Loading

திமிர் 25

 

“நாங்க எல்லாரும் இருக்கோம் அண்ணி மேடம்.”

 

கமலின் வார்த்தைக்குப் பின் தான், சுற்றி இருக்கும் சூழ்நிலை புரிந்தது அகம்பனின் காதலிக்கு. கட்டுப்படுத்திய அழுகையோடு அவனை விட்டு விலகியவள், “உனக்கும் கிப்ட் உண்டு.” என லேசாகப் புன்னகைத்தாள்.

 

“ஒரு கைப்பிடி பொரிக்கு இவ்ளோ பில்டப் கூடாது.”

 

“ரொம்பப் பேசுறவங்களுக்கு அது கூடக் கிடைக்காது.”

 

“அண்ணி மேடம் அதிகாரம் தூள் பறக்குது.”

 

அழுகை மொத்தமும் நின்று சிவந்த கண்களோடு சிரித்தவளை மனம் கனிந்து பார்த்தவன், “சாமி கும்பிடு!” என்றிட, இதமாகப் புன்னகைத்தவள் திரும்பினாள்.

 

முகச்சுருக்கத்தோடு தன்னவள் முதுகைப் பார்த்துக் கொண்டிருந்தான் அகம்பன். கையில் இருக்கும் ஆரத்தித் தட்டை அவன் அன்னையிடம் நீட்டி, “எப்பவும் நீங்கதான் முதல்ல.” என்றாள்.

 

நடப்பதை எல்லாம் வெறும் பார்வையாளராகப் பார்த்துக் கொண்டிருந்த கற்பகம், திரும்பித் தன் கணவனைப் பார்க்க, அமைதியாகக் கண் அசைத்தார். என்னவென்று புரியாத எண்ணத்திற்குத் தள்ளப்பட்டவர், உள்ளுக்குள் தன்னைச் சபித்துக் கொண்டிருக்கும் அனுவை எண்ணாது தட்டை வாங்கினார்.

 

இதுபோன்று, குடும்பத்தோடு மகன் நிற்க வேண்டும் எனப் பல நாள் ஆசை கொண்டிருக்கிறார். அன்னை மீது அளவு கடந்த அன்பு இருந்தாலும், இந்த ஆசையை நிறைவேற்ற ஒரு துளி கூட நினைத்ததில்லை மகன். அவனைப் பொறுத்தவரை குடும்பப் பொறுப்பு அனைத்தையும் அண்ணனிடம் கொடுத்து விட்டான். கட்சியைத் தவிர வேறு எதிலும் பங்கு கொண்டதில்லை. அவன் உலகம் மட்டும் வேறாக இருக்கும் அங்கு.

 

 

தன்னைக் கண்டால் முகம் திருப்பிக் கொள்பவர், தான் நீட்டியதை வாங்கிக் கொண்ட மகிழ்வில் தன்னவனோடு நின்று கொண்டாள். மொத்தக் குடும்பத்தையும், நலமாக வாழ வைத்துக் கொண்டிருக்கும் தெய்வங்களுக்கு ஆரத்தி சுற்றியவர் கணவனிடம் நீட்டினார். தொட்டு வணங்கித் திருநீறைப் பெரிதாக இட்டுக் கொண்டார். அடுத்ததாகக் கற்பூரத்தைத் தொட்டு வணங்கியது ஆதிகேஷ் கைகள்.

 

மகனுக்குத் திருநீறு வைத்து விட்டு, “அடுத்த வருஷம் பொண்டாட்டி, பிள்ளையோட சேர்ந்து கும்பிடனும்.” என்றார்.

 

“இருந்தாலும் மாமியாருக்கு இவ்ளோ ஆசை கூடாது.”

 

“ஓய்!”

 

“ஒரு வருஷத்துல பிள்ளையும் சேர்த்து வரணுமாம்.”

 

“ஹா ஹா… வராதா?”

 

“இருந்தாலும்…” எனச் சொல்லக் கூச்சப்பட்டவள் செவியில், “சொல்ல முடியாது, அடுத்த வருஷம் நம்ம குழந்தையும் இருந்தாலும் இருக்கும்.” வெட்கப்பட வைத்தான்.

 

நாணம் தாங்காது முகம் சிவக்கத் தலை குனிந்தவளைக் கண்டு, காதலோடு சிரித்தவன் முன்பு ஆரத்தித் தட்டு. கை இரண்டையும் கட்டிக்கொண்டு அன்னையைப் பார்க்க, அவரது பார்வை வேறு பக்கம் இருந்தது. நடப்பதை அனைவரும் வேடிக்கைப் பார்க்க,

 

“இன்னைக்கு நமக்குப் பொரி கிடைச்ச மாதிரிதான்.” வாய் விட்டே புலம்பினான் கமல்.

 

கற்பூரம் அணையத் தயாரானது. அதைக் கவனித்த மதுணி, பெரிய கற்பூரக் கட்டியைச் சேர்த்து வைத்துத் தீ மூட்ட, அவளைப்போல் ஒட்டிக்கொண்டு ஜோதியாக மின்னியது. தன்னைப் பார்த்து விடக்கூடாது என்பதற்காக அன்னை படும் அவஸ்தையைக் கண்டவன், தன் உயரத்தைக் குறைத்து அவர் முகத்துக்கு நேராக முகத்தைக் கொண்டு வர, தாக்குப் பிடித்தவரின் தாய்ப்பாசம் உடைந்தது.

 

ஒரே ஒரு நொடி மகனை ஆழப் பார்த்துவிட்டு, ஆரத்தியைத் தொட்டு நெற்றியில் வைத்தவர் திருநீறை அமைதியாக இட, அளவில்லாத புன்னகை அவன் முகத்தில். பெரும் எதிர்பார்ப்போடு கைகள் பரபரக்க நின்றிருந்தாள் ஒருத்தி. அதை அறிந்தவர் எப்படிக் கடப்பது என்று தெரியாமல் தடுமாறி நிற்க,

 

“எனக்கு வச்சு விடுங்க ஆன்ட்டி” மதுணிகாவிற்கு முன் வந்து நின்றாள் அனு.

 

எரிந்து கொண்டிருந்த தீ காற்றில் கலைந்து, அவன் முகத்தில் பற்றிக் கொதித்தது. அனல் கக்கும் அவன் முகத்தை ஓரக்கண்ணால் பார்த்தவர் அனுவிடம் தட்டை நீட்ட, “ரிலாக்ஸ் அகா…” இறுக்கமாகக் கைப் பிடித்துக் கட்டுப்படுத்த முயன்றாள்.

 

பற்கள் கடிபடும் ஓசை நன்றாகக் கேட்டது அனுவிற்கு. உள்ளுக்குள் எகிறிக் குதித்து வெற்றிக் களிப்பில் மிதந்தவள் தொட்டு வணங்கி விட்டு, “அடுத்த வருஷம் நானும் உங்க மகனும், புருஷன் பொண்டாட்டியா நிக்கணும்னு வேண்டிக்கிட்டு வச்சு விடுங்க ஆன்ட்டி.” பவ்யமாகத் தலை குனிந்தாள்.

 

பெரும் ஏமாற்றம் மதுவிற்கு. வளர்ந்த ஆசை வேரோடு வெட்டப்பட்டதில் மனம் மறுகினாலும், தன்னவன் கோபத்தைக் கட்டுப்படுத்துவது முதல் கடமை என்று அமைதியாக நின்றிருந்தாள். கற்பகத்தின் பார்வை மகனைத் தீண்டியது போல், ஒரே ஒரு முறை அவன் நேசித்த அவளையும் தீண்டி வந்தது. அலைபாயும் மனத்தோடு திருநீறை அனு நெற்றியில் வைக்கப் போக, கண்ணிமைக்கும் நேரத்தில் வெடிக்கும் இடியைப் போல் அவளை இழுத்துத் தள்ளித் தன் காதலியை முன்னிறுத்தினான்.

 

அனைவருக்கும் திருநீறை வைத்தவர், அனுவிற்கு மட்டும் குங்குமத்தை வைப்பதற்காக எடுத்திருக்க, இரு புருவங்களுக்கு நடுவில் மச்சம் போல் மின்னிய பொட்டிற்கு மேல், அவர் கையில் இருந்த குங்குமம் பதிந்தது. யாருமே இதை எதிர்பார்க்கவில்லை. கற்பகத்திற்கு என்ன நடந்தது என்று விளங்கவில்லை. ஆதி மீது முட்டி மோதித் தடுமாறி நின்றவள் திகைக்க, கண்கள் விரிந்து வாய்ப்பிளந்து அசையாது நின்றாள் மதுணிகா.

 

அவளுக்குமே நடந்ததை யூகிக்கச் சில வினாடிகள் தேவைப்பட்டது. அண்ணனும், தகப்பனும் வழக்கம்போல் அகம்பனைப் புதியதாகப் பார்க்க, “அப்படிப் போடு!” என்றான் கமல்.

 

வேண்டவே வேண்டாம் என்றவள் நெற்றியில், தான் இட்ட குங்குமத்தைத் பார்த்தவர் மனசைச் சுக்கு நூறாகப் பிசைந்தெடுத்தான், “எங்களை ஆசீர்வாதம் பண்ணுங்க அம்மா.” என மதுணியோடு காலில் விழுந்து.

 

தரையோடு இருந்த பாதத்தில் நடுக்கம் ஊர்ந்தது. வயதானவர் தள்ளாடும் மயக்கத்தோடு, தன்னை நிலைப்படுத்திக் கொண்டு சிக்கிக்கொண்ட எலியாய் நின்றார். குரோதம் கூடி அவரைப் பார்த்துக் கொண்டிருந்தாள் அனு. உயிர் இருந்தும் அனைவரும் சிலையாக நிற்க, கை நிறையப் பூவை அள்ளி முதலாளி பிடித்திருக்கும் தட்டில் வைத்தான் கமல்.

 

உணர்வு வந்தவராய் திரும்பிக் கமலைப் பார்க்க, மனமாரப் புன்னகைத்து ஒதுங்கி நின்றான். அவன் ஒதுங்கிய பின், பூஜை செய்து அலங்காரத்தில் மின்னிக் கொண்டிருந்த அனைத்துக் கடவுள்களும் கற்பகத்திற்குக் காட்சி கொடுத்தார்கள். கடவுள் சொன்னதோ! மனம் சொன்னதோ! தானாக அவர் கைகள் பூவை அள்ளிக் காதல் பறவைகள் மீது தூவியது.

 

கோபம் மொத்தமும் கற்பகத்தின் மீது திரும்பியது. அங்கு நிற்க விரும்பாது உள்ளே சென்று விட்டாள் அனு. திருமணம் செய்து, காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றது போல் மனம் நிறைந்து போனது காதல் ஜோடிகளுக்கு. மொத்தக் குடும்பமும், ஸ்தம்பித்து நிற்பதை உணர்ந்து தனக்குள் சிரித்துக் கொண்டவன் அவர்களைத் திசை திருப்பும் பொருட்டு, “ரொம்ப நேரமா நிக்கிறாங்க, எடுத்துக் கொடுங்கம்மா.” என்றிட, வேலைகள் துரிதமானது.

 

சில பேருக்கு எடுத்துக் கொடுத்த கற்பகம், பெரும் குழப்பத்தோடு உள்ளே சென்றுவிட, எப்போதும் கட்டுப் பணத்தை எடுத்து எண்ணி ஒவ்வொருவரிடமும் கொடுக்கும் நவரத்தினம், மனைவி பின்னே நகர்ந்து விட்டார். ஆதியும் அதையே செய்யப் போக,

 

“இந்த ஒரு நாளுக்காக, எதிர்பார்ப்போட காத்துட்டு இருக்கறவங்களை ஏமாத்தாத ஆதி.” அவன் கைப்பிடித்துத் தடுத்தான்.‌

 

தந்தை செய்ய வேண்டியதை அவன் செய்ய, கைகள் இரண்டையும் பேண்ட் பாக்கெட்டுக்குள் நுழைத்துக் கொண்டு சத்தம் வராமல் சிரித்துக் கொண்டிருந்தான் அகம்பன். அதை ரசித்துக் கொண்டிருந்தாள் தலை சாய்த்து.

 

“உங்க ஆளை நீங்களே இப்படி சைட் அடிச்சா எப்படி அண்ணி மேடம்.”

 

“ரொம்ப அழகா இருக்கான்ல!”

 

“அதான் மொத்தமா வளைச்சுப் போட்டுட்டீங்களே.”

 

“இவன் சிரிச்சா அப்படியே போதை ஆகுது. இந்தச் சிரிப்புல விழுந்தவ தான் நான்.”

 

“ஜொள்ளு வடியுது அண்ணி மேடம், தொடச்சுக்கோங்க.”

 

“பரவால்ல விடு. எனக்கு என்ன தெரியுமா ஆசை? இவனை இதே மாதிரி சந்தோஷமாய் பார்த்துக்கிட்டே இருக்கணும்.”

 

“கண்ணு வலிக்காது?”

 

ரசனையிலிருந்து வெளிவந்தவள் அவனை மேலும் கீழும் பார்த்து, “உனக்குக் கடைசி வரைக்கும் பொண்ணே அமையாது.” என்றிட, “தீவுக்காரனுக்கே பொண்ணு கிடைக்கும்போது தீவுல போட் ஓட்றவன் எனக்குக் கிடைக்காதா?” என்றவனை இன்னும் கேவலமாகப் பார்த்தாள்.

 

வெகு நேரமாகத் தன்னை ரசிப்பதைக் கண்டும், காணாமலும் கடந்தவன் அனைவரும் சென்றபின் புருவம் உயர்த்த, “அச்சச்சோ, அழகு! அழகு!” தாவி அணைத்தாள்.

 

“ம்க்கும்!”

 

“வெளிய போடா…”

 

“சார், ஐ அம் பிஏ கமல். ஒட்டிப் பிறக்காத உடன்பிறப்பு.”

 

“சரி, யாராவது வராங்களான்னு அப்படி ஓரமா நின்னு பாரு.” என்றதற்கு மதுணிகா கொக்கரித்துச் சிரிக்க,

 

“எது!” நெஞ்சைப் பிடித்தான் கமல்.

 

“சிரிக்காதடா!”

 

“மயக்காதடி!”

 

“அழகா இருக்க…” திருஷ்டி கழித்தவள் இடையோடு கை நுழைத்தவன், “இங்க ஒரு காக்கா நம்மளையே பார்த்துட்டு இருக்கு, ரூமுக்குப் போவோமா?” என்றதும், “அண்டங்காக்கா…” என்று விட்டு அகம்பனை இழுத்துக்கொண்டு சென்றாள்.

 

“என்கிட்டத் தான் வந்தாகணும். அப்பக் கவனிச்சிக்கிறேன், உங்க ரெண்டு பேரையும்.”

 

சபதமிட்டுத் திரும்பியவன், தன்னை முறைத்துக் கொண்டு நின்றிருக்கும் ஆதிகேஷ் முகத்தைக் கண்டு வாயைப் பொத்த, அவனின் முறைப்பு இன்னும் அதிகமானது.

 

‘இவர் எதுக்கு நம்மளை இப்படிப் பார்க்குறாரு.’ என அவனுக்கு அவனே கேட்டுக் கொண்டு ஆதியைத் தாண்டி நடந்தவன், “ஒருவேளை, காக்கான்னு சொன்னது இவரைத் தானா?” வாய்விட்டுக் கேட்டவன் முதுகில் பறந்து வந்து விழுந்தது பொரி பாக்கெட்.

 

“என்னைத்தான் சார் சொன்னாங்க.” என்று விட்டுத் தலை தெறிக்க ஓடினான் கமல்.

 

பலத்த யோசனையோடு நின்றிருந்தான் ஆதிகேஷ் திவஜ். இரண்டு நாள்களுக்கு முன்பு அனு பேசியதைச் சிந்தித்துக் கொண்டிருக்கிறான். தன் உடன்பிறந்தவனின் வாழ்க்கையைச் சிதைக்கப் போவது தெரியாமல், அனு சொன்ன விஷயத்தைச் செய்யலாம் என்று முடிவெடுத்தான். இந்த முடிவே அவன் நெஞ்சைக் குத்திக் கிழிக்கப் போவது தெரியாமல் யாரையோ அழைத்து,

 

“நாளைக்கு அகம்பனுக்கு போன் பண்ணுங்க சார். அவன் வர மாட்டேன்னு சொன்னாலும் ஸ்ட்ராங்கா பேசிக் கூப்பிடுங்க. ஒரு ரெண்டு நாள் அங்கு இருக்கிற மாதிரி இருந்தால் கூட ஓகே.” என்றான்.

 

எதிர்ப்புறத்திலிருந்து அதற்குச் சம்மதமாகப் பதில் வர, ஒரு நொடி மதுணிகாவின் முகம் அவன் கண் முன்னால் வந்து சென்றது.

 

***

 

உள்ளே வந்து கதவடைத்ததும் அவனை இறுக்கமாகக் கட்டி அணைத்தவள், “உம்மா… உம்மா…” என இடைவிடாது முத்தம் வைத்து அவன் முகத்தை ஈரம் ஆக்கினாள்.

 

“விடுடி, காதல் காட்டேரி!”

 

“ரொமான்ஸ் பண்ணலாம்.”

 

“நீ இருக்க வேகத்துக்கு, என்னால ஈடு கொடுக்க முடியாது. இன்னைக்கு எனக்கு லீவு”

 

“உம்மா… அதெல்லாம் சொல்லக்கூடாது. நான் இன்னைக்கு ரொம்ப ஹாப்பியா இருக்கேன்.”

 

“அதுக்கு?”

 

பதில் எதுவும் சொல்லாமல் உதட்டைக் குவித்து அவன் உதட்டை நெருங்க, சிரிப்பை மறைத்துக்கொண்டு இரு உதட்டிற்கும் நடுவில் கை வைத்துத் தன்னவளைத் தள்ளி விட்டான்.

 

“நீ டபுள் ஹாப்பியா ஜாலியா படுத்து இருப்ப. நான் தான்டி ஹெவி ஒர்க் பண்ணனும்.” என்றவன் மீது தாவி ஏறிக் கொண்டாள்.

 

“அசிங்கமா பேசாதடா.”

 

“நீ அசிங்கமா நடந்துக்கச் சொல்லாதடி!”

 

“அடுத்த வருஷம், ஆயுத பூஜைக்கு நம்ம பிள்ளை இருக்க வேண்டாமா?”

 

“அதுக்கு முன்னாடி என் அண்ணன் ஒருத்தன் இருக்கான்.”

 

“அவருக்குத்தான் கல்யாணம் ஆகப்போகுதுல்ல. இப்ப ஸ்டார்ட் பண்ணால் தான் அவர் பிள்ளைக்குத் துணையா நம்ம பிள்ளையைக் கொடுக்க முடியும்.”

 

“ரொம்பக் கெட்டுப் போயிட்டீங்க மதுணிகா மேடம்.”

 

“கெட வெச்சிட்டீங்க அகம்பன் சார்.”

 

“இப்ப என்ன தான்டி பண்ணச் சொல்ற” என்றவன் பேச்சை நிறுத்தினாள் உதட்டைக் கவ்வி.

 

 

***

ஆதிகேஷ் திவஜ் திருமணத்திற்கு இன்னும் பத்து நாள்கள் மட்டுமே இருக்கிறது. பத்திரிகை வைக்கும் வேலையில் பரபரப்பாக இருந்தான் அகம்பன். அண்ணன் நிச்சயதார்த்தத்தின் போது உடன் இருக்காத வலியைத் தீர்த்துக் கொள்ள முழுவதையும் தன் கைக்கு மாற்றிக் கொண்டான். பத்திரிகை வைப்பது முதல் கொண்டு, திருமணத்தில் நடக்க வேண்டிய அனைத்தையும் அவனே செய்து முடித்தான். என்ன கோபம் இருந்தாலும், இவை எதையும் தடுக்கவில்லை குடும்பத்தினர்கள்.

 

கல்யாண வேலையாக, அடிக்கடி வெளியில் செல்வதால் தன்னவனைத் தேட ஆரம்பித்தாள் மதுணி. பெரும்பாலும், இரவு நேரத்தில் கூடத் தாமதமாக வருபவனைத் தொந்தரவு செய்யாது சேர்த்தணைத்துக் கொண்டு துயில் கொள்கிறாள். அவன் மனது இவளைத் தேடத்தான் செய்கிறது. கடமையைச் சரியாகச் செய்து முடித்துவிட்டுப் பிரிவிற்கும் சேர்த்துக் காதல் செய்யலாம் என்று இவன் இருக்க, இந்தப் பிரிவு நிரந்தரமாகப் போவதை அறியவில்லை அகம்பன்.

 

நாள் முழுவதும் அவனோடு இருந்துவிட்டு, அவன் இல்லாத நேரத்தைக் கடத்துவது பெரும் பாடாக இருக்கிறது. ஒரு நொடியின் மதிப்பு என்னவென்று தெரிந்து கொண்டாள். நேரத்தைப் பார்க்காமல் ஒரு காலகட்டத்தில் உழைத்துக் கொண்டிருந்தவள், எந்த வேலையும் செய்யாமல் அவனை மட்டுமே எண்ணிக் கொண்டிருக்கிறாள். தன்னவளின் உணர்வுகள் புரிந்தாலும், ஏக்கத்தைத் தீர்க்க முடியவில்லை அவனால்.

 

இருவரும் ஒரு வாரமாக இப்படித்தான் நாள்களைக் கழிக்கிறார்கள். அகம்பன் வரும் வரை முழித்திருந்தவள் பார்த்ததும் விழிகளால் காதல் செய்ய, அவன் மீதான ஏக்கத்தைப் புரிந்தவனால், அதற்கு மேல் ஒதுக்க முடியவில்லை. உடல் அசதிகளை ஒதுக்கிவிட்டுக் கட்டி அணைத்தான்.

 

“என்னடி?”

 

“சும்மா…”

 

“தூங்க வேண்டியது தான.”

 

“தூக்கம் வரல.”

 

“ஆதியோட கல்யாணம் வரைக்கும் இப்படித்தான் இருக்கும். எனக்காகக் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்க.”

 

“ம்ம். ஆனா, ரொம்பக் கஷ்டம்.”

 

“எனக்கும்!”

 

“உன்னப் பார்க்குறது பெரும்பாடா இருக்கு. போன் போட்டாலும் ஏதாச்சும் ஒரு சாக்குச் சொல்ற. பத்து நிமிஷம் கூடப் பேச மாட்டேங்குற.”

 

“அதான் என் செல்லத்தோட முகம் வாடிப்போய் இருக்கா…”

 

பலமாகத் தலையாட்டியவளின் நெற்றி முட்டியவன், “உன்ன யோசிக்கலன்னு நினைக்கறியா?” என்றதற்கு மறுப்பாகத் தலையசைத்தவள், அவன் பிரிவைத் தாங்க முடியாது மௌனமாக, ‘ஆமாம்’ என்க, நெற்றியில் விளையாடிக் கொண்டிருந்த முடிகளை ஒதுக்கி விட்டு முத்தமிட்டான்.

 

“சாரி அகா…”

 

“எனக்குப் புரியுது.”

 

“நீ அப்படி எல்லாம் இருக்க மாட்டேன்னு தெரியும். கல்யாண வேலையில உனக்குச் சாப்பிடவே நேரம் இல்ல. இதுல என்னோட டைம் ஸ்பென்ட் பண்ணுன்னு கேட்கிறது தப்பு. இருந்தாலும், ரெண்டு நாளா நான் எந்திரிக்கிறதுக்கு முன்னாடியே கிளம்பிடுற. ஒரு மாதிரி ஏமாற்றமா இருக்கு. உன்ன விட்டுட்டுச் சென்னைக்கு வந்த அப்போ இப்படித்தான் இருந்துச்சு. இதோட அவ்ளோதானான்னு பயம் வந்துச்சு. இப்ப அப்படித்தான் இருக்கு. நான் உனக்குப் பண்ணதெல்லாம் பெரிய துரோகம். அதையெல்லாம், என் காதல் தான் மன்னிக்க வச்சது. இப்ப அந்தக் காதலே என்னை விட்டு ரொம்பத் தூரமா இருக்க மாதிரி இருக்கு. உன்ன மிஸ் பண்ணிடுவேன்னு பயமா இருக்கு.”

 

“சாரி.”

 

“என்னைத் தப்பா நினைக்காத.”

 

“ம்ஹூம்”

 

“ரொம்ப டயர்டா இருக்க, போய் தூங்கு.”

 

“கொஞ்ச நேரம் லவ் பண்ணிட்டு…” என அவன் நெருங்க, வெட்கத்தை மறைக்கத் தலை குனிந்தாள். கன்னம் பிடித்தவன், அவள் நாணத்தைத் தனதாக்கிக் கொள்ள இதழை நெருங்க, கதவு தட்டும் ஓசை கேட்டது. அவளை விட்டு விலகியவன், இந்நேரத்தில் யார் என்ற யோசனையோடு கதவைத் திறக்க, இவளும் எட்டிப் பார்த்தாள்.

 

கமல் தான் வந்திருந்தான். வந்த கையோடு அகம்பனை அழைத்துக் கொண்டும் சென்று விட்டான். ஒன்றும் புரியாமல் இரவெல்லாம் அவனுக்காகக் காத்திருந்தவள் தன்னையும் மீறிக் கண் அயர்ந்தாள்.

 

***

 

இரவெல்லாம் காத்திருந்து ஏமாந்து போனாள் கண் விழித்தாள். அவளுக்கு முன் எழுந்து செல்பவன் குறுஞ்செய்தியை அனுப்பிவிட்டுச் செல்வது வழக்கம். அதைத் தேடி எடுத்தவள் எதுவும் இல்லாமல் இருப்பதால் இன்னும் சோர்வாகினாள்.

 

ஆதிகேஷ், பிரியாவை விட அவர்கள் திருமண நாளைத் தினம்தோறும் எதிர்பார்த்துக் காத்திருப்பது நம் நாயகி மட்டுமே! பெருமூச்சை இழுத்து விட்டுத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டு கீழ் இறங்கினாள்.

 

“ஹே கமல்!” என ஆச்சரியத்தோடு ஓடி வந்த மதுணி, “அகா இங்கயா இருக்கான்?” கேட்டாள்.

 

முக்கியமான அழைப்பில் இருந்தவன், ஒரு நிமிடம் என்று விட்டுத் தூரம் செல்ல, ஒரே பரபரப்பாக இருந்தது அந்த வீடு. ஒன்றும் புரியவில்லை அவளுக்கு. கமல் இருக்கிறான் என்றால் தன்னவனும் இங்கு தான் இருப்பான் என்று வீடு முழுக்கத் தேடினாள். அவள் தேடுதலைக் கற்பகம் கவனித்துக் கொண்டிருக்க, “யாரைத் தேடுற?” கேட்டாள் அனுசியா.

 

அவள் இருக்கும் ஆர்வத்திற்கு அகம்பன் திவஜ் எங்கிருக்கிறான் என்று தெரிந்தால் போதும். குறையாத மகிழ்வோடு, “அகா…” என்ற அவளின் மீதான பார்வையை அதிகம் ஆக்கினார் கற்பகம்.

 

எதுவும் பேசாமல் அவன் இருக்கும் அறையைக் கை காட்டினாள் அனுசியா. துள்ளிக் குதித்து ஓடும் அவளைக் குரோதத்தோடு பார்க்க, முதல்முறையாகப் பாவப்பட்டுப் பார்த்தார் கற்பகம்.

 

திருச்சியில் உள்ள அரசு மருத்துவமனையில், போதிய வசதி இல்லாமல் பிறந்த பச்சிளம் குழந்தைகளைத் தரையில் படுக்க வைத்திருக்கும் வீடியோ ஒன்று வைரலாகியது. ஆளுங்கட்சி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதுதான் சமயம் என்று எதிர்க்கட்சி தங்கள் வேலையை இரவோடு இரவாகக் காட்டிவிட்டது. எந்தச் சேனலைத் திறந்தாலும், நவரத்தினத்தைக் குறை சொல்லும் மக்கள் பேட்டி தான். இருக்கும் பதவி போதாது என்று இன்னும் பதவியைக் கேட்டு வாங்கிய அகம்பனுக்கு இது பெரும் சிக்கலானது.

 

நேற்று இரவு நவரத்தினத்தை அழைத்த முதலமைச்சர், அனைத்தையும் உடனே சரி செய்து மீடியாவின் வாயை அடைக்கச் சொல்ல, ஊடகத்தில் வரும் செய்தியைக் கேட்டுக் கொந்தளித்து விட்டான். ஊடகம் வரை செல்ல வைத்த மெத்தனப் போக்கைச் சாடியவன், தந்தை என்றும் பாராமல் திட்டித் தீர்த்து விட்டான்.

 

எப்பொழுதும், கட்சி மீட்டிங் அவர்கள் அலுவலகத்தில் தான் நடக்கும். மிக அவசரம் என்ற பட்சத்தில் தான் வீட்டில் நடக்கும். விஷயம் அறிந்ததில் இருந்து கண்ணில் படும் அனைவரையும் வறுத்தெடுத்தவன் தாமதமாக வந்த கட்சி ஆள்களைப் பிளந்து எடுத்து விட்டான். அந்த மருத்துவமனை சம்பந்தமான அதிகாரி வேறு இவர்களை விடவும் தாமதமாக வர, ஊடகத்திற்கு விஷயம் கசிந்தது. மினிஸ்டர் நவரத்தினத்தின் வீட்டைக் கழுகு போல் சுற்றி வந்து கொண்டிருக்கிறார்கள்.

 

“இவ்ளோ லேட்டா வர்றதுக்கு எதிர்க்கட்சி கிட்ட எவ்ளோ பணம் வாங்கினீங்க. நீங்க எவ்ளோ வேணா வாங்கிக்கோங்க. அதைப் பத்தி எனக்கு எந்தக் கவலையும் இல்லை. என்னோட காரியம் நடந்தாகணும். எனக்கு அவங்களை மாதிரிப் பணம் கொடுக்கவும் தெரியும், துரோகம் பண்றவங்களை உருத் தெரியாமல் அழிக்கவும் தெரியும்.” என்றவனைக் கட்டுப்படுத்த அங்கு எவராலும் முடியவில்லை.

 

“அவனைக் கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணுடா.”

 

“விடுங்கம்மா. இவங்களுக்கெல்லாம் அவன் தான் கரெக்ட்.”

 

“அதுக்காக என் புள்ள உடம்பு கெட்டுப் போகணுமா. இவருக்கு எப்பப் பாரு ஏதாச்சும் ஒரு பிரச்சினையை இழுத்துட்டு வந்து அவன் தலையில போடுறதே வேலை. எப்படிச் சாமி ஆடிட்டு இருக்கான் பாரு. சீக்கிரம் சரி பண்ணுங்க.”

 

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அனுசியா, ஒன்றும் அறியாமல் வந்தவளைக் கோர்த்து விட்டு விட்டாள்.

 

பரவசமாக ஓடியவள், “அகா!” என்ற பெரும் சத்தத்தோடு கதவைத் திறக்க, உள்ளே இருந்தவர்கள் பார்வை இவள் மீது.

 

அவனைத் தேடி வந்தவள் திகைத்து நிற்க, பல்லைக் கடித்தான் அகம்பன் திவஜ்.

 

“சா…சாரி அகா”

 

“க்ளோஸ் தி டோர்!” கர்ஜனையில் உடல் தூக்கி வாரிப் போட்டது. பயந்தவள் அப்படியே நிற்க, “ஏய்! காது கேக்கலையா உனக்கு. இங்க என்ன நடந்துட்டு இருக்கு, பல்லக் காட்டிட்டு நிக்கிற. டோரைக் க்ளோஸ் பண்ணிட்டுப் போ…” என்றதும் இன்னும் பயந்தாள்.

 

“எஸ்!” கும்மாளம் போட்டுத் துள்ளிக் குதித்தாள் அனு. அகம்பனின் சத்தம் கேட்டு ஓடி வந்த கமல், நிலவரம் புரிந்து கதவைச் சாற்றினான். அமைதியாக இருக்கையில் அமர்ந்து விட்டாள்.

 

“பேட்டி கொடுத்த அத்தனைப் பேரையும், தனித்தனியா ஒரு வீடியோ போடச் சொல்லுங்க. மினிஸ்டர் நவரத்தினத்தைப் பத்திப் பேசுனது எல்லாமே பொய்யின்னு சொல்லணும். ஹாஸ்பிடல்ல இருக்க அத்தனை பெட்டையும் மாத்துங்க. எக்ஸ்ட்ரா பெட் போடுங்க. இனி எந்தக் குழந்தையும் தரையில படுக்கக் கூடாது. ஹாஸ்பிடல் ரொம்ப முக்கியமான இடம்.‌ பல பேரோட வாழ்க்கை அங்கதான் நம்பிக்கையோட காத்திருக்குது. அதை உடைக்கிற மாதிரித் திருச்சியில எந்த ஹாஸ்பிடலும் நடக்கக்கூடாது.”

 

கட்டளைக்கு மேல் கட்டளை விதித்துக் கொண்டிருந்தவன் மனத்திற்குள் அவள் முகம். அவள் வருவதற்கு முன்னர் கிலோமீட்டர் வேகத்தில் பயணித்துக் கொண்டிருந்த அவன் பேச்சு பிசிரு தட்டியது. பயந்த விழிகளும், தன் அதட்டலில் அதிர்ந்தவள் தோரணையும் தொந்தரவு செய்தது. தொடர்ந்து பேச முடியவில்லை. அகம்பன் தடுமாற்றத்தை அவன் அண்ணனும், தந்தையும் கவனித்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, “டென் மினிட்ஸ்!” என்று விட்டு வெளியேறினான்.

 

அகம்பன் வரவை அறிந்த அனு கற்பகத்தோடு சேர்ந்து நின்று, “இன்னைக்கு இருக்கு அவளுக்கு.” சிரித்தாள்.

 

அகம்பன் பின்னே நவரத்தினமும், ஆதியும் வர, மதுணிகாவை நோக்கி அழுத்தமாக நடை வைத்தான். அவன் இட்ட அதட்டல் இன்னும் காதுக்குள் ரீங்காரம் போட்டது. அன்றொரு நாள், காரைத் திறந்ததற்கு அடித்தது போல் அடித்து விடுவானோ என்று பயந்தாள்.

 

இரு கன்னத்திலும் இரு கைகளை வைத்து, “மீட்டிங் நடக்குதுன்னு தெரியாது. காலையில இருந்து சாப்பிடாமல் இருக்கேன். அடிச்சுடாத. மயக்கம் போட்டு விழுந்திடுவேன்.” என்றவள் எதிரில் அமர்ந்து கூர்மையாகப் பார்த்தான். உடலைப் பின்னுக்குத் தள்ளி இருக்கையோடு இருக்கையாக ஒட்டிப் போனவள்,

 

“சா…சாரி அகா” வார்த்தைகளைத் தந்தி அடித்துக் கூறினாள்.

 

 

அம்மு இளையாள்.

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 16

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
19
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்