Loading

யாஷ் பிரஜிதன் கோவிலைச் சென்றடைய அங்கு மற்றவர்கள் அன்னதான வேலையில் இருந்தனர்.

அவனது ஹேசல் நிற விழிகள் அங்கும் இங்கும் அலைபாய்ந்து அவனது ஆலம்பனாவைத் தேடியது.

அவன் புறம் வந்த சிந்தாமணியை நிறுத்தியவன் “ரித்தி எங்க?” என வினவ, “அவங்க இன்னும் கோவிலுக்கு வரலையே மாமா” என்றாள்.

அதில் திகைத்தவன், “உங்க கூட தான வந்தா? எங்க அவ?” எனக் கோபத்துடன் வினவ,

“தெரியலையே மாமா… நான் முன்னாடியே கோவிலுக்கு வந்துட்டேன். கண்மணி தான் கூட்டிட்டு வந்தா” என்றதில் “கண்மணி எங்க?” எனக் கேட்டதும் அவளும் கோவிலில் தேடினாள்.

“அவள் இங்க தான் எங்கயோ இருப்பா. அம்மா எதுவும் வேலை குடுத்து இருப்பாங்க…” எனும்போதே தூரத்தில் ஆதிசக்தியின் அருகில் நின்று கண்மணி உணவை எடுத்துக் கொடுத்துக் கொண்டிருக்க, வேகநடையுடன் கண்மணியின் அருகில் சென்றான் யாஷ்.

“ரித்தி எங்க?” யாஷ் சினத்துடன் கேட்டதும், “அண்ணி வீட்டுக்குப் போயிட்டு ட்ரெஸ் மாத்திட்டு வரேன்னு சொன்னாங்க அண்ணா… நான் கூட இருக்கேன்னு சொன்னேன். அவங்க தான் கோவிலுக்கு வழி தெரியும் வந்துக்குறேன்னு சொன்னாங்க…” என்றதில்,

“அவள் சொன்னா… நீ இருந்து கூட்டிட்டு வந்துருக்க வேணாமா?” எனக் கோபம் கொண்ட தமையனைக் கண்டு விழி பிதுங்கினாள்.

ஆதிசக்தி மகனை முறைத்தபடி நிற்க, கண்மணியோ யாஷிற்கு பின்னால் பார்வையை செலுத்தி முகத்தில் வியப்பைக் காட்டினாள்.

கண்மணியின் முகம் மாற்றம் உணர்ந்து அவனும் பின்னால் திரும்பிப் பார்த்திட, சில நொடிகள் இமைக்க மறந்திருந்தான்.

மகேந்திரன் பரிசளித்திருந்த பட்டுப்புடவையை நேர்த்தியாய் உடுத்தியிருந்தவளின் அழகை நளினமாய் எடுத்துக்காட்டியது.

நேர்வகுடெடுத்து சென்டர் கிளிப் குத்தி இருந்தவள், கூந்தலை விரித்து விட்டிருந்தாள்.

காதில் குட்டி ஜிமிக்கியும் கழுத்தில் மெல்லிய செயினும் கையில் கண்ணாடி வளையல்களையும் அணிந்திருந்தவளின் வளைவுகள் ஆடவனின் விழிகளுக்குள் அடைக்கலமானது.

வாவ் அண்ணி… செம்ம அழகா இருக்கீங்க கண்மணி குரல் கொடுத்ததுமே சுயநினைவுக்கு வந்தவன், அப்போதும் அவளைத் தழுவிய பார்வைதனை விலக்கவில்லை.

முதன்முறை அவளைப் புடவையில் பார்த்தவனுக்கு அவளே வித்தியாசமாகத் தெரிந்தாள்.

ஆதிசக்தியும் நிதர்ஷனாவை கண்ணகல பார்த்து விட்டு, பின் அமைதியாகி விட்டார்.

நடிக்க வந்தவள் இன்னும் எவ்வளவு தூரம் நடிக்கிறாளென்று பார்க்கவே இந்த அமைதி.

அதையும் மீறி யாஷிடம் இதனை வெளிப்படையாகக் கேட்டால், அவனும் வெளிப்படையாகவே ஒப்புக்கொள்வானே!

முந்தானையைக் கையில் பிடித்துக் கொண்டு கண்மணியின் அருகில் வந்த நிதர்ஷனா, “நிஜமா நல்லாருக்கா… நான் புடவை கட்டுனா கரண்ட்டு கம்பிக்கு சேலையை சுத்துன மாதிரி இருக்குனு என் ப்ரெண்ட்ஸ் கிண்டல் பண்ணுவாங்க” என ஐயமாகக் கேட்க,

“அட சூப்பரா இருக்கீங்க அண்ணி. செயினும் தோடும் பெருசா போட்டுருக்கலாம்ல… வளையலும் கோல்ட் போட்டுருக்கலாம் க்ராண்டா இருந்துருக்கும். சரி வீட்டுக்குப் போய் நம்ம இன்னும் ஜ்வல்ஸ் நிறைய போட்டு போட்டோ எடுக்கலாம்” என்றாள் ஆர்வமாக.

“அதெல்லாம் வேணாம் கண்மணி. தாத்தா இங்க இருந்து போறதுக்குள்ள கட்டிக் காட்ட சொன்னாரு. அதான் கட்டுனேன்…” என்றவளுக்கு ஆதிசக்தியின் உறுத்தல் பார்வை நெளிய வைத்தது.

அவருக்கு சந்தேகம் மிகுந்து விட்டதென்று புரிந்தபின், இந்த விலையுயர்ந்த புடைவையைக் கட்டுவதில் சங்கடம் எழுந்தது அவளுக்கு. ஆகினும், மகேந்திரனின் மனநிம்மதிக்காக மட்டுமே உடுத்தினாள்.

இந்த குட்டி ஜிமிக்கியும் மெல்லிய தங்கச் செயினும் நிவேதன் வாங்கித் தந்தது. எத்தனை கஷ்டத்திலும் இது இரண்டையும் அவன் கழற்ற விட்டதில்லை. இங்கு வந்ததும் ஆடைக்கேற்ப விதவிதமான நகைகளை யாஷ் பிரஜிதன் வாங்கி வைத்திருந்தாலும், கடமைக்கென்று அதனை அணிந்து கொள்பவளுக்கு இந்தப் புடவையில் தமையன் வாங்கித் தந்ததை போடத் தான் ஆசை.

அது சிறிதோ பெரிதோ என்று யோசிக்கத் தோன்றவில்லை.

மகேந்திரனும் நிதர்ஷனாவைப் பார்த்து கண் கலங்கி விட, பேச்சற்று மௌனமாகி விட்டார்.

இறுதியாய் யாஷிடம் திரும்பி இரு புருவத்தையும் உயர்த்திக் காட்ட, அவனும் மெச்சுதலாக புருவம் தூக்கினான்.

“சோ, இன்னைக்கு நீ கேர்ள் வேஷம் போட்டுருக்க ரைட்?” யாஷ் அவளை வாரியதில், இடுப்பில் கை கொடுத்து முறைத்தாள் நிதர்ஷனா.

அதில் அசத்தல் புன்னகை வீசியவன், “நல்லாருக்க” என்றான் மேலிருந்து கீழ் வரை ஆராய்ந்து.

“தேங்க் யூ…” சிலுப்பலுடன் கூறியவள் கழுத்தை வெட்டிக் கொண்டு கிருஷ்ணவேணி அருகில் சென்று நின்று கொள்ள, “ஸ்டில் கோபம்?” எனக் கேட்டான் கண்ணாலேயே.

அதற்கு பதில் கூறாது முகத்தைத் திருப்பிக்கொண்டதில், மீண்டும் ஒரு புன்னகை தழுவியது அவனுக்கு.

அன்னதானம் முடித்து விட்டு கண்மணி, வீட்டாருக்கு சக்கரைப் பொங்கலை வழங்க, யாஷ் “எனக்கு வேணாம்” என மறுத்து விட்டான்.

காலையில் இருந்து அவன் ஒன்றும் உண்ணவில்லை. அவளும் அவன் மீதிருந்த வருத்தத்தில் கண்டுகொள்ளாது இருக்க, இப்போது இதையும் மறுத்ததும் வேகமாக அவனருகில் வந்தாள்.

கையில் சக்கரைப்பொங்கலை வைத்திருந்தவள், “என்ன உண்ணாவிரதம் இருக்க போறியாயா?” என முறைக்க,

“நேத்து நைட்டு நீ செஞ்சதை சாப்ட்டதுல இருந்தே ஸ்டமக் அப்செட் கடன்காரி” என வெகு பாவமாகக் கூறியதில் அவள் பயந்து விட்டாள்.

“அச்சோச்சோ என்ன ஆச்சு அரக்கா?” எனக் கேட்டபிறகே அவன் கண்ணில் மின்னும் குறும்பைக் கண்டு அவன் புஜத்தில் குத்தினாள்.

“உன்னை எல்லாம் வெறும் பழத்தை தின்னு உயிர் வாழுன்னு விட்டுருக்கணும். நீ பட்டினியாவே இருப்பா…” எனத் தொண்ணைக் கிண்ணத்தில் இருந்த சக்கரை பொங்கலை அவள் ரசித்து உண்ண, அவளை முகம் சுளித்துப் பார்த்தவன், “ஸ்பூன் இருக்குல்ல அதுல சாப்பிடு” என்றான்.

“எனக்கு கைல சாப்பிட்டா தான் அதோட டேஸ்ட்ட ஃபீல் பண்ண முடியும்…” என நொடித்திட,

“ஓஹோ… கைல சாப்பிட்ட வேற டேஸ்ட் வருமா என்ன?” எனக் கேட்கும்போதே கண்மணியும் சிந்தாமணியும் அவர்கள் அருகில் தொண்ணைக் கிண்ணத்துடன் வந்து நின்றனர்.

பெரியவர்கள் தனியாக நிற்க, இளவேந்தனின் பார்வை அவ்வப்பொழுது கெஞ்சுதலாக யாஷைப் பார்த்தது.

அவனோ அவர் புறமே திரும்பாமல் முழுக்க முழுக்க நிதர்ஷனாவையே விழுங்கிக் கொண்டிருந்தான்.

“ஆமா ஸ்பூன்ல சாப்புடுறதை விட கையால சாப்ட்டா அது ஒரு டேஸ்ட்…” நிதர்ஷனா பதில் கூறியபடி அடுத்த விள்ளலை எடுக்க, “லெட் மீ செக்…” என்று அவள் கையைப் பிடித்து அவளது கரத்தில் வீற்றிருந்த சக்கரைப் பொங்கலை அவன் வாயில் போட்டுக்கொண்டான்.

நிதர்ஷனா அதிர்ந்து செயலற்று நிற்க, அவனோ “ம்ம்ம்… எஸ். டேஸ்ட் இஸ் குட்! கிவ் மீ மோர்” என ஒரு கையை இடுப்பில் கொடுத்து உண்ணத் தயாராகி நின்னவனை விழி தெறிக்க ஏறிட்டாள்.

“குடுடி… ஐ ஆம் ஹங்கிரி!” என உரிமையாய் ஆணையிட, சிந்தாமணியும் கண்மணியும் கமுக்கமாக சிரித்தனர்.

‘இவன் வேற என் நிலைமை புரியாம’ என நொந்து போனவளுக்கு மறுக்கவும் இயலவில்லை. பசியென்று விட்டானே!

“நீயே சாப்டு” எனக் கிண்ணத்தைக் கையில் கொடுக்க, “உன் கையால சாப்ட்டா தான் டேஸ்ட்டா இருக்கும்னு சொன்னியே…” என சீண்டினான்.

பற்களை நறநறவெனக் கடித்தவள், “யார் கையால சாப்பிட்டாலும் ஒரே டேஸ்ட் தான்யா…” எனத் திணறிட,

“பட் வைஃப் கையால சாப்புடுறது தனி டேஸ்ட்… அப்படி தான கர்ள்ஸ்?” என மற்ற இருபெண்களையும் ஆதரவிற்கு அழைக்க, “ஆமா ஆமா” என ஒத்து ஊதினர் இருவரும்.

‘துரோகிங்க…’ என முணுமுணுத்தவளோ, ‘உன் அம்மாவுக்கு டவுட் வந்தும் நீ அடங்கலைல’ எனப் புலம்பிக் கொண்டு மற்றொரு விள்ளலை எடுத்து ஊட்டினாள் தயக்கமாக.

“என்னடி இவ்ளோ கொஞ்சமா தர்ற. நேத்து நைட்டு நான் ஊட்டி விட்ட மாதிரி குடு…” என சில்மிஷமாகக் கூறிட, இருவரின் இதழ் தீண்டல்களும் நினைவிலாடி செங்கொழுந்தாய் சிவக்கச் செய்தது.

கண்மணியோ, “ஓஹோ அப்ப டெய்லி ஊட்டி விடுறது தான் நடக்குதா?” எனக் கேலி செய்ய, சிந்தாமணி “அக்காவோட வெட்கத்துலயே தெரியலயா கண்மணி” என ஏற்றி விட்டாள்.

பெண்ணவளின் செந்நிற மேனியில் ரசனை கூடியது யாஷ் பிரஜிதனுக்கு.

அவனது பார்வை அவளை இன்னும் இன்னும் அதிகமாய் சிவக்க வைக்க, அதனை கட்டுப்படுத்தும் பொருட்டு, “யம்மா பரதேவதைங்களா… கொஞ்சம் அந்தப் பக்கம் போறீங்களா?” என்றாள் கோப தொனியில்.

“சரி சரி நாங்க இருக்குறது உங்களுக்கு டிஸ்டர்பன்ஸ்ஸா இருக்குனு சொல்லுங்க…” என அதற்கும் வாரி விட்டே இருவரும் அங்கிருந்து நகர, யாஷ் மேலுதட்டை மடித்து சிரித்தான்.

“யோவ்… எதுக்குயா இப்படி அந்தப் பச்சை பிள்ளைங்க முன்னாடி ரொமான்ஸ் ஷோ ஓட்டிட்டு இருக்க?” என மூச்சிரைக்க,

அவனோ “அதை விடுடி… ஊட்டி விட்டேன்னு சொன்னதுக்கு ஏன் இவ்ளோ ரெட்டிஷ் ஆகுற கேடி. நீ என்ன நினைச்ச?” என்று ஆழம் பார்த்தான்.

“ஐயோ…” எனக் கண்ணை மூடித் திறந்தவள், “நா நானும் ஊட்டி விட்டதை தான் நினைச்சேன்” எனத் தடுமாற, “இப்போலாம் இந்த லிப்ஸ் அடிக்கடி பொய் சொல்லுதே…” என்றான் அர்த்தமாக.

அவளோ தலையைத் தரையில் புதைக்க, “நமக்குள்ள நடந்த ஆக்சிடெண்ட்டை தான நினைச்ச?” எனக் கேலியாய் கேட்க, அது அவளை அதிகம் தாக்கியது.

அவனுக்கு அது வெறும் ஒரு விபத்து. அவளுக்கோ உள்ளுணர்வில் கலந்து விட்ட இதழ் தீண்டல் அல்லவா?

அவன் மீது தனக்குப் பிறந்த மெல்லுணர்வும் அவனைப் பொறுத்தவரை வெறும் உடல்கவர்ச்சி என்றே கேலி செய்வான். போயும் போயும் இவன் மீதா காதல் பிறக்க வேண்டும்? தன்னையே அதிகமாய் திட்டிக் கொண்டவள், கீழுதட்டை அழுந்தக் கடித்தாள்.

அவளது உணர்வுகளுடன் விளையாடுவதெல்லாம் அவனுக்குப் புரியவில்லை. முத்தமும் அணைப்பும் அவனைப் பொறுத்தவரை கை கொடுப்பது போல வெகு இயல்பான ஒன்று.

தற்போது கூட, அவளைப் புடவையில் பார்த்ததும் “யூ லுக் ஆஸம்” எனக் கூறி இயல்பாக முத்தமிடவே நினைத்தான்.

பின், சூழ்நிலைக் காரணமாக அடக்கிக் கொண்டான். அந்த உணர்வைத் தீவிரமாக ஆராய்ந்திருந்தால் தன்னையே உணர்ந்திருப்பான்! அப்போது தவறி விட்டவன், மீண்டும் அவளைச் சேர உயிர்வதை கொள்ளவேண்டுமெனப் புரியாது போனான்.

அவளுக்கோ எப்படியாவது சீக்கிரம் இங்கிருந்து கிளம்பி விட்டால் நல்லது என்றே தோன்றியது. தனது வீட்டிற்குச் சென்று விட்டால், இவனது நினைவெல்லாம் தானாய் மறைந்து விடுமென்ற அசட்டுத் தைரியம் அவளுக்கு.

அந்நேரம் யாஷ் பிரஜிதனுக்கு அலைபேசி அழைப்பு வர, அதில் தீவிரமானவன் அழைப்பைத் துண்டித்து விட்டு, “ரித்தி… இம்பார்ட்டண்ட் மீட்டிங். நான் ஆபிஸ் ரூம் விட்டு வர்றதுக்கு குறைஞ்சது 6 ஹவர்ஸ் ஆகிடும். நீ மம்மா வீட்லயே இரு. நான் முடிச்சுட்டு ஈவ்னிங் ஜாயின் பண்ணிக்கிறேன்” என அவசரமாகக் கூறி விட்டு செல்ல, ‘கிளம்புடா சாமி’ என மானசீகமாக ஒரு கும்பிடைப் போட்டாள்.

இந்தப் பக்கம் ஆதிசக்தி அவளைக் குறுகுறுவென பார்க்க, ‘அய்யயோ இந்த அம்மா வேற நொய்யி நொய்யின்னுட்டு…’ எனப் புலம்பினாலும் சிரித்த முகத்துடன் சமாளித்தாள்.

கோவிலில் வேண்டுதலை முடித்துக் கொண்டவர்கள், வீட்டில் விருந்தே உண்டனர். ஆண்டாளின் பிறந்தநாளுக்கு அனைவரும் வயிறார உண்ண வேண்டுமென்பது மகேந்திரனின் அன்புக்கட்டளை.

மதிய உணவை பேரனுடன் சேர்ந்து உண்ண வேண்டுமென்ற ஆசை எழ, “தம்பி எங்கம்மா?” எனக் கேட்டார் நிதர்ஷனாவிடம்.

“அவர் வேலையா இருக்காரு தாத்தா. இப்ப கூப்பிட்டா அவ்ளோ தான். காஞ்சனாவா மாறிடுவாரு…” என்று பரிதாபமாகக் கூற, மெல்லச் சிரித்தார்.

உணவு உண்டு முடித்ததும் கண்மணியுடன் பொழுதைக் கழிக்கும்பொருட்டு அவள் அறைக்கு தப்பிக்க எண்ணியவளை நிறுத்தியது ஆதிசக்தியின் குரல்.

கண்மணியோ, “அண்ணி வாங்க கேரம் விளையாடலாம்…” என அழைக்க, ஆதிசக்தி சிந்தாமணியிடம் “நீங்க ரெண்டு பேரும் போங்க அனுப்பி வைக்கிறேன்” என்றார். அப்போதும் மகளும் தாயும் பேசிக்கொள்ளவில்லை.

அதில் இரு பெண்களும் நகர்ந்து விட, நிதர்ஷனா ஒரு காலை வளைத்து எகத்தாளத்துடன் நின்றாள்.

உண்மை தெரிந்தபின் பயந்து மட்டும் என்னாகப்போகிறது?

“நீ செய்றது தப்புன்னு உனக்குப் புரியுதா இல்லையா? நீ ரித்தி இல்லைன்னு எனக்குத் தெரியும். நிதர்ஷனா ரைட்?” எனக் கடுமையாய் ஏறிட்டவரிடம்,

“எம்மாம் அறிவு ஈக்குது அத்த ஒனக்கு… பொஞ்சாதினு சொல்லிக் கூட்டிட்டு வந்தவ யார்னே தெரியாம இவ்ளோ மாசமும் கடத்திட்டு இப்ப பெரிய சிபிசிஐடினு நெனப்பு மனசுல. இப்ப இன்னாங்கற?” அவளது பழைய தொனி வெளிவந்து விட, ஆதிசக்தி நெஞ்சைப் பிடித்துக் கொண்டார்.

“ஏற்கனவே இதே மாதிரி பேசி சமாளிச்ச தான?” ஆதிசக்தி கேட்டதும்,

“க்கும்… இத்தயே இப்ப தான் கண்டுபிடிக்கிற நீயி. நீயெல்லாம் எப்படித்த அம்மாம் பெரிய ஆராய்ச்சிலாம் பண்ணுன?” மூக்கைச் சுருக்கி கேள்வி கேட்டவளை சினத்துடன் பார்த்தார்.

“இன்னொருத்தனோட பொண்டாட்டியா நடிக்க வர்றது தப்பு இல்லையா நிதர்ஷனா? உன் பியூச்சர் பத்தி அவன் தான் யோசிக்கல. நீயுமா யோசிக்கல?” சற்றே தாங்கலுடன் கேட்டதில் காதைக் குடைந்து கொண்டாள்.

“அடடடா… இன்னா த்த செய்ய சொல்ற… ஒ புள்ள, தான் புடிச்ச அனகோண்டாக்கு அறிவே இல்லன்னு வாதாடுற கேசு. அவனாண்ட என்னால போராட முடியுமா. என் சூல்நெல. நடிச்சே ஆகணும்னு… நடிப்பு தான… உன் புள்ள ஒன்னும் நெசமாவே என்னைக் கட்டிட்டு வந்துட மாட்டாரு பயப்புடாதத்த…” என்றாள் அசட்டையாக.

இந்தப்பெண்ணிற்கு எப்படி புரிய வைப்பது? என நொந்தவர், “அவன் உன்னை நடிக்க கம்பெல் பண்ணுனா நீ போலீஸ் கம்பளைண்ட் குடுத்து இருக்கணும். இல்லன்னா இங்க வந்ததும் எங்ககிட்ட சொல்லிருக்கனும். பிள்ளையா இருந்தாலும் அவன் செஞ்சது தப்பு தான்…” எனத் தீர்மானமாக உரைக்க,

“அட விடுத்த… அந்த கலப்படக் கண்ணுக்காரன் மேல மொத்த பழியும் போட முடியாது. நானும் சம்மதிச்சு தான வந்தேன். நானே கோவப்படல… எனக்கு ஒரே ஒரு வருத்தம் தான்!” என வெகுவாய் ஃபீல் செய்ததில் ஆதிசக்தி என்னவென பார்த்தார்.

“நான்-வெஜ்ஜ கண்ணுல பார்த்து மாசக்கணக்கா ஆகுது. தெனம் காய்கறியா தின்னு கத்திரிக்காயாட்டம் கரைஞ்சு போய்ட்டேன்த்த…” எனத் தன்னைத் தானே ஒரு முறை பரிதாபமாகப் பார்த்துக் கொண்டதில், அத்தனை கோபத்தைத் தாண்டியும் ஆதிசக்திக்கு புன்னகை பீறிட்டது.

ஆகினும் அதீத வருத்தம் கொண்டவர், “உனக்கும் அவனுக்கும் கல்யாணம்னா விளையாட்டா இருக்கா?” எனச் சலித்திட,

“கல்யாணம் பண்ணா தான வெளயாட்டா இருக்க… எனக்கு நானே தாலி கட்டிக்கிட்டேன்” எனக் கண் அடித்தவள், புடவைக்குள் மறைத்து வைத்திருந்த மஞ்சள் கயிறை வெளியில் எடுத்து கண்ணில் ஒத்திக்கொண்டாள்.

“கலப்பட கண்ணே கண் கண்ட தெய்வம் எனக்கு இப்போதைக்கு…” நக்கலாய் உரைத்தவள் அந்தத் தாலியை பயபக்தியாய் புடவைக்குள் மீண்டும் மறைத்துக்கொண்டாள்.

ஆதிசக்திக்கு எங்காவது முட்டிக்கொள்ளலாம் போல இருந்தது.

“பைத்தியக்காரி… அவன் வெளிநாட்டுல வளர்ந்தவன், அவனுக்கு இதெல்லாம் புரியாது. ஒண்ணா ஒரே வீட்ல இருந்துருக்கீங்க… ப்ச் உங்கிட்ட எப்படி கேட்க?” எனத் திணறிட,

“அத்தையோவ்… நிறுத்து நிறுத்து! ஓவரா இமேஜினேஷன்ல பொங்காதத்த. நீ நினைக்கிற மாதிரிலாம் என் யாஷ் ஒன்னும் கிடையாது. என்கிட்ட தப்பா ஒரு பார்வை கூட பார்த்தது கிடையாது. என் அண்ணன் என்னை பாத்துக்கிட்ட மாறிக்க தான் என் யாஷும் என்னை பார்த்துக்கிட்டாரு. நடிக்க தான் வந்தேன். என்னை விக்க வரலத்த… அவரும் ஒன்னும் பொண்ணுக்காக அலையிறவரு இல்ல…” என சிடுசிடுத்து விட்டு சென்றவளைக் கண்டு மலங்க மலங்க விழித்தார்.

‘இவளை நான் திட்டலாம்னு வந்தா இவள் என்ன என்னை திட்டிட்டுப் போறா’ எனத் தலையைப் பிடித்துக்கொண்டார் பாவம்.

‘நடிக்க வந்தவ எதுக்காக வார்த்தைக்கு வார்த்தை என் யாஷ் என் யாஷ்னு சொல்லணும்’ எனக் குமுறியவருக்கு, அவர்களுக்குள் மலர்ந்திருக்கும் நிஜ அன்பு புரியாமலா போகும். இதனை எப்படி கையாள்வது என்று தான் புரியவே இல்லை. விஷயத்தை இளவேந்தன் காதில் போட, அவரோ “உன் பையன் என்னை லாக் பண்ணி வச்சிருக்கான்” என்று விஷயத்தைக் கூறினார்.

“என்ன மாமா சொல்ற. எனக்கு ரொம்ப குழப்பமா இருக்கு… ப்ச்!” என சலித்தவர் மாலை வேளை தாண்டி அங்கு வந்த யாஷ் பிரஜிதனைத் தடுத்து நிறுத்தினார்.

அவனோ “எங்க என் ஆலம்பனா?” என அவசரமாகக் கேட்டான். இதுநாள் வரை அவர் பார்த்திடாத பரவசம் அவன் முகத்தில். இதழ்கள் நிரந்தரமாகப் புன்னகைத்திருந்தது.

“உள்ள இருக்கா… அதுக்கு முன்னாடி” என ஆதிசக்தி பேசுவதை எல்லாம் அவன் காதில் வாங்கவே இல்லை.

விறுவிறுவென அவளைத் தேடி சென்றவன், “ஏய் கடன்காரி எங்கடி இருக்க?” எனக் கத்திக்கொண்டே ஒவ்வொரு அறையாகத்தேட, கண்மணி அறையில் அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்த நிதர்ஷனா வேகமாக வெளியில் வந்தாள்.

அவளைக் கண்டதும், இறுக்கி அணைத்துக் கொண்ட யாஷ் பிரஜிதனின் செயலில் குடும்பமே தலையில் அடித்துக் கொள்ள, சம்பந்தப்பட்டவளுக்கோ உலகமே உறைந்து போனது போல இருந்தது.

“யா… யாஷ்” தட்டுத் தடுமாறி அவனைத் தள்ள முயல, அதற்கு தேவையின்றி அவனே விலகினான்.

“என் ரிசர்ச் சக்ஸஸ் ஆகிடுச்சு கடன்காரி…” என அவள் கன்னம் கிள்ளி முத்தமிட்டவன் அதீத மகிழ்வில் இருந்தான்.

நிதானமின்றி அவளிடம் தனது மொத்த மகிழ்வையும் காட்ட எத்தனித்தவன், “உங்கிட்ட தான் முதல்ல சொல்லணும்னு பப்பா போனை எடுக்காம ஓடி வந்துட்டேன். ஐ காட் இட் நிதா… மை லக்கி சார்ம்…” என மீண்டும் அவளை அணைத்து விடுவித்தான்.

கால்கள் வேறு நடுங்க, மேனி வேறு பொன்னிறமாக அவளைக் காட்டிக்கொடுத்தது.

“நீங்க தான் உயிரைக் குடுத்து வேலை பார்த்தீங்க… நான் என்ன செஞ்சேன்” எனத் தயக்கமாக அவள் கேட்க,

புருவம் சுருக்கியவன், “நீ என் கூட இருந்தியே நிதா. என் ஹார்ட் டைம்ல… என் தோல்வில என் கூட நின்னியே… தட்ஸ் வை இப்ப வின் ஆகிருக்கேன்” என அவனே உணராது ஒட்டு மொத்த அன்பையும் அவள் மீது திணித்திட, அந்தப் பாரம் தாங்க இயலாமல் உள்ளம் வலித்தது அவளுக்கு.

சிறுதுளி கண்ணீர் கண்ணை நிறைக்க, அதனை மற்றவர்கள் அறியாமல் துடைத்துக் கொண்டாள். ஆதிசக்தியின் கண்ணிலிருந்து அவளது உணர்வுகள் தப்பவில்லை.

முட்டாள் பெண்ணே! எனத் திட்ட மட்டுமே முடிந்தது அவரால். அவள் வயதைக் கடந்து வந்தவர் தானே! காதலின் ஆழமும் புரிந்தவர்! அது கொடுக்கும் வலியின் வேகமும் தெரிந்தவர். அந்த வலியை யாரென்றே தெரியாத பெண்ணின் முகத்தில் கண்டு அவருக்கும் வலித்தது.

என்னவோ, அவளை வேற்றாளாய் பிரித்துப் பார்க்கத் தெரியவில்லை. அவர்களது குடும்பத்தில் ஒருவளாய் இணைந்து போனவள், யாஷ் பிரஜிதனின் மொத்த பலமாக அல்லவா இருந்திருக்கிறாள்.

“ஓகே… எனக்கு இன்னும் ஒன் அவர் ஒர்க் இருக்கு. முடிச்சுட்டு வந்துடுறேன்…” என்றவன் கிருஷ்ணவேணியை “ஆண்ட்டி” என அழைத்தான்.

“இன்னைக்கு நைட் என் ட்ரீட். சோ டின்னர் செய்ய வேண்டாம்” என்று உத்தரவிட “சரிப்பா” என்றார் மகிழ்வாக.

அழகேசனோ “ம்மா ரித்தி… நல்ல சேதி சொல்லிருக்குல தம்பி. அது வாயில சக்கரையைப் போடு” என்று தூபம் போட,

“அவன் வாயில ஒரு டப்பா ஆசிட் வேணும்னா ஊத்துறேன்யா யோவ்… நானே இவன் காட்டுற ஓவர் ஒட்டுதல்ல ஒடுங்கிப் போயிருக்கேன்…” என தனக்குள்ளே பேசி நொந்தவளை அழகேசன் விடவில்லை. அவரே சர்க்கரையை எடுத்து வந்து நிதர்ஷனாவிடம் கொடுத்தார்.

“வாட் பார்மாலிட்டி இஸ் திஸ்?” யாஷ் புரியாது விழிக்க,

‘யோவ் பெரியப்பா… உனக்கு வைக்கிறேன்யா பெரிய ஆப்பா’ என வடிவேலு வசனத்தை மனதினுள் ஓட்டியபடியே, யாஷிடம் திரும்பி “இது என்ன பார்மாலிட்டின்னு தெரிஞ்சு அம்மஞ்சலிக்கு பிரயோஜனம் இல்ல. சக்கரையைத் தின்னிட்டுப் போய் ஆராய்ச்சியை கன்டினியூ பண்ணு…” எனக் கை நிறைய சக்கரையை அள்ளி அவன் வாயில் திணித்தாள்.

“ஏண்டி இவ்ளோ குடுத்த…” என முகத்தைச் சுளித்து சர்க்கரையை விழுங்கியவன், “நான் வர்ற வரை வெய்ட் பண்ணுங்க. எல்லாருக்கும் நிறைய சர்ப்ரைசஸ் இருக்கு! அண்ட் ஒன் மோர் பிக் சர்ப்ரைஸ்… நான் நாளைக்கு ஈவ்னிங் கிளம்புறேன்!” எனத் தாயை நக்கலாகப் பார்த்துக் கூறினான்.

அவனே அவனுக்குத் தேவையானதை கண்டறிந்து விட்ட கர்வம் அவன் முகத்தில் நிறைந்திருந்தது.

ஆதிசக்தி இறுகிய நிலையிலேயே இருந்தார். இளவேந்தனுக்கும் மனதினுள் ஒரு இனம் புரியா கலவரம். இந்த வெற்றி நல்லதா கெட்டதா எனப் புரியாமல் தவித்தார்.

நிதர்ஷனா, யாஷின் ஆலம்பனாவாக இருக்கப் போகும் இறுதி இரவு இது மட்டுமே எனப் புரிந்து உடைந்து நின்றாள்.

பிரிவுகள் நேருமென்று அறிந்தது தான். ஆனால், இத்தனை சீக்கிரமாக நடக்குமென்று எண்ணவில்லை. அந்தப் பிரிவு இத்தனை வலி கொடுக்குமென்று தெரியவில்லை.

இது வலியின் ஆரம்ப நிலை தான் என்றும் அவளுக்குப் புரியவில்லை.

இதுவே வலிக்கிறதே… அவனைப் பிரிந்து விட்டால்? உள்ளம் உலைக்களமாகக் கொதித்தது.

பிரிந்து தானே ஆக வேண்டும்? அவனிடம் உரிமைக் கொண்டாட அவளுக்கு என்ன உரிமை இருக்கிறது? நடிக்க வந்தவள், நடிக்க மட்டுமே செய்திருக்கலாம். உண்மையான அன்பைப் பரிமாறி விட்டாள். அது தானே இப்போது தலைவலியாக இருக்கிறது.

பதிலுக்கு அவன் வெறுப்பை திணித்திருக்கலாம்! அவனும் போட்டி போட்டு அன்பை, நேசத்தை, பாசத்தை மிச்சமின்றி பல மடங்காய் திருப்பித் தந்து விட்டானே!

ஆராய்ச்சியில் பெற்ற வெற்றியை தந்தையிடம் பகிரவில்லை. இத்தாலியில் அவனுக்கென இருக்கும் ஒரே அத்தையிடமும் பகிரவில்லை. அவனது வருங்கால மனைவியிடம் பகிரவில்லை. நொடியும் யோசியாது இவளிடம் வந்து நிற்க வேண்டிய அவசியம் என்ன?

இவ்வளவு யோசித்தும் இறுதியில், அவன் வெளிநாட்டுக்காரன் என்ற உண்மை அறைந்தது. அவனுக்கு அனைத்துமே இயல்பு தான். தன்னுடன் எல்லை மீறி இருந்தால் கூட, அதுவும் அவனுக்கு ஒரு விபத்து தான். உடலிலும் உள்ளத்திலும் எந்தவித உணர்வும் நேர்ந்திருக்காது. அவனைப் போலவே தனக்கும் இரும்பு இதயம் இருந்திருந்தால், அவன் கண்டறிந்த இயந்திரம் போல இந்தக் காதலை, துடிக்க துடிக்க வலி தரும் இந்தக் காதலை தனக்குள் புகுத்தாமல் ‘டெலிட்’ செய்திருக்கலாம்.

அவனுடைய நினைவுகள் மட்டும் தன்னிடம் இருந்து அகன்று விட்டால், இந்த வலி நீங்கி விடும் தானே! அல்லது வாழ்நாள் முழுக்க இதனை அனுபவிக்க வேண்டுமா? அல்லது பல இழப்புகளை பார்த்து வளர்ந்து பக்குவப்பட்ட மனம் இதற்கும் தயாராகி விடுமா?

யோசித்து யோசித்து தலைவலி வந்தது தான் மிச்சம் அவளுக்கு.

யாஷ் பிரஜிதனும் ரித்திகாவும் மறுநாள் இங்கிருந்து சென்று விடுவார்கள் என்ற உண்மை உறைக்க குடும்பமே வருத்தத்தில் இருந்தது.

கண்மணிக்கு தமையனின் பிரிவு வருத்தத்தைக் கொடுத்தாலும், அவன் தன்னிடம் இயல்பாகப் பேசுகிறான் என்பதே சற்று ஆசுவாசத்தைத் தந்தது. ஆகினும் முணுக் முணுக்கென தோன்றிய கண்ணீரின் தடம் மட்டும் நிற்கவே இல்லை.

ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் ஆதிசக்தியின் வீட்டிற்கு வந்தான் யாஷ் பிரஜிதன்.

பின்பக்க தோட்டத்தில் தனித்து அமர்ந்திருந்த நிதர்ஷனாவிற்கு எதையும் யோசிக்கத் திராணி இல்லை. தனது வேலை முடிந்து விட்டது. இதைப் பற்றி யோசிப்பதை நிறுத்தி விட்டு, தமையனைப் பற்றிக் கவலைப்பட்டால் போதுமென தனது எண்ணத்திற்கு கடிவாளமிட்டாள்.

அதுவும் அவனைப் பார்க்கும் வரை தான். “ஏய் ஆலம்பனா!” ஆடவனின் குரல் கேட்டதும் விருட்டென உள்ளே வந்திருந்தாள்.

“எங்க போன?” யாஷ் கேட்டதும், “பின்னாடி தான் இருந்தேன்” என்றாள் அவனைப் பாராமல். மொத்தக் குடும்பமும் வரவேற்பறையில் கூடி இருக்க,

“சரி இதை பிடி. தாத்தாக்கு நீ கிப்ட் கொடுக்கணும்னு சொன்னியே…” என ஐபேடை(i-pad) நீட்டினான்.

இந்தப் புடவையை அவர் தந்தபோதே யாஷ் பிரஜிதனிடம் கூறி இருந்தாள். “தாத்தாவுக்கு இங்க இருந்து போறப்ப மறக்க முடியாத மாதிரி கிப்ட் கொடுக்கணும்” என்று… அதனை நினைவு வைத்து அவருக்கு ஸ்பெஷலான இந்நாளில் பரிசை தயார் செய்திருந்தான்.

அவளும் சந்தோஷத்துடன் அதனை மகேந்திரனிடம் நீட்ட, அவர் அதனை முன்னும் பின்னும் திருப்பிப் பார்த்து விட்டு, “இது என்னதுப்பா?” என்றார்.

“ஐ பேட். போன்லேயே பெரிய சைஸ்” அவன் பதில் அளித்திட, “எனக்கு எதுக்கு இது… நான் யூஸ் பண்றது இல்லையே” என்றார் அவனை ஏறிட இயலாமல்.

“இந்த ஐ பேட் மட்டும் இல்ல. அதுல ஒரு வீடியோ இருக்கு அதான் கிப்ட்” என்றவன் அதனை வாங்கி ஒரு வீடியோவை ஓட விட்டான்.

மகேந்திரன் கேட்டது போல அவரது மனையாளின் புகைப்படம் அதில் ஒளிர்ந்தது.

பழைய புகைப்படத்தில் இருந்து செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் அவரைத் தத்ரூபமாக எடுத்திருந்தான்.

அருகில் மகேந்திரனும் இருக்க, இருவரும் கையைப் பிடிப்பது போலவும், பின் வித விதமான ஆடைகளில் ஒருவரை ஒருவர் காதலாய் பார்ப்பது போலவுமாக, இருவரும் ஒன்றாக உணவு உண்ணுவதுமாக எனப் பல விதங்களில் புகைப்படங்களை உருவாக்கி அதனை வீடியோவாகத் தயாரித்து இருந்தான்.

அதனைக் கண்ட மகேந்திரனின் முகத்தில் நம்ப இயலா வியப்பும் தன்னவளை மீண்டும் கண்டு விட்ட பூரிப்பும் பேரனுக்கு நியாயம் செய்யாது போன குற்ற உணர்வும் ஒரு சேர ஆட்டிப்படைக்க, இடிந்து அமர்ந்தார்.

“தாத்தா, அப்பா” என அனைவரும் அவரைத் தாங்க, நிமிர்ந்து யாஷ் பிரஜிதனை ஒரு பார்வை பார்த்தார். அப்பார்வையில் தான் உயிரை உருக்கும் மன்னிப்பு புதைந்திருந்ததே. கலங்கி நின்ற கண்ணீரின் பின்னால் உள்ள வேதனை அவனுக்கும் கடத்தப்பட்டது.

யாஷ் அதனை உணர்ந்து கொண்டாலும் “இதுக்கே இடிஞ்சு போனா எப்படி… இன்னும் இருக்கே” என்றான் மெல்லப் புன்னகைத்து.

‘தான் வெறுப்பவர்களிடமும் சிரிக்க கற்றுக் கொடுத்து விட்டாளே இந்தப் பெண்’ என அப்போதும் நிதர்ஷனாவையே தழுவிக்கொண்டது அவனது கலப்படக் கண்கள்.

“யோவ் கலப்பட கண்ணுக்காரா… நீ ஆல்ரெடி குடுத்த அதிர்ச்சிக்கே மனுஷன் நெஞ்சைப் புடிச்சுட்டு உக்காந்துருக்காரு. இன்னும் இன்னா குடுக்க போற?” என நிதர்ஷனா அவனுக்கு அருகில் வந்து முணுமுணுக்க, “இப்ப நெஞ்சைப் பிடிக்க போறது நீ தான்டி” என்றான் கண் சிமிட்டி.

‘இன்னைக்கு ஓவர் பார்ம்ல இருக்க நீயி…’ எனப் புகைந்தவள், “என் அண்ணனைக் கண்டுபிடிச்சுட்டியா?” என்றாள் ஆர்வமாக.

“ப்ச்… அது சீக்கிரமே நடக்கும். ஆனா, உன் வரலாறைக் கண்டுபிடிச்சுட்டேன்”

“என் வரலாறா?” நிதர்ஷனா தலையைச் சொறிய,

“ம்ம்… உன் பேமிலி பத்தி” என்றதும் அவள் முகம் மாறியது.

“இவ்ளோ டீப்பா உன்னை யாரு ஆராய்ச்சி பண்ண சொன்னா? நான் பெரிய காட் பாதர் அஜித்து… எனக்கு என்ன உன்னை மாதிரி கலப்பட கண்ணுக்காரன் முறைப்பையனாவா இருக்கப்போறான். ஏதோ வாய்க்கா வரப்புல இருந்து வந்துருக்க போறேன்…” என அசட்டையாகக் கூற, யாஷ் வாய் விட்டே சிரித்தான்.

சில முறைகளென்றாலும் அவனது சிரிப்பில் கட்டுண்டு போனவள், “சொல்லிட்டு சிரிக்கலாம்” என்றாள் முறைப்புடன் கலந்த ரசனையுடன்.

“சொல்றேன். அதுக்கு முன்னாடி நம்மளை பத்தின உண்மையை சொல்றது பெட்டர்…” என்றவன் நிதர்ஷனாவைத் தனது மனைவி இல்லை என்று கூறிட, ஆதிசக்தி இளவேந்தன் தவிர மற்ற அனைவருமே இப்போது நெஞ்சில் கை வைத்தனர்.

மகேந்திரன் திகைத்துப் போயிருந்தார்.

அவரால் மட்டுமல்ல மொத்தக் குடும்பத்திற்கும் நிதர்ஷனாவை விடுத்து வேறொரு பெண்ணை அவனது மனையாளாய் பார்க்க இயலவில்லை.

“ஏன் தம்பி இப்படி நடிக்கணும்… மனசு கஷ்டமா இருக்கு” அழகேசனுக்கு கோபமும் வந்தது அதேநேரம் அதனைக் காட்ட இயலாமல் வேதனையும் இருந்தது.

கண்மணியோ “சும்மா விளையாட்டுக்கு தான சொல்றீங்க?” எனக் கேட்டாள்.

அவளால் நம்பவே இயலவில்லை. அவர்களது பேச்சுக்கள் எதுவும் நடிப்பாய் இருக்கவில்லையே.

சிந்தாமணி தான், “இருந்தாலும் இவ்ளோ ரியலைஸ்டிக்கா நடிச்சுருக்க வேணாம் மாமா…” என வருத்தம் தெரிவிக்க, அவனோ “தாத்தா சொன்ன நிபந்தனைக்காக மட்டும் இந்த ஏற்பாடு இல்ல. ரித்தியோட பாதுகாப்புக்காகவும் இதை செய்ய வேண்டிய சிட்டுவேஷன்” என்று அவன் விளக்கம் கொடுத்தாலும், அவர்களது மனம் வேதனைப்பட்டது உண்மை தான்.

அதிகாரமாய் அவனை அதட்டும் உரிமையும் இல்லையே.

நிதர்ஷனா தான் குடும்பத்தாரை எதிர்கொள்ள இயலாமல் சங்கடமாக நெளிந்தாள்.

“ஓகே இதை விடுங்க… இப்ப சொல்லப்போறது தான் மெய்ன் சர்ப்ரைஸ். என்னை விட இப்ப இவளை இங்க எல்லாருக்கும் பிடிச்சுப் போச்சுன்னு நல்லாவே தெரியும் எனக்கு. உங்ககிட்ட இவ்ளோ விளக்கம் குடுத்துட்டுப் போகணும்னு எனக்கு எந்த அவசியமும் இல்ல ஆசையும் இல்ல. இவளால தான் இவளுக்காக தான் உங்ககிட்ட இவ்ளோ பொறுமையா பேசிட்டு இருக்கேன்” என மீண்டும் ஒரு முறை நிதர்ஷனாவின் குழப்ப முகத்தை ஏறிட்டு விட்டு,

“உன்னை வளர்த்த நீலகண்டன், உனக்கு நீலி மாமாவா இருந்தது, இங்க நீலகேசியா வேலை பார்த்த வேலைக்காரன் தான்” என்றான் நிதானமாக.

அவளோ அதிர்வுடன், “என்ன சொல்றீங்க எனக்குப் புரியல. இங்க வேலை பார்த்துட்டு இருந்த நீலகேசி என் நீலி மாமாவா?” எனக் குழம்ப,

“ம்ம் எக்ஸ்சாட் தியரி எனக்கு நிஜமா தெரியல. அனுமானமா சொல்லட்டுமா?” என்றான் அனைவரையும் பார்த்தே.

“மிஸ்டர் இளவேந்தனோட தங்கச்சிக்கு வெளியூர் பையனா பார்த்து மேரேஜ் பண்ணிருக்கீங்க. துரதிர்ஷடவசமா, அவங்களுக்கு குழந்தை பிறந்ததும் ஹஸ்பண்ட் கூட வந்த சண்டையில அவங்க மறுபடியும் இங்கயே வந்துருக்காங்க. ரைட்டா?” என இளவேந்தனை பார்க்க அவரும் குழப்பத்துடன் தலையசைத்தார்.

“ஃபைன்… அதுக்கு அப்பறம், அந்த மிஸ்டர் எக்ஸ் அதாவது அமுதவல்லியோட ஹஸ்பண்ட் அல்லது அவரை சேர்ந்தவங்க நீலகேசியை மிரட்டி அமுதவல்லியையும் அவங்க பேபியையும் கொலை செய்ய சொல்லிருக்காங்க” என்ற கூற்றில் அனைவரும் உறைந்தனர்.

அவனோ மேலும் தொடர்ந்தான்.

“ஏதோ ஒரு காரணத்துக்காக நீலகேசி அமுதவல்லிய ரெயில்வே ட்ராக்குக்கு கூட்டிட்டு வந்துருக்கணும். அங்க தெரிஞ்சோ அல்லது தெரியாமலோ அமுதவல்லி ட்ரெயின்ல அடிபட்டு இறந்துருக்கணும். அந்தக் குழந்தையை நீலகேசி கொல்ல மனசு வராமல் அல்லது கொலை பண்ண நேரம் பார்த்து தனியா கடத்திட்டுப் போயிருக்கணும். ஆக மொத்தம் அந்தக் குழந்தை சாகல…” என்றதில் பேரமைதி நிலவியது.

“இன்னாயா தளபதி கதையெல்லாம் வுட்டுட்டு இருக்க?” கன்னத்தில் கை வைத்து கதை கேட்ட நிதர்ஷனாவிற்கு ‘இப்ப ஏன் இவன் உளறிட்டு இருக்கான்’ என்ற யோசனை தான்.

ஆதிசக்திக்கு எதுவோ புரிந்திட வேகத்துடன் “ஆனா அமுதவல்லியோட ஒரு குழந்தை பாடியும் காட்டுனாங்கனு மாமா சொல்லுச்சே” என இளவேந்தனைப் பார்க்க, “ஆமா யாஷ்…” என்றார் அவரும்.

“அது உங்களை திசை திருப்புறதுக்காக இருக்கலாம்!” என உறுதியாய் கூறியதில், மகேந்திரன் “அப்போ அமுதவல்லி குழந்தை சாகலைன்னு சொல்றியா? சாகலைன்னா யார் அந்தக் குழந்தை?” எனக் கேட்டார் புருவ முடிச்சுடன்.

“அப்போ குழந்தையா தான் இருந்துச்சு. இப்ப தான் குட்டி சாத்தானா உங்க முன்னாடி நிக்குது…” என நிதர்ஷனாவைக் கை காட்ட, அவள் திடுக்கிட்டுப் போனாள்.

“எஸ் மை பிலவ்ட் ஆலம்பனா, உங்க பேத்தி தான். டி. என். ஏ ரிசல்ட் வரை கைவசம் இருக்கு” என்றிட இளவேந்தனுக்கு இதயமே அடைத்தது.

“என்… என் தங்கச்சி பொண்ணா?” திக்கித் திணறியவருக்கு கண்ணீர் நில்லாமல் வழிந்தது.

மற்றவர்களுக்கு இன்னுமே என்ன நடக்கிறது என்று புரிபடவில்லை.

நிதர்ஷனாவோ திருவிழாவில் காணாமல் போன குழந்தையாக திருதிருவென விழித்தாள்.

பயத்தில் யாஷ் பிரஜிதனின் கையை இறுக்கிப் பற்றிக்கொள்ள, “ரிலாக்ஸ் நிது. இவங்ககிட்ட இருந்து தான் உன்னை நீலகேசி தூக்கிட்டுப் போயிருக்கான். ஆனா ஏன் தூக்கிட்டு வந்தான்ற உண்மையை இன்னும் டீப்பா விசாரிக்கணும். உன் அப்பா யார்னு எனக்கு தெரியல. அதுக்கான பதில உன் சொந்த அங்கிள் தான் சொல்லணும்” என்று இளவேந்தனைப் பார்த்தான்.

அவரோ மடங்கி தளர்ந்து அவள் முன் முட்டியிட்டு அமர்ந்து விட்டார். அதில் பதறியவள், “மாமா” என எழுப்ப போக, ஆதிசக்தி அவரது தோளைப் பற்றி, “இளா…” என அவரை நிதானப்படுத்த முயன்றார்.

அவரோ மனைவியின் தோளில் சாய்ந்து ஒரு மூச்சு அழுது தீர்த்தார்.

“என் அம்முவோட பொண்ணு ஆதி. என் கூடவே இருந்துருக்கா… உயிரோட இருந்துருக்கா… இத்தனை வருஷமா தெரியவே இல்லையே… என் தங்கச்சி என்னை மன்னிக்கவே மாட்டா” என்று சிறு பிள்ளை போல தேம்பி தேம்பி அழுதவரின் குரலைக் கேட்டு வீட்டைத் தாங்கி இருந்த தூண்களும் வேதனை கொண்டது.

குடும்பத்தார் அவரை சமன்செய்ய எத்தனிக்க, மகேந்திரன் உடைந்த மனதை சரி செய்து நிதர்ஷனாவின் கேசத்தை கோதி விட்டார்.

“சில நேரம் தோணும்… உன் பேச்சு செய்கை எல்லாம் வல்லிப்பொண்ணு மாதிரியே இருக்கேன்னு… ஆனா இவ்ளோ யோசிக்க தெரியலமா… இப்ப உன் பேர் ரித்தி இல்ல தான? நிதர்ஷனாவா?” ஒருமுறை கேட்டுக்கொண்டார் பெரியவர்.

அவளுக்கோ தனக்காக அவர்கள் அழுவதை எண்ணி வருத்தம் நேர்ந்தாலும், ‘கடைசி வரைக்கும் நான் – வெஜ்ஜ கண்ணுல காட்டாம இவன் மட்டும் இத்தாலிக்கு போய் ராஜ வாழ்க்கை வாழுவான் போல’ என மானசீகமாக கண்ணீர் வடித்துக் கொண்டாள் நிதர்ஷனா.

அவளது எண்ணத்தை அறிந்தவன் போல, “சிக்கனுக்கு பிறந்தவளே… செண்டிமெண்ட் ஆகுற மாதிரி நடிக்கவாவது செய்டி” எனக் கிண்டலாக அவள் காதோரம் கிசுகிசுத்தான்.

“வந்தா சென்டிமென்ட் ஆக மாட்டேனாயா. உள்ள ஒன்னும் வர மாட்டுதே. இப்ப நான் என்ன டயலாக் பேசணும்?” என முழு நேர நடிப்பிற்காக தன்னை தியாகம் செய்தவள் போல கேட்டாள்.

“அடியேய்… இங்க என்ன சீரிஸா எடுத்துட்டு இருக்கேன். உன் சொந்தக் குடும்பம்டி இது. போய் நீயும் மூச்சு முட்ட அழுதுட்டு, ஒன்னு சேர்ந்துக்க” என்றான் கேலிபோல.

“வர வர எனக்கு உன் வியாதி வந்துடுச்சு போலயா. ரியாக்ட் பண்ணவே வரல! என்கிட்ட முதல்லயே சொல்லிருந்தா நான் க்ளிசரினாச்சு ஊத்திருப்பேன்”

“அடிப்பாவி… அங்க ஒருத்தர் பிஃப்டீன் மினிட்ஸ்சா அழுதுட்டு இருக்காரு. ச்சே… இரும்பு இதயம்டி உனக்கு” என சிரிப்பை அடக்கிக்கொண்டு வார,

“நீயெல்லாம் இந்த டயலாக் பேசுற அளவு விதி என்னைக் கொண்டு வந்து விட்டுருக்கு பாத்தியா?” என்றதில் அவன் பக்கென சிரித்து விட்டான்.

அழுது கொண்டிருந்த குடும்பத்தினர் முணுமுணுவென பேசி சிரித்துக் கொண்டிருந்த இருவரையும் கொலைவெறியுடன் பார்த்தனர்.

அதில் நிதர்ஷனா முகத்தை சோகமாக வைத்துக் கொண்டாள்.

பின் அதுவும் முடியாமல், “தப்பா எடுக்காதீங்க மாமா. என்னால இதை டக்குனு அக்செப்ட் பண்ண முடியல. என் அண்ணன் வந்தா தான், எனக்கு பீலிங்ஸ் வரும் போலருக்கு. அவன் வந்ததும் நான் ரியாக்ட் பண்றேன். இப்ப எனக்கு ஒண்ணுமே தோண மாட்டேங்குது” என்றாள் கெஞ்சலாக.

அவளது மனநிலை புரிந்தது. தங்களை பற்றி அவளது தாயைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் திடீரென உறவு கொண்டாட இயலாது தான்.

அதில் சற்றே நிதானித்தவர், பின் புருவம் சுருக்கி “அண்ணனா? அமுதவல்லிக்கு நீ ஒரே பொண்ணு தான்மா…” என்றார்.

இத்தனை நேரம் பீலிங்ஸ் வரலை என்று சொல்லிக்கொண்டிருந்தவளுக்குள் சுருக்கென ஒரு வலி.

“இல்லையே. அண்ணன் இருக்கானே எனக்கு. என்ன யாஷ்… என் அம்மாவுக்கு நான் ஒரே பொண்ணா? நிவேவும் அவங்களுக்கு தான பிறந்துருப்பான்…” என யாஷிடம் விளக்கம் கேட்க,

“ம்ம்ஹும்… நீலகேசி உன்னை மட்டும் தான் இங்க இருந்து தூக்கிட்டுப் போயிருக்கான். நிவேதன யார்னு இன்னும் தெரியல. ஆனா அவன் கண்டிப்பா நீலகேசியோட பையனோ ஆர் சம்திங்கோ இல்ல. அப்போ அவன் யார்னு விசாரிச்சுட்டு இருக்கேன்” என்றதும் உடைந்தே விட்டாள்.

“அப்… அப்போ அவன் என் சொந்த அண்ணன் இல்லையா யாஷ்?” சட்டென கண்ணில் நீர் சூழ்ந்து விட்டது.

யாஷ் என்ன சொல்வதென்று புரியாமல் நிற்க, இளவேந்தன் மீண்டும் பதிய வைத்தார்.

“இல்லமா. நீ அவளுக்கு ஒரே பொண்ணு. உனக்குப் பேர் வைக்கிற நாள்ல தான் அமுதாவும் நீயும் செத்துட்டதா எங்களுக்கு தகவல் வந்துச்சு”

இளவேந்தனை கண்ணெடுக்காது சில நொடிகள் பார்த்திருந்தவள், பின் மெல்ல சிரித்தாள். அது விரக்தி புன்னகை என்று யாஷ் மட்டுமே அறிவான்.

“நிது!” அவன் கூர்மையாய் பார்க்க,

அவளோ இளவேந்தனை உறுதியாய் ஏறிட்டு, “இல்ல சார்… நீங்க ஏதோ தப்பா புருஞ்சுட்டு இருக்கீங்க. நிவே எனக்கு சொந்த அண்ணன் இல்லன்னா, நான் உங்க தங்கச்சி பொண்ணா இருக்க வாய்ப்பே இல்ல… என அழுத்தம் திருத்தமாய் உரைத்தாள்.

அதில் அவர் திடுக்கிட்டுப் போக, யாஷிடம் திரும்பியவள் “என் மொத்த குடும்பத்தையும் கண்டுபிடிக்க வேணாம். என் அண்ணனை மட்டும் கண்டுபிடிச்சு குடுங்க யாஷ். எனக்கு ஒரே சொந்தம் அவன் மட்டும் தான்னு நினைச்சுட்டு இருக்கேன். இன்னும் எத்தனை பேரை என் ரத்த சொந்தம்னு காட்டுனாலும் எனக்கு என் அண்ணன் மட்டும் வேணும். அவனை என்கிட்ட இருந்து பிரிக்காதீங்க” எனும்போதே பீறிட்டு வெளிவந்த கண்ணீரை அடக்க இயலாமல் யாஷின் நெஞ்சில் புதைந்து கொண்டாள்.

தன்னிடம் தஞ்சம் புகுந்தவளை அரவணைத்த யாஷ் பிரஜிதன், “சில் நிது. சில்” என்று அவளது தலையில் தனது தலையை அழுத்தி ஆறுதல் உரைக்க, இருவரின் உலகிலும் அவர்கள் மட்டுமே வலம் வந்தனர்.

அன்பு இனிக்கும்!
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
24
+1
210
+1
7
+1
11

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    5 Comments

    1. Epi super sis… Waiting next epi sis… Sikiram update kutunga sis…😌

      1. sister sema 🙏👍. super . very surprised. wait pana vaikathinka . update kodunka seekiram please🥰🙏