நிதர்ஷனா படிப்பை முடித்து விட்டு, வேலைக்காக அலைந்து கொண்டிருந்தாள். ரெகமெண்டேஷன், ஜாய்னிங் பீஸ் என ஒவ்வொரு கம்பெனியும் இவளை விரட்டி அடிக்காத குறை தான்.
பைலுடன் தெரு தெருவாக அலைந்தது தான் மிச்சம்.
“இந்த மார்க், மட்டையெல்லாம் வேணாம். காசு தான் வேணும்னு சொல்லிருந்தா, கண்ணு முழிச்சு படிச்ச நேரத்துக்கு ஓவர் டைம்ல மாவு ஆட்டி காசை சேர்த்துருப்பேன்” எனப் புலம்பியபடி தனது வீட்டை நோக்கிச் செல்ல, ஒரு ஜீப் அவளை வழிமறித்தது.
‘அய்யயோ இவனா?’ என எண்ணிக்கொண்டாலும், “ண்ணாவ்… எங்கண்ணாவ் ஜாலியா கெளம்பிட்ட” எனப் பல்லிளித்து கேட்டாள் நிதர்ஷனா.
அவளால் அன்புடன் அண்ணனென அழைக்கப்பட்ட காசிமேட்டின் பிரபல ரவுடியான காசி தனது பெரிய மீசையை முறுக்கினான்.
“இன்னாமா… வட்டிக்காசையும் காணாம். உன் அண்ணனையும் காணாம்… நா குடுத்த ஆறு மாசம் முடிஞ்சு போச்சே எப்ப காச கைமேல தருவ?” கரகரத்த குரலில் காசி வினவ,
“இன்னும் ஒரே வாரத்துல வேலை கெடச்சுடும்ண்ணா. ஒரே மாசத்துல செட்டில் பண்ணிடுறேன்” என அசட்டுச் சிரிப்புடன் கூறினாள்.
“ம்ம்… ஒரு வாரத்துல உன் அப்பாயின்மென்ட் ஆர்டரோட என்ன வந்து பாரு. மொத்த சம்பளமும் என் அக்கவுண்டுக்கு தான் வரணும்” எனக் கட்டளையிட்டுச் சென்றான். கூடவே அவனது பார்வை அவளை மேலிருந்து கீழ் வரை ஒரு முறை அலசியது.
“ரொம்ப எலும்பா ஈக்கியே. நல்லது பொல்லத சாப்பிடு நிதா…” என ஒரு மார்க்கமாகச் சிரித்தவனைக் கண்டு அவளும் போலிப் புன்னகை சிந்தி,
“அதுக்கென்ன எலும்பு சூப்பா வச்சு குடிக்கிறேன்ண்ணா” என ‘அண்ணா’ என்பதை அழுத்திக் கூற, அவன் அவ்வார்த்தையைக் கண்டுகொண்டது போலவே தெரியவில்லை.
“நா படிச்ச பிசிஏக்கு லட்சக்கணக்குல காசு வரும்னு நம்பிட்டு இருக்கானோ… என்ன எழவோ!” எனத் தலையில் அடித்துக்கொண்டாள்.
காசியிடம் மட்டுமா கடன் வாங்கி இருக்கிறான் நிவேதன். தொழில் தொடங்க இன்னும் சிலரிடம் வட்டிக்கு வாங்கி வைத்திருக்கிறான். அவர்களும் தினமும் வீட்டு வாசலில் வந்து நின்றாலும், காசி தான் அதிக பட்ச பிரச்சினை. இறுதி தேர்வுக்காகவும், இருக்கும் நாள்களைக் கடத்தவும் அவள் வேறு தனியாக கடன் வாங்கி விட்டாள். அதுவும் காசியிடமே. வேலை கிடைத்து விடும் என்ற நம்பிக்கை நாள் ஆக ஆக பொய்த்துப் போக, “நமக்கு அவ்ளோ டெலண்ட்டு இல்ல போல” எனத் தனக்கே தானே பேசிக்கொள்வாள்.
“பேசாம நானும் ஓடிப்போயிடவா கதிரு” எனக் கேட்ட தோழியைப் பரிதாபமாகப் பார்த்தவன், “எங்க ஓடுவ. அந்தக் காசி எங்க போனாலும் கண்டுபிடிச்சுடுவான்.” என்றான்.
“அப்டின்னா என் அண்ணனை கண்டுபிடிச்சு இருக்கணுமே. அவன் சும்மா உதாரு கேசு கதிரு…” என்றாலும் விஷப்பாம்பு என்றும் அறிந்திருந்தாள்.
“உன்னாண்ட டையம் டிராவல் மிஷின் ஈக்குது?” எனக் கேள்வியாய் கேட்டவளை முறைத்தவன், “டயம் டிராவல் பண்ணி போனாலும் வட்டி தான் அதிகமாகிருக்கும்” என்றதில் உண்மை உணர்ந்து,
“ச்சு… இன்னா தாண்டா செய்றது? அந்தக் காசி நாதாரி என்னைக் கண்றாவியா பாக்குறான். ஏதோ பாக்க ஹேண்ட்ஸம்மா, சிங்கிளா இருந்தா கூட காசு இல்ல கண்ணாலம் கட்டிட்டு கடைசி வர சோறு போடுன்னு சொல்லிடலாம். அந்த நாப்பது வயசான கழிசடக்கு ஏற்கனவே ரெண்டு பொண்டாட்டி நாலு வப்பாட்டி. என்னை அஞ்சாவது வப்பாட்டியா வர்றியான்னு சூசகமா கேக்குது பரதேசி” எனப் புலம்பினாள்.
கதிரவன் தான், “அவனுக்கு குடுக்குற காச வெளில ஏற்பாடு செஞ்சு தரட்டுமா?” எனத் தோழியிடம் ரகசியமாகக் கேட்க,
“யப்பா நீயும் எவனாண்டயாவது கடன வாங்கி சிக்காத முடிஞ்சவரை வேலைக்கு ட்ரை பண்றேன்” என்றாள்.
“அடுத்த வாட்டி ஜாய்னிங் பீஸ் கேட்டா என்கிட்ட சொல்லு. அதையாச்சு ரெடி பண்ணி தரேன்” என்ற கதிரவனிடம் சரியென தலையசைத்தாள்.
“ஓடிப்போய் இத்தனை மாசம் ஆச்சு. ஒரு போனாச்சு அடிச்சானா அந்த எருமமாடு. வரட்டும். இங்க தான வரணும்” தமையனை எண்ணி நிதர்ஷனா பொரிந்திட, கதிரவனுக்கோ பயம் ஆர்ப்பரித்தது. முன்னொரு தடவை தான் சொன்னதால் ஓடினான், இப்போதோ தனக்கே சொல்லாமல் சென்றிருக்கிறான்… என்ற கவலை இருந்தாலும் அதை வெளிப்படுத்தும் வழி தெரியாது திணறினான்.
வாரம் மாதமாகி நகர்ந்தும் வேலை கிடைத்தபாடில்லை. காசியின் தொந்தரவு அதிகரித்தது.
“காசை குடுக்க முடியாம தான், உன் அண்ணன் உன்னை என்னாண்ட வுட்டுட்டு ஓடிப்போனானோ என்னவோ” காசி பெரிய காமெடி கூறியது போல சிரிக்க, அவளுக்கு வரும் கோபத்திற்கு அவனை பொளக்கவே தோன்றும்.
இருந்தும் தன்னை அடக்கிக்கொள்வாள். அவனை எதிர்த்தால், இந்த தெருவிலேயே இல்லாதவாறு செய்து விடுவான் காசி. செல்வாக்கு உடையவன்.
இதனால் நேர்முகத் தேர்விற்கு சென்று விட்டு கதிரவன் மூலம் வீட்டை வெளியில் பூட்ட சொல்லி விட்டு உள்ளே இருந்து கொள்வாள். முயன்றளவு காசியிடம் சிக்காமல் அவன் ஏரியாவில் இல்லாத நேரமாகப் பார்த்து வீட்டினுள் ஐக்கியமாகி விடுவாள்.
இதையே எத்தனை நாளுக்கு கடைபிடிக்க இயலும்.
ஒருமுறை அவள் சிக்கும் நாளும் வந்தது.
“யம்மா, இந்த வீட்ல இருந்த பொண்ணைப் பார்த்தீங்களா?” சாயம் உதிர்ந்து போன ஒரு படுக்கையறை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாம் தளத்தில் நின்று விசாரித்துக் கொண்டிருந்தனர் இரு ஆடவர்கள்.
எதிர்வீட்டு மீனாட்சியம்மாவோ தண்ணீர் குடத்தை இடுப்பில் ஏந்தியபடி, “நான் எப்ப பார்த்தாலும் வீடு பூட்டி தான் இருக்கு தம்பி. அவளும் கடன் வாங்கிட்டாளா?” எனக் கேட்டார் சலித்தபடி.
“பெரிய இடத்துல கை வச்சுருக்கா அந்தப் பொண்ணு. காசிமேடு காசிக்கிட்டயே லட்ச ரூபாக்கு மேல வாங்கிட்டு வட்டி கட்டாம ஆறு மாசமா டபாய்ச்சுட்டு இருக்கா. அவளைப் பார்த்தா ஒடனே எனக்கு போன் போடும்மா” என்று ஒரு துண்டுச் சீட்டில் அலைபேசி எண்ணைக் குறித்துக் கொடுத்தான் ஒருவன்.
காசியிடம் வம்பு வளர்த்து இருக்கிறாளா என்ற மிரட்சி மீனாட்சியம்மாளின் கண்ணில் பிரதிபலிக்க, அந்த சீட்டைப் பயபக்தியுடன் வாங்கிக் கொண்டார்.
மீண்டும் அடுத்த தெருவில் ஜீப்புடன் நின்று கொண்டிருந்த காசியிடம் சென்றனர்.
“ண்ணா! இன்னைக்கும் அந்த பொண்ணு வீடு பூட்டி இருக்குண்ணா” என்றதும் காசியின் மூக்கு விடைத்தது.
“அவளுக்கு என்னப் பத்தி தெரியலடா” என்றபடி காசியே அவள் வீட்டுப் பக்கம் செல்ல, குடியிருப்பின் பைப்பின் வழியே முக்கி முக்கி ஏறிக் கொண்டிருந்தாள் நிதர்ஷனா.
சிவப்பு நிற குர்தியை ஜீன்சினுள் டக் – இன் செய்திருந்தவள், முதல் மாடி வரையிலும் பைப்பின் வழியே ஏறி விட்டுப் பின் முடியாமல் மீண்டும் மடமடவென கீழே இறங்கினாள்.
அவளை வீட்டிற்கு அனுப்பி விட்டு தானும் வீட்டிற்குள் செல்ல வேண்டி அவளையே பரிதாபத்துடன் பார்த்தபடி நின்றிருந்தான் கதிரவன்.
“நிதா… வேகமா ஏறிப்போ. காசி சந்தேகப்பட்டு இந்தப் பக்கம் வந்தா கூண்டோட தூக்கிடுவான்” எனப் பயந்தபடி கூற, “நான் என்ன சர்க்கஸாடா காட்டுறேன். ஏற முடியல. சப்பா… சூரியன் வேற சுட்டெரிக்கிறான்” என்று நெற்றியில் வழிந்த வியர்வையை ஒற்றை விரலால் சுண்டி விட்டாள்.
“நானும் உன்னை எரிக்கிறேன் இரு” பின்னால் இருந்து காசியின் கர்ஜனைக் குரல் கேட்டதில் இருவரும் மருண்டு விழித்தனர்.
“ஒனக்கு யம்மா தகிரியம் இருந்தா எனக்கே பூச்சாண்டி காட்டுவ. எங்கடி என் வட்டிக்காசு” என்று ஜீப்பில் இருந்து குதித்தான் நாற்பது வயதுக்காரன்.
“இதோ பாருண்ணா. உன் வட்டிக்காசு ஏற்பாடு பண்ண தான் பேங்க்குக்கு போனேன். சனிக்கிழமை பாதி நேரம் தான் பேங்க் இருக்கும்னு அவன் திங்கக்கிழம வர சொல்லிட்டான். டான்னு திங்கள் உங்க கைல துட்டு இருக்கும். வாடி போடின்னு பேசுற வேலையெல்லாம் வச்சுக்காத” எனப் பொய்யை உண்மை போலவே பேசி காசியை முறைத்தாள்.
“ஏய் என்ன எகுறுற” என காசியின் கையாட்கள் அவளை அடிக்க வர, அவர்களைத் தடுத்த காசி, “இளரத்தம்ல அதான் சட்டுன்னு சுண்டிக்குதுடா. திங்கள் கிழம என் மொத்த துட்டும் என் கையில இல்ல… உன்ன என் வீட்டுக்கே ஆச நாயகியா தூக்கிட்டு போய்டுவேன்” என நேரடியாகவே கண்டித்தான்.
“அண்ணோவ்… என்னண்ணோவ் உன்னை அண்ணேன்னு கூப்புடுற என்கிட்ட போய் இப்படி பேசுற. நான் வட்டிக்காசு குடுத்துட்டு அடுத்து ஒரே மாசத்துல உன் காசை…” என சொல்லி முடிக்கும் முன்,
“இதுக்கு மேல உனக்கு டயம் தர்றதுக்கு நான் கேனயனா… முழு துட்டையும் தர்ற. இல்ல…” என்று ஒற்றை விரலை நீட்டி வெகுவாய் எச்சரித்து விட்டுச் சென்றான் காசி.
திங்கள்கிழமை காலையிலேயே காசியின் ஆள்கள் அவளைத் தூக்க வீட்டின் முன் மறித்து நின்றனர். நடேசன் காவல்துறையில் புகார் செய்வதாகக் கூறியும் வீண் தான். அவரையே ஒருவன் அடிக்கப்பார்க்க பரமேஸ்வரி கணவனை அடக்கினார்.
“எப்படியோ போய் தொலையிறா விடுங்க…” என எரிந்து விழுக, திங்கள் விடியும் முன்னே கடற்கரையில் ஒரு போட்டுக்கு அருகில் மறைந்து அமர்ந்திருந்தாள் நிதர்ஷனா.
கதிரவன் சுற்றி முற்றி பார்த்து விட்டு, “என்ன நிதா தலைல முக்காடைப் போட்டு உக்காந்துருக்க” என தலையில் போட்டிருந்த துப்பட்டாவை எடுத்து விட,
“என் நிலைமையை பார்த்தியா கதிரு. கூடப் பொறந்த பரதேசி, என்னைப் படிக்க வைக்கிறேன்னு இனிக்க இனிக்க பேசிட்டு சொல்லாம கொள்ளாம ஊரை விட்டு ஓடிடுச்சு. இதோ ஆறு மாசத்துல படிப்ப முடிச்சுடலாம்னு நானும் என் சக்திக்கு மீறி வட்டிக்கு கடன் வாங்கி படிச்சு முடிச்சா, ஊரான ஊர்ல ஒரு வேலை கூட கிடைக்கல. இன்னைக்கு காசி என்னை தூக்கிட்டுப் போய் கீப்பா ஆக்கிடுவானோன்னு வேற பயந்து வருது” எனப் புலம்பி தள்ளினாள்.
“அதான் நான் இருக்கேனே. அப்படியெல்லாம் நடக்க வுட்ருவேனா நிதா” கதிரவன் ஆதங்கமாகக் கேட்க,
“நீயே காசி முன்னாடி நின்னா மூச்சா போற ஆளு. உன்னை நம்பி நான் எப்படி தகிரியமா இருக்குறது! முருகா எனக்கு சாக ஆசை இல்ல. ஆனா, என்னைக் கடன்காரங்க கண்ணுல படாம மறைய வச்சுடு முருகா” என்று மேலே பார்த்து கும்பிட, அப்போதே அதனை பலிக்க வைக்கும் ஆசையில் ஒரு அம்பாசிடர் கார் அவர்கள் முன்னே வந்து நின்றது.
அதில் இருந்து தடதடவென பாடி பில்டர்கள் நான்கு பேர் இறங்கினர். கதிரவனுக்கும் நிதர்ஷனாவிற்கும் மயக்க மருந்து ஸ்ப்ரேயை அடிக்க, கதிரவன் உடனே மயங்கி ஒருவனின் மீது சாய்ந்தான்.
நிதர்ஷனாவோ “காசி ஆளுங்களாடா?” எனக் கண்ணை முயன்று திறந்து கேட்க, முகமூடி அணிந்திருந்த ஒருவன் இல்லையென மறுப்பாக தலையசைத்ததில், “அப்ப சரி” என்று மயங்கிச் சரிந்தாள்.
“ஆஹில் இந்த கிட்னாப்ல நம்ம சம்பந்தப்பட்ட பொருள், ஆள்கள் யாரும் இருக்க கூடாது” என்ற முதலாளியின் கட்டளைப்படி, அதரப்பழசான அம்பாசிடரில் கடத்த முயன்றான் ஆஹில்யன்.
காசிமேடு கடற்கரையில் இருந்து கேளம்பாக்கத்திற்கு வந்து சேருவதற்குள்ளே அரை மயக்கத்தில் இருந்த நிதர்ஷனாவிற்கு மயக்கம் கலைந்து விட்டது. ஆகினும் காசி ஆள்கள் இல்லையென்றதால், எவனோ ஆள் மாற்றி கடத்தி விட்டானென எண்ணிக்கொண்டாள்.
ஏனெனில், ‘இந்த அம்பாஸிடரே எடைக்கு போடுற ரேஞ்சுல இருக்கே. என்னைக் கடத்தி என் மூலமா வர்ற காசுல தான் இவனுங்க இதுக்கு பெட்ரோல் போடுற அளவு வீக்கா இருப்பானுங்க போல. நான் அவ்ளோ ஒர்த் இல்லன்னு எனக்கு தான தெரியும். சரி… கூட்டிட்டுப் போய் மொக்கை வாங்கட்டும். அதான் கதிரும் இருக்கானே கூட’ எனக் கண்ணை மெலிசாகத் திறந்து அருகில் சீட்டின் மீது சாய்ந்திருந்த நண்பனைப் பார்க்க, அவனோ பல நாள்கள் எழுந்திருக்க வாய்ப்பே இல்லாதவாறு ஆழ்ந்த மயக்கத்தில் இருந்தான்.
“மூதேவி, கடத்த வர்றானுங்கன்னு தெரிஞ்சும், மயக்க மருந்தை அத்தர் மாதிரி உறிஞ்சிருக்கும் போல”
அம்பாசிடர் கார் நிறுத்தும் அரவம் கேட்டதில், மீண்டும் கண்ணை நன்றாக மூடிக்கொண்டாள்.
யாரோ இருவர் இணைந்து அவளைத் தூக்கிச் செல்வது புரிந்தது.
“என்னைத் தூக்கவே ரெண்டு பேர் தேவைப்படுற அளவு சொங்கியா இருக்கானுங்க. அப்ப ஈஸியா அட்டாக் பண்ணிடலாம்…” எனத் தனக்குள் கணக்குப் போட்டுக்கொண்டவளுக்கு திடீரென முகத்தில் சில்லென்ற காற்று வீசியது.
“ஆஹா… திடீர்னு காஷ்மீர் மாதிரி சில்லுன்னு இருக்கே” எனக் கண்ணை லேசாகத் திறந்து பார்த்தவள், அங்கு கதிரும் அவளும் மெத்தையில் இருப்பதை உணர்ந்து கண்ணை அகல விரித்தாள்.
“ஆத்தாடி ஆத்தா… எப்பவும் கடத்துனா குடோன்ல அடைச்சு வைக்கிறது தான உலக வழக்கம். இவனுங்க என்ன பைவ் ஸ்டார் ஹோட்டல்ல அடைச்சு வச்சுருக்கானுங்க. ஒருவேளை என்னை வாடகை குடுக்க சொல்லிடுவானுங்களோ” என மிரளும்போதே, ஒருவன் பிளாஸ்கில் காபியைக் கொணர்ந்தான்.
நீண்ட கண்ணாடி ஜக் ஒன்று இருக்க, அருகிலேயே பளபளவென கண்ணாடி க்ளாஸ் வீற்றிருந்தது.
‘கீழ விழுந்து உடைஞ்சா இன்னா ஆகுறது?” எனப் படபடத்தபடியே அந்த கண்ணாடி க்ளாசில் நீரை ஊற்றி கிளாசுக்கு வலிக்காத மாதிரி மெதுவாக குடித்தவள், சிறிது நீரை கதிரவனுக்கும் தெளித்தாள்.
பின் காபியை கப்பில் ஊற்றிட, அதில் அடித்து விழுந்து எழுந்த கதிரவன், “டேய் யாருடா கடத்துனது யாரு?” என்று கும்ஃபூ மாஸ்டர் போல கையை வைத்து படம் காட்ட, “யாருன்னு தெரிஞ்சா அடிச்சுப்போட்டு என்னைக் காப்பாத்துவியாக்கும். உன்னையவே நான் தான் காப்பாத்தணும். மூடிட்டு உக்காந்து காபி குடிடா. நம்ம தெருமுக்குல இருக்குற கடையை விட நல்லாருக்கு…” என்று அவனுக்கும் ஒரு கப்பை ஊற்றிக் கொடுத்தாள்.
“இது மக் போல டா. கீழ போட்டு உடைச்சுடாத…” என எச்சரிக்கையுடன் கொடுக்க,
“நீ என்ன ஏதோ பங்க்ஷன் வந்த மாதிரி காபி ஊத்தி பரிமாறிட்டு இருக்க?” கதிரவன் குழம்பினான்.
அவளோ காபியில் ஐக்கியமாகி விட்டதில், “இதுல மயக்க மருந்து எதுவும் இருக்காதே” என்ற மிரட்சியுடன் குடித்து விட்டுப் பின் தனக்கு எதுவும் ஆகவில்லை எனப் புரிந்ததும் தான், சற்றே நிம்மதியானான்.
இருவரும் காபியைக் குடித்து முடித்ததும், “குடு” என அவனிடம் கப்பை வாங்கி விட்டு, பாத்திரம் கழுவும் இடத்தைத் தேடியவள், பின் குளியலறை போல இருந்த கதவைத் திறந்து உறைந்து நின்றாள்.
“கதிரு” கிட்டத்தட்ட கத்தி விட்டதில், அவன் தடதடவென அவள் அருகில் சென்று “என்ன ஆச்சு?” எனப் பதற,
“த்தோ பாருடா… பாத்ரூமே பளபளன்னு இருக்கு. ஒரு பாத்ரூம்க்கு இவ்ளோ நிறைய லைட்டு போட்டு விட்டுருக்கானுங்களே. கரண்டு பில்லு எகிறிடாது” எனப் புலம்பியபடியே உள்ளே இருந்த வாஷ்பேஸினில் இருவரும் குடித்த கப்பை கழுவி எடுத்தவள், “பட்டப்பகல்ல கூட லைட்டு போட்டு தான் யூஸ் பண்ணனும் போல கதிரு” என சலித்துக்கொண்டாள்.
பின் கட்டிலுக்கு கீழே காலை குறுக்கி அமர்ந்தவள், “இன்னாடா இது நேரம் ஆக ஆக குளிர் தாங்க முடியல…” என பெட்ஷீட்டை எடுத்துப் போர்த்திக்கொண்டு அமர,
கதிரவன் அந்தப் பத்துக்கு இருபது அறையினுள் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தான்.
“எப்படியாவது இங்க இருந்து தப்பிக்கணும் நிதா” என்றான் தீவிரமாக.
அவளோ சாவகாசமாக நிமிர்ந்து “எதுக்குடா?” எனக் கேட்டதில் கதிரவன் பேந்த பேந்த விழித்தான்.
“மயக்க மருந்து குடுத்ததுல உனக்குப் பழசு எல்லாம் மறந்து போச்சா. இது நம்ம வீடு இல்ல நிதா. எவனோ நம்மளை கடத்தி இருக்கான்” என்று நினைவு படுத்தினான்.
“அட போடா. அந்தக் கடத்துன மகராசன் நம்மளை குடோன்லயா அடைச்சு போட்டு இருக்கான். ஏசி ரூமு, ஜம்முன்னு மெத்த, கண்ணாடி க்ளாஸ்ல தண்ணி, பிளாஸ்க்ல காபின்னு எவ்ளோ குடுக்குறான். இன்னும் கொஞ்ச நேரத்துல டிபன் வரும்னு நினைக்கிறேன். அதையும் சாப்பிட்டுட்டு ஒரு நல்ல தூக்கத்தைப் போட்டு எந்திரிக்கலாம்” என்றவளை ஐயோ என பார்த்தான்.
அந்நேரம் அறைக்கதவு திறக்கப்பட்டது. “ஐ! சாப்பாடு வந்துருச்சு!” என வேகமாக அவள் எழுந்திட, அழுத்தக் காலடி ஓசையுடன் உள்ளே நுழைந்தான் யாஷ் பிரஜிதன்.
தனது ஹேசல் நிறக்கண்களால் பெண்ணவளின் போர்வை நிறைந்த வதனத்தை மேலிருந்து கீழ் வரை ஸ்கேன் செய்தான். அதில் அழுத்தமும் அளவுக்கு அதிகமாக நிறைந்திருக்க, அவன் கண்ணையே வெகு நேரம் உற்றுப் பார்த்த நிதர்ஷனா, “கண்ணுக்கு லென்ஸ் வச்சுருக்கீங்களா சார்?” எனக் கேட்டு வைக்க, அவளைப் புருவம் சுருக்கிப் பார்த்தான்.
கடத்தப்பட்டதற்கான பயமோ பதற்றமோ அவள் முகத்தில் கிஞ்சித்திற்கும் தென்படவில்லை.
“சார்… இந்த ஏசி ரொம்ப குளுருது. கொஞ்சம் குறைக்க சொல்லுங்களேன்” என அவனுக்கே ஆர்டர் போட்டதில், அவளைக் கூர்மையாய் முறைத்தவன் அவள் மீதிருந்த பார்வையைத் திருப்பாமல், “எலிசா… செட் தி ஏசி டு 26 டிக்ரீஸ்” என்றதும்,
தன்னிடம் தான் ஏதோ கூறுகிறான் என எண்ணியவள், “நான் நினைச்சேன்… நீங்க மாத்தி கடத்திட்டீங்கன்னு” என்று இளித்து வைத்தாள்.
அதற்கும் கண்ணைச் சுருக்கிய ஒரு பார்வை தான் அவனிடம்.
“நீங்க எலிசான்ற பொண்ணுக்கு பதிலா நிதர்ஷனான்னு பேர் வச்ச என்னைக் கடத்திட்டீங்க ரைட்டா சார்…” பெருமை பொங்க கூறியவளை பேண்ட் பாக்கெட்டினுள் கையை நுழைத்த தீவிர பாவனையுடன் அளந்தவன்,
“நிதர்ஷனா… அண்ணன் பேர் நிவேதன். பிசிஏ கம்ப்ளீட் செஞ்சு 2 மந்த்ஸ் ஆகுது. காசிட்ட வாங்குன டெப்ட்டை ரிபே பண்ண முடியாம, அவன் உன்னை கீப்பா வச்சுக்க நினைச்சுருக்கான்” என அவளது ஜாதகத்தைப் புட்டு புட்டு வைத்தவனை சிறு திகைப்புமின்றி விழி அகல பார்த்தவள்,
“இதெல்லாம் என் ஏரியால பொறந்த குழந்தைக்கு கூட தெரியும்… என் விசயம் தான் ஏரியாவே நாறுதே. என் ஏரியாண்ட வந்து நிதான்னு வாயை திறந்தாலே, புட்டு புட்டு வச்சுடுவானுங்க. சரி இப்ப இன்னாத்துக்கு என் வரலாறை எல்லாம் என்னாண்டையே ஒப்பிச்சுட்டு இருக்கீங்க சார்…” என அசட்டையையாக கேட்க, அவனுக்கோ கோபம் வந்து விட்டது.
உடனே தனது ஆள்களை அழைத்தவன், “இவள் முகத்துல பயம் வர்றது வரை, பச்சைத் தண்ணி கூட கொடுக்காத” எனப் பணித்து விட்டு, கையில் இருந்த குளிர்கண்ணாடியை அணிந்தபடி வெளியில் செல்ல,
மெல்ல திடுக்கிட்டவள், “சார் எனக்குப் பயந்து பயந்து வருது. பச்சைத் தண்ணி இல்லைன்னாலும் மஞ்சள் தண்ணியாச்சு குடுங்க கரைச்சுக் குடிச்சுக்குறேன். யோவ்… கலப்பட கண்ணுக்காரா. அடேய்” எனக் கத்திக் கூப்பாடு போட்டும் யாரும் வரவில்லை.
அன்பு இனிக்கும்
மேகா