
அத்தியாயம் – 23
தேவா சென்ற திசையையே வெறித்துக் கொண்டிருந்த ஆராதனாவிற்கு, அறையின் அலங்கோல நிலையிலேயே தெரிந்தது அவனின் கோப அளவு என்ன? என்று. மெல்ல உள்ளே சென்றவள், சிதறி இருந்த பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருக்க, அங்கு சில புத்தகங்களையும் கிழித்து வைத்திருந்தான்.
அதனையும் எடுத்து அடுக்கியவள் காலடியில், ஒரு காகிதம் மட்டும் இருக்க, “இதை, எந்தப் புக்குல இருந்து கிழிச்சான்னு தெரியலையே!” என்று எண்ணியவள்
அதன் பிறகே அது நாட்குறிப்பின் காகிதம் என உணர்ந்து அந்த டைரியை தேடி எடுத்து அதனுள் திணித்தாள். பின் ஏதோ தோன்றியதில், அதனை எடுத்துப் பார்த்தவள், விழிகள் விரிந்தது. அவனின் குண்டு கையெழுத்தில் அவளைப் பற்றித் தான் கவி வரைந்திருந்தான்.
இசையுடன் கூடிய ரம்மிய பொழுதில்…!
என்னிசை இமை கண்ட இனிமை நொடியில்…!
இசைப்பாவை விழியில் வீழ்ந்தே சிதைந்தேன்…!
உயிரிசை தீண்டிய குறும்பு ஜாலத்தில்…!
மெய்யிசை தீண்டாக் கோப மொழிகளில்…!
இசைமகளின் பாவனையில் விரும்பியே நுழைந்தேன்…!
மெல்லிசையாய் என்னை வருடிய உன் காதலில்…!
நல்லிசையாய் என்னை நனைக்கும் ரசனை சாரலில்…!
இசைத்தேனே உன் மடியில் தொலையவே விழைந்தேன்…!
காயா என் காயமும்…!
தீரா என் வேதனையும்…!
என்னை அமிழ்த்தி மூச்சடைக்க…!
நஞ்சினும் கொடிதாய்…!
வஞ்சிசையின் காதல் எனை கொய்ய…!
சிறு தொடுதலும் ஏற்க முடியா…!
காதலாகி உன்னை நெருங்க முடியா…!
என்நிலையையும்….!
உன் காவலன் ஆனாலும்!!!
காதலனாக என் மனம் விரும்பாதென்பதையும்…!
எவ்வாறடி எடுத்துரைப்பேன்…?
மனம் உன்னை இசைக்க விழைந்தாலும்…!
என் மெய் செய்யும் சதியில்…!
தள்ளாடும் என் காதலில்
அனுதினமும் உருகி உடைகிறேன்…!
உன்னிடம் காட்டும் கோப முகத்தில்
என்னையே வெறுக்கிறேன்…!
தேனிசை தேவதையே…!
தொலை தூரம் சென்று விடு…!
சாகா வரமாய் என்னுடன் இருக்கும்…!!!
செவ்வானமும் நாணும் எந்தன்…!!!
பாவையிசையின் நாணத்தின்
நினைவுகளில்…!!!
சாகும் வரை வாழ்ந்திருப்பேன்…!
விடை கொடுத்திடு இசைநிலாவே….!!!
என முடித்திருக்க, அதனைப் படித்தவள் வாயைப் பொத்திக் கொண்டு, தேம்பி தேம்பி அழுது கரைந்தாள்.
‘என்னை உனக்கு அவ்ளோ பிடிக்குமா தேவ்! என்னை ஏத்துக்க முடியாம தவிக்கிறியா?’ என உடைந்தவள், சிறிது நேரம் அங்கேயே மண்டியிட்டுக் கண்ணீரில் நனைந்து விட்டு, அவனை எப்படி அணுகுவது என்று சிந்திக்கலானாள்.
மொட்டை மாடி பௌர்ணமி நிலவில் தெரிந்த களங்கங்களையே கண்ணிமைக்காமல் பார்த்து வெற்றுத் தரையில் படுத்திருந்தான் தேவா. அவனின் எண்ணம் முழுதும் இசை மட்டுமே ஆக்கிரமித்திருந்தாள்.
அவளை முதன் முதலாய் பார்த்த கணத்திலிருந்து, காட்டில் அவள் செய்த சேட்டைகளை நினைத்தவனுக்கு குறுநகையும் ஏற்பட, முதலில் அவளைப் பழையதை மறந்து ரசிக்கவே செய்தான். ஆனால், அன்று காட்டில் அவள் சொன்ன ‘ரேப்’ என்ற வார்த்தையில் தான் அவனுக்கு மீண்டும் பழையது நினைவிற்கே வந்து, அவளிடம் தொலைய இருந்த மனதை இறுக்க பூட்டி வைத்துக் கொண்டான்.
இப்போது, இப்படி அவள் அடம்பிடித்து திருமணம் செய்தது, அவனுக்குக் கடுங்கோபத்தையே கொடுத்தது. முதன் முதலாகச் சிந்திக்க கூட நேரம் கொடுக்காமல், நண்பர்களே மிரட்டியதில் குழம்பிப் போனவன், அவர்களுக்காக வேறு வழி இல்லாமல் மணமேடையில் அமர்ந்தான். ஆனால் இப்போது யோசிக்கும்போது தான், அவள் தெளிவாகத் தனக்கு செக் வைத்திருக்கிறாள் என்றே புரிந்தது.
இதே உறுதியுடன் தன்னை பற்றித் தெரிந்தும் இருப்பாளா! எனத் தவித்தவன், எவ்வளவு நாள் அவளால் என்னைச் சகித்துக் கொள்ள முடியும்? சிறிது நாளில் அவளே சென்று விடுவாள் காரணம் அறிந்து. அதுவரையில் அவளுடன் இருக்கும் நிமிடங்களைச் சேகரித்துக் கொள்ளலாம்…! என எண்ணிக்கொண்டே எதேற்றையாகத் திரும்ப,
அங்கு அவனுக்கு வலப்புறம் விஷ்வாவும், இடப்புறம் நிஷாந்த் மற்றும் அருணும் அவனை மாதிரியே, ஒரு கால்மேல் கால் போட்டு, இரு கையையும் தலைக்குக் கொடுத்து, வானத்தைப் பார்த்துக் கொண்டு படுத்திருந்தனர்.
அதில் அவன் எழுந்து மூவரையும் முறைக்க, விஷ்வாவோ, “டேய் லேங்குவேஜு, நிலாவுல இன்னைக்கு நைட் ஷோ படம் எதுவும் போடுறாங்களா என்ன?” என்று கத்தி கேட்க, அதற்கு அருண், “அதான் மச்சான் எனக்கும் தெரியல! நானும் உத்து உத்து பார்க்குறேன்… அங்க இருக்குற பாட்டியைக் கூட இன்னைக்கு காணோம்.” என்று வியப்பாகக் கூறுவது போல் கூறி, இருவரும் நிலவை ஆராய்ச்சி செய்ய,
நிஷாந்த், “அட உங்க கண்ணுக்குத் தெரியலையா? நல்லா பாருங்க. அந்த நிலா ஓரத்துல நம்ம பொண்டாட்டிங்க தான் வடை சுட்டுட்டு இருப்பாளுங்க…” என்று கிண்டலடிக்க, விஷ்வா “ஹா ஹா… மச்சான் அதுங்க வடை எல்லாம் சுடாதுங்க. சிக்கன், மட்டன், பிஷ்ன்னு காஸ்டலியா தான் பண்ணுங்க.” என்றதும், அருண், “ஆமாடா அதுங்களுக்கு நிலா சைஸ்ல ஸ்நாக்ஸ் வாங்கி போட்டாலும் பத்தாது…” என்று நகைக்க, தேவா சட்டென எழுந்து, “வைஷூ” என்று கத்தினான் கடுப்புடன்.
அப்போது, தான் தேவா அறையை விட்டு வெளியில் வந்த அரவம் கேட்டதில், என்ன ஆச்சு எனப் பார்த்துவிட்டு வரச் சொல்லி, இவர்களை அனுப்பிய பெண்கள் மூவரும் இவன் சத்தத்தில் பதறி அடித்து வர,
அவனோ, “உங்க மூணு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைச்சது குடும்பம் நடத்த, இப்படி இவனுங்கள மொட்டை மாடிக்கு அனுப்பிட்டு, நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க? கூட்டிட்டு போங்க இவனுங்கள…” என்று கத்த,
விஷ்வா, “ஆமா நம்ம குடும்பம் நடத்த கல்யாணம் பண்ணோம், மத்தவங்கள்லாம் கும்மியடிக்கவா கல்யாணம் பண்ணுனாங்க?” என்றிட, அவனை தேவா முறைத்தான்.
விஷ்வா அருணிடம் பேசுவது போல், “உன்னைத் தான் மச்சான் நான் கேட்குறேன். வேற யார்கிட்டயும் நான் பேசலப்பா” என்று நல்ல பையனாகக் கூற,
நிஷாந்த், “சரி சரி வாங்க எல்லாரும் ரூம்க்கு போகலாம்…” என்று எந்திரிக்க, தேவா அசையாமல் இருப்பதை பார்த்து,
“எல்லாரும் கீழ போனா நாங்களும் போவோம். இல்லைன்னா, இன்னைக்கு இந்த மொட்டை மாடி தான் பெட் ரூம்…” என்று எங்கோ பார்த்துச் சொல்ல, “இவனுங்களை…” எனப் பல்லைக் கடித்தவன், ‘இவனுங்களுக்கு எந்த நேரத்துல எப்படி பேசணும்னு ஃபுல் ட்ரெயினிங் குடுத்துருக்கா ராட்சசி!’ என முணுமுணுத்துக் கொண்டே அறைக்குள் சென்றிட, மற்றவர்களோ அவனைப் பெருமூச்சுடன் பார்த்தனர்.
உண்மையிலேயே இவர்களுக்கு இரண்டு நாட்களாக அவன், என்ன பேசினால் எப்படி திரும்பிப் பேச வேண்டும் என்று பயிற்சி கொடுத்திருந்தாள்.
அவனுக்குப் பயந்து கொண்டே இருந்தால், அவன் இப்படியே தான் அழுத்தமாக இருப்பான். அவன் பேச வில்லை என்றால், நீங்களும் பேசாதீர்கள்! என்றே கூறியிருந்தாள். ஆனால், இவர்களுக்குத் தான் மனம் கேட்கவில்லை.
பின், அனைவரும் அவரவர் அறைக்குள் புகுந்து கொண்டனர். அருண் ஏதோ யோசனையில் இருப்பதை பார்த்து தமி, அவன் தோளைத் தட்டி “என்ன?” என்க, அவன் “இல்ல அவசரமா கல்யாணம் பண்ணுன மாதிரி, அவசரமா இதுல இருந்து எஸ்கேப் ஆக சான்ஸ் இருக்கா?” என்றான் யோசனையாக.
அவளோ கடுப்பாகி, “டேய் உன்னைக் கொன்னுடுவேன். என்னைப் பாத்தா எப்படிடா தெரியுது உனக்கு? என்று சரமாரியாக அடிக்க, அவன் சிறு சிரிப்புடன் “ஹே சும்மா சொன்னேன்டி… அடிக்காதடி” என்று கத்தினான்.
“இனிமே என்னைக் கழட்டி விடுறதை பத்தி யோசிச்சு பாரு…!” என்று மிரட்டி அவன் தலை முடியைப் பிடித்து ஆட்ட, அவள் கையைப் பிடித்துப் பின்னால் வளைத்தவன், “யோசிச்சா? என்ன யது பண்ணுவ…?” என்றான் கிசுகிசுப்பாக.
அவன் அருகாமையில் திணறியவள், “வி விடுடா” எனக் கையை எடுக்க முற்பட, அவன் இரும்பு பிடியாய் பிடித்து அவள் நெற்றியில் அழுந்த முத்தமிட்டு, நெற்றியில் முட்டியவன் அவள் கைகளுக்கு விடுதலை கொடுத்ததும்,
அவனிடமிருந்து விலகினாள் கூச்சத்துடன். அவன் மீண்டும் அவளை அவன் அரவணைப்பில் வைத்து, ஏதேதோ பேசிக் கொண்டிருந்தான். ஏக்கம், சந்தோசம், துக்கம் எனச் சிறு வயதில் நடந்த அனைத்தையும் கூற, அவள் அவன் பேச்சில் தொலைந்து போனாள்.
“ஏ மாமன் பொண்ணே!” என்று ஏதோ யோசித்துக் கொண்டிருந்த வைஷுவின் அருகில் ஒட்டிக் கொண்டு அமர்ந்திருந்தான் நிஷாந்த். அவள் யோசனையிலிருந்து விடுபட்டு, “என்ன என் அத்தை மகனே?” எனக் குறும்பாகக் கேட்க,
“என்ன டீப் திங்கிங் இந்தக் குட்டி மூளைல?” என்றான் கேள்வியாக. “மாமா, தேவாண்ணா ஆருவை புருஞ்சுப்பானா?” என்று பாவமாகக் கேட்டவளிடம், “அவனைக் கூடச் சமாளிக்கலாம் போல. ஆனால், ஆருவை தான் சமாளிக்க முடியல. அவள் என்ன இவ்ளோ அடமென்ட்டா இருக்கா?” என்றான்.
வைஷு, “அவள் இப்படி இல்லைன்னா, அவன் கல்யாணமே பண்ணிருக்க மாட்டான்.” என்று முறைக்க, அவன் புன்னகைத்து, “அதுவும் கரெக்ட் தான்… நியாயமா அவன் பண்ண வேண்டியது எல்லாம் அவள் பண்ணிக்கிட்டு இருக்கா. ஒருவேளை ஆன்டி ஹீரோயினா இருப்பாளோ?” என்று நகைக்க, அவள் “மாமா” எனச் சிணுங்கினாள்.
சிணுங்கிய அவள் இதழ்களைப் பார்த்தவன், “கேசரி சாப்பிடுவோமா நவி?” என்றான் குறும்பாக.
அவள் முதலில் புரியாமல் பார்த்து விட்டு, பின் சிவந்து குனிய, அவன் மெல்ல அவள் அருகில் வந்து, “கேசரி சாப்பிட்டு பல வருஷம் ஆச்சு…” என்று ரசனையாகக் கூறினான். “மாமா ஒழுங்கா தள்ளிப் போ…” எனச் சிறு குரலில் மிரட்ட, அவன் அவளின் கேசரி இதழ்களை மென்மையாகச் சுவைத்து தான் விலகினான்.
விஷ்வா உர்ரென்று அங்கும் இங்கும் நடக்க, அம்மு “ஏன் பேபி, அர்த்த ராத்திரியில வாக்கிங் போயிட்டு இருக்க?” என்று சந்தேகமாக வினவியவள், அவன் வாடிய முகத்தைக் கண்டு, “என்னாச்சு பேபி?” என்றாள்.
“தேவா என்கிட்ட பேசவே மாட்டுறான்.” என்று பாவமாகக் கூறியவனை இழுத்து தன் மடியில் போட்டுக் கொண்டவள், “அவன் எங்க போய்ட போறான்? எப்படினாலும் உன்கிட்ட பேசித்தான் ஆகணும். கொஞ்ச நாள்ல கண்டிப்பா ஆரு அவனை மாத்திடுவா.” என்று அவன் தலையைக் கோதிக் கொண்டு சிறு குழந்தைக்குக் கொடுப்பது போல் விளக்கம் கொடுக்க,
அவன், “அன்னைக்கு திலகன் சார் உண்மையிலேயே எதுவும் சொல்லலையா? அவனைப் பத்தி ஏதாவது தெரிஞ்சா நமக்கும் அவனை ‘ஹாண்டில்’ பண்ண ஈஸியா இருக்கும்ல” என்றிட,
அவள் திணறி “அது அது இஇல்ல எஎதுவும் சொல்லல” என்றவள் தன்னை சமன்படுத்திக் கொண்டு, “இப்போ அதைத் தெரிஞ்சு என்ன பண்ண போறோம்? இனிமே நடக்க போறதை பார்க்கலாம்!” என்றவளுக்கு வியர்த்து விட்டது.
‘சே ஊர்ல எல்லோர் கிட்டையும் அசால்ட்டா பொய் சொல்லுவோம். இவன் கிட்ட சின்னப் பொய் சொல்ல ஏன் இப்படி பதறுது?’ எனத் தன்னையே திட்டிக் கொண்டிருக்க, விஷ்வா “ஹே உனக்கு ஏன் இப்படி வேர்க்குது…?” என்றான் பதட்டத்துடன்.
அம்மு, “அது காத்து பத்தலை அதான்…” என்றதுமே, அப்போது தான் ஏ சி யிலேயே வளர்ந்தவளுக்கு, இந்த மின்விசிறி காற்று எப்படி பத்தும் என்பதே உரைத்தது.
அவர்களிடம் பணம் இருந்தாலும் ஏனோ, அனாவசிய செலவுகள் நால்வருமே செய்ததில்லை. வாழ என்ன தேவையோ? அதை மட்டுமே வைத்துக் கொண்டு மீதியை ஆஸ்ரமத்தை மேம்படுத்துவதற்கு தான் செலவிடுவர். அவள் வீட்டைத் தான் பார்த்திருக்கிறானே அங்கு இல்லாத வசதிகளே இல்லை. தனக்காக இப்படி அட்ஜஸ்ட் செய்கிறாளே என்றெண்ணியவன்,
“சாரி அம்மு! இங்க வேலை முடிஞ்சு நம்ம பெங்களூர் போனதும், ஏசி மாட்டிடலாம். உன் வீட்ல என்ன என்ன இருக்கோ அதை வாங்கிடலாம்… பெங்களூர் போற வரை அட்ஜஸ்ட் பண்ணிக்கோ” என்றதும், முதலில் அவளுக்கொன்றும் புரியவே இல்லை.
அதன் பிறகே அவன் சொன்னது புரிந்து அவனை முறைத்தவள், “என் வீட்ல எல்லாமே இருக்கும். ஆனால், நீ இருக்க மாட்டியே…!” என தலை சாய்த்துச் சொல்ல, அதில் மிருதுவாகச் சிரித்தவன், “என்னை ஏன் லவ் பண்ண…?” எனக் கேட்டான்.
“தெரியலையே! அதைத் தெரிஞ்சுக்கவும் விரும்பல. எப்போவும் என் விச்சு பேபி இப்படி பேபி மாதிரி என் மடியில படுத்துச் சின்னபுள்ள தனமா பேசணும்.” என்று கன்னத்தைப் பிடித்துக் கிள்ளியவளை, குறுகுறுவெனப் பார்த்து, “பேச மட்டும் தான் செய்யணுமா?” எனக் கேட்க, அதில் சட்டெனச் சிவந்து புன்னகைத்தவள், அவனைத் தள்ளி விட்டுப் பால்கனியில் சென்று நின்றாள்.
அவளைத் தொடர்ந்து சென்றவன், அவள் பின்னே உரசியும் உரசாமலும் நெருங்கி நிற்க, அவள் சிலிர்த்து, “விஷ்வா தள்ளுடா!” என முணுமுணுத்ததும், இன்னும் நன்றாக நெருங்கி அவளை அணைத்துக் கொண்டவன் அவளிடம் கதை பேச, அவளும் கீற்றுப் புன்னகையுடன் ஆர்வமாக கேட்டுக் கொண்டிருந்தாள். மூன்று ஜோடிகளுக்குமே மனதோரத்தில் தேவா ஆருவின் நினைவு தாக்க, அவர்களை முதலில் சரி செய்ய வேண்டும் என நினைத்துத் தங்கள் வாழ்க்கையையும் தொடங்காமல் தள்ளி வைத்தனர்.
தயக்கத்துடன் அறைக்குள் நுழைந்த தேவா அறையைப் பார்வையிட, அவன் சிதற விட்ட பொருட்களை அவள் நேர்த்தியாக அடுக்கி வைத்திருக்க, அறையே சுத்தமாக இருந்தது. ஆனால் அவளை மட்டும் காணவில்லை. அறை முழுதும் அவளைத் தேடி அவன் கண்கள் அலைபாய, அவளைத் தேடவும் ஏதோ தடுக்க, கட்டிலில் படுத்து விட்டத்தை பார்த்து அவளைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தவன் சற்று கண்ணயர்ந்தும் விட்டான்.
பின், திடுக்கென விழிப்பு தட்ட, ‘அவள் அறைக்கு வந்து விட்டாளா?’ என நோட்டம் விட்டவன் ,
அவள் அப்போதும் அறையில் இல்லாமல் இருப்பதாய் கண்டு, ‘எங்க போனா இவள்?’ என்று தேடியவன் இறுதியில் பால்கனியில் சென்று பார்க்க, அவள் அங்குப் போட்டிருந்த சேரில் அமர்ந்து, டீ பாயில் காலை நீட்டி, போர்வையை போர்த்தி உறங்கிக் கொண்டிருந்தாள்.
அதனைப் பார்த்தவன், ‘ராட்சசி! வேணும்னே பண்றா! உன்னை நான் உள்ள வரச்சொல்லுவேன்னு கனவு கூடக் காணாத… பனியிலேயே கிடந்தது காயி’ என்று உள்ளே சென்றவனின் மனம் தான் ‘ஐயோ இப்படி பனியில படுத்துருக்காளே! ஏண்டி இப்படி பண்ற?’ என்று நொந்து போனது.
‘ஒருவேளை நான் பேசுனதுல கோபமா இருக்காளா!’ எனச் சிந்தித்தவன், அப்போது தான் இதுவரை அடித்தாலும், திட்டினாலும் அவள் தன்னிடம் கோபப்பட்டதே இல்லை என்றதையே உணர்ந்தான். நியாயமா அவளுக்குக் கோபம் வரணும். இல்லை, கல்யாணமான அடுத்த செகண்டே அடிச்சதுல வெறுப்பு வரணும்! இவளுக்கு எதுவுமே வரலையா? என்று குழம்பியவன், ‘இப்போ கோபமா இருக்காளா, என்னன்னு தெரியலையே!’ என்று அறையையே அளந்து கொண்டிருந்தான். ஆனால், அவளை எழுப்பி உள்ளே அழைக்க மட்டும் மனம் வரவில்லை. தான் கொஞ்சம் இறங்கினாலும் அவள் தலையில் ஏறி அமர்ந்து கொள்வான் என்றெண்ணியவன், செய்வதறியாமல் விழிக்க, மீண்டும் பால்கனிக்கு சென்றான்.
அவள் எப்போதும் போல் கட்டை விரலை வாயில் வைத்து உறங்கிட, அதில் அவனறியாமல் சிறு புன்னகை தோன்றியது. அவள் கையை எடுத்து விட்டவன்,
“சின்னப் புள்ளை மாதிரி தூங்குறத பாரு. ஆனால், பண்றது எல்லாமே வில்லத்தனம் தான்…” என்றெண்ண, அவள் மீண்டும் கட்டை விரலை வாயில் வைத்தாள்.
“ப்ச் கையை எடுடி” என்று எடுத்து விட்டவன், அவள் விரலில் இருந்த ஈரத்தை அவன் சட்டை நுனியை வைத்துத் துடைத்து விட்டு, நன்றாகப் போர்த்தி விட, அவளோ மீண்டும் வாய்க்குள் விரலை வைத்துத் தான் உறங்கினாள்.
அதில் பெருமூச்சு விட்டவன், அவளையே சிறிது நேரம் பார்த்து விட்டு, அறைக்குள் சென்று தரையிலேயே படுத்து விட்டான். அவள் பனியில் வாடும்போது அவனுக்கு சொகுசாக படுக்க மனம் வரவில்லை. அப்படியே உறங்கியும் விட, காலையில் யாரோ முகத்தில் தண்ணீர் தெளிப்பது போல் இருந்தது.
அதில் உறக்கம் கலைந்து, கண் விழித்தவன் எதிரில் புத்தம் புதிதாகப் பூத்த மலராக, அவனின் இசை நிற்பதை கண்டு என்ன எனப் பார்க்க, “விடிஞ்சு எவ்ளோ நேரம் ஆகுது? எந்திரிடா தூங்கு மூஞ்சி! கட்டில்ல இருந்து கீழ உருண்டுட்டியா என்ன…? தரையில படுத்துக் கிடக்குற?” என்று கேள்வியாய் வினவியதில், இவளுக்கு சூடு சொரணையே இல்லையா…? என்பது போல் திருதிருவென விழித்தான்.
“முழியை பாரு… நல்லா கருப்பு பணியாரம் மாறி” என்று கேலி செய்ததில், முறைத்தவனை கண்டு கொள்ளாமல் வெளியில் சென்று விட்டாள்.
“ரசத்துக்கு புளி ஊத்தணுமா?” என்று உச்சகட்ட அதிர்ச்சியில் விஷ்வா வினவ, தமியோ நெஞ்சை பிடித்தாள். “அடேய் கிராதகா! இத்தனை வருஷமா ரசத்தை எப்படிடா வச்ச? என்றிட, அப்போது அங்கு வந்த ஆரு, “பச்சை தண்ணியிலே இவனுங்க சமையலை முடிச்சு பரிமாறிடுவானுங்க தமி…” என நக்கலடித்ததும், அவன் “காலைல தின்போம் களி! ரசத்துக்கு ஊத்தணும் புளி!” என்று கவுண்டர் விட, இருவரும் அவனை முறைத்தனர்.
அம்முவும், வைஷுவும், சமையலில் மூழ்க, மூன்று ஆடவரும் தான், அடுக்களையில் நின்று கொண்டு, அவள் கருவேப்பிலையை போட்டாலும் ஆச்சரியமாக “இதையும் போடணுமா?” என்று கேள்வியாகக் கேட்டு அவர்களைக் குரங்காட்டிக் கொண்டிருந்தனர்.
அதில் கடுப்பான அம்மு, “அடச்சே மூணு பேரும் வெளிய போங்கடா!” என்று கடுப்பானாள். விஷ்வா, “பத்த வைக்கணும் அடுப்பு! எங்களைப் பார்த்து ஆகாத கடுப்பு!” என்று டி.ஆர் வாய்ஸில் பேசிட, பெண்கள் நால்வரும் அவனைக் கரண்டியாலேயே அடித்ததில் அறை முழுதும் சிரிப்பலை பரவியது.
முழு ஃபார்மல் உடையில் சட்டையின் கைப்பகுதியில் இருக்கும் பட்டனை போட்டுக் கொண்டே வந்த தேவா, சிரிப்புச் சத்தம் கேட்டதில், டைனிங் டேபிளை டொம்மெனத் தட்டினான். அதில் அனைவரும் பதறி அடித்து வெளியில் வர,
ஆரு மட்டும் ஆடி அசைந்து தமி செய்த சப்பாத்தி ரோலை சாப்பிட்டு கொண்டே வந்தாள்.
அவளை முறைத்தவன், வைஷுவை பார்த்து “யாரும் வேலைக்குப் போற ஐடியால இல்லையா?” என்று கடுமை யாகக் கேட்க, அவள் பேந்த பேந்த விழித்து நிஷாந்தை பார்க்க,
தேவா, “அங்க என்ன பார்வை? இங்க பதில் சொல்லு” என்றதும் ‘இவன், ஏன் என்கிட்டயே கேட்டு எனக்கு ஹார்ட் அட்டக் வரவைக்கிறான்…’ என்றெண்ணி அப்படியே நின்றாள்.
அம்மு, “நேத்து தான் எங்க சஸ்பென்ஷன் கேன்சல் ஆச்சு… அதோட பெங்களூர்க்கு டிரான்ஸ்ஃபர் அப்ளை பண்ணி, மேரேஜ்க்கு ஒன் மந்த் லீவ் வாங்கிருக்கோம்.” என்றிட, அவன் “நீங்க என்ன வேணா பண்ணிக்கோங்க. ஆனால் உங்க பிரெண்டை வேலைக்குப் போகச் சொல்லுங்க. அவளுக்கு இங்க எந்த உரிமையும் கிடையாது. அவளுக்கு என்னால சோறு போடவும் முடியாது. காட் இட்?” என்றவன் விறுவிறுவென வெளியில் சென்றிட, ‘இவனுக்குக் கிறுக்கு தான் பிடிச்சுருக்கு’ என்று திட்டியவர்கள் ஆருவை பாவமாகப் பார்க்க, அவள் கீற்றுப் புன்னகையுடன், அவன் சென்ற திசையையே பார்த்திருந்தாள்.
அவளுக்குத் தெரியும் அவன் ஏன் தன்னை வேலைக்குப் போகச் சொன்னான் என்று. ஆனால், அவன் சொன்ன காரணம் தான் பொய். காரில் அமர்ந்தவனோ, “ஏண்டி என்னை இப்படியொரு நிலைமைக்குத் தள்ளுன? எல்லாரும் லவ் பண்ணிட்டு இருப்பாங்க. நீ வீட்டுல இருந்தா, அவங்களை பார்த்து ஏங்கிடுவடி…! ஏற்கனவே உன்னைக் கஷ்டப்படுத்துறது பத்தாதா? ஏண்டி? ஏண்டி என்னை இப்படியொரு நிலைமைக்குத் தள்ளுன? சீக்கிரமே என்னை விட்டுப் போய்டுடி…!” என்று நொந்து, தன்னை பற்றிச் சொல்லி விடுவோமா என்று கூட யோசித்தான்.
ஆனால், ‘அவள் உடனே சென்று விடுவாளே, அதன் பிறகு அவளைப் பார்க்க முடியாதே? இன்னும் கொஞ்ச நாள் போகட்டுமா?’ என்று தனக்குள் பட்டி மன்றம் நடத்திட, அவனுக்கு அருகில் யாரோ அமரும் அரவம் கேட்டதில் திரும்பியவன், அங்கு ஆரு இருப்பதை கண்டு, புரியாமல் பார்த்தான்.
“என்னை ஆபிஸ்ல ட்ராப் பண்ணிடு!” என்று உத்தரவிட்டவளை, ‘’இப்போ கூட ஏன் என்னைப் போகச் சொன்னன்னு சண்டை போட மாட்டியாடி?’ என சங்கடமாகப் பார்த்தவன், அமைதியாக அலுவலகத்தை நோக்கிக் காரைச் செலுத்தினான்.
அவள் கொண்டு வந்த டிபன் பாக்சில் இருந்த சப்பாத்தி ரோலை அவனிடம் கொடுத்து “சாப்பிடு” என்க, அவன் அவளைத் திரும்பியே பார்க்கவில்லை.
அவள் விடாமல், “காலைல நீ டி கூடக் குடிக்கல. இதைச் சாப்பிட்டுகிட்டே வண்டியை ஓட்டு” என்றிட, அவன் “என்ன பண்ணனும், பண்ணைக் கூடாதுன்னு எனக்குத் தெரியும்… உன் வேலையைப் பாரு” என்றான் கோபமாக.
ஆனால், அவள் ஸ்டியரிங்கை பிடித்து ஆட்டியதில் கார் தாறுமாறாகச் செல்ல, அதில் “ஏய் என்னடி பண்ற?” என்றவன் பயத்தில் காரை நிறுத்தி விட்டு, கீழே இறங்க சாலையில் சென்ற இருவர் அவனைத் திட்டி விட்டுச் சென்றனர்.
அவளும் கீழிறங்கி, அவனைத் தள்ளிவிட்டு, ஓட்டுநர் இருக்கையில் சென்று அமர்ந்து, “கெட் இன்” என்று கண்ணைக் காட்ட, “நீ ரொம்ப ஓவரா போற. இங்கேயே உன்னை ஏதாவது லாரில தள்ளி விட்டுட்டு போய்டுவேன்.” என்று மிரட்டியவனுக்கு, எப்போதும் இருக்கும் அழுத்தம் இல்லையோ என்றே தோன்றியது.
அவளோ, “ஓகே புருஷர் சார். கார்ல போய்கிட்டே எப்படி என்னைக் கொலை பண்றதுன்னு யோசிங்க. சீக்கிரம் ஏறுறீங்களா! எனக்கு ஆபிஸ்க்கு டைம் ஆச்சு” என்றிட, அவன் கோபத்தை அடக்கிக் கொண்டு, முன் சீட்டில் வந்து அமர, அவள் மீண்டும் அந்தச் சப்பாத்தி ரோலை நீட்டினாள்.
அதனை வாங்கி தூக்கி ஏறிய போனவனிடம், “சாப்பாட்டை வீணாக்கக் கூடாதுன்னு யாரோ சொல்லுவாங்க. சாப்பாட்டோட அருமை தெரிஞ்சவங்க அதைத் தூக்கியும் போடமாட்டாங்க.” என்று சாலையைப் பார்த்தே நக்கலாகக் கூற, அவனுக்குத் தான் ஐயோ என்றிருந்தது.
அதனை வீணாக்கவும் மனது வராமல், எரிச்சலுடன் சாப்பிட்டவனுக்கு, அப்போது தான் பசியின் அளவே தெரிந்தது. முந்தைய நாளிலிருந்து அவன் எதுவுமே சாப்பிட வில்லை. ஒரு சப்பாத்தி ரோலை சாப்பிட்டவனுக்கு அது பற்றவில்லை போல் இருக்க, எதுவும் பேசாமல் இருந்தான்.
அவள் இன்னொரு டிபன் பாக்ஸை எடுத்து, “இதையும் சாப்பிடு…” என்று கொடுக்க,
அவன் தான் வியந்து ‘எனக்குப் பசிக்குதுன்னு இவளுக்கு எப்படி தெரியும்? ஒருவேளை நம்ம மானங்கெட்ட மனசு, மைண்ட் வாய்ஸ்ன்னு நினைச்சு வெளிய கேட்குதோ’ என்று சிந்திக்க,
அவளோ, “அந்த மானங்கெட்ட மைண்ட் வாய்ஸ் தான் எல்லாத்துக்கும் கேட்குமே” என்று சத்தமாகவே சொல்லிட, அவனுக்குத் தான் சாப்பிட்டு கொண்டிருந்த சப்பாத்தி தொண்டையில் சிக்கியதில், இருமல் வர அவள் நமுட்டு சிரிப்பு சிரித்தாள்.

