Loading

25

சமையலறையில் மிதிலா சமைத்துக் கொண்டிருக்க, ஹாலில் உள்ள ஷோபாவில் அமர்ந்திருந்தான் ரகுநந்தன்.

அவளோ, அவனைக் கண்டு கொள்ளாமல் வீட்டை ஒழுங்குப்படுத்துவது, சமையல் வேலை என பம்பரமாக சுழன்று கொண்டிருக்க, தன் வீட்டில் உரிமையுடன் பம்பரமாய் வலம் வரும் தன்னவளை பார்த்துக் கொண்டிருந்தான்.

அவள் முகம் தன் குடும்பத்தார் முன்னிலையில் மட்டும் போலி புன்னகையை சுமந்து இருந்தாலும், இப்பொழுதோ அவள் முகம் எந்த உணர்வுமின்றி, அந்த வீட்டினுள் வளைய வர, தன்னவளின் உணர்வு போராட்டத்தை அவனும் உணர்ந்து தான் இருந்தான்.

இருபத்து நான்கு ஆண்டுகளாய் குடும்பம் என்னும் சோலைக்குள் வாழ்ந்து கொண்டிருந்தவளுக்கு ஒரே நாளில் திருமணம், புகுந்த வீடு என மாறினால் அதனால் அவள் மனம் படும் பாட்டை அவள் அளவு உணர முடியா விட்டாலும் அதன் வலியை உணர்ந்தான் ரகுநந்தன்.

தன்னவளை அவள் வீட்டில் சந்தோச முகத்தோடு பார்த்த நினைவுகள் அவனை அலைக்கழித்தன.

அன்றும் அவளைப் பார்க்கத் தான் சுந்தரேசனிடம் வாங்கிய புத்தகம் ஒன்றை கொடுக்கும் சாக்கில் அவர்கள் வீட்டிற்கு சென்றிருந்தான் ரகுநந்தன்.

அன்று உறவுக்காரர் ஒருவரின் இல்லத் திருமணவிழா ஒன்றிற்கு பூங்கோதையும் சுந்தரேசனும் சென்றிருந்தனர்.

வீட்டில் அக்காவும் தங்கையும் மட்டுமே இருக்க, நடுஹாலில் இருந்த தொலைக்காட்சிப் பெட்டி அதிகளவு சத்ததோடு அலறிக் கொண்டிருந்தது.

“மல மல மல மருதமல
சில சில சில வெங்கல சில…”

என்ற பாடல் தான் ஒலித்துக் கொண்டிருந்தது.

அக்காவும் தங்கையும் துப்பட்டாவை கையில் பிடித்து ஆட்டிக் கொண்டு தொலைக்காட்சியில் ஓடிக் கொண்டிருந்த பாடலுக்கு நடனம் ஆடிக் கொண்டிருக்க, நந்தனுக்கோ அவர்களின் ஆட்டத்தைப் பார்த்து ஒரு நிமிடம் இருதயம் துடிப்பதையே நிறுத்த, அவர்களோ அங்கு ஒரு ஜீவன் நின்றிருப்பதையே கண்டு கொள்ளாமல் ஆட்டத்தில் வேகமெடுத்துக் கொண்டிருந்தனர்.

ஆடியவாறே வாசல் புறம் திரும்பிய மிதிலா அவனைக் கண்டு பேயறைந்ததைப் போல் நிற்க, அவள் நின்றதைக் கண்ட நறுமுகை ஆடியவாறே திரும்ப, அங்கு கைகளைக் கட்டிக் கொண்டு கதவின் மேல் சாய்ந்து நின்றவனைக் கண்டு விழிப் பிதுங்கி நின்றாள்.

“கதவ தட்டிட்டு உள்ள வரணும்னு கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்ல?” என மிதிலா முணுமுணுக்க,

“கதவைத் தட்டினேன், நீங்க ஆடறதுல பிசியா இருந்ததுல அத கவனிக்கல. அதான் நானே உள்ள வந்துட்டேன்” என அவளின் முணுமுணுப்புக்கு பதில் அளிக்க, அப்பொழுது தான் அவள் உணர்ந்தாள் கதவை தாழ்ப்பாள் போடாமல் விட்டதை.

நாக்கைக் கடித்துக் கொண்டவள், தன் கையில் இருந்த துப்பட்டாவை தன் மேல் போட்டுக் கொண்டு, “என்ன வேணும்?” என்றாள் மிதிலா அவனை அங்கிருந்து சீக்கிரம் அகற்றும் நோக்கில்.

அவனோ, அவ்வளவு எளிதில் என்னை வெளியேற்ற முடியாது என்பது போல் உள்ளே வந்தவன், ஷோஃபாவில் அமர, அதற்குள் சமையலறைக்குள் சென்றிருந்த நறுமுகை கையில் தண்ணீர் சொம்புடன் வர,

“குட் கேர்ள்… வந்தவங்கள எப்படி வரவேற்கிறதுனு உன் தங்கச்சிக்கிட்ட கத்துக்கோ ஜானு” என்றவாறே அவள் நீட்டிய சொம்பை வாங்கி, தண்ணீர் குடிக்க தன் தங்கையை முறைத்தாள் மிதிலா.

“வந்த விசயத்தை கொஞ்சம் சீக்கிரம் சொன்னா நல்லா இருக்கும்” என அவன் பேச்சைக் கவனிக்காதது போல் அவள் கூற,

அவனோ எதுவும் பேசாமல் அமைதியாக அவளையே பார்க்க, வராத அழைப்பை ஏற்ற நறுமுகை, “நீங்க பேசிக்கிட்டு இருங்க சார்… நான் ஃபோன் பேசிட்டு வந்தறேன்” என அவள் நழுவ, தன் தங்கையை முறைத்தாள் மிதிலா.

மிதிலாவோ முறைப்பை மட்டுமே பதிலாக கொடுத்துக் கொண்டிருக்க, “செமயா ஆடுன ஜானு” என அவன் நக்கல் தொனியில் கூற,

அவளோ, எரிக்கும் பார்வை பார்க்க, “ஓ.கே, ஓ.கே… கண்ணகி மாதிரி எரிச்சே என்னை கொன்ற வேண்டாம், நான் கிளம்புறேன். இந்த புக்க கொடுக்க தான் வந்தேன்” என்றவன், அந்த புத்தகத்தை அங்கு வைத்துவிட்டு எழுந்தவன் அவள் சற்று முன் ஆடிய ஆட்டத்தைப் போலவே, வளைந்து நெளிந்தவன், அந்த பாடலை முணுமுணுத்தவாறே அங்கிருந்து கிளம்பினான்.

அவளுக்கோ, கோபத்தோடு வெட்கமும் சூழ்ந்து கொள்ள, கன்னம் சிவக்க நின்றிருந்தாள்.

பழைய நினைவுகளில் மூழ்கி இருந்தவனுக்கு, இப்பொழுது தன்முன் நடமாடுவது வேறொரு மிதிலாவாக தெரிந்தாள்.

ஆனால் அவள் இவ்வாறு மாறுவதற்கு தான் தான் காரணம், என்பதை நினைக்கும் போது மனம் வலிக்க, தன்னவளை காதல் கலந்த வலியுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

அப்பொழுது துகிலன் உள்ளே வர, “வாடா துகி…” என ரகுநந்தன் அழைக்க,

சமையலறையில் இருந்து வெளியே வந்த மிதிலா, “வாங்க…” என்றாள் புன்னகையுடன்.

“வரேன் அண்ணி… என்ன சமையல் நடக்குதா?” என்றவாறே அவன் சமையலறைக்குள் நுழைய, ‘இங்க ஒருத்தன் கூப்பிட்டனே என்னைக் கண்டுக்கிட்டானா பாரு, அண்ணியாம் அண்ணி’ என ரகுநந்தன் முணுமுணுக்க, அதனை அவர்கள் இருவருமே கேட்டுக் கொண்டு தான் இருந்தனர்.

“இனி நீ எனக்கு தேவையில்ல டா அண்ணா… எனக்கு அண்ணி தான் வந்துட்டாங்களே” என்றவன்,

“என்ன அண்ணி சமையல்? பாரு கல்யாணம் பண்ண ரெண்டாவது நாளே என் அண்ணிய சமையல் கட்டுல போட்டு வேலை வாங்கறான்” என தன் அண்ணனை சாட,

“சமைச்சா தான சாப்பிட முடியும்…ங்க…” என அவள் அவனை என்ன சொல்லி அழைப்பது என குழம்ப,

“துகினே கூப்பிடுங்க அண்ணி… உங்கள விட ஒரே ஒரு வருஷம் தான் மூத்தவன் நான்” என அவன் கூறிய தோரணையில், புன்னகைத்த மிதிலா,

“அப்போ நீங்க என்னை மிதுனே கூப்பிடுங்க. அண்ணி வேண்டாமே” என்றாள் மிதிலா.

“ஓ.கே மிது” என அவன் டக்கென ஒருமைக்கு தாவ, அவனை ஆச்சரியமாக பார்த்தாள் மிதிலா.

“ஹி ஹி…” என அசடு வழிந்தவன், “அதுவந்து அண்ணி,… சாரி மிது, அண்ணனுக்காக தான் உங்கள அண்ணினு கூப்பிட்டேன். அப்புறம் அம்மா, அப்பா முன்னாடி உங்கள நான் அண்ணினு தான் கூப்பிடணும். ஆனா, நமக்குள்ள இந்த அண்ணி வேண்டாமே, நான் உங்க பிரண்ட். நீங்க என் பிரண்ட்” என அவன் டீல் பேச,

வாய் ஓயாமல் பேசும் அவனை அவளுக்கு உடனே பிடித்துப் போனது. அவனுடன் சிறு வயதில், அவ்வளவு அதிகமாக அவள் பேசியதில்லை. அப்பொழுதெல்லாம் அவள் கண்களுக்கு ராம் மட்டும் தானே தெரிவான்.

அவன் அவளுடன் வாயாடிக் கொண்டே இருக்க, அவனுடன் பேசியவாறே சமைத்துக் கொண்டிருந்தாள் மிதிலா.

சமையற்கட்டில் ஏறி உட்கார்ந்தவாறு வாயடித்துக் கொண்டிருந்த தன் தம்பியையும், அதனை கேட்டுக் கொண்டே இதழில் புன்னகை உறைய சமையல் செய்து கொண்டிருந்த தன்னவளையும் சமையலறையின் முன் சுவற்றில் சாய்ந்தவாறே ரசித்துக் கொண்டிருந்தான் ரகுநந்தன்.

திடீரென துகிலனின் பேச்சு தடைப்பட, காய்கறியை வதக்கிக் கொண்டிருந்தவள், “என்னாச்சு?” என்றவாறே திரும்பி பார்க்க, அவனோ தன் அண்ணனை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனோ தன் தம்பி பேசுவதை நிறுத்தி விட்டதை அறியாமல் தன்னவளை தன் கண்களால் பருகிக் கொண்டிருக்க, அவள் அவனைப் பார்த்த பின் தான் தலையை சிலுப்பினான்.

“என்ன ஒரு ரொமான்டிக் லுக்… இப்படி சின்ன பையன பக்கத்துல வச்சுகிட்டு இப்படி பார்க்கிறது நியாயமாடா ரகு?” என அவன் முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு வினவ,

“என் பொண்டாட்டிய நான் பார்த்துகிறேன், உனக்கு ஏன் டா இந்த பொறாமை” என்றவன் சிறிதும் பார்வையை அவள் மீதிருந்து விலக்காமல் பார்க்க,

அவளோ அவனைக் கண்டு கொள்ளாது துகிலனிடம் “துகி, சாப்பாடு ரெடி ஆகிருச்சு. நீங்களும் வாங்க, சாப்பிடலாம்” என்றவள், உணவை எடுத்துக் கொண்டு போய் டைனிங் டேபிளில் வைக்க,

அவளுக்கு அண்ணனும் தம்பியும் உதவுகிறேன் பேர்வழி என, குழம்பு கரண்டியை பொரியலிலும், பொரியல் கரண்டியை சாப்பாட்டிலும் மாற்றி மாற்றி வைத்துக் கொண்டிருக்க அதனைக் கண்டவளோ கோபத்துடன் இருவரையும் முறைத்துக் கொண்டிருந்தாள்.

கையில் வைத்திருந்த, சாப்பாட்டு கரண்டியுடன் இடுப்பில் கை வைத்து இருவரையும் அவள் முறைத்துக் கொண்டிருக்க,

துகிலனோ, “உங்களுக்கு நாங்களும் ஹெல்ப் பண்றோம் மிது…” என அசடு வழிய,

“நீங்க பண்ண ஹெல்ப் எல்லாம் போதும், உட்கார்ந்து சாப்பிடுங்க” என்றவள், இருவருக்கும் உணவு பரிமாற,

ஒருவாய் சாப்பிட்டு பார்த்த துகிலன், “மிது சூப்பரா இருக்கு சமையல்” என்றவாறே சாப்பிட,

ரகுநந்தனோ ஒருவாய் உணவை கையில் எடுத்துக் கொண்டு அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

அதனைக் கண்டவளோ, எதுவும் பேசாமல் கிட்சனுக்குள் நுழைந்து கொள்ள, அவனும் உண்ணாமலே அமர்ந்திருந்தான்.

“என்னடா ரகு சாப்பிடாம இருக்க?” என துகிலன் ரகுநந்தன் சாப்பிடாமல் இருப்பதைக் கண்டு வினவ,

அவன் கண்ணசைவில் கிட்சனைக் காட்டினான். அதில் புரிந்து கொண்டவன்,

“மிது, இங்க பாரு… உங்க புருஷன் தன்னோட பதிக்கு கொடுக்காம சாப்பிட மாட்டாராம்… கொஞ்சம் வந்து என்னனு கேளுங்க அண்ணி” என்க,

அவள் அதற்கும் மேல் உள்ளே இருந்தால் அவன் உண்ணாமல் விரதம் தான் இருப்பான் என்று உணர்ந்து வெளியே வந்தாள்.

அவன் ஒரு வாய் ஊட்டிவிட, அதனை எதுவும் பேசாமல் வாங்கி கொள்ள, “ப்பா… என்ன ஒரு லவ்ஸ்” என துகிலன் கிண்டல் பண்ண,

“கண்ணு வைக்காத டா…” என்றவன் உண்ணத் தொடங்க, அவர்களுக்கு அவள் பரிமாற, “நீயும் உட்கார்ந்து சாப்பிடு ஜானு…” என்றான் ரகுநந்தன்.

அவளோ, அவன் பேச்சை காதில் வாங்கிக் கொள்ளாமல் அமைதியாக இருக்க, தன் அண்ணனுக்கும் அண்ணிக்கும் இடையே இன்னும் விரிசல் இருப்பதை உணர்ந்த துகிலன்,

“அண்ணி நீங்களும் உட்கார்ந்து சாப்பிடுங்க” என்றான்.

அண்ணி என அழைத்ததற்காக அவள் முறைக்க, “அப்போ ஒழுங்கா உட்கார்ந்து சமத்து பொண்ணா சாப்பிடு மிது” என்றான் புன்னகையுடன்.

“அண்ணனும் தம்பியும் ஒரே மாதிரி மிரட்றது…” என முணுமுணுத்தவள், சாப்பிட உட்கார்ந்தாள்.

மூவரும் சாப்பிட்டு முடித்தப் பின் அண்ணனும் தம்பியும் ஹாலில் அமர்ந்திருக்க, சமையலறையில் பாத்திரங்களை கழுவி வைத்து விட்டு வந்த மிதிலாவும் அங்கிருந்த எதிர் ஷோஃபாவில் அமர்ந்தாள்.

அதுவரை பொதுவாக பேசிக் கொண்டிருந்த துகிலன், அவள் வந்ததைக் கவனித்து விட்டு,

“உங்க ரெண்டு பேர் கிட்டயும் ஒரு விஷயம் சொல்லத் தான் இங்க வந்தேன்” என்றான்.

இருவரும் அவனையே பார்க்க, “அம்மா உடனே ஊருக்கு போகணும்னு சொல்றாங்க டா…” என்றான் துகிலன்.

“வந்து ரெண்டு நாள் தான டா ஆகுது” என ரகுநந்தன் கூற,

“அவங்க இங்க வந்ததே உன் கல்யாணத்தப் பத்தி பேசறதுக்கு தான் டா… ஆனா, இப்போ உன் கல்யாணம் முடிஞ்சதால உடனே ஊருக்கு கிளம்பலாம்னு சொல்றாங்க டா” என்றான் துகிலன்.

ரகுநந்தன் தன்னவளின் முகம் பார்க்க, “உன் அண்ணா வந்து அத்தைக்கிட்ட பேசுவாங்க துகி… நீ போ, அவர் வந்து பேசுவாரு” என்றவள்,

அவனிடம் பார்வையில் போக சொல்லிவிட்டு அறைக்குள் செல்ல, அவள் பின்னாலே சென்றான் ரகுநந்தன்.

“ஜானு இப்போ போய் பேசுனா அம்மா இன்னும் கோபப்படுவாங்க… இப்போ வேண்டாமே” என அவன் தயங்க,

“இப்போ இல்லாம வேற எப்போ பேச போறீங்க? அவங்க கோபமும் நியாயம் தான? எந்த அம்மா தான் தன் மகனுக்கு அவங்க விருப்பப்படி கல்யாணம் பண்ண ஆசைப்பட மாட்டாங்க, சொல்லுங்க… அத தான உங்க அம்மாவும் ஆசைப்பட்டாங்க… என்னை மாதிரி ஒருத்திய மருமகளா ஏத்துக்கிறது அவங்களுக்கு கஷ்டம் தான், ஆனா அதுக்காக உங்களோட உறவுக்கு இடைல நான் தடையா இருக்கக் கூடாது. தன்னை சுத்தி இருக்கிற உறவுகள் பொய்த்து போனா அதோட வலி என்னனு இந்த ரெண்டு நாள்ள அனுபவிச்சு தெரிஞ்சுக்கிட்டேன். அப்போ, உங்கள பெத்த அவங்களுக்கும் அந்த வலி இருக்கும் தான? போய் அவங்க கிட்ட பேசுங்க. எந்த தாயும் தன் மகன் நல்லா இருக்கக் கூடாதுனு நினைக்க மாட்டாங்க, கோபப் பட்டா தாங்கிக்கோங்க. அவங்க உங்க அம்மா தான, போய் பேசுங்க” என்றவள், அத்தோடு பேச்சு முடிந்ததாய் கையில் ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு படிக்க உட்கார,

தன் மனைவியின் சொல்லை தட்டாமல் செய்ய தயாரானான் ரகுநந்தன்.

துகிலனுடன், எதிர் பிளாட்டிற்கு செல்ல, முதன்முறையாக தன் வீட்டிற்கு வரும் அண்ணனை வரவேற்க நினைத்த நித்திலவள்ளி, ஹாலில் அமர்ந்திருந்த தன் அன்னையைக் கண்டு அமைதியாகி விட, கதிரவன் தான் தன் மச்சானை வரவேற்றான்.

“வாங்க மச்சான்… நாங்க தான் முறைப்படி வந்து உங்கள விருந்துக்கு அழைக்கணும், ஆனா எங்க நம்ம வீட்டுல தான் ஆளுக்கு ஒரு நியாயத்தை கைல பிடிச்சுக்கிட்டு தொங்கறாங்களே!” என மறைமுகமாய் தன் மனைவியையும், மாமியாரையும் சாடியவன், ரகுநந்தனை வரவேற்க அவன் உள்ளே வந்ததைக் கண்ட அம்பிகா எழுந்து அறைக்குள் சென்றார்.

“மாமா…” என தர்ஷினி அவளிடம் ஓடிவர, அவளைத் தூக்கிக் கொண்டவன் அங்கிருந்த ஷோஃபாவில் தன் தந்தையின் அருகே அமர்ந்தான்.

“அப்பா…” என அவன் அழைக்க, “இந்த வார்த்தைய கேட்க எனக்கு மூணு வருஷம் ஆகிருச்சு” என அவர் வருத்தத்துடன் கூற,

“ஸாரி ப்பா…” என அவன் கூற, “நீ ஏன் கண்ணா ஸாரி கேட்கிற…” என தன் மகனை அணைத்துக் கொண்டார்.

“உன்னோட நிலை எனக்கு புரிஞ்சுக்கிட்டதால தான் நான் எதுவும் சொல்லல டா ரகு… ஆனா, உன் அம்மாவுக்கு அத புரிய வைக்க என்ன முயற்சி பண்ணாலும் அவ ஏத்துக்க கூடிய மனநிலையில இல்ல டா கண்ணா… நீயே போய் பேசு” என்றார் ராஜாராம்.

தன் அன்னை இருந்த அறைக்குள் நுழைந்த ரகுநந்தன், அங்கு நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து கண்களை மூடி இருந்த அம்பிகாவின் அருகில் சென்றான்.

அவர் காலடியில் அமர்ந்தவன், அவர் மடியில் தலை வைத்து சாய்ந்தான். முதலில் அடிக்கடி தன் தாயின் மடி தேடுவான் ரகுநந்தன்.

இன்று தன் மடியில் படுத்த மகனை விலக்க மனமில்லாமல் அவனைப் பார்த்துக் கொண்டு இருந்தார் அம்பிகா.

“ம்மா… என்னை மன்னிச்சுருங்க ம்மா, உங்க ஆசை எனக்கும் புரிஞ்சுது. ஆனா, அத நிறைவேத்தற தகுதி எனக்கு இல்ல ம்மா, மனசுல ஒருத்திய வச்சுக்கிட்டு உங்க ஆசைய நிறைவேற்ற என்னால இன்னொரு பொண்ணு கூட வாழ முடியாது ம்மா… அதுனால தான் அன்னிக்கு அப்படி நடந்துக்கிட்டேன்” என்றவனை, எதுவும் சொல்லாமல் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்க,

“ஸாரி ம்மா…” என்றவன், நிமிர்ந்து அவரைப் பார்க்க, “அன்னிக்கு தான் உன்னால என் ஆசைய நிறைவேற்ற முடியல. ஆனா, நேத்து நீ பண்ணது சரியா டா? உன் கல்யாணத்தப் பத்தி பேச தான் இங்க வந்தேன், ஆனால் நீ கல்யாணத்த முடிச்சுட்டு வந்து பேசற…” என்றவரின் குரலில், தன் மகன் தன் அனுமதி இல்லாமலே திருமணம் செய்து வந்து நிற்கிறான் என்ற அதிருப்தியும் கலந்திருந்தது.

“எனக்கு வேற வழி தெரியல ம்மா… உங்கள மாதிரியே உங்க மருமகளும் என் மேல கோபமா இருந்தா. அதான் இப்படி பண்ண வேண்டியதாயிருச்சு ம்மா” என்க,

அவரோ, “இப்பவும் உன் பொண்டாட்டி சொல்லி தான் என்கிட்ட பேச வந்தியா?” என்றார்.

“அம்மா…” என அவன் அவர் முகம் பார்க்க, “இப்பவும் நீ உன் பொண்டாட்டி சொன்னதுக்காக தான என்கிட்ட பேச வந்த. அப்படி உன்னை முந்தானைல முடிஞ்சு வச்சுருக்கா இல்ல அவ… கைகாரி தான், இல்லைனா பத்து வயசுலயே உன்னை வளைச்சு போட்ருப்பாளா…” என அவர் வார்த்தைகளைக் கொட்ட,

அவரின் வார்த்தையில் தீப் பட்டது போல் விலகினான் அவன். “ஏன் ம்மா, இப்படி பேசுறீங்க. இப்பக் கூட உங்க கோபம் நியாயம்னு அவ உங்களுக்கு ஆதரவா பேசிக்கிட்டு இருக்கா… ஆனா, நீங்க வாய்க்கு வந்தத பேசுறீங்கள்ள” என்றான் கோபம் கலந்த ஆற்றாமையுடன்.

“நான் என்னடா தப்பா கேட்டுட்டேன்… உன் பதினைந்து வயதுல உன்னை விட்டு போனவளுக்காக உன்னைப் பெத்து இருபத்தியாறு வருஷமா என் உயிரா வளர்த்த என்னை தூக்கி எறிஞ்சுட்டு போனவன் தானடா நீ, அவ உன்னை அந்த அளவு மாத்துனவ தான… அன்னிக்கு சொந்தக்காரங்க முன்னாடி தலைகுனிந்து நின்னது நான் தான், அந்த வலி இன்னும் என் மனச விட்டு மறையல” என்றார் அம்பிகா.

“என்னை நீங்க என்ன வேணும்னாலும் சொல்லுங்க, நான் எதிர்த்து பேச மாட்டேன். ஆனா, என்னை நம்பி வந்த என் ஜானுவ பத்தி பேசுனீங்க அப்புறம்… என்ன நடக்கும்னு எனக்கே தெரியாது” என்றவன், வேகமாக அறையை விட்டு வெளியே சென்றான்.

இதுவரை நடந்த அனைத்தையும் கதவருகில் நின்று ஒட்டுமொத்த குடும்பமும் பார்த்துக் கொண்டு தான் இருந்தனர்.

“கண்ணா…” என ராஜாராம் ஏதோ கூற வர, “சாரி ப்பா… உங்களுக்கு எப்படி உங்க மனைவி முக்கியமோ, அதே மாதிரி தான் எனக்கு என் மனைவி முக்கியம். அங்க ஒருத்தி என்மேல கோபமா இருந்தாலும் இவங்க பக்க நியாயத்த சொல்லி போய் பேசுங்கனு சொல்லி அனுப்பி வச்சா… ஆனா, அவளையே வாய் கூசாம என்ன வார்த்தை சொல்றாங்கனு பாருங்க ப்பா… நான் அன்னிக்கு அப்படி பண்ணது தப்பு தான், ஆனா அதுக்காக அம்மா எது சொன்னாலும் தலையாட்டுவேன்னு மட்டும் நினைக்காதீங்க. என் மனைவி எப்போ அவங்க சுத்தமான மனசோட மருமகளா ஏத்துக்கிறாங்களோ அப்ப தான் நானும் என் ஜானும் நம்ம வீட்டுக்கு வருவோம்…” என்றவன், கோபமாக அங்கிருந்து வெளியேறினான் ரகுநந்தன்.

அறையில் புத்தகத்தைப் படிப்பது போல் விரித்து வைத்திருந்தாலும், அவள் கண்களோ கதவைத் தான் வெறித்துக் கொண்டிருந்தது.

தன் கணவன் அவன் அம்மாவை சமாதானம் செய்தானா? அங்கு என்ன நடக்கிறது? எனத் தெரியாமல் அவள் குழம்பிப் போய் இருக்க,

அப்பொழுது அவளின் எண்ணத்தின் நாயகனே உள்ளே நுழைந்தான் கோபமாய்.

அவன் முகத்தைப் பார்த்தவளுக்கு, அங்கு ஏதோ சூழ்நிலை சரியில்லை என்பதைப் புரிந்து கொள்ள, அவனோ அவளருகில் வந்து ஷோஃபாவில் கண்களை இறுக மூடி சாய்ந்தமர்ந்தான்.

நொடிகள் மௌனங்களாய் கடக்க, அப்பொழுது அழைப்பு மணி அடித்தது. மிதிலா எழுந்து சென்று கதவைத் திறக்க, கல்லூரியில் இருந்து சிரஞ்சீவி வந்திருந்தான்.

“வாங்க ஜீவி சார்…” என மிதிலா கூற, அப்பொழுது தான் கண்களைத் திறந்து பார்த்தான் ரகுநந்தன்.

மணியைப் பார்த்தவன், அது மூன்று எனக் காட்ட “என்ன டா, சீக்கிரம் காலேஜ் முடிஞ்சுதா?” என்க,

“நான் வந்துட்டேன் டா…” என அவன் அறைக்குள் செல்ல முயல,

“சாப்பாடு எடுத்து வைக்கிறேன் அண்ணா… வந்து சாப்பிடுங்க” என மிதிலா கூற,

அவளின் அண்ணன் என்ற அழைப்பில் ஓர் நொடி நின்றவன், “இல்ல மா, இப்போ வேண்டாம். மதியம் கேன்டீன்ல சாப்பிட்டு தான் வந்தேன்” என்க,

தன் நண்பன் பொய்யுரைப்பது அவன் கண்கள் கூறிய மொழியில் உணர்ந்த ரகுநந்தன், “நீ சாப்பாடு எடுத்து வை ஜானு… அவன் வந்து சாப்பிடுவான்” என்க,

தன் நண்பனைப் பார்த்தான் சிரஞ்சீவி. “போய் ரெபிரஷ் ஆகிட்டு வந்து சாப்பிடு டா…” என்றவன், மீண்டும் முதலில் அமர்ந்திருந்தது போலவே கண்களை மூடி அமர,

மிதிலா சிரஞ்சீவிக்கு உணவு எடுத்து வைத்தாள். அவன் வந்து எதுவும் பேசாமல் சாப்பிட,

“சாப்பாடு மேல என்னிக்கும் கோபத்த காட்டக் கூடாதுண்ணா…” என்றவள், “அண்ணானு கூப்பிடலாம்ல…” எனத் தயங்கினாள் மிதிலா.

அவனோ என்னக் கூறுவது எனத் தெரியாமல் முழித்து, பின் “ஜீவினே பேர் சொல்லி சொல்லு மா… பிராப்ளம் இல்ல” என புன்னகைக்க முயல,

அதன்பின் அவள் எதுவும் பேசவில்லை. அவன் ஏதோ குழப்பத்தில் இருப்பதை உணர்ந்தவள், அமைதியாக இருக்க, சாப்பிட்டு முடித்தவன் தன் நண்பனிடம்,

“ரகு, நான் நைட் சென்னை கிளம்பறேன் டா… டிக்கெட் புக் பண்ணிட்டேன், டிரெயின்ல போறேன்…” என ஏதோ தகவல் தெரிவிப்பது போல் கூற,

“என்னடா ஆச்சு? இப்போ திடீர்னு நீ சென்னை போக வேண்டிய அவசியம் என்ன?” என்றான் ரகுநந்தன்.

“நான் இங்க இருக்கிறதால தான் இந்த முடிவு எடுத்தீங்களா…” என மிதிலா தயங்கியவாறே கூற,

“இல்ல மிதிலா… அதுக்கும் உனக்கும் சம்பந்தம் இல்ல” என்றவன்,

“நான் வேலைய ரிசைன் பண்ணிட்டேன் டா. நைட் சென்னை கிளம்பறேன், டிரெஸ் பேக் பண்ணனும். நான் ரெடி பண்றேன்” என தன் அறைக்குள் சென்றவனை, புரியாமல் பார்த்தனர் ரகுநந்தனும் மிதிலாவும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
11
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்