Loading

“ரிசப்ஷன் முடிஞ்சதும் என் கூட என் வைஃபா நம்ம வீட்டுக்கு வருவியாடி பொண்டாட்டி” ஏக்கம் நிறைந்திருந்தது சத்ய யுகாத்ரனின் குரலில்.

மார்பில் சாய்த்திருந்த தலையை நிமிர்த்தி ஆடவனைப் பார்த்த இதயாம்ரிதா, மௌனமாய் மீண்டும் குனிந்து கொண்டாள்.

“நம்ம ரிசப்ஷன்குப் போகலாமா?” என்றவளின் கேள்வியில் பெருமூச்சு விட்டவன், “ம்ம்” என்று விட்டு காரை எடுத்தான்.

அவனது அமைதி அவளைச் சுட்டதோ என்னவோ, கியரைப் பற்றி இருந்த அவன் கையை அழுத்திப் பற்றிக்கொண்டவள், “எனக்கு சில விஷயம் பண்ணனும். அதை முடிச்சுட்டு கண்டிப்பா வரேன்” என்றாள் மெல்லமாக.

அக்கூற்று அவனுள் சிறு நிம்மதியைக் கொடுக்க, “அப்போ அதை முடிச்சுட்டு ரிசப்ஷன் வைக்க வேண்டியது தான?” எனக் கடிந்ததில் அவளிடம் பேரமைதி.

ஆனாலும் அவனை விட்டு நகரவில்லை.

——-
ரிஸப்ஷனுக்காக விலையுயர்ந்த பார்ட்டி ஹாலை புக் செய்திருந்தாள் இதயாம்ரிதா.

அனைவருமே பார்ட்டி நடைபெறும் இடத்திற்குச் சென்று விட இவர்களை மட்டும் காணவில்லை.

“உமா, எங்க போனாங்க ரெண்டு பேரும்” மாலதி அங்கலாய்த்துக் கொள்ள,

“உங்க மருமகளும் என் மருமகனும் வீட்ல தங்குனா தான அண்ணி. எப்போ வெளில போறாங்க எப்ப வர்றாங்கன்னே தெரியாது” என சலித்துக் கொண்டார்.

இதில் மிதுனா இதயாம்ரிதாவின் தங்கையாக இருப்பாளென யாரும் எதிர்பார்க்கவில்லை.

கீர்த்தனா, “மிதுமா நீயாவது உன் ப்ரெண்டுக்கு போன் பண்ணு. அவனையும் காணோமே” என்று விதுரனையும் அங்கு காணாமல் கேட்டார்.

உமா புருவம் சுருக்கி “உங்களுக்கு மிதுவை தெரியுமா” எனக் கேட்க,

“ஓ! விதுரனும் இவளும் ஒரே காலேஜ் தான. அன்னைக்கு வீட்டுக்கு கூட வந்தா” என்றதும் உமா மிதுனாவை முறைத்தார்.

கணவன் இறந்த பிறகு தன்னுடன் இருக்கச் சொல்லி அத்தனை முறை அழைத்தும் மறுத்து விட்ட மகளை காட்டமாகப் பார்த்து வைக்க,

திருதிருவென விழித்த மிதுனா, “அது அன்னைக்கு ஸ்கூட்டி பஞ்சர் பெரிம்மா” என்று இளித்து வைத்தவள், நைசாக அங்கிருந்து நகன்றாள்.

விதுரனுக்கு அழைக்கலாமா வேண்டாமா எனக் குழம்பி, பூமிகாவிற்கு அழைத்தாள்.

தலையில் கட்டோடு, “யம்மா… யம்மா!” எனத் தட்டு தடுமாறி எழுந்த அகிலைப் பிடித்துக் கொண்ட பூமிகா, “ஏண்டா புள்ளத்தாச்சி பொண்ணு மாதிரி கத்திட்டு இருக்க” என்றாள் தனது தவிப்பை மறைத்து.

“என் சோகம் உனக்கு சொகமா இருக்குல்ல. ப்ரெண்டாடி நீ… யம்மா” என மீண்டும் புலம்ப ஆரம்பிக்க, பொங்கி வழிந்த புன்னகையை அடக்கிக் கொண்டு மிதுனாவின் அழைப்பை ஏற்றாள்.

“எங்க இருக்க பூமி. ஹாஸ்பிடல்ல இருந்து கிளம்பிட்டீங்களா?”

“இதோ இப்ப தான் டிஸ்சார்ஜ் முடிஞ்சுது மிது.”

“சரி சரி சீக்கிரம் வாங்க அவன் ஓகே தான?” மிதுனா கேட்டதில்,

“அவனுக்கு என்ன குத்துக்கல்லாட்டம் நல்லா தான் இருக்கான்” என்றவளைத் தீயாய் முறைத்து வைத்தான் அகில்.
“ம்ம்… விதுரன் அங்க இருக்கானா?” மெல்லமாய் கேட்ட மிதுனாவிடம்,

“இல்லையே மிது. ஏதோ முக்கியமான வேலைன்னு ஆபிஸ் போயிருக்கறதா சொன்னான்” என்றதும் மிதுனாவின் நெற்றியில் சுருக்கங்கள் விழுந்தது.

“இங்க ரிஸப்ஷனை வச்சுட்டு அவன் எதுக்குடி ஆபிஸ் போனான்?”

“தெரியலையே. அங்க வேலை இருக்கும்னு தான உங்க ரெண்டு பேரையும் அனுப்பி விட்டுட்டு நாங்க இங்க பார்மாலிட்டீஸ் முடிச்சுட்டு வர்றதா சொன்னோம்…” பூமிகாவும் குழம்பியதில், “சரி நான் அவனுக்கு கால் பண்றேன்…” என்று விட்டு அழைப்பைத் துண்டித்தாள்.

“மிதுனா விதுரனுக்கு கால் பண்ணியா?” மாலதி அவளைத் தொடர்ந்து வந்ததில், வேறு வழியற்று அவனுக்கே அழைத்து விட்டாள்.

இரண்டாவது ரிங்கிலேயே அழைப்பை ஏற்றவன் பதில் பேசாது மௌனத்தை நீட்டிக்க,

“எங்க இருக்க?” எனக் கேட்டாள் மிதுனா.

“ஆபிஸ்ல. ஒரு ஒர்க் இருக்கு. யாரும் கேட்டா நீ சமாளி. நான் வர லேட் ஆகும்” எனத் தகவலை மட்டும் அளித்தவனிடம், “எதுவும் பிரச்சினையா விதுரா” என அவளும் பரபரத்தாள்.

“பிரச்சினை ஆகுறதுக்கு முன்னாடியே தடுக்க தான். இப்ப எதையும் சொல்ல முடியாது.”

“ப்ச், இங்க இன்னும் சத்யா சாரும் அம்ரியும் வரலையே. அவங்களே இல்லாம எப்படிடா ரிசப்ஷன் நடக்கும்” புலம்பலாய் கூறியவளிடம், “என்னது? அவங்க எங்க போனாங்க” என விதுரனும் அதிர்ந்தான்.

“ஆபிஸ் போனதா தான் பெரியம்மா சொன்னாங்க.”

“இங்க வரல மிது” என்றவனுக்கோ நெஞ்சம் படபடத்தது.

அந்நேரம் சத்ய யுகாத்ரனும் இதயாம்ரிதாவும் ஜோடி போட்டுக்கொண்டு காரில் இருந்து இறங்கியதைக் கண்டு,

“வந்துட்டாங்க” என்று முணுமுணுத்தாள்.

“ஷப்பா…” என நிம்மதி பெருமூச்சு விட்ட விதுரன், “இவங்க வேற நம்மளை பதட்டத்துலயே வச்சுருக்காங்க! நீ பாத்துக்கோ” என்று அலைபேசியயை வைத்து விட,

“நீ எப்ப வருவ?” என அவள் கேட்ட வாசகம் அலைபேசியுள்ளேயே மரித்து போனது.

அப்படி இவனுக்கு மட்டும் என்ன வேலையாம் முறுக்கிக் கொண்டவள், தமக்கையை முறைத்தாள்.

“எங்கக்கா போன. உன்னைக் காணோம்னு பயந்தே போய்ட்டேன்.”

“உன் அக்காவை என்னைத் தவிர யாரும் கடத்திட்டுப் போக முடியாது. அப்படியே கடத்திட்டுப் போனாலும் தானா கொண்டு வந்து விட்டுருவானுங்க…” எனக் கேலி செய்த சத்ய யுகாத்ரனின் தோளை இடித்த இதயா, “அங்க மட்டும் என்னவாம்” என நாக்கைத் துருக்கினாள்.

இவரின் கண்களிலும் முன்பெல்லாம் கோபம் மட்டுமே தெறிக்கும். அதன்பிறகு அளவு கடந்த வலியும் ஏக்கமும் நெறித்தது. தற்போது அதைத் தாண்டியும் அவர்களது நேசம் வெளிவர, மிதுனாவிற்கு மனமே அமைதியடைந்தது.

“ரெண்டு பேரும் ரெடியாகாம இங்கயே நின்னுட்டு சைட் அடிச்சு நேரத்தை ஓட்டலாம்னு நினைப்பா” மிதுனா குறும்பாய் வினவ, ஒருவரை ஒருவர் பார்வையால் விழுங்கி கொண்டிருந்த இருவரின் முகத்திலும் சின்னதாய் ஒரு அசட்டு வெட்கம்.

திருமணத்தையும் தனியே நிகழ்த்திக் கொண்டாகிற்று.

தற்போது தனது குடும்பத்தினரின் முன்னிலையில், இத்தனை அலங்காரங்களுக்கு மத்தியில் நாயகன் நாயகியாய் சில மணித் துளிகள் வலம் வரப்போவதை எண்ணி வந்த விசுகிசுப்பு.

இரவு உணவு ஏற்பாடுகளை பார்வையிட்டுவிட்டு அவர்களிடம் வந்த பத்மபிரியா, “அம்ரி… லேட் ஆச்சு. வந்து சேரி கட்டிக்கோ” என அழைக்கும்போதே குடும்பத்தினரும் அங்கு கூடி அவர்களை கண்டித்தனர்.

தியாகு, “என்னப்பா உங்க ரிசப்ஷனுக்கு நீங்களே லேட்டா வர்றீங்க” எனக் கடிந்து கொள்ள, “அது கொஞ்சம் வேலை சித்தப்பா. ஒரு டென் மினிட்ஸ் ரெடி ஆகிடுறோம்” என்றான்.

“ஹலோ ப்ரொஃபி நீங்க வேகமா கிளம்பிடுவீங்க. நான் எப்படி பத்து நிமிஷத்துல கிளம்புறது?” அவன் செவியோரம் கிசுகிசுத்தாள் இதயாம்ரிதா.

மந்தகாசப் புன்னகையை உதட்டினுள் மறைத்துக் கொண்டவன், “ரொம்ப நேரம் மேக்கப் பண்ண வேணாம். உன் முகத்தையும் லிப்ஸையும் டச் அப் பண்ண எனக்கு வழி தெரியும். அப்படியே வந்து நின்னா, ரிசப்ஷன் முடியிற வரை ரோஸ் பவுடர் கலையாத மாதிரியே போஸ் குடுக்கலாம்” என குறும்புடன் முணுமுணுத்தான் சத்யா.

குப்பென சிவந்து போன இதயாம்ரிதா, “ப்ரொஃபி…” எனப் பல்லைக் கடித்தாள்.

கீழுதட்டை ஈரப்படுத்திக் கொண்டவன், “சரி இப்படியே வழி மறிச்சு நின்னா நாங்க எப்படி கிளம்புறது… வா இதயா ரெடியாகிட்டு வரலாம்” என அவளை அனைவர் முன்னிலையும் அழைக்க, அவளுக்கோ விழி பிதுங்கி விட்டது.

மற்றவர்களும் அதே முழியுடன் அவனைப் பார்த்து வைத்ததில், “என்ன எல்லாரும் ஷாக் ஆகுறீங்க. என் பொண்டாட்டி கூட நான் ரெடி ஆகுறது என்ன அவ்ளோ பெரிய கொலை குத்தமா” என்ற மகனை போலியாய் முறைத்துப் பார்த்தார் மாலதி.

அவர்களது இணக்கம் கண்டு எழுந்த மகிழ்வும் அபாரம் தான். நீலா, “சீக்கிரம் ரெடியாகிட்டு வருவீங்களா?” என சந்தேகமாகக் கேட்க,

“பத்தே நிமிஷம் தான் அத்தை” என்று அவளை இழுத்துச் சென்றதில் பத்மப்ரியாவும் மிதுனாவும் அவர்களுடன் சென்றனர்.

அறை வாயிலிலேயே இருவரையும் நிறுத்திய சத்ய யுகாத்ரன், “என்ன?” எனக் கையைக் கட்டிக்கொண்டு கொண்ட இரு பெண்களும் ‘பே’ வென பார்த்தனர்.

“அவளுக்கு சேரி கட்டி விடணும் சார்…” பத்மா கூறியதும்,

மிதுனாவும் “ஆமா சார்… மேக்கப் திங்ஸ் எல்லாம் நான் தான் உள்ள எடுத்து வச்சுருக்கேன். நகையெல்லாம் பெட்ல இருக்கு” என்று விளக்கம் கூறினாள்.

“இங்க என்ன ஆட் ஷுட்டா நடக்குது? ஆளாளுக்கு அவளை ரெடி பண்றதுக்கு. எங்க ரிசப்ஷன் நாங்க பாத்துக்குறோம். அண்ட் மோர் ஓவர், என்னை வெறும் சாரா மட்டும் பாக்குறவங்க ரிஸப்ஷனை தள்ளி நின்னே வேடிக்கை பார்க்கலாம்…” எனக் குட்டு வைத்து விட்டு கதவை டொம்மென அடைத்துக் கொள்ள, இரு பெண்களும் பாவமாய் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“இவர் என்னோட ப்ரொபஸர். வேற எப்படி கூப்புடுறதாம்… இப்ப வரை அந்த மரியாதை போக மாட்டேங்குது!” பத்மபிரியா புலம்பிக்கொள்ள,

“எனக்கும் சார்’னு பழகிடுச்சு. நான் வேற அவரை ரொம்ப பேசிட்டேன். அதுனால எனக்கும் தயக்கம் தான்” எனும்போதே மூடிய கதவு மீண்டும் படக்கென திறக்கப்பட்டதில் இருவரும் அதிர்ந்தனர்.

“ரெண்டு பேரும் கொஞ்சம் தள்ளி நின்னு புலம்புறீங்களா… எங்களுக்கு டிஸ்டர்பன்ஸா இருக்கு. ப்ளீஸ்!” என்று சத்யா வெகு பணிவாய் கூறி விட்டு மீண்டும் கதவை அடைத்ததில், இருவர் முகத்திலும் அசடு வழியாக குறை தான்.

அவனது சேட்டைகளை கட்டிலில் அமர்ந்து கன்னத்தில் கை வைத்துப் பார்த்துக் கொண்டிருந்த இதயாம்ரிதா, “எனக்கு யாரு மேன் சேரி கட்டி விடுவா?” என உதட்டைச் சுளித்தாள்.

“நான் எதுக்கு இருக்கேன்” கண்ணோரம் நடனமாடிய ரசனையுடன் அவளை நெருங்கியவனைத் தள்ளி விட்டாள் மெல்லமாக.

“எல்லாம் ப்ரீ – ப்ளீட் எடுத்து தான் வச்சுருக்கு. நானே கட்டிப்பேன் பேபி பாஸ். நீங்க போய் ரெடியாகுங்க” என அழகு காட்ட, அவளை இழுத்து தன்னுள் அடக்கியவன்,

“அப்போ இன்னும் வசதியா போச்சு!” என அவள் கன்னத்தில் இதழ்களால் ஊர்வலம் நடத்தியதில் அவள் மெய்யுருகிப் போனாள்.

“ப்ரொஃபி… இன்னும் கொஞ்ச நேரத்துல மினிஸ்டர் எல்லாம் வருவாரு. அதுக்குள்ள நம்ம ரெடியாகி மேடைல இருக்கனும்” அவஸ்தையாய் அவனைத் தள்ளி விட்டாள்.

“ப்ச், அவங்களை எல்லாம் ஏன்டி கூப்பிட்ட… கல்யாணத்தை தனியா அனுபவிச்சு பண்ணிக்கிட்ட மாதிரி, இந்த ரிஸப்ஷனையும் தனியா பீல் பண்ண விடலாம்ல” என கிறக்கத்தில் உளறியவனை விலக்கி விட்டு விழி விரித்தாள்.

“மேரேஜ் பண்ணும்போது இந்த முகத்துல ஒரு வண்டி கோபம், வெறுப்பு எல்லாம் இருந்துச்சே…” அவள் கேட்டதும்,

“இந்த முகத்துல கூட தான் ஒன்றை வண்டி சிடுசிடுப்பு இருந்துச்சு. ஆனா நான் தாலி கட்டுன அந்த ஒரு… ஒரே ஒரு செகண்ட் உன் மனசுல ஒரு ஆழ்ந்த நிம்மதி வரல? எனக்கு வந்துச்சே!” என்றான் அவளது கன்னத்தோடு கன்னம் தேய்த்து.

முணுக்கென கண்ணில் நீர் கோர்த்தவளுக்கு எப்படி விவரிப்பதாம் அவ்வுணர்வை.

அத்தனை அடிபட்டும் கூட, நாடகமாகவாவது அவனது கைப்பற்றும் வாய்ப்பு கிடைத்த நொடிகள் மட்டும் தானே அவளது வாழ்விலேயே இனிமையான தருணங்கள்!

“எனக்கும் வந்துச்சு. ரொம்ம்ப” அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு நெற்றியோடு நெற்றியைப் பதித்து கொண்டாள்.

மூளையில் உருட்டிக்கொண்டிருந்த அழுத்தங்களெல்லாம் அவ்வொரு அழுத்தத்தில் அவனுக்கும் பரிமாறப்பட்டிருக்க, அந்த பிறை நெற்றியில் அதரங்களால் ஒற்றி எடுத்தவனின் முத்தங்கள் கூட அவளது உள்ளத்தின் உறுத்தல்களை விரட்டி அடித்தது.

பின் இருவரும் ஒருவரை ஒருவர் சீண்டி தீண்டி கிளம்பி கொண்டிருக்க,

“பத்து நிமிஷம் இல்லக்கா. பத்து வருஷம் ஆனாலும் இவங்க வர மாட்டாங்க போல” மிதுனா நமுட்டு நகை புரிந்து கொள்ள, பத்மபிரியாவின் முகத்திலும் புன்னகை அரும்பியது.

“பரவாயில்ல. இந்த பார்மாலிட்டி எல்லாம் வீண் வேலைன்னு தான் சொல்லுவேன். அவங்களுக்கான நேரத்தை திகட்ட திகட்ட அனுபவிக்கட்டும்” என மனமார கூறும்போதே அங்கு ஸ்ரீராம் வந்தான்.

எப்போதும் அவனிடம் இருக்கும் அசத்தல் பேச்சும், ஏளனப் பார்வையும் முற்றிலும் இல்லை.

ஒருவித தவிப்பு அவன் கண்களில்!

அவனைக் கண்டதும் புரிந்து கொண்ட பத்மப்ரியா, “எதுவும் பிரச்சினையா ராம்?” எனக் கேட்டிருக்க, “இல்லையே…” என பலவீனமாய் மறுத்தவன்
“சத்யா எங்க?” எனக் கேட்டான்.

“அவங்க உள்ள ரெடியாகிட்டு இருக்காங்க” என்றதும், “சரி நான் பாக்குறேன்” என அறையை நோக்கிச் செல்ல இரு பெண்களும் அலறினர்.

“அண்ணா உள்ள என் அக்காவும் இருக்கா” மிதுனா கூறியதில், “ஓ” என்றவனின் முகத்தில் கடுகளவும் புன்னகை இல்லை.

அந்நேரம் மிதுனாவை உமா அழைக்கும் சத்தம் கேட்க, அவளோ ஸ்ரீராமின் முகத்தைப் பார்த்து தோன்றிய கலக்கத்தை மறைத்துக்கொண்டு அவரிடம் சென்றாள்.

“ராம்… எதுவா இருந்தாலும் சொல்லு. எதுவோ சரியில்லையே” பத்மபிரியா அழுத்திக் கேட்டதில்,

“ப்ச்…” எனத் தலையை அழுந்தக் கோதினான்.
“இங்க பேச வேணாம்” அவன் சுற்றி முற்றி பார்த்ததும் அவனை வாசலுக்கு அழைத்துச் சென்றாள்.

“என்ன ராம் சொல்லு. என்னாச்சு. அந்த விஷால் என்ன செஞ்சு தொலைச்சான்?” எனப் படபடத்தாள்.

“ஆக்சுவலி அவன் பிளான் என்ன தெரியுமா? அவங்களை பத்தின வீடியோஸை வெளியிட்டது சத்யா தான்னு ப்ரூவ் பண்ணனும்” ஸ்ரீராம் கூறியதும்,

“ஆனா அதெல்லாம் உண்மையான வீடியோ தான ராம்” எனக் கேட்டாள் புரியாமல்.

“ஆமா ப்ரியா. பட், அவங்க அதை உண்மைன்னு ஒத்துக்கவே இல்லையே. அண்ட் ஆல்சோ, யாமினி அஃபேர்ல இருந்தது ஒரு பிசினஸ் மேன்னு தெரியும்ல. அவன் உண்மை வெளில வர கூடாதுன்னு யாமினியை ஆக்சிடென்ட் பண்ணிட்டு அதை சூசைட் மாதிரி போட்ரே பண்ணிட்டான். பட் இந்த வீடியோ வெளில வந்ததே சத்யானால தான்னு அந்த பிஸினஸ்மேன்கு தெரிஞ்சா, அவன் கண்டிப்பா சத்யாவை சும்மா விட மாட்டான்.

டெல்லில இன்டர்நெஷனல் லெவல்ல பெரிய பிசினஸ் பண்ணிட்டு இருக்கறவன் அந்த நிவான். அவன் நினைச்சா, நிவோரா ஒளிரான்னு எதையும் விட மாட்டான். எல்லாத்தையும் காலி பண்ணிடுவான்” என்ற ஸ்ரீராமிடம்,

“ஆனா இதை சத்யா சார் தான் செஞ்சாருன்னு விஷால் எப்படி ப்ரூவ் பண்ணுவான் ராம்? கண்டுபிடிக்க முடியாத மாதிரி தான செஞ்சுருப்பாரு?”

“எஸ் ப்ரியா. அந்த வீடியோ ஷேரிங்ல நானும் இருந்தேன். அது மட்டும் இல்ல, விஷால் வீட்ல இருந்தானே பிரதாப் அவனும் இருந்தான். எங்க ஆபிஸ்ல டெக்னீக் கை அவன். பி. ஆர் டீம் ஹிட்டும் அவன் தான். அவன் மூலமா தான் விஷயம் லீக் ஆகியிருக்கு. அதுக்கு தூண்டுதல் என் அப்பா தான்” என்றவனை திகைத்துப் பார்த்தாள்.

“சத்யா, இதயாவை பழி வாங்க என் அப்பா தான் விஷாலுக்கு ப்ரதாப் வச்சு ஹெல்ப் பண்ணிருக்காரு. ‘இவங்க ரெண்டு பேரையும் அடக்கிட்டா, நிவோராவை உன் கைல சேர்க்குறது என் பொறுப்பு’ன்னு விஷாக்கும் என் அப்பா வாக்கு குடுத்து இருக்காரு” என்றவனின் முகத்தில் அடர்ந்த கோபம்.

“சத்யா அவரை சொந்த அப்பாவா நினைச்சான். அவர் பேச்சை மீறி போய்ட்டான்றத்துக்காக அவனோட வாழ்க்கையவே அழிக்க நினைப்பாருன்னு நான் நினைக்கவே இல்ல” என்று ஸ்ரீராமிற்குள் அத்தனை வேதனை.

கூடவே சிறு குற்ற உணர்வும்!

அவள் பேசும்முன்னே, “சரி அதுக்கு இதயா என்ன செஞ்சா? அவளோட அப்பா தப்பு செஞ்சுருந்தா அவரை பழி வாங்க வேண்டியது தான. அவளை தேவை இல்லாம இழுத்து விட்டு… ப்ச்” என தலையைக் கோதினான்.

தன்னாலோ, தன்னைச் சுற்றி இருப்பவர்களாலோ தனக்கு நெருக்கமானவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை குற்ற உணர்வாய் தானே பார்க்க முடிகிறது.

ஏனோ இப்போது இதயாம்ரிதா சத்ய யுகாத்ரனின் ஒட்டு மொத்த வலியையும் அவனால் உணர முடிந்தது.

“குற்ற உணர்ச்சி இவ்ளோ வீக்காக்குமனு நான் நினைச்சதே இல்ல ப்ரியா…” இதுவரை அவன் பார்த்திருந்தா ஆடவனின் வேதனை முகம் அவளை பலமாய் தாக்கியது.

அவனைத் தேற்ற வார்த்தைகள் தேடி தோற்றவள், அவன் கையைப் பிடித்து அந்த உள்ளங்கை சூட்டிலேயே அவன் வேதனையைக் குறைக்க முற்பட்டாள்.

கூடவே பதைபதைப்பும்.

“இப்போ என்ன தான் செஞ்சாங்க ராம்?”

“ம்ம். சத்யாவை நிவான்கிட்ட கோர்த்து விட ஆதாரம் தேடிட்டு இருந்தவனுக்கு, என் அப்பாவே அதை அல்வா மாதிரி தூக்கிக் குடுத்துட்டாரு. அது மட்டும் இல்லாம, காலேஜ் டைம்ல ரிலீஸ் பண்ணுன ஃபேக் வீடியோஸ மறுபடியும் சோஷியல் மீடியால வைரலாக்கி சத்யா பேர நாறடிக்கணும்னு பிளான் பண்ணுன விஷால், அவன் சைட்ல இருந்து எந்த பிரச்சினையும் வராம நிவானை தூண்டி விட்டு சத்யாவை கொலை செய்ய பிளான் பண்ணுனான்”

“அடக்கடவுளே!” பத்மபிரியா பரிதவிக்க,

“இரு, இது எனக்கு தெரிய வந்ததும் நான் இதை இதயாகிட்ட சொன்னேன். அவள் இன்னும் ஒரு தடவை தெரியாம கூட சத்யா பேர் தப்பா அடிபட கூடாதுன்னு உறுதியா இருந்தா.

சோ, விதுரனை வச்சு ஒரு தனி டெக்னிகல் டீம் ஃபார்ம் செஞ்சு, என் ஆபிஸ் நெட்ஒர்க்கை க்ராஷ் பண்ண பிளான் பண்ணுனா. பிரதாப் யூஸ் பண்ற ஐபி அட்ரஸ், அண்ட் என் ஆபிஸ் மூலமா வர்ற எந்த வீடியோஸ் அண்ட் இன்டர்நெட் ஷேரிங்கையும் ஹேக் செஞ்சு அதை டெலிட் பண்ண தான் தீவிரமா வேலை பார்த்துட்டு இருந்தாங்க” என்றதும்,

“அது ஒர்கவுட் ஆச்சா ராம்?” எனக் கேட்டாள் அவள்.

“ம்ம்! சத்யாவை பத்தின ஆதாரம், அவனைப் பத்தின ஃபேக் வீடியோஸ் எல்லாத்தையும் ஆன்லைன்ல ஷேர் பண்ண ஸ்டார்ட் பண்ணுன செகண்ட்ல நெட்ஒர்க் கிராக் செஞ்சு டெலிட் பண்ணியாச்சு”

“தேங்க் காட்!” என நிம்மதியுற்றவளிடம், “ஆனா” என நெற்றியை நீவினான் ஸ்ரீராம்.

“ஆனா என்ன?”

“விஷாலுக்கு இது ட்ரிக்கர் ஆகிருக்கணும். சோ, அவன் அவனோட சோஷியல் மீடியா பேஜஸ்ல, அவனும் இதயாவும் இன்டிமேட்டா இருந்த இமேஜஸ் வீடியோஸ் எல்லாம் போட்டு வச்சிருக்கான் ப்ரியா” என்றான் தயக்கமாக.

“வாட்?” பத்மப்ரியா திகைத்து, “அவங்களுக்குள்ள தான் எந்த இன்டிமேஷனும் நடக்கலையே. அந்த பரதேசி, அவள் நிம்மதிய கெடுக்குறதுக்காகவே இதை செஞ்சுருக்கணும்” என எரிச்சலுற்றாள்.

“கொஞ்சம் ஃபேக்.கொஞ்சம் உண்மை” என்ற ஸ்ரீராமை முறைத்தவள் “என்ன சொல்றீங்க?” எனக் கேட்க,

“அவங்க நெருக்கமா இருந்த இமேஜஸ்ல அவன் வீடியோஸ் கிரியேட் பண்ணிருக்கான். பார்க்க அப்படி தான் தெரியுது. சோ நார்மலா அதெல்லாம் ஃபேக்னு பாத்ததும் சொல்ல முடியாத அளவு” என்றவனை அதிருப்தியாய் ஏறிட்டாள்.

“இதுனால அவனுக்கு என்ன லாபம் ராம்?”

“நிறைய லாபம் இருக்கு பிரியா. இதயா அவனோட உழைப்பை நிவோரால உறிஞ்சிட்டு, இப்போ அவன் மேல பழி போட்டு தான் அவனை டைவர்ஸ் செய்றதா தான் வாதாடுனான் கரெக்ட்டா?

இப்பவும் அவன் மேல பழி இல்ல. இதயா தான், என் கூட இவ்ளோ இணக்கமா இருந்துட்டு, என்னை ஏமாத்தி இன்னொருத்தன் கூட போய்ட்டான்னு ப்ரூவ் பண்ணவும், இதயாவோட மனநிலையை சிதைக்கவும் தான் இதெல்லாம்.

நிவோரா அவன் கையை விட்டுப் போக போகுது. அதுக்கு அவனுக்கு கொஞ்சம் டைம் வேணும். அந்த டைமை கிரியேட் பண்ண தான் இவ்ளோ ஆட்டமும்.

அவனுக்கு நிவோராவும் வேணும். சத்யாவும் நல்லாருக்க கூடாது, இதயா சத்யா கூட வாழவே கூடாது…” என அருவருப்பாய் முகம் சுளித்த ஸ்ரீராம்,

“இப்போ இது தெரிஞ்சா அவன் நினைச்ச மாதிரி ரெண்டு பேரோட மனநிலையும் கெடும். ப்ச். என்ன மாதிரியான கேவலமான எண்ணம்” என எரிச்சலுற்றான்.

பத்மபிரியா கலங்களுடன், “எனக்கு வர்ற கோபத்துக்கு அவனைக் கொன்னே போட தோணுது ராம். எல்லாருமே பேமிலி ப்ரெண்ட்ஸா இருந்ததுனால, பெர்சனல் லைஃப்கும் எல்லாருக்கும் இடம் குடுத்தது தான் நாங்க செஞ்ச பெரிய தப்பு. இதயாவுக்கு லவ் வந்ததுல இருந்து பிடிச்ச வெறி அவனுக்கு. ச்சை! இப்ப என்ன தான் செய்றது? அவனை ஏன் இன்னும் விட்டு வச்சுருக்கான இந்த அம்ரி?” என கடுகடுத்தாள்.

“அவனைக் கொலை பண்றது பிரச்சினை இல்ல ப்ரியா. ஆல்ரெடி சத்யா தான் அவங்களோட பெர்சனல் வீடியோஸ் ஷேர் பண்ணதா சோஷியல் மீடியால பரப்பிட்டு இருக்கான், ப்ளஸ் பி. ஆர் டீம் வச்சு இதயாவை எவ்ளோ அசிங்கப்படுத்த முடியுமோ அவ்ளோ செஞ்சுட்டு இருக்கான்.

அவளோட ரிஸப்ஷன்க்கு வர்ற பெரிய ஆள்களையும் இந்த பி. ஆர் விட்டு வைக்க மாட்டாங்க. அவங்களையும் மீம்ஸ், கன்டென்ட் ஆக்கி கலாய்ப்பாங்க. அது அந்த பெரிய புள்ளிகளுக்கு இதயா மேல தான கோபமா வந்து முடியும். இப்படி பல விஷயம் இருக்கும். அது மட்டுமில்ல இப்ப அவனுக்கு என்ன ஆனாலும் ட்ரான்ஸ்பரண்ட்டா சத்யா மேல பழி போட முடியும். அந்த ஒரு காரணத்துக்காக தான் அவளும் அமைதியா இருக்கா.

அதுக்காக தான், சத்யாவை அசிங்கப்படுத்த நினைச்சவனை வேடிக்கை பார்த்துட்டு நானும் அமைதியா இருக்கேன்.

ஈவன், சத்யா கூட இதயா கஷ்டப்பட்டு உருவாக்கிட்டு வர்ற ஒளிராவுக்கு டேமேஜ் ஆகாம, அந்த முள்ளைத் தூக்கி ஏறிய தான் முயற்சி செஞ்சுட்டு இருக்கான்.”

அவனை விழி விரித்துப் பார்த்தவள், “கூடவே இருக்குற எனக்கே இவ்ளோ மேட்டர் தெரியல. உனக்கு எப்படி தெரியுது?” எனக் கேட்டவளிடம்,

“என் அப்பா இதுல தலையிட்டு இருக்குறனால, அந்த பிசாசு இதயா கூட நான் பேச வேண்டிய சிட்டுவேஷன்” என சிலுப்பிக்கொண்டு வேண்டா வெறுப்பாக கூறியவனை முறைத்து வைத்தாள்.

“அட்லீஸ்ட் இந்த ரிஸப்ஷன்க்கு மினிஸ்டர் யாரையும் இன்வைட் பண்ணாம இருந்துருக்கலாம்” பத்மபிரியா பெருமூச்சுடன் கூற,

“அதான் நானும் சொன்னேன் அவகிட்ட. பட், நிவான் மூலமா சத்யா மேல கை வைக்க எந்த பொலிடீஷியன்ஸ்ஸும் யோசிக்கணும்ல. அதுக்கு தான் இப்ப ரிஸப்ஷனை க்ராண்டா வைக்கிறா. நிவோராவும் அவள் கைக்கு போற மாதிரி இருக்குறதுனால அதுல டீலர்ஷிப் வச்சுருக்குற பொலிடீஷியன்ஸ் எல்லாரும் அடக்கி வாசிப்பாங்க. சத்யா மேல கை வைக்க யோசிப்பாங்க…” என்று அர்த்தமாய் கூறியவனை மலைத்து பார்த்தாள்.

“இந்த ஒத்த ரிசப்ஷன்ல இவ்ளோ விஷயமா?”

“ம்ம்! பட் இப்ப அட்லீஸ்ட் இந்த ரிசப்ஷன் முடியிற வரை அவங்க ரெண்டு பேருக்கும் விஷால் செஞ்ச லூசுத்தனம் தெரியக்கூடாது” என்றான் தாடையை தடவியபடி.

“எப்படி தெரியாம வச்சுருக்குறது? போன்ல பாத்துட்டா…” என கேள்வி கேட்கும்போதே, ஆட்டோவில் இருந்து இறங்கினர் பூமிகாவும் அகிலனும்.

அகில் நெற்றியில் கை வைத்து கண்ணைச் சுருக்கி இருவரையும் பார்த்தபடி, “யாரு… பத்மா அக்காவா. நல்லாருக்கியாக்கா” என அக்கறையாய் கேட்டுக்கொண்டவன், ஸ்ரீராமை பார்த்து “இது நம்ம ஸ்ரீராம் சார் தான” எனத் தெரியாதது போல கேட்டான்.

“டேய் ஏன்டா” பூமிகா பல்லைக்கடிதத்தில்,

“தலைல அடிபட்டுருக்குல, நான் எல்லாரையும் ஞாபகம் வச்சுருக்கேனான்னு செக் பண்றேன் பூமி” என்றான் நக்கலாக.

ஸ்ரீராம் தான், “இத்துனூண்டு அடிபட்டதுக்கு நீ நாள் முழுக்க ஹாஸ்பிடல்ல இருந்ததே டூ மச். இதுல மெமரி லாஸ் வேற வருதா உனக்கு…” என்று அவன் முதுகில் அடித்ததில் அசடு வழிந்தான்.

“சரி, நீ இதே ஆக்ஷனை போட்டுட்டு இதயா சத்யாவோட போனை சுட்டுட்டு வா” என்றவனை முகத்தை சுளித்துப் பார்த்தான்.

“நான் எம். பி. ஏ கிராஜுவேட் சார். என்னைப் போய் திருட சொல்றீங்க? வெட்கம் அவமானம்!” என வசனம் பேசியவனை தலையில் கொட்டினாள் பத்மப்ரியா.

“மூடிட்டு போய் வேலையை பாருடா” என்றதில், பூமிகா வாயைப் பொத்தி சிரித்ததில்,
“நான் அடி வாங்குறதுல உனக்கு ஆத்ம திருப்தி கிடைக்குதுல… என்னை மார்க்கெட்டிங் தவிர எல்லா வேலையும் பார்க்க சொல்றாங்க” என அழுது கொண்டே சத்யாவின் அறைக்கதவை தட்டினான்.

அங்கோ, பின் குத்திய மடிப்பு கலையாதவாறு தன்னவளுக்கு புடவையை அணிவித்த சத்ய யுகாத்ரன், “யூ லுக் காட்ஜியஸ்” என்றான் ரசனையுடன்.

“இப்போ தான் அது தெரியுதாக்கும்!” இதழ் மடித்து புன்னகை அடக்கி கேட்டவளிடம் அவனும் குறுநகை சிந்தினான்.

“பார்த்த முதல் நாள்ல இருந்து மனசுக்குள்ள சொல்லிக்கிற டயலாக் தான் பொண்டாட்டி” என்றவன், நெற்றி முதல் உதடுகள் வரை முத்தத்தில் குளிப்பாட்டி சிவக்க வைத்து, நகைகளை அணிவித்தான்.

அவளுக்காக அவனே பிரத்யேகமாக ஆர்டர் செய்திருந்த நகைகள் அவை.

ஜிமிக்கியும், கழுத்தை ஒட்டிய சோக்கரும், கைகளை நிறைக்கும் தங்க வளையல்களும், தளிர் விரல்களுக்கு மோதிரங்களும், மெல்லிடைக்கு ஏற்ப மெல்லிய ஒட்டியானமுமாக அனைத்து நகைகளும் புதிதாக இருந்ததை அப்போது தான் கவனித்தாள்.

“இதெல்லாம் எப்போ வாங்குனீங்க?” அவள் முகத்தில் சிறு வியப்பு.

“நீ ரிசப்ஷன்னு சொன்னதுமே” கண் சிமிட்டிக் கொண்டவன், அவள் முன்னே முட்டியிட்டு அமர்ந்து அவளது காலை எடுத்து அவனது முட்டியில் வைத்துக் கொண்டான்.

வெள்ளி முத்துகள் அதிகம் கொண்ட கொலுசை அணிவித்தவன், விரலை உறுத்தாத வளையம் போலான மெட்டியையும் அணிவித்து விட அவனது ஒவ்வொரு தீண்டலிலும் ஒவ்வொரு அணிகலங்களையும் ரசித்து ருசித்தே ஏற்றாள் இதயாம்ரிதா.

அவளுக்கு முன்பு இந்த நகைகளெல்லாம் வெகு குறைவென்று அவனுக்கும் தெரியும் தான்.

அவனது சேமிப்புகளைக் கரைத்து தான் நகைகளையும், அவன் வாங்கி இருந்த வீட்டிற்கான முதலையும் கொடுத்திருப்பதை புரிந்து கொண்டாள்.

“இப்போ நீ வச்சுருக்குற ஜுவல்ஸையும் போட்டுக்கோ இதயா” என்றவனிடம் “எதுக்கு?” என்றாள்.

“இது சிம்பிளா இருக்குல?”

“நான் என்ன நகைக்கடை விளம்பரத்துக்கு மாடலிங்கா பண்ண போறேன். இந்த நகைகளை தாண்டி குண்டு மணி கூட என் மேல ஏற கூடாது!” திட்டவட்டமாக அழுத்தம் திருத்தமாய் உரைத்தவளை சற்றே அதிர்ந்து பார்த்தவன்,

“நீ உங்கிட்ட இருக்குறதையும் கலந்து போட்டுப்பன்னு தான்டி வாங்குனேன். தெரிஞ்சுருந்தா இன்னும் வாங்கிருப்பேனே” அவன் முகத்தில் சிறு சுருக்கம்.

“ஹலோ ப்ரொஃபி! இதை விட க்ராண்டா எல்லாம் ரெடி ஆக முடியாது…” என சோக்கரை அட்ஜஸ்ட் செய்து கொண்டவளிடம், “அட்லீஸ்ட் இன்னொரு லாங் நெக்லஸ் போட்டுக்கோயேன்” என்றான் கெஞ்சலாக.

“அதான் மாலை போடுவோம்ல அதுல அதெல்லாம் தெரியவா போகுது” எனும்போது தான் கதவு தட்டும் சத்தம் கேட்டது.

அதில் இதயாம்ரிதா கதைவைத் திறக்க, கட்டிலில் வீற்றிருந்த அத்தனை விலையுயர்ந்த நகைகளும் சத்யாவைப் பார்த்து முறைத்தது.

அகிலைக் கண்ட இதயாம்ரிதா, “என்னடா? நீ கோமாவுக்கு போகலையா?” எனக் கேட்டு வைக்க,

“கோவாவுக்கு ட்ரிப் போக வேண்டிய வயசுல கோமாவுக்கு போகணும்னு ஆசைப்படுறீங்களே நீங்கலாம் ஒரு அக்காவா” எனக் கோப பெருமூச்சுகளுடன் நைசாக உள்ளே வந்தவன்,

“நீங்க ரெண்டு பேரும் ரூம்குள்ளேயே ரிஸப்ஷனை முடிச்சுட்டு போய்டலாம்னு நினைச்சுட்டு இருக்கீங்களா. போங்க போங்க போய் ஸ்டேஜ்ல நில்லுங்க…” என்றவனை இடுப்பில் கையூன்றி முறைத்த சத்யா “நீ என்ன செய்ய போற?” எனக் கேட்டதில்,

அவன் கண்ணாலேயே அறையை அளந்து சோபாவில் இருவரது அலைபேசியும் இருப்பதைக் கண்டான்.

“நானே பாவம். உடம்பு சரி இல்லாதவன் அதுனால நான் இங்கயே ரெஸ்ட் எடுக்க போறேன்.” என்று சோபாவில் சரிந்து இருவரது அலைபேசியையும் தனக்குப் பின்னால் மறைத்துக் கொண்டான் அவர்களறியாமல்.

குடும்பத்தினரும் இவர்களை அழைத்ததில் அப்போதைக்கு அவனது திட்டத்தை உணராமல், அலைபேசியை மறந்து மேடையேறினர்.

‘நகையெல்லாம் எங்க அம்ரி?’ எனக் கேட்க வந்த உமாவிற்கு அவையெல்லாம் சத்யா வாங்கி கொடுத்ததென புரிய, தானாய் வார்த்தையை விழுங்கி கொண்டார்.

பார்ட்டி ஹாலில் நிரம்பி இருந்த பெரிய ஆள்களை பத்மப்ரியா கவனித்து கொள்ள, சத்ய யுகாத்ரன் ஸ்ரீராமை தேடினான்.

விதுரனும் அங்கில்லாதது சந்தேகத்தை கிளப்ப, “ம்மா விதுரா எங்க?” எனக் கேட்டான் மாலதியிடம்.

“ஆபிஸ்ல இருக்கறதா சொன்னான் சத்யா” என்றதும், அவன் புருவம் சுருக்கினான்.

இதயாம்ரிதா தொண்டையை செருமிக்கொண்டு, “நத்திங் சீரியஸ் சத்யா. கொஞ்சம் நெட்ஒர்க் சப்போர்ட் தேவைப்பட்டுச்சு. அதான் அவனை ஆபிஸ்ல இருக்க வச்சேன். ஆன் டைம்கு வந்துடுறேன்னு சொன்னான். இன்னும் காணோம்… அதோ வந்துட்டானே” என்று சரியாக உள்ளே நுழைந்த விதுரனைக் கை காட்ட அவனைக் கடந்தும் இயல்பானான்.

சத்யாவுக்கு எதிரான வீடியோக்கள் எதுவும் வெளியில் வரவில்லை என்றதை முன்பே விதுரன் குறுஞ்செய்தி மூலம் தெரிவித்து இருந்தான். அப்போதே அவனைக் கிளம்பி வர சொல்லி விட்டாள்.

ஆனால் அவனோ மனதினுள் மருகினான். விஷால் வெளியிட்டு இருந்த வீடியோக்களை அவனும் பார்த்திருந்தானே!

அத்தனை வேதனையாக இருந்தது,
இதனைத் தடுக்க இயலாமல் போய்விட்டதே என்ற இயலாமையும்.

முடிந்தவரை இதயாம்ரிதாவிற்கு ஆதரவாக கன்டென்ட் ஷேர் செய்யும்படி பி. ஆர் குழுவிற்கு உத்தரவிட்டே வந்திருந்தான்.

இப்போதெல்லாம் உலகப்போர்கள் சமூக வலைத்தளங்களில் இருந்தே ஆரம்பித்து விடுகின்றனர்.

ஒருவரைப் பிடித்தால், அவரைப் பற்றிய நல்லவைகளை மட்டுமே வலம் வரச் செய்வதும், அதுவே பிடிக்கவில்லை என்றால் அவர்களை நூதனமாக மக்களிடம் கெட்ட பெயர் வாங்க வைப்பதும் சமூக வலைத்தளத்தில் மிகவும் எளிமையான விஷயமாகிற்று.

ஒருவரின் மனநிம்மதியைக் கெடுக்க, ஒரே ஒரு சமூக பதிவு போதும்!

அதை பற்றி பேசி பேசி அந்த நபர் தவறே செய்யவில்லை என்றாலும் தற்கொலைக்கு தூண்டும் வெறிப்பிடித்த கருத்துகள் கொண்டது சக மக்களின் எண்ணங்கள்!

“விதுரா விதுரா…” வெகு நேரமாய் அழைத்தும் திரும்பாதவனை தொட்டு திருப்ப வேண்டியதாகப் போயிற்று மிதுனாவிற்கு.

“ஹான்? சொல்லு…”

“என்னாச்சு. எல்லாம் ஓகே தான? ஸ்ரீராம் அண்ணா முகமே சரி இல்ல. நீயும் ஒரு மாதிரி இருக்க?” அவர்களுக்குள் நிகழ்ந்த பிரச்சினைகளை மறந்து படபடத்தாள்.

“ஒன்னும் இல்லை மிது. காலைல இருந்து ஆபிஸ்ல இருக்கேன்ல டயர்ட் தான்” என்றிட, கீர்த்தனா அவனை நெருங்கி “ரூம்ல உனக்கு ட்ரெஸ் வச்சுருக்கேன் போய் போட்டுட்டு வா. உன் அண்ணன் ரிஸப்ஷன்க்கு பஞ்சத்துல அடிபட்டவன் மாதிரி நின்னுட்டு இருக்க…” எனக் கண்டித்தார்.

அதன்பிறகே அவனைக் குனிந்து பார்த்தான்.

சட்டையெல்லாம் கசங்கி முகமெல்லாம் வாடியிருந்ததை!

மறுநொடி முகத்தை சீராக்கிக் கொண்டவன், அங்கிருந்து நகர்ந்திட அவனைக் கவனித்துக் கொண்டிருந்த இதயா மற்றும் சத்யாவிற்கு உள்ளுக்குள் ஒரு அபாய மணி அடித்தது.

அதனை இருவருமே இலாவகமாக மறைத்துக்கொண்டனர்.

சாம்பல் நிற கோர்ட் சூட்டில் மின் விளக்குகளுக்கு போட்டியாக ஜொலித்துக் கொண்டிருந்தான் சத்யா.

அவனை ஓரக்கண்ணில் சைட் அடித்துக் கொண்டிருந்த மனையாளை மிச்சமின்றி ரசித்திருந்தான் அவன்.

“எதுக்கு எல்லார் முன்னாடியும் இப்படி பார்த்து வைக்கிறீங்க…?”

“ஐ ஆம் ஆன் மை ஹஸ்பண்ட் டியூட்டிடி பியூட்டி!” என்றவனின் கூற்றில் பெருவிரலை நிலத்தில் அழுத்தி வெட்கம் அடக்கியவள்,

“நீங்க ரொம்ப அராஜகம் பண்றீங்க ப்ரொஃபி” எனச் சிணுங்கிட, அந்த இனிய தருணங்களை விதுரன் தவறாமல் புகைப்படம் எடுத்துக் கொண்டான்.

இரவு உணவு உண்ணும்போதும் சரி அதன்பிறகும் சரி இருவருமே அவர்களது உலகிலேயே ஜோடியாய் பயணித்துக் கொண்டிருந்தனர்.

சட்டென நினைவு வர, “என் போன் உங்ககிட்ட இருக்கா பிரொபி?” எனக் கேட்டாள்.

“இல்லையே. என் போனே என்கிட்ட இல்ல. ஏன்டி?”

“ஒரு செல்பி எடுக்க!” கண் சிமிட்டிக் கூறியவள், உமாவிடம் “அம்மா என் போன் மட்டும் எடுத்துக்கொடுங்களேன்” என்று கேட்டதும் அவரும் அறைக்குச் சென்றார்.

அங்கு அகில் அவர்களது அலைபேசியை அடைகாத்து அமர்ந்திருக்க, உமா வந்தவர் “என்னப்பா சாப்பிடாம இங்க உக்காந்துருக்க? போ போய் சாப்பிடு” எனப் பணித்தார்.

“இல்லமா கொஞ்ச நேரம் ஆகட்டும்” என சமாளித்தவனிடம், “நான் வேணும்னா இங்க குடுத்து விடட்டுமா? அங்க வந்தாலும் உனக்கு தலைவலிக்கும்” என அக்கறையாய் கேட்டவரை கண்டு புன்னகைத்தவன் “நானே வரேன்மா” என்றபடி இருவரது அலைபேசியையும் எடுத்துக்கொள்ள முற்பட, அதே நேரம் உமாவும் இதயாவின் அலைபேசியை எடுத்தார்.

அவனோ திருதிருவென விழித்ததில், “அம்ரி போன் கேட்டா. நீ வா வேகமா” என்று விட்டு செல்ல, “அயோஓஓ போச்சு” என்று தலையில் கை வைத்துக்கொண்டான்.

உமா அலைபேசியை இதயாம்ரிதாவிடம் கொடுக்க, அதனை திகைத்துப் பார்த்த பத்மப்ரியா “அகில் நாயே… சொதப்பிட்டியே” என்று பொருமினாள்.

“ப்ரொஃபி இங்க பாருங்க…” என அவனை நெருங்கி நின்று இதயா புகைப்படம் எடுக்க விழைய, சத்யாவும் அவள் தோளுக்கு அருகில் குனிந்து புன்னகைத்தான்.

படபடவென அவளுக்கு நோட்டிபிகேஷன் வந்த வண்ணம் இருந்ததில் அதனை ஒதுக்கி விட முனைந்து அழுத்தி விட்டாள்.

அது நேராய் இன்ஸ்டாகிராமினுள் நுழைந்து, அவளும் விஷாலுமாக நெருக்கமாய் படுக்கையில் படுத்து புகைப்படம் எடுத்துக்கொள்ளும் காட்சியை அம்பலமாக்க கையை கீழே இறக்க மறந்து அதையே வெறித்திருந்தாள் இதயாம்ரிதா.

புதுக்காதல் மலரும்
மேகா

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 105

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
10
+1
103
+1
3
+1
4

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. விஷால் நீ உனக்கு நல்ல சாவே வர கூடாது டா