ஷனாவின் கையை வளைத்துப் பிடித்திட, “ஆஆ… அரக்கன் சார், அரக்கன் சார்… கையை விடுங்க ப்ளீஸ்…” எனக் கண்ணைச் சுருக்கிக் கெஞ்சிட,
“இப்போ மட்டும் மரியாதை வருது? ம்ம்? யாரடி எருமை மாடுன்னு சொன்ன?” என்றபடி தாடை இறுக இன்னும் இறுக்கினான் அவளை.
“அய்யோ, உங்களைச் சொல்லல அரக்கன் சார். எருமை மாடே ஏசில இருந்தா செவப்பாகும்போது, நீங்க பொறக்கும் போதே அழகாப் பொறந்துருக்கீங்க, நீங்க செவக்க மாட்டீங்களா? அதைத்தான் சொன்னேன். மிஸ் கம்யூனிகேஷன்… ஈஈஈ! கையை விடுங்களேன்…” என உதட்டைப் பிதுக்கினாள்.
“நீ எனக்குக் கை காலோட முழுசா வேணும், கடன்காரி… அதனால விடுறேன்!” என்றவன், “வாட்ஸ் தட் அரக்கன்?” என்றான் கூர்மையாக.
“அதாவது, அரக்கன் இஸ் ஒன் ஆஃப் த காட்! உங்களைத் தெய்வம் மாதிரின்னு சொன்னேன் சார்…” என்று மீண்டும் அனைத்துப் பற்களையும் காட்டியதில், அவன் அவளை நம்பாமல் “எலிசா…” என ஏ.ஐ யை உதவிக்கு அழைக்க,
அதில் மிரண்டவள், “இப்ப எதுக்கு சார், ரெஸ்ட் எடுத்துட்டு இருக்குற ஆலம்பனாவைக் கூப்புடுறீங்க. ச்சே… இந்த உலகத்துல ஒரு மெஷின்க்கு கூட லீவ் நாள் இல்லைல.” எனச் சம்பந்தமின்றி பீல் செய்தவளுக்கு, அவனது ஹேசல் கண்களை அவள் மீது அழுத்தமாய் ஊன்றியதில் உள்ளுக்குள் குளிர் பரவியது.
“அதை விடுங்க அரக்கன் சார்… அதுவா முக்கியம்! நீங்களோ சுண்டி விட்டா இரத்தம் வர்ற அளவு வொய்ட்டா இருக்கீங்க. நானோ, காசிமேட்டு வெயில்ல காஞ்சு போன கருவாடு மாதிரி இருக்கேன். நடிப்பா இருந்தாலும் நியாயம் வேணாமா சார்…” என்று பாயிண்ட்டாகப் பேசிட,
அவன் அடுத்துப் பேச வரும் முன், “கருவாடுன்னா என்னன்னு தான கேட்கப் போறீங்க?” என்றாள் நிறுத்தி.
வில்லாய் பாய்ந்த ஆடவனின் ஒற்றைப் புருவம் உயர, அதுவே அவனது கேள்வி எனத் தானாய் புரிந்து கொண்டவள், “மீன வெயில்ல காய வச்சா அது கருவாடு!” என நேர்த்தியாய் விளக்கம் கூறினாள்.
“ஃபைன்… அதைப் பத்தி நீ பீல் பண்ண வேண்டிய அவசியம் இல்ல. உன்னை எனக்கு ஏத்த மாதிரி மாத்திப்பேன்…” கையைக் கட்டிக்கொண்டு அவன் அசட்டையாகக் கூற,
“மாத்திப்பீங்களா? என்ன, என் மூஞ்சில வெள்ளை பெயிண்ட் அடிக்கப் போறீங்களா? எத்தனை டப்பா அடிச்சாலும் வேஸ்ட்டு. அதோட எனக்கு மேக்கப் பண்ணலாம் பிடிக்காது. என் ஸ்கின் டேமேஜ் ஆனா, நாளைப் பின்ன என்னை எவன் கட்டிப்பான்…” என்று தனது கன்னத்தைத் தானே தடவிக் கொடுத்துக் கொண்டாள்.
“சரியான எரிச்சல்…” உள்ளுக்குள் பொருமிக் கொண்டே, “இனிமே டேமேஜ் ஆக என்ன இருக்கு அங்க?” பல்லைக் கடித்தபடி கேட்டவனை முறைத்துப் வைத்தாள்.
“என்னதான் கிளி பறந்து வந்து உங்க முன்னாடி உக்காந்தாலும், கொரங்கைக் கேக்குறது தான ஆம்பளைங்களுக்கு வழக்கம்…” என நொடித்துக் கொண்டதில், யாஷிற்கு இலேசாகச் சிரிப்பு வந்தது.
துளியும் வெளிக்காட்டாதவன், “யார் கிளி? யார் குரங்கு?” இடுப்பில் கையூன்றிக் கீழ்க்கண்ணால் அவளைப் பார்க்க,
“மீ கிளி… கொரங்கு யாரோ!” என முணுமுணுத்ததில், பார்வையை வேறு புறம் திருப்பி உதட்டுக்குள் சிரிப்பை அடக்கியவன்,
“கிளிகிட்ட இதைச் சொல்லிடாத.” என்றான்.
“ஏன்?”
“செத்துரும்!” அலட்டலின்றி அவளை வாரியதில், “குசும்புயா ஒனக்கு…” என மூக்கைச் சுருக்கினாள்.
அவளது பாவனைகளைச் சில நொடிகள் படம் பிடித்தவன், “லக்ஸென்ஷன் வேர்ட் தெரிஞ்சு வச்சுருக்குற அளவு இங்கிலிஷ் தெரியுதே. அப்போ எலிசாகிட்ட இங்கிலிஷ்லயே பேச வேண்டியது தான…” எனக் கேட்டதில்,
“இங்லிஷ்லாம் எனக்குத் தெரியும் தான். ஆனா கோர்வையா மடமடன்னு பேச வராது.” என்றாள் உதட்டைப் பிதுக்கி.
“ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒவ்வொரு எக்ஸ்பிரஷன் குடுத்தே ஆகனும்ல உனக்கு?” நாக்கைச் சுழற்றிக் கன்னத்தில் குவித்தான் யாஷ் பிரஜிதன்.
“நான் என்ன ரோபோவா? அட்டென்சன்ல நின்னு எக்ஸ்பிரஷன் இல்லாம பேச…” அவனைக் கேலி செய்ததில் பெருமை பொங்கச் சிரித்திட, அவனிடம் அதிகபட்சமாகப் புருவ உயர்வைத் தவிர எவ்விதப் பாவனையையும் கொண்டு வர இயலவில்லை.
“எதுக்குக் கூப்பிட்ட?” யாஷ் கேட்டதும் தான் நினைவு வந்தவளாகத் தலையில் கை வைத்தவள், “ஐயோ, இந்தக் கதிரு இன்னும் எந்திரிக்க மாட்டுறான் அரக்கன் சார். தண்ணியாச்சும் குடுங்க…” என்று நண்பனை எண்ணிப் பதறிட, “அவன் அப்படியே சமாதி ஆனாலும் ஐ டோன்ட் கேர். நான் சொல்றதைக் கேட்பேன்னு சொல்லி, அக்ரிமெண்ட்ல சைன் போடு. அவனுக்கு மயக்கத்தைத் தெளிய வைக்கிறேன்.” என்றான் தோளைக் குலுக்கி.
“இன்னா சார், ஒங்களோட பேஜாராப் போச்சு.” எனச் சலித்துக் கொண்டவள்,
“எவ்ளோ நாளைக்கு சார்?” என்றாள் கடுப்பாக.
“ஏதோ ப்ரோக்ராம் சொன்னியே…” என நெற்றியை நீவியபடி யோசித்தவன்,
“ஹான், பிக் பாஸ்! அந்த மாதிரி 100 டேஸ். அதுக்கு மேலயும் ஆகலாம். ஒரு 3 டு 6 மந்த்ஸ்!” என்றவனை வெளிறியபடி பார்த்தாள்.
“ஏதோ ஒரு நாள் ரெண்டு நாள்னு சொல்லுவீங்கன்னு பார்த்தா, இன்னா சார் ஆறு மாசத்துக்குச் சொல்றீங்க?”
“ஓகே ஃபைன்… இன்னும் கொஞ்ச நேரத்துல இவனக் கொன்னுடுவேன். உன் பிரண்டோட பாடியை எடுத்துட்டுக் கிளம்பு.” என்று சாதாரணமாகச் சொல்லி விட்டுக் கிளம்பியவனைத் தடுத்தவள்,
“ப்ச்! மெய்யாலுமே அரக்கன் தான் நீங்க. ஒங்க வேலை ஆகுறதுக்கு ஒன்னும் செய்யாத அப்பாவியச் சாகடிக்கப் பாக்குறீங்க?” என்று சண்டையிட,
“லுக் கடன்காரி… உங்கிட்டப் பேச எனக்கு டைம் இல்ல. ஐ ஹேவ் லாட் ஆஃப் வொர்க்ஸ். நான் சொல்றதுக்கு நீ ஓகே சொல்ற வரை இங்கயே பட்னியா இருந்துக்கோ!” என்றிட, நிதர்ஷனாவிற்கு ‘இதேதுடா இவனோட ரோதனையாப் போச்சு.’ என்றிருந்தது.
“ஒங்களை நம்பி ஆறு மாசத்துக்கு எப்படி இருக்குறது?” எனக் கேட்க வந்தவளின் கேள்வி அவனுக்குப் புரியவில்லை போலும்.
நெற்றி மத்தியில் இரு கோடுகள் விழப் புருவம் சுருக்கினான்.
“காசி மாதிரி நீங்களும் என்கிட்டத் தப்பா நடந்தா?” என்றவளின் கேள்வியில், “வாட்?” என முகம் சுளித்தான் ஆடவன்.
அவளை மேலிருந்து கீழ் வரை ஒரு முறை ஸ்கேன் செய்தவன், “உன்மேல எல்லாம் எனக்கு பீலிங்ஸ் எப்பவும் வராது. எதையாச்சும் உளறாத. அப்படி உன் மேல பாயணும்னா, இப்ப இந்த செகண்ட் என்னால செய்ய முடியாதா? எனக்கு நீ தேவை நிதர்ஷனா. எல்லாமே ஆக்டிங் தான். ஆனா ஆக்ட்டிங்னு கண்டுபிடிக்க முடியாத அளவு ரியலா இருக்கணும்.” என்றான் கண்டிப்பாக.
“அப்படி யார்ட்ட நடிக்கணும்?” நிதர்ஷனா புரியாது கேட்க,
“என் அம்மாகிட்ட, அவங்க பேமிலி முன்னாடி நடிக்கணும்.” என்றான் இறுகலுடன்.
“ஆறு மாசத்துக்கா?” விழி விரித்து அவள் கேட்டதில், ஆமோதிப்பாகத் தலையாட்டினான்.
கதிரவன் வேறு அசையாமல் படுத்திருக்க, ‘இன்னும் ஒரு நாள் சாப்பிடாம இருந்தா நட்டுப்பான்.’ என்ற கவலையிலும், வெளியில் சென்றால் காசியிடம் இரையாக வேண்டும் என்ற உண்மை முகத்தில் அறைந்ததிலும் அரை மனதாக ஒப்புக் கொண்டாள்.
அதிருப்தியாய் தலையாட்டிய யாஷ் பிரஜிதன், “எனக்கு உன்னோட ஃபுல் கோ ஆப்ரேஷன் வேணும் நிதர்ஷனா. சும்மா ஏனோ தானோன்னு இருக்கக் கூடாது.” என்று கடுமையாய்க் கூறியதில், “சரி, நடிச்சுத் தொலைக்கிறேன்.” என்று பல்லைக் கடித்தாள்.
அவன் கூர்மையாய் முறைத்ததில், “ஒடனே பிராணநாதான்னு ஒங்க கால்ல விழுக முடியாதுல்ல. கொஞ்ச கொஞ்சமா தான் பிக்கப் பண்ண முடியும்.” என்றவளின் கூற்றிலிருந்த நியாயம் புரிய, “ஃபைன்… இன்னும் மூணு நாள்ல நம்ம டாஞ்சூர் போகணும். அதுக்குள்ள உன்னை ஃபுல்லா ப்ரிப்பேர் பண்ணிடுறேன்…” என்றான்.
“டான்ஜுரா? அப்ப இங்க இருக்க மாட்டோமா? ஆமா, அந்த ஊர் எங்க இருக்கு?” எனக் கேட்டாள் குழப்பமாக.
“தமிழ்நாட்டுல தான இருக்க… உனக்குத் தெரியாதா?” யாஷ் வினவியதில்,
“இல்லையே இப்படி ஒரு பேர் கேள்விப் பட்டதே இல்லையே.” எனத் தலையைச் சொறிந்தாள்.
“இட்ஸ் லொகேட்டட் சம்வேர் நியர் ட்ரிச்சி, ஐ திங்க்…” யாஷும் தாடையைத் தடவியபடி யோசனையுடன் கூற,
“திருச்சிக்குப் பக்கத்துலயா?” அவளும் குழம்பியதில் அவனுக்கும் அதிகமாய் குழப்பம் ஏற்பட்டது.
அதில், “எலிசா, வேர் இஸ் டான்ஜுர்…” என்றவன் பெண்ணவளை ஒரு கணம் பார்த்து விட்டு, “டாக் இன் தமிழ்!” என்றிட எலிசா அழகாய் தமிழ் பேசியது.
“வணக்கம் பாஸ்… தஞ்சாவூர், தமிழ்நாட்டின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ளது. திருச்சியில் இருந்து சுமார் 60 கி.மீ. தொலைவில் உள்ளது.” என எலிசா மடமடவெனப் பேச,
“அடங்கொனியா! தஞ்சாவூரைத் தான் டாஞ்சூர்னு நாக்குல சுளுக்கு வந்த மாதிரிச் சொன்னீங்களா?” அவள் தலையில் அடிக்க,
யாஷ் தனது தங்க நிறக் கண்களால் அவளை எரித்தான்.
“கண்ணுல தான் கலப்படம்னு பார்த்தா, வார்த்தைலயும் கலப்படம்!” உதட்டைச் சுளித்தவளின் வாயில் புறங்கையால் மெல்ல அடித்தவன், “இந்த வாயை ஒழுங்கா வச்சுப் பேச மாட்டியா? எல்லா வார்த்தைக்கும் தௌஸண்ட் எக்ஸ்பிரஷன்…” என அதட்டி விட்டு அவனது ஆள்களை வரவழைத்து, கதிரவனுக்குப் பழச்சாறு கொடுக்கும்படி உத்தரவிட்டுச் சென்றான்.
அவன் அடித்த வாயைத் துடைத்துக் கொண்டவள், “போடா அரக்கா…” என முணுமுணுத்து, “ஐயோ! இந்த மூஞ்சூர் மண்டையன் கூட டாஞ்சூர் போய் ஆறு மாசத்தை எப்படி ஓட்டப் போறேனோ, தெரியலையே மகமாயி…” என நொந்தாள் நிதர்ஷனா.
கதிரவன் எழுந்ததும், இருவருக்கும் உணவு கொடுக்கப்பட்டது. உண்ட பிறகு நிதர்ஷனா அன்று முழுதும் உறக்கத்திலேயே இருந்தாள்.
மறுநாளும் தேவையான உணவுகளும், பழச்சாறுகளும் நேரத்திற்கு வந்தது இருவருக்கும்.
“இங்க இருந்து அனுப்புற ஐடியாவே இல்லை போல.” கதிரவன் தவித்துப் போக, நிதர்ஷனா ‘அடப்போங்கடா…’ என்ற ரீதியில் சாப்பிட்டுச் சாப்பிட்டு உறங்கினாள்.
இரவு வரைக்கும் யாஷும் அங்கு வரவில்லை. மதிய உணவின் போது தான், ரெண்டு பேரையும் டைனிங்ல சாப்பிடச் சொல்லு. எனத் தனது ஆள் ஒருவனுக்குத் தனது பங்களாவில் இருந்தபடியே கட்டளையிட, இருவரையும் உணவு உண்ணும் இடத்திற்கு அழைத்து வந்தனர்.
அப்போது தான், அந்தப் பங்களாவின் செழிப்பையே இருவரும் கண்டனர். நிதர்ஷனாவிற்கும், கதிரவனிற்கும் கையில் விலங்கு மட்டுமே போடவில்லை. மற்றபடி, தங்கக்கூடான யாஷ் பிரஜிதனின் பங்களாவில் சுதந்திரமாகச் சுற்ற விட்டே அடைத்து வைத்திருந்தான். அவர்களும் மதியத்திற்கு மேல் பங்களாவைப் பார்வையிட்டு, ஒவ்வொன்றையும் ஆராய்ந்து ஆச்சரியப்பட்டுக் கொண்டனர்.
“ப்பா… செம்ம பாலிஷா இருக்குல்ல.” கதிரவன் கூறிட, “ம்ம்க்கும்… இருந்து என்ன பிரயோஜனம்? ஒரே வெஜ்ஜா போட்டுச் சாவடிக்கிறானுங்க.” என்று குறைப்பட்டுக் கொள்ள, “சோறு கொடுத்ததே பெருசு.” என்றான் கதிரவன்.
இரவு உணவான இட்லி, தோசை, பூரி, சகிதம் டைனிங் டேபிளில் நிறைந்திருந்தது.
இருவரும் டைனிங் டேபிளில் அமர்ந்த பிறகு, காலடி ஓசை காதில் எதிரொலிக்க, அங்கு வந்த யாஷ் ஃப்ரூட் சாலடை மட்டும் ஸ்பூனில் ஸ்டைலாக எடுத்து உண்டான்.
கதிரவனுக்குப் பசி வயிற்றைத் துளைத்தது. அவனாகவே இட்லியை எடுத்து வைத்துச் சாப்பிடத் தொடங்க, நிதர்ஷனா யாஷையே பரிதாபமாகப் பார்த்திருந்தாள்.
அதில் தனது லேசர் கண்ணை அவள் புறம் திருப்பி, “வாட்?” எனக் கடுமையாகக் கேட்க,
“அரக்கன் சார்ர்ர்ர்… சோறு போடுறது பெரிய விஷயம் தான், இல்லன்னு சொல்லல. நாள் முழுக்கச் சாம்பார் தான் போடணும்னு அவசியம் இல்லைல. காலைல இட்லி, சாம்பார், சட்னி… மதியமும் சாம்பார் சோறு, திரும்பவும் நைட்டுக்குச் சாம்பார்னா ஒரு மாறி ஸ்ட்ரெஸ்ஸா கீது சார்…” எனக் கவலை போலக் கூறியதில்,
அவளை ஒரு நொடிக்கும் குறைவாக அளந்தவன், “நாளைக்கு மெனு சேஞ்ச் பண்ணச் சொல்றேன்…” என்றபடி விழிகளை இலேசாய் திருப்பிப் பார்க்க, மறுகணம் செஃப் ஓடி வந்தான்.
“யா சார்” அடக்கமாய் அவன் கேட்க,
“ம்ம்!” எனப் பெண்ணவளுக்கு விழியசைவில் உத்தரவு கொடுக்க, அவளுக்கு என்ன புரிந்ததோ, செஃப்பிடம் மடமடவென ஆர்டர் கொடுத்தாள்.
“பாஸ்… இந்தக் கெழுத்தி மீன் இருக்குல்ல, அதை நல்லாக் கெட்டியா தேங்காப் பால் எடுத்துக் கரைச்சு ஊத்தி, மசாலாவை அம்மில அரைச்சுக் காலைலயே கொழம்பு வச்சுடுங்க. ஃப்ரை பண்ணுனாலும் மஜாவா இருக்கும். அதை அப்படியே மதியம் சோறுக்கு வச்சுட்டு, சோறு மிஞ்சிட்டா குப்பைல போட்டுடாதீங்க. தண்ணி ஊத்தி வைங்க, கஞ்சியை மீன் கொழம்பைத் தொட்டு நைட்டு சாப்புட்டுக்குறேன்…” என்றவளுக்கு இப்போதே நாவில் எச்சில் ஊறியது.
கதிரவனோ, “எனக்கும் அதே தான்!” எனத் தானும் பங்கிற்கு வர, செஃப் மொழி புரியாதது போல விழித்தான்.
யாஷோ முகத்தை அருவருப்பாய் சுருக்கி, “வாட் தி ஹெல்?” எனக் கத்த,
“ஹெல் இல்ல, கலப்படக் கண்ணு சார். ஹெவன்! உங்களுக்கும் தரச் சொல்றேன்.” என்று அனைத்துப் பற்களையும் காட்டியதில், செஃப்பிற்குக் கண்ணைக் காட்டியவன் அவன் நகர்ந்ததும் அடிக்குரலில் கர்ஜித்தான்.
“ஜஸ்ட் ஸ்டாப் திஸ், இடியட் கேர்ள். நான் பியூர் வெஜிடேரியன். என் அம்மா பேமிலில எல்லாரும் வெஜ் தான். என்கூட ஆக்ட் பண்ற வரை யூ மஸ்ட் பீ ஆன் வெஜிடேரியன்!” என்று கட்டளையாய் கூறியதும், “என்னது?” என இருக்கையை விட்டு நெஞ்சைப் பிடித்துக் கொண்டு எழுந்தே விட்டாள் நிதர்ஷனா.
“ஆஆஹாஹான், இதுல்லாம் சரிப்பட்டு வராது. இதோ பாருங்க சார்… நான் பொண்டாட்டியா என்ன, பொணமா கூட நடிக்கிறேன். அதுக்காக கத்திரிக்காய கறியா நினைச்சும், மீல் மேக்கரை மீனா நினைச்சும் என்னால துன்ன முடியாது. நம்ம பழக்க வழக்கத்தை இத்தோட நிப்பாட்டிக்கலாம். ரைட்டா…” என விறுவிறுவென வாசலை நோக்கிச் செல்லப் போனதில் அவன் ஏளனம் கலந்த தொனியில் எதிர்வினையாற்றினான்.
“போ… வாசல்ல தான் காசி ஆளுங்க நிக்கிறாங்க. நீ போனதும் டைரக்டா அவனுக்கு கீப்பா ஒர்க் பண்ண ஸ்டார்ட் பண்ணிடலாம்.” எகத்தாளம் மின்னியதில், போன வேகத்தில் திரும்ப நாற்காலியில் அமர்ந்தவள், “நீங்க அவனுக்கு செட்டில் பண்றேன்னு சொன்னீங்க தான.” என்றாள் உதட்டைக் குவித்து.
“என் வேலை முழுசா முடியிற வரைக்கும் காசி உன்னைத் தேடிட்டே தான் இருப்பான். என்னை மீறி ஏதாவது தகிடுதத்தம் பண்ண நினைச்ச, காசியோட பொறிக்குள்ள நானா விழுக வச்சுடுவேன்.” ஆணவனின் முகம் காட்டிய ரௌத்திரத்தில் அழுகை வருவது போல இருக்க,
“சரி, தஞ்சாவூருக்குப் போன பின்னாடி வேணும்னா ஐயர்வாலாவா மாறிக்கிறேன்.” அழுகையை அடக்கியதில் மூக்கை உறிஞ்சியவள், “இங்க இருக்குற வரைக்கும் நான் வெஜ் போடச் சொல்லுங்க…” என்றாள் பாவமாக.
‘காசிகிட்டப் போனாலும் சாவப்போறேன், இவனும் என்னைச் சாவடிக்காம விட மாட்டான். அதுவரை ரசிச்சு ருசிச்சாவது தின்னு உடம்பைத் தேத்துவோம்.’ என்ற மனநிலையில் இருந்தாள்.
“மெண்டல்…” வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டே டிஸ்யூவால் கையைத் துடைத்து விட்டு எழுந்த யாஷ் பிரஜிதன் செஃப்பை அழைத்து, “அவள் கேக்குறதைச் செய்!” என உத்தரவு கொடுத்ததில்,
“உங்களுக்குள்ளயும் ஒரு இளகுன மனசு, இலை விரிச்சுப் படுத்துருக்கு சார்…” எனப் புகழ்ந்த தோழியைக் கண்டு கதிரவன் தலையில் அடித்தான்.
யாஷோ அவளைக் கடுமையாய் முறைக்க, அவளோ “சரி சரி, என்மேல இருக்குற கோபத்துல வெறும் பழத்தத் துன்னுட்டு எந்திரிச்சுட்டீங்க பாருங்க. டிபனைச் சாப்பிட்டுப் போங்க.” என்றிட, “தட்ஸ் மை டின்னர்!” என்றான் ஏளனமாக.
“எதே… வெறும் பழத்தைச் சாப்பிட்டா, என்னைக் கழுத்தோட தூக்குனீங்க?” என விழி விரித்தவள் கதிரவனிடம் கிசுகிசுப்பாக, “டேய் கதிரு… இவன் வெறும் ப்ரூட்ஸ் பார்ட்டிடா. நம்ம ரெண்டு பேரும் சேர்ந்தா ஈஸியா அட்டாக் பண்ணிட்டு ஓடிடலாம்.” எனத் திட்டம் கூறி, பல்பு வாங்கக் காத்திருந்தாள் நிதர்ஷனா.
அன்பு இனிக்கும்
மேகா