
அத்தியாயம் – 24
தேவா இருமியதில் நமுட்டு சிரிப்பு சிரித்தவள், தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொடுக்க, அவளை முறைத்துக் கொண்டு வாங்கி குடித்தவன், ஜன்னல் புறம் திரும்பிக் கொண்டான். பின், அவள் அலுவலகம் வரவும் இறங்கியவள்,
“பை திருட்டுப்பயலே” என்று கண்ணடித்து விட்டுச் செல்ல, அவன் வெளியில் முறைத்தாலும் உள்ளுக்குள், “ராட்சசி” என்று செல்லமாகத் திட்டிக் கொண்டான்.
பின், புது மண ஜோடிகளை மறு வீட்டிற்கு அழைக்க, ஆராதனா வீட்டிலிருந்து அவர்களை அழைக்கவே இல்லை. சொந்தம் பந்தம், எனப் பெரிய அளவில் தன் மகளுக்குத் திருமணம் செய்ய எண்ணிய அவர்களின் ஆசைகள் ஒன்றும் இல்லாமல் போனதில் அவர்களுக்கு வருத்தம் என்றால், தேவாவை ஏதோ அவள் கட்டாயப்படுத்தி திருமணம் செய்தது சுத்தமாகப் பிடிக்கவே இல்லை.
அவளுக்குப் பிடித்த வாழ்க்கை நன்றாக இருப்பாள் என்றால், கூடத் தங்களை சமன்படுத்திக் கொண்டு அவளுக்குப் பிடித்ததை செய்யலாம். ஆனால் அவளும் நன்றாக இல்லாமல், எங்களுக்கும் சந்தோசம் இல்லாமல், எதற்கு இந்த அவசர திருமணம்? அதுவும் அவளின் அத்தை இப்படி உடைந்த நிலையில் இருக்கும்போது என்று தான் அவர்களுக்குக் கோபமே. கணேசனும், கண்ணம்மாவும் தான் அவளுக்கு போன் செய்து விசாரித்துக் கொள்வர். கண்மணியோ நாளுக்கு நாள், கணவனின் துரோகத்தில் நலிந்து போனார்.
அம்மு வருத்தமாக, “விச்சு நம்மளை மறுவீட்டுக்கு கூப்புட்ருக்காங்க. ஆனால் ஆரு வீட்ல அவளைக் கூப்பிடவே இல்லை. கூப்பிட்டாலும் உன் பிரெண்டு போவானானு தெரியல. இப்போ என்ன பண்றது?” என்று கேட்க,
தமி “கணேஷ் தாத்தா அவளைக் கூப்டாரு. ஆனால் அவள் தான், அப்பா தான் தேவாவை கூப்பிடனும். அப்படி கூப்பிடலைன்னா நானும் வரலைன்னு சொல்லிட்டா” என்றதும், ஆண்களுக்குத் தான் எதுவும் புரியவில்லை. நிஷாந்த், “ஆமா எதுக்கு மறுவீட்டுக்கு போகணும்? அதோட ஆரு வீட்டுக்கு அவள் போறதுக்கு அவங்க ஏன் இவங்களை கூப்பிடனும்?” என்றான் தலையைச் சொரிந்து.
வைஷு, “இதெல்லாம் சம்பிரதாயம் மாமா. ஒரு பொண்ணு கல்யாணம் பண்ணி போய்ட்டா, அவள் பொறந்த வீடு கூட அவளுக்கு அந்நியம் தான். அங்க போறதுன்னா கூட முறையா பொண்ணையும் மாப்பிள்ளையையும் வீட்டுக்குக் கூப்பிடனும்…” என்று விளக்கம் கொடுக்க,
‘இருக்குற பிரச்சனை பத்தாதுன்னு இது வேறயா?’ எனக் கன்னத்தில் கை வைத்து அமர்ந்திருந்தனர்.
“ஏற்கனவே அவள் அப்பா அம்மாக்கு விருப்பம் இல்லை. இதுல இவளுக்கு இந்த வீம்பு தேவையா?” என்று விஷ்வா வினவ, அம்மு பேசுவதற்குள் “என்ன இங்க மீட்டிங்கு…?” என்று வேலை முடிந்து வந்த ஆரு அவர்கள் முன் அமர்ந்தாள்.
விஷ்வா திருதிருவென விழித்து, “ஒண்ணும் இல்லையே சும்மா பேசிட்டு இருந்தோம்” என்றவன், ‘ஆத்தி இவள் வந்தது தெரியாம வாயைக் குடுத்துட்டோமே’ என்று மனதில் மிரள,
ஆரு “இல்லையே என்னை ஏதோ சொன்ன மாதிரி இருந்துச்சு….?” என்று புருவத்தை உயர்த்தி வினவியதில்,
நிஷாந்த், “ப்ச் ஆரு என்ன இருந்தாலும் உன் அம்மா, அப்பா சம்மதம் இல்லாம கல்யாணம் பண்ணது தப்பு தான. இப்போயும் இப்படி வீம்பு பிடிச்சா எப்படி? அவங்களை சமாதானப்படுத்தலாம்ல” என்க, அவள் முகம் வாடிப் போனது.
“முதல்ல உன் பிரெண்ட சரி பண்ணலாம் மாம்ஸ்… அப்பறம் அவங்களை பார்த்துக்கலாம். எப்படியும் என்கிட்டே அவங்க பேசித் தான ஆகணும். அதோட, நான் மட்டும்னா அவங்க கால்ல கூட விழுவேன். ஆனால், அவங்க கூப்டாம நாங்க போனா தேவாவுக்கு தான் மரியாதை குறைச்சல்” என்றதும், அவளை வியப்பாகப் பார்த்தனர்.
எல்லாரும் அமைதியானதும், அவள் பேச்சை மாற்றும் பொருட்டு, “அருண் மாம்ஸ், உன்கிட்ட குடுத்த பாய்சன் பாட்டில் எங்க?” என நக்கலாகக் கேட்க, அவனோ “ஐயோ அதை நான் இன்னும் என் பாக்கெட்டுல தான் வச்சுக்கிட்டு சுத்துறேன்.” என்று எடுத்துக் காட்ட, விஷ்வா தான் அவனைப் பார்த்து, “பந்திக்கு வைப்போம் ரசம்! பாக்கெட்டுலேயே இருக்கு விஷம்!” என்றதும், அவனை முறைத்த ஆரு அதனை வாங்கி ஒரு மிடறு விழுங்கினாள்.
அதில் “என்ன பண்ற?” என்று பதறியவர்களிடம், “மாம்ஸ் இது விசம் இல்ல. சத்துஊ டானிக்…” என்று சிரிப்பை அடக்கிக் கொண்டு கூறியதில், அவர்கள் முகம் தான் வெளிறிப் போனது. பின்னே, இது மட்டும் விஷம் இல்லை என்று தெரிந்தால் தேவா அவர்களைக் கொலையே செய்து விடுவானே.
விஷ்வா கடுப்பாகி, “அப்போ இது விஷம் இல்லையா? ஏன் ஆரு இப்படி பண்ணுன? நான் விளையாட்டுக்குலாம் நடிக்கல. ஒருவேளை அவன் ஒத்துக்கலைன்னா உண்மையாவே குடிச்சுருப்பேன்.” என்று தன் நண்பனை ஏமாற்றி விட்டோமே என்ற ரீதியில் பேசிட, அம்மு அவனை முறைத்தாள்.
ஆருவோ, “எனக்குத் தெரியும். உன் பிரெண்ட் அடம் பண்ணா… நீங்க அவனை ஒத்துக்க வைக்க, எந்த எல்லைக்கும் போய் இந்தக் கருமத்தைக் குடிப்பீங்கன்னு. அதான் நான் விஷ பாட்டில் ஸ்டிக்கர் மட்டும் ஒட்டி, விஷம்னு குடுத்தேன்” என்னும் போதே, அழுத்தமான காலடி ஓசையுடன் தேவா உள்ளே வர, மற்றவர்கள் செத்தோம் என்று பார்த்தனர்.
ஆருவோ உள்ளுக்கும் நடுங்கினாலும், வெளியில் “சரி சரி போய் எல்லாரும் வேலைய பாருங்க…” எனத் தப்பித்து ஓடியே விட்டாள். அதில் அவர்களும் கலைந்து அவரவர் அறைக்குள் புகுந்து கொண்டனர்.
அப்படியே இரவாகி விட, மற்றவர்கள் பேச்சும் சிரிப்புமாக இரவு உணவை முடிக்க, தேவா அங்கிருக்கும் அலுவலக அறையை விட்டு வெளியில் வரவே இல்லை. வெகுநேரம், கழித்து அறைக்கு வந்தவன், அங்கு ஆரு இல்லாததையும், டேபிள் மேல் இரவு உணவையும் வைத்திருப்பதை கண்டு, ‘என்னை ஏமாத்திட்டு சாப்பாடு வச்சுருக்கா ராட்சசி’ என்று பல்லைக் கடித்தான்.
இதில் அந்த உணவுக்கு அருகில் “சாப்பாட்டை வீணாக்கக் கூடாது” என்று எழுதிருக்க, ‘நான் சொன்னதை எல்லாம் எனக்கே சொல்றா’ என்று புலம்பி விட்டு, உண்டவன் ‘இன்னைக்கும் பால்கனில தான் தூங்குறாளோ’ என எண்ணி, சிறிது நேரம் அறைக்குள் நடந்தவன், அங்குச் சென்று பார்க்க, முந்தைய நாள் மாதிரியே சேரில் அமர்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள்.
அவள் அருகில் சென்றவன், “ஏய் ராட்சசி! என்னை இம்சை பண்றதுன்னு முடிவே பண்ணிட்டியா? உள்ள வந்து தூங்குனா என்ன? திமிருடி உனக்கு!” எனத் திட்டியவன் வாயில் இருந்த கட்டை விரலை எடுத்து விட, அவள் மீண்டும் வாய்க்குள் வைத்துக் கொண்டாள்.
“என்னையாவா பாய்சன் பாட்டிலை வச்சு ஏமாத்துன! இரு உனக்கு இருக்கு?” என்றவன், அவள் கட்டை விரலில் மிளகாய் தூளை தடவி விட்டு, வேகமாக அறைக்குள் சென்று படுத்துக் கொண்டான்.
அவளோ உறக்கத்தில் வாய்க்குள் விரலை வைக்க, சுள்ளென உரைத்ததில் “ஆஆ” எனக் கத்திக் கொண்டு எழுந்தாள். “ஸ்ஸ் ஆ உரைக்குது!” என்று வேகமாக உள்ளே வந்து, தண்ணீரை எடுத்துக் குடித்தவள், “எப்படி உரைச்சுச்சு? என்ன ஆச்சு?” என்று புரியாமல் தேவாவை பார்க்க, அவன் உறங்கிக் கொண்டிருந்தான். ‘ஒருவேளை பேய் பிசாசு ஏதாவது வந்துருக்குமா’ என்று மிரண்டவள், பின், ‘சே அப்படிலாம் இருக்காது… நம்ம மன பிராந்தியா இருக்கும்’ என்றெண்ணியவள் மீண்டும் பால்கனிக்கு செல்ல,
தேவா அப்போது தான் அடக்கி வைத்திருந்த சிரிப்பைச் சிதறினான். “ஐயோ இவளோட… பேய் பிசாசு வந்துருச்சாம் ஹா ஹா” எனச் சத்தம் போடாமல் சிரித்தவன், மீண்டும் வெளியில் வந்து பார்க்க, அவள் உறக்கம் வராமல் வானத்தை வெறித்துக் கொண்டிருந்தாள்.
தான் உள்ளே வந்தால், அவன் சங்கடமாக உணர்வானோ என்று தான், இரவானதும் அவன் கண் முன்னே வராமல், இங்கு வந்து உறங்கினாள். அவனுக்குத் தோழியாய் இருக்கவே அவள் மனம் விரும்பியது. மனைவியாய் இருந்து அவன் மனம் சற்று பயந்து வாடுவதில் கூட அவளுக்கு விருப்பம் இல்லை.
இப்படியே ஒரு வாரம் ஓடி விட்டது. மற்ற ஜோடிகளும், இவர்கள் சரியானதும் மறு வீட்டிற்கு செல்லலாம் என்று முடிவெடுத்து, விடுமுறையை ரத்து செய்து விட்டு, வேலைக்குச் செல்ல ஆரம்பித்தனர்.
அன்று ஞாயிற்றுகிழமையாக இருக்க, சொந்தத்தில் ஏற்பட்ட இறப்பிற்காக ஊருக்குச் சென்றிருந்த திலகன் இவர்களின் திருமணத்தைக் கேள்விப்பட்டு வீட்டிற்கு வந்தார்.
தேவா வெளியில் சென்றிருக்க, மற்ற ஜோடிகள் அடுக்களையில் எப்போதும் போல் ஒருவரை ஒருவர் வாரிக் கொண்டிருக்க, ஆராதனா, அறையில் அமர்ந்து அதட்டி, மிரட்டி, பிடிவாதம் பிடித்து, திருமணம் செய்தாயிற்று! ஆனால், அவன் மனதின் காயங்களை எப்படி சரி செய்வது?
அதற்கு, அவன் சற்றாவது அவன் பிடியை தளர்த்த வேண்டுமே? எனச் சிந்தனையில் இருக்க, ஏதோ அரவம் கேட்டு வெளியில் வந்தாள்.
திலகனோ மூன்று பெண்களையும் பார்த்து, ‘இவங்க பத்திரிக்கை பொண்ணுங்க தான்’ என விழிக்க, ஆடவர்களோ மகிழ்வாக அவர்களை அறிமுகப்படுத்த, மூன்று பெண்களின் முகமும் அரண்டிருந்தது. இதில், ஆரு வேறு வெளியில் வர, விஷ்வா வேகமாக அவளை அறிமுகப்படுத்த, அவர் மேலும் அதிர்ந்தார்.
ஆருவும் அவரை அங்கு எதிர்பாராமல் திகைக்க, “ப்ளீஸ்” என்று கண்ணாலேயே கெஞ்சினாள். சற்று அமைதி காத்தவர் சிறிது நேரம் அங்கிருந்து விட்டு, கிளம்பும்போது ஆருவை பார்க்க அவளும் அவரின் பின்னே சென்றாள்.
“ஏன் என்கிட்ட பொய் சொன்ன?” என்றார் கோபமாக.
“நான் பொய் சொல்லலைன்னா நீங்க அவனைப் பத்தி சொல்லிருக்கவே மாட்டீங்க…” என்றவளைக் கண்டு பெருமூச்சு விட்டவர்,
“அவனைப் பத்தி தெரிஞ்சு, நீ அவனைக் கல்யாணம் பண்ணது, அவனுக்குத் தெரியுமா?” எனக் கேட்க, அவள் ‘இல்ல’ எனத் தலையாட்டி நடந்ததை கூறினாள்.
அதில் திகைத்தவர், சற்று யோசித்து விட்டு, “அவன் அந்த ஆஸ்பத்திரில இருந்து வந்ததுல இருந்து, அவனுக்குக் கொஞ்ச நாள் ட்ரீட்மெண்ட் கொடுத்தோம். அவனோட உடம்புல இருக்குற காயம்லாம் கொஞ்ச நாள்ல ஆறிடும்… ஆனால், அவன் மனசலவுல பாதிக்கப் பட்டுருக்கறதா டாக்டர் சொன்னதுல, என் அப்பா அவனை சைக்கியாட்ரிஸ்ட் கிட்ட கூட்டிட்டு போனாங்க. ஆனால் அவன் ஹாஸ்பிடல்க்கு வர மறுத்துட்டான். அவனுக்குத் தன்னை நினைச்சே சுயபட்சதாபம். தன்னால மாறவே முடியாதுன்றதை விட எதுக்கு மாறணும்னு ஒரு அழுத்தம்.
அதோட, யாரவது தொட்டா அவனுக்கு ஏற்படுற பயத்துலயும், அருவெறுப்புலயும் தன்னால இதுல இருந்து வெளி வரவே முடியாதுன்னு முடிவே பண்ணிட்டான். அவன் அந்த மூணு பசங்க கூடச் சேர்ந்ததே பெரிய விஷயம் தான். அவன் தனக்கு ஒண்ணும் இல்ல, இதுல இருந்து வெளிய வந்தா போதும்னு நினைச்சா போதும்… கொஞ்சமாச்சும் அவனை மாத்தலாம். இதெல்லாம், உன்னால முடியும்னு நினைக்கிறியா?” எனக் கேட்க,
அவள், “அவனை மாத்திட்டு உங்ககிட்ட கூட்டிட்டு வரேன் சார்… என் புருஷனா!” என்றிட, அவளின் அழுத்தத்தில் அவருக்கு என்ன சொல்வதென்றே புரியாமல், குழப்பத்தோடு சென்று விட்டார்.
அன்று மாலை, வீட்டிற்கு வந்த தேவாவை ஆராதனா அவசரமாக, “வா வெளிய போகணும்.” என அழைத்தாள். அவன் புரியாமல் பார்க்க, “ப்ச் வா…” எனக் காரை எடுக்க, அது நேராக மனநல மருத்துவமனையில் சென்று நின்றது.
அது அவன் சிறு வயதில் இருந்த இடம் தான். அதனைப் பார்த்ததும் அவனுக்கு நெஞ்செல்லாம் படபடக்க, கையெல்லாம் நடுங்க ஆரம்பித்தது. அதனை அவள் உணர்ந்தாலும், ஒன்றும் தெரியாதது போல், “என்னாச்சு தேவ்?” என்று வினவினாள்.
“இங்க எதுக்கு வந்துருக்கோம்?” எனப் பிசிறடிக்கும் குரலில் கேட்டவனிடம், “உள்ள போனா உனக்கே தெரியும்…” என்று அழைக்க, “நான் வரலை வீட்டுக்குப் போறேன்.” என்று அடம் பிடித்தான்.
“ப்ச் தேவ்! என் கூட ஒர்க் பண்ற பொண்ணோட பையனுக்கு ஏதோ ப்ராப்ளம் ஆம்… அவனை சைக்காட்ரிஸ்ட்கிட்ட கூட்டிட்டு போகணும்னு என்னைக் கூப்பிட்டா. அதான் துணைக்கு உன்னைக் கூப்பிட்டு வந்தேன். என் பிரெண்ட்காக வாயேன்.” என்று சற்று கெஞ்சுவது போல் கேட்க, ‘காட்டிற்கே தனியாகச் செல்பவள் இங்கு செல்லமாட்டாளா?’ என யோசிக்க தவறியவன் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு, “ம்ம்” என்று மெதுவாக உள்ளே வந்தான்.
அங்கு அவளின் தோழி சிறு பையனுடன் நிற்க, “டாக்டர் வந்தாச்சா நித்தி…?” எனக் கேட்டுக்கொண்டு அவள் அருகில் சென்றாள். நித்தி, “வந்தாச்சு ஆரு. உனக்காகத் தான் வெயிட்டிங்” என்றதும், ஆரு அவள் அருகில் இருந்த சிறு பையனிடம், “ஹாய் குட்டி பிசாசு” எனக் கிண்டலடித்தாள்.
அவன் “நீதான் பிசாசு…” என்றதும், அவள், அவன் கன்னத்தைக் கிள்ளப் போக, அவன் வேகமாக ஆருவின் கையைத் தட்டி விட்டு, கோபமாக நின்றான். தேவ் அந்தப் பையனைப் புரியாமல் பார்க்க, ஆரு “நீ இவனை உள்ள கூட்டிட்டு போ நித்தி! நான் வரேன்.” என்றதும், அவள் உள்ளே சென்றாள்.
தேவா ஆருவின் முகத்தைக் காண, அவள் அவனிடம், “அந்தப் பையன்கிட்ட ஒரு பொண்ணு மிஸ்பிஹேவ் பண்ணிருக்கா… அதுவும் சின்னப் பையனைப் போய் அபியூஸ்…! சே! என்ன மனுஷியோ அவள்!” என்று குரலில் வெறுப்பை தேக்கிக் கூற, தேவா அதிர்ந்தான்.
அவள் மேலும், “அவனுக்கு யாரு தொட்டாலும் பிடிக்கலையாம். நான் தொட்டப்பவே பார்த்தியா எப்படி கோபப்பட்டான்னு! அதான் கௌன்சிலிங் கூட்டிட்டு வந்தோம்…” என்றாள் அவனை ஓரக்கண்ணால் பார்த்து.
“இங்க கூட்டிட்டு வந்தா மட்டும், அவன் சரி ஆகிடுவானா? அந்த மாதிரி பொண்ணை எல்லாம் நாய் அடிக்கிற மாதிரி அடிச்சு, இதே பைத்தியக்கார ஹாஸ்பிடல்ல வந்து போடணும்! பைத்தியக்காரதனமா நடந்துருக்குறது அவள். இவனைப் பைத்தியம் மாதிரி இங்க கூட்டிட்டு வரணுமா? அப்போ தப்பு செய்றவங்களுக்கு எந்தத் தண்டனையும் கிடையாது. தப்பால பாதிக்கப்படுறவங்க தான் எல்லா கருமத்தையும் அனுபவிக்கணும் இல்ல?” என்று காட்டுக் கத்தாகக் கத்தியவன், மனமோ தீப்பிழம்பாக இருந்தது.
அவள் பொறுமையாக, “ஏன் அனுபவிக்கனும் தேவ்? தெரியுதுல்ல, தப்பு அவங்க தான் பண்றாங்கன்னு? அப்பறம் ஏன் எந்தத் தப்பும் செய்யாம பாதிக்கப்படுறவங்க மனசு உடைஞ்சு போகணும்?
அதோட, இங்க பைத்தியமா இருக்குறவங்க தான் வரணும்னு இல்லயே… நம்மளாம் அடல்ட்ஸ். சோ! எந்தப் பிரச்சனைக்கு எப்படி ரியாக்ஷன் கொடுக்கணும்னு தெரியும்.
ஆனால், அந்த எட்டு வயசு பையனை நம்மளால கரெக்ட்டா ஹாண்டில் பண்ண முடியுமா? ஒரு டாக்டரோட ஹெல்ப் கண்டிப்பா தேவைப்படும். அவங்களோட வார்த்தைகளும், அவங்க சொல்ற நம்பிக்கையும் கண்டிப்பா நமக்கு நடந்தது ஒண்ணும் இல்லன்னு தோணி, இதுல இருந்து வெளிய வர ஒரு தெம்பு கிடைக்கும்.
அண்ட், தெ நோ ஹொவ் டு ஹாண்டில் திஸ். கூட இருக்குற எங்களுக்கும் ஐ மீன், அந்தப் பையனோட அம்மாவுக்கும் அவனை வெளிய கொண்டு வர மனதைரியம் வேணும்னு தான் இங்க கூட்டிட்டு வந்தோம். காய்ச்சல் வந்தா ஹாஸ்பிடல் போறது இல்லயா. அதே மாதிரி தான் மனசுல ஒரு சின்னப் பாதிப்பு. அதை இப்பவே பார்த்துச் சரி பண்ணுனா? மறுபடியும் அவனுக்கு அந்த மாதிரி தப்பு நடக்காம பார்த்துக்கிட்டா? கண்டிப்பா அவன் அதுல இருந்து வெளிய வர முடியும்… எத்தனையோ பொண்ணுங்க வெளிப்படையா இதை அனுபவிக்கிறாங்க தேவ். எத்தனை பேர், பாலியல் கொடுமைக்கு ஆளாகி, அவங்க போட்டோவோட வெளிய வந்து, அவங்க உயிரோட இருந்தும் தினம் தினம் யாரவது அந்தச் சம்பவத்தை அவங்களுக்கு நியாபகப்படுத்தி மனசளவுல நோகடிக்கிறாங்க.
அவங்கள்லாம் இதுல இருந்து வெளியில வந்து, தனக்குன்னு ஒரு வாழ்க்கை வாழல? எப்போவும் ஒரு பொண்ணுக்கு இருக்குற மன தைரியம் ஒரு பையனுக்கு இருக்குறது இல்லை. உடல் அளவுல இருக்குற பலம் அவன் மனசுல இருக்குறது இல்லை. ஒரு பாதிப்புல இருந்து நம்ம வெளிய வரணும்னு நினைக்கணும்.
அப்போதான் எந்த நிகழ்வும் நம்மள பாதிக்காது. இல்லைனா கடைசிவரை மனசுக்குள்ளேயே எல்லா ஆசையையும் வச்சுக்கிட்டு தன்னையும் கஷ்டப்படுத்தி, கூட இருக்குறவங்களையும் கஷ்டப்படுத்த வேண்டியது தான்…” என்றதும், அவன் சட்டென நிமிர்ந்து அவளைப் பார்க்க, அவள் “நான் அந்தப் பையனைச் சொன்னேன்.” என்றாள் அவசரமாக.
அதில், அவன் எதுவும் பேசாமல், காருக்குச் சென்று விட, அவன் பின்னே சென்றவள், “என்ன தேவ், எதுவும் பேசாம போற?” என்று ஆழம் பார்த்ததில்,
“நீ என்ன சொன்னாலும் சரி, மனசுல இருக்குற காயம் வெறும் வார்த்தைகள்ல மட்டும் ஆறிடுமா?” என்றான் சலிப்பாக.
“நான் அது மட்டும்ன்னு சொல்லலையே! ஒரு உண்மையான அன்பும், அந்தப் பையனையோட மனசை திசை திருப்ப ஒரு டாக்டர் எடுக்குற முயற்சியும் கண்டிப்பா அவனை மாத்தும். அந்த ஒரு உண்மையான அன்புக்காக அந்தப் பையன் மாறணும்னு நினைச்சா!?” என்று முடிக்க,
தேவா அவள் புறம் திரும்பி, “எதுக்கு மாறனும்? என்ன மாறனும்? மாறுனா என்ன பண்ணுவா அந்தப் பொண்ணு? அப்போ கூட அதுல அவளோட சுயநலம் தான் இருக்கும். அவளுக்குத் தேவை அவனோட உடல் ரீதியான சந்தோசம் மட்டும் தான். அவன் சரியாகி, அந்த சந்தோசத்தை கொடுத்துட்டா, அவன் மாறிட்டான்னு அர்த்தம் ஆகிடுமா? இல்ல எந்தப் பொண்ணாலையாவது அவன் கூடப் படுக்கையைப் பகிராம வாழத் தான் முடியுமா? ஏன் நீ இருப்பியா?” எனக் கேட்டவன், அதன் பிறகே தான் என்ன பேசிக் கொண்டு இருக்கோம் என்றே உணர்ந்தான்.
உண்மையில் அவனின் அத்தையை போன்ற பெண்களை மனதில் வைத்துத் தான் பேசினான். ஆனால், அவள் ஏதோ பேசிக் குழப்பியதில் அவன் என்ன மனநிலையில் இருக்கிறான் என்றே புரியாமல் ஏதேதோ பேசிவிட்டான்.
அவன் பேசியதில் சற்று அதிர்ந்தவள், அமைதியாக “தேவ், மாறணும்னு சொல்லி, அவனை உடல் ரீதியாவும், மன ரீதியாவும் குடும்ப வாழ்க்கைக்கு தயார் படுத்துறது ஒண்ணும் அவ்ளோ பெரிய குற்றம் இல்லையே? அது ரொம்ப இயல்பா நடக்க வேண்டிய ஒரு விஷயம்.
ஒரு ஆணுக்கோ இல்ல ஒரு பொண்ணுக்கோ துன்புறுத்தி, அவங்களை கஷ்டப்படுத்தி அந்த விஷயம் வாழ்க்கையில நடந்தா அது மொத்தமாவே தப்பான விஷயம்ன்னு ஆகிடாதே…! எத்தனையோ பேர் தாம்பத்யம்னு ஒன்னை அழகா வாழ்க்கையில பொருத்தி வாழலையா? அப்போ அவங்களுக்கு வெறும் உடல் தேவை மட்டும் தான் இருக்குன்னு நம்ம சொல்லிட முடியுமா?” என்று எதிர்கேள்வி கேட்க, அவன் பதில் பேச முடியாமல் விழித்தான்.
“நீ கேட்ட கேள்விக்கே நான் வரேன்… ஒருவேளை நீ அந்த மாதிரி இடத்துல இருந்து, நான் உனக்கு வைஃபா இருந்தா, நான் உங்கிட்ட எதிர்பார்க்குறது வெறும் அன்பு மட்டும் தான். கண்டிப்பா உன்னை மாத்த முயற்சி பண்ணுவேன். நீ என்கூட எல்லாத்தையும் மறந்துட்டு, என்கூட படுக்கையைப் பகிர்றதுல இல்லை உன்னோட மாற்றம்.
உன்னோட எல்லா உறவுவாவும் நான் இருந்து, உன் மனசுல இருக்குற காயத்தை சரி பண்ணி, சகஜமா என்கிட்ட பேச வைக்குறதும்… நான் தொட்டா நீ பாதுகாப்பாவும், நான் குடுக்குற சின்ன முத்தம் கூட, உனக்கு ஒரு அம்மா பையனுக்குக் குடுக்குற முத்தமா அருவருப்பு இல்லாம இருந்தா, அது தான் நான் உன்னை மாத்துனதுக்கான அடையாளம். ஒருவேளை கடைசிவரைக்கு உனக்கு அதுல விருப்பம் இல்லைனா, மனசளவுல உனக்குத் தாயா தான் இருப்பேன். உண்மையா அன்பா இருக்குற யாரும், வெறும் உடல் தேவைக்காக மட்டுமே கல்யாணம் பண்ணிக்கிறது இல்ல…! ஏன் ஒருவேளை நாளைக்கே எனக்கு ஏதாவது ஆகி, என்னால உன்னைச் சந்தோஷப்படுத்த முடியாதுன்னு சொன்னா… என்மேல உண்மையிலேயே லவ் இருந்தா… நீ என்னை விட்டுட்டு போய்டுவியா!?” என்று அவனிடமே கேள்வியைத் திருப்பி இருக்க, அவனோ உறைந்திருந்தான்.

