வானம் – 28
மூன்றரை மணி நேர பயணத்திற்குப் பின் திண்டுக்கல் வந்தடைந்தனர் சரயுவும் சம்யுக்தாவும். அவர்கள் பேருந்தில் இருந்து இறங்கும் போதே அவர்கள் முன் நின்றிருந்தான் பிரஷாந்த்.
“அண்ணா” என்றவாறே அவனது கரங்களை பற்றிக் கொண்டாள் சரயு. நீண்ட நாட்களுக்கு பின்னரான சந்திப்பு அல்லவா! “என்ன குட்டிமா ஒழுங்கா சாப்டுறியா இல்லயா? போன தடவ விட இந்த தடவ ஒரு சுத்து இளைச்சு போய்ருக்க?” பாசமான அண்ணனாய் நலம் விசாரிக்க, “இப்போ தான் மேடம் பசலை நோயால ஆட்கொண்டு விட்டாளே அப்படி தான் இருக்கும் அண்ணா” என முணுமுணுத்தாள் சம்யுக்தா.
அவளின் முணுமுணுப்பு சரயுவின் காதில் நன்றாக விழ அவளது காலை நசுக்கியவள், “கொன்னுருவேன் உன்னை!” என மெதுவாய் எச்சரிக்க அவளோ வலியால் ஆ’வென அலறினாள்.
“என்னமா என்னாச்சு?” என பிரஷாந்த் பதற, “ஒன்னுமில்ல ண்ணா. அவ எப்பவும் இப்படி தான்” என்ற சரயு, “என்கூட ஒரு அறுந்த வாலு இருக்கிறானு சொல்லி இருக்கேன்ல ண்ணா… அது இவ தான் சம்யுக்தா” என தன் தோழியை அறிமுகப்படுத்த, சம்யுக்தாவோ ‘நானா டி அறுந்த வாலு!’ என ஏகபோக முறைப்பை பரிசளித்தாள்.
“ப்ச், வா டி… நம்ம அண்ணா தான!” என்றவாறே அவளது தோளில் கைப்போட்டவள், “இன்னும் ரேவதி அப்படியே தான் இருக்கிறாளா ண்ணா?” என விசயத்திற்கு வந்திருந்தாள் சரயு.
‘ம்’ என தலை மட்டுமே ஆட்டினான் பிரஷாந்த். அவனது முகத்தில் விரக்தியின் வலி படர்ந்திருந்தது. “நீ கவலப்படாத ண்ணா. ரேவதிய நம்ம வழிக்கு கொண்டு வர்றது என் பொறுப்பு” என்றாள் சரயு.
“ப்ச், வெறுத்துருச்சு குட்டிமா. செத்தற்லாம் போல இருக்கு. அவ இனியும் என்னை தேடி வருவானு நம்பிக்கை இல்ல” என்றவனின் வார்த்தைகள் உடைந்திருந்தன.
அவனின் வார்த்தைகளால் சரயு, சம்யுக்தா இருவரிடமும் மெல்லிய அதிர்வு. “நீ ஏன் டா இப்படிலாம் பேசற” என்ற சரயுவின் குரலும் கரகரத்தது.
“இவ்ளோ நாள் அவக்கிட்ட பேச முயற்சி பண்ணாம இருப்பேன்னு நினைக்கிறியா குட்டிமா! இருக்கிற எல்லா வழிலயும் முயற்சி பண்ணிட்டேன். அவ கண்ணுல சிக்காம எனக்கு தண்ணி காட்றா… அவ முடிவு பண்ணிட்டா. இனி இது மாறப் போறது இல்ல” என்றவன், “ப்ச், அதவிடு… வந்த புள்ளைக்கு ஒரு காபி தண்ணி கூட வாங்கி கொடுக்காம நம்ம புராணத்த பேசறோம் பாரு. உனக்கு என்ன மா வேணும்? ஜூஸ் குடிக்கிறியா, இல்ல காபி குடிக்கிறியா?” என்றான் சம்யுக்தாவிடம்.
“எனக்கு எதுவும் வேண்டாம் ண்ணா. வீட்டுக்கு போய் குடிச்சுக்கலாம்” என அவள் மறுக்க மூவரும் இல்லம் நோக்கி பயணமாகினர்.
தனது மகனின் வண்டி சப்தம் கேட்டு வாசலுக்கு ஓடோடி வந்தார் தங்கம்மாள். “வா கண்ணு! எப்படி இருக்க?” என்றவாறே சரயுவின் அருகில் ஓடி வந்தவர் சம்யுக்தாவையும் வரவேற்க, “ம் இருக்கேன் ம்மா” என்றவள், “வா டி, இதான் எங்க வீடு” என தன் தோழியிடம் வீட்டை சுற்றி காண்பிக்க ஆரம்பிக்க தன் மகள் தன்னை தவிர்ப்பதைக் கண்ட தாயுள்ளம் பதறியது.
வேகமாக சமையலறைக்கு சென்று இருவருக்கும் பழச்சாறை எடுத்துக் கொண்டு மீண்டும் சரயுவிடம் சென்றவர், “இந்தா கண்ணு நீயும் எடுத்துக்கோ மா” என சம்யுக்தாவிடம் நீட்டினார்.
“தேங்க்ஸ் ஆன்ட்டி” என்றவாறே சம்யுக்தா பழச்சாறை எடுத்துக் கொள்ள, தன்னை நோக்கி நீட்டப்பட்ட தட்டை நகர்த்தியவள், “எனக்கு வேண்டாம்” என மறுத்தாள் சரயு.
“ஏன் டி வந்ததுல இருந்து மூஞ்ச தூக்கி வச்சுட்டு இருக்க? அம்மா மேல என்ன கண்ணு கோபம்” என அவள் முகம் வருடினார் தங்கம்மாள். தாயின் வார்த்தைகள் அவளை வருடினாலும் அவரால் தானே பிரஷாந்த் இவ்வளவு துன்பப்படுகிறான் என நினைத்தவள் மீண்டும் முகத்தில் கடுமையை ஏற்றி, “உன்மேல நாங்க எதுக்கு கோபப்படணும். எல்லாம் இங்க உன் இஷ்டப்படி தான நடக்குது. என்னை கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க விடுறியா” என விட்டேந்தியாய் பதிலளித்தாள் சரயு.
“சரி சரி, நீ போய் ஓய்வெடு. வீட்டுக்கு வந்த புள்ளையவும் கவனி. நீயும் ஓய்வெடு கண்ணு, நான் உங்களுக்கு சாப்பிட ரெடி பண்றேன்” என இருவரிடமும் கூறியவாறே அங்கிருந்து கிளம்ப, அவர் சற்று நகர்ந்தவுடன் “ஏன் டி அம்மாட்ட இப்படி கோபப்படற?” என தன் தோழியின் காதைக் கடித்தாள் சம்யுக்தா.
“அவங்க பண்றதுக்கு தூக்கி கொஞ்சவா சொல்ற சம்யு! அவங்கனால தான் அண்ணா இப்படி இருக்கிறான். அவன் முகத்துல எவ்ளோ வலி, நீயும் பார்த்தில்ல. இவங்க தினமும் அவன் கஷ்டப்படறத பார்த்துட்டு தான இருக்காங்க. அப்போ கூட மனசு இறங்கல இல்ல. அப்படி என்ன அந்த பொங்கப்பானைய வாங்கி கட்டிக்க போறாங்களோ தெரியல. மனுஷங்க மனச கொன்னு சாமிக்கு நல்லவங்களா இருக்கிறாங்களாம். அந்த சாமி இவங்கள இப்படி பண்ணுங்கனு கேட்டுச்சா!” என வெறுப்பில் வார்த்தைகளைக் கொட்டினாள் சரயு.
“புரியுது டி. ஆனா அம்மா மாதிரி பழசுல ஊறிப் போன ஆட்கள ஒன்னும் பண்ண முடியாது. நம்ம ரேவதிட்ட பேசிப் பார்ப்போம் டி. இதுக்கு முடிவுனு ஒன்னு இல்லாம போய்றாது” என அவள் சமாதானமூட்ட ஆனால் அந்த முடிவு இனி பிரஷாந்த், சம்யுக்தாவின் வாழ்வில் என்னென்ன மாற்றங்களைக் கொண்டு வர காத்திருக்கிறதோ சற்றுப் பொறுத்திருந்துப் பார்ப்போம்.
சிறிதுநேர ஓய்விற்குப் பின் ரேவதியின் இல்லம் நோக்கிச் சென்றாள் சரயு. “வா மா சரயு, எப்படி இருக்க?” எப்பொழுதும் போல் வாஞ்சையாய் வரவேற்றார் வாணி.
“நல்லா இருக்கேன் அத்த. நீங்க எப்படி இருக்கீங்க, மாமா எங்கத்த?” என நலம் விசாரிக்க அவரும் குடிக்க மோர் கொண்டு வந்துக் கொடுத்தவாறே “இங்க எல்லாம் நல்லா இருக்கோம் சரயு. உன் படிப்பு எப்படி போகுது?” என வழக்கமான உரையாடலை நகர்த்திட சரயுவிற்கு தான் சங்கடமாகிப் போனது.
“அத்த, அண்ணாவுக்கு வெளில பொண்ணெடுக்கிறதால உங்களுக்கு வருத்தமில்லயா?” என மெதுவாக அதேநேரம் சங்கடத்துடன் வினவினாள் சரயு.
“ப்ச், இப்போ பேசி என்னாகப் போகுது சரயு! அண்ணிக்கும் அந்த ஆசை இருந்திருக்கலாம்” என நெடிய மூச்சை வெளியிட்டவர்,
“இன்னாருக்கு இன்னார்னு ஆண்டவன் விதிச்சது தான கண்ணு நடக்கும். அவ தலைல என்ன எழுதி இருக்கோ. பார்க்கலாம்” என்றவரின் வார்த்தைகளில் சோகம் இழையோடியது.
அவரின் மனவுணர்வும் அவளுக்குப் புரிந்துதானிருந்தது. “அவ எங்க அத்த?” என்றாள் அவளின் அறையை எட்டிப் பார்த்தவாறே. மேலும், “இந்நேரம் நான் வந்தது தெரிஞ்சு இருந்தா நேரா பஸ் ஸ்டாண்ட்க்கே வர்றவ இன்னிக்கு இன்னமும் என் முகத்துல கூட முழிக்க விருப்பம் இல்ல போல!” என சற்று சப்தமாகவே கூற உள்ளே இதுவரை நடந்த சம்பாஷணைகளை கேட்டுக்கொண்டிருந்த ரேவதியின் கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடியது.
“அப்படிலாம் இல்ல சரயு, அவ தலைவலியா இருக்குனு மாத்திரை போட்டுட்டுப் படுத்துருக்கா. அதான் நீ வந்தது தெரியாம தூங்கிட்டு இருக்கா டா” என தன் மகளுக்காக பரிந்துப் பேச, “ம். பரவாயில்லை அத்த, அவள போய் பார்த்துட்டு வரேன்” என எழுந்தவளை சங்கடத்தோடு பார்த்தார் வாணி.
“இப்பதான் அவ தூங்க ஆரம்பிச்சா சரயு, உடனே எந்திரிப்பாளானு தெரியாது” என தயங்கியவாறே கூற, “சும்மா அவ முகத்தையாச்சும் பார்த்துட்டுப் போறேன் அத்த. அவள பார்த்து ரொம்ப நாளாச்சு” என்றவள் அவரின் பதிலை எதிர்பார்க்காமல் அவளறையை நோக்கி நகர்ந்தாள்.
சரயு தன்னறையை நோக்கி வருவதை உணர்ந்த ரேவதி வேகமாய் படுக்கையில் படுத்து உறங்குவது போல் நடிக்க, கதவைத் திறந்து உள்ளே வந்தவள் அவளருகே அமர்ந்தாள்.
அவள் சற்றுமுன் தான் அழுததற்கான அடையாளமாய் அவள் கன்னங்களில் கண்ணீர் தடங்கள் படர்ந்திருக்க அதனை துடைத்து விட்டவள், “உனக்கு என்னை பார்க்க கூட பிடிக்கலையா ரேவ்? உங்க காதல் மேல நான் எவ்ளோ நம்பிக்கையா இருந்தேன். ஆனா அதே நம்பிக்கை உங்க ரெண்டு பேருக்கும் எப்படி இல்லாம போச்சு?
அம்மா என்ன சொல்லி உன்னை பிளாக்மெயில் பண்ணி இருந்தாலும் நீ அண்ணாவ விட்டு கொடுக்க முன்வந்துருவியா ரேவ்?
இப்பவும் எனக்கு நீ மட்டும் தான் அண்ணி. அத யாராலும் மாத்த முடியாது. கடைசி நிமிஷம் வரைக்கும் நானும் அண்ணாவும் உனக்காக காத்திருப்போம் ரேவ். தயவு செஞ்சு எங்கள ஏமாத்திறாத! ப்ளீஸ்” என்றவளின் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது.
கண்களை இறுக மூடிக் கொண்டவளால் அழுகையை அடக்க முடியாமல் தவிக்க அவளை மேலும் தவிக்க வைக்கவிடாமல் அங்கிருந்து வெளியேறினாள் சரயு.
கல்யாண வேலைகள் தடபுடலாய் நடக்க, சரயுவோ அதன்பின் ரேவதியை சந்திக்க முற்படவில்லை. பிரஷாந்த் எப்பொழுதும் போல் கவலையை முகத்தில் தேக்கிய வண்ணம் எதிலும் கவனத்தில் கொள்ளாமல் தன்போக்கில் சுற்றிக் கொண்டிருக்க முத்துச்சாமிக்கோ கல்யாண வேலைகள் கழுத்தை நெரித்தன.
இருவீட்டாரும் அவரவர் ஊர்களில் மிக முக்கியஸ்தர்கள் என்பதால் இரு கிராமமும் திருவிழா கோலம் பூண்டது. தாய்மாமன் விருந்து, நலுங்கு, பரிசம் என அடுத்தடுத்த நிகழ்வுகள் தன்போல் நடந்துக் கொண்டிருக்க சரயுவிற்கு பதற்றம் கூடிக்கொண்டே சென்றது.
“விடிஞ்சா கல்யாணம் டி, நீயும் அண்ணாவும் இப்படி ஆளுக்கொரு பக்கம் சோகமா சுத்திக்கிட்டு இருக்கீங்க. வந்து ஒரு வாரமாச்சு, உன் மாமா பொண்ணு ரேவதிய நான் கண்ணால கூட பார்க்க முடியல. அப்படி ஒளிஞ்சு விளையாடறாங்க. எனக்கு என்னமோ பயமா இருக்கு டி” என்றாள் சம்யுக்தா.
இருவரும் தங்களது அறையில் இருக்க, பலகணி வழியே தெரிந்த வானத்தை வெறித்துக் கொண்டிருந்த சரயு, “உன் பயத்த நீ வாய்விட்டு சொல்லிட்ட சம்யு. என்னால அத வெளிப்படுத்த முடியல. ரேவ் இப்படி பண்ணுவானு நான் எதிர்பார்க்கவே இல்ல, அண்ணா ஏன் இவ்ளோ உடைஞ்சு போய்ருக்கான்னு இப்ப தான் புரியுது. ஆனா எனக்கு என்ன பண்றதுனு தெரியல சம்யு” என உடைந்திருந்தாள்.
தன் தோழியின் வார்த்தைகளில் தெரிந்த கலக்கத்தை உணர்ந்தவள் அவளது தோளில் ஆறுதலாய் தட்டிக் கொடுத்தாள் சம்யுக்தா. “நான் கொஞ்ச நேரம் மாடிக்கு போய்ட்டு வரேன் சம்யு” என்றவள் தனிமை வேண்டி மாடியை அடைந்தாள்.
மாடியில் இருந்து கீழே பார்க்க உறவுகள் சூழ வீடே கல்யாணகளை கட்டியது. பிரஷாந்த்ம் சுற்றி உறவுகள் சூழ அமர்ந்திருந்தான் போலி புன்னகையை சுமந்தபடி.
அவளின் மனம் சித்தார்த்தை நாடின. தனது அலைப்பேசியில் மணியை பார்க்க அதுவோ பத்தை நெருங்கி இருந்தது. இந்நேரத்தில் அழைக்கலாமா வேண்டாமா என்ற யோசனையிலேயே இருந்தவள் பின் அழைப்பு விடுத்து காத்திருந்தாள்.
இதழிகாவை உறங்க வைத்துவிட்டு தானும் படுக்க தயாராகும் சமயத்தில் தான் சரயுவின் அழைப்பு வர, ‘இந்த நேரத்துல கால் பண்றா’ என்ற யோசனையிலேயே ஓரிரு விநாடிகள் நின்றவன் இதழிகாவிற்கு அருகில் உறக்கத்தில் கீழே விழாமல் இருக்க தலையணையை எடுத்து வைத்தவன் மெதுவாக அறையை விட்டு வெளியேறி மாடியை அடைந்தான்.
அழைப்பு ஏற்கப்படாமல் போகவும் மனம் வாட மாடிப்பிடி சுவரில் சாய்ந்து நின்றாள் சரயு. சில விநாடிகளில் சித்தார்த்திடமிருந்து அழைப்பு வர முதல் ரிங்கிலே அழைப்பை ஏற்றிருந்தாள் அவள்.
“என்னாச்சு சரயு? காலைல அண்ணா கல்யாணத்த வச்சுட்டு இந்த நேரத்துல கால் பண்ணிருக்க! அங்க எதுவும் பிரச்சினையா சரயு மா?” என படபபடப்பாய் வார்த்தைகள் வர, அந்நொடி நேரம் அவனது அருகாமைக்கு ஏங்கினாள் அவள்.
மறுமுனையில் பதிலற்றுப் போக சித்தார்த்திற்கு பதட்டம் கூடிக்கொண்டே போனது.
“சரயு மா” என்றவனுக்கு பயமும் உடன் தொற்றிக் கொள்ள, “அங்க யாருக்கும் எதுவும் பிரச்சினை இல்லயே?” என்றான் மீண்டும்.
அவனின் ‘சரயு மா’ என்ற அழைப்பு உயிர்வரை தீண்டிச் செல்ல, “எனக்கு பயமா இருக்கு சித்” என்றவளின் குரல் உடைந்து கண்களில் நீர் வழிய, அவள் அழுவதை உணர்ந்தவனுக்கு மனம் கனத்தது.
“என்ன பயம் டா? அங்க என்னதான் நடக்குது” என்க, அதற்காகவே காத்திருந்தவள் போல் அனைத்தையும் ஒப்புவித்து இருந்தாள் சரயு.
“ரேவதிய பார்த்து பேசுனா எல்லாம் சரி ஆகிரும்னு நினைச்சு தான் உடனே இங்க வந்தேன். ஆனா அவ…” முடிக்க முடியாமல் திணற,
“அவங்க ஒரு முடிவோட இருக்கும் போது நாம என்ன மா பண்றது?” என்றிருந்தான்.
“ம். புரியுது சித், ஆனா அது தான் எனக்கு பயமா இருக்கு. அண்ணா உயிரற்ற ஜடம் மாதிரி சுத்தறான். அவ வீட்ட விட்டே வெளிய வராம போக்கு காட்றா. சுத்தி சொந்தபந்தமா இருக்கிறதால எதுவும் பண்ண முடியல சித். மனசு படபடனு அடிச்சுக்கிது” என்றவளை எப்படி சமாதானப்படுத்துவது எனப் புரியாமல் குழம்பிப் போனான் சித்தார்த்.
இந்த நேரத்தில் அவளை ஒதுக்கி வைக்க மனம் வரவில்லை. அதனைத் தாண்டி அவளின் சோகம் தன்னை எந்தளவு வாட்டுகிறது என்பதை உணர்ந்தவனுக்கு ஏனோ மனம் மிக கனமான உணர்ந்தது.
சில விநாடிகள் மௌனத்தில் கழிய அதனை உடைத்தது சரயுவின் வார்த்தைகள். “உங்கள பார்க்கணும் போல இருக்கு சித், ரொம்ப பயமா இருக்கு” என்றவளின் வார்த்தைகளில் முற்றிலும் உடைந்துப் போயிருந்தான்.
இந்நேரத்தில் அவளை எந்தவொரு வார்த்தைகளாலும் சமாதானப்படுத்த இயலாது என்பதை உணர்ந்தவன், “ரொம்ப நேரம் தனியா இருக்காத சரயு. சுற்றி சொந்தபந்தம் இருக்கும் போது இப்படி பேசறத யாராச்சும் கேட்டா தப்பா போகிரும். இப்ப போய் தூங்கு. விடியற காலை நல்லபடியா அமையும். போ, போய் படு மா” என்றான் சித்தார்த்.
மனமே இல்லாமல் அழைப்பைத் துண்டித்து விட்டு அறைக்குச் சென்றாள் சரயு.
நீண்ட நேரம் மாடியிலேயே இருந்தவன் பின் கீழே இறங்கி தனது அன்னையின் அறைக்குச் சென்று கதவைத் தட்ட, சில விநாடிகள் கழித்தே கதவு திறந்தது.
“என்ன கண்ணா இந்த நேரத்துல?” என்றவாறே கற்பகம்மாள் அறையை விட்டு வெளியே வர, “காலைல அவசர வேலையா வெளிய போகணும் ம்மா. வெள்ளனே கிளம்பணும். முதல்லயே சொல்ல நினைச்சு மறந்துட்டேன். அதான் சொல்ல வந்தேன் ம்மா. தூங்கிறவங்கள தொந்தரவு பண்ணிட்டேன், சாரி மா” என்றான் சித்தார்த்.
தனது மகனின் முகத்தில் தென்பட்ட படபடப்பைக் கண்டவர் மேலும் எதுவும் துருவாமல், “சரி கண்ணா, நீ பார்த்துப் போய்ட்டு வா” என்றார். அவன் அலைப்பேசியோடு வேகமாய் மாடிக்குச் செல்வதை தண்ணீர் குடிக்க வந்தவர் பார்த்துவிட்டு தான் படுக்கச் சென்றிருந்தார். ‘ஏதோ சரியில்லை’ என மனம் கூறினாலும் அந்நேரத்தில் தனது கேள்விகளால் சங்கடப்படுத்த வேண்டாம் என்றெண்ணியே தவிர்த்திருந்தார்.
படுக்கையில் விழுந்தவனுக்கு உறக்கம் வர மறுக்க நேரத்தை நெட்டி தள்ளி அதிகாலையிலேயே திண்டுக்கலை நோக்கிப் புறப்பட்டிருந்தான் சித்தார்த்.
வானம் – 29
சரயுவின் இல்லம் அதிகாலையிலேயே பரபரப்பாக காணப்பட்டது. பலர் இன்னும் உறக்கத்தில் இருக்க, சிலர் அரைகுறை உறக்கத்தோடு கொட்டாவி விட்டபடி எழுந்து அமர்ந்திருந்தனர்.
“மாப்பிள்ளைய எழுப்பி விடுங்க பா”
“தாம்பாள தட்டு எங்க வச்சுருக்கீங்க மதனி?”
“முகூர்த்த மாலைய யாருப்பா வாங்க போனது”
“பொம்பளைங்க வெரசா கிளம்புங்கப்பா”
பலபல உத்தரவுகள், தேடல்கள், கேள்விகள் என ஒவ்வொருவரும் பரபரப்பாக காணப்பட்டனர்.
சரயுவின் அறையிலோ இரவு முழுதும் உறக்கமே இல்லாமல் சிலையாய் சமைந்திருந்த தன் தோழியை உலுக்கினாள் சம்யுக்தா.
“டி இன்னும் எவ்ளோ நேரம் தான் இப்படியே உக்காந்துருக்கிறதா உத்தேசம்? எல்லாரும் எந்திரிச்சு ரெடியாக ஆரம்பிச்சுட்டாங்க. அண்ணா எந்த மாதிரியான மனநிலைல இருக்காங்கனாச்சும் போய் பார்த்துட்டு வா சரயு” என்றாள் அவள்.
அப்பொழுது தான் தன் அண்ணனின் நினைவு வர, வேகமாய் அவனது அறைக்கு ஓடினாள். அவனது அறையில் உறவுக்கார இளவட்டங்களும் உறங்கி இருக்க ஒவ்வொருவராய் அப்பொழுது தான் எழத் தொடங்கி இருந்தனர்.
தன் மனவலியை வெளிக்காட்ட முடியாத சூழலுக்குள் அகப்பட்டுக் கொண்ட பிரஷாந்த் எழுந்து அமர்ந்திருந்தான். சரயுவின் வருகையை கண்டு அவன் கண்களில் வலி தென்பட, அவனுடன் தனித்துப் பேச எண்ணி உடன் இருந்த இரு அண்ணன்முறை உள்ளவர்களையும் வெளியே அழைப்பதாக கூறி அனுப்பிவிட்டு தன் அண்ணனின் அருகே சென்று அமர்ந்தாள்.
“அண்ணா” என்றவளில் அழைப்பில், “ரேவதி கண்டிப்பா வருவாள்ள குட்டிமா!” என்றவனின் குரல் உடைந்திருந்தது.
ஊருக்கு வந்த அன்று கொடுத்த உத்திரவாதத்தை தற்போது கொடுக்க தயங்கினாள் சரயு. இந்த ஒரு வார காலமாக ரேவதியின் கண்ணாமூச்சி ஆட்டத்தை அறிந்தவள் குழப்பமான மனநிலையில் இருக்க இருந்தும் அதனை வெளிக்காட்டாமல்,
“அண்ணா ப்ளீஸ், நம்பிக்கையோட இரு ண்ணா. உன்னை தவிர வேற ஒருத்தர அவ கற்பனைகூட பண்ணி பார்க்க மாட்டா. அப்படிப்பட்டவ எப்படி உன்னை விட்டுக் கொடுப்பா” என தன் அண்ணனுக்காக கூறுவதுபோல் தனக்கும் கூறிக் கொண்டாள்.
“ஆனா நான் இன்னொருத்தி கூட கல்யாணம் வரைக்கும் கொண்டு வந்துட்டனே குட்டிமா! என் காதல தைரியமா சொல்லக்கூட முடியலயே. நான் எதுக்கு உயிரோட இருக்கணும்?” என்றவனின் வார்த்தைகளில் பதறிப் போனாள் சரயு.
“ப்ச், என்ன பேச்சு ண்ணா இது! கண்டதையும் போட்டு மனச குழப்பிக்காத. அவ வருவா, கண்டிப்பா வருவா. நான் வர வைப்பேன்” என்றவளில் வார்த்தைகளில் அவன், “கண்டிப்பா வருவா தான குட்டிமா! இல்லனா இப்பவே நான் இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்லிறவா… என்னால முடியல குட்டிமா. என் ரேவதி இருக்க வேண்டிய இடத்துல இன்னொருத்திய…” அவனால் வார்த்தைகளால் கூட கூற முடியாமல் தவிக்க,
“அவசரப்பட்டு அப்படி எதுவும் பண்ணிறாத ண்ணா. அப்புறம் அம்மா ஏதாச்சும் பிளாக்மெயில் பண்ணி நம்மள அவங்க பேச்ச கேட்க வச்சுருவாங்க. எல்லார் முன்னாடியும் நீ ரேவதி கழுத்துல தாலி கட்டணும் ண்ணா. கண்டிப்பா அம்மா ஏதாச்சும் சொல்லுவாங்க தான். ஆனா அவ்ளோ பேர் முன்னாடி நீங்க ரெண்டு பேரும் உறுதியா இருந்தா அவங்களால ஒன்னும் பண்ண முடியாது. இந்த கல்யாணம் நடக்கணும்னா இதத் தவிர வேற வழி இல்ல” என்றவள் மணப்பெண்ணாய் இருக்கும் ரம்யாவை மறந்துப் போனாள்.
சரயுவின் மனம் முழுக்க தனது அண்ணனையும் மாமன் மகளையும் சேர்த்து வைக்க மட்டுமே எண்ணங்கள் சுழல இதில் தெரிந்தே தங்கம்மாளின் வார்த்தைகளால் தன் வாழ்க்கையையும் இணைத்திருந்த ரம்யாவின் வாழ்வும் பகடைக்காயாக்கப்பட்டு இருந்தது.
சரயுவைத் தேடி வந்தவர், “இன்னும் கிளம்பாம இங்க என்னடி பண்ணிட்டு இருக்க? உன்னை தேடி உன் ரூமுக்குப் போனா நீ இங்க இருக்கிற! அவனும் கிளம்பணும்ல. காலங்காத்தால அண்ணனுக்கும் தங்கச்சிக்கும் அப்படி என்ன அரட்டை வேண்டி கெடக்கு” என்றவர், “இந்தா இந்த புடவைய கட்டிக்கிட்டு வெரசா வா. நாத்துனார் சீர் செய்யணும்ல” என அவள் கையில் புடவை ஒன்றைத் திணித்தார் தங்கம்மாள்.
“யாரு எக்கேடு கெட்டுப் போனா என்ன, உனக்கு உன் காரியம் ஆகணும்ல” என்றவளின் வார்த்தைகளில் எரிச்சல் மண்டிக் கிடந்தது. “இப்ப என்ன நடந்துப்புடுச்சுனு இப்படி மூஞ்ச தூக்கி வச்சுக்கிட்டு சுத்தற?” என சரயுவிடம் கூறியவர், “ஏன் கண்ணு உனக்கு ஏத்தவளா தேடி கண்டுபிடிச்சு இந்த சம்பந்தம் அமைய அம்மா என்ன பாடு பட்டேன்! நீயும் மருமவளும் ஜோடியா நிக்கிறத பார்த்துட்டாலே போதும் என் கட்டை வெந்துரும். காலங்காத்தாலயே மருமவ போன பண்ணி நீ எந்திரிச்சுட்டியானு அக்கறையா விசாரிக்கிது. நீ ஒத்த வார்த்தை அந்த புள்ளைட்ட பேசிட்டு கெளம்பு கண்ணு. ஆசயா காத்துருக்கும்ல” என பிரஷாந்திடம் கூறி வைத்தார் தங்கம்மாள்.
“ஆமா பொல்லாத மருமவ!” என சரயு தாடையை சிலுப்ப, “இன்னும் இங்க என்னடி பண்ணிட்டு இருக்க, போ போய் கிளம்பு” என அவளையும் விரட்ட வேண்டாவெறுப்பாய் அங்கிருந்து கிளம்பினாள் சரயு.
பிரஷாந்தோ தன் தாய் கூறியவற்றுக்கெல்லாம் தலையாட்ட மட்டுமே முடிந்தது. ரம்யாவை திருமணம் செய்து கொள்ள முடியாது என ஒற்றை வரியில் தன் நிலையை தாயிடம் தெரிவித்து விடலாம். ஆனால் அந்த வார்த்தைகளை கோர்த்து அவரிடம் கூற அவனுக்கு திராணியற்று போயிற்று.
‘ச்சே! சொல்லவும் முடியாம மெல்லவும் முடியாம என்ன வாழ்க்கை டா இது!’ என நொந்துக்கொள்ள மட்டுமே முடிந்தது.
குளித்து தயாராகி சரயு நேராக தனது மாமனின் வீட்டிற்கு தான் சென்றாள். அங்கும் உறவுக்காரர்கள் சூழ்ந்திருக்க ரேவதியின் அறைக்கு செல்ல முயன்றயவளை தடுத்தது வாணியின் குரல்.
“சரயு” என அவர் அழைக்க, “அத்தை” என தயங்கியவள் மீண்டும் தன் தோழியின் அறையை பார்க்க, அவளின் பார்வை செல்லும் திக்கைப் பார்த்தவர் “ரேவதிய பார்க்க வந்தியா சரயு?” என்றார்.
“ம்” என அவள் தலையாட்ட, “அவ இப்போதான் குளிக்கப் போனா கண்ணு. ராத்திரி எல்லாரும் பேசிட்டு படுக்க தாமதமாகிருச்சு. இப்பதான் எந்திரிச்சு குளிக்கப் போனா” என்றவர், “தாம்பாளம் அண்ணி கேட்டாங்க. அத கொடுக்கலாம்னு தான் வந்தேன். நீயே வந்துட்ட, இத அம்மாட்ட கொடுத்துரு” என தாம்பாளத் தட்டை நீட்ட மறுக்க முடியாமல் வாங்கியவள் ரேவதியின் அறையை திரும்பி திரும்பி பார்த்தவாறே அருகே இருந்த அவளது இல்லத்திற்குச் சென்றாள்.
அவள் சென்றவுடன் வாணியும் தனது மகளின் அறையை தான் பார்த்தார். இத்தனை நாள் அறைக்குள்ளே அடைந்து கிடந்தவள் நேற்று உறவுக்காரர்களின் வருகைக்குப் பின் எப்பொழுதும் போல் அவர்களுடன் சகஜமாக பேசத் தொடங்க அவளின் நடவடிக்கைகளைக் கண்ட பெற்றவளுக்கோ ஒன்றும் புரியவில்லை.
இவள் மனதில் என்னதான் உள்ளது என அவர் யோசித்தாலும் உறவுகளின் முன் அவளிடம் வெளிப்படையாக கேட்டறிய முடியாத சூழல் ஏற்பட மகளின் மாற்றங்களை கவனித்துக் கொண்டு தான் இருந்தார்.
இதோ சில நொடிகளுக்கு முன்கூட, “ம்மா அத்தான் கல்யாணத்துல நான் அழகா போய் நிக்கணும்ல. நல்ல பட்டுப் புடவையா பார்த்து எடுத்துக் கொடு” என அவர்முன் நிற்க, அவர் ஏதோ கேட்க வருவதற்குள் வாணியிடம் ஏதோ கேட்டு உறவுகார பெண்ணொருத்தி வரவும், மகளுக்கு புடவையை எடுத்துக் கொடுத்துவிட்டு நகர வேண்டியதாக போயிற்று.
விநாடிகள் நொடிகளாய் கடக்க, பட்டு வேஷ்டி சட்டையில் மணவறையில் அமர்ந்திருந்தான் பிரஷாந்த். சடங்கு சம்பிரதாயங்கள் அனைத்தும் செவ்வனே நடந்தேறத் தொடங்கியிருக்க அவனது முகமோ எந்த உணர்வுகளையும் வெளிக்காட்டாமல் ஐயர் கூறியவற்றை செய்துக் கொண்டிருந்தான்.
மூன்று மணிக்கே தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டிருந்தவன் தனது இருசக்கர வாகனத்திலே திண்டுக்கலை வந்தடைந்திருந்தான் சித்தார்த்.
சரயுவின் ஊர் பெயர் மட்டுமே தெரியும் என்பதால் ஊரை கண்டறிந்து வருவது பெரிய காரியமாய் இருக்கவில்லை. ஆனால் ஊரை அடைந்தவுடன் தான் குழப்பத்தோடு வண்டியை ஓரங்கட்டினான்.
ஊரில் முகப்பிலே பெரிய பேனர் ஒன்று மணமக்களை வாழ்த்தி வைக்கப்பட்டிருக்க, மாவிலை தோரணங்களும் மைக்செட்டில் ஓடிய பாடல்களும் திருமணம் நடக்கும் இடத்தைக் கூறினாலும் அங்கு செல்ல சற்று தயக்கமாய் இருந்தது அவனுக்கு.
ஏதோ ஓர் உந்துதலில் வேகமாக கிளம்பி வந்தவனால் அங்கு தான் யாரென்ற கேள்வியை எவ்வாறு எதிர்நோக்குவது என்ற தயக்கம் உண்டாகின. கண்டிப்பாக சரயுவின் பெயரை உபயோகப்படுத்தக்கூடாது. அது தவறான கண்ணோட்டத்தையே உண்டாக்கும். மாப்பிள்ளையின் நண்பன் எனக் கூறினாலும் எந்த ஊர், பெயர் என்ன என பல கேள்விகள் வருமே என எண்ணியவனின் கண்முன் சரயுவின் அழுகைத் தோற்றம் நிழலாடின.
“எனக்கு பயமா இருக்கு சித்” என்ற அவளின் ஒற்றை வார்த்தை உண்டாக்கிய மாயம் தான் இதோ இந்நொடி அவனை இங்கு இழுத்து வந்திருந்தது. ‘சரி வந்தது வந்தாயிற்று. எதுவாகினும் சமாளித்துக் கொள்ளலாம்’ என்றெண்ணியவன் திருமணம் நடக்கும் கோவிலை அடைந்தான்.
தென்னமட்டையால் வேயப்பட்டிருந்த பந்தலின் முன் வரவேற்பு பகுதியில் இருதரப்பு பெற்றோரும் முகமெங்கும் புன்னகையோடு வருவோரை இருகரம் கூப்பி வரவேற்றுக் கொண்டிருக்க உள்ளே நுழைந்தான் சித்தார்த்.
அவனுக்கும் வணக்கம் வைக்கப்பட பதிலுக்கு புன்னகை ஒன்றோடு சிறுதலையாட்டலுடன் உள்ளே சென்று ஒரு ஓரமாய் அமர்ந்துக் கொண்டான்.
அங்கிருந்து மணவறையை பார்த்தவனின் கண்களில் முதலில் விழுந்தது சரயுவின் உருவம். ஐயர் ஏதோ கூறிக்கொண்டிருக்க அதனைக் கேட்டுக்கொண்டே முகத்தில் பூத்த வேர்வைத் துளிகளை துடைத்துக் கொண்டிருந்தாள்.
அக்கினிக் குண்டத்தால் ஏற்பட்ட புகைமூட்டம் வேறு அவளது மூக்கை பதம்பார்த்துக் கொண்டிருந்தது. ஒருவாரம் கழித்து அவளைக் காண்கிறான்.
இந்த ஒரு வார கால இடைவெளியில் சற்று இளைத்திருப்பது போல் தோன்றியது அவனுக்கு. அதற்குள் மணப்பெண் அழைத்துவரப்பட, மணமகனின் பார்வை தனது தங்கையை தான் பார்த்து வைத்தது.
சரயுவின் கண்களோ வாசலை நாடி அங்கு யாரையோ எதிர்பார்த்து பின் ஏமாந்து தன் தமையனை பார்க்க அவனோ முள்ளின் மேல் அமர்ந்திருப்பது போல் உணர்ந்தான்.
“அவ கண்டிப்பா வருவா” என இதழசைத்தவளின் முகமோ பதட்டத்தைக் கடன் வாங்கிக் கொண்டிருந்தது. அவளின் அலைப்புறுதலைக் கண்டவனின் மனமோ அவளருகே செல்லத் துடிக்க இரு கரங்களையும் கோர்த்து தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு அமர்ந்திருந்தான் சித்தார்த்.
மாங்கல்ய தட்டை சரயுவிடம் நீட்டி அனைவரிடமும் ஆசிர்வாதம் வாங்குமாறு ஐயர் கூற தன் அண்ணனை ஒருமுறை பார்த்துவிட்டு பின் ஆழ மூச்செடுத்து கண்களை இறுக மூடி திறந்தவள் தட்டை வாங்கிக்கொண்டு மணவறையில் இருந்து கீழிறங்கினாள்.
வரிசையாய் மாங்கல்யத்தை தொட்டு கண்களில் ஒற்றிக்கொண்டு அட்சதையை எடுத்துக்கொள்ள சித்தார்த்தின் அருகே வந்திருந்தாள் சரயு.
அதுவரை அவள் தலை குனிந்தே இருக்க அவன்முன் தட்டு நீட்டப்படவும் அவனோ அதனை தீண்டாமல் அவள் முகம் பார்த்தான். நீண்ட நேரம் அட்சதை எடுக்கப்படாமல் போகவும் மெதுவாய் நிமிர்ந்து பார்த்தவளின் முகம் அதிர்ச்சியில் உறைந்திருந்தது.
அவளது முட்டக்கண்களுக்குள் முழுதாய் விழுந்திருந்தான் சித்தார்த். “சித்” என்றவளின் குரல் நடுக்கம் கைகளிலும் தென்பட மாங்கல்ய தட்டை தன் ஒரு கையால் பிடித்தவன், மறுகையால் அட்சதையை எடுத்துக்கொண்டு கண்களால் தன் அருகே இருந்தவரைக் காட்ட நொடிப்பொழுதில் தன்னை சமன்படுத்திக் கொண்டவள் அங்கிருந்து நகர்ந்தாள்.
அவனின் வருகை அவளுக்கு இன்ப அதிர்ச்சி தான். ஆனால் அதனை முழுதாய் அனுபவிக்கக்கூட முடியாத சூழலில் இருந்தாள் அவள்.
இன்னும் ரேவதி அங்கு வந்து சேர்ந்திருக்கவில்லை. தன் கையில் இருக்கும் மாங்கல்யத்தை ஒருமுறை பார்த்தவளுக்கு மணவறைக்கு செல்லும் பாதை இன்னும் நீளாதோ என ஏங்கியது.
ஒருவழியாய் மணவறையை அடைந்திருந்தாள் சரயு. ஐயரும் அதனை வாங்க கைநீட்ட தனது அண்ணனின் முகத்தை தான் பார்த்தாள் அவள். அவனது முகமோ உணர்ச்சிகளற்றுக் காணப்பட்டது.
“ஐயர்ட்ட தட்ட கொடு சரயு” என்ற தாயின் அதட்டலில் அதனை கொடுத்திருந்தாள் அவள். கடைசி நிமிடத்திற்குள் ரேவதி வந்துவிடுவாள் என்றவளின் நம்பிக்கை சிறிது சிறிதாய் குறையத் தொடங்கி இருந்தது.
ஐயரும் பிரஷாந்திடம் மஞ்சள் நாணோடு கோர்க்கப்பட்ட மாங்கல்யத்தை நீட்ட கைகள் நடுங்க வாங்கியவனின் உயிர் உறைந்துப் போனது. இனியும் தன்னவள் வருவாள் என்ற நம்பிக்கை அறுந்துப் போயிருக்க, கண்களை இறுக மூடிக் கொண்டான்.
அந்த நொடி அங்கு சலசலப்பு ஏற்பட அனைவரின் பார்வையும் திசை திரும்பியது. “பாவிமவ இப்படி பண்ணிட்டாளே” என்ற வார்த்தைகளில் வேகமாய் எழுந்திருந்தான் பிரஷாந்த்.
காதில் விழுந்த செய்தியை அறிந்தவனின் கைகளில் இருந்த மாங்கல்யம் அக்கினிக்குண்டத்தில் விழுந்திருந்தது. ஐயர், “அச்சோ தம்பி தாலி” என பதற அதற்குள் அவனுடனே எழுந்திருந்த ரம்யாவும் அவனது செயலில் உறைந்திருந்தாள்.
சரயுவோ நிலைதடுமாறி கீழே விழப்போக அவளை தாங்கிப் பிடித்திருந்தாள் சம்யுக்தா. தனது கழுத்தில் கிடந்த மாலையை கழற்றி வீசியவன் சுற்றி உள்ளவர்களை பொருட்படுத்தாமல் வேகமாக ஓடிச் சென்று நின்ற இடம் ரேவதியின் இல்லம் தான்.
நடுகூடத்தில் உயிரற்ற கூடாய் படுக்க வைக்கப்பட்டிருந்தாள். வாயில் நுரை தள்ளியிருக்க உயிர் அவள் உடற்கூட்டை விட்டு பிரிந்து அரைமணி நேரம் கடந்திருந்தது.
அவள்முன் மண்டியிட்டவன் தன் முகத்தில் அறைந்தவாறே, “ஏன் டி என்னை விட்டு போன! உனக்காக தான நான் காத்திருந்தேன். என்னை ஏமாத்திட்டு போய்ட்டியே” என்றவனின் அலறலில் சுற்றியுள்ளவர்களின் ஒட்டுமொத்த பார்வையும் அவன்மீது தான் இருந்தது.
அவளது தற்கொலைக்கான காரணம் அங்கு கூறப்படாமலே அனைவருக்கும் வெட்டவெளிச்சமாக ஆளாளுக்கு தங்களுக்குள் முணுமுணுக்கத் தொடங்கினர்.
ஒரு மணி நேரத்திற்கு முன்…
அனைவரும் திருமணத்திற்கு தயாராகி செல்லத் துவங்கியிருக்க வாணியும் செல்வதற்காக தன் மகளை அழைக்க அவளது அறைக்குச் செல்ல அவளோ பட்டுப் புடவையில் தயாராகி தலைநிறைய மல்லிகை சூடிக் கொண்டிருந்தாள்.
தனது மகளை கண்களுக்குள் நிறைத்துக் கொண்டவர், “கிளம்பிட்டியா கண்ணு” என்றார் வாணி.
“ம்மா…” என திரும்பியவளின் முகத்தை நெட்டி முறித்தவர், ‘இந்நேரம் என் மக மணமேடைல உக்காந்துருக்க வேண்டியது, ஆனா விதி…’ என நொந்துக்கொண்டவர், “அழகா இருக்க டா. சரி, வா போகலாம். மாப்பிள்ளையும் பொண்ணுமே கோவிலுக்குப் போய்ட்டாங்க. நம்ம இன்னும் அங்க போகாம இருந்தா நல்லா இருக்காது” என்றார் வாணி.
“நீ முன்னாடி போ ம்மா. நான் இந்த புடவைய கொஞ்சம் சரி பண்ணி பின் பண்ணிட்டு வரேன். புதுசா கட்றதால தூக்கிக்கிட்டு இருக்கு” என முன்பக்க மடிப்பை சரிசெய்ய முயன்றவாறே கூற, நேரம் கடப்பதால், சரியென்றவர் அங்கிருந்து கோவிலுக்குப் புறப்பட்டார் வாணி.
அவர் சென்ற ஐந்து நிமிடம் கழித்து அறையை விட்டு வெளியே வந்தவள் வீட்டைச் சுற்றிப் பார்க்க அனைவரும் கோவிலுக்குச் சென்றிருந்ததால் வீடே வெறிச்சோடிக் கிடந்தது.
கோவிலில் ஐயரின் மந்திரங்கள் ஒலிப்பெருக்கி வழியே ஒலித்துக்கொண்டிருக்க அதனைக் கேட்டவளின் உள்ளம் ஊமையாய் அழுதது. கண்களில் வழிந்த நீரை அழுந்தத் துடைத்துக்கொண்டவள் தன் அறைக்குள் மீண்டும் சென்று அலமாரியில் துணிகளுக்கிடையே மறைத்து வைத்திருந்த விஷ பாட்டிலை எடுத்தவள் அடுத்த நொடியே அதனை தொண்டைக்குழிக்குள் இறக்கி இருந்தாள் ரேவதி.
தனது அலைப்பேசியில் புன்னகையோடு வீற்றிருந்த பிரஷாந்தின் நகலை ஆசையாய் ஒருமுறைப் பார்த்துக் கொண்டவளுக்கு மயக்கமாக அப்படியே கட்டிலில் சரிந்திருந்தாள்.
நீண்ட நேரமாகியும் தனது மகள் வராமலிருக்க தனது வீட்டிற்கு வந்த வாணி கண்டது மகளின் உயிரற்ற உடலைத் தான்.
“அய்யோ!” என்ற அவரின் அலறலில் அருகே இருந்தவர்கள் சப்தம் கேட்டு அங்கு வந்திருந்தனர். அதன்பின் ஒவ்வொருவருக்காய் செய்தி பரிமாறப்பட அது மணமேடை வரைக்கும் பரவியிருந்தது.
சரயுவிற்கோ அவளது காதில் கேட்ட உண்மையை மனம் ஏற்றுக்கொள்ள சில நிமிடங்கள் பிடித்தன. ஒருவழியாய் அவளும் அங்கு வந்திருக்க தன் தோழியின் உடலைக் கண்டவளின் கால்களோ தட்டு தடுமாறி அவளை அடைந்தது.
இதுவரை “வாராயோ தோழி வாராயோ மணப்பந்தல் காண வாராயோ” என ஒலித்துக்கொண்டிருந்த ஒலிப்பெருக்கியில் தற்போது சோகப்பாடல்கள் ஒலிக்கத் தொடங்க ஊரே சோகமயமாகி இருந்தது.
வாழ வேண்டிய வயதில் வாழ்வை முடித்துக் கொண்டவளுக்காக ஊரெங்கும் ஒப்பாரி ஓலங்களும் அழுகைகளும் குரல்களுமே நிறைந்திருந்தது.
தங்கம்மாளோ ரேவதியின் முடிவை அறிந்து உடைந்திருந்தார். அவர்களின் காதலை எளிதாக எடுத்துக் கொண்டோமோ என காலந்தாழ்ந்து நினைத்தவரின் மனம் குற்றவுணர்வில் தவிக்க ரேவதியின் உடல் அருகே வந்தவரை சரயுவின் குரல் தடுத்தது.
“இன்னும் அவ உடம்புல கொஞ்சநஞ்ச உசுரு ஏதும் ஒட்டியிருக்கானு பார்க்க வந்துருக்கியா மா? பாரு, நல்லா பாரு… உசுரு ஏதும் ஒட்டி இருந்தா அதையும் முடிச்சுவிடு. இப்போ உனக்கு சந்தோசமா இருக்குல்ல” என்றவாறே அவரை உலுக்கி இருந்தாள்.
“நான் பண்ண பாவத்த எங்க போய் தீர்ப்பேன்” என அவர் பெருங்குரலெடுத்து அழ, “ச்சீ, வாய மூடுங்க. அவள கொன்னதும் இல்லாம எப்படி மனசாட்சியே இல்லாம இங்க வந்து இப்படி அழுது நாடகமாடுறீங்க” என்றவளின் வார்த்தைகள் அவரை கொல்லாமல் கொன்றது.
அடுத்து பேச வந்தவளைத் தடுத்தது பிரஷாந்தின் குரல்.
“குட்டிமா” என்றவன், “வேண்டாம் விடு. என்னைய ஏற்கெனவே உயிரோட கொன்னவங்க தான அவங்க” என்றவன் தன் தாயை பார்த்த பார்வையில் அங்கேயே நிற்க முடியாமல் தள்ளாடி விழப்போனவரை அருகே இருந்தவர்கள் அமர வைத்தனர்.
அவர்களின் வீட்டு விசயம் அனைவரின் முன்பும் கடைபரப்பப்பட ஆளாளுக்கு தங்களுக்குள் பேசத் தொடங்கி இருந்தனர்.
நல்லசுந்தரமும் வாணியும் தங்களின் ஒற்றை மகளையும் பறிக்கொடுத்திருக்க அவர்களின் சோகத்தில் அந்த ஊரே பங்கெடுத்திருந்தது.
_தொடரும்