
அத்தியாயம் – 25
ஆராதனா கேட்ட கேள்வியில் தேவா திகைத்து நிற்க, ‘பதில் வேணும்’ என்ற ரீதியில் அவன் கண்ணை ஊடுருவினாள்.
அதில் தடுமாறியவன், “முட்டாள்தனமா பேசாத இசை. நான் கிளம்புறேன்…” என்று காரைக் கிளப்ப, “நீ கேட்டதுக்கு நான் எக்சாம்பிளோட பதில் சொன்னேன்ல, நீயும் சொல்லு!” என்றாள் பிடிவாதமாக.
அவன் பெருமூச்சுவிட்டு, “அந்த நிலைமையில உன்ன விட்டுட்டு போறதுக்கு நான் ஒண்ணும் சாடிஸ்ட், செல்ஃபிஷ் இல்ல. வெறும், அந்த ரிலேஷன்ஷிப் இல்லாம உன்னால இருக்க முடியும்னா, என்னால தாராளமா இருக்க முடியும். பிகாஸ் ஐ லவ் யூ” என்றிட, அவள் அவனை வெற்றிப் பார்வை பார்த்தாள்.
அதன் பிறகே, அவன் பேசியதை உணர்ந்து அவசரமாக, “அது இன்கேஸ் நான் உன்னை லவ் பண்ணிருந்தா! ஜஸ்ட் ஃபார் ஆன் எக்சாம்பிள் லைக் யூ செட்…” என்றவன் சற்று திணற, அவள் கண்ணெடுக்காமல் அவனைப் பார்த்துக் கொண்டே இருந்தாள்.
அவனோ அதில் வேறு எங்கோ பார்த்துக் கொண்டு, “இங்க பாரு, இதான் சாக்குன்னு நான் உன்னை லவ் பண்ணுவேன், உன்னை அக்செப்ட் பண்ணிப்பேன்னு கனவுல கூட நினைக்காத! கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி, ஒரு மனசை ஒட்ட வைக்க முடியாது. என்னைப் பொறுத்தவரை, நீ தர்ட் பெர்சன் தான்… காட் இட்!” என்று கோபத்தை வரவழைத்து, கண்டிப்பாகப் பேச முயன்றவனுக்கு, அவன் அறியாமல் நெஞ்செல்லாம் ஏதோ ஒரு வலி பரவி, நடுங்கியது.
கோபம் வராமல், பயமே அவன் முன் நின்று துரத்த, மூச்சு முட்டியது. இருந்தும் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு, “புரிஞ்சுதா” எனக் கேட்டிட, அவளோ “ம்ம் நல்லா புரிஞ்சுது புருஷர் சார்… நீங்க என்னை லவ் பண்ணவே இல்லை. என்னை அக்செப்ட் பண்ணவே இல்லை. இப்போ கூட, ஒரு எடுத்துக்காட்டுக்கு தான் சொன்னீங்கன்னு ரொம்ப நல்லாவே புரிஞ்சுது… புருஷர் சார்!” என்று நல்லபிள்ளையாகத் தலையை ஆட்டி, விழி விரித்துக் கேலிக் குரலில் சொல்ல, அவன் அவளை முறைத்தான்.
அவள் அதனைக் கண்டுகொள்ளாமல், அவளின் பாவனையை மாற்றாமல், “என்ன தேவ் டார்லு? நான் தான் கரெக்ட் ஆ புருஞ்சுக்கிட்டேன்ல, அப்பறம் எதுக்கு முறைக்கிற…?” என்னும் போதே, அவன் காரைச் சட்டென எடுத்து, புயல் வேகத்தில் செலுத்தினான்.
அவள் இதழில் பூத்த குறுநகையை மறைத்துக் கொண்டு, அவன் சொன்ன ஐ லவ் யூவை நினைத்து, தனக்குள் சிலிர்த்துக் கொள்ள, வீடு வந்ததில் பிரேக்கை அழுத்தினான்.
பின், அவளைத் திரும்பிப் பாராமல், அவன் உள்ளே சென்றிட, அவனின் நண்பர்களும் அவரவர் அறையில் இருந்தனர்.
அவனுக்குத் தான், ஏதோ ஒரு தனிமை உணர்வு சூழ, அவர்களின் அறைகளை ஏக்கமாகப் பார்த்து விட்டு, அறைக்குள் புகுந்து கொண்டான்.
அவனின் உணர்வுகளைப் படித்தவள், வேண்டும் என்றே தான் அனைவரையும் அவனைத் தவிர்க்கச் சொன்னாள். வெறும் கோபத்தை மட்டுமே காட்டுபவன், அவனின் சோகத்தையும், அழுகையையும், ஏக்கத்தையும் வெளிப்படுத்த வேண்டும் என்றே இப்படி செய்திட,
அவனின் நண்பர்களோ, “நாங்க இப்படி அவன் கிட்ட பேசாம இருந்ததே இல்லை. அவன் பேசாம இருந்தா கூட, எங்க கூடத் தான் இருப்பான். அட்லீஸ்ட் நாங்க பேசுறதை பார்த்துக்கிட்டாவது இருப்பான். இப்போ, அவனை அவாய்ட் பண்றது கஷ்டமா இருக்கு.” என்று புலம்ப, அவர்களைச் சமன் செய்வதற்குள் வைஷுவுக்கும், தமிக்கும் ஒரு வழி ஆகி விட்டது.
அம்மு, “அவன் நல்லதுக்கு தான பண்றோம். அப்பறம் என்ன?” என்று தோளைக் குலுக்கி விட்டு உறங்கச் சென்றிட, விஷ்வா யோசனையாக அவளைப் பார்த்தான். அவனிடம் அவள் சரியாகப் பேசியே ஒரு வாரம் ஆகிவிட்டது. பொதுவாகப் பேசினாலும், ஒரு ஒதுக்கத்துடன் பேசியதை உணர்ந்தவன், அவள் அருகில் சென்று படுத்துக் கொண்டு, “அம்மு” என்றழைத்தான் பாவமாக. அவள் “ம்ம்” என்றிட, “என்மேல ஏதாவது கோபமா?” எனக் கேட்டான் தயங்கி கொண்டு. “எனக்குத் தூக்கம் வருது… நாளைக்கு ஆபிஸ் இருக்கு நீயும் தூங்கு” என்றவள் கண்ணை மூடிக் கொள்ள, அவன் தான் உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தான்.
சிறிது நேரத்தில் அவள் தோளை ஒரு விரலால் சுரண்டியவன், “ஏன் அம்மு என்மேல கோபமா இருக்க?” என்று மீண்டும் வினவ, “நான் கோபமா இருக்கேன்னு சொன்னேனா?” என்றாள் சற்று காரமாக.
அதில் அவன் அமைதியாகியதில், அவன் புறம் திரும்பிப் படுத்தவள், “அவன் கல்யாணத்துக்கு ஓகே சொல்லலைன்னா நீ விஷம் குடுச்சுருப்பீல? அப்போ, நீ என்னைப் பத்தி யோசிக்கவே இல்ல அப்படித்தான?” என்று குற்றம் சாட்டும் பார்வை பார்க்க, விஷ்வா அதிர்ந்தான்.
அறைக்குள் சென்றதும் ஆரு பெட்ஷீட்டை எடுத்துக் கொண்டு பால்கனிக்கு செல்ல விழைய, தேவா அவளைத் தடுக்கத் தோன்றாமல், அவள் பேசிய வார்த்தைகளின் தாக்கத்தில் ஏதோ சிந்தனையில் இருக்க, அவனைப் பார்த்து விட்டு, அவன் அருகில் வந்த ஆரு, “தேவ்” என்றழைத்தாள் மென்மையாக.
“நீ வேணா ஒரு எக்சாம்பிள்க்கு சொல்லிருக்கலாம். ஆனால், நான் உண்மையா தான் சொன்னேன். ஒருவேளை அந்தப் பையன் இடத்துல இப்போ இந்த நிமிஷம் நீ இருந்தாலும், என்னோட பதில் அதுவா தான் இருக்கும். பிகாஸ் ஐ லவ் யூ…!” என்றவள் அவன் பதிலை எதிர்பாராமல் பால்கனிக்கு சென்றிட, அவன் தான் சிலையானான்.
சிறிது நேரம் என்ன யோசிக்கவென்றே அவனுக்குப் புரியவில்லை. தலை முடியை இறுக்கமாகப் பற்றிக் கொண்டு, அப்படியே கட்டிலில் அமர்ந்தவனுக்கு கண்ணிலிருந்து ஒரு சொட்டு கண்ணீர் அவன் பாதத்தை நனைக்க, ‘இல்ல நான் அழுக மாட்டேன். நான் அழுகவே மாட்டேன்… எனக்கு இதெல்லாம் வேணாம். இந்த அன்புலாம் வேணாம். ஒருவேளை என்னால மாறவே முடியலைன்னா, நான் உன்னைக் கஷ்டப்படுத்திட்டே தான் இருப்பேன். நீ சொன்னதுலாம் சும்மா பேச்சுக்குத் தான் சரியா இருக்கும்… பிராக்டிகல் வாழ்க்கைக்கு?
ஒரு வேளை என் காதலை வெளிப்படுத்த முடியாமயே போயிடுச்சுன்னா? உண்மை தெரிஞ்சாலும், உன்னால இதே உறுதியோடு எப்படிடி சொல்ல முடியும்? அதுவும் எத்தனை வருஷத்துக்கு? நான் மாறமாட்டேன். எனக்கு எதுவுமே வேணாம். யாருமே வேணாம்” என்று அவனுள் பெரும் போராட்டம் நடக்க, அவள் பேசிய ஒரு வார்த்தையைக் கூட அவன் மனதினுள் புகுத்த விரும்பாமல், வலுக்கட்டாயமாகத் தன்னை வருத்திக் கொண்டான்.
வெகுநேரம் அப்படியே அமர்ந்திருந்தவனின் கால்கள் தன்னிச்சையாக அவளை நோக்கிச் செல்ல, மனதில் இருந்ததை அவனிடம் உணர்த்திவிட்ட நிம்மதியில் நன்கு உறங்கியிருந்தாள், எப்படியும் அவனை மாற்றி விடலாம் என்ற நம்பிக்கையோடு.
அவளையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தவன், இன்று பனி அதிகமாக இருப்பதைக் கண்டு, அவளை எழுப்பப் போனான். ஆனாலும், ஒரு தயக்கம் மனதை தாக்கச் செய்வதறியாமல் நின்றவன், அவள் சரியாகக் கூடப் படுக்காமல் அமர்ந்த படியே உறங்குவதில் தன்னை நொந்து, “இசை” என்றான்.
அவளின் ஆழ்ந்த உறக்கத்தை, அவனின் குரல் அசைக்க வில்லை போலும்! அவள் கண் திறவாமல் இருக்க, அவள் கையைத் தட்டி “இசை” என மீண்டும் அழைத்தான். அதில் அவள் சிணுங்கி விட்டு உறக்கத்தை தொடர, அவனுக்குத் தான் போவதற்கும் மனமில்லை, அவளை எழுப்பவும் மனம் இல்லை.
ஆனால் அவனையும் மீறி அவள் பேசிய வார்த்தைகளும், அவள் காதலை சொன்ன விதமும், அவனுள் சிறு குறுகுறுப்பை ஏற்படுத்த, “வாயி வாயி… இவ்ளோ வாயி பேச எங்கடி கத்துக்கிட்ட…! நீ பேசுனதும் கரெக்ட் தான்…” என்று பெரிய மூச்சை இழுத்து விட்டு,
“ஆனால் என்னால ஒத்துக்க முடியலையே…! நான் என்ன பண்ணுவேன் இசை? நீ ஏன் என் லைஃப்ல இவ்ளோ லேட்டா வந்த? என் பிரெண்ட்ஸ் மாதிரி, சின்ன வயசுலயே என் முன்னாடி வந்துருக்கலாம்ல, நான் கொஞ்சம் மாறிருப்பேன்ல… இத்தனை வருஷம் கழிச்சு காயத்தைக் கீறி மருந்து போடச் சொன்னா, எப்படி இசை? எல்லாமே தழும்பாகி, ஆறாத வடுவா மாறிடுச்சு… அதை எப்படி என்னால கடந்து போக முடியும்? பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்கு…
உண்மையாவே பைத்தியம் ஆகிடுவேனோன்னு பயமா இருக்கு இசை. இதுல என்னால உன்னை இழுக்க முடியாதுடி. என் பாதிப்பும் என் காயமும் என்னோடயே போகட்டும். அதால நீயும் காயப்படறதுல எனக்கு உடன்பாடில்லை. எனக்கே தெரியாம நான் உன்னைக் கண்டிப்பா கஷ்டப்படுத்திடுவேன். ஒருவேளை உனக்குப் புருஷனாவே இல்லாம போய்ட்டா?” என்று ஏதேதோ உளறியவன், பேச முடியாமல் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கினான்.
அவள் அசைவது போல் இருக்க, சட்டெனத் தன்னை அமைதிபடுத்திக் கொண்டு, அவள் தலையைத் தடவிக் கொடுத்து, அவளை உறங்க வைத்தவன் “போய்டு இசை. நீ என் வாழ்க்கைக்குள்ள இருக்கவே கூடாது. கெட் லாஸ்ட்!” என்று சலிப்பாகப் பேசியவன், தயங்கி கொண்டே, அவளைக் கையில் அள்ளிக் கொண்டு, கட்டிலில் படுக்க வைத்தான்.
அதன் பிறகே விழிப்பு தட்ட சட்டெனக் கண்ணைத் திறந்தவள், தான் கட்டிலில் படுத்திருப்பதை கண்டு புரியாமல் விழித்தாள்.
‘நம்ம எப்படி உள்ள வந்தோம்?’ என அறையைச் சுற்றி தேவாவை தேட, அவன் எப்போதோ அங்கிருந்து வெளியில் வந்திருந்தான். ஆரு தான், ‘இவன் தான் நம்மளை தூக்கிட்டு வந்தானா? இல்ல நமக்குத் தூக்கத்துல நடக்குற வியாதி வந்துருச்சா?’ எனப் பலவாறாகக் குழம்பி பின் உறங்கிப் போனாள்.
மறுநாள், அனைவரும் அவரவர் வேலைக்குக் கிளம்பி கொண்டிருக்க, விஷ்வா அம்முவையே பார்த்துக் கொண்டு இருந்தான். அவள் தான் இவனைக் கண்டுகொள்ளவே இல்லை. “அம்மு நான் உன்னை டிராப் பண்ணவா?” என்றிட,
அவள் “தேவை இல்ல நாங்களே போய்க்கிறோம்.” என்றதும், டைனிங் டேபிளில் அவன் அருகில் நின்று சாப்பாடு எடுத்து வைத்துக் கொண்டிருந்தவளின் இடையில் நறுக்கெனக் கிள்ளினான்.
அதில் அவள் துள்ளி ‘ஆ’ வெனக் கத்த, மற்றவர்கள் புரியாமல் பார்த்தனர். வைஷு “என்னாச்சுடி? ஏன் இப்படி கத்துன?” என்று கேட்டதும், சிவந்த கன்னத்தை மறைத்து அவனை முறைத்து கொண்டு, “ம்ம் எறும்பு கடிச்சுருச்சு!” என்றாள் மெல்லிய குரலில். தமி எதையோ கண்டுகொண்டு நக்கலாக, “என்ன எறும்பு ஒரு ஆறடி உயரம் இருக்குமா?” எனக் கேட்க, அதில் புறை ஏறி விஷ்வாவுக்கு இருமல் வந்து விட்டது. கண்ணில் நீர் வர இருமியவனை கண்டு தமியும் அம்முவும் சிரித்திருக்க,
தேவா வந்தவன் அவன் தலையைத் தட்டி, தண்ணீர் குவளையை கொடுத்து, “எல்லாரும் என்ன வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்களா? தண்ணி குடுக்க வேண்டியது தான” என அம்முவை கடிந்து கொள்ள, அவள் ‘சரிதான் போடா…! ஊர்ல இல்லாத ப்ரெண்ட் வச்சிருக்கான்…’ என்று முணுமுணுத்ததில் தேவா அவளை முறைத்தான்.
டைனிங் டேபிளில் அமர்ந்து உணவு அருந்திக் கொண்டிருந்த ஆரு, ‘இவன் வேற’ என்றெண்ணி, நிஷாந்திடம், “ஆமா மாம்ஸ், என் மாமாவைப் போட்டுக் குடுக்க தான் நீங்க இங்க வந்தீங்க… அதான் இப்போ அந்த வேலை முடிஞ்சுதே, அவர் தான் போலீஸ்ல சர்ரெண்டரும் ஆகிட்டாரே! இன்னும் இங்க உங்களுக்கு என்ன வேலை?” என்று கேட்க, ஆண்கள் மூவரும் அவளைத் தான் ‘பே’ வெனப் பார்த்தனர்.
அவள், “என்னடா! அவர் தான் திருந்தி சரண்டர் ஆகிட்டாருல்ல” என மீண்டும் கேட்டிட, தேவா ஒரு நொடி நின்று அவளைக் கேலிப்பார்வை ஒன்றை வீச, வாயில் பிரெட்டை கடிக்க போனவள் இவர்கள் பார்ப்பதை கண்டு,
“எதுக்குடா இப்படி பார்க்குறீங்க…? ஒருத்தி அறிவாளிதனமா கேள்வி கேட்டுட கூடாதே” என்று முகத்தைச் சுருக்கிக் கொண்டவள், அவர்களுக்கு முதுகு காட்டி சாப்பிட ஆரம்பித்தாள். ஆண்கள் மூவரும் தான் கமுக்கமாகச் சிரித்துக் கொண்டு தேவாவை பார்க்க, அவனோ அடக்கப்பட்ட சிரிப்புடன் வெளியில் சென்று விட்டான்.
இப்படியாக மேலும் நாட்கள் கடந்திட, அன்று தேவா வேலை இருக்கிறதென்று காலையிலேயே வெளியில் சென்றான். எப்போதும் போல் மற்றவர்கள் அலுவலகம் கிளம்பிக் கொண்டிருக்க, தேவா புயல் வேகத்தில் வீட்டிற்கு வந்து, “இசை” என்றான் கடுமையாக.
அவள் என்னவென்று பார்க்க, “அன்னைக்கு அந்தப் பையன பார்த்தோமே, அவன் எப்படி இருக்கான்?” என்று இறுகிய குரலின் கேட்டவனின் குரலை உணராதவள், “அந்தப் பையன் இப்போ கவுன்சிலிங் போய் ஓரளவு நல்லாருக்கான். இப்போ என்கிட்ட கூட நல்லா பேசுறான்னா பார்த்துக்கோயேன்…” என்று அவனை ஓரக்கண்ணால் அளவெடுத்துக் கொண்டு கூறினாள்.
அவன் புருவத்தை உயர்த்தி, “ஓ, அப்போ கவுன்சிலிங் போனதாள அவன் மாறிட்டான் அப்படித்தான?” என்று கேட்டதும், அவள் “ம்ம்” என்று மேலும் கீழும் தலையாட்டிட, அவளைச் சப்பென அறைந்தான்.
அதில் திகைத்தவள், அவனைப் புரியாமல் பார்க்க, “எத்தனை பொய் டி சொல்லுவ? ஹான்? என்னைப் பார்த்தா உனக்கு எப்படி தெரியுது? பொய் சொல்லி, என்னை அங்க கூட்டிட்டு போய், என்னைப் பைத்தியம் ஆக்கலாம்னு பிளான் பண்றியா? என்ன உன் பிளான் ஹ்ம்ம்?” என அவள் கழுத்தை பிடித்தான்.
“தேவ் நான் சொல்றதை கொஞ்சம்” என்று அவள் பேசுவதை காதில் வாங்காதவன், “ஏதாவது பேசுன கொன்னுடுவேன்…” என்று பல்லைக்கடித்து மிரட்டிட, சத்தம் கேட்டு அனைவரும் அங்கு வந்து விட்டனர்.
காலையில் வேலை விஷயமாக வெளியில் சென்றவன், அப்போது தான், அவளின் தோழி நித்தியை பார்த்தான். அந்தப் பையன் எப்படி இருக்கிறானெனக் கேட்கலாமென எண்ணி, அவளிடம் சென்று பேச, அவளோ, “என் பையனுக்கு என்ன பிரச்சனை? எனக்குத் தான் மனசு சரி இல்லைன்னு, கௌன்சிலிங் போனேன். அவன் நல்லா தான் இருக்கான் சார்” என்றிட, அதில் தேவாவுக்கு சுள்ளெனக் கோபம் வந்து விட்டது.
தன்னை ஏமாற்றி விட்டாள்! தன்னிடம் பொய் உரைத்து விட்டாள்! என்று மட்டுமே யோசித்தவன், கோபத்தை விடுத்து சிறிது சிந்தித்திருந்தாலும் அவள் பேசிய வார்த்தைகளை வைத்தே, அவனுக்கு ஆறுதல் அளிக்க முயன்றாள் என்பது புரிந்திருக்கும். ஆனால், அவனின் கோபங்களும் காயங்களும் அவனைச் சிந்திக்க விடவில்லை. அதனாலேயே அவளிடம் வந்து சண்டை இட்டான்.
அவள் முடியை இறுக்க பற்றி, “என்னை இம்ப்ரெஸ் பண்ண பார்க்குறியா? உன்னைத் தொடாதன்னு சொன்னதுக்காக என்னை லூசாக்கலாம்னு நினைக்கிறியா? இல்லை என்னை லூசுன்னு முடிவே பண்ணிட்டியா?” என்றவன் மேலும் கழுத்தை இறுக்க, விஷ்வா, “டேய் என்னடா பண்ற விடு அவளை!” என்று தடுத்தான். உடன் நிஷாந்த்தும் அருணும் தேவாவை தள்ளப் போக, அவன் அவனின் பிடியை தளர்த்தவே இல்லை.
“தேவ் நான் அப்படி நினைக்கல!” என்று மூச்சு வாங்க கூறியவளுக்கு மயக்கமே வந்து விட, அதன் பிறகே அவளை விடுவித்துப் பிடித்துத் தள்ளினான். அதில் தூர சென்று விழுந்தவளை, அவளின் தோழிகள் தாங்கிக் கொண்டனர்.
தேவா, “நான் திரும்பி வரும்போது நீ இங்க இருக்கவே கூடாது!” என்று ஓர் விரலை நீட்டி எச்சரிக்க, அவள் அப்போதும் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு, “இங்க இருந்து என்னால போக முடியாது. அப்படி போனா பொணமா தான் போவேன்…” என்று வாதம் செய்தவளைக் கூர்மையாகப் பார்த்தவன்.
“அப்போ செத்துரு…!” என்று விட்டு விறுவிறுவென வெளியில் சென்று விட, அவள் கண்ணில் வழிந்த நீருடன் சிலையாக நின்றாள்.

