Loading

மறுநாள் யக்ஷித்ரா தனது அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்துக் கொண்டு, தன் தாய் மீனாவையும், தங்கை யாதவியையும் காணச் சென்றாள்.

மகளுக்குத் திருமணம் செய்து வைத்ததால், இவர்கள் தனியே இருக்கலாம் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அற்புதன், யக்ஷித்ரா மற்றும் அற்புதனின் பெற்றோர் எப்போதுமே அவ்விருவரையும் தங்களுடன் வந்து தங்கச் சொல்லி, கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களோ தங்களுக்கு அதில் உடன்பாடில்லை என்று நேரடியாகவே சொல்லி விட்டாலும், மகளும், மாப்பிள்ளையும் தங்களது முயற்சியைக் கை விடுவதாகவும் இல்லை.

வாசலில் நின்று அழைப்பு மணிக்கான பொத்தானை அழுத்தி விட்டு காத்திருந்தாள் யக்ஷித்ரா.

ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு உள்ளிருந்து குரல் கேட்டது.

“யாருங்க?”
தங்கையின் குரல் தான் எனவும்,

” யாது! நான் தான். கதவைத் திற” – யக்ஷித்ரா வெளியில் இருந்து பதில் சொல்லவும்,

“ஹேய் அக்கா…!” என்று இன்முகத்துடன் வரவேற்றாள்.

” அம்மா! அக்கா வந்துருக்கா…! “

வேலையாக இருந்த தாயிடமும் இவளது வருகையைப் பற்றிய செய்தி அறிவிக்கப்பட்டது.

” வா யக்ஷி!” என்று மகளை வரவேற்றார்.

சோபாவில் அமர்ந்தவள் வந்தவுடன் விஷயத்தைப் பேச வேண்டாம் என்று அவர்களுக்காக வாங்கி வந்தப் பொருட்களைக் கொடுத்தாள்.

அதற்குள் மீனா வந்து விட, தன்னிடமிருந்தக் காப்பிக் கோப்பையை அவளிடம் தந்தார்.

“மாப்பிள்ளை வருவாரா யக்ஷி? இல்லை நீ மட்டும் தான் வந்து இருக்கியா?”

“லீவ் இல்லனா பர்மிஷன் கிடைச்சா வர்றேன்னு சொல்லி இருக்காரு ம்மா”

காப்பியைப் பருகியவள், அங்கே சுவற்றில் மாட்டியிருந்த தந்தையின் புகைப்படத்தைப் பார்த்தாள்.

சலனமற்ற , வெறித்தப் பார்வையே! தந்தையின் கண்களை உற்று நோக்கியவள், உள்ளம் வெதும்பிப் போய், அசையாமல் அமர்ந்திருந்தாள்.

தங்கை வந்து அருகில் அமர்ந்ததும் கூட தெரியாமல், தாய் அவளிடம் பேச்சுக் கொடுப்பதைக் கூட கேட்காமல், சிலை போல் இருந்தவளின் கண்களில் உயிர்ப்பில்லை.

“யக்ஷி…!” தாயின் அழுத்தமான அழைப்பில் , உயிர்ப் பெற்றவள் போல அவரைப் பார்த்தாள்.

“அவர் ஃபோட்டோவையே பார்த்துட்டு இருக்காம,ஃப்ரெஷ் ஆகிட்டு வா”

மீனாவின் முகம் காட்டிய குறிப்பறிந்து யக்ஷித்ரா அவர் சொன்னதைச் செய்தாள்.

யக்ஷித்ரா வந்தவுடன் யாதவி அவளருகிலேயே அமர்ந்து கொண்டாள்.

“நிவேதிதா க்கா நல்லா இருக்காங்களா க்கா? சேட் (chat) பண்றாங்களா?”

“ஹாங்…! அவ நல்லா இருக்கா. திருப்பூர் ல தான் இருக்கா” என்று யக்ஷித்ரா கூற,

“சூப்பரா கந்த சஷ்டி கவசம் பாடுவாங்கள்ல?” என்று சிலாகித்தாள்.

“ம்ம்…! யெஸ் யாது. அவ இப்பவுமே நான் கேட்டா அந்தப் பாட்டைப் பாடுவா”

பெருமையாகப் பேசினாள் தோழியைப் பற்றி.

சகஜமாகப் பேசிக் கொண்டு இருந்தவளுக்கு விஷயத்தை என்ன சொல்லி ஆரம்பிப்பது என்று தயக்கமாக இருந்தது.

அவளது தயக்கத்தை மற்றவர்கள் உணரவில்லை போலும்!

ஏனெனில், இன்று யக்ஷித்ரா வீட்டிற்கு வந்திருப்பதை எண்ணி மகிழ மட்டுமே செய்தனர். அந்த மகிழ்ச்சி அவர்களது முகத்தில் நிலைத்திருக்க எண்ணியவள் விஷயத்தைச் சொல்லாமல் ஆறப் போட்டாள்.

சமையல் வேலை முடிந்து விட்டதால்,
மீண்டும் மகளிடம்,
“மாப்பிள்ளை இன்னும் வரலயே யக்ஷி?எல்லாரும் சேர்ந்து சாப்பிடலாம்னு இருந்தோமே!” என்று கேட்டார் மீனா.

“அவர் பர்மிஷன் கிடைச்சா வந்திருப்பாரே ம்மா!”இவள் கூறிக் கொண்டு இருக்கும் போதோ , செல்பேசியில் குறுஞ்செய்தி வந்திருந்தது… அதை அனுப்பியது அற்புதன்.

” சொன்னேன்ல ம்மா.பர்மிஷன் கிடைக்கல. நெக்ஸ்ட் வீக் அவரும் வந்துருவாரு” என்றாள்.

“அப்போ வாங்க! நாம சாப்பிடலாம்” என்று மூவரும் உணவு உண்டனர். 

அவர்களுக்காகக் கொறிக்க ஏதாவது கொண்டு வரலாம் என்று சில நிமிடங்களுக்கு முன்னால் தான் மீனா சென்றிருந்தார்.

அறையில் இருந்த யக்ஷித்ராவும், யாதவியும் அளவளாவிக் கொண்டிருக்க,

“நான் இன்னைக்கு எந்த விஷயத்துக்காக வந்திருக்கேன்னு இந்நேரம் உனக்குத் தெரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன் யாது”

தங்கையிடம் முதலில் சொல்ல நினைத்தாள் யக்ஷித்ரா.

அதை ஓரளவிற்குக் கணித்திருந்தாள் யாதவி. இப்போது தமக்கையே வெளிப்படுத்தி விட,

“ம்ம்… எக்ஸ்பெக்ட் பண்ணேன் க்கா” என்றாள்.

“என்ன செய்யப் போறீங்க? அம்மாவோட மைண்ட்செட் என்ன?” – யக்ஷித்ரா.

“ம்ஹூம்..! அவங்களுக்கு சம்மதம் இல்ல க்கா. எனக்கும் தான். சாரி க்கா…!”

அவளை வேதனை நிறைந்த விழிகளால் பார்த்தவள் தாய் உள்ளே வரவும், வேதனையை மறைத்துக் கொண்டாள்.

சிற்றுண்டி நிறைந்தத் தட்டுக்களை பொதுவாக வைத்தார்.

இந்த தருணத்தில் தான் பேசியாக வேண்டும் என்று யக்ஷித்ரா,
” ம்மா… வீட்டுக்கு வர்றதைப் பத்தி…!” என்று தயங்கினாள்.

அவள் கேட்க ஆரம்பித்த போதே தாயின் முகம் மாறி விட்டது.யாதவியும் அவரையேப் பார்த்திருந்தாள்.

” இப்போ இதை ஏன் கேட்குற யக்ஷித்ரா? நாங் தான் வர மாட்டோம்னு உனக்குத் தெரியுமே!” கடுமையான பதிலில்லை என்றாலும், உறுதியான பதிலாக இருந்தது.

“ப்ளீஸ் ம்மா…! “

எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவள் யக்ஷித்ரா. இம்முறையும் தாய் வர முடியாது என்று மறுத்து விட்டதால், அவளது கண்கள்  நீரையும் சொரிய,

யாதவிக்கு என்ன செய்வது? என்று தெரியவில்லை. தமக்கை அழுவதைக் கண்டு திகைத்தாள்.

” ப்ளீஸ் யக்ஷி! இந்த விஷயத்தைப் பேசத் தான் மாப்பிள்ளையும் வர்றதா இருந்திருந்தால் அவர்கிட்ட தெளிவா இதைச் சொல்லிடு”

அவளைப் போலவே அவனும் இதைக் கேட்டால் நிச்சயம் காயப்படுவான்.

“அவர்கிட்ட எப்படி ம்மா சொல்றது? அவருமே உங்களோட பாசிட்டிவ் ஆன பதிலைத் தான் எதிர்பார்த்துட்டு இருப்பார்” – யக்ஷித்ரா.

கன்னத்தில் உருண்டு விழுந்த கண்ணீர்த் துளிகளைத் துடைத்து விட்டுக் கொண்டே மகளின் முகத்தைப் பார்த்தார் மீனா.

“நீயும், மாப்பிள்ளையும் எதிர்பார்க்குறதுப் புரியுதுடா. ஆனால் எங்களால் வர முடியும்- னுத் தோனல.உங்களைக் கஷ்டப்படுத்துறது எங்கள் நோக்கம் இல்லை. ஆனா மாப்பிள்ளையை விட உனக்கு எங்களோட வேதனைப் புரியுமே! ஏன்னா நீங்கள் இரண்டு பேருமே கண்ணாலப் பாத்துக் கஷ்டப்பட்டு இருக்கீங்களே! யாதவிக்குமே இன்னும் சரியாகலை. உனக்கும் நைட் அடிக்கடி தூங்க முடியலன்னு சொன்னியே!”

மௌனமாய்த் தலையசைத்தாள் யக்ஷித்ரா.

“நாங்க வரவே மாட்டோம் – னு எல்லாம் சொல்லல. என் பொண்ணு, மாப்பிள்ளை, அவரோட அப்பா, அம்மா கூட ஒரே வீட்லக் கூட்டுக் குடும்பமா வாழ்றதுக்கு எங்களுக்கு விருப்பம் இல்லாமல் இருக்குமா என்ன? ஆனால் அதுக்கான நேரம் வர்றப்போ நீங்க கூப்பிடாமலேயே வந்து நிப்போம்” – மீனா.

“அம்மா இப்போ தான் பசிக்கும், ருசிக்கும் சாப்பிட்டுட்டு இருக்காங்க க்கா. நானுமே  இம்ப்ரூவ் ஆகிட்டு கண்டிப்பாக வர்றேன்”

“சரி…!உங்க விருப்பம். ஆனால் சீக்கிரம் வந்துடுங்க”

அற்புதனிடம் இதைக் கூறி, ‘இன்னும் சில காலம் பொறுத்திருப்போம்’ என்று சமாதானம் செய்ய வேண்டியது தான் என்று நினைத்தாள் யக்ஷித்ரா.

இந்த விஷயத்தை ஒதுக்கி விட்டு, மூவரும் மனம் விட்டுப் பேசினர்.

யக்ஷித்ராவை மகிழ்ச்சியான மனநிலைக்கு மாற்றி, வீட்டிற்கு அனுப்பி வைத்தார்கள்.

– தொடரும்

மகள், மருமகன், அவனது பெற்றோர் இவர்களுடன் சென்று தங்க யக்ஷித்ராவின் தாயும், தங்கையும் ஏன் இவ்வளவு தயங்குகிறார்கள்? அடுத்தடுத்த அத்தியாயங்களில் காண்போம்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்