
அத்தியாயம் 28
விஷாலிடம் உருகிக் கிறங்கிப் போன ஸ்வேதா, கதவு திறக்கும் நொடியிலேயே தங்களது அரைகுறை நிலையைக் கண்டு திகைத்த இதயாம்ரிதாவை, வெற்றிக் களிப்புடன் பார்த்தவள் வேகமாய் விஷாலை விட்டு விலகினாள்.
கலைந்திருந்த மேலாடையைச் சரி செய்தவளை, “வாட் பேபி!” எனப் புரியாமல் பார்க்க, அவளுக்கோ கன்னங்கள் செங்கொழுந்தாய் சிவந்தது.
“யாரோ கதவைத் திறந்தாங்க சார்…” என்றதும், “ஹு தி ஹெல் இஸ் தட்!” எனக் கதவை அடைக்கப் போனவன், அங்கு நான்கடி நகர்ந்து நின்றிருந்த இதயாவைக் கண்டு அவனிடம் கலவரம் மிதந்தது.
“அம்..அம்ரி…” விஷால் திணறியதும் அவனை உணர்வற்று ஏறிட்ட இதயாம்ரிதா, அவசரமாக உடையைச் சரி செய்வது போலப் பாவனை செய்தபடி அங்கு வந்த ஸ்வேதாவைக் கடுமையாய் முறைத்தாள்.
அவளோ இதயாவை அசட்டை செய்து விட்டு, “நம்ம நாளைக்கு மீட் பண்ணலாம் டியர்!” என அழுத்திக் கூறினாள். தினமும் நாங்கள் சந்தித்துக் கொள்கிறோம் எனப் பதிவு செய்கிறாளாம்.
இதயாவை எதிர்பாராது அதிர்ந்திருந்த விஷாலுக்குப் போதை பாதி இறங்கியிருந்தாலும், ஸ்வேதாவின் அழைப்பைக் கவனிக்கவில்லை.
ஸ்வேதாவோ, ‘நல்லவேளை, கரெக்ட் டைமுக்கு வந்தா… இல்லன்னா அவன் போன ஸ்பீடுக்கு, நம்ம கற்பு பறிபோயிருக்கும் போல. இனிமே இப்படி எல்லாம் அவன்கிட்ட உருகக் கூடாது…’ என மனத்திற்குக் கடிவாளமிட்டாள்.
சத்யாவின் வாழ்வைப் பாழ் செய்தவளின் வாழ்வைப் பறித்த திருப்தி! தனது மனத்திற்குப் பிடித்தவனும், தன்னைப் பிடித்துத் தன்னிடம் நெருங்கி இருக்கிறான். அதுவே அவளுக்குச் சிலிர்ப்பைக் கொடுத்தது.
தன்னையே அழுத்தம் திருத்தமாய் பார்த்திருந்த மனையாளின், குற்றம் சுமத்தும் பார்வையில் விஷாலுக்கு மொத்த அணுக்களும் பயத்தில் தவித்தது.
“நீ நினைக்கிற மாதிரி எதுவும் நடக்கல. ஏதோ ஒரு ஸ்ட்ரெஸ்ல… ஜஸ்ட் ஒரு எமோஷனல் சப்போர்ட்டுக்குத் தான்…” என உளறிக் கொட்டினான்.
அவளோ தனது பார்வையை மாற்றாமல் இருக்க, “தினமும், அவள்கூடக் கூத்தடிக்கல அம்ரி. டோன்ட் லுக் அட் மி லைக் திஸ்!” என எரிச்சலாய் கூற, அவனிடம் இருந்து பார்வையைத் திருப்பினாள்.
“எமோஷனல் சப்போர்ட்டுக்கு இன்னொருத்தி கூட இன்டிமேட் பண்ணுவியா?” பற்களைக் கடித்துக் கண்டித்தவள், “இதான் லாஸ்ட் வார்னிங்! இன்னொரு தடவை இப்படியெல்லாம் ஏதாவது என் கண்ணுக்கும், காதுக்கும் வந்துச்சு… கொன்னுடுவேன்!” என்று விரல் நீட்டி எச்சரிக்கை செய்ய, அது அவனது ஈகோவைத் தூண்டி விட்டது.
“நீ கரெக்ட்டா இருந்தா நான் ஏன் இன்னொருத்தி கூட இன்டிமேட் பண்ணப் போறேன். என் பிஸிக்கல் ஸ்ட்ரெஸ்க்கு நீ கோ ஆபரேட் பண்ணலைன்னா, என்னை மாதிரி ஆம்பளைங்க இன்னொருத்தியைத் தேடிப் போகத் தான் செய்வாங்க. நீ மொதல்ல நல்ல பொண்டாட்டியா நடந்துக்க…” என்று வார்த்தைகளைக் கொட்டி விட்டான்.
இந்த விஷயத்தை இப்படியே மறந்து விட வேண்டும் என மனத்தை திடப்படுத்திக் கொண்டு, கிளம்ப எத்தனித்தவள் அவனது வார்த்தைகளில் அப்படியே நின்றாள்.
“வாட், கம் அகைன்? நான் உனக்குப் பொண்டாட்டியா இருக்குறதுனால தான், நீ செய்யறது எனக்கு வலிக்குது விஷால். ஜஸ்ட் லைக் தட்னு இருந்திருந்தா, இப்ப நீ செஞ்ச வேலைக்கு எனக்குக் கோபமே வந்துருக்காது. அண்ட், நம்ம ரெண்டு பேருமே நமக்குத் தேவையான டைம் எடுத்துக்கத் தான இந்த டிஸ்டன்ஸ். அதைத் தவிர நான் உனக்கு எந்த விதத்துல நல்ல்ல்ல பொண்டாட்டியா இல்லாம இருந்தேன்?”
“எந்த விதத்துல இருந்த நீ? பிஸிக்கல் ரிலேசன்ஷிப் இல்லாத மேரேஜ் லைஃப்ல எப்படி ஹேப்பினஸ் இருக்கும்? நீ டைம் வேணும், டைம் வேணும்னு அந்த சத்யாவோட நினைப்புல தினமும் கூத்தடிக்கலாம். ஆனா, நான் என் ஸ்ட்ரெஸ்க்கு இன்னொருத்தியைத் தொடக் கூடாது… வாட் தி ஹெக்?” விஷால் சீறிப்பாய்ந்தான்.
அவன் செய்த தவறை விட, அதை அவன் நியாயம் செய்தது தான் அதிகம் வலித்தது அவளுக்கு.
“சத்யா… சத்யா… சத்யா… அவனை நானே மறந்துட்டு அடுத்த வேலையைப் பார்த்துட்டுப் போயிட்டேன். ஏன்டா, எல்லாரும் திரும்பத் திரும்ப அவனையே ஞாபகப்படுத்துறீங்க?”
“ஓ! ஞாபகப்படுத்தலைன்னா மட்டும், நீ அவன மறந்துட்டு என் கூட வாழ்ந்துடுவியா? என்கூடப் படுத்தால் கூட உனக்கு அவன் ஞாபகம் தான வரும்…”
“ஆமாடா, ஞாபகம் வரும்… அது தெரிஞ்சு தான கல்யாணம் பண்ணுன? நான் கேட்டேனா உன்னை… நீயா கல்யாணம் பண்ணிக்கிட்டு, இப்ப என்னவோ நான் உன்னை சீட் பண்ணுன மாதிரிப் பேசுற?”
அவனோ அருவருப்பாய் முகம் சுளித்து, “அப்போ நானும் இன்னொருத்தியைத் தேடிப் போகத் தான் செய்வேன்… அவன் செஞ்சா மட்டும் கொடி பிடிச்சுட்டு வந்து நின்ன… இதே நான்னு வந்தா உனக்கு இளக்காரம்ல?” எனக் கர்ஜிக்க,
“இப்போ உனக்குப் பிரச்சினை என்ன? நீ செஞ்சது தப்பில்ல, அப்படித்தான?” இறுக்கத்துடன் வினவினாள் இதயாம்ரிதா.
“நான் தப்பே பண்ணல. நீ தான் நான் அவள்கிட்டப் போகக் காரணமே! அட்லீஸ்ட் அவள் கூடவாவது நிம்மதியா இருந்திருப்பேன். கரெக்ட் டைம்ல வந்து நின்னுட்டு, வார்னிங் வேற…” என்றவனுக்கு முழு போதை தெளியவும் இல்லை.
உடைந்த கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டு, “லெட்ஸ் டிவோர்ஸ்! பேப்பர் சென்ட் பண்றேன், சைன் பண்ணிடு!” என்று விட்டு அவள் நகன்ற பிறகு தான் அவன் திருதிருவென விழித்தான்.
அவளை பிளாக்மெயில் செய்வதற்கு, ராம்குமார் கூட உயிருடன் இல்லையே!
முகத்தில் நீரை வாரி இறைத்து விட்டு வேகமாய் பார்க்கிங் சென்றான்.
காரை எடுக்கச் சென்றவளை வழி மறித்தவன், “அம்ரி… ஜஸ்ட் ஸ்டாப் திஸ். நான் என்ன தப்பாப் பேசிட்டேன்னு நீ டைவர்ஸ் அளவுக்கு யோசிக்கிற?” எனக் கேட்டவனை வெறுப்பாய் ஏறிட்டவள்,
“நீ இன்னொருத்தி கூட இருந்ததை நான் நேர்ல பார்த்துருக்கேன். இதை விட ரீசன் வேணுமா?” சிவந்த விழிகளுடன் அவள் வினவ,
“ஆனா எதுவும் நடக்கலயே…” என வாதம் செய்தான்.
“சோ, நடந்தா தான் அதைத் தப்புன்னு சொல்லணுமா? நீ தப்புச் செய்யப் போனதே தப்பு தான?”
“இது விதண்டாவாதம்! சத்யா மட்டும் என்ன சத்தியவானா? அந்தப் பொம்பளைப் பொறுக்கிக்கு மட்டும் முட்டுக் கொடுத்து, பெயில் வாங்க எங்களை லோலோன்னு அலைய விட்ட?” இருக்கும் இடம் மறந்து அவன் கத்திட,
“சிம்பிள்! அவன் தப்புப் பண்றதை நான் நேர்ல பார்க்கல. சோ உண்மையைத் தேடி அலைஞ்சேன். இப்ப நான் நேர்ல பார்த்துருக்கேன். இதுக்கு நானே காரணம்னு சொல்ற உன்கூட இனி இந்த ரிலேசன்ஷிப்பை கன்டின்யூ பண்றது, என்னை நானே சுயமா கருணைக் கொலை செய்யறதுக்குச் சமம்…” எனத் திட்டவட்டமாக உரைத்தவளைக் கண்டு கோபம் கிளர்ந்தது.
“சும்மா சாக்குப் போக்குச் சொல்லாதடி. உனக்கு எப்படியோ என்னை விட்டுப் போகணும். அதுக்குக் காரணம் தேடிட்டே இருந்து, என்னை வீம்பா விலக்கி வச்சு டெம்ப்ட் பண்ண வச்சு, இன்னொருத்தி கூட அனுப்ப பிளான் பண்ணிட்டு, அதை கரெக்ட்டா வந்து கெடுத்தும் விட்டுட்டு, இப்ப அப்படியே நடிக்கிற…” எனப் பற்களைக் கடித்தான்.
ஒற்றைப் புருவம் உயர்த்தி அவனை மெச்சுதலாகப் பார்த்தவள், “வாவ்… சூப்பர்டா! நீ சொன்னதுல பாதி உண்மை தான். இந்த ரிலேசன்ஷிப்பை முடிக்க இதை விட எனக்கு நல்ல சான்ஸ் கிடைக்காது. சத்யாவோட நினைப்புல, அவன் கூட இமேஜினேஷன்ல வாழறதுக்கு நீ தடையா இருக்குறது எனக்குப் பிடிக்கல மேன்…” என நிமிர்வாய் கூறி விட்டுக் காரை எடுத்தவளுக்குக் கண்ணில் நீர் நிரம்பி நின்றது.
பக்கத்து சீட்டில் வீற்றிருந்த தேனிலவிற்கான விசாவும், டிக்கட்டும் அவளைப் பரிதாபமாய் பார்த்தது.
அனைத்தையும் மறந்து விட்டு, அவனுக்காகப் புது வாழ்வைத் தொடங்க வந்தவளுக்கு மீண்டுமொரு ஏமாற்றம்.
காதலிக்கும் போது, அவன் ஏமாற்றிச் சென்றான். திருமணத்திற்குப் பின் இவன் ஏமாற்றுகிறான்.
உண்மை அன்பின், உறைவிடம் தேடி ஓய்ந்தவளின் உள்ளம் பேரலையாய் ஆர்ப்பரித்தது.
நேராய் தனது வீட்டிற்குச் சென்றவள், இனி அடுத்து என்ன நடக்குமென்று கணித்து விட்டாள்.
அவன் தவறு செய்யக் காரணமாய் இருந்ததே நான் தானென அனுபமா, தனது தாய் முதல் நண்பர்கள் வரை அனைவரிடமும் கூவி விட்டுச் செல்ல, அவர்கள் தொடர்ந்து அறிவுரை கூற வந்து விடுவார்கள்.
யாரும் தனது பக்கத்திலிருந்து சிந்திக்கப் போவதில்லை எனப் புரிந்து போக, இதயம் கொண்ட அத்தனை வலியையும் பாறையாய் இறுக்கிக் கொண்டாள்.
இனியும், யாருக்காகவும் தளர்ந்து தனது வாழ்க்கையைப் பணயம் வைக்கக் கூடாதென்று முடிவெடுத்து, வீட்டினுள் நுழைந்தவளை எதிர்கொண்டார் உமா.
அதற்குள் அனுபமாவின் வழியே அவருக்குச் செய்தி கசிந்திருந்தது.
விஷாலோ, பிரச்சினையை வேறு பக்கமாய் திருப்பியிருந்தான். அனைவரும் அவளை அவனுடன் வாழச் சொல்லிக் கட்டாயப்படுத்தியதால், விஷாலின் மீது பழி போட்டு அவள் விவாகரத்து முடிவை எடுத்ததாகத் தாயிடம் கூறி இருக்க, நண்பர்களிடம் மட்டுமே உண்மையைக் கூறி இருந்தான்.
அவர்கள் அவனைப் புரிந்து கொள்வார்கள் என்ற திணக்கம். அவள் தன்னை அருகில் சேர்க்காததால், அழுத்தம் தலைக்கேறிச் செய்த சிறு பிழைக்கு அவள் ஏன் எனக்குத் தண்டனை தரவேண்டும்? என்ற விவாதம் தான் அவனிடம்.
“என்ன மாம் உங்களுக்குத் தெரியணும் இப்போ?” சலனமற்றுக் கேட்ட மகளைச் சிந்தனையாய் ஏறிட்ட உமா, “உனக்கும், விஷாலுக்கும்…” என்று இழுத்தார்.
“அவன் இன்னொருத்தி கூடத் தப்பு செஞ்சான் மாம். அதைப் பார்த்துட்டு சைலண்டா வாழ்ந்துட்டுப் போக நான் உமா இல்ல!”
அவரை ஆராய்ச்சியுடன் பார்த்த உமா, “அவன் தப்பு செய்யலைன்னு சொல்றானே அம்ரி…” எனக் கேட்க,
“தப்பை முழுசா செஞ்சு முடிக்கலைன்றதுக்காகச் செஞ்ச துரோகம் பாதில நின்னுடுமா என்ன? இன்னொருத்திகிட்டச் சந்தோஷம் கிடைக்கும்னு நம்பிட்டான். இனி, அவனை நம்பி மீதி வாழ்க்கையைத் தொடர எனக்கு விருப்பம் இல்லமா…
வம்படியா கல்யாணம் பண்ணி வச்சுட்டதுனால, இந்தக் கல்யாணத்துல இருந்து எஸ்கேப் ஆக, இந்த முடிவை எடுத்தேன்னு வச்சுக்கிட்டாலும் உங்க விருப்பம். வாழ்க்கைல ரெண்டாவது தடவை தோத்துட்டேன் மாம். திரும்பத் திரும்ப இந்த ரிலேசன்ஷிப்குள்ள வம்படியா இருந்துட்டுத் தோற்க என்னால முடியாது…” எனும்போதே குரல் நடுங்கியது.
உமா ஏதோ பேசும் முன்னே அவரைத் தடுத்தவள், “நீங்களும் டாடி மாதிரி பிளாக்மெயில் பண்ணி அவன்கூட வாழச் சொல்லப் போறீங்களா?” என விரக்தியாய் கேட்க,
அவரோ கசந்த முறுவல் பூத்தார்.
“ஒரு உறவை முறிக்கிறது அவ்ளோ சாதாரணமான விஷயம் இல்ல அம்ரி… நம்மளோட அடையாளத்தை மாத்தக் கூடியது. உன் அப்பா தப்பு பண்றப்ப, எனக்கு அவரை மீறிப் போகத் தைரியம் இல்லைன்றதை விட, அவரை விட்டுப் போற அளவு மனபலம் இல்லைன்னு தான் சொல்லணும். உன்னையும் சேர்ந்து இழந்துடுவேனே!
ஆனா சத்யா விஷயத்துல நீ அடமென்டா இருந்தப்ப, எனக்குப் பயம் வந்துச்சு. நீயும் என்னை மாதிரி, உறவுச் சிக்கலைக் கையாளத் தெரியாமல் இருந்துடுவியோன்னு பயம் இருந்துச்சு. ஆனா இப்ப இல்ல.
நீ தெளிவா தான் இருக்க. உன் மனசுக்கு என்ன தோணுதோ, அதைச் செய் அம்ரி…. அது தப்பாவே போனால் கூட உனக்காக, உன்கூட நான் இருப்பேன்…” என்று கலங்கிய விழிகளுடன் தலையைக் கோதிய தாயைத் திகைத்துப் பார்த்தாள்.
“ம்மா…” மொத்தமாய் பனிப்பாறைகள் உருகிக் கரைந்து உடைந்த நொடியைத் தாயின் அரவணைப்பில் கொட்டித் தீர்த்தாள்.
“வலிக்குதுமா… ரொம்ப வலிக்குது! ஏன்மா, எல்லாரும் என்னை சீட் பண்றாங்க…
சத்யா விஷயத்துல அவன் என்னை லவ் பண்றேன்னு சொன்னது இல்ல. என்கிட்ட ப்ளர்ட் பண்ணதும் இல்ல. அவன்மேல் எனக்கு இருந்தது முழுக்க முழுக்க என் பக்கக் காதல் மட்டும் தான். நான் அவனைக் காதலிச்சேன். எனக்கு அவன் கேரியர் வேஸ்ட்டாய் போகக் கூடாதுன்னு தோணுச்சு. அவன் எனக்குத் திருப்பிக் காதலைக் கொடுப்பான்னோ, அவன் செஞ்சதுக்கு ரீசன் சொல்வானோன்னு நான் கொஞ்சமும் யோசிக்கல. நான் அவன்கிட்ட எதுவும் எதிர்பார்க்கவும் இல்ல. ஆனா விஷால்?
அவன் என் ப்ரெண்ட்! எப்பவும் என் நம்பிக்கைக்கு உரியவன். என் ஹஸ்பண்டா நான் வச்ச நம்பிக்கையை அவன் காப்பாத்தணும்னு நான் எக்ஸ்பெக்ட் பண்றது தப்பாமா…
ஒருத்தனை முழுசா மனசுல இருந்து அழிச்சு இவனோட அன்பை நெஞ்சுல விதைச்சு, முழுக்க முழுக்க அவன்கிட்ட அடிக்ட் ஆனதுக்கு அப்பறம், என்னை நம்ப வச்சுக் கழுத்தை அறுத்துட்டான்மா…” எனத் தேம்பித் தேம்பி அழுத மகளைக் கண்டு அவருக்கும் கண்ணீர் சுரந்தது.
அதன்பிறகு விவாகரத்திற்காக அவள் பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமில்லை. ஸ்வேதாவின் பெயர் வெளியில் வராமல் மூடி மறைத்து விட்ட விஷால், தான் ஒழுக்க ரீதியாக எந்தத் தவறும் செய்யவில்லை என்று வாதாடி வெற்றியும் கண்டான். அவர்களுக்குள் எந்தத் தவறும் நடைபெறாததால், அது நிரூபணமும் ஆகவில்லை.
காரணமே இன்றி விவாகரத்துக் கேட்டு, தன்னைத் தொழிலில் இருந்து துரத்தி அடிக்கிறாளென அவள் மீது பழி போட்டான்.
மீண்டும் அழுத்தம்! மீண்டும் தூக்கமின்மை. தூக்க மாத்திரையுடன் உறவாடத் தொடங்கி விட்டாள். அவ்வப்பொழுது மதுப்பழக்கமும்.
இறுதியில், விவாகரத்திற்காகத் தனது தந்தையின் தொழிலையும் அவனிடம் கொடுக்க வேண்டி வர, அவளுக்கும் நிவோராவை எடுத்து நடத்தப் பெரிய விருப்பமில்லை.
அவளது சொந்த முயற்சியில், நிவோராவை வீழ்த்தியடிக்க இயலும் என்ற தன்னம்பிக்கை அளவுக்கு அதிகமாகவே இருந்தது.
இப்போதோ, மீண்டும் மீண்டுமாகத் தோற்றுப்போய் இருக்கிறாளே!
மிதுனா, அவளுக்குத் தெரிந்த வரையில் கூறி முடித்ததும் அவ்வறையில் பலத்த அமைதி!
விதுரனும், பூமிகாவும் வேதனை நிரம்பிய முகத்துடன் அமர்ந்திருந்தனர்.
அகில், “சத்யான்னு ஒருத்தரைக் காதலிச்சதுக்காக அம்ரி அக்கா கொஞ்ச நஞ்சமா கஷ்டப்படல விதுரா… உன் அண்ணனோட எந்தக் கஷ்டத்துக்கும் காரணம், அம்ரி அக்காவும் அவங்க சம்பந்தப்பட்டவங்களும் இல்ல!” என்றவனுக்கும் தெரியாது. இவை அனைத்திற்கும் காரணம் விஷாலும், அவனது கூட்டாளிகளும் தானென்று.
மிதுனாவிற்கும் அந்த எண்ணமில்லை. சத்யாவின் மீது தான் இன்னும் கோபமாக இருந்தாள்.
அதே போல விதுரனுக்கும், ஸ்வேதா தான் விஷாலுடன் இருந்தது என்ற தெளிவும் இல்லை.
அதனை உடைக்கவே மிதுனா கமறிய குரலுடன், “என் அக்காவை அவ்ளோ பேசுனியே… அவளோட மேரேஜ் லைஃபைக் கெடுத்ததே உன் அத்தைப் பொண்ணு தான், விஷால் கூட இல்லீகல் ரிலேசன்ஷிப்ல இருந்தவளை விட்டுட்டு, என்னமோ பணக்காரங்கன்னா மட்டும் தான் தப்பு செய்வாங்கன்னு ஓவராய் பேசுன?” என நியாயம் கேட்க, விதுரனுக்கு உள்ளம் துண்டு துண்டாய் சிதறிப்போனது அதிர்வில்.
—–
பேயறைந்ததைப் போல வீட்டிற்குத் திரும்பிய இதயாம்ரிதாவை எதிர்கொண்டது உமா தான்.
அவர் முகத்தில் என்றுமில்லாத கோபம் நிறைந்திருந்தது.
“நியூஸ் பேப்பர்ல வந்தது உண்மையா அம்ரி, நீயும் சத்யாவும் கான்ட்ராக்ட் மேரேஜ் பண்ணுனீங்களா?” ஒரே கேள்வி தான் அவர் கேட்டார்.
இதயா உணர்வற்றுத் தலையசைக்க, அவளைச் சப்பென அறைந்தார்.
“நீ மேரேஜ் பண்ணிருக்கறது, நீ லவ் பண்ணுன சத்யான்ற ஒரே காரணத்துக்காகத் தான், உன் பேச்சை மதிச்சு நான் ஊர்லயே இருந்தேன். உங்களுக்குள்ள இருக்குற ப்ராப்ளம் சரியாக, உங்களுக்குத் தனிமை வேணும்னு தான் நான் இடையில வரல. ஆனா… உன் அப்பாவோட ரத்தம் தான் உன் உடம்புலயும் ஓடுதுன்னு அப்போ அப்போ ப்ரூவ் பண்றல்ல.” என்ற தாயின் கூற்றில் துடித்து எழுந்தாள்.
“அந்த நாயோட ரத்தம் என் உடம்புல ஊறுதுன்னா, அப்படிப்பட்ட ரத்தம் இந்த உடம்புல இருக்கவே வேணாம்!” என பங்களாவே அதிர உறுமிய மகளைத் திகைத்துப் பார்த்தார்.
“எனக்கு பிரைவசி வேணும் மாம்… டோன்ட் டிஸ்டர்ப் மீ!” என்று கண்டிப்பாய் கூறி விட்டு அறைக்குச் சென்றவளைக் கண்டு பதறியது மனது.
விஷாலின் பிரச்சினையில் கூடத் தன்னிடம் தானே அடைக்கலம் தேடினாள்.
—–
செய்தியாளர்கள் கூடிய பார்ட்டி ஹாலில், தனது ஏற்றுமதி இறக்குமதி தொழிலின் வெற்றியைப் பகிர்ந்து கொண்டிருந்தார் ஸ்ரீராமின் தந்தை ரவிச்சந்திரன்.
தனக்குப் பிறகு ஸ்ரீ இண்டஸ்ட்ரீஸின் சேர்மனாக ஸ்ரீராமையும், மேனேஜிங் டைரக்டர் பொறுப்பைச் சத்ய யுகாத்ரனிடமும் கொடுக்கப் போவதாகப் பெருமையாகக் கூறினார்.
ஸ்ரீராமும் அதையே வழி மொழிய, சத்யாவோ அசைவின்றித் தரையை வெறித்துக் கொண்டிருந்தான். இன்னும் இந்த வாழ்க்கை எத்தனை வலிகளைத் தான் அடுக்கடுக்காய் தந்து விட்டுச் செல்லும்?
உள்ளம் பிசைந்து, தொய்ந்து, உருக்குலைந்திருந்தது.
தான் அவளை ஈட்டியாய் தாக்கும் போதெல்லாம் ஒரு பார்வை பார்ப்பாளே! அந்தப் பார்வையின் அர்த்தம் இப்போது புரிந்தது.
‘உனக்காக உயிர்வலியைப் பொறுத்தவளடா நான்!’ என்ற திமிரின் எதிரொலி அல்லவா அது.
ரவிச்சந்திரன், நிவோராவை அழிக்க முயற்சித்த தருணமெல்லாம், அவனுக்கும் விஷாலின் குழுவினரை மொத்தமாய் கொன்று புதைக்க ஆத்திரம் எழுமே!
அப்போதெல்லாம், அந்த நிவோராவின் தலைமையாகத் தன்னவள் இருக்கிறாளென்றே அந்தப் பேச்சைத் தவிர்த்து வந்தான்.
ஆனால், நிவோரா எப்போது விஷாலுக்கு மட்டும் சொந்தமானதோ, அப்போதே அவனையும் அவனது கூட்டாளிகளையும் ஒழிக்கத் திட்டமிடத் தொடங்கினான்.
அப்போதும், ஒளிரா என்ற பிராண்டை அழிக்கும் எண்ணம் அவனுக்கு முற்றிலும் இல்லை.
ஸ்ரீ இண்டஸ்ட்ரீஸின் மறைமுக ஜி.எம் ஆகத்தான் இருந்தான் சத்யா. தன்னை வெளியில் அவன் காண்பித்துக் கொண்டது இல்லை.
அதனால், தன்னுடைய வேலையை மறைத்து யாரின் பெயரை வைத்துத் தன்னை அழித்தனரோ, அவளையே கேடயமாக்கி அவர்களை அழிக்கவே இதயாம்ரிதாவின் அலுவலகத்தில் இணைந்தான்.
சத்யாவின் பெயரைப் பார்த்ததும், நெஞ்சு குறுகுறுக்க அவனை மீண்டும் இதயாம்ரிதாவின் வாழ்வினுள் சேர்க்கப் பத்மப்பிரியாவே, எந்தக் கேள்வியும் கேட்காமல் அவனை அவளுக்கு பி.ஏ வாக மாற்றி இருந்தாள்.
இதயாம்ரிதாவை மீண்டும் கண்ட தருணம், தனது வலிகளுடன் தொலைந்து போன காதலும் நினைவு வந்து அவனைக் கொய்தது.
அத்துடன், ஷ்யாம், நிலோபர், யாமினி, விஷால் என அனைவருக்கும் தனக்குக் கொடுத்த வலியைத் திருப்பிக் கொடுக்க அத்தனை வேலைகளையும் செய்தான்.
இதில், அவனே எதிர்பாராதது இதயாம்ரிதாவின் மீது வளர்ந்த வஞ்சம் தான். ஒட்டு மொத்த வேலையையும் செய்த நண்பர்களை இப்போதும் மன்னித்து விட்டு, அவர்களுக்கு ஒன்றென்றதும் துடித்துக் கொண்டு செல்பவளைக் காணக் காண இதயம் கொதிக்கும்.
இத்தனை வருடத்தில், உண்மை தெரியாமலா இருந்திருப்பாள் என்ற ஆத்திரம் அவனுக்கு… அப்படியென்றால், அவளும் இணைந்தே தான் தன்னைக் குழியில் தள்ளி இருக்கிறாள் என்ற சினமும் ஆதங்கமும் வளரத் தொடங்கியது.
ஒப்பந்தத் திருமணம், தொழிலுக்காக அட்ஜஸ்ட்மெண்ட்டிற்கு ஒப்புக் கொண்டது, மது அருந்தியது, அந்தப் பழக்கத்தின் விளைவாய் உறக்க மாத்திரைகளை எடுத்துக் கொள்வது என அனைத்தும் அவள் மீது வெறியைக் கிளப்பியது.
இதில் வார்த்தைக்கு வார்த்தை, தன்னைப் பெண் பித்தன் என்று அல்லவா சித்தரிக்கிறாள்! அந்தக் கோபமே, அவளது தொழிலையும் கீழே தள்ளி, அவளையும் குற்றவாளியாக அவன் முன்னே நிறுத்தியது.
பெண் பித்தன், என்ன செய்வானென்று காட்டத் தானே அவளுடன் கூடிக் களித்தான். ஆனால், வெறுப்பை விட, வஞ்சத்தை விடக் காதல் முன்னின்று ஆட்சி செய்த கூடலாகிப் போனதே அது!
அதை எண்ணி எண்ணி இரவு முழுக்க உறங்காமல் தன்னையே நிந்தித்துக் கொண்டவன், தற்போதும் தன்னையே நிந்தித்துக் கொள்கிறான்.
விஷாலின் கூட்டத்தைக் குறைவாய் எடை போட்டது அவன் தவறு தானே!
குள்ளநரிக் கூட்டம், தன்னவளையும் அல்லவா நம்ப வைத்து ஏமாற்றி இருக்கிறார்கள். நினைக்க நினைக்க நெஞ்சம் ஆற மறுத்தது.
“நீங்க ஒளிராவோட பிராண்ட் மாடலா இருந்தது எல்லாம் வெறும் நடிப்பா சார்… கான்ட்ராக்ட் மேரேஜுக்கும், ஸ்ரீ இண்டஸ்ட்ரீஸ்க்கும் தொழில் ரீதியா எதுவும் தொடர்பு இருக்கா…” செய்தியாளர் சத்யாவிடம் கேள்வி அம்பைத் தொடுக்க, அவனுக்குச் சுற்றி நடப்பதெல்லாம் உறைத்தால் தானே!
அவனே சில்லு சில்லாய் சிதறி இருக்கும்பொழுது, வார்த்தைகள் எங்கிருந்து வரும்?
ரவிச்சந்திரன், சத்யாவைத் தூண்டி விட்டுப் பின் அவன் அசையவில்லை என்றதும், மகனுக்குக் கண்ணைக் காட்டி விட்டு, அவரே பதில் கூறினார்.
ஸ்ரீராமும், சத்யாவை வலுக்கட்டாயமாகத் தனி அறைக்கு அழைத்துச் சென்று, “மச்சி, என்னடா ஆச்சு உனக்கு?” என உலுக்கிட, அவனை நிமிர்ந்து பார்த்த சத்யாவின் விழிகளில் நீர்த்தேக்கம்.
“சத்யா?” ஸ்ரீராம் அதிர,
“எனக்கு இன்னொரு லைஃப் குடுத்தது நீயும், அப்பாவும் தான் ராம். நீங்க இல்லன்னா, இப்ப நான் இங்க இல்ல…” எனக் குரல் தேயக் கூறியவனைக் குழப்பமாகப் பார்த்தான்.
“இப்ப எதுக்குடா அது?”
“ராம்… ராம்… உனக்குத் தெரியும். உனக்குத் தெரியும்ல… நா..நான் அவளை… இதயாவை எவ்ளோ லவ் பண்ணேன்னு… மச்சி, அவ அவ… எனக்கு முடியல மச்சி. நெஞ்செல்லாம் வலிக்குது…” என நெஞ்சைப் பிடித்துக் கொண்டவனைக் கலவரமாய் ஏறிட்டான் ஸ்ரீராம்.
“இந்தச் சின்ன வயசுல ஹார்ட் அட்டாக் எல்லாம் வராதுடா…” என்றவனிடம்,
ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்ட சத்ய யுகாத்ரன், “நான் போகணும் மச்சி…” என்றான் அழுத்தமாக.
“எங்க போகப் போற?” ரவிச்சந்திரன் அறை வாயிலில் நின்று வினவினார்.
“என் இதயாகிட்ட. ஷீ நீட்ஸ் மீ ப்பா… அவளுக்குத் தேவையான நேரம் என்னால அவள் கூட இருக்க முடியல. இப்பக் கூட இருந்தும் அவளுக்குத் துரோகம் பண்ணிட்டு வந்துருக்கேன். போதும்பா… இனி என்னால அவள்கூடக் கண்ணாமூச்சி விளையாடத் தெம்பில்ல. நான் போகணும்பா… ப்ளீஸ்!” என்று கெஞ்சலாய் பார்த்தான்.
“ஆர் யூ ஜோக்கிங் சத்யா?” அவர் கோபத்துடன் வினவ,
“எனக்குப் புரியுதுப்பா. நான்… நான் இங்க ஜி. எம்… எனக்கு வேணாம், எதுவும் வேணாம்… என்னை இங்க இருந்து ரிலீவ் பண்ணிடுங்க. அதைச் சொல்லத் தான் நான் வந்தேன்…” என்றவனை அறையப் போனார்.
ஸ்ரீராம் அவரைத் தடுத்து விட, அவர் முன்னே கல்லாக நின்றவன், “உங்க கோபம் போறதுக்கு என்னை அடிக்கிறதுன்னா கூட அடிங்கப்பா… நான் வாங்கிக்கிறேன். ஆனா என்னால இனியும் அவளை விட்டுட்டு இருக்க முடியாது…” எனத் தீர்க்கமாகக் கூறிட,
“பைத்தியமா நீ… இப்ப அவள் ஸீரோ! அவளுக்குன்னு தொழில் இல்ல, அவளுக்குன்னு நல்ல பேர் கூட இல்ல. எல்லாத்தையும் நாசம் பண்ணி அவள் சேப்டரை முடிச்சாச்சு. இப்ப வந்து அவள்கிட்டப் போறேன்னு உளறிட்டு இருக்க… அப்படிப் போனா, போன தடவை பிளாட்பாரம்ல பிச்சை எடுத்துட்டு இருந்த மாதிரி தான், அவளோட சேர்ந்து பிச்சை எடுக்க வேண்டியது தான்…” என்று பொரிந்தார்.
“எதுக்குப் பிச்சை எடுக்கணும்? இங்க மீடியான்றது நம்ம தானப்பா! நம்ம சொல்லறதைத் தான் மீடியா வைரலாக்கும். அது பொய் சொன்னாலும் பரப்பும். உண்மையைச் சொன்னாலும் பரப்பும்! மீடியால வந்ததை எல்லாம் எப்படிச் சரி செய்யணும்னு எனக்குத் தெரியும்!”
“ஓஹோ! அப்போ பான் பண்ணுன பிராண்டை எப்படி மார்க்கெட்டுக்குக் கொண்டு வருவ? என்னை விட்டுப் போனா, உனக்குப் பவரும் இருக்காது. பணமும் இருக்காது…” என எகத்தாளமாய் உரைத்தார்.
“அவள் கூட நான் இருப்பேன். என் கூட அவள் இருப்பா… இப்போதைக்கு அது போதும்! நான் செஞ்ச தப்பைச் சரி செய்யறதுக்கு! கண்டிப்பா சரி செய்வேன்பா… எனக்கு நம்பிக்கை இருக்கு!” என்று திட்டவட்டமாய் கூறியவனைக் கொழுந்து விட்ட எரிச்சலுடன் பார்த்தார்.
“துரோகி! நன்றி கெட்டவன்… உன்னை மாதிரி ஆளுங்களை பிளாட்பார்ம்லயே விட்டுட்டு வந்துருக்கணும். தராதரம் தெரியாமல் தலைல தூக்கி வச்சதுக்கு, எனக்கு நல்ல பாடம் சொல்லிக் குடுத்துட்ட…”
கண்ணை இறுக்கி மூடித் திறந்த சத்யாவிற்கு, அங்கிருக்க ஒரே ஒரு காரணம் தனது நண்பன் மட்டுமே!
அவன் மீது இருக்கும் அன்பே, அவனை இன்னும் கட்டிப் போட்டு இருக்கிறது.
“ராம்… நான் உனக்குத் துரோகம் பண்ணனும்னு எப்பவும் நினைச்சது இல்ல. நன்றிக் கடனுக்காகத் தான், அ…அவள் அங்க உடைஞ்சு போயிருக்கறப்ப, அவள்கூட இல்லாமல் உன் முன்னாடி நின்னுட்டு இருக்கேன் ராம். நம்ம ப்ரெண்ட்ஷிப்பை என் காதலை விட மதிக்கிறேன். பட் ஐ நீட் டூ கோ!” என அவரைத் தவிர்த்து விட்டு ஸ்ரீராமைப் பார்த்தே கமறலுடன் உரைத்தான் சத்யா.
ஸ்ரீராமின் முகமே இறுகிப் போனது. மறுபுறம் திரும்பி நின்றவன்,
“போ!” என்றான்.
ஒற்றை வார்த்தையில், சத்யாவின் கண்ணீர் கண்ணிற்குள்ளேயே நின்று கொள்ள, “ராம்…” என்றான் ஏக்கமாக.
“போகணும்ல… போய்டு!”
“ராம்… என்னைப் பார்த்துச் சொல்லுடா!”
“டேய் முட்டாள், அவனை அனுப்பிட்டு நீ மறுபடியும் தொழில்ல சொதப்பவா… நோ, நெவர்! அவன் இங்க இருந்து ரிலீவ் ஆனா, நான் லீகலா கேஸ் போடுவேன்… இவனையும் அவளையும் நடுத்தெருவுல நிறுத்திடுவேன்…” என்றவரின் சட்டையைப் பிடித்தான் சத்ய யுகாத்ரன்.
“என்னை என்ன வேணாலும் பேசுங்க. அதுக்கு உங்களுக்கு உரிமை இருக்கு. ஆனா அவளைப் பத்தி ஒரு வார்த்தை… வந்துச்சு!” என ரௌத்திரத்துடன் மிரட்டியவனைக் கண்டு அவர் அதிர்ந்து நின்றார்.
சட்டெனத் தன்னை மீட்டவன், “ராம்…” என மீண்டும் அழைக்க,
“அதான் போ’ன்னு சொல்லியாச்சுல்ல. உன் எக்ஸ்பீரியன்ஸ் சர்டிபிகேட், பாலன்ஸ் சாலரி எல்லாம் வந்துடும்…” என ஃபார்மலாகப் பேச, “அவ்ளோ தானாடா?” என்றான் வேதனையாக.
சட்டென அவன் முன் திரும்பிய ஸ்ரீராம் சிவந்த விழிகளுடன், “உனக்கு நான் அவ்ளோ தானடா… நான் பிரெண்டுன்னு நினைச்சுருந்தா, என்னை விட்டுப் போறேன்னு சொல்லிருப்பியாடா? எனக்கு ஹெல்ப் பண்ணுடான்னு கூப்பிட்டு இருப்பதான?” எனச் சீறியவனின் கண்களில் கண்ணீர் தடம்.
அதனைக் கண்டு அதிர்ந்த சத்ய யுகாத்ரன், அவனைத் தாவி அணைத்துக் கொண்டான்.
ஸ்ரீராமும் தேம்பலுடன் அவனை அணைத்து, “நீ உன் எக்ஸைப் பார்க்கப் போறப்பவே நினைச்சேன். பிரெண்டைக் கழற்றி விடுவன்னு… ஆனா, இப்படி ஒட்டு மொத்தமாய் கழற்றி விடப் பார்ப்பேன்னு நினைக்கலைடா…” எனக் கோபித்துக் கொள்ள,
“டேய் என்னடா நீ… தேங்க்ஸ் மச்சான்!” என்ற சத்யா, “நான் உனக்கு வந்து எல்லாம் எக்ஸ்பிளைன் பண்றேன்…” என்று விறுவிறுவென அங்கிருந்து கிளம்பினான்.
தன்னைப் புரிந்து கொண்ட நட்பு கிடைத்த அலாதி நிம்மதி அவன் முகத்தில்.
நடந்தது என்னவென்று முழுதாய் தெரியவில்லை என்றாலும், அவளிடமே தன்னைச் சரணடைய வேகமாய் அவள் வீட்டை நோக்கிச் சென்றான்.
வரவேற்பறையிலேயே அமர்ந்திருந்த உமாவைக் கண்டதும், தயங்கி நின்றான்.
அவர் சத்யாவை முறைத்தாலும், பத்மப் பிரியாவின் மூலம் நடந்ததை அறிந்து கொண்டார்.
அவன் மீது முழுதாய் கோபப்படவும் இயலாமல், “அம்ரி ரூம்ல இருக்கா” என்க,
தலையைக் குனிந்து கொண்டு வேகமாக அவள் அறை நோக்கிச் சென்றான்.
இரவின் குளுமை அறையை நிறைக்க, ஜன்னலின் வழியே வந்த நிலவின் வெளிச்சம் பாவையின் முகத்தில் பட்டு ஜொலித்தது.
போர்வைக்குள் அழகாய் உறங்கிக் கொண்டிருந்தாள் இதயாம்ரிதா.
அவள் கன்னத்தைத் தொட வந்த சத்ய யுகாத்ரன், அவளது உறக்கத்தைக் கலைக்க மனமற்றுச் சில நிமிடங்கள் அவளையே கண்ணெடுக்காது பார்த்திருந்தான்.
நெற்றி தொட்ட கூந்தலை மெல்ல எடுத்து விட்டவன், அவளது உடலே சில்லிட்டு இருந்ததில் புருவம் சுருக்கி ஏசியை அணைக்க, ரிமோட்டைத் தேடினான்.
அப்போது தான் டிராயரில் தட்டுப்பட்டது தூக்க மாத்திரை. ஒரு அட்டையில் பாதி காணாமல் போயிருந்தது.
லண்டனுக்குச் செல்லும்போது தான், முழு அட்டையை அவள் புதிதாய் எடுத்து டிராயரில் வைத்ததாக ஞாபகம். அதில் துணுக்குற்றவன், அவசரமாய் இதயாம்ரிதாவை எழுப்ப, அவளோ அசைவற்றுக் கண் மூடியிருந்ததில் தூக்கி வாரிப்போட்டது.
இதயா… ஏய்! என்னடி செஞ்சு வச்ச… இதயா…” என்று வேகமாய் அவள் கன்னம் தட்டியவனுக்கு, அவளது இதயத்துடிப்பு மெல்லமாய் துடிப்பதைக் கண்டு உயிரே போய் விட்டது.
“இதயா… இதயா… என்னைப் பாருடி பைத்தியக்காரி!” எனக் கத்திக் கதறியவன், துரிதமாய் அவளைக் கையில் அள்ளிக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தான். ஆடவனின் உயிரணுக்கள், அரை உயிராய் அவளது ஆன்மாவைத் தேடி அலைந்து கொண்டிருந்தது.
புது காதல் வளரும்
மேகா
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


😢😢😢😢😭😭😭😭😭☹️☹️☹️☹️☹️☹️😔😔😔😔😔😔😔
😠😠😠😠😠😠😠😠 விஷால்
Yena sis ipadi panotinga pavam amri
Avalum yelathulaium.yemathutaley
😮😮