அத்தியாயம் 29
நிதர்ஷனாவை சமன்செய்ய தெரியாதவனாய், “ஏய்… உன் வீட்டு ஆளுங்களை கட்டிப்பிடிச்சு அழுவன்னு பார்த்தா என்னடி என்னைக் கட்டிப்பிடிச்சுட்டு நிக்கிற?” என அவளிடம் அடிக்குரலில் கிசுகிசுத்து நக்கல் செய்தான்.
அந்த சீண்டலில் வெடுக்கென அவனிடம் இருந்து நகன்றவளுக்கு ஐயோ என்றிருந்தது.
‘அங்க சுத்தி இங்க சுத்தி இவன்கிட்டயே போய் ஒட்டிட்டு இருக்கோமே” எனப் புலம்பிக் கொண்டவள், உர்ரென்று இருந்தாள்.
“நிவேதன் கிடைக்கட்டும். மத்ததை அப்பறம் யோசிக்கலாம்” என்றிட உடன்பிறக்காது போனால் அவன் தமையன் இல்லையென்றாகி விடுமா? அவன் என் அண்ணன் தான் எனத் தீர்மானமாக முடிவெடுத்துக் கொண்டவளின் முகம் தெளிவுற்றது.
ஆதிசக்தி, “அப்போ அமுதவல்லியோட இறப்பு கொலைன்னு சொல்றியா? யார் செய்யணும்? ஏன் நீலகேசி இதுக்குள்ள வரணும்? ஒன்னும் புரியலையே…” என்றார் குழப்பத்துடன்.
இளவேந்தனோ, “எல்லாம் அவனால வந்தது தான்…” என நரம்பு புடைக்க சீறிட, “யாரு?” என்றான் யாஷ் பிரஜிதன்.
ஆதிசக்தி கொடுத்த கையழுத்தத்தில் மௌனம் காத்தவர், முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டார்.
அதனை யாஷும் கண்டு விட்டு, இருவரையும் ஏறிட்டான்.
“எதையும் மறைக்க நினைக்காதீங்க!” என அழுத்தமாகக் கேட்க,
மகேந்திரன் நிலையை சீர் செய்யும் பொருட்டு, “எது எப்படியோ… செத்துப் போய்ட்டான்னு நினைச்ச என் பேத்தி திரும்ப கிடைச்சது ரொம்ப சந்தோஷம்பா” என்றார்.
“உன் அண்ணன் யார்னு தெரியல. அவனும் வரட்டும்மா. இங்கயே இருக்கட்டும்” என்ற பெரியவருக்கு பேத்தியைத் தன்னுடனே வைத்துக் கொள்ள ஆசை எழுந்தது.
அவளோ “நான் விவரம் தெரியாத வயசுல இருந்து வளர்ந்தது எல்லாம் ஒரு ஸ்லம் ஏரியால. உங்க குடும்பத்துல நடிக்கிறதே எனக்கு பெரும்பாடு. இதுல எப்படி தாத்தா குடும்பத்துல ஒருத்தரா என்னால இருக்க முடியும்?” என நிதானமாய் கேள்வி எழுப்ப,
“அது எப்படிம்மா… எங்க வளர்ந்துருந்தாலும் நீ இந்த வீட்டு இரத்தம் தான?”
“நான் கவுச்சி எல்லாம் சாப்பிடுவேன்”
“உனக்கு என்ன பிடிக்குதோ சாப்பிடுமா.”
“ஓஹோ… உங்க இரத்தம், உங்க நாட்டுப் பொண்ணு அதுனால நான் சேரில வளர்ந்துருந்தா கூட பரவாயில்ல, நான் வெஜ் சாப்பிடுற பொண்ணா இருந்தாலும் பரவாயில்ல. என்னை பேத்தியா ஏத்துக்க துடிக்கிறவங்க, வெளிநாட்டுக்காரனுக்கு பிறந்தவனை மட்டும் இரத்தத்துக்கு பதிலா காவா ஓடுதுன்னு இங்கிருந்து ஓட விட்டது எதுக்காம்?” துடுக்காய் வார்த்தைகளை விட்டிருந்தாள் அவள்.
மகேந்திரன் அதிர்ந்தே விட்டார். நெஞ்சம் நடுங்கிப்போனது.
“தப்பு தான்மா… இப்ப புரியுது!” தலையைக் குனிந்து அவர் தவறை ஒப்புக்கொள்ள,
“புருஞ்சா சரி தான்… ஆனா அதுக்காக என்னால இங்க இருக்க முடியாது” என்றாள் தீர்மானமாக.
யாஷ் பிரஜிதன் நிதர்ஷனாவையே சுவாரஸ்யமாகப் பார்த்திருந்தான்.
தற்போதைய நிலையிலும் தன்னைப் பற்றியே சிந்தித்து அவர்களிடம் செய்யும் வாக்குவாதங்கள் அவனுக்கு புன்னகையைத் தந்தது.
நிதர்ஷனா யாஷிடம் திரும்பி, “உங்க வேலை முடிஞ்சுது தான. இனி இங்க இருந்து நான் நடிக்கத் தேவை இல்லைல. என்னை ஊருக்கு அனுப்பி விடுங்க” என்றாள் வீம்பாக.
இளவேந்தனோ, “இத்தனை வருஷம் கழிச்சு எனக்கு கிடைச்சுருக்குற உறவு நீ. இப்ப பாதில போறேன்னு சொல்றியே நிதர்ஷனா. யாஷ் விஷயத்துல இங்க எல்லாரோட முடிவும் தப்பு தான். அதே தப்ப உன் விஷயத்துல என்னையும் எடுக்க சொல்றது நியாயமா?” அவளிடம் கண்ணில் நீர் மின்ன மன்றாடினார்.
யாஷ் விஷயத்திலும் கூட, அவனுக்காக பரிந்துரைத்தது அவர் மட்டுமென இளையவர்களும் அறியவில்லை.
அவரது கண்ணீர் நிதர்ஷனாவிற்கு வருத்தத்தைக் கொடுத்தது தான். ஆகினும், இங்கிருக்க மனம் வரவில்லை.
“என் அப்பா, அம்மா யாருனு எனக்குத் தெரியாது. சின்ன வயசுல இருந்து யாராவது இந்தக் கேள்வியைக் கேட்டு கேலி பண்ணுனா ரொம்ப கோபம் வரும். ஆனா இனிமே கோபப்பட தேவை இல்லைல மாமா. மத்தவங்ககிட்ட விளக்க வேண்டியது இல்ல. ஆனா என்னை யாரும் குப்பைல இருந்து எடுக்கல. எனக்குன்னு சொந்த பந்தம் இருக்குன்னு நினைச்சுக்குவேன். யாஷோட விஷயத்துல தவிர, எனக்கு உங்க எல்லாரையுமே பிடிக்கும். ஆனா… நிவே… என்னால அவனை விட முடியாது மாமா. புருஞ்சுக்கோங்க” என்றாள் குரல் நடுங்க.
“நீ அவனை விட வேணாம். அவனும் வரட்டும். இங்கயே இருக்கட்டுமே” ஆதிசக்தி கூற, அவளிடம் பதில் இல்லை.
யாஷ் தான் சற்றே சிந்திக்கும் பாவனையுடன், “நிவேதன் கிடைக்கிற வரை இங்க இரு கடன்காரி. இதான் உனக்கு சேஃப். அவன் கிடைச்சதும் நீ அவன்கூட போறதுன்னா போ. உன் விருப்பம் தான்” என்றதும் அதற்காகவாது சம்மதிப்பாளா என்றே அவளைப் பார்த்தது மொத்த குடும்பமும்.
கன்னம் வழியே வழிந்த கண்ணீருடன், “நிவே என்னைத் தேடி எங்க வீட்டுக்குப் போனா? சரி… அவன் வர்ற வரை இங்க இருந்தேன்னா, அவன் வந்தப்பறம் இதான் என் குடும்பம்னு அவனுக்குத் தெரிஞ்சுடுமே. அப்படி தெரிஞ்சுட்டா, என்னை இந்தக் குடும்பத்துல இருந்து பிரிச்சு கூட்டிட்டுப் போய்டுவான்னா நினைக்கிறீங்க. என்னை இங்கயே விட்டுட்டுப் போயிடுவான் யாஷ். எனக்கு கிடைக்காத குடும்பம் உனக்குக் கிடைச்சுருக்குன்னு என்னைக் கண்டிப்பா இங்க விட்டுட்டுப் போயிடுவான்…” எனும்போதே பேசக்கூட இயலாதவாறு வார்த்தைகள் கதற, தரையில் அமர்ந்து தேம்பி அழுதாள்.
தமையன் மீதான அவளது புரிதலும் தங்கை மீதான இதுவரை முன்பின் பார்த்திராதவனின் பேரன்பும் இதயத்தின் ஆழம் வரை தீண்டியது யாஷ் பிரஜிதனுக்கு.
இதுவரை அவன் கேட்டிராத, உணர்ந்திடாத இந்த அன்பிற்காக நிச்சயம் நிவேதனை உடனடியாகக் கண்டறிய வேண்டுமென தீர்மானம் எடுத்துக்கொண்டான்.
எத்தனை முட்டி மோதியும் அவனைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைத்திடாமல் போனது தான் விந்தை அவனுக்கு.
ஒருவேளை அவனாக இவளை விட்டுச் சென்றிருந்தால்? அவன் இறந்து போயிருந்தால் கூட பரவாயில்லை, இந்தப் பைத்தியாக்காரப் பெண் வைத்திருக்கும் அன்பை உதாசீனம் செய்யாதவனாக இருந்தால் போதுமென்ற எண்ணமே நிறைந்திருந்தது.
தமையன் பொய்த்துப் போனால், அவளுக்கு வலிக்குமே! அதே வலி அவனுக்கும் தானே கடத்தப்படும்!?
அவனென்ன அவளருகில் இருந்தா பார்க்கப் போகிறான்… பிறகெதற்கு இந்த துடிப்பு என உணர்ந்திடாதவன், அவளை முட்டியிட்டு எழுப்பினான்.
“சரிய்ய்… நீ ஊருக்கே போ. இங்க இருக்க வேணாம். போதுமா. டோன்ட் க்ரை. நீ அழுதா எனக்குப் பிடிக்கலைன்னு பல தடவை சொல்லிட்டேன்” என்றான் எச்சரிக்கையாக.
அதில் கண்ணைத் துடைத்தபடி தலையாட்டிக் கொண்டாள்.
அவளது கண்ணீர் மற்றவர்களுக்கும் வருத்தத்தைத் தந்தது. அவளாக புரிந்து கொண்டால் மட்டுமே இனி அவளுடன் சொந்தம் கொண்டாடுவது சாத்தியம் எனப் புரிய, இளவேந்தன் அவளருகில் சென்றார்.
“இப்பவே போகணும்னு இல்லைல. அட்லீஸ்ட் நாளைக்கு யாஷ் போற வரைக்குமாவது இங்க இருக்கலாமேடா…” எனப் பரிவுடன் கேட்க, “இருக்கேன் மாமா…” என வேகமாகத் தலையாட்ட நிம்மதி பெருமூச்சு அவரிடம்.
கண்மணி மீண்டும் வினவினாள்.
“உண்மையாவே இவங்க எனக்கு அண்ணி இல்லையாண்ணா?”
“இல்ல” அசட்டையாகத் தோள்குலுக்கிக் கொண்டவனை முறைத்து வைத்தாள்.
“அப்போ ஊட்டி விட்டதுன்னு சொன்னதுலாம் பொய்யா?” என அவள் சிலுப்பிக்கொள்ள,
“அதெல்லாம் உண்மை தான்” அதற்கும் எளிதாக தலையசைத்தவனைக் கண்டு மயக்கமே வந்தது கண்மணிக்கு.
சிந்தாமணியோ “எப்படியா இருந்தாலும் அவங்க உனக்கு அண்ணி முறை தான். எனக்கு அக்கா முறை தான் கண்மணி. ம்ம்ஹும் உனக்கு இன்னும் ஒரு அண்ணன் இருந்திருந்தா அவனுக்கே கட்டி வச்சு இங்கயே இருக்க வச்சுருக்கலாம்…” என ஓரக்கண்ணில் யாஷ் பிரஜிதனை நோட்டமிட, அவனது முகம் கடுகடுத்தது.
“நீ ப்ரோக்கர் வேலை ஒன்னும் பார்க்கத் தேவை இல்ல” எனப் பொரிந்தான்.
“ஏன் ஏன்? சொந்த மாமா மகனைக் கட்டி வைக்கிறதுல என்ன தப்பு இருக்கு. உங்களுக்கு தான் ஆள் இருக்குன்னு சொல்லிட்டீங்க” எனக் குமுறியவள், ஆதிசக்தியிடம் “நீங்க இன்னொரு பையனைப் பெத்துருக்கலாம்” என்று வாரினாள்.
அவரும் யாஷ் பிரஜிதனின் முகத்தையே ஆராய, அவனோ தனது பச்சை மஞ்சள் விழி கொண்டு தாயை நோக்கித் தீப்பார்வை வீசினான்.
யாஷ் பிரஜிதன் தனக்கு ஒரு வகையில் முறைப்பையன் என அறிந்ததும், நெஞ்சில் பல இடிகள் முழக்கம் கொண்டது நிதர்ஷனாவிற்கு.
அன்று இரவு அனைவர்க்கும் உணவு வரவைத்தவன், நிதர்ஷனாவை மட்டும் உண்ண விடவில்லை.
“இன்னைக்கு டின்னர் நம்ம வெளில போறோம்!” அவன் பணித்ததும்,
சிந்தாமணி, “ஹெலோ மாமா… இப்ப தான் அவங்க உங்க வைஃப் இல்லையே. நீங்க நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளில கூட்டிட்டுப் போக முடியாதாக்கும்” என்றதில் ஏற்கனவே உள்ளுக்குள் காய்ந்திருந்த யாஷ் பிரஜிதனுக்கு கோபம் எல்லையைக் கடந்தது.
“யூ மைண்ட் யுவர் ஒன் பிசினஸ். நீ என்கூட வர்ற தான?” பளபளத்த விழிகளில் தெரிந்த அதிகபட்ச சினத்தில் ‘பே’ வென உறைந்திருந்த நிதர்ஷனா, அவசரமாக “வரேன் வரேன்” என்றாள்.
அதன்பிறகே அவளது விறைத்த மார்பு இளகியது.
ஆதிசக்தியோ “அவள் சொல்றதுல என்ன தப்புருக்கு. என்ன இருந்தாலும் கல்யாணம் ஆகாத பொண்ணை உண்மையைத் தெரிஞ்சுருந்தும் உன்கூட அனுப்புறதுல எனக்கு விருப்பம் இல்ல யாஷ். தப்பும் கூட!” என்றார் தீர்மானமாக.
“நான் உங்க எக்ஸ் ஹஸ்பண்ட் மிஸ்டர் அலெஸ்ஸாண்டரோவும் இல்ல. என் ஆலம்பனா நீங்களும் இல்ல. சோ இதுல தப்பு சரி எதையும் நீங்க ஜட்ஜ் பண்ண வேணாம்” என சுருக்கென வார்த்தையை விட்டிருக்க, “யாஷ். திஸ் இஸ் தி லிமிட்” என குரலை உயர்த்திக் கண்டித்தார் இளவேந்தன்.
அவன் அதிகப்படியாய் பேசி விட்டது அவரையும் காயப்படுத்தியது. இறுகிப்போன ஆதிசக்தி அதனை நிமிர்வுடனே எதிர்கொண்டார்.
கலங்கி நின்ற கண்கள் மட்டும் அவரது உடைந்த உள்ளத்தைப் பறைசாற்றியது.
யாஷ் பிரஜிதன் எவ்வித உணர்வுமின்றி வெளியேறி விட, நிதர்ஷனா அனைவரையும் சங்கடத்துடன் பார்த்து விட்டு அவன்பின்னே சென்றாள்.
அவன் காரில் ஏறி அமர்ந்து அவளைத் திரும்பிப் பார்க்க, அவளும் ஏறிக்கொண்டாள்.
இருவரிடமும் பலத்த அமைதி.
“இருந்தாலும் இது டூ மச் யாஷ்…” நிதர்ஷனாவே அமைதியைக் கலைக்க, நேரம் செல்ல செல்ல அவனுக்கே ஆதிசக்தியின் உடைந்த உருவம் காயம் கொடுத்ததோ தெரியவில்லை. அவன் மறுக்கவில்லை.
“உன்னைக் கூட்டிட்டுப் போக எல்லார்கிட்டயும் பெர்மிஷன் வாங்கணும்னு அவசியம் இல்லை தான? என்னை நிக்க வச்சு கேள்வி கேட்க அவங்கள்லாம் யாரு? நீ இந்த வீட்டுப் பொண்ணுன்னு உண்மையைச் சொன்னது உனக்காக மட்டும் தான் நிது. அவங்களுக்காக இல்ல” என்று அழுத்தமாக உரைக்க,
“இது தமிழ்நாட்டு கலாச்சாரம். பொண்ணோட சுத்துறது வெளிநாட்டுல வேணும்னா சகஜமா இருக்கலாம். இங்க அப்படி இல்ல யாஷ். அதுனால கண்டிச்சு இருக்கலாம்…” அவளும் சமன்செய்தாள்.
“அப்போ நீயும் கதிரவனும் வெளில சுத்துறப்ப யாராச்சு உன்னை கண்ட்ரோல் பண்ணுனா, நீ அமைதியா இருப்பியா?” யாஷ் கேட்டதும் அவள் பொங்கி எழுந்தாள்.
“அவன் என் பெஸ்ட் ப்ரெண்ட்!”
“அப்போ நான் யாருடி?” காரை நிறுத்தி விட்டு அடிக்குரலில் கர்ஜித்தான்.
என்னவென சொல்வாள். வெறும் நண்பன் என்றா?
உயிரதில் உருகிக் கரைந்து நிறைந்து விட்டவனிடம் எப்படி சொல்ல, ‘நீ என் உலகம்’ என.
விழிகளில் நீர் திரள தொடங்க, உதடும் துடித்தது.
“நீ… நீங்க என்…” என்றவளின் முக மாற்றத்தைக் கூர்ந்து ஆராய்ந்தான்.
அவனது பார்வையில் பதற்றம் தோன்ற, தன்னைக் கண்டுகொண்டால் அதை விட பெரிய வேதனை வேறெதுவும் இருக்காது என்ற எண்ணத்தில், “நீ என் அரக்கன்யா…” என்றாள் சட்டென குறும்பு தொனியை உருவாக்கி.
அதில் இலகுவாகச் சிரித்தவன், “யூ ஆர் மை பிலவ்ட் ஆலம்பனாடி” எனக் கன்னம் கிள்ளி விட்டு,
“திஸ் இஸ் தி லாஸ்ட் ரைட் நிது. லவ் யூ அண்ட் ஐ ஆம் கோன்ன மிஸ் யூ!” எனத் தோளோடு அணைத்து விடுவித்தவன், இயல்பு மாறாமல் காரைக் கிளப்ப, தனதியல்பு மொத்தத்தையும் அவனிடமே தொலைத்து நின்றவள் அவள் மட்டுமே.
அத்தியாயம் 30
அதி நவீன உணவகத்திற்கு நிதர்ஷனாவை அழைத்துச் சென்ற யாஷ் பிரஜிதன், அவளுக்குப் பிடித்த அசைவ உணவு வகைகளை ஆர்டர் செய்து அவள் முன்னே கடை பரப்பினான்.
“என்ன இவ்ளோ இருக்கு? இதை எப்படி சாப்புடுறது?” நிதர்ஷனா முறைத்தபடி கேட்க, “உனக்கு என்ன பிடிக்குதோ சாப்பிடு…” என்றான் தாடையைத் தடவி அவளை பார்த்தபடியே.
“கடைசியா பலி குடுக்கப்போற ஆட்டுக்கு இப்படி தான் தலையைத் தடவி குடுத்து வயிறு முட்ட சாப்பாடு குடுப்பாங்க. எனக்கு மைண்டு அங்கேயே போகுது யாஷ்!” எனப் பரிதாபமாக உரைக்க, அவனது நிறத்திற்கு ஏற்ப போட்டி போட்டு மின்னும் பற்கள் ஒளிரப் புன்னகைத்தான்.
“ஓவர் டோஸ்ல யோசிக்காதடி. நான் இங்க இருந்தாலும் அங்க போனாலும் உன்னோட சேஃப்ட்டிக்கு எல்லாமே செஞ்சுருப்பேன்” எனத் தீர்மானமாக உரைக்க, அது இனித்தாலும் “என்னவோ சொல்ற… ம்ம்!” என சலித்தபடியே உணவை உண்டாள்.
நெஞ்சம் நிறைய அவனைப் பிரியும் வேதனைப் பரவி இருக்கும்போது பிடித்த உணவை எவ்வாறு விழுங்க இயலும். ஆகினும் சமாளித்து வலுக்கட்டாயமாக கொறித்தவள், “என்னால சாப்பிட முடியல. இவ்ளோ வாங்கி வேஸ்ட் பண்ணிட்டீங்களே” என உணவு வீணாவதில் வருத்தம் கொண்டாள்.
“ஏன் சாப்பிடவே இல்ல?” யாஷ் புருவம் சுருக்கிக் கேட்க,
“அது… தலைவலிக்குது” என்றாள் அவனைப் பாராமல்.
“அதுக்கு தான் அழாதன்னு சொல்றது. தலைவலில கொண்டு வந்து விட்டுடும்…” எனத் திட்டியபடியே அவளை அழைத்துக்கொண்டு வீடு நோக்கிச் சென்றவன், மறக்காமல் தலைவலி மாத்திரையையும் வாங்கிக் கொண்டான்.
“இதைப் போட்டுக்கோ…” என மாத்திரையைக் கொடுக்க, மறுக்காமல் போட்டுக்கொண்டாள்.
இளவேந்தன் வீட்டு வாசலிலேயே நிற்க, அவரைப் பார்த்தும் பார்க்காத வண்ணம் தனது வீட்டு வாசலில் காரை நிறுத்தினான் யாஷ்.
ஓரளவு அவனைக் கணித்து வைத்திருந்தவர், அவனை முறைத்தபடியே நடந்து அந்த வீட்டிற்குச் செல்ல, “என்ன மாமா இன்னும் தூங்கலையா?” எனக் கேட்டாள் நிதர்ஷனா.
“தூங்குற மாதிரியா நிலைமை இருக்கு. கைக்கு கிடைச்ச உறவை தக்க வச்சுக்க முடியாததே என்னை கொல்லுது நிதர்ஷனா” என்றவர் யாஷ் புறம் திரும்பாமல், “நீ அங்க வந்து தூங்கு” என்றார் அழுத்தமாக.
அவளோ “சரி” எனத் தலையாட்டி விட்டு பின் யாஷைப் பார்க்க, அவனோ “உள்ள போ!” என்று பணித்தான் அதிகாரமாக.
“யாஷ்…” எனத் தயங்கியவளுக்கும் இளவேந்தனின் எண்ணம் புரிந்தது.
திருமணம் ஆகாதவளை தனியே ஒரு ஆடவனுடன் தங்க வைப்பது முறையல்ல என்றே கூறுகிறார். ஆனால், அவன் புரிந்து கொள்ள சாத்தியமில்லையே.
“உன்னை உள்ள போன்னு சொன்னேன்” அமைதியாக அதே நேரம் உறுமலுடன் வெளிவந்தது அவன் குரல்.
அவளுக்கென ஒரு குடும்பமே ஆதரவு தெரிவிக்கும்போது அவனது அதட்டலுக்கு பயப்படும் ரகம் அவளல்ல.
ஆதரவு கிடைக்காவிடினும், அவளாக விருப்பப்பட்டே நடிக்க வந்ததால் தான் அவளை இலகுவாக அவனால் சரி செய்ய இயன்றது. அது அவனும் அறிந்த ஒன்றே.
இப்போது அவனது அதட்டல்களையும் உத்தரவுகளையும் ஏற்பது அவன் மீதுள்ள பயத்தால் அல்ல. இருவருக்கும் நேர்ந்த அன்புப் பிணைப்பால் மட்டுமே!
இளவேந்தன் அதட்டிப் பார்த்தும் கெஞ்சல் தொனியில் கேட்டுப்பார்த்தும் ஆடவன் அசையவே இல்லை.
“நாளைக்கு நான் பிளைட் ஏறுற வரை அவள் என்கூட மட்டும் தான் இருப்பா. உங்களுக்கு வேணும்னா அவள்கிட்ட இங்க இருக்க எக்ஸ்டரா டைம் கேட்டுக்கோங்க. அது உங்க திறமை” என்று எகத்தாளமாகக் கூறி விட்டுச் சென்றவனை முறைக்க மட்டுமே முடிந்தது அவரால்.
ஏற்கனவே வீட்டினுள் சென்றிருந்த நிதர்ஷனாவிற்கு, ‘இவனோட பெரிய ரோதனை…’ என்று தலையில் அடித்துக்கொள்ளவே தோன்றியது.
அவனோ உள்ளே வந்ததுமே, “கீழ பேக் சைட் கார்டன்ல வாக்கிங் போகலாமாடி?” எனக் கேட்க, என்ன ஒரு அதிசயம் என்றே இருந்தது.
“ம்ம் போலாமே!” என்றவள் உடையை மாற்றிக்கொண்டு வர, அவனோ எப்போதும் குளித்து விட்டே நகர்பவன் இன்னும் உடையை மாற்றாது அவளுக்காகக் காத்திருந்தான்.
“என்னாச்சு நீங்க குளிக்கல?”
“கொஞ்சம் ஹேப்பின்ஸ் ஓவர்லோடட் சோ…” என இழுத்தான்.
“சோ?” புருவம் நெறித்து அவள் கேட்க,
“ட்ரிங்க் பண்ணப் போறேன்” என்றவன், வெகுநாளாய் அறையில் இருந்து ப்ரிட்ஜில் வீற்றிருந்த வைன் பாட்டிலை எடுத்தான்.
கூடவே இரண்டு க்ளாஸ்களும். ஒரு க்ளாசில் தனக்கு நிரப்பியவன், “உனக்கு கோல்ட் ஓகே தான?” எனக் கேட்க இதயமே வெடித்து விட்டது.
“என்னைப் பார்த்தா ராவா சரக்கடிச்சுட்டு இருக்குறவ மாதிரி இருக்கா?” சாசர் போல விழிகளை தெறிக்க விட்டு, அவனிடம் சண்டைக்கு நின்றாள்.
“நீ ட்ரிங்க் பண்ணதில்ல?” அவன் கேட்ட கேள்வியில் கடுப்பானாள்.
“யோவ்… இவ்ளோ நாளா நல்ல புள்ளையா தான இருந்த. இப்ப என்ன புதுசா?”
“புதுசாவா? நான் தினமும் வைன் ட்ரிங்க் பண்ணுவேன்டி. இட்ஸ் குட் பார் ஸ்கின் யூ நோ…” என்றதும் வாயில் கை வைத்தாள்.
“அடப்படுபாவி ஒரு குடிகாரனோடவா இவ்ளோ நாளும் நான் குடுத்தனம் நடத்துனேன்” என மார்பில் அடித்துக் கொண்டதில்,
“ப்ச் உனக்கு வேணுமா வேணாமா இப்போ? நான் ட்ரிங்க் பண்ணப்போறேன்…” என்றான் அவன் காரியத்தில் குறியாக.
“இதோ பாருயா… இந்த சந்தோசமா இருந்தா சரக்கடிக்கிற வேலையெல்லாம் உன் நாட்டுல போய் வச்சுக்க. இங்க, அதுவும் என் முன்னாடி வேணாம். அப்டி நீ குடிக்கப்போறன்னா நான் என் மாமா வீட்ல போய் இருந்துக்குறேன்” என படம் காட்டினாள்.
“உன் மாமா? ம்ம்… மிரட்டுறியா?”
“ப்ச்… தண்ணி அடிச்சா ஸ்கின்னுக்கு நல்லதுன்னு யார் சொன்னா? சரி அப்படியே உன் பளபள ஸ்கின் ஒன்னும் இத்த குடிக்கலன்னா கருத்துடாது. நான் குடிச்சாலும் ஒரு நியாயம் இருக்கு” எனப் புலம்பிக்கொண்டாள்.
“அட்லீஸ்ட் பீர்?” அவன் அடமாக நிற்க, “எதுனா குடிக்கணும் போல இருந்தா நீர்மோர் வேணா தரேன். பீர் எல்லாம் கனவு கூட காணாத” என நொடித்துக் கொண்டதில், மீண்டும் வைன் பாட்டிலை இருந்த இடத்திலேயே வைத்தான்.
“ஓவரா பண்றடி” என்ற முணுமுணுப்பு வேறு.
“இப்ப வா தோட்டத்துக்கு போலாம்” அவள் அழைக்க, “போடி… ட்ரிங்க் பண்ணி ஃபன் பண்ணலாம்னு தான் கூப்பிட்டேன். தேவை இல்ல…” என அவனும் அவளைப்போலவே கழுத்தை வெட்டிக்கொண்டதில் சிரிப்பு மலர்ந்தது அவளுக்கு.
“ஸ்ட்ராங்கா காபி போட்டுத் தரேன். அதைக் குடிச்சுட்டு ஃபன் பண்ணலாமா அரக்கா?” எனக் கண் சிமிட்டிக் கேட்க, அவள் இதழ்களிலும் மென்முறுவல்.
யோசிக்கும் பாவனையுடன் “ஓகே” என்றதில், இருவருக்கும் காபி தயாரித்து பின் தோட்டத்திற்குச் சென்றனர்.
அங்கு சென்றதும் மாடிக்குச் செல்லும் படிக்கட்டில் அவள் அமர்ந்து கொள்ள, அவனும் அவளருகில் அமர்ந்தான்.
கைகள் மட்டும் உரசிக்கொண்டது. அவளுக்குள் பெரும் போர்க்களமே நடைபெற அவனோ முழுநிலாவை ரசித்துக் கொண்டிருந்தான்.
“இத்தாலில ஹை ஹில் ஒன்னு இருக்கு நிது. ஃபுல் மூன் டைம்ல அங்க பைக் ரைட் போறது செம்மயா இருக்கும். நான் அங்க போயிட்டு உனக்கு விசா எல்லாம் அனுப்புறேன் நீ வா. உன்னை கூட்டிட்டுப் போறேன்” எனத் திட்டமிட அவள் முறைத்து வைத்தாள்.
“உங்க ஆளோட போக வேண்டிய இடத்துக்கு என்னைக் கூட்டிட்டுப் போய்? அங்க போனதும் மேரேஜ் நடக்குமோ?” உள்ளுக்குள் துடிக்கும் இதயம் அவனுக்கும் கேட்டிடுமோ என்ற பயத்தில் தவிப்பை அடக்கியபடி கேட்டாள்.
“ம்ம்… ஃபர்ஸ்ட் மறுபடியும் ரிசர்ச் டெஸ்டிங் நடக்கும். அது ஓகே ஆனதும், ஸ்பேஸ்க்கு அனுப்புற வேலை ஸ்டார்ட் ஆகும்போது, நான் சேர்மேன் போஸ்ட் எடுத்துடுவேன். ஆப்வியஸ்லி அன்னைக்கு ஈவ்னிங் எனக்கும் ரித்திக்கும் சர்ச்ல வெடிங். ஹா… நாளைக்கு மார்னிங் என்கூட சர்ச்க்கு வர்றியா?” எனக் கேட்டான்.
அவன் சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டவள், “சாயங்காலமா மேரேஜ் நடக்கும்?” எனக் கேட்க, “ம்ம் இட் ஹேப்பன்ஸ்” என்றான்.
“சர்ச்க்கு போக போறீங்களா நாளைக்கு…” அவள் கேட்டதும்,
“ம்ம் எவரி சண்டே சர்ச்க்கு போறது பழக்கம் தான். இந்தியா வந்ததுல இருந்து போறது இல்ல. நாளைக்கு உன்கூட போயிட்டு வரணும்னு ஒரு டிசைர்” என்றவனின் விழிகளில் ஓர் ஆர்வம் மின்னியது.
“அதுக்கென்ன எனக்கு எல்லா சாமியும் ஒன்னு தான்…” என்று க்ராஸ் போட்டுக்கொண்டதில் அவன் சிரித்தான்.
“இன்னைக்கு செம்ம ஜாலி மோட் போலயே” அவனது சிரிப்பை ரசித்தவாறு அவள் கேட்க,
“ம்ம் என்னோட ட்ரீம் நடந்துருக்கே” அவனிடம் ஆசுவாசப் பரவசம்.
“ம்ம்… சேர்மேன் போஸ்ட்டும் கிடைக்கப் போகுது. வாழ்த்துகள் சேர்மன்!” என்றாள் மெல்லிய நகையுடன்.
“தேங்க் யூ ஆலம்பனா! டேட் எப்போன்னு உனக்கு அங்க போயிட்டு இன்ஃபார்ம் பண்றேன். யுவர் விஷ் இஸ் இம்பார்ட்டண்ட் டூ மீ!” என்று கண்டிப்புடன் கூற, “ம்ம்” எனப் புன்னகையைப் பெரிதாக்க முயன்றாள்.
“அண்ட், ஆஹில்யன்கிட்ட சொல்லிருக்கேன். நிவேதன் பத்தின எந்தத் தகவல் கிடைச்சாலும் உனக்கு வந்துடும். அண்ட், காசி ப்ராப்ளம் மட்டும் இல்ல. எல்லா டெப்டஸ்ஸும் க்ளியர் பண்ணியாச்சு. அண்ட் ஆல்சோ, சென்னைல எனக்கு ஒரு பிரான்ச் இருக்கு. அதை ஆஹில் தான் பாத்துக்குறான். அங்க உனக்கு வேலைக்கும் சொல்லிருக்கேன். ஒரு ஃபார்மாலிட்டிக்கு இன்டர்வ்யூ அட்டென்ட் பண்ணிடு. மீதியை ஆஹில் பாத்துப்பான்…” என்றதும் அவள் முகம் மாறினாள்.
“நான் இங்க இருந்து நடிச்சதுக்கு சம்பளமா என் அண்ணனை கண்டுபிடிச்சுக் குடுங்க போதும். என்னோட கடனுக்கு நீங்க எவ்ளோ குடுத்தீங்களோ அதை நான் வேலைக்குப் போய் அடைச்சுடுவேன். வேலை நான் தேடிக்கிறேன்” என்றவளுக்கு திடீரென முளைத்தது ஒரு சுயமரியாதை.
அவளை அமைதியாக ஏறிட்டவன், “ஓ! டெப்டஸ் திருப்பி தர்ற அளவு வளந்துட்டீங்களோ?” எனப் பார்வையால் சுட,
“அவ்ளோ வளரல தான். ஆனா கொஞ்ச கொஞ்சமா கொடுத்துடுவேன்…” என்றாள் தீர்மானமாக.
“எப்படி மேடம்?” நக்கல் தொனி அவனிடம்.
அது அவளது தன்மானத்தை சீண்டியது போலும், “எப்படியோ… வேலை கிடைச்சுருச்சுன்னா… அப்டி இல்லன்னா உங்கள மாதிரி ஒருத்தன் நடிக்க கூப்பிடாமயா போயிடுவான்…” என்னவோ அவனைக் காயப்படுத்த முயன்று அவளை அவளே காயப்படுத்திக் கொண்டாள்.
அவனிடம் இருந்து நிதானமாக வெளி வந்த வெப்ப மூச்சின் அளவிலேயே அவனது கோபம் புரிந்தது. அவனது கண்கள் நிலவின் வெளிச்சத்தில் நெருப்பாய் ஜொலிக்க, உள்ளூர குளிரெடுத்தது அவளுக்கு.
“இப்ப எதுக்கு நீ கண்ல ஃபயர் விட்டுட்டு இருக்க?” உர்ரென நிதர்ஷனா கேட்டதும்,
“லுக் அட் மீடி… உன்னை வாட்ச் பண்ணிட்டே தான் இருப்பேன். உன்னோட சேஃப்ட்டிக்கு எப்பவும் நான் பொறுப்பு. நிவேதன் கிடைக்கிற வரை நான் சொல்றதை நீ செய்!” என்றான் அதிகாரமாக.
அதில் அமைதியாகி விட்டவளை ஆழ்ந்து பார்த்தவன், “என்னை மிஸ் பண்ணுவியா ஆலம்பனா?” எனக் கேட்டான் இதுவரை காட்டாத மென்மையுடன்.
மொத்தமாக உடையத் தயாரான கண்களுக்கு எப்படி தடை போட இயலும்.
குளம் கட்டி நின்ற விழிகளால் அவனை ஏறிட்டவள், “ரொம்ப…” என்றதும் அவனுக்குள்ளும் சிறு பொறியாய் வலி.
“நிஜமாவா?”
“ம்ம்…”
“நான் போய்ட்டா பீல் பண்ணுவியா?”
“ம்ம்…”
“ஹேப்பிடி…”
“நான் பீல் பண்றது ஹேப்பியாயா உனக்கு?”
இளநகை புரிந்தவன், “எனக்காக ஃபீல் பண்ண ஒருத்தி இங்க இருக்கான்ற ஹேப்பினெஸ்ல இத்தாலிக்குப் போவேன்டி…” என்றதும், அவளது விழிகளில் நிறைந்து கன்னம் வழியே வழிந்தது கண்ணீர்.
“அப்படி இல்ல… உன் அம்மா, அவங்க குடும்பமே இப்ப உனக்காக இருக்காங்க தான். நீ தான் அதை மறுக்குற” எனப் பேச்சை மாற்றினாள்.
“இந்த டியர்ஸ் அளவு கூட கம்பேர் பண்ண முடியாது அதை…” அசாத்திய அன்பு அதை ஆர்பாட்டமின்றி காட்டி இன்னுமாக அவளது காதல் மனதைக் குத்திக் கிளறினான்.
வெறுப்பைக் காட்டி இருந்தால் கூட கடந்திருப்பாளே! இத்தகைய அன்பை எவ்வாறு அவள் கடக்க இயலும்?
இந்த அன்பை உதாசீனப்படுத்த எண்ணி, பேச்சை மாற்றினாள்.
“அவங்க மேல இன்னும் கோபமா உனக்கு?”
“கோபமெல்லாம் இருக்கானு தெரியல. உன்கூட சேர்ந்ததுல இருந்து கோபத்துக்கு மதிப்பே இருக்க மாட்டேங்குதுடி” எனச் செல்லமாக அதட்ட, அதில் மென்னகை அவளிடம்.
உரிமையாக அவளது கண்ணீரைத் துடைத்து விட்டவன், “கோபமும் படல. அவங்கள நான் ஒரு பொருட்டாவும் நினைக்க விரும்பல. இத்தனை வருஷம் இருந்த மாதிரி நான் உண்டு என் வேலை உண்டுன்னு அங்க இருக்கப்போறேன் அவ்ளோ தான்” என்றான்.
அது சற்றே வருத்தம் கொடுக்க, “வேணாம் யாஷ். அப்போ அப்போ பேசிக்கோயேன்” அவள் கெஞ்சலாகக் கேட்க,
“தண்டிக்கிற உரிமை எனக்கு இல்லையா நிது” என்றான் புருவம் சுருக்கி.
“ஆல்ரெடி தண்டிச்சுட்ட. தாத்தாவுக்கு நீ குடுத்த கிஃப்ட் அப்போ அவர் முகத்துல தெரிஞ்ச வேதனை, நம்ம வெறுத்த ஒருத்தன் நமக்கு பழைய நினைவுகளை மீட்டி தன்னோட உயிரானவளை கண் முன்னாடிக்கொண்டு வந்து நிறுத்திட்டானேன்ற குற்ற உணர்ச்சி, அவர் உன்னைப் பார்த்தப்ப கலங்கி நின்ன அந்த சொட்டுக் கண்ணீர், அவரோட உயிர் வலிக்கான எதிரொலி யாஷ்.
நம்மளை ஒதுக்கி வச்ச ஒருத்தரை, ஒதுக்கி வச்சுட்டோமேன்னு உரிமையை பேச கூட முடியாத, சொந்த மகனை கண்டிக்க கூட உரிமை மறுக்கப்பட்டுருக்குற தண்டனை எவ்ளோ கொடுமை தெரியுமா? இந்தத் தண்டனை போதுமே. நீ ஒன்னும் அவங்களோட ஒட்டி உறவாட வேணாம். ஜஸ்ட் அப்போ அப்போ பேசிக்கோ. கண்மணிக்கும் ஒரு ஆதரவு!” என்றவளின் பேச்சுகளை ரகசியமாய் ரசித்திருந்தது அவனது விழிகள்.
அவளது கூற்று புரிந்தாலும் அவளை கேலி செய்யும் பொருட்டு, “உன் குடும்பம்னு தெரியவும். சாஃப்ட் கார்னராக்கும்?” என சிலுப்பிட,
“இது தெரியுறதுக்கு முன்னாடியே நான் உன்கிட்ட சொல்லணும்னு தான் நினைச்சுருந்தேன்…” என்றாள் அவளும்.
“ஓகே டீல்! பட் ஒரு கண்டிஷன்” என்றவனை என்னவென நோக்கினாள்.
“ஒரு பாட்டு பாடேன் கடன்காரி!” ரசனை மின்ன அவன் கேட்க,
“என் பாட்டுலாம் கேட்குற அளவு அரக்கனுக்கு பொறுமை வந்துடுச்சா?” நக்கலாகக் கேட்டாள்.
“நீ ஆலம்பனா கூட சேர்ந்து பாடுறது எனக்கும் கேட்கும். ஐ லைக் தட். சோ இப்போ ஆலம்பனா இல்லாம பாடு… என்னவோ சொல்லுவியே… ஹான்… சின்னக் குயில் சித்ரா ரைட்!” என்று சிரிக்க, “நீங்க புகழ்ச்சியா பேசுறீங்களா கலாய்க்கிறீங்களா?” எனக் கேட்டாள் சந்தேகமாக.
“ஹே… சீரியஸ்லி உன் வாய்ஸ்ல ஒரு ஃபீல் இருக்கு. உன் ரிதம்ல ஒரு சோல் இருக்கு…” என்றான் உணர்ந்து.
“அப்படிங்கிற? பேசாம சூப்பர் சிங்கர்க்கு அப்ளை பண்ணிடவா?” என யோசித்தாள்.
“வாட் சூப்பர் சிங்கர்?”
“பிக்பாஸ் மாதிரி அது ஒரு ஷோ. அய்யயோ ஆல்ரெடி நீ பிக்பாஸ் ஷோ ஓட்டுனது போதும்பா. இதுக்கு மேல பாடி தாங்காது” என அவன் முதன்முதலில் கூறியதை வைத்து கிண்டல் செய்ய, அந்த நினைவில் இருவரின் முகத்திலும் புன்னகை தளும்பி நின்றது.
சில நொடிகளை பார்வை பரிமாற்றத்தில் நகர்த்திட, அவனே அதனை கலைத்தான்.
“சாங் கேட்டேனே?”
“உனக்கு தான் தமிழ் சாங் எதுவும் தெரியாதுல.”
“பட் புரியும் தான?”
மறுகேள்வி கேட்டதில், “இப்ப என்னை வச்சு இசை நிகழ்ச்சி பண்ணாம நீ போக மாட்ட அதான?” என்றாள் முறைப்பாக.
மேலுதட்டைக் கடித்து புன்னகையை அடக்கியவன், “அதே” என்றிட, “ம்ம்ம் என்ன பாட்டு பாடலாம்” என யோசித்தவளை சுண்டி இழுத்தது நிலா.
தானாய் அவளது இதழ்கள் பாடலைத் தொடங்கியது.
ம்… என் அழகென்ன
என் தொழில் என்ன
ஏன் என்னோடு உன் காதல் உண்டாச்சு…
சிறு கண்ணீராய் நான் தவழ்ந்தேனே
இதில் எப்போது மின்சாரம் உண்டாச்சு
அன்பே அன்பே
ராவோடும் பகலோடும்
உந்தன் ஞாபக தொல்லை
ரயில் பாதை பூவோடு
வண்டுகள் தூங்குவதில்லை
இது சரியா… தவறா…என்பதை சொல்ல
சாஸ்திரத்தில் இடமில்லை
வெண்ணிலவே வெண்ணிலவே
என்னை போல தேயாதே
உன்னோடும் காதல் நோயா…
ஒரு பூங்காவை போல்
எந்தன் உள்ளம் வைத்தேன்
அதில் புயல் வீசி குலைத்தது யார்
கண்ணை மூடி பாடலில் இலயித்து இருந்தவள், பாடல் வரிகளின் வழி மனதையும் வெளிப்படுத்தி இருந்தாள்.
முதல் மூன்று வரிகள் தவிர, அதிகமாய் அவனுக்குப் புரியவில்லை. மீண்டுமொரு முறை இப்பாடலை கேட்க வேண்டும் எனக் குறித்து வைத்துக் கொண்டவன், “வாவ்… மெஸ்மரைசிங்டி. என்ன பிலிம் இது?” எனக் கேட்டான்.
மூடிய விழிகளுக்குள் ததும்பி நின்ற கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டவளாக, அவனுக்கு விவரம் கூறியவள், அதற்கு மேல் அவன் முன் நடிக்க இயலாது “தூங்க போகலாமா?” என்றாள்.
“ம்ம் ஓகே…” என எழுந்தவன், “சச் அ சோல்புல் வாய்ஸ்!” என்று அவள் கன்னத்தைக் கிள்ளி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி விட்டு உறங்கச் செல்ல, காதலின் நோயில் வாடிப்போனாள் நிதர்ஷனா.
அன்பு இனிக்கும்
மேகா
Super
Semme epi 😍 next epi ku eagerly waiting Yash epdi avanode love eh feel Panna poranu paakanum .. that moment were level le irukkum nu nenakkiren