Loading

அத்தியாயம் – 22

 ஓங்கி உயர்ந்த கோபுரங்களைக் கொண்ட, அந்தக் கோவிலில், தனக்கு முன் இருந்த ஓம குண்டத்தில் நெருப்பு எரிந்துக் கொண்டிருக்க, அங்கு அமர்ந்திருந்தவனின் மனமோ, மேலும் தீயாக எரிந்து பொசுங்கி கொண்டிருந்தது. 

கோபமும், இயலாமையும் அவனை வெறிப்பிடிக்க வைக்க, பல்லைக் கடித்துக் கொண்டு, தனக்கு அருகில் மணக்கோலத்தில் இருந்தவளை திரும்பிக் கூடப் பாராது, இறுகிப் போய் அமர்ந்திருந்தவனிடம் ஐயர் மாங்கல்யத்தைக் கொடுக்க, அவன் அதனை வாங்காமல் அப்படியே அமர்ந்திருந்தான்.

பக்கத்துக்கு மண  மேடையில் அமர்ந்திருந்த மற்ற ஜோடிகளும் அவனைத் தான் பதட்டத்துடன் பார்த்திருந்தனர். ஒரு புறம், ஆருவின் பெற்றோரோ இதில் தனக்கு சம்மதம் இல்லை என்ற ரீதியில் யாரோவாக நின்றிருக்க, அவளின் பாட்டி கண்ணம்மா தான் கணேஷின் தோளை இடித்து, தேவாவை கண்ணைக் காட்டினார்.

அவர், தேவாவிடம் “நல்ல நேரம் முடியப் போகுது, தாலியை வாங்குப்பா!” என்றிட, அவனோ மண்டிய எரிச்சலுடன் அதனை வாங்கி, அருகில் இருந்தவளை ஏறெடுத்தும் பாராது, விஷ்வாவை மட்டும் தீப்பார்வை பார்த்து விட்டு, அவளின் கழுத்தில் பொன்னகையை அணிவித்தான்.

அதனைச் சிறு சிரிப்புடன் ஏற்றவள், ‘சாரி தேவ், உன்னைக் கட்டாயப்படுத்துறதை தவிர எனக்கு வேற வழி தெரியல’ என்று மானசீகமாக மன்னிப்பு கேட்டு அவனையே பார்த்திருந்தவளுக்கு, அவன் கோப முகத்தில் உள்ளுக்குள் குளிர் எடுத்ததும் உண்மைதான்.

பின், அய்யர் கொடுத்த குங்குமத்தை அவள் நெற்றியில் பட்டும் படாமல் வைத்தவன், அடுத்த நொடி அங்கிருந்து வெளியில் சென்று விட, மற்றவர்கள் தான்,  என்ன  செய்வது என்று அறியாமல் பார்த்திருந்தனர். 

பர்வதமோ, அவன் சென்றதில் மேலும் கடுப்பில் இருந்தார். 

கண்மணி தான் நிலைமையை அறிந்து, “அட! சீக்கிரம், முகூர்த்த நேரம் முடியுறதுக்குள்ள மத்த ஜோடிக்கும் தாலி எடுத்துக்குங்க ஐயரே” என்றிட, மூவரின் முகமும் அவன் இல்லாமல் சுருங்கி போனது.

அவர்களின் மங்கையர்களோ ஆருவை வருத்தத்துடன் பார்க்க, விஷ்வா “நான் போய் தேவாவை கூட்டிட்டு வரேன்.” என்று எழப் போனான். அதில் அம்மு, “உன்னை அப்டியே இந்த நெருப்பில போட்டுப் பொசுக்கிடுவேன். ஏற்கனவே நீ போட்ட கேவலமான பிளான்ல அவன் செம்ம கடுப்புல இருக்கான். மூடிக்கிட்டு தாலி கட்டு.” என்று மிரட்ட,

தமி, “டேய் டீவி, எங்க அம்மா அப்பா கை, கால்ல விழுந்து சம்மதம் வாங்கிருக்கேன்டா. அதுல இப்படி ஆளாளுக்கு எந்திரிச்சு போய் மண்ணள்ளி போடாதீங்கடா!” என்றவள் திருதிருவென முழித்துக் கொண்டு அமர்ந்திருந்த அருணை பார்த்து, “நீ ஏன்டா இப்படி உட்காந்துருக்க?” என்றாள்.

அவனோ “இல்ல, நம்ம வேணா கல்யாணத்தை போஸ்ட்போன் பண்ணிக்கலாமா?” என்க, “இங்க என்ன செமஸ்டர் எக்சாமாடா நடக்குது? போஸ்ட்போன் பண்ண” என மிரண்டவள், 

“இங்க பாரு, உன் பிரெண்டு தெளிவா தாலியை கட்டிட்டு தான் எந்திரிச்சு போயிருக்கான். அவ்ளோ கோபமா இருக்குறவரு முன்னாடியே போக வேண்டியது தான? அவன் தெளிவா தாண்டா இருக்கான்…” என்றதும் “அப்படிங்கிற” என்று யோசனையுடன் பார்த்தான்.

நிஷாந்த், “ப்ச் பெரியவங்கள்லாம் இருக்காங்கடா. இப்போ நம்ம ஏதாவது பண்ணா தேவையில்லாத பிரச்சனை தான் ஆகும்… அதான் அவன் பின்னாடியே அவளும் போய்ட்டாளே. அவள் பார்த்துப்பா அவனை” என்றிட, அப்போது தான், ஆருவும் அங்கே இல்லை என்றதையும் பார்த்தனர்.

வைஷுவின் அப்பா முத்துவேல், “என்ன ஆச்சு மாப்பிள்ளை? அய்யர் ரொம்ப நேரமா தாலியை நீட்டுறாரு…” என்றதும் தான், அருகில் அந்த மனிதர் அமர்ந்திருப்பதே தெரிந்தது.

பிறகு, வேகமாக வாங்கி வைஷுவின் கழுத்தில் தாலியை கட்டிவிட, அந்த நிமிட மகிழ்வை இருவரும் பொக்கிஷமாக மனதில் பூட்டிக்கொண்டனர். விஷ்வா, தாலியை வாங்கி வெளியிலேயே தேவா வருகிறானா? எனப் பார்த்துக் கொண்டு கட்ட, அம்மு “பேபி” என்று பாவமாக அழைத்தாள்.

அதன் பிறகே அவளைப் பார்த்தவன், “சாரி சாரி, அம்மு” என்றவன் அவளைக் கண்களால் பருகிக் கொண்டே, அவளைத் தன் மனையாள் ஆக்கிக் கொண்டான். அதில் சிவந்தவள், “ஏன் இப்படி பார்க்குற?” என்று தடுமாற, “பார்க்கல அம்மு சைட் அடிக்கிறேன்!” என்று குறும்பு மின்னக் கூற, அவள் “ஐயோ திரும்புடா, அப்பா அம்மாலாம் இருக்காங்க” என வெட்கத்துடன் குனிந்து கொண்டாள். அடுத்து அருண், தாலியை யோசனையுடன் பார்த்து, “இப்போவே கட்டவா? இல்ல அவன் வரட்டுமா?” எனக் கேட்க, 

 

தமி, “ஒழுங்கா நம்ம லவ் கூடப் பண்ணல, மரியாதையா தாலியை கட்டிடு…” என்று மிரட்டியவளை புன்னகையுடன் பார்த்து, “அப்போ உனக்கு முத்தம் குடுத்தேனே? அதுக்கு பேர் என்ன?” எனக் கேட்டதில் குங்குமமாய் சிவந்தாள்.

அவன் அவள் காதருகில், “லவ் யூ சோ மச் யது… முதல் முதல்ல கண்ணால ஒரு சொந்தத்தைப் பார்க்குறேன். அதுவும் மொத்த சொந்தமும் நீயா மட்டும்…” என்றவன் மாங்கல்யத்தை அணிவித்து, அவளைத் தன்னவளாக்கிக் கொள்ள, அதில் கண் கலங்கியவள் அவனைக் காதலுடன் பார்த்தாள்.

வெளியில் சென்ற, தேவா கோபத்தில் அங்கும் இங்கும் நடக்க, அவனின் அருகில் சென்ற ஆரு, ‘கடவுளே என்னைக் காப்பாத்து…’ என்ற வேண்டுதலைப் போட்டு விட்டு, “என்ன புருஷர் சார்? இங்க நிக்கிறீங்க சார்?” என நக்கலாகக் கேட்க,

“போய்டு… உன்னைக் கொன்னுடுவேன்” என்றான் அடக்கப்பட்ட கோபத்துடன். “உங்களை விட்டுப் போறதுக்கா புருஷர் சார் உங்களைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்… ஹ்ம்ம்?” என்றவளின் நக்கல் பேச்சு தொடர, அவளைச் சப்பென அறைந்திருந்தான்.

“என் பிரெண்ட்ஸயே எனக்கு எதிரா தூண்டி விட்டு, நினைச்சதை சாதிச்சுட்டீல! என்கூட நீ எப்படி வாழுறன்னு பார்த்துடுறேன்!” என்று தீப்பொறி பறக்கக் கூறியவன் வெளியிலேயே சென்று விட,  கன்னத்தில் கை வைத்து, அவன் சென்ற திசையைப் பார்த்திருந்தவளுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது.

 

கண்ணீர் நிற்காமல் வழிந்துக் கொண்டிருக்க, பின்னால் தாத்தா குரல் கேட்டதில் சட்டெனக் கண்ணீரை துடைத்தவள், முகத்தில் சிரிப்பைப் பூசிக் கொண்டு, “தாத்தா அவருக்கு ஏதோ வேலையாம், அதான் போய்ட்டாரு, நீ ஏன் தாத்ஸ் வெளிய வந்த?” என்றிட, அவருக்கோ, ‘இந்தப் பிடிவாதப்பெண் ஏன் தான் இப்படி இருக்கிறாளோ?’ என்றிருந்தது.

“என் பொண்ணு வாழ்க்கை தான் வீணாகிடுச்சு. என் பேத்தி வாழ்க்கையாவது நல்லாருக்கணும் ஆரும்மா…” என்று வருத்தத்துடன் கூற, பின்னால் வந்த கண்ணம்மா, “அதெல்லாம் நல்லாத்தான் இருக்கும். நீங்கக் குழம்பி அவளையும் குழப்பாதீங்க… நீ வா!” என்று அவளை உள்ளிழுத்துச் சென்றார்.

விஷ்வா ஆருவை பாவமாகப் பார்க்க, அவள் தன்னை சரி செய்து கொண்டு, “நீ என்னைப் பாவமாகப் பார்க்காத, உன்னை நினச்சா தான் எனக்குப் பாவமாக இருக்கு. அவன் ரொம்ப உக்கிரமா இருக்கான். அநேகமாக உங்களுக்கு சங்கு கன்ஃபார்ம்.” என்று கலாய்க்க, 

ஆண்கள் மூவரும் மிரண்டிருக்க, அவர்களின் மனைவிமார்களும் பயத்துடன் திருமணத்திற்கு முன் நடந்ததை நினைத்தனர்.

அன்று, “ஐயோ காப்பாத்துங்க! தொண்டை எல்லாம் எரியுது.” என்று விஷ்வா கத்தியதில் வேகமாக அவனிடம் விரைந்த தேவா, “என்னடா ஆச்சு?” எனக் கேட்க, அவன் “ஆரு தாண்டா எனக்குக் குடிக்க ஏதோ குடுத்தா? விஷத்தைக் குடுத்துட்டா. ஐயோ நான் சாகப்போறேன்! என்னைக் காப்பாத்துங்க!” என்று மேலும் கத்த, 

நிஷாந்த் அவன் காதருகில், “டேய் ஓவரா நடிக்காத,  அப்படியே மயங்கிடு.” என்று எச்சரித்ததில் அப்படியே மயங்கி விட்டான்.

அதில் மேலும் பதறிய தேவாவுக்கு யோசிக்கும் தன்மை அற்று, அவனுக்கு உண்மையிலேயே ஏதோ ஆகி விட்டதென நடுங்கி, மருத்துவமனை அழைத்துச் செல்ல, பெண்கள் மூவரும் அவரவர் வீட்டிற்கு சென்று விட்டனர்.

அவனை ஐசியூவில் அனுமதிக்க, ‘அருண் தான் நடக்குறது நடிப்புன்னு தெரிஞ்சா பல்லு தெறிச்சுரும். இப்படியொரு ஐடியாவை குடுத்துட்டு இந்த மகராசி மதுரைக்கு பிளைட் ஏறிடுச்சே’ எனப் புலம்பிக் கொண்டிருந்தான்.

ஆனால், இந்த நாடகத்திற்காக ஒப்புக் கொண்ட மருத்துவர் இல்லாமல் வேறொருவர் செல்வதை கண்டு, விழித்தவர்கள் அரண்டு நின்றனர். உள்ளே சென்று கடுப்புடன் வெளியில் வந்த மருத்துவர், 

தேவாவிடம் கத்த ஆரம்பித்தார், “இதென்ன ஹாஸ்பிடல்லா? இல்ல கேம் ஷோ வா…? விஷம் குடிச்சுட்டேன்னு பொய் சொல்லி அட்மிட் ஆக! கூட்டிட்டு போங்க அந்தப் பையனை!” என்றிட, தேவா இறுகிய முகத்துடன் உள்ளே சென்றான்.

அங்கு விஷ்வாவோ, ‘ஐயோ இந்த டாக்டர் நடிக்க ஒத்துக்காம போய்ட்டாரே! நம்ம செத்தோம்’ எனப் புலம்பியவன், தேவாவை மிரண்டு பார்க்க, அவன் “எதுக்கு இப்படி பண்ணுன?” என்றான் கோபமாக.

விஷ்வா, “தேவா ஆரு தான்” என்று சொல்லும் முன்பே அவனை ஓங்கி அறைந்தவன், “அவள் சொன்னா எங்க போச்சு புத்தி உனக்கு. நான் எவ்ளோ பயந்துட்டேன் தெரியுமா?” என்று சற்று நடுங்கிய குரலில் கூற, அவன் அதனைப் பயன்படுத்தி,

“நான் இப்போ சும்மா நடிக்கத் தான் செஞ்சேன். ஆனால், நீ அவளைக் கல்யாணம் பண்ணிக்கலைன்னா உண்மையிலேயே விஷம் குடிப்பேன்.” என்றிட, அதில் மேலும் கடுப்பானவன், “இது என்ன முட்டாள்தனம்! இப்படிலாம் பேசாத விஷ்வா… அப்பறம் நானே உனக்கு விஷத்தைக் குடுத்துருவேன்.” என்று மிரட்டியதில், 

நிஷாந்த் “குடுடா! தாராளமா குடு! அப்படியே எங்களுக்கும் குடுத்துடு. நாங்களும் சாகுறோம்.” என்க, தேவா “ப்ச்” எனச் சலித்து அங்கிருந்து நகர போனான்.

விஷ்வா அவன் கையைப் பிடித்து, “என் அம்மா மேல சத்தியமா! நீ அவளைக் கல்யாணம் பண்ணிக்கலைன்னா நான் பாய்சன் குடிச்சுடுவேன்” என்ற மிரட்டலை விடுக்க, எப்போதும் ஒரு வார்த்தை பேசினாலே பயப்படும் நண்பர்கள் இன்று முறுக்கிக் கொண்டு நின்றதில் அவன் தான் திகைத்து நின்றான்.

அருண் வேகமாக, பாக்கெட்டில் வைத்திருந்த விஷத்தை எடுத்து, “நாங்க சும்மா சொல்றோம்னு நினைக்காத, உனக்கு நாங்க தேவை இல்லைன்னா சொல்லு இப்பயே இதைக் குடிச்சுடுறோம். இல்ல நாங்க வேணும்னு நினைச்சா அவளைக் கல்யாணம் பண்ணிக்கோ” என்று அழுத்தமாகக் கூற, 

தேவா தான், அவர்களை நம்பி இருக்கும் பெண்களை விட்டு விட்டு அவர்கள் இப்படி செய்யமாட்டார்கள் என்பதை உணராமல், அவர்கள் மிரட்டுவதில் சற்று தடுமாறி விட்டான்.

“என்னடா அவளோட ட்ரெயினிங்கா இதெல்லாம்? இப்படி அடம்பிடிக்கச் சொல்லி, அவள் தான் சொன்னாளா?” என்று முறைக்க, 

மூவரும் நீ என்ன வேணாலும் கோபப்பட்டுக்கொள். நாங்கள் சொன்னது சொன்னது தான் என்று நிற்க, தேவாவுக்கு தான் என்ன செய்வதென்றே தெரியவில்லை. 

அவர்கள், ‘திருமணம் செய்யமாட்டேன் என்று மிரட்டுவார்கள் எனப் பார்த்தால், செத்து விடுவேன் என்று மிரட்டுகிறார்களே’ என நொந்தவன், “என்னமோ பண்ணித் தொலைங்க” என்று சென்று விட்டான்.

ஆருவை பிளைட் ஏற்றி விட்டு, வீட்டினுள் சென்ற வைஷு, முத்துவேல் முகம் சுருங்கி அமர்ந்திருப்பதையும், அருகில் அவருக்குத் தண்ணீர் கொடுத்துக் கொண்டிருந்த ஜானகியையும் பார்த்து விட்டு, “அப்பா நான் உங்க கிட்ட ஒரு விஷயம் பேசணும்” என்றாள் தைரியத்தை வரவைத்துக் கொண்டு.

“நான் நிஷாந்தை லவ் பண்றேன் பா” என்றாள். அவர் அமைதியுடன் பார்க்க, ஜானகி அவளுக்கு ஏதோ குறிப்பு காட்ட, அவளுக்குத் தான் புரியவில்லை.

மேலும் தொடர்ந்து, “அவன் அனாதைன்னு தானப்பா அன்னைக்கு அவமானப் படுத்துனீங்க. அவனுக்கு நான் இருக்கேன். என் சொந்த அத்தை பையன். அவனுக்கு சொந்தம்னு அத்தை, மாமா, மாமா பொண்ணுன்னு இத்தனை பேர் இருக்கும்போது அவன் எப்படிப்பா அனாதை ஆவான்? இதை நான் அன்னைக்கே சொல்லிருக்கணும். என் தப்பு தான் எல்லாமே. என்னால தான் அவருக்கு அவ்ளோ கஷ்டம்” என்று பேசிக் கொண்டே போக, 

அவர் நெஞ்சை பிடித்திருந்தார். அதில் திகைத்தவள், “அப்பா” என அருகில் சென்று அவரை ஆசுவாசப்படுத்த, 

ஜானகி, அவளின் காதில் “இப்போ தான் அந்தப் பையன் வந்து என்னென்னமோ பேசிட்டு போய்ட்டான். அதுலயே இவரு ஒரு மாதிரி ஆகிட்டாரு. நீ வேற ஏதாவது பேசாத!” என்று விட்டு, “என்ன ஆச்சுங்க? ஹாஸ்பிடல் போலாமா?” என்க,

அவர் ‘இல்ல’ எனத் தலையசைத்து, “என் மருமகன் எங்கமா? என் தங்கச்சி பையன்னு தெரியாம அன்னைக்கு என்னென்னமோ…? என் தங்கச்சி இறக்குறதுக்கு நானே காரணம் ஆகிட்டேனா” என்று தளர்ந்து பேசியவரைக் கண்டு திகைத்தவள்,

“இல்ல பா… நீங்க என்ன தெரிஞ்சா பேசுனீங்க? அப்படி ஆக்சிடென்ட் நடக்கும்னு உங்களுக்கு முன்னாடியே தெரியுமா என்ன? நான் யாரையோ சொல்லாமல் கொள்ளாம வீட்டுக்குக் கூட்டிட்டு வந்தா, நீங்க என்ன தான் நினைக்க முடியும்? நான் தான் பொறுமையா உங்ககிட்ட பேசி, அதுக்கு அப்பறம் அவரைக் கூட்டிட்டு வந்துருக்கணும். இவ்ளோ பிரச்சனையே வந்துருக்காது” என்று சமாதானப்படுத்த,

அப்பொழுதும் தனக்கு ஆதரவாகப் பேசும் பெண்ணை, கண்ணீருடன் பார்த்தவர், “எங்கம்மா என் மருமகன்?” என்று கேட்க, அவளுக்குத் தான் சந்தோசம் தாளவில்லை.

“நான் வரச்சொல்றேன் பா. நீங்க ரெஸ்ட் எடுங்க” என்று படுக்க வைத்து விட்டு, ஜானகியை தனியே அழைத்து, “மா நிஷாந்த் இங்க வந்தானா?” எனக் கேட்க, அவர் “இல்ல. நிஷாந்த்தோட பிரெண்ட்ன்னு சொல்லிட்டு ஒருத்தன் வந்தான். ப்பா…! என்னமா பேசிட்டான். மனசுல நான் வச்சிருந்த டயலாக் எல்லாம் கொட்டிட்டான்” என்றதும் அவளுக்குப் புரிந்து விட்டது தேவா தான் வந்தான் என்று. “என்ன சொன்னாங்க தேவாண்ணா?” என்று ஆர்வமாகக் கேட்டவளிடம் சில நிமிடங்களுக்கு முன் நடந்ததை கூறினார்.

 

மருத்துவ மனையிலிருந்து நொந்து போய் வந்தவன், சென்றது வைஷுவின் வீட்டிற்கு தான். முத்துவேல் எப்போதும் போல், வரவேற்பறையில் செய்தித்தாள் படித்துக் கொண்டிருக்க, படபடவென உள்ளே வந்தான் தேவா.

முத்துவேல் அவனை யாரென்று பார்க்க, அவன் “நான் உன் தங்கச்சி மகனோட சாரி சாரி… என் பிரெண்ட் தான் உங்க தங்கச்சி பையன். நீங்க அவனை அனாதைன்னு சொன்னீங்கள்ள, அவனுக்கு எதுவும் இல்லைன்னு தான கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி அவனை அவமானப்படுத்தி அனுப்புனீங்க. இப்போ அவன் அநாதை இல்லை. ஒரு ஆஸ்ரமத்தையே தத்தெடுத்துருக்கான். 

அவனுக்கு அங்க அவ்ளோ சொந்தம் இருக்கு. அவனுக்கு நெருங்குன சொந்தமா மூணு பிரெண்ட்ஸ் இருக்காங்க. சொந்தமா பிசினெஸ் கூடப் பண்றான். இப்போ அவன் அநாதை, பொறுக்கி பையன் இல்லைல?

நீங்க எப்படி வேணா வச்சுக்கோங்க… உங்களுக்கு உங்க தங்கச்சி பையன் முக்கியமோ, இல்லையோ! எனக்கு என் ப்ரெண்ட் முக்கியம். அவன் உங்க பொண்ணை விரும்புறான். முடிஞ்சா நீங்களே கல்யாணம் பண்ணி வைங்க. இல்லைன்னா, நானே பண்ணி வைக்கிறேன். உங்க பொண்ணும் இதைத் தான் பண்ணனும்னு சொன்னா கண்டிப்பா பண்ணுவா… அவனுக்காக” என்று அழுத்தம் திருத்தமாகக் கூற, அவருக்குத் தான் தலையும் புரியவில்லை காலும் புரியவில்லை.

சில நிமிடங்களுக்குப் பிறகே, அந்த சம்பவத்தைப் பேசுகிறான் என்றே அவருக்குப் புரிய, ‘தங்கை மகன்’ என்றதில் திகைத்திட, தேவா மென்மையாக, “ஆனால் நாங்க அப்படி பண்ணமாட்டோம். சொந்தம்ன்னு யாரும் இல்லாம வளர்ந்த எங்களுக்கு எந்த சொந்தத்தையும் பிரிக்க மனசு வராது சார். 

அவனை உங்க தங்கச்சி பையனா பார்க்க வேணாம். அட்லீஸ்ட் ஒரு மனுஷனா பார்க்கலாம்ல! அவன் அம்மா அப்பா இறந்து அனாதை ஆனது அவன் தப்பு இல்லையே…? இந்த நிலைமை யாருக்கு வேணாலும் வரும். ஏன் ஒருவேளை உங்க பிள்ளைங்க இந்த மாதிரி சூழ்நிலைல வளர்ந்து மத்தவங்க அவங்களை அனாதைன்னு சொல்லும்போது அவங்களுக்கு எப்படி இருக்கும்? 

அதே மாதிரி தான் சார் மத்தவங்களும். யோசிச்சு ஒரு நல்ல முடிவா எடுங்க! இல்லன்னா தப்பான முடிவை நான் எடுக்க வேண்டியது இருக்கும்” என்று அழுத்தமாகக் கூறியவன், குளிர் கண்ணாடியை மாட்டிக் கொண்டு சென்று விட்டான்.

அதிலேயே, அவருக்கு நெஞ்சு அடைக்க ஆரம்பித்தது. “ஜானகி என்ன சொல்றான் இவன்? யாரு என் தங்கச்சி பையன்? எனக்கு ஒண்ணும் புரியல?” என்று படபடப்புடன் கேட்டிட, அவர்தான் நடந்த விவரங்களைச் சொன்னார். 

அதன்பிறகே, கோபத்தில் வீடு தேடி வந்த தங்கையை இப்படி தவறவிட்டு விட்டோமே! தங்கை மகனாக வரவேற்க வேண்டியவனை தன் வாயாலேயே அனாதை என்று சொல்ல வைத்த விதியை எண்ணி கலங்கிட, அப்போது தான் வைஷு வந்து பேசியது.

உடனே அவள் நிஷாந்திற்கு போன் செய்து வரச் சொல்ல, அவன் தான் பழைய நினைவில் தயங்கி தயங்கி வந்தான். அவனைக் கண்டதும், கண் கலங்கியவர், “என் தங்கச்சி எங்கயாவது நல்லா இருப்பான்னு தான்ப்பா நினைச்சேன். ஆனால், இப்படி ஆகியிருக்கும்ன்னு எனக்குத் தெரியவே இல்ல.” என்று குரல் கமர பேசியவரை, பரிவாகப் பார்த்தவன்,

“மாமா, உங்களுக்கு இப்படிலாம் நடக்கும்னு தெரிஞ்சா பண்ணுனீங்க? திடுதிடுப்புன்னு ஒரு பையனை வீட்டுக்குக் கூட்டிட்டு வந்தா, எந்த அப்பா தான் பொறுமையா பேசுவாங்க. உங்க மேல எந்தத் தப்பும் இல்லை. சொல்லப் போனா அன்னைக்கு நடந்த அந்த ஒரு சம்பவம் தான் எங்க வாழ்க்கையைவே நல்லபடியா மாத்துச்சு” என்று சிறு சிரிப்புடன் சொல்ல, அவர் வைஷுவை பார்த்தார். இப்போது தானே இதையே அவளும் கூறினாள் என்று. அவள் வெட்க புன்னகையுடன் நிஷாந்தை பார்க்க, அவளின் அப்பா, அம்மா இருவரும் அவனின் மேல் அன்பு மழையை பொழிந்து விட்டனர்.

அவனைப் பின்புறம் அழைத்துச் சென்றவள், “அட்லாஸ்ட்! உன்னை வீட்டுக்குக் கூட்டிட்டு வந்துட்டேன் மாமா” என்று தலையைச் சாய்த்து சொல்ல, 

அவன் “ஹ்ம்ம் மாமான்ற வார்த்தை இப்போ தான் வாயில இருந்து வருதாக்கும்” என்றான் கேலியாக. சில நாட்களாக அவள் அந்த வார்த்தையைத் தவிர்த்ததை அவனும் உணர்ந்தே தான் இருந்தான்.

“நீ தான சொன்ன, நமக்குள்ள அந்த உறவு எப்போவோ முறிஞ்சுருச்சுன்னு. அதான் அந்த உறவைப் புதிப்பிச்சதுக்கு அப்பறம் கூப்பிடலாம்ன்னு நினைச்சேன்.” என்றதும், அவன் புன்னகைத்து விட்டு, “சரி உங்க அப்பா எப்படி இப்படி சேன்ஜ் ஆகிட்டாரு? என்ன சொன்ன அவர்கிட்ட?” எனக் கேட்க, அவள் “நான் எங்க பேசுனேன்” என்றவள் நடந்ததை கூற, அவனோ ‘இவன் கோபமா வந்து இவ்ளோ வேலை பார்த்துருக்கனா?’ என்று வியந்தான்.

“ஹே நீ பேசுடி” என்று தமியும், “நீ பேசு” என்று அம்முவும் ஒருவருக்கொருவர் மாறி மாறிப் பேசிக் கொண்டு, அம்முவின் அப்பா சுந்தர் முன்பு நிற்க, அவர் “என்னமா, என்ன பேசணும்?” எனக் கேட்டார்.

அம்மு “அது வந்து பா, ஹான்… தமி ஒரு பையனை லவ் பண்றாள் பா. ஆனால் அவள் வீட்டுல அந்தப் பையனுக்கு யாரும் இல்லைன்னு ஒத்துக்க மாட்றாங்க.” என்றிட, தமி ‘அடியேய்’ எனப் பல்லைக் கடித்தாள்.

அவர், “அந்தப் பையன் என்னம்மா பண்றான்?” எனக் கேட்க, “அவன் பெரிய டிடெக்டிவ் பா…” என்று அருணை பற்றிக் கூறிவிட்டு, “நீங்க தான்பா அவங்க அப்பாகிட்ட பேசணும். அம்மா, அப்பா இல்லைன்னாலும் நல்ல பையன்பா” என்று சர்டிபிகேட் கொடுக்க, அவர் சற்று சிந்தித்தார். சுந்தரும், தமியின் அப்பா மூர்த்தியும் நண்பர்கள் தான். இவர் சொன்னால் மூர்த்தி கேட்பார் என்றே தமியை கோர்த்து விட்டாள்.

அவர் யோசிப்பதை கண்டதும், அம்மு “என்னப்பா யோசிக்கிறீங்க?” எனக் கேட்க, அவர், “இல்லம்மா என்ன இருந்தாலும் எந்தக் குடும்ப பின்னணியும் தெரியாம எப்படி பேசுறது?” என்று யோசிக்க, அவள் “இப்போ அவள் இடத்துல நான் இருந்தா என்னப்பா பண்ணுவீங்க?” என்றாள்.

அவரோ சற்று தடுமாறி விட்டு, “என்னமா நீ? நான் என்னைக்கு உன் விருப்பத்துக்கு மாறாப் பேசியிருக்கேன். நமக்குப் பையனோட குணம் தான் முக்கியம். இவ்ளோ நல்ல வேலை, நல்ல பையன்னு சொல்ற? அப்போ நான் கண்டிப்பா ஒத்துப்பேன். ஆனால், மூர்த்தி கிட்ட என்ன பேசுறதுன்னு தான்…” என்று யோசிக்கும் போதே, அவள் பட்டென அவர் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து, “அப்போ, என் லவ்க்கும் ஓகே சொல்லிட்டீங்களாப்பா?” என்க, அவர் பேந்த பேந்த விழித்தார்.

அதன்பிறகே, அவள் காதலை பற்றிக் கூறியவளை அவர் முறைக்க, “பா இப்போதான் நீங்க சொன்னீங்க அவன் நல்ல பையனா இருந்தா போதும்ன்னு… இப்போ முறைக்கிறீங்க. ப்ளீஸ் பா… அவனை எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு. என்னை நல்லா பார்த்துப்பான். ப்ளீஸ்!” என்றிட, அவர் அவள் ஆடிய நாடகத்தில் சிரித்து விட்டு, “சரி நான் பையனைப் பத்தி விசாரிச்சுட்டு தான் முடிவெடுப்பேன்.” என்றதும், அவள் “தாராளமா விசாரிங்க பா” என்று அவன் வளர்ந்த ஆஸ்ரமம் பெயரையும் கூறினார்.  அவர் உடனே ஆட்களை வைத்து விசாரிக்க, திலகன் அவர்களுக்குக் கொடுத்த சர்டிபிகேட்டில், மனம் நிறைவாய் ஒப்புக் கொண்டார். அதன் பிறகே, அவர் மூர்த்தியிடம் பேசப் போக, தமியின் பெற்றோரோ அவளைத் தீயாக முறைத்தனர்.

சிறிது நேரம் சுந்தர் சொல்வதை காதில் வாங்கவே இல்லை. தமியோ என்ன சொல்வார்களோ, என மிரண்டிருக்க, அம்மு பட்டென அவள் காலைத் தட்டி விட்டதில், அவளின் அம்மா அப்பா காலில் சென்று விழுந்தவள், ‘அம்மு நாயே, தள்ளி விட்டுட்டியே டி’ என நொந்து கொண்டு,

“பா ட்ரூ லவ் பா… அதுவும் ஒரு நாள் காதல், பிரிச்சு விட்றாதப்பா…! ஓகே சொல்லிடு மம்மி ப்ளீஸ்” என்று கெஞ்சிட, அவர்களோ பதறி, “தமி என்ன பண்ற? எந்திரி!” என்க, அவள் “நீங்க சரின்னு சொல்லுங்க! அப்போதான் நான் எந்திரிப்பேன்” என்று கெஞ்சி கூத்தாடி இறுதியில் அவர்களும் ஒரு வழியாக ஒப்புக் கொண்டனர்.

இரு வீட்டினருக்குமே அருணையும் விஷ்வாவையும் பார்த்ததும் பிடித்து விட்டது. அவர்களுக்கு சட்டெனத் தோன்றிய குடும்ப சூழல் மனதில் ஏதோ ஒரு மகிழ்வை கொடுக்க, தேவாவை தான் என்ன செய்வது என்று புரியாமல் இருந்தனர்.

“விளக்குமாறு பிஞ்சிடும்! லவ்வு மண்ணாங்கட்டின்னு! அதுவும் அம்மா அப்பா இல்லாத பையனைக் கட்டி, உன் அத்தை அனுபவிக்கிறது பத்தாதா? அண்ணே ஜெயிலுக்கு போய் ஒரு நாள் ஆகலை. அதுக்குள்ள இவள் ஒரு பிரச்னையோடே வந்துருக்கா…” என்று பொரிந்தார் பர்வதம்.  அவளுக்கு இந்த நேரத்தில் இதனைப் பற்றிப் பேசுவது கஷ்டமாகத் தான் இருந்தது. அதிலும் கண்மணி வேறு தொய்ந்து போய் இருந்தார். ஆனால், தேவாவை விட்டுப் பிடித்தால் அவன் தப்பித்து விடுவானென நினைத்தே பேசினாள்.

அவளின் அம்மாவும், அப்பாவும் இதற்கு ஒப்புக் கொள்ளவே இல்லை. கணேசன் தான் பேத்தியின் மனதை அறிந்து, இருவரிடமும் பேசிப் பார்த்தார். ஆனால், அவர்கள் கேட்க வில்லை என்றதும் ஆராதனா உம்மென ஆகி விட்டாள்.

கண்ணம்மா தான் அருகில் வந்து, “ஏ புள்ள! எந்த வீட்டுல தான் உடனே காதலுக்கு ஒத்துப்பாக… என் அம்மாலாம் உன் தாத்தாவைக் கட்டிப்பேன்னு நான் ஒத்த கால்ல நின்னதுக்கு என்னை ஸ்டோர் ரூம்ல போட்டுப் பூட்டி வச்சுச்சுடுச்சு. 

அதுக்கு அப்பறமும், நான்   சும்மா  இல்லையே, உன்   தாத்தனை விடாப் புடியா கட்டிகிட்டேன். உனக்கு  அந்தப் பயல ரொம்ப புடிச்சிருக்கா?” எனக் கேட்க அவளுக்கு அழுகை தான் வந்தது.

அவரைக் கட்டிக் கொண்டு அழுதவள், “அவருக்குத் தான் என்னைப் புடிக்கல… ஆனால், எனக்கு அவன் வேணும் பாட்டி…” என்றிட, அவர்தான் திகைத்து விட்டார். அதன் பிறகே நடக்கும் பிரச்னையை உணர்ந்து கொண்ட கண்மணி, பாண்டியனிடம், “அண்ணா, அந்த ஆளு தப்பு பண்ணா எல்லாரும் அப்படி தான் இருப்பாங்களா? அவருக்காக அழுக கூட அவருக்குத் தகுதி இல்ல. என் மருமவளாவது நல்லாருக்கணும். எனக்காகக் கல்யாணத்துக்கு ஒத்துக்கோங்க” என்றிட, அந்த நிலையிலும் அவளுக்காக அவர் வாதிட்டதில், அவரின் அன்பை கண்டு நெகிழ்ந்தாள்.

 

பின், மறுவாரமே அனைவரும் பேசி, சென்னையியேயே திருமணம் வைக்க ஏற்பாடு செய்ய, தேவா தான் முரண்டு பிடித்தான். அவனை மதுரைக்கு கூட்டிக் கொண்டு வருவது இன்னும் கஷ்டமான காரியம் என்று, ஆரு சென்னையிலேயே திருமணம் வைக்கச் சொல்ல, அவளின் பெற்றோர் தான் அவளிடம் பேசவே இல்லை.

விஷ்வா கடைசி நிமிடம்வரை ‘நான் கண்டிப்பா விஷம் குடிப்பேன்… நீ ஒத்துக்கலைன்னா’ என்று விடாமல் அடம் பிடித்ததில் நொந்தவன், வேறு வழி இல்லாமல் அவளைத் திருமணம் செய்து கொண்டான்.  ஏற்கனவே, அவர்கள் நால்வரும் சென்னையில் பிடித்திருந்த வீட்டிலேயே அன்றைய இரவிற்கு ஏற்பாடு ஆக, தேவா எதிலுமே தலையிடவே இல்லை. யாரிடமும் பேசவும் இல்லை. 

அவனைக் கண்டு சற்று பயம் எழுந்தாலும், தன்னை சமன்படுத்திக் கொண்டு, அறைக்குச் சென்றவள், அங்கு அறையே கந்திர கோலமாக இருப்பதை கண்டு அதிர்ந்தாள்.

கோபத்தில், அந்த அறையில் இருந்த பொருட்களையும், செய்திருந்த பூ அலங்காரங்களையும் சுக்கு நூறாக ஆக்கி இருந்தான். அவன் மனநிலையை புரிந்து கொண்டவள், “தேவ்” என்றழைக்க, அவள் கழுத்தை பிடித்து இறுக்கியவன், “ஏதாவது பேசுன… நான் மனுஷனா இருக்க மாட்டேன்!” என்று அவளைப் பிடித்துத் தள்ளி விட்டவன், விருட்டென வெளியில் சென்றான். ‘நீ என்ன வேணா பண்ணிக்கோ! ஆனால், உன்னை மாத்தாம விடமாட்டேன்’ என்று தனக்குள் சபதம் எடுத்துக் கொண்டவள் அவன் சென்ற திசையையே வெறித்துக் கொண்டிருந்தாள்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்