Loading

அத்தியாயம் – 29

 ஆராதனாவிடம் முத்தத்தை வாங்கியவன், அவளை நெஞ்சில் புதைத்து, அவள் கூந்தலை கோதி விட, அவனின் முதல் அணைப்பில் உருகி நின்றாள்.

தேவா, அவள் காதோரம் “இசை” என்று கிசுகிசுப்பாக அழைக்க, அவள் ம்ம் என்றதில், “அப்படியே தூங்கிடாதடி… இதென்ன மெத்தையா?” என்று நக்கலடித்தான். அதில் அவனை விட்டு விலகியவள், அவனை முறைக்க, 

தேவா சிரிப்புடன் மீண்டும் அவளை இழுத்து அணைத்துக் கொண்டான். இரண்டு நாட்கள் அங்கேயே இருந்த ஆருவின் குடும்பத்தினர், அவர்களை மறுவீட்டிற்கு அழைத்து விட்டு, ஊருக்குக் கிளம்பினர்.

தேவா தான் கண்மணியிடம் “அவங்க ஊருக்குப் போகட்டும் நீங்க எங்க கூடவே இருக்கலாம்ல மா!” என்றான். அவனோடு அவனின் நண்பர்களும் “ஆமாம்மா… நீங்க இங்கயே இருங்களேன்.” என்றிட, “நான் உங்க கூடவே இருக்கேன். சீக்கிரம் என் பேரனயோ பேத்தியையோ கண்ணுல காட்டுங்க. அதுக்கு அப்பறம் நான் இங்கயே இருக்கேன்…” என்று கண்டிப்புடன் கூறியவர், அவர்களுக்குத் தனிமை கொடுக்கவே அவ்வாறு கூறினார்.

அம்மு தான், “இவனுங்களையே கிண்டர் கார்டன்ல தான் சேர்க்கணும்… நீங்க வேற காமெடி பண்ணிக்கிட்டு.” என்று முணுமுணுக்க, 

தமி “ஆமா ஆமா” என்று ராகம் பாடிட ஆண்கள் நால்வரும் அவர்களை முறைத்தனர்.

பர்வதம் வந்தவர், இருவர் தலையிலும் நறுக்கெனக் கொட்டி, “புருஷன்னு கொஞ்சமாவது மரியாதை இருக்கா? என்று ஆரம்பிக்க, ஆரு “யம்மா தாயே நீ கிளம்பு மா முதல்ல! மறுவீட்டுக்கு நாங்க வந்து சேருரோம்” என்று கும்பிட, 

அவளின் கன்னத்தில் குத்தியவர் “ஒழுங்கா குடும்பம் நடத்து… வேலை வேலைன்னு எங்கயாவது ஓடாத. நீதான் பொறுப்பா வீட்டையும் பார்த்துக்கணும். கை சரியாகுற வரை கவனமா இரு…” என்று பல அறிவுரைகளை வழங்கிட, அவள் தலையை மட்டும் உருட்டிக் கொண்டே இருந்தாள்.

‘இதுக்கு நீ பேசாம கோபமாவே இருந்துருக்கலாம்.’ என்று செல்லமாக மனதில் திட்டியவள், ஒரு வழியாக அவர்களை அனுப்பி வைத்து தேவாவிடம், “சப்பா… இனிமே தயவு செஞ்சு எனக்கு சர்ப்ரைஸ் குடுக்குறேன்னு எங்க அம்மாவை இங்க கூட்டிட்டு வந்துடாத… மிடியல” என்றிட தேவா அவள் தலையில் நறுக்கெனக் கொட்டினான்.

அறையில் துணி மடித்துக் கொண்டிருந்தவளின் இடையில் சுள்ளென யாரோ கிள்ளுவது போல் இருக்க, துள்ளி குதித்து நகர்ந்த அம்மு, பின்னே விஷ்வா இருப்பதை கண்டு, “ஏண்டா கிள்ளுன?” என முறைத்தாள். அவன் அவளை நெருங்கி, “என்னை கிண்டர் கார்டன்ல சேர்க்கணுமா?” என்று மறுபடியும் கிள்ள, அவள் துள்ளிக் கொண்டே, “விஷ்வா கிள்ளாத சும்மா இரு…!” என்று அதட்டிக் கொண்டே பின்னே நகர்ந்தாள்.

“யாரை    கிண்டர் கார்டன்ல  சேர்க்குறதுன்னு,  நான்      சொல்லவா?  ம்ம்” என்று மீண்டும் கிள்ளிக் கொண்டே வந்தவனிடம் இருந்து தப்ப முடியாமல் தவித்தாள். 

சில நொடிகளில் அவனின் கிள்ளல் வருடலாக மாற, அதில் திணறியவள் கண்ணை மூடிக் கொண்டு “பேபி” என்று உதடசைக்க, அதில் கட்டி இழுக்கப்பட்டவன் அவள் இதழில் தன் முத்திரையைப் பதித்தான்.

அவள் இதழின் மென்மையில் தன்னை இழந்து கொண்டு இருந்தவன், திடீரெனக் கன்னத்தில் ஈரத்தை உணர்ந்து, சட்டென நகர்ந்து அவளைப் பார்க்க, அவள் கண்ணீருடன் நிற்பதை கண்டு, “அம்மு என்னாச்சுடா… ஏன் அழற? உனக்குப் பிடிக்கலையா? சாரி அம்மு…” என்று பதறினான்.

அவள் அவன் சட்டையைப் பிடித்து, “நீதான் விஷம் குடிச்சுருப்பேன்னு சொன்னீல… நான் உனக்கு முக்கியம் இல்லைல. போ.” என்றாள் சிறுபிள்ளையாய். அவன் அவள் முகத்தை நிமிர்த்தி, அவன் கண்ணைக் காண வைத்தவன், “உனக்கு, உன் அம்மா பிடிக்குமா? அப்பா பிடிக்குமா?” எனக் கேட்டான்.

அவள் புரியாமல் உடனே “அப்பா பிடிக்கும்” என்க, “ஏன் அப்போ உனக்கு உன் அம்மா முக்கியம் இல்லையா?” எனக் கேட்டான்.

“என்ன பேசுற, அம்மாவை எப்படி பிடிக்காம போகும். அவங்க முன்னாடி அப்பாவுக்கு நான் இம்பார்ட்டன்ஸ் குடுத்தாலும், வீட்டுக்குப் போனதும் அவங்க இல்லைன்னா எனக்கு ஒண்ணுமே ஓடாது.” என்றதும்,

“ம்ம் அப்படி தான் எனக்கும். உனக்கு அப்பா பிடிக்குற மாதிரி எனக்கு அவனைப் பிடிக்கும். அதுக்காக நீ முக்கியம் இல்லைன்னு ஆகிடுமா? நீ இல்லைனா எனக்கு ஒண்ணுமே இல்ல அம்மு…” என்று ஏக்கத்துடன் கூறிட, அவனை இறுக்கி அணைத்தவள் 

 

“எனக்குப் புரியுது. ஆனால் நீ அப்படிச் சொன்னதும், எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா?” என்றாள் மெதுவாக.

அவன், அவள் கழுத்தில் புதைந்து “சாரி அம்மு. இனிமே வார்த்தைக்குக் கூட அப்படி சொல்ல மாட்டேன். ஆனால் என்கிட்ட கோபமா இருக்காத அம்மு, ப்ளீஸ்…” என்ற போதே, அவன் கண்ணீரை உணர்ந்தவள், அவனை நிமிர்த்தி “யப்பா ராசா! நீ அழுக ஆரம்பிக்காத… இனிமே உங்கிட்ட கோபமே படமாட்டேன்.” என்று மிரண்டவளை முறைத்தான். சிறு சிரிப்புடன் அவனை இழுத்தவள், அவன் விட்ட முத்தத்தை அவள் தொடர்ந்தாள்.

அன்று விடுமுறையாய் இருக்க, ‘நாங்களே சமைக்கிறோம்.’ என்று ஆண்கள் நால்வரும் அடுக்களையில் புகுந்திட,  அப்போதே, ஆருவிற்கு லேசாக அடி வயிறு கலங்கியது. வெகுநாள் கழித்து தேவாவும் அவர்களுடன் சென்று சமைக்க, மற்ற மூவரின் வாயும் ஓயவே இல்லை.

விஷ்வா, “மச்சான், பொரியலுக்கு வெங்காயம் போடணும் தெரியுமாடா உனக்கு?” என்று ஆச்சரியமாய் அருணிடம் வினவ, அவனோ “ஹாஃப் பாயில்க்கு உப்பு போடணும். அது தெரியுமா உனக்கு?” என்று எதையோ கண்டு பிடித்த ரீதியில் பெருமையாய் கூற, 

நிஷாந்த், “டேய் சாதம் வைக்க, அரிசியை மூணு தடவை கழுவனும் அது தெரியுமா உங்களுக்கு?” என்று தலையில் அடித்தான். இந்தப் பக்குவங்கள் எல்லாம் அவரவரின் மனைவிமார்களிடமிருந்து தெரிந்து கொண்டதாம்.

இதில் தேவாவிடம் வேறு விஷ்வா “நீ ஏதாவது டிப்ஸ் வச்சுருக்கியாடா ஆருகிட்ட இருந்து” என்று கேட்க, 

அவன் “ம்ம்…”என்றவன், அடுப்பில் வைத்திருந்த சட்டியை காட்டி, “இதைத் தொடேன்” என்றான். அவனும் ஏதோ சொல்லப் போகிறானென எண்ணி, சட்டியை தொட அது சுள்ளெனச் சுட்டது.

“ஆ எதுக்குடா இதை தொடச் சொன்ன?” என்று விரலை வாயில் வைத்துக் கொண்டு கேட்க, தேவா, “ம்ம் அடுப்புல இருக்குற சட்டியில கையை வச்சா சுடுமாம்… தெரியுமா உனக்கு?” என்று சிரிப்பை அடக்கிக் கொண்டு நக்கலாக வினவ, அருணும் நிஷாந்தும் கலகலவெனச் சிரித்தனர்.

தேவா மீண்டும் “இன்னொன்னு சொல்லவா” எனக் கேலியாகக் கேட்டதில் விஷ்வா, “பாக்கெட்டுல இருக்கும் சிப்ஸ்! எனக்கு வேணவே வேணாம் உன் டிப்ஸ்!” என்று மிரண்டதில், மீண்டும் அங்கு சிரிப்பலை பரவியது. தேவாவின் மாற்றத்தைக் கண்டு நண்பர்கள் மகிழ்ந்தாலும் அவனிடம் எதுவுமே கேட்டுக் கொள்ளவில்லை. அவனிடம் இன்னும் இன்னும் பேச்சு கொடுத்து அவனையும் பேச வைத்தனர். 

“இந்த வீணா போன பருப்பில்லாத சாம்பாரை, இன்னும் நீங்க விடலையாடா?” என்று தலையில் அடித்த ஆருவை தேவா முறைத்திட,  அவள் “இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல… இதை சாப்பிடலைனா ஏதோ நான் சாப்பாட்டை வீணாக்கி, அவமானப்படுத்துற ரேஞ்சுக்கு டயலாக் பேசுவ… குடும்! குடுத்துத் தொலையும்!” என்று வேண்டா வெறுப்பாக சாதத்தை வாங்கி கொண்டாள்.

ஆனால்,  அதன் சுவையில் விழி விரித்தவள், “உண்மை யிலேயே நீ தான் செஞ்சியா? இல்ல ஸ்விக்கில ஆர்டர் பண்ணிட்டியா?” என்று சந்தேகமாகக் கேட்டதில், அவன் மேலும் முறைத்திட “ஈஈ” என்று இளித்தவள், “ஆஆ” என வாயைக் காட்டினாள். அவளின் பாவனையில் புன்னகை வந்திட, “சாப்பிடும் போதாவது பேசாம சாப்பிடுடி!” என்று அதட்டிக் கொண்டு ஊட்டினான்.

சில நாட்களாக இதனைப் பார்த்துப் பழகிய மற்றவர்களும் இவர்களைக்  கண்டு கொள்ளாமல் சாப்பிட, வைஷு அப்போதும் கேசரியை கண்டு நிஷாந்தை பார்த்துப் புன்னகைத்தாள். தமி, “இந்தக் கொலை கேசரிய இன்னும் விடமாட்றாங்கப்பா…” என்று வைஷுவை கேலி செய்திட, அவள் “நீ சாப்பிடவே வேணாம்…” என்று அவளிடமிருந்து பிடுங்கி சாப்பிட, “என் கேசரி! என் கேசரி!” என்று கத்தினாள்.

அருண், “ஏண்டி கேசரிக்கு இந்தக் கத்து கத்துற, இந்தா” என்று அவன் தட்டில் இருந்த கேசரியை எடுத்துக் கொடுக்க, அவள் “குட் பாய்! இப்படி தான் விட்டுக் குடுத்து வாழணும்.” என்று அவனை தட்டிக் குடுக்க, அவன் தலையில் அடித்துக் கொண்டான் புன்னகையுடன். 

விஷ்வாவும் அம்முவும் அவர்கள் பரிமாறிக் கொண்ட முத்தத்திலேயே கனவுலகில் சஞ்சரித்து பார்வையால் தீண்டிக் கொண்டிருந்தனர்.

ஆரு ‘லொக்கு லொக்கு’ என இருமியதும், தேவா “என்னடி ஆச்சு…” என்று தண்ணீரை கொடுக்க, அவள் “அது ஒண்ணும் இல்ல தேவ். இங்க ஒரே கொசுத் தொல்லை தாங்க முடியல…” என அம்முவை பார்த்துக் கொண்டு காற்றில் கொசு விரட்ட, அம்மு “அங்கேயாவது கொசு தான், இங்க மூட்டைப் பூச்சி இம்சை தாங்கல…” என்று தேவா ஊட்டிவிடுவதை எங்கோ பார்த்துக் கொண்டு கேலி செய்ய,

தமி “அட சே, நானே லீவ் அதுவுமா, சாம்பார் போட்டானுங்களேன்னு கடுப்புல இருக்கேன்… நீங்க வேற கொசு, மூட்டைப் பூச்சின்னு நான்வெஜ்ஜா பேசிட்டு இருக்கீங்க… எந்திரிச்சு போய்த் தனியா சண்டை போடுங்கடி!” என்று கடுப்படித்தாள்.

 

அம்மு, “அது எப்படிடி சண்டை இழுத்து விட்டு சம்பந்தமே இல்லாத மாதிரி பேசுற” என்று முறைக்க, “என்ன இருந்தாலும் நீ இப்படி பேசியிருக்க கூடாது அம்மு. இப்போ நான் டிவியை கேவலமா திட்டுனா, உனக்குக் கோபம் வராது?” என்று நியாயம் கேட்டதும், அம்மு “வராது” என்று தோளைக் குலுக்கிட, விஷ்வா தான் “நான் பேசாம சாப்பிட்டுட்டு தான இருக்கேன். என்னை ஏன் அசிங்கப்படுத்துற?” என்று தமியை முறைத்தான்.

அம்மு “நான் ஒண்ணும் பிரெண்டோட ஹஸ்பண்டுன்னு நினைச்சு பேசல, என் அண்ணன்ற உரிமையில பேசுனேன். அதுக்கு எவளோட பெர்மிஷனும் எனக்குத் தேவை இல்லை” என்றவள் கோபமாக எழுந்து செல்ல,  தேவா ஆருவிடம் கண்ணைக் காட்டியதும், அவள் அம்முவின் கையைப் பிடித்தாள்.

அம்மு அமைதியாக நிற்கவும், “சாரி அம்மு…!” என்றிட, அவள் முறுக்கிக் கொண்டு நின்றாள். அவளைப் பிடித்து அருகில் அமர வைத்தவள் “அதான் சாரி சொல்லிட்டேன்லடி… அப்பறம் எதுக்கு ஓவரா போற! உட்காந்து சாப்பிடு” என்றாள் அதட்டலாக.

அவள் உம்மென இருக்கவும், சாப்பிட்டு கொண்டிருந்த விஷ்வாவின்  கையைத்  தட்டிய   தேவா, ‘அவளைப் பாரு’ என்றிட அவன் “அய்யோயோ அண்ணன் தங்கச்சி, பிரெண்ட்ஸ் குள்ள நடக்குற பிரச்சனைக்குள்ள வேற யாரும் வரக்கூடாதுப்பா… நீங்களே பேசித் தீர்த்துக்கோங்க” என்று தட்டில் தலையைப் புதைக்க, தேவா “சாப்பிடு அம்மு” என்றான் மெதுவாக.

அவள் அவனிடம் “சாரி” என்றிட, அவன்  சிறு புன்னகை உடன், “அண்ணன் கிட்ட சாரி எல்லாம் சொல்லத் தேவை இல்லையே” என்றான். 

அதில் பட்டென நிமிர்ந்து அவனை வியப்பாகப் பார்த்தவளுக்கு, உள்ளுக்குள் பயம் தான். எங்கே திட்டி விடுவானோ என்று. ஆனால் அவன் இந்த அளவு மாறி இருப்பான் என்று அவளும் எதிர்பார்க்கவில்லை. “அப்போ எனக்கு ‘ஆ’” என்று சாப்பாடை கைக்காட்ட, 

ஒரு நொடி விழித்தவன் பின் புன்னகையுடன் அவளுக்கு ஊட்டியதில் தமிக்கும் வைஷுவுக்கும் மயக்கம் வராத குறை தான். ஆண்கள் மூவரும் சொல்லவே வேண்டாம். உறைந்த நிலையில் தான் இருந்தனர்.

ஆரு அவர்களைச் சிரிப்புடன் பார்த்திட, தமி கண்ணைக் கசக்கிக் கொண்டு அழுக ஆரம்பித்தாள். அருண் பதறி “ஹே என்ன ஆச்சு…” என்றிட, அவள் “இதுங்க சாப்பிடும்போது ஓவர் சென்டியா போகுதுங்க. அப்போ அவள் தங்கச்சின்னா நாங்க யாராம்? நான் என் வீட்டுக்குப் போறேன். புகுந்த வீட்டுல மரியாதை இல்லை. யாரும் எனக்கு ஊட்டி விட மாட்றீங்க… வா வைஷு போலாம்.” என்று அவளையும் இழுக்க,

அருண் “மச்சான், அவளுக்கு ஊட்டி விட்டுடுறா! இல்லைன்னா இவ அடுத்த பஞ்சாயத்தை இழுத்துருவா போல” என்று போலியாக அரண்டிட, தேவா சிரித்து விட்டு, அவர்களுக்கும்  ஊட்ட, பின் அவனின் நண்பர்களும் ‘எங்களுக்கு’ என்று முறைத்ததில், அவர்களுக்கும் ஊட்டினான். பின், அவனைவருமே ஒருவருக்கொருவர் ஊட்டி விட்டுக் கொண்டு சாப்பிட, ஆருதான், “நம்மளை தனியா பெர்ஃபார்மன்ஸ் பண்ண விடுதுங்களா? ஊட்டி விடுறதுக்கு கூடப் பங்குக்கு வந்துருச்சுங்க.” என்று புலம்பிக் கொண்டாள்.

நாட்கள் அதன் போக்கில் கேலியும் கிண்டலும் சிரிப்பும் காதலுமாகச் செல்ல, ஆருவின் அருகாமையில் தேவாவிடம் நல்ல மாற்றம் தெரிந்தது.  அவ்வப்பொழுது எதையாவது நினைத்து, அவள் மடியில் படுத்து யோசித்துக் கொண்டே இருப்பான்.

அவள்  “என்ன ஆச்சு தேவ்… என்ன ஓடுது உன் மண்டைக்கு உள்ள” எனக் கேட்டதும், அவன் புன்னகையை வரவைத்து மறுப்பாகத் தலையசைப்பான். அவளுக்கும் காயம் சரியாகி வேலைக்குச் சென்று கொண்டிருந்தாள்.

 அவனிடம் தெரிந்த மாற்றத்தில் அவளுக்கும் மகிழ்ச்சியே. ஆனால் இன்னும் எதையோ மனதில் போட்டு உருட்டிக் கொண்டிருக்கிறானோ? கவுன்சிலிங் சென்றால் சிறிது மனம் மாற்றம் கிடைக்குமோ? என்று எண்ணியதும் உண்டு. ஆனால் அவனுக்கு அதில் பிடித்தம் இல்லை என்பதை ஏற்கனவே உணர்ந்து கொண்டவள், அதை அவனுக்குப் புகுத்த விரும்ப வில்லை. அவனுக்கு எப்போ தோணுதோ அப்போ மனசை விட்டுப் பேசட்டும் என்று அமைதி காத்தாள்.

அன்று, மாலை வேலை முடிந்து வீட்டிற்கு வந்த ஆரு, அறையில் தேவா இருப்பதை பார்த்து வியந்து, “என்ன ஒரு அதிசயம். எப்போவும் அர்த்த ராத்திரியில தான் வீட்டுக்கு வருவ. இன்னைக்கு  இவ்ளோ  சீக்கிரம் வந்துட்ட” என்று கேட்க, அவன் குனிந்த  தலையை நிமிரவே இல்லை.

“என்னாச்சு என் திருட்டுப்பயலுக்கு…” என்று மென்மையாகக் கேட்டுக் கொண்டு, அவனருகில் வந்தவளின் நெஞ்சில் முகத்தைப் புதைத்து, தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தான்.

அதில் திகைத்தவள், “தேவ் என்ன ஆச்சு டா…? ஏன் இப்படி அழற… இங்க பாருடா என்னை?” என்று பதற, 

அவன் முகத்தைக் காட்டாமல் அவளை இறுக்கி பிடித்து, அழுகையைத் தொடர்ந்தான். “தேவ் ப்ளீஸ் டா அழாத. எனக்குக் கஷ்டமா இருக்கு.” என்று கமறிய குரலில் கூறியவளுக்கு, அவன் சிறு குழந்தை போல் அழுவதில் மனம் வெந்தது.

 

சிறிது நேரம் அப்படியே இருந்தவன், மெதுவாக அழுகையை நிறுத்தி “நான் ஹாஸ்பிடல் போனேன்.” என்றான். அவள் புரியாமல் “எந்த ஹாஸ்பிடல்டா?” என்றதும் “நீ என்னை அன்னைக்கு எந்த ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனியோ? அங்க!” என்றான் அமைதியாக. அவன் முதுகை ஆதரவாகத் தடவி விட்டுக் கொண்டிருந்த அவளின் கைகள் ஒரு நொடி நின்று விட, “நீ எதுக்கு அங்க போன?” எனக் கேட்டாள்.

நிமிர்ந்து அவளை ஆழமாகப் பார்த்தவன், “ஏன் இப்படி பண்ணுன இசை” என்றான். “நீ தான ஆசைப்பட்ட. அதைத் தான் பண்ணேன்… நான் பண்ணது கம்மி.” என்றவளின் குரலிலேயே அவளின் கோபம் இன்னும் குறையவில்லை என்று உணர்ந்தவன் “எனக்காகவா இசை?” எனத் தவிப்பாகக் கேட்க, அவள் இல்லையெனத் தலையாட்டி “என் எட்டு வயசு குழந்தைக்காக….” என்றவள், அடுத்த நொடி அவனின் இறுகிய அணைப்பில் இருந்தாள்.

ஆருவிடம் கூடச் சொல்லாமல், தேவா கௌன்சிலிங் சென்று கொண்டிருந்தான். அவளுக்காகவாது நிச்சயம் தான் மாறியே ஆக வேண்டும் என்று எல்லா வழிகளிலும் மாற முயன்றவன், அன்றும் எப்போதும் போல் கௌன்சிலிங் சென்று வெளியில் வரும் வேளையில், “நான் பைத்தியம் இல்ல. நான் பைத்தியம் இல்ல, என்னை விடுங்க” என்ற ஒரு பெண் ஓடி வந்து தேவாவின் முன் நிற்க, அவன் திடுக்கிட்டு நின்றான்.

அந்தப் பெண் பின்னே வந்த இரண்டு செவிலியர்கள், “சாரி சார், இந்த அம்மா அது ரூம்ல இருந்து ஓடி வந்துடுச்சு” என்று அவளைப் பிடித்து இழுக்க,

 அப்பெண், “நான் சொல்றது உண்மை தான், என்னை விடுங்க! நான் பைத்தியம் இல்ல…!” என்று கத்திட, உள்ளே இருந்து வந்த பெண் மருத்துவர், “ஸ்ரீசா! இப்போ நீ ரூம்க்கு போகலைன்னா உனக்கு ஊசி போட்டு விடச் சொல்லிடுவேன். அமைதியா போ” என்று அதட்ட, அங்கிருந்து கிளம்ப எத்தனித்தவன், அந்தப் பெயரைக் கேட்டு அப்படியே நின்று அப்பெண்ணை உற்றுப் பார்க்க, பிறகு தான் அது அவனின் அத்தை என்றே தெரிந்தது.

அதில்,  அவனுக்குக் கையெல்லாம் நடுங்கி, அதோடு கோபமும் வர, இறுகிப் போய் நின்றிருந்தவனை பார்த்த அப்பெண், “நான் நான் பைத்தியம் இல்லை… என்னை இங்க இருந்து கூட்டிட்டு போய்டுறியா. நான் இங்க இருக்க மாட்டேன்.” என்று அவன் கையை பிடித்துக் கேட்டவள், சுயநினைவை இழந்திருந்தாள். அதோடு அவளுக்கு அவனை நினைவிலேயே இல்லை. பின், அவளை அங்கிருந்து அழைத்துச் சென்றிட,

அங்கிருந்த நர்ஸிடம் தேவா அவளைப் பற்றி விசாரிக்க, அவள் “இந்தம்மாவுக்கு யாரோ கரெண்ட் ஷாக் குடுத்து… நாய் அடிக்கிற மாதிரி அடிச்சு ரோட்டுல போட்டிருந்தாங்கன்னு சொல்லி, ஒரு பொண்ணு தான் இங்க சேர்த்து விட்டுட்டு போச்சு. வந்ததுல இருந்து இந்தம்மா இப்படி தான் கத்திக்கிட்டு இருக்கு” என்றாள்.

தேவா தான், சில நொடிகள் என்ன யோசிப்பது என்று கூடப் புரியாமல் “கர்மா இஸ் பூமராங்கா?” என்று நினைக்க மறு நொடியே, அவனுக்குப் புரிந்து விட்டது. 

அன்று கோபத்தில் அவளை இப்படி தான் செய்ய வேண்டும் என்று சொல்லியிருந்தில் அவன் மனையாள் தான் இதனைச் செய்திருக்கிறாள் என்று.

“இப்போ உன் மனசு அமைதியாகிடுச்சா தேவ்” எனக் கேட்டாள் பரிவாக. “ஏண்டி? ஏண்டி? இப்படி இருக்க… ஏண்டி என் வாழ்க்கையில வந்த? என்னை ஒவ்வொரு நிமிஷமும் அன்பாலே கொல்லாதடி! என்னால முடியல! அழுகை வருதுடி.” என்றான் பாவமாக.

அவள் மெலிதாகச் சிரித்து “அப்போ அழுதுடு” என்றிட, மீண்டும் அவள் மடியில் படுத்தவன், சற்று நேரம் அமைதியாக இருந்து விட்டு, பின் “எனக்கு 8 வயசு இருக்கும். என் அப்பா அம்மா, டைவர்ஸ் வாங்கி தனியா போய்ட்டாங்க. நான் அப்பா வீட்ல ஒரு வாரம், அம்மா வீட்ல ஒரு வாரம் தான் இருப்பேன். அப்பா வீட்டுக்குப் போகும்போது அங்க யாருமே இருக்க மாட்டாங்க. அப்பாவும் வெளிய போய்டுவாரு. என் அம்மா வீட்டுக்குப் போனா, அங்க என் அம்மாவோட அண்ணன் வைஃப் இருப்பாள். எங்க அம்மா, மாமா கூட பிசினெஸ் மீட்டிங்ன்னு போய்டுவாங்க.  அப்போ அவள் என்னை என்னை ஏதாவது சொல்லிகிட்டே இருப்பா. என்னைத் தொட்டு தொட்டு பேசுவா எனக்குப் பிடிக்கவே பிடிக்காது. ஒரு தடவை நான் அம்மா கிட்ட உன்னைச் சொல்லித் தரேன்னு சொன்னதுக்கு, எனக்கு சூடு வச்சுட்டா… எங்க அம்மா, மாமா கிட்டலாம் ‘நான் குளிச்சுட்டு இருக்கும்போது ரூம்க்கு ரூம்க்கு வரான்… நல்ல பழக்கத்தைச் சொல்லிகுடுங்க. இல்லைன்னா நான் அடிச்சு சொல்லிகுடுக்குறேன்’னு சொன்னாள்.

நான் பிறந்ததுல இருந்தே, என் அப்பா அம்மாவுக்கு, சண்டை வந்ததுனால ரெண்டு பேருக்குமே என்னைப் பிடிக்காது. அதனால அவங்க என்னை கண்டுக்கவே இல்லை. அதுல அவ என்னை ரொம்ப டார்ச்சர் பண்ணுனா. டெய்லி அவள் சொல்றதை செய்யலைன்னா சூடு வச்சாள்…” என்று, அவனின் முகத்தை அவள் வயிற்றில் மறைத்து, இடுப்பை இறுக்கி பிடித்தவன், மேலும் தேம்பிட, ஆரு உதட்டைக் கடித்துக் கொண்டு அழுகையை அடக்கிக் கொண்டிருந்தாள்.  

அவன் முழுதாக மனதில் இருப்பதை கொட்டட்டும் என்றே தன்னை அடக்கிக் கொண்டவளுக்கு, மூச்சு முட்டியது.

அவன் மேலும், “அதுக்கு அப்பறம், நான் அப்பா கிட்ட போய் அவள் பண்றதை எல்லாம் சொல்லிட்டேன். அவரும் வந்து எனக்காகச் சண்டை போட்டாரு.  ஆனால் வேற ஏதோ வாக்கு வாதம் போய்க் கடைசில என் அப்பா என்னைத் தப்பா வளர்த்ததுனால நான் இப்படி பொய் சொல்றேன்னு பெரிய சண்டை வந்துருச்சு. அதுல அப்பா என்னை இனிமே அவர் வீட்டுக்கு அனுப்பவே கூடாதுன்னு சொல்லிட்டாரு.

என் அம்மாவோட அப்பா, ஸ்ட்ரோக் பேஷண்ட். ஆனால் என்மேல அவருக்கு ரொம்ப பாசம். அதை அவரால காட்ட தான் முடியல. அதுக்கு அப்பறம், எங்க நான் அவளைப் பத்தி சொல்லிடுவேனோன்னு பயந்து, என்னைப் பைத்தியம்னு சொல்லி, எல்லாரையும் நம்ப வச்சுட்டாள். பையன் பைத்தியம்ன்னா பிசினெஸ்ல அவங்களோட மதிப்பே போய்டும்னு சொல்லி, என் அம்மா என்னைத் தலை முழுகி, என் அத்தைகிட்டயே என்னை மெண்டல் ஹாஸ்பிடல்ல விடச் சொல்லிட்டாங்க…

’நான் பைத்தியம் இல்லை. என்னை வீட்டுக்குக் கூட்டிட்டு போ’ன்னு அவள் கிட்ட அழுது கெஞ்சுனேன். 

ஆனால் அவ கேட்கவே இல்லை. அழுதேன் கத்துனேன்… யாருமே என்னை என்னன்னு கூடக் கேட்கல. அதுக்கு அப்பறம் நான் அழறதையே விட்டுட்டேன்.” என்றவன், கத்தி அழுதான். இத்தனை வருடமும் அவன் மனதில் இருந்த அழுக்குகளை அவளிடம் கொட்டியதில், எவ்வளவு முடியுமோ அவ்வளவு அழுதான். 

 

கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக அதே சத்தத்துடன் அழுதவனை அமைதிப்படுத்தவும் தோன்றாமல், தான் அழுதால் இன்னும் அவன் வருத்தப்படுவான் என்று தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு, அவனை அழ விட்டவள், அவன் சிறிது சிறிதாக அழுகையை குறைக்கவும்,

“போதும் தேவ். ரொம்ப அழுதுட்ட. எந்திரி!” என்று அவனை எழுப்பி, தண்ணீரை கொடுத்துக் குடிக்கச் சொல்லி, முகம் கழுவி விட்டு வரச் சொல்ல, அவள் சொல்வதை எல்லாம் கீ கொடுத்த பொம்மைபோல் செய்தான்.

அதற்குள் அவள் அடுக்களைக்கு சென்று கட்டுப்படுத்திய அழுகையை, வாயை பொத்திக் கொண்டு வெளிப்படுத்தியவள், முயன்று தன்னை அடக்கிக் கொண்டு, அவனுக்குச் சாப்பாடு கொண்டு சென்றாள். அவன் மீண்டும் அவள் மடியில் படுத்துக் கொள்ள, ஆரு “எந்திரி தேவ். சாப்பிட்டு படு…” என மிருதுவாகக் கூற, அவன் ‘வேணாம்’ எனத் தலையாட்டினான். 

“அடி வாங்குவ. இவ்ளோ நேரம் அழுததுக்கு இந்நேரம் பசி எடுத்திருக்கும்… எந்திரி ஃபர்ஸ்ட்!” என்றவள் அவனை வலுக்கட்டாயமாக எழுப்பி, சாப்பாட்டை ஊட்ட, அவன் அவளையே பார்த்து இருந்து விட்டு, “இசை” என அழைக்க, அவள் என்னவென்று பார்த்தாள்.

“நான் பைத்தியம் இல்லைல…” என்று ஏக்கமாகக் கேட்ட அவனைக் கண்டு திகைத்தவள், பின், “இல்ல தேவ். பெத்த புள்ளைய பார்த்துக்க தெரியாம, வறட்டு கௌரவத்துக்கும் கோபத்துக்கும் முக்கியத்துவம் குடுத்தாங்கள்ல அவங்க தான் பைத்தியம். குழந்தையும் தெய்வமும் ஒன்னுன்னு சொல்வாங்க. ஆனால் அப்படி தெய்வமா பார்க்க வேண்டிய குழந்தையை வெறும் இச்சைக்காக, கொடுமை படுத்துற அந்தப் பைத்தியக்காரி தான் பைத்தியம்.

அந்தப் பைத்தியங்கள்லாம், ஒரு அறிவு கூட இல்லாமல், ஆறறிவு படைச்ச மனுஷன்னு முகமூடிப் போட்டுட்டு, ஊர் உலகத்தை ஏமாத்திக்கிட்டு இருக்காங்க. அவங்கள்லாம் ரொம்ப நாள் ஏமாத்த முடியாது தேவ். ஒருத்தர் எவ்வளவு நாள் நடிக்க முடியம். அவங்க செஞ்ச பாவம்லாம் அவங்களை பின் தொடர்ந்து, அவங்களுக்கு இருக்குற ஒரு மூளையையும் மழுங்க வைச்சு, அவங்க பைத்தியக்காரதனத்தை ஊருக்கே காட்டும்… கர்மா கிட்ட இருந்து யாருமே தப்ப முடியாது… நீ என்ன தப்பு பண்ண இவ்ளோ அழுது வருத்தப்பட?  எப்போவும் என் தேவ், யாரும் நெருங்கக் கூடப் பயப்படுற, கெத்து டிடெக்டிவ், ம்ம்ஹும் திருட்டு பயலா தான் இருக்கணும்… புரிஞ்சுதா” என்று கோபமாகப் பேச ஆரம்பித்தவள், குறும்புடன் முடித்தாள்.

அவள் பேசியதில் மேலும் தெளிந்தவன் நக்கலாக, “கர்மாகிட்ட இருந்து தப்ப முடியாதா? இல்ல உங்கிட்ட தப்ப முடியாதா? ஹ்ம்ம்?” என்று விழி உயர்த்தி வினவ, “ரெண்டும் தான். ஆமா உன் அப்பா அம்மா எங்க இருக்காங்க…” என்று எதார்த்தமாகக் கேட்டவள், அவனுக்கு ஒரு வாய் ஊட்டினாள். அதில் மிரண்டவன், “ஏய், ஒரு டிடெக்டிவோட பொண்டாட்டி இப்படி கிரிமினலா இருக்க! டூ பேட்” என்று புன்னகைத்தபடி கூறியதில், அவள் முறைத்தாள்.

அதில் அவன் சிரித்து விட்டு, “என் அம்மா ஆல்ரெடி அனாதை ஆஸ்ரமத்துல தான் இருக்காங்க. அவங்க பசங்க அவங்க கிட்ட இருக்குற சொத்தை எல்லாம் பிடுங்கி, போன வாரம் தான் அவங்களை வீட்டை விட்டுத் துரத்துனாங்க… என் அப்பாவுக்கு ஹார்ட் அட்டேக். பார்க்கக் கூட யாரும் இல்லாம, இப்போ ஹாஸ்பிடல்ல தனியா இருக்காரு. இது கூட லாஸ்ட் வீக் தான் எனக்கு…” என்னும் போதே, அவளை ஒரு மாதிரியாகப் பார்த்தான்.

அவன் ஏதோ கதை சொல்வது போல் கேட்டுக் கொண்டு அவனுக்கு ஊட்டியவள், அவன் பார்வையில் “ஹே நான் எதுவும் பண்ணலைப்பா… மே பீ அதென்ன” என்று யோசிப்பது போல் பாவனை செய்தவள் “ஹான்! கர்மா இஸ் பூமர்… சீ சீ கர்மா இஸ் பூமராங்கா இருக்கும்… உனக்கு இன்னொரு தோசை ஊத்திட்டு வரவா?” என்று சாதாரணமாகக் கேட்டிட, “ஏண்டி?” என்று சலிப்புடனும், அதே நேரம், அவனுக்காக இவள் எந்த அளவு இறங்கி இருக்கிறாள் என்ற வியப்புடனும் கேட்டான்.

 அவள் தோளைக் குலுக்கி, “உன்னை ஏன் கஷ்டப் படுத்தினோம்னு எல்லாரும் கடைசி வரை நொந்து சாகனும். அதை நான் பார்க்கணும்.” என்று அசட்டையாகச் சொல்லிட, அவளை சற்று திகைத்துப் பார்த்தவன், “பொண்ணா என்னடி நீ எல்லாம்” என்று கேட்டதில் அவள் இடுப்பில் கை வைத்து முறைக்க, தேவா அவள் கன்னத்தைத் தாங்கி, முகம் முழுதும் முத்தமிட ஆரம்பித்தான்.

 

அத்தியாயம் – 30

 தன்னை மீறி, அவள் முகம் முழுவதும் முத்தமிட்டவன், “எப்போடி இதெல்லாம் பண்ணுன?” என்று வினவ, அவளிடம் பதில் தான் இல்லை. அவன் கொடுத்த முத்தத்தில் செங்கொழுந்தாக, அவன் இதழ் பட்ட இடங்கள் சிவந்திருக்க, வெட்கத்துடன் பேச்சற்று நின்றிருந்தாள்.

தன்னவளின் வெட்கத்தை சுவாரஸ்யமாகப் பார்த்த தேவா, அவள் அருகில் சென்று, அவள் கன்னத்துடன் தன் கன்னம் வைத்து மெல்ல தேய்த்திட, ஆராதனா மேலும் தவித்துப் போனாள்.

அவன் சிறு சிரிப்புடன் அவள் காதருகில் கிசுகிசுப்பாக, “ஏய் மியூசிக் டப்பா, எல்லா கேடிதனமும் பண்ணிட்டு, ஒண்ணும் தெரியாத பாப்பா மாதிரி, ஒரு கிஸ்க்கு சிவந்து போய் நிக்கிற… ஹ்ம்ம்?” என்றதும் தான், தன்னிலை உணர்ந்து அவனைத் தள்ளி விட்டவள், “திருட்டுப்பயலே” என்று முணுமுணுத்து, சாப்பிட்ட தட்டை எடுத்துக் கொண்டு வெளியில் சென்றாள்.

தட்டை ‘சிங்கில்’ போட்டு விட்டு, கழுவ எத்தனிக்க, அவளுக்குப் பின்னிருந்து தேவாவின் கரம் அவளைத் தடுக்க, அவளைத் தள்ளி நிற்க வைத்தவன், அவனே கழுவ ஆரம்பித்தான் அவளைப் பார்த்துக் கொண்டே.

மற்ற அனைவரும், சாப்பிட்டு விட்டு அவரவர் அறையில் சென்று அடைந்து விட, ஆரு, அடுப்பு திண்டின் மேல் ஏறி அமர்ந்து, “இப்போ மட்டும் என் அம்மா உன்னைப் பாத்திரம் கழுவ விடுறதை பார்த்தாங்க. என்னைக் கொலையே பண்ணிடுவாங்க…!” என்றாள் 

நக்கலாக.  “நான் வேணா இதை போட்டோ எடுத்து அனுப்பி விடவா?” என்று கிண்டலடித்ததில், மிரண்டவள், 

“ஏன்? ஏன் உனக்கு இந்தக் கொலைவெறி?” என்றிட, அவன் புன்னகைத்து, அடுப்பில் தோசைக்கல்லை வைத்துத் தோசை ஊற்ற ஆரம்பித்தான், அவள் இன்னும் சாப்பிடவில்லை என்று.

ஆரு யோசனையுடன், “தேவ், எனக்கு ஒரு டவுட்டு?” என்றவள், அவன்   என்னவென்று பார்த்ததும், “இல்லை, காட்டுல இருக்கும் போது, நீ என்னைப் பத்தி விசாரிச்சது வரை ஓகே. ஆனால் என் அம்மாகிட்ட அடி வாங்குறது, வீட்ல சொல்லாம வந்தது இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும்?” என்று வினவ,

“இதென்ன சிதம்பர ரகசியமா? அதான் உன் போன்ல இருந்து உன் பிரெண்ட்ஸ் கிட்ட பேசிருந்தியே, எங்க அம்மா கிட்ட இப்போ தான் வெளக்கமாத்து அடி வாங்குனேன். வீட்ல சொல்லாமல் தான் வர்றேன்னு.” என்று கூலாகச் சொல்ல,

“டேய்ய்! அது நான் காட்டுக்கு வரதுக்கு ஒரு ரெண்டு நாள் முன்னாடி அம்முகிட்ட பேசுனது… அது எப்படி உனக்குத் தெரியும்?” என்று முறைத்தாள்.

“உன் போன் நம்பர் டிராக் பண்ணி, உன் கால் ரெகார்டஸ் எடுத்து தான்…” என்று கண்ணடிக்க, அவள் மேலும் முறைத்ததில்,

“பின்ன உன்னைப் பத்தி ஃபுல்லா தெரிய வேணாமா? நார்மலா ஏதாவது சொன்னா நீ கண்டுக்க மாட்ட, இப்படி பெர்சனலா ஏதாவது சொன்னா தான்,  கன்ஃபியூஸ் ஆவ… அதை வச்சு உன்னை டிராப் பண்ணலாம்னு நினைச்சேன்…” என்றவன், தோசையை பிய்த்து அவளுக்கு ஊட்ட, 

அவள் “போடா, என்னை நீ அந்த நிஷிதானு தான ஃபர்ஸ்ட் நினைச்ச… அதுவும் ட்ரக் அடிக்ட்ன்னு.” என்று முகத்தைச் சுருக்கினாள்.

அதில் அவன், “உன்னை யாருடி தாம்பரத்துல இறங்கச் சொன்னது? அம்மு சொன்ன மாதிரி, மாம்பலத்துல  இறங்கிருந்தா இந்தப் பிரச்சனையே இல்லைல…” என்றிட, “ஹை நான் தெரிஞ்சோ தெரியாமலோ அப்படி பண்ணாம இருந்திருந்தா, இப்படி, நீ எனக்கு ஊட்டி விட்டுட்டு இருப்பியா?” என்று அழகு காட்ட, அவன் சிறு சிரிப்புடன்,

“ஹ்ம்ம்… அதுவும் கரெக்ட் தான். ஆனால், நிஜமா உன்னை என்னால,  அப்படி நினைக்கவே முடியல. ரொம்ப கஷ்டப்பட்டு தான் என்னை நானே நீதான் அந்தப் பொண்ணுன்னு நம்ப வச்சேன்.” என்றதும், 

“ஆனால் நான் எப்போவுமே உங்களைத் திருடனுங்கனு நினைக்கவே இல்லை. எல்லாரும் டம்மி பீசுடா…” என்று நகைத்திட, அவன் தீயாக முறைத்தான்.

அவளோ “அப்பறம் என்னடா, கடத்தல் தொழில் பண்றவன் லேசா பசிக்கிதுன்னு சொன்னதும், ஆளுக்கொரு பக்கம் ஸ்நாக்ஸ் தர்றீங்க! சாப்பாடு தர்றீங்க! அப்பறம் எப்படிடா உங்க மேல பயம் வரும்?” என்றாள் கேலியாக. “இல்லைனாலும் நீ பயந்து கிழிச்சுடுவ… கழுத்துல கத்தி வைச்சா ஸ்னாக்ஸ் கேட்குற லூசு!” என்று தலையில் தட்டினான்.

ஆரு, “ஹாஹா நிஜமாவே நீ என்னை மிரட்டும்போது எனக்குப் பயமே வரல… ஆனால், அந்த ட்ரக்ஸ், அப்போ தான் நான் கொஞ்சம் கன்ஃபியூஸ் ஆகிட்டேன். அதோட கம்ப்யூட்டர் ஃபுல்லா ட்ரக்ஸ் இருக்கவும், எனக்குச் சுத்தமா யோசிக்கவே முடியல.  அதுவும் அப்போ தான் நான் உன்னை லவ் பண்றேன்னு ஃபீல் பண்ணுன டைமா! சோ, நான் என் கண்ட்ரோல்லேயே இல்லை” என்று உம்மென்று கூற,

அவன், “அந்த மினிஸ்டர் கம்ப்யூட்டர்ல வச்சு தான் ட்ரக்ஸ் கடத்துனான் இசை… அங்க இருக்குற என் ஆளுங்களை வச்சு நான் கடத்திட்டேன்.” என்றவன் கண்கள் மின்ன “அப்போவே நீ என்னை லவ் பண்ணியா?” என்று வியப்பாகக் கேட்க, அவள் “ம்ம்ஹும்” எனத் தலையாட்டி, “அதுக்கு முன்னாடியே…! என்னைக் காட்டுல தனியா விட்டுட்டு போனீல அப்போவே! அதுக்கு முன்னாடி நீ கோபப்படும்போது ஒண்ணும் தெரியல. அந்த டைம்ல என்னன்னே தெரியல, நீ திட்டுனதும் அழுகை வந்துடுச்சு.” என்றதும்,

அவன் உருகி “சாரி இசை…” என்றான் வருத்தமாக. அவள் “அட, உன்மேல செம்மயா கோபம் வரும். ஆனால் உன்னைப் பாத்ததும் சூடு சொரணை எல்லாம் காணாமப் போய்டும்… ஒருவேளை நமக்குத் தான், அந்த ஐட்டம்லாம் காட்டுக்குள்ள வரவும் தொலைஞ்சு போயிடுச்சோன்னு கூட நினைப்பேன்.”  என்று சிரிப்புடன் கூற, அவன் அடித்த கன்னத்தை வருடி விட்டு, “உன்னை ரொம்ப அடிச்சுட்டேன்ல. உன்னை அடிச்சுட்டு என் மேலயே எனக்குக் கோபம் வரும் இசை…” என்று வேதனையுடன் கூறியவன், அவன் அடித்த கன்னத்திலே அழுத்தமாக முத்தமிட்டு, “சாரி டி” என்றான் வதங்கிய குரலில்.

குறு நகையுடன், அவன் நெற்றியில் முத்திரையைப் பதித்தவள், “சரி போ மன்னிச்சு விடுறேன்…” எனப் பெரிய மனது பண்ணி கூற, 

“இந்த வாய் தாண்டி, இந்த வாய் தான்… உன்கிட்ட மொத்தமா இழுத்துடுச்சு. எப்படி தாண்டி நான்ஸ்டாப்பா குதர்க்கமா பேசுற…?” என்று கன்னம் கிள்ளிக் கொஞ்சிட, அவள் ஏதோ பதில் பேச என்று அடுக்களையை பூங்காவாக மாற்றியவர்கள், மொட்டை மாடிக்குச் சென்று நிலவினை ரசித்தனர். பேசிக் கொண்டே, அங்கேயே படுக்கையை விரித்து விடியும் வேளையில் தான் உறங்கினர்.

மறுநாள், “ஐயையோ…! எல்லாரும் இங்க வாங்க!” என்று தமயந்தி கத்தியதில், வேலைக்கு கிளம்பிக் கொண்டிருந்த அனைவரும்,  திடுதிடுவென ஓடி வர, அருணோ, அப்போது தான் குளித்து விட்டு வந்தவன், மனையாள் கத்தியதில் பதட்டத்தில் துண்டுடன் ஓடி வந்தான்.

“என்ன யது ஆச்சு? ஏன் இப்படி கத்துற…?” எனக் கேட்க, அவள் “தேவாவையும் ஆருவையும் காணோம் நான் வீடு ஃபுல்லா தேடிட்டேன்.” என்றிட, வைஷு, “ப்ச் எங்கயாவது வெளிய போயிருப்பாங்கடி” என்க,

தமி, “அவங்க போன் இங்க இருக்கு. கார் வெளிய நிக்குது. அப்பறம் எப்படிடி போயிருப்பாங்க…?” என்றதும், அனைவர்க்கும் லேசாகப் பயம் வந்து விட்டது. விஷ்வா தேவா இல்லை என்றதும் அழும் நிலைக்கே சென்று விட்டான்.

அம்மு வேறு, “எனக்குக் கூட காலைல எந்திரிச்சதுல இருந்து ஒரே மர்மமா நடக்குது. நேத்து நைட் நான் பாத்திரம் கழுவவே இல்ல. ஆனால், காலைல பார்த்தா பாத்திரம்லாம் கழுவி இருக்கு. நைட் நான் ப்ரிட்ஜ்ல வச்ச தோசை மாவு வெளிய இருந்துச்சு…” என்று கண்ணை உருட்டி, ஏதோ பேய் வந்த ரீதியில் கூறிட, அனைவரும் திகைத்தனர்.

முகத்தில் வெயில் சுள்ளென்று அடிக்க, கண்ணைச் சுருக்கிக் கொண்டு விழித்த தேவா, அருகில் போர்வையில் தன்னை சுருட்டி, கட்டை விரலை வாயில் வைத்துத் துயில் கொண்டிருந்த இசையைக் கண்டு, சிறு புன்னகையுடன் அவள் கையை எடுத்து விட்டு, “ஸ்லீப்பிங் பியூட்டி…” என்று கொஞ்சியவன், அவளை எழுப்பினான்.

இந்த வெயில் எல்லாம் என்னை ஒன்றுமே செய்யாது என்ற ரீதியில் அவள் அடித்துப் போட்ட மாதிரி உறங்க, “இசை எந்திரிடி…! ரூம்ல போய்த் தூங்கு…!” என மீண்டும் எழுப்ப, அவளிடம் பதிலே இல்லை.

 

‘நைட் சீக்கிரம் தூங்குனாலே இவள் எந்திரிக்க மாட்டா…’ என்று எண்ணிக் கொண்டு, போர்வையுடனே அவளைத் தூக்கியவன், கீழிறங்கி வர, அங்கு அனைவரும் நிற்பதைக் கண்டு திருதிருவென விழித்தான்.

அவர்களும் அதே பாவனையில் அவனைப் பார்க்க, தமி, “ஐயையோ…!! என்னாச்சு இவளுக்கு? ஏன் நீ இவளைத் தூக்கிட்டு வர்ற?” என்று அவளுக்கு எதுவும் அடிப்பட்டு விட்டதோ என நினைத்துக் கேட்க, 

விஷ்வா, “எங்கடா போன? உங்களைக் காணோம்னு நாங்க இங்க தேடிட்டு இருக்கோம். இவளுக்கு என்ன ஆச்சு?” எனக் கேட்டிட, அனைவரும் சுற்றி நின்று பார்த்ததில் அவனுக்கு வெட்கம் வேறு வந்து விட்டது.

நிஷாந்த், “அடேய்,  என்ன தான் ஆச்சுன்னு சொல்லேன்?” என்று பொறுமையிழந்து கேட்க, தேவா “டேய் ஏண்டா காலங்காத்தால இவ்ளோ கேள்வி கேட்குறீங்க? நாங்க மொட்டை மாடியில தான் தூங்கிட்டு இருந்தோம். இவள் இன்னும் எந்திரிக்கல, அதான் தூக்கிட்டு வந்தேன். போய் வேலையைப் பாருங்க.” என்று கோபமாகப் பேசுவது போல் பேசிவிட்டு, விறுவிறுவென அறைக்குள் சென்றவன், அவளைக் கட்டிலில் கிடத்தி விட்டு, “ஏண்டி! இவ்ளோ பிரச்சனை போகுது… அசையாம எப்படிடி தூங்குற?” என்று தலையில் அடிக்க,

அவள் கண்ணை மூடிக் கொண்டே, அவன் கையை எடுத்துத் தன் கைக்குள் வைத்துக் கொண்டு, “எந்திரிச்சா என்னைக் கலாய்க்குங்க. அதான் தூங்கிட்டேன்… நீயும் தூங்கு.” என்றாள் நக்கலாக.

“அடிப்பாவி, அப்போ முழிச்சு தான் இருந்தியா? கேடி…” என்று முறைக்க, 

அவள் ஒரு கண்ணை மட்டும் விழித்து, “ஆமா,  நீ தூக்கும் போதே முழிச்சுட்டேன். நீ திருட்டுப்பூனை மாதிரி முழிச்சதையும் பார்த்தேன். காலையிலேயே செம்ம பல்போ…” என்றதும், அவன் “உன்னை” என்று அடிக்க நெருங்க, 

ஆரு “ஆஆ” எனக் கத்திக் கொண்டு கட்டிலில் உருண்டு மறுபுறம் சென்று குளியறைக்குள் ஓடி விட்டாள். தேவா தான், ‘எப்படினாலும் வெளிய தான வந்தாகணும் வாடிப் பாத்துக்குறேன்…!’ என்று சிரித்துக் கொண்டான்.

வெளியில் அனைவரும் தமியை முறைக்க, அவளோ “ஹிஹி வீடு ஃபுல்லா தேடுனேன்… ஆனால் மொட்டை மாடியில தேட மறந்துட்டேன்.” என்றதும், அவர்களின் முறைப்பு மேலும் அதிகமாக, அவள் சட்டென அறைக்குள் ஓடினாள்.

அருண், ‘எப்போவுமே மனுஷனை பதட்டமாவே வச்சுருக்குதுங்க…’ என்று புலம்பிக் கொண்டே அறைக்குச் சென்று அவளை முறைக்க, அவள் அவனை மேலிருந்து கீழ் வரை பார்த்து, “இப்படியேவா நீ வெளிய வந்த?” என்றாள் யோசனையுடன்.

“நீ கத்துன கத்துக்கு இதோடையாவது வந்தேன்னு சந்தோசப்படு…” என்றதும், ‘கிளுக்’ எனச் சிரித்தவளின் மேல், தலையணையை தூக்கி எறிந்து விட்டு, சிரிப்புடன் உடை மாற்றச் சென்றான்.

“அவளாவது பரவாயில்லை… ஆனால் நீ ஏதோ பேய் வந்த ரேஞ்சுக்கு ஒரு கதை சொன்னியே” என்று விஷ்வா அம்முவை முறைக்க,  அவள் “ஐயையோ…!” என்று கத்தினாள். 

வைஷு, “இப்ப உனக்கு என்னடி?” என்க, அவளோ “டைம் ஆச்சு எல்லாரும் போய்க் கிளம்புங்க… அதைத் தான் சொல்ல வந்தேன்.” என்று அடுக்களைக்குள் புகுந்திட, நிஷாந்த் தான் ஐயோ என நொந்து போனான்.

சிறிது நேரம் முன்பு தான், வைஷுவிடம் கொஞ்சி, கெஞ்சி, இதழ் முத்தம் வாங்கிக் கொண்டிருந்தான். அதற்குள் கரடியாய் தமி கத்தியதில் வைஷு வெளியில் ஓடி வந்திட, இப்போது அவளை பாவமாகப் பார்த்தான். அவள் சிரிப்பை அடக்கிக் கொண்டு, அம்முவின் பின் சென்றிட, விஷ்வா “ஐயையோ…!” என்று கத்தினான்.

நிஷாந்த்  நிகழ்விற்கு வந்து, “என்னடா?” என்க, “இல்ல,  இப்படி கத்துனா நல்லாருந்துச்சு. அதான் கத்திப் பாத்தேன்… நீயும் கத்திப் பாரேன்…!” என்றதும், அவன் வெறியாகி அங்கிருந்த கத்தியை எடுத்து அவனைத் துரத்த, விஷ்வா “சும்மா பார்த்தோம் கத்தி! இதுக்குலாம் எடுக்கலாமா கத்தி?” என்று மொக்கை போட்டுக் கொண்டே “அம்மு என்னைக் காப்பாத்து.” என்று ஓடினான்.

ஒவ்வொரு நாளும் புது புது அனுபவங்களுடனும், பஞ்சமில்லா சிரிப்புகளுடனும் இவர்களின் நாட்கள் சென்றிட, அன்று காலையில் தொலைக்காட்சியில் செய்தி ஓடிக் கொண்டிருந்தது.

“போதை பொருள் தயாரித்து, மாணவர்களுக்கு விற்பனை செய்து, போதைக்கு அடிமை ஆக்கிய வழக்கிலும், மேலும் மணல் கொள்ளையில் அமைச்சர் ராஜாங்கனுடன் ஈடுபட்டு ஊழல் வழக்கிலும், மேலும் பல வழக்குகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட பிரபல தொழிலதிபர் ஷிவ் என்கிற சிவன், காவல் துறை கண்ணில் மண்ணை தூவி விட்டு, வெளிநாட்டிற்குப் பறந்து விட்டதாகக் கமிஷனர் தெரிவித்துள்ளார்.”

 

இதை அடுத்து அவன் கூறியதாவது: “இந்த வழக்கில், பல நாடுகளுக்குத் தொடர்பு இருப்பதாக எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, சில நாடுகள், சிவனை சட்டத்திற்கு புறம்பான முறையில் இந்திய அரசிடமிருந்து காப்பாற்றி, அவருக்கு உதவிகள் செய்து வருகிறது. எனவே, மறுபடியும் சிவன்,  இந்திய எல்லைக்குள்,  திரும்பி வர முடியாத படி, அவரின் பாஸ்போர்ட், இன்ன பிற அடையாளங்கள் பறிக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் எந்த நாட்டில் இருந்தாலும் சிவனை பிடித்து, தக்க தண்டனை வழங்குவோம். அதோடு, அவருடன் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள், ஆர்க்கியாலஜி துறையில் பெரும் சேதத்தை ஏற்படுத்த நினைத்த அமைச்சர் ராஜாங்கன்,  உட்பட அனைவர்க்கும் கூடிய விரைவில் தண்டனை வழங்கப்படும்.” என்றார்.

“பத்திரிக்கையாளர், சிவன் எந்த நாட்டிற்கு சென்றிருக்கிறார்? என்று எழுப்பிய கேள்விக்குக் காவல் துறை அமைதி மட்டுமே காக்கிறது என்பது புரியாத புதிரே!” என்று செய்தி வாசிப்பாளர் கூறி கொண்டிருக்க, அதனை அணைத்த தேவா, “இங்க ஒர்க் முடிஞ்சுது இசை. நம்ம பெங்களூர் போகணும். அங்க வேற பெண்டிங் ஒர்க் நிறைய இருக்கு… அதுக்கு முன்னாடி நம்ம மறுவீட்டுக்கு போயிட்டு வந்துடலாம். உனக்கு ட்ரான்ஸ்ஃபர் எப்போ கிடைக்கும்?” என்று ஷூ லேசை கட்டிக் கொண்டே கேட்க, அவள் ஆழமாகப் பார்த்து, “மாமா எங்க?” என்றாள்.

“அதான் நியூஸ்ல சொன்னாங்களே? நீ சரியா கேட்கலையா? அந்த ஆளு வெளிநாட்டுக்கு ஓடிப் போய்ட்டான். எப்படியும் என்கிட்ட சிக்குவான் அப்போ பாத்துக்கலாம்.” என்று சாதாரணமாகக் கூறியவனிடம், “தேவ் சொன்னா நம்பிட வேண்டியது தான்.  ஆனால், தேவ செழியனா  இதைச் சொல்றதை என்னால நம்ப முடியலையே!” என்றாள் புருவத்தை உயர்த்தி.

“சில விஷயம் நம்ப கஷ்டமா இருந்தாலும் நம்பி தான் ஆகணும்… அதோட, நான் ஒண்ணும் போலீஸ் இல்ல. ஆதாரம் கொடுக்குறது மட்டும் தான் என் வேல. அவனைக் கண்டுபிடிக்கிறது, அரெஸ்ட் பண்றது எல்லாம் போலீஸோட வேலை” என்றவன் “உன்னை டிராப் பண்ணிடவா?” எனக் கேட்க, அவள் அழுத்தமாக அவனையே பார்த்தாள்.

தேவா பெருமூச்சு விட்டு, “உனக்கு டைம் ஆச்சு கிளம்பலாம்.” என்றிட, அவள் “எனக்கு உண்மை தெரியணும்” என்றாள்.

தேவா அமைதியாக அவளைப் பார்த்து “ஹீ இஸ் நோ மோர். நான் கொன்னுட்டேன். உண்மை தெரிஞ்சுருச்சுல! இப்போ நான் டிராப் பண்ணவா? இல்ல நீயா போய்க்கிறியா?” என்று சிடுசிடுத்தவன், அவள் திகைத்த முகத்தைப் பார்த்து,

“என்னை என்னடி பண்ணச் சொல்ற? ஆரம்பத்துல கூட அந்த ஆளைக் கொலை பண்ணனும்னு நான் நினைக்கல! ஆனால், உன்னை அழிக்கணும்னு நினைச்சவனை அப்படியே விட்டு வைக்கிறதுக்கு நான் என்ன லூசா? உன் மேல தீப்பட்டுருந்துச்சுன்னா நான் நான்… நீ வலியில துடிக்கிறதை நான் எப்படிடி பார்ப்பேன்? அதான் அவன் உன்னைப் பண்ண நினைச்சத, நான் அவனுக்குப் பண்ணிட்டேன்! நினைப்புல கூட உன்னைக் கஷ்டப்படுத்தனுனு யாருக்கும் தோணக் கூடாது. உன்னை லேசா பார்த்தவனையே உயிரோட வச்சு எரிச்சவன் நான். உன்னை எரிக்கணும்னு நினைச்சவனை அப்படியே விடுவேனா…? அவன் சாம்பல் கூட யாருக்கும் கிடைக்காது. இது எல்லாத்தையும் நான் தான் ஃபிரேம் பண்ணேன். கடைசி வரை, போலீஸ் அவனைத் தேடிக்கிட்டே இருக்க வேண்டியது தான்” என்றவன் சில நாட்களுக்கு முன், சிவனை பிடித்து அவன் கத்த கத்த, அவனைப் பேசக்கூட விடாமல் எரித்தே விட்டான். 

அவன் மனதில் இருந்த கோபத்தை வெளியில் காட்டவில்லை என்றாலும், உள்ளுக்குள் அவனை சும்மா விடக் கூடாது என்ற எண்ணம் மட்டும் தீயாக எரிந்து கொண்டிருந்தது அவனுக்கு.

அவன் கோபத்திலும், அவன் செய்த காரியத்திலும், ஆருவிற்கு தான் சில்லிட்டது. கோபத்தில் அவன் அத்தைக்கு ஷாக் கொடுத்து, மூளையை கலங்க வைத்து, மருத்துவமனையில் போட்டாள் தான். ஆனால் கொலை செய்யும் அளவுக்குத் தைரியம் எல்லாம் இல்லை. 

அதோடு, தேவாவின் அம்மா அவரின் வீட்டாரால் துரத்தப் பட்டபோது, அவரை ஆஸ்ரமத்தில் சேர்த்ததும், அவனின் அப்பா படுக்கையில் இருந்திட, அவளுக்குத் தெரிந்த நர்ஸிடம் சொல்லிப் பாத்துக்கொள்ளச் சொல்லியதும் அவள் தான்.

எந்தப் பாவமும் இவனை வந்து சேரக் கூடாது என்றதனாலேயே முடிந்த மட்டும் கோபத்தை அடக்கிக் கொண்டு, இதனைச் செய்தாள். ஆனால், இவனோ அசால்டாகத் தனக்காகவே இரண்டு கொலை செய்திருக்கிறானேயென மிரண்டவள், அவன் கோபத்தில் நடுங்கி நிற்க, தேவா அவள் நடுக்கத்தை உணர்ந்து தலையை அழுந்தக் கோதினான்.

“இதெல்லாம் தப்பு தேவ். நம்ம கோபத்துக்காக உயிரை எடுக்குறதுலாம், ரொம்ப தப்பு.” என்றதும், “நான் இதைப் பண்ணலைன்னா, இந்நேரம் அவன் நம்ம எல்லாரையும் கொன்னுருப்பான். அது பரவாயில்லையா உனக்கு? தப்போ சரியோ, உன்னைக் கஷ்டப்படுத்தணும்னு யாரு நினைச்சாலும் என்னோட தண்டனை இதுவா தான் இருக்கும்!” என்று கடுமையுடன் கூறியவன் வெளியிலேயே சென்று விட அவள் அதிர்ந்து நின்றாள். அவள் மேல இருக்கும் ஓவர் பொஸ்சஸிவ்வில் இப்படி பேசுகிறான்  என்று புரிந்தாலும் மனம் பயத்தில் நடுங்கியது. 

நான்கு ஜோடிகளும் அவரவர் மனையாள் வீட்டிற்கு மறு வீடு செல்ல ஆயத்தம் ஆகினர். ஆருவின் வீட்டில் இவர்கள் அனைவரையும் கண்மணி அழைத்திருக்க, மற்றவர் வீட்டிலும் அப்படியே அழைத்ததில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவர் வீட்டிற்கு சென்று ஆட்டம் போட்டனர். 

ஆரு மட்டும் தேவாவிடம் பேசவே இல்லை. தேவா தான் அவளைப் பேச வைக்க, வேண்டும் என்றே அவளைச் சீண்டினான்.

பின், அனைவரும் மதுரைக்குச் சென்றிட, அங்கு விருந்தே தடபுடலாக இருந்தது. புது மாப்பிள்ளை, பெண்ணைப் பார்க்க அவளின் சொந்தமே ஒரு 60 பேர் அங்கு கூடிட, ஆண்கள் நால்வருக்கும் தான், தலை சுற்றியது. ஊருக்குச் சென்று அவளைச் சமன்படுத்தலாம் என்று தேவா நினைத்திருக்க, 

அங்கோ அவளிடம் பேசக் கூட அவனுக்குத் தனிமை கிடைக்க வில்லை.

எப்போதுமே யாரவது இவர்களைப் பார்க்க வந்து விடுவர். அன்று சிறிது நேரம் யாரும் வீட்டிற்கு வராமல் இருக்க, விஷ்வா “ஹப்பாடா இப்போவாச்சு ரெஸ்ட் விட்டாங்களே… எத்தனை பேரு…!?” என்று மிரளும் போதே, “ஆரு எப்போ வந்த?” என்று ஒரு பெண்மணி வந்து விசாரிக்க, அவள் “யக்கோவ், நான் வந்து ரெண்டு நாள் ஆவுது… இப்போதான் வழி தெரிஞ்சுதாக்கும்…” என்று அவள் பாட்டிற்கு பேச, தேவா நொந்து போனான்.

அருணோ அவனைப் பார்த்து, “மச்சான் இனிமே உன் மாமனார் வீட்டுக்கு நீ மட்டும் வந்துடுடா… முடியல!” என்று புலம்பினான். 

அவர்களின் துணைவியரும் தான் யாரையாவது பிடித்துப் பேசிக்கொண்டிருந்தனர். கல்லூரி படிக்கும் போதே, இங்கு அவ்வப்போது வந்து பழக்கப்பட்டதால் அவர்களுக்கு அனைவரையும் தெரியும்.

வெகுநேரம் பேசி விட்டு அந்தப் பெண் வெளியில் செல்ல, நிஷாந்த், “அவங்க உன் சொந்தக்காரங்களா?” எனக் கேட்க, “இல்ல! என் பக்கத்து வீட்டுக்கார அக்கா…” என்று குண்டு போட்டதில் அவர்கள் நொந்தனர்.

தேவாவோ, “ஏண்டி பக்கத்துக்கு வீட்டுக்காரங்க கிட்ட ஏண்டி இவ்ளோ நேரம் பேசுற…?” என்று முறைக்க, 

ஆரு “ம்ம் பக்கத்து வீடுன்னாலும் ரொம்ப வருசமா தெரியும். அவங்க எனக்கு அக்கா மாதிரி தான்” எனச் சிலுப்பி கொண்டதில், “ஊர்ல இருக்குற பாதி பேரை நீ இப்படி தாண்டிச் சொல்ற… இதோட அவ்ளோ தானா இல்லை வேற யாரவது வருவாங்களா…?” என்றான் பாவமாக. அவர்களுக்கும் இதெல்லாம் புது விதமாக நன்றாகத் தான் இருந்தது. ஆனால், இவர்களைக் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்களே என்ற கடுப்பு தான் நால்வருக்கும்.

விஷ்வா சும்மா இல்லாமல், “ஊரா இது? சுத்தி பார்க்க ஒண்ணுமே இல்ல. இதே சென்னை, பெங்களூர்ன்னா பார்க்க அவ்ளோ இடம் இருக்கும்… ரொம்ப மொக்கையா இருக்கு” என்று கடுப்பில் கூற, ஆரு பொங்கி விட்டாள்.

“எங்க ஊரைப் பத்தி என்ன வார்த்தை சொல்லிட்ட? சென்னை, பெங்களூருல எல்லாம் ஒரு இடத்தை ஒரு தடவை தான் சுத்தி பார்க்க முடியும். மறுபடியும் அங்க போக கூட போர் அடிச்சுடும்… 

 

ஆனால் இங்க ஒரு தடவ போனா,  திரும்பத் திரும்ப, ஊரைச் சுத்தி பார்க்கணும்னு தான் தோணும்” என்றதும்,தேவா அவள் கோபத்தில் சுவாரஸ்யமாகி, “அப்படி ஒண்ணும் இங்க இருக்குற மாதிரி தெரியல” என்றான் 

அவளை விழிகளால் பருகிக் கொண்டே. ஆரு அவனை முறைத்து, “இன்னைக்கு ஃபுல்லா மதுரையை சுத்துறோம் வாங்கடா!” என்று தேவாவை பாராமல் வெளியில் செல்ல, விஷ்வா “ஹப்பா,  இப்பயாவது  இவளுக்குச் சுத்தி காட்டணும்னு தோணுச்சே… போட்ட பிட்டு வேஸ்ட் ஆகலை” என்றிட, அம்மு “ஐயோ, இவள் ஊரைப் பத்தி சொல்ல ஆரம்புச்சா விட மாட்டா. ஏற்கனவே நாங்க இந்த மாதிரி சொல்லி ரொம்ப அனுபவிச்சுருக்கோம். ஏண்டா உங்களுக்கு இந்த வேண்டாத வேலை?” என்று தலையில் அடித்தாள்.

ஆரு அனைவரையும் கூட்டிக்கொண்டு முதலில் மீனாக்ஷி அம்மன் கோவிலுக்குச் செல்ல, அங்கிருக்கும் சிலைகளைப் பற்றியும், ஆயிரங்கால் மண்டபம் பற்றியும், தெப்பக்குளம் பற்றியும் பேசிக் கொண்டே அவர்களுக்குச் சுற்றி காட்ட, அவர்கள் வியப்பாகப் பார்த்தனர்.

நான்கு திசைகளிலும் நான்கு கோபுரங்களும், ஆங்காங்கே இருந்த கடைகளும், சிற்ப சிலைகளும், கோவிலின் வடிவமைப்பும் அவர்களை வேறொரு உலகத்திற்கு கூட்டிச் செல்ல, ஆருவையே பார்த்துக் கொண்டிருந்த தேவா கூட, கோவிலின் எழிலிலும் வேலைப்பாட்டிலும் அசந்து போனான். அங்கு இல்லாத பொருட்களே இல்லை என்பது போல் எங்கு திரும்பினாலும் அங்காடி கடைகளும், பெரிய பெரிய ஆடை கடைகளும், 

அதோடு, கைவினை பொருட்கள், அலங்கார பொருட்கள் என ஒரு பெரிய மண்டபம் முழுதும் வெறும் கடைகள் மட்டுமே மின்ன, அதனுள் சென்று வரவே அவர்களுக்குச் சோர்வாகி விட்டது.

அருண், “சரி அவ்ளோ தான? வீட்டுக்குப் போலாமா” என்று நடக்க முடியாமல் கேட்க, ஆரு “நம்ம ஒரு இடத்துக்குத் தான் வந்துருக்கோம். இன்னும் போகணும் வாங்க…” என்று சாப்பிட கூடஎதுவும் வாங்கிக் கொடுக்காமல், திருமலை நாயக்கர் மஹால் கூட்டி சென்றாள்.

அங்கிருந்த தூணினை கண்டு விழி விரித்தவர்கள், அதன் பிரம்மாண்டத்தில் வியந்து நின்றனர். வைஷு, “ஹே போதும் பா. ரொம்ப அலைய வைக்காத! சாப்பிட ஏதாவது வாங்கியாவது குடு… பசங்க மயங்கிடப் போறாங்க.” என்று பாவம் பார்க்க, ஆரு “பசிச்சா வாயைத் திறந்து கேட்கட்டும். எங்க ஊருல ஒண்ணும் இல்ல, மொக்கைன்னு சொன்னானுங்கள்ல நல்லா அலையட்டும்.” என்று வீம்பு பிடிக்க,

தேவா, ‘ஐயோ இவள் வேற இப்படி பழி வாங்குறாளே! பசிக்க வேற செய்யுது, கேட்டா கேவலமா பார்ப்பா’ என்று மனதினுள் புலம்பிக் கொள்ள, ஆரு “அடுத்து திருப்பரங்குன்றம் போகலாமா?” என்று கேட்டாள். நிஷாந்த், “அது என்ன இடம்?” என்று கேட்டதும், “மலை உச்சியிலே கோவில் இருக்கும்… அங்கிருந்து பார்த்தா…” என்று ரசனையாகச் சொல்ல, அருண் “ஆமா அங்க இருந்து பார்த்தா… பசி மயக்கத்துல அப்படியே கீழ விழுக வேண்டியது தான்” என்று நொந்திட, 

விஷ்வாவோ, “ஹையோ சுத்திப் பார்க்க வந்தோம் ஊரு! பழி வாங்காம போடு சோறு!” என்றான் பசியுடன்.

அவள், “இப்போ தெரியுதா? என்னமோ,  என் ஊர் ல ஒண்ணும் இல்லைன்னு சொன்னீங்க. ஒரு  இடத்துக்குப் போயிட்டு வரவே மயங்கிட்டீங்க… ஹ்ம்ம்?” என்று கேலியாக வினவ, விஷ்வா “தெரியாம வாயை விட்டுட்டோம் தாயே. பாத்து ஏதாவது பண்ணு. இங்க சாப்பாடாவது கிடைக்குமா…? இல்ல” என்று அடுத்த ஆப்பை அவனே வாங்கி கொள்ள, அவளோ மேலும் பொங்கி விட்டாள்.

“அது உங்க ஊர்ல … அங்க அர்த்த ராத்திரியில பசியோட போனா ஒரு பன்னு கூடக் கிடைக்காது. இங்க வயித்துக்கு பஞ்சமே இல்லாம, எல்லாமே இருக்கும் எல்லா நேரத்துலயும்…” என்றாள் முறைப்புடன். தேவா, ‘ஐயோ இவ அடுத்து ஆரம்புச்சுட்டாளே’ என்று நொந்து கொண்டிருக்கும் போதே, நிஷாந்த், “அப்படி என்ன இருக்கும் இங்க?” என்று கேள்வி வேறு கேட்டு வைக்க, தேவா “ஏண்டா?” என்று முறைத்தான்.

“இங்க இல்லாததே கிடையாது. உனக்கு என்ன நேரத்துல என்ன சாப்பிடணும்னு தோணுதோ அதை சாப்பிடலாம்…காலைல சால்னால ஊறுன சுல்தான் கடை பரோட்டா, மதியத்துக்கு அம்சவல்லி பிரியாணி, நைட்க்கு கோனார் கடை கறி தோசை, காரமா சாப்டதுக்கு ஜில்லுன்னு இருக்க ஜிகர்தண்டா, பெரியார்ல திக்கா ரோஸ் மில்க், ஒரு ஏரியா புல்லா முறுக்கு, அதிரசம், சீடை, லொட்டு லொசுக்குன்னு ஸ்னாக்ஸ்சு, சாயந்தரம் உளுந்த வடை, டீ ன்னு” என்று அடுக்க ஆரம்பிக்க, 

அவள் சொன்னதிலேயே அனைவருக்கும் பயங்கரமாகப் பசி எடுக்க ஆரம்பித்தது.  தேவா அனைவருக்கும் காருக்குப் போக சொல்லிக் கண்ணை காட்ட, அவர்களோ ‘கிராதகி வாயில சொல்றாளே தவிர, எதையாவது வாங்கித் தராளா?” என்று முறைத்துக் கொண்டே செல்ல, ஆரு அவர்கள் சென்றதை கவனியாமல், “அது போக, பாதாம் பால்” என்று பேசும் போதே, தேவா அவள் முகத்தைத் தன் புறம் இழுத்து, அவளின் ஓயாமல் பேசும் இதழைத் தன் வசப்படுத்தினான். அவனின் திடீர் தாக்குதலில், நிலை குலைந்தவள் கண்ணை விரித்துத் திகைக்க, அவனோ அவள் விரிந்த கண்களை ஆழமாகப் பார்த்துக் கொண்டே, இதழில் மூழ்கி வதைக்க ஆரம்பிக்க, அவனின் முதல் முத்தத்திலும், ஆழ்ந்த பார்வையிலும் கிறங்கிப் போனவள், கண்கள் மூடி, அவன் மூச்சுக்காற்றை சுவாசிக்க ஆரம்பித்தாள்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
4
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்