
மறுநாள் காலையில் சத்ய யுகாத்ரனும், இதயாம்ரிதாவும் அமைதியாக அலுவலகத்திற்கு கிளம்பினர்.
இதயாம்ரிதாவே காரை ஓட்டிக் கொண்டு செல்ல, சில நிமிடங்கள் கழிந்த பிறகே, அது அலுவலகம் செல்லும் பாதையல்ல என்று புரிந்தது சத்ய யுகாத்ரனுக்கு.
“எங்க போற?”
“ரோட்டு மேல தான்” எகத்தாளமாக வந்தது அவளது பதில்.
“எல்லாரும் காரை தலை மேலயா ஓட்டுவாங்க. ஆபிஸ்க்கு போகாம எங்க போறன்னு கேட்டேன்டி!” போலியாய் முறைத்தான் சத்ய யுகாத்ரன்.
உதட்டுக்குள் சிரிப்பை மறைத்தவள், “ஒரு ஃபைவ் மினிட்ஸ் வெய்ட் பண்ணுனா தெரிஞ்சுட போகுது. உங்களைக் கடத்திட்டு போய் கற்பழிக்கவா போறாங்க…” என சிலுப்பிக் கொண்டாள்.
“கற்பழிச்சாலும் நான் கத்த மாட்டேன்பா…” சாலையைப் பார்த்தபடியே அவளை சிவக்க வைத்தான் அவன்.
‘இவனை’ எனப் பற்களைக் கடித்து நாணம் மறைத்தவள், “ஷு! கற்பனையை கண்டபடி கொட்டக்கூடாது. கன்னத்துல போட்டுக்கோங்க” என்று பயபக்தியாய் கூற,
“ஓகே” என்றவன் வேகமாய் அவள் கன்னத்தில் ஒரு முத்தத்தைப் பதித்தான்.
“யோவ் ப்ரொஃபி! கார் ஓட்டிட்டு இருக்கேன்… நான் என்ன சொன்னா நீங்க என்ன செய்றீங்க” வெட்கம் ததும்ப சிணுங்கினாள்.
“நீ தான பொண்டாட்டி கன்னத்துல போட்டுக்க சொன்ன! அதை தான் செஞ்சேன்” என அப்பாவி போல உரைத்தவனின் குறும்பில் சிவப்பு ரேகைகள் அவள் கன்னத்தில்.
இதமான இம்சைகளை தாங்கியபடி காரை ஓரிடத்தில் நிறுத்தினாள் இதயாம்ரிதா.
அவள் வந்த இடத்தைப் புருவம் சுருக்கிப் பார்த்தவன்,
“இப்ப என்ன திடீர்னு கோவிலுக்கு வந்துருக்கோம்?” எனக் கேட்டதும், இதயாம்ரிதா “கோவிலுக்கு எதுக்கு வருவாங்க? சாமி கும்புட தான்” என்றாள் தோள்களைக் குலுக்கி.
“இவ்ளோ நாளும் இல்லாம இன்னைக்கு என்ன புதுசா?”
“அது… ஹான்… அம்மா ஏதோ பூஜை பண்ண போறாங்களாம். நம்மளையும் வர சொன்னாங்க” என வாய்க்கு வந்ததை சமாளித்தாள்.
“ஓ! அத்தை இந்த கோவிலுக்கு வருவாங்களா?” கேட்டவனை ஒரு மார்க்கமாகப் பார்த்தவள், “ம்ம் வருவாங்களே… எல்லா வெள்ளிக்கிழமையும் வருவாங்க” என்றாள் அர்த்தமாய்.
“ஆனா நான் பார்த்ததே இல்லையே” சத்யா குழம்ப, நமுட்டு நகை புரிந்தவள், “நீங்க என்ன இந்தக் கோவில் பூசாரியா? போற வர்ற எல்லாரையும் தெரிஞ்சு வச்சுருக்குறதுக்கு” என்றாள் கேலியாய்.
“ஏய்!?” கண்ணை சுருக்கி சத்யா முறைக்க,
“பின்ன என்ன ப்ரொஃபி… ஒரு நாள் நானும் பக்தி பரவசத்தோட கோவிலுக்கு கூட்டிட்டு வந்தா இவ்ளோ குவெஸ்டீன் கேக்குறீங்க. இன்னும் நீங்க பிரஃபஸர் ப்ரொஃபெஷனை மறக்கவே இல்லை!” என்று உறுத்து விழித்தாள்.
“சரி சரி வாங்க உள்ள…” அவள் இறங்கப்போக, அவனிடமோ தயக்கம் அலைமோதியது.
“இல்ல இதயா. நீ போ. நான் வரலை” என்று விட்டவனை ஆழ்ந்து பார்த்தவள், “ஏன்?” என்றாள் ஒற்றைப்புருவம் உயர்த்தி.
அவனிடம் பதில் இல்லை.
“கடவுள் நம்பிக்கை இல்லையோ?” மீண்டும் கேலி அவளிடம்.
“எனக்கு இப்ப சாமி கும்பிடுற மனநிலை இல்ல.”
“இதுக்கு என்ன மனநிலை வேணும்?” விடாமல் கேள்வி கேட்டதில் எரிச்சலுற்றவன், “நீ போறதுன்னா போ இதயா. எதுக்கு தேவையில்லாம டென்சன் பண்ணிட்டு இருக்க. கெட் லாஸ்ட்” என்று கத்தி விட்டான்.
அது அவனது தாய் மாலதி வாரந்தவறாமல் வரும் கோவில். அவர்களது பழைய வீடும் அதே தெருவில் தான் இருந்தது. சத்யாவும் அவ்வப்பொழுது வீட்டுப் பெண்களுடன் வாரா வாரம் படையெடுத்து அவர்களுடன் சுவாரஸ்யமாய் கலந்துரையாடி குறும்பு செய்து அவர்களை சிரிக்க வைத்த இனிய தருணங்கள் அது.
சில நேரங்களில் தியாகுவும் சீனிவாசனும் கூட இணைந்து கொள்வார்கள்.
எப்போதும் வேலையென்று அலையும் தந்தையுடன் ஆற அமர பொழுதை கழிக்கும் நிமிடங்கள் எல்லாம் இந்தக் கோவிலுக்கு படையெடுக்கும் நேரங்கள் மட்டும் தான்!
இந்த வீட்டை விட்டு ஊருக்கு வெளியில் இடம்பெயர்ந்தாலும் கூட மாலதிக்கு இந்தக் கோவிலுக்கு வந்த பிறகே மனம் சற்று அமைதியடையும். கீர்த்தனாவும் அன்று வீட்டு வேலைகளை வேகமாக முடித்து விட்டு மாலதியுடன் வந்து விடுவார்.
தூரம் அதிகமாதலால் நீலாவிற்கு இப்போதெல்லாம் அலைய முடிவதில்லை.
ஆனால் இன்று அதிசயமாய் தூரமாக இருந்தாலும் பரவாயில்லை என்று மாலதி கீர்த்தனாவுடன் அவரும் வந்திருந்தார்.
மூன்று பெண்மணிகளின் முகமும் சிரிப்பைத் தொலைத்து பல வருடங்களாகி இருந்தது.
“அக்கா, நான் ஒன்னு கேட்கட்டா?” தூணில் சாய்ந்து அமர்ந்து எங்கோ வெறித்துக் கொண்டிருந்த மாலதியிடம் பல நாள் தயக்கத்தை உடைத்தெறிந்து பேசினார் கீர்த்தனா.
நலுங்கி வெளிறிப் போன காட்டன் புடவையும் நெற்றியில் கீற்றாய் திருநீறும் பூசி இருந்த மாலதியின் விழிகளில் கனிவு வழிந்தது.
“என்ன கீர்த்தி?”
“நெதமும் நீங்க மனசுக்குள்ள புழுங்குறதை பார்க்க முடியலக்கா. என் புருசன் சத்யாவை வெளில அனுப்பியிருக்க கூடாது. என்ன இருந்தாலும் நீங்க தலையிட்டுருக்கணும்கா…” வருடக்கணக்காக மனதினுள் புழுங்கிக்கொண்டிருந்த கேள்வியைக் கேட்டு விட்டார்.
மெலிதாய் புன்னகைத்த மாலதி, “தியாகு அப்படி அவசரப்பட்டு எதையும் செய்ற ஆள் இல்ல கீர்த்தி” என்றவரிடம், “இப்படி சொல்லி மனச தேத்திக்காதீங்ககா. எனக்கு தான குற்ற உணர்ச்சியா இருக்கு…” என்று வருந்தினார்.
நீலாவும், “சத்யா யாரையோ கல்யாணம் கட்டிருக்குறதாவும் அந்தப் பொண்ணை விவாகரத்து பண்ண போறதாவும் அன்னைக்கு செய்தி பாத்தேன் அண்ணி. அவனுக்கு என்ன பிரச்சினைன்னு புரியல. ஒரு தடவ நம்மள வந்து பாத்துருக்கலாம்ல. எங்களை கூட பாக்க வேணாம். உங்களை வந்து பாத்துருக்கலாம்ல…” என்று வேதனையுற்றார்.
அதற்கும் மாலதியிடம் கீற்று புன்னகையே!
“அவன் வராம இருக்கான்னா அதுக்கும் ஒரு காரணம் இருக்கும் நீலா. என்னவோ, இந்தக் கோவிலுக்கு வர்றப்ப என் பையன் என் கூடவே நிழலா வர்ற மாதிரி ஒரு உணர்வு. அதான் நானும் தவறாம வர்றேன். வீட்டுக்கு வர்ற சங்கடப்பட்டுட்டு என்னை இங்க வந்தாவது ஒரு தடவை பார்த்துப்பான்னு ஒரு சின்ன நம்பிக்கை தான்” சொல்லும்போதே மாலதியின் கண்ணில் நீர் துளிர்த்தது.
அவர்களை நோக்கி வேக நடையுடன் வந்தான் விதுரன்.
இதயாம்ரிதாவின் உத்தரவின் பேரில் வேறு வழியற்று அங்கு வந்தவனை கீர்த்தனா வியப்பாகப் பார்த்தார்.
“என்ன விதுரா… அதிசயமா இன்னைக்கு கோவிலுக்கு வந்துருக்க?” அதே வியப்புடன் மாலதியும் நீலாவும் அவனை ஏறிட்டனர்.
மூவரையும் கண்டு புன்னகைத்தவன், மாலதியின் அருகியேலேயே படியில் அமர்ந்து கொள்ள, அவர் அவனுக்கு திருநீரை வைத்து விட்டார்.
கூடவே பிரசாதத்தையும் அவனுக்கு ஊட்டி விட்டவர், “என்னப்பா இன்னைக்கு ஆபிஸ் லீவ் எதுவும் போட்டுட்டியா? உடம்பு நல்லாத்தானே இருக்கு” என்று கேட்டுக்கொண்டார்.
“அதெல்லாம் நல்லாவே இருக்கேன் பெரியம்மா. சும்மா தான் வந்தேன்…” என சமாளித்து விட்டு, “என்ன அத்தை எப்பவும் கால் வலியா இருக்குன்னு பக்கத்துல இருக்குற கோவிலுக்கு போவீங்களே” என நீலாவிடம் வினவினான்.
“என்னவோ மனசே சரி இல்ல விதுரா. நேத்துல இருந்து ஸ்வேதா போன் ஸ்விட்ச் ஆப்லயே இருக்கு. உனக்கு போன் பண்ணுனாளா” எனக் கேட்டார் ஐயமாக.
விதுரனுக்கு புருவம் யோசனையில் சுருங்கியது.
“இல்லையே அத்தை. அவளை நான் நேர்ல போய் பாக்குறேன்” என்றான்.
மாலதியும், “அவளுக்கு சீக்கிரமா ஒரு கல்யாணத்தைப் பண்ணி வைக்கலாம் நீலா. தியாகுட்ட சொல்லி அவ ஜாதகத்தை தரகர்கிட்ட குடுக்க சொல்லலாம்…” என்றிட,
நீலாவோ “உங்க மருமககிட்ட இதை பத்தி பேசியிருக்க மாட்டேனா அண்ணி. அவ சத்யா வீட்டுக்குத் திரும்பி வந்தா தான் என் கல்யாணம்னு பிடிவாதமா இருக்கா. இதுல யார் பிடிவாதம் முதல்ல தளரப் போகுதோ!” எனப் பெருமூச்சு விட்டதில் அங்கு பலத்த அமைதி.
—-
“அப்போ நீங்க உள்ள வரல?” மீண்டுமொரு முறை கேட்ட இதயாம்ரிதாவை வெறியாய் முறைத்தான் சத்யா.
“சரி ஓகே… நான் மட்டும் போய் என் அத்தையைப் பார்த்துட்டு வரேன்” என்று விட்டு இறங்கியவள் அவன் வேகமாய் காரை திறக்கும் நேரம் காரை லாக் செய்து விட்டாள்.
“இதயா வேணாம். கதவைத் திற” என்று கார் கண்ணாடி ஜன்னலை உடைக்காத குறையாய் தட்டினான் சத்ய யுகாத்ரன்.
ஜன்னலின் வழியே விரல்களைக் குவித்து முத்தமிட்டவள், “சீக்கிரமா வந்துடுறேன். குட் பாயா உக்காந்துருங்க…” என்று அழகு காட்டிவிட்டு அவனது மறுப்புகளை கணக்கில் எடுக்காமல் விறுவிறுவென கோவிலுக்குச் சென்றாள்.
குளிர்கண்ணாடியைக் கழற்றி அவள் அணிந்திருந்த ஷர்ட்டின் நடுவில் மாட்டிக்கொண்டவள், ஜீன்ஸ் பாக்கெட்டினுள் கையை நுழைத்தபடி விதுரனைத் தேடினாள்.
தூரத்திலேயே அவளைப் பார்த்து விட்ட விதுரன், மற்றவர்கள் அறியாமல் கையை காட்ட, அவனை நோக்கி நடந்து வந்த இதயாம்ரிதா மற்ற மூன்று பெண்களின் முன்பும் நின்றாள்.
“ஹெலோ லேடிஸ் அண்ட் ஜென்டில்மேன்…” என்று ஏற்ற இறக்கத்துடன் நக்கலாய் கூறினாள்.
‘ம்ம்க்கும் கிழிஞ்சுது…’ விதுரனின் மைண்ட்வாய்ஸ் பதறியது.
“நீ யாரும்மா?” கீர்த்தனா குழப்பமாய் வினவ, சத்யாவையும் அவளையும் இணைந்த புகைப்படத்தைச் செய்தியில் பார்த்திருந்த மாலதி மற்றும் நீலாவிற்கு அவள் யாரெனப் புரிந்தது.
“நான் இதயாம்ரிதா. மிஸஸ் சத்ய யுகாத்ரன்” கண் சிமிட்டி நிமிர்வாய் தன்னை அறிமுகம் செய்து கொண்டவளை வாயடைத்துப் பார்த்தது பெண்கள் மட்டுமல்ல விதுரனும் தான்.
“இதுல யார் மேன் என் மாமியார்?” விதுரனிடம் வினவியதில் பேய் முழி முழித்தவன், மாலதியை காட்டினான்.
“இவங்க ஆபிஸ்ல தான் நான் ஒர்க் பண்றேன் பெரியம்மா…” மாலதியின் பார்வையில் அவன் தானாய் உளறினான்.
“அது என் ஆபிஸ் மட்டுமா விதுரா. உன் அண்ணனோட ஆபிஸும் தான?” என்றவளைக் கண்டு பற்களைக் கடித்தவன், “என்னை எதுக்கு கோர்த்து விடுறீங்க மேம்…” என்றான்.
கீர்த்தனாவோ திகைத்து, “விதுரா இந்தப் பொண்ணு என்ன சொல்றா. அப்போ நீ தினமும் சத்யாவைப் பார்த்துட்டு தான் இருக்கியா?” எனக் கேட்டதில், எச்சிலை விழுங்கியவன் “அது அம்மா… வந்து…” எனத் திணறினான்.
“பார்க்க மட்டுமா செய்றான். இவன் பாசத்தைப் பொழியிறதும் அதுக்கு என் புருஷன் அன்பை அன்லிமிட்டடா ஊத்துறதும் ஒரே விக்ரமன் படம் தான் ஓடும் ஆபிஸ்ல…” எனக் கிண்டல் செய்திட, “மேம்ம்ம்ம்ம்” என அடிக்குரலில் கெஞ்சினான் விதுரன்.
“அட நீ வேற ஏன்டா காதுக்குள்ள வந்து மே மே ன்னு கத்திட்டு இருக்க…” எனக் காதை குடைந்து கொண்டவள்,
“அதாவது அத்தை… வர்ற ஞாயிற்றுக் கிழமை, அதாவது நாளை மறுநாள் எனக்கும் என் ஆசை கணவருக்கும் ரிசப்ஷன் வச்சுருக்கோம். என் சைட் ஆளுங்களை இன்வைட் பண்ணிட்டேன். அவர் சைட் ரிலேட்டிவ்ஸ இன்வைட் பண்ணணும்ல. மீடியலாம் வருவாங்க. நீங்க கண்டிப்பா வரணும். நீங்க மட்டும்!” என்று அழுத்திக் கூறியதில் மாலதியிடம் திகைப்பு பரவியது.
“மேம்…” விதுரனும் அதே அதிர்வுடன் நிற்க,
“என்னடா, இவங்க தான சத்யாவோட அம்மா, அப்போ இவங்களை தான இன்வைட் பண்ண முடியும்? என் புருஷனை வீட்டை விட்டு துரத்துனவங்களை எல்லாம் கூப்புடுற அளவு எனக்குப் பெரிய மனசு இல்லையே விதுரா” எனப் பாவம் போல கூறியவள்,
“அப்போ சண்டே பார்க்கலாம் அத்தை… ஸீ யூ” என்று விட்டு குளிர்கண்ணாடியை அணிந்து கொண்டே காரை நோக்கிச் சென்றவளை நால்வரும் கண்ணிமைக்காமல் பார்த்தனர்.
அலுவலகம் சென்று சேரும் வரை அவள் முகத்தைத் திரும்பிப் பார்க்கவே இல்லை சத்ய யுகாத்ரன்.
அவளும் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை.
சரியாக அலுவலக பார்க்கிங்கில் காரை நிறுத்தியதும் அவன் இறங்காமலிருந்ததில் அவளும் அப்படியே அமர்ந்திருந்தாள்.
லேசாய் கண்ணைத் திருப்பி ஆடவனைப் பார்க்க அவன் முகமோ இறுகிப்போயிருந்தது.
‘ஆத்தாடி!’ என முணுமுணுத்துக் கொண்டவள், “காரை விட்டு இறங்குறது” என்றாள் மெல்லமாக.
“ஏன் அவங்ககிட்ட அப்படி பேசுன?” அதிகபட்ச வேதனை அவன் குரலில்.
“வேற எப்படி பேசுறது?” கையைக் கட்டியபடி வினவினாள்.
“என் அம்மா சித்தப்பா பேச்சை மீறி வரமாட்டாங்க. அவங்க தனியா வர்றதுல எனக்கு விருப்பமும் இல்ல” என்றவனின் கூற்றில் நெற்றிக்கண்ணைத் திறந்தாள்.
“இன்னும் சித்தப்பாவா? அவர் உங்களை உங்க அப்பாவோட கடைசி காரியத்தை கூட செய்ய விடாமல், உங்களுக்கு பக்கபலமா இருக்க வேண்டிய நேரத்துல, ஒரு வதந்தியை நம்பி வீட்டை விட்டு துரத்தி இருக்காரு. உங்களுக்கு அவங்க மேல கோபம் இல்லையா?” எனக் கேட்டாள் ஆதங்கமாக.
“இல்ல” உடனடியாய் உரைத்தவனை தீயாய் முறைத்து வைத்தாள் இதயாம்ரிதா.
“விதுரனை விட என் மேல அதிக பாசம் தியாகு சித்தப்பாவுக்கு. அவரே அப்படி பண்ணிருக்காருன்னா ஏதாவது காரணம் இருக்கும்…”
“உங்களுக்கு என்னைத் தவிர யார் தப்பு செஞ்சாலும் அவங்களுக்கு காரணம் இருக்கும்!” சுள்ளென உரைத்து விட்டு இறங்கப்போனவளைத் தடுத்து நிறுத்தினான்.
“அதில்லடி…” என்றவனின் கையை உதறி விட்டு கோபமாய் அலுவலகத்தினுள் சென்றாள்.
அவள் அறைக்குள் நுழையும்போதே வேகமாய் பின்னோடு வந்த சத்ய யுகாத்ரன் அவளை இறுக்கி அணைத்திருக்க, “விடுங்க சத்யா” எனத் துள்ளினாள்.
“ப்ளீஸ்டி நான் சொல்றதை கேளேன். என் வீட்ல யாரும் யாரையும் பிரிச்சுப் பார்த்தது இல்லைடி. நீ பேசிட்டு வந்தது எல்லாரையும் எந்த அளவு ஹர்ட் பண்ணும் தெரியுமா? கஷ்டமா இருக்குடி…” எனும்போதே ஒரு துளி கண்ணீர் அவளது தோள்களில் பரவியது.
அதில் பதறி திரும்பியவள், அவன் கன்னம் பற்றி “அதுக்காக பேசாமயே இருக்க முடியுமா சத்யா? நீங்களாவது உண்மையை சொல்லி இருக்கலாம் தான… இப்போ கோபப்பட்டாவது அவங்க உங்கிட்ட பேசுவாங்க தான. அட்லீஸ்ட், நீங்க உன் அம்மாட்டையாவது பேச வேணாமா?
சரிப்பா… உங்க சித்தப்பாவுக்கு எந்த காரணம் வேணாலும் இருந்துட்டுப் போகட்டும். உங்க அம்மாவும் உங்களுக்கு நல்லது பண்ற ஏதோ ஒரு காரணத்துக்காக பேசாம இருந்தாங்கன்னே வச்சுக்கலாம். நீங்களும் ஏன் ஒதுங்கிப் போகணும்?
உங்களுக்கு உங்க குடும்பம் வேணாமா?” என்றாள் மென்மையாக.
“வேணும் இதயா! ஆனா அப்பா இல்லாத வீட்டுக்குப் போகவே வலிக்குது…” என்றவனின் குரல் உடைந்தே போனது.
அதே வலி அவளுக்குள்ளும். அவனது இழப்பிற்கெல்லாம் முழுமுதற்காரணம் அவளல்லவா!
“அதே வீட்ல தான உங்க அம்மாவும் இருக்காங்க. நீங்க சொல்ற ‘சோ கால்டு’ காரணங்கள் தான் அவங்களை விட்டுத் தள்ளி வைக்குதுன்னா, அப்போ அவங்களுக்கு உங்க மேல நம்பிக்கை இருந்தும் ஒதுங்குறீங்கன்னு தான அர்த்தம். உங்க அப்பாவும் இல்லாம, நீங்களும் இல்லாம உங்க அம்மா சஃபர் ஆக மாட்டாங்களா? அவங்களை பார்த்துக்க யார் வேணாலும் இருக்கட்டும், அவங்களுக்காக நீங்களும் உங்களுக்காக அவங்களும் நிக்க வேணாமா சத்யா?” என்றவளின் கூரிய வினாக்கள் ஆடவனின் காயம் கொண்ட நெஞ்சை அசைத்தது.
காயத்தின் மீது ஏற்படும் கீறல்கள் அதீத வலி கொடுக்கும் தான். அதற்காக பொத்தி பொத்தி பாதுகாத்து வைத்துக் கொண்டால், தழும்பாகி விடுமே!
அதனாலேயே இரு பக்கத்தினருக்கும் கீறி விட்டாள்.
விழிகளுக்குள் கண்ணீரை அடக்கிக்கொண்டு நின்றவனின் நிலை அவளுள் பெரும் துயரை ஏற்படுத்த, எக்கி அவனது இமைகளுக்கு முத்தம் பதித்தாள்.
“ரிசப்ஷன்கு சேர்ந்தே போய் இன்வைட் பண்ணலாமா?” என்றவளின் கேள்வியில், “அப்போ நிஜமாவே ரிஸப்ஷனா?” என்றான் சின்ன வியப்புடன்.
“நிஜம்மா தான்” கண் சிமிட்டிப் புன்னகைத்தவள் சட்டென முகம் மாறி, “அது சரி நீங்க தான் கோவிலுக்குள்ளயே வரலையே. அப்பறம் எப்படி அங்க பேசுனதுக்கு ரியாக்ட் பண்றீங்க?” என புருவம் சுருக்கிக் கேட்க,
“ரொம்ப லேட் பிக்கப்டி!” எனக் கிண்டல் செய்தவன், அவளது வீடியோவை எடுத்துக் காட்டினான்.
“டேய்… யாருடா இதை உனக்கு வீடியோ எடுத்து குடுத்தது? உன் தம்பி பார்த்த வேலையா. எட்டப்பா!” என்று கடிந்தவளிடம்,
“ஏய் அவனும் உன் பக்கத்துல தான நிக்கிறான் அப்பறம் எப்படி வீடியோ எடுக்க முடியும்?” எனக் கேட்டதில், “அதான வேற எப்படி எடுத்தீங்க?” எனக் கேட்டாள் இடுப்பில் கை வைத்து.
“உன் தங்கச்சி தான் எடுத்து குடுத்தா…” சிரிப்பை அடக்கிக்கொண்டு கூறியவனை புரியாது பார்த்தாள்.
சில மணித்துளிகளுக்கு முன்!
“பூமி உன் பர்த்டேக்கு ட்ரீட் குடுப்பன்னு பார்த்தா ஏண்டி கோவில் கோவிலா சுத்த வைக்கிற?” ஸ்கூட்டியை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு புலம்பியபடி இறங்கினாள் மிதுனா.
“நான் என்னடி செய்றது. என் வீட்ல தான் அடுத்த வருஷம் புருஷன் கூட கோவிலுக்கு போகணும்னு என் பேர்ல பூஜை எல்லாம் பண்றாங்களாம்!” என சலித்தபடி உள்ளே செல்ல, காரில் இருந்தபடி மிதுனாவைப் பார்த்து விட்ட சத்ய யுகாத்ரன் அவளுக்கு அழைத்தான்.
சத்யாவின் எண்ணைப் பார்த்ததும் மிதுனாவின் முகத்தில் சின்னதொரு தயக்கம்.
அவனிடம் நேரடியாய் பேசி வெகு நாள்கள் ஆகிறது.
“ஹலோ!” மிதுனா அழைப்பை ஏற்றதும் கடகடவென உத்தரவிடத் தொடங்கினான் சத்யா.
“ஹான்? அக்கா கோவிலுக்குள்ளயா இருக்கா?” என விழித்தவள், “ஆனா அவளுக்கு தெரிஞ்சா என்னைக் கொன்னுடுவா சார்…” என்றாள் வேகமாக.
“சரி ஓகே… அப்போ விதுரனுக்கு வேற நல்ல பொண்ணா பாத்துக்குறேன்” என அழைப்பைத் துண்டிக்கப் போக, மற்றைய கோபமெல்லாம் மறந்து “சார் சார்” எனக் கத்தினாள்.
“ம்ம் லைன்ல தான் இருக்கேன்” அமர்த்தலாய் உரைத்தவனிடம், சட்டென ஈகோ வெளிப்பட, “நீங்க யாருக்கு வேணாலும் நல்ல பொண்ணா பாருங்க எனக்கு என்ன வந்துச்சு” என முறுக்கியவள்,
“வீடியோ எடுக்குறேன். ஆனா, உங்களுக்காக தான்…” என்று தெளிவு படுத்தி விட்டு வைத்தவள், அவன் கேட்டதற்கிணங்க சற்றே தள்ளி நின்று வீடியோ எடுத்துக் கொடுத்தாள்.
அன்று கூட்டமும் குறைவாக இருந்ததால், அவள் பேசியதும் நன்றாகவே ரெக்கார்ட் ஆனது.
அதனைக் கேட்ட இதயாம்ரிதா, “அட எட்டப்பி…” என வாயில் கைவைத்துக் கொண்டதில் அவனிடம் சிறு கீற்றாய் மென்னகை.
———
மனையாளிடம் இருந்து விஷயத்தை அறிந்து கொண்ட தியாகுவிற்கு முகமே செத்து விட்டது.
“சரி அப்போ அண்ணியை போக சொல்லலாம்…” என்று முடித்துக்கொள்ள,
“என்னங்க நீங்க… அந்தப் பொண்ணு பேசுனதைக் கேட்டு மனசே நொந்து போச்சு. விதுரன் சொன்னான்… சத்யா மேல எந்தத் தப்பும் இல்லையாம். நம்ம புள்ளையை பந்தாடிருக்காங்கனு நினைக்குறப்ப நெஞ்சு கொதிக்குது. நம்ம அவன்கூட இல்லாம இப்படி துரத்தி விட்டு அநியாயம் செஞ்சுட்டோமேன்ற குற்ற உணர்ச்சி உங்களுக்கு கொஞ்சம் கூட இல்லையா?” என சரமாரியாக கணவரிடம் பொங்கியதில் அவர் கல்லைப்போல நின்றார்.
அந்நேரம், “வீட்ல யாரும் இல்லையா?” என்ற பெண்குரல் கேட்டதில், அனைவரும் வெளியில் வந்து பார்க்க, அங்கு சத்ய யுகாத்ரனின் நடுங்கிய கையைப் பிடித்தபடி நின்றிருந்தாள் இதயாம்ரிதா.
மகனைப் பல வருடம் கழித்து நேருக்கு நேராய் கண்ட மாலதியின் கண்களில் அதிர்வும் நீரும் ஒருங்கே தோன்றியது.
புதுக்காதல் மலரும்
மேகா
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
23
+1
143
+1
4
+1
3
⬅ Prev Episode
32 – புதுக்காதல் புனைந்திடவா (9 to 9 husband)
Next Episode ➡
34 – புதுக்காதல் புனைந்திடவா (9 to 9 husband)
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


May be….idhaya appa edavathu ingayum panirupanga nu nenaikre
Super super
இதயா சபாஷ்
Super stry ext epoh sis producing quick aah podunge