Loading

22 – காற்றிலாடும் காதல்கள் 

 

அடுத்த நாள் காலை முதலே வேலையில் சேரப்போகும் ஆர்வத்தினில் மிருணாளினி சிரிப்போடுச் சுற்றிக் கொண்டிருக்க, கிருபாலினி  கொஞ்சம் பதற்றத்தோடுத் தயாராகித் தாயின் முகத்தைத் தயக்கத்தோடுப் பார்த்தபடி சமையலறை வாசலில் நின்றாள். 

ஜெயந்தி அவளைப் பார்த்துவிட்டு சமையலில் மும்முரமாகக் காட்டிக்கொண்டார். மகளின் மனதை அறிந்ததில் இருந்து மனதின் ஒரு ஓரமாக சஞ்சலம் இருந்துகொண்டே இருந்தது. அதை அவரால் முழுதாகப் புரிந்துக் கொள்ள முடியவில்லை ஆனாலும் அவரது உள்ளுணர்வு அபாயத்தை உணர்த்திக் கொண்டிருந்தது. 

அவர்களின் முகங்களை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த வெள்ளைச்சாமி, “அம்மாடி.. கொஞ்சம் சுக்கு காப்பி கொண்டு வாம்மா.” எனக் கிருபாலினியிடம் கூறினார். 

“எடுத்துட்டு போய் கொடுங்க புரொஃபசர் மேடம்.” என ஜெயந்தி அவள் அருகே வைத்துவிட்டு போக, அவள் கண்களில் நீர்குளம் கட்டி நிற்க, காபியை எடுத்து வந்து தாத்தாவிடம் கொடுத்துவிட்டு சுவரின் ஓரமாக தலைக்குனிந்து நின்றாள். 

“சுவரோரமா நின்னு தலைக்குனிஞ்சி நின்னா யார் செய்யறது சரி யார் செய்யறது தப்புன்னு எப்படி நாங்க தெரிஞ்சிக்கறது?”எனக் கேட்டபடி கனகவேல் அங்கே வந்தார். 

“பேச வேண்டியவங்க வாயை தொறந்து பேசினா தானே விஷயம் தெரியும். இப்படியே ஊமைப்படம் பாத்துட்டு இருந்தா எங்களுக்கு போர் அடிக்குதுல்ல. சீக்கிரம் படத்த முடிங்க. நான் மொத நாள் வேலைக்கு சீக்கிரம் போகணும்.” எனக் கூறியபடி மிருணாளினி அங்கே வந்துச் சாப்பாட்டு மேஜையில் அமர்ந்தாள். 

“என்ன சொல்றது? என் வளர்ப்பு என்கிட்ட உண்மையா இல்லையே. ஊமைக்குசும்பியாட்டம் இருந்துட்டு எவ்ளோ பெரிய விஷயத்தை மனசுக்குள்ள பொதச்சி வச்சிருக்கா. அவள நான் என்ன கொடுமையா செஞ்சேன்? என்கிட்ட ஒருவார்தை கூட சொல்லணும்ன்னு தோணல. அப்ப நான் யாராம்?” எனக் கேட்டுவிட்டு ஜெயந்தி கண்ணில் நீருடன் கிருபாலினியைப் பார்த்தார். 

இதற்கும் கிருபா தலையைத் தூக்காமல் இருக்க, மிருணாளினி அவளருகில் வந்து, “மேடம், இப்படியே நின்னா மணிதான் போகும். போய் உங்கம்மாவுக்கு உம்மா குடுத்து சமாதானம் பண்ணு.” என அவளை முன்னால் தள்ளிவிட்டாள். 

கிருபாலினி  ஜெயந்தி அருகே மெல்ல மெல்ல சென்று அவரைப் பின்னிருந்து அணைத்துக்கொண்டு, “சாரி மா.. எனக்கு பயமா இருந்தது.” எனக் கூறி அழுதாள். 

“நீ செய்யறது உனக்கு நல்லதா தோணலயா? தப்பு பண்ணா தானே பயப்படணும்.” எனக் கேட்டு அவளின் முகத்தைப் பார்த்தார். 

“அதில்ல மா… எனக்கு இத எப்படி…  எப்படி.. உங்ககிட்ட சொல்றதுன்னு தெரியலம்மா… அதான்.. மிரு.. மிரு வந்த அப்றம் உங்க எல்லார்கிட்டயும்  சொல்ல சொல்லலாம்ன்னு இருந்தேன்.” என ஒருவழியாக கூறிமுடித்தாள். 

“அடிப்பாவி.. உனக்கு வாய்ஸ் ஓவர் செய்ய தான் என்னை அவ்ளோ பாசமா கூப்பிட்டியா? நான் இப்பவே வெளிநடப்பு செய்யறேன்.” எனக் கூறி வேகமாக எழுந்து சமையலறையில் இருந்த இட்லி சாம்பார் கொண்டு வந்து தாத்தாவுக்கு போட்டுக் கொடுத்துவிட்டு தானும் அமர்ந்துச் சாப்பிட ஆரம்பித்தாள். 

“இங்க பாரு கிருபா. நீ உன் மனசுல இருக்கறத சொல்றதுக்கு கூட நீ பயப்படற அளவுக்கா நாங்க உன்ன வச்சிருக்கோம்? நீ தேர்ந்தெடுத்த ஆளு சரியானவன்னு உனக்கு நம்பிக்கை இருந்தா நீயே சொல்லி இருக்கலாம்ல? உன் மனச புரிஞ்சிக்காத பெத்தவங்களா நாங்க?” எனக் கேட்டுவிட்டு அவளைத் தீர்க்கமாகப் பார்த்தார் ஜெயந்தி. 

“அவரு ரொம்ப நல்லவரு ம்மா.. அப்பா அம்மா சின்ன வயசுல இறந்துட்டாங்க. சித்தப்பா தான் வளர்த்தார். அவரோட பொண்ணுக்கு போன மாசம் கல்யாணம் நடந்துச்சி. நான் கூட போயிட்டு வந்தேன். இதோ போட்டோ.” என அவள் மணமக்கள் அருகே நிற்க அவளருகில் மணீஷ் நின்றிருந்தான். 

போட்டோவில் பார்க்க இருவரும் நல்ல பொருத்தம் உள்ள ஜோடியாகத் தான் தெரிந்தனர். அவனது முகத்தில் போலித்தனம் இருப்பதாக யாருக்கும் தோன்றவில்லை. அப்படி முகத்தைப் பாங்காக வைத்திருந்தான்.

ஆனாலும் ஜெயந்தி மனதில் உறுத்தல் இருந்துகொண்டே இருந்தது. அதை அவரும் குடும்பத்தாரிடம் வெளிப்படுத்தினார். 

“மாமா.. எனக்கு என்னமோ மனசே சரியில்ல. நல்லா தீர விசாரிங்க. அதுவரைக்கும் நீ அந்த பையன தனியா போய் பாக்ககூடாது. மிரு நீ உன் ஆபீஸ் ஆளுங்கள வச்சி பையன விசாரிக்க பாரு.” எனக் கூறிவிட்டு தனது வேலையைப் பார்க்கச் சென்றுவிட்டார். 

“ஜெயந்தி பயம் நியாயமானது தான் கனகு. நம்ம தீர விசாரிக்கணும். மிருணா தைரியமான புள்ள ஆனா கிருபா ரொம்ப அப்புராணியா இருக்கு. அத யாரும் ஏமாத்திடகூடாதுன்னு தான் ஜெயந்தி யோசிக்குது. நமக்கும் அதே எண்ணம் இருக்கத்தான் செய்யுது. ரெண்டே மாச பழக்கம் தான் இவங்களுக்கு. அதுக்குள்ள கல்யாணம் வரைக்கும் போறது அவசரப்படற மாதிரி தான் தெரியுது. பொறுமையா பாப்போம். என்ன கிருபா நான் சொல்றது உனக்கு சம்மதமா?”என மகனிடம் ஆரம்பித்து பேத்தியிடம் முடித்தார். 

“நீங்க என்ன சொன்னாலும் சரி தாத்தா. ஆனா அவரு ரொம்ப நல்லவரு.” எனக் கூறிவிட்டுக் கல்லூரிக்குக் கிளம்பிவிட்டாள்.

மிருணாளினி அனைவரின் முகத்தையும் பார்த்து ஒரு முடிவுடன் தனது அலுவலகம் நோக்கிச் சென்றாள். அங்கே ஆதர்ஷ் அவளுக்காக ஒரு மேஜையைத் தயார் செய்துவைத்திருந்தான். அவள் வந்ததும் முறையாக செய்யவேண்டிய விஷயங்களை எல்லாம் செய்துவிட்டு, அவளின் வேலையைத் துவங்கினாள். 

கனகவேலும் மணீஷ் பற்றிய விசாரணையில் நாட்களைக் கடத்த, அவர்களின் நாடகப்படி அவன் கூறியபடியே அவர் விசாரித்த ஆட்களும் அவனை நல்லவன் எனக் கூறினர். அவன் தொடங்கவிருக்கும் நூலகம் பகுதியிலும், அங்கு வந்து செல்பவர்களிடமும் கூட விசாரிக்க, அவனைப் பற்றித் தவறாக ஒரு வார்த்தையும் ஒருவரின் வாயிலிருந்தும் வரவில்லை. அவரும் குடும்பத்தில் கலந்துப் பேச ஒருமனதாக ஒரு மாதம் கழித்துப் பேசலாம் என்று முடிவெடுத்தனர். 

சில வாரங்கள் கடந்த நிலையிலும், விஜயராகவனும், ஆதர்ஷும் அவளுக்கு எந்தவிதமான சந்தேகமும் வராத அளவிற்கு வேலைகளைப் பிரித்துக் கொடுத்து விளக்கங்களை மட்டும் வாங்கிக்கொண்டிருந்தனர். 

அரசாங்க ஆணையின் கீழ் வந்த ஒரு இடத்தைப் பற்றிய குறிப்பு அவளின் மேஜைக்கு வந்தது. அதன் காலத்தைக் கணக்கிடத் தொடங்கும் நேரம், ஆதர்ஷ் அவளிடம் வந்தான், உடன் உமேஷும் கடுகடுவென முகத்தை வைத்துக்கொண்டு வந்தான். 

“மிருணாளினி. என்ன செஞ்சி வச்சிருக்கீங்க?” என உமேஷ் கோபமாகக் கேட்டான் ஒரு கோப்பை அவளின் முன் போட்டுவிட்டு. 

“என்னாச்சி உமேஷ்?”என அவளும் அந்த கோப்பினைத் திறந்துப் பார்த்தபடிக் கேட்டாள். 

“இந்த சுவடியோட மீதி விளக்கம் எங்க?”

“நீங்க குடுத்ததுல இருந்தத நான் டிகோட் பண்ணி குடுத்துட்டேன் உமேஷ்… மிச்சம் எங்கன்னு என்னை கேட்டா?”

“புதுசா வந்தவங்கள நம்பினதுக்கு என்ன நடந்துச்சி பாத்தல்ல ஆதர்ஷ்?”, உமேஷ் கேலிப் புன்னகையோடுக் கேட்டான். 

“என்ன நடந்துச்சி ஆதர்ஷ்?” மிருணாளினி புரியாமல் கேட்டாள். 

“இந்த சுவடி டிகோட் பண்ண குடுத்தப்ப எத்தன ஓலை இருந்தது மிருணாளினி?”ஆதர்ஷ் அவமானப்பட்ட உணர்வோடு கேட்டான். 

“ஒரு நிமிஷம் நோட் பாத்து சொல்றேன்.”  என மிருணாளினி கூறிவிட்டு அதற்கென இருந்த பதிவு நோட்டை சரிப்பார்த்து 8 ஓலை இருந்ததாகக் கூறினாள். 

“இதுல நீங்க 6 ஓலைக்கு தான் விளக்கம் குடுத்திருக்கீங்க. கடைசி முக்கியமான ரெண்டு ஓலைக்கு குடுக்கல.” எனப் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டுக் கூறினான். 

“இல்ல ஆதர்ஷ்.. நான் ஓலை வந்திருந்தா கண்டிப்பா குடுத்திருப்பேனே. மிஸ் ஆக சான்ஸ் இல்ல.” என அவசரமாகத் தன்னுடைய மேஜைக் கோப்புகள் அனைத்திலும் தேடினாள். ஆனால் எதிலும் அந்த இரண்டு ஓலைகளைப் பற்றியக் குறிப்புக் கிடைக்கவில்லை. தனது சொந்த டைரியிலும் அதனைப் பற்றிய சிறு வார்த்தையும் எழுதவில்லை. எப்படி விடுபட்டிருக்க முடியும் என்று அவள் தீவிரமாகச் சிந்தித்தாள். இந்த ஓலைகளை டிகோட் செய்யும் போது தான் கிருபாலினியின் காதலனைப் பற்றி விசாரிக்கச் செல்லவேண்டும் எனத் தந்தை அங்கே வந்திருந்தார். ஒருவேளை அந்தச் சிந்தனையில் அப்படியே வேலையை முடித்துவிட்டதாக எண்ணியிருப்போமோ என யோசித்தாள். இல்லை அப்படி வேலையை முடிக்காமல் செல்லும் பழக்கமும் அவளுக்கு இல்லை. 6 ஓலைகள் பற்றிய குறிப்பு எல்லா நோட்டிலும் எழுதி இருக்கிறாள் கடைசி இரண்டு ஓலைகளை பார்க்காமல் விட்டிருந்தால் தான் இப்படி நடந்திருக்கக்கூடும் என்று புரிந்தது. 

“உங்கள ஓவரா புகழறப்பவே தெரியும் இப்படி தான் அரைகுறை வேலை பாப்பீங்கன்னு. சார்கிட்ட நீங்களே பேசிக்கோங்க.” எனக் கூறிவிட்டு உமேஷ் சென்றுவிட்டான். 

“என்ன மிருணா இப்படி செஞ்சிட்டீங்க? உங்க மேல இருக்க நம்பிக்கைல வந்து சேர்ந்த கொஞ்ச நாள்ல கரண்ட்ல வேலை பண்ணப் போற ஓலை குடுத்தேன். இப்ப நான் எப்படி சார் முகத்த பாப்பேன்?” எனச் சோகமாகக் கூறித் தனது இருக்கைக்குச் சென்றான். 

“ஆதர்ஷ்… நிஜமா எப்படி மிஸ் ஆச்சின்னு எனக்கும் புரியல. அந்த ஓலை குடுங்க நான் நாளைக்கே முழுசா டிகோட் செஞ்சி தரேன்.” என அவன் பின்னால் சென்றுக்கேட்டாள். 

“அது முடியாது. ஓலை எல்லாம் சரஸ்வதி மஹால் போயிருச்சு. சார்கிட்ட சொல்லி கேக்கவும் முடியாது டெல்லி போயிட்டாரு. வர்ற 10 நாள் ஆகும். அதுக்குள்ள அந்த மலை எதுன்னு கண்டுபிடிக்கணும். சார் வந்ததும் வேலை ஆரம்பிக்கணும்.”எனக் கூறிவிட்டு தலையைத் தொங்கப்போட்டுக் கொண்டுச் சென்றான். 

தன்மேல் நம்பிக்கை வைத்தது  பொய்த்துப் போய்விடக்கூடாதென்ற வேகம் உள்ளுக்குள் எழ, ஒரு யோசனையுடன் அவனை மீண்டும் தேடிச் சென்றாள். அப்போது உமேஷ் ஆதர்ஷைக் கேலியாகப் பேசுவது காதில் விழுந்ததும், ரோஷம் கொண்டவள் அவசரத்தில் தானே சரஸ்வதி மஹாலில் இருந்து அந்த ஓலையை எடுத்து டிகோட் செய்கிறேன் என சவால் விட்டுவிட்டு வந்தாள். 

கிருபாலினி  காதலனைப் பற்றி விசாரிக்க ஆதர்ஷிடம் தான் அவள் சொல்லி வைத்திருந்ததால்,“மிருணா.. நாம மணீஷ்கிட்ட ஹெல்ப் கேக்கலாம். அவர் நெனைச்சா அந்த ஓலை எடுக்க முடியும். நம்ம போடோகாப்பி எடுத்துட்டு குடுத்தரலாம்.” எனக் கூற அவளும் சரியென கூற அங்கே ஆரம்பமானது மிருணாவின் புதைக்குழி. 

கிருபாலினியிடம் பேசி மணீஷிடம் உதவி என ஆரம்பித்து அவனின் சம்மதம் கிடைத்ததும், உமேஷ், ஆதர்ஷ், மிருணா, கிருபாலினி  நால்வரும் தஞ்சை நோக்கிப் புறப்பட்டனர்.  

ஓலைகள் எல்லாம் மூலிகை பூச்சுக்காகப் பாதுகாப்பிடத்தை விட்டு வெளியில் வந்து செல்லும் ஒரு தருணத்தில், மணீஷ் மிருணா கூறிய அந்த ஓலைக் கட்டை மட்டும் எடுத்து அவளிடம் கொடுத்துவிட்டு, மாலை மீண்டும் ஓலைகளைச் சரிபார்த்து உள்ளே வைக்கும் போது அதையும் சேர்த்து வைத்து கணக்கில் கொண்டு வந்தான். 

அதனைக் குறிப்பெடுத்துக் கொண்ட மிருணாளினி ஒரே நாளில் மொத்த இடத்தினையும் கண்டு அங்கு என்ன மறைந்திருக்கிறது என்பது வரை விளக்கமாகக் கூறிவிட்டாள். 

“நாளைக்கே அங்க போலாம்.” ஆதர்ஷ் கூறவும் மற்றவர்களும் நிஜமான ஒரு புதையல் தேடலுக்குக் கிளம்பினர். 

 

மிருணாளினி கூறியதைப் போல அந்த மலைக்கு வந்து மேலே ஏறத் தொடங்கிய பின் அவர்களை மேலும் சிலர் பின்தொடர அந்த மலையின் பாறை பிளவில் விஜயராகவன் நின்றிருந்தார். 

“என்ன ஆதர்ஷ், சார் வர 10 நாள் ஆகும்ன்னு சொன்னீங்க. இங்க இருக்காரு. சுற்றி இருப்பவர்களின் மேல் ஐயம் தோன்ற, கிருபாலினி  அருகே செல்ல முனையும் போது, கிருபாவை மணீஷ் தன் பக்கம் இழுத்து வைத்துக்கொண்டுக் கோணலாகச் சிரித்தான். 

“சும்மா சொல்லக்கூடாது மிருணா. உன் தமிழ் ஞானம் அபாரம்தான். நாங்க 3 மாசமா முயற்சி பண்ணத நீ இவ்ளோ ஷார்ட் டைம்ல முடிப்பன்னு நெனைக்கல. அழகோட மூளையும் உனக்கு இருக்கு.” எனப் பேசிவிட்டு ஆதர்ஷைப் பார்க்க அவன் அவளைக் காவலில் வைத்துவிட்டு பாறைகளின் இடுக்கில் புகுந்து உலோகத்தை அறியும் கருவியைக் கொண்டுப் புதையலைத் தேடத் தொடங்க, பத்து நிமிடத்தில் அவர்கள் தேடல் முடிந்து பாறையை சத்தமில்லாமல் அதிர்வை கொடுத்து உடைத்து உள்ளே செல்ல, பல கோடிகள் பெறுமானமுள்ள தங்க நாணையங்களோடு சில சுவடிகளும் அவர்களுக்குக் கிடைத்தது. 

“வேணாம் சார்… இது ரொம்ப தப்பு… இத நான் அனுமதிக்க முடியாது.” என மிருணாளினி சத்தம் போடவும் அவளுக்கு போதை மருந்தைச் செழுத்தி மயக்கத்தில் ஆழ்த்தினர். 

மிருணாளினி கையும் வாயும் கட்டப்பட்ட நிலையில் மயங்கிக் கிடக்க, கிருபாலினி  மணீஷின் கைகள் சென்ற இடங்களில் வெந்து மடிந்துக்கொண்டிருந்தாள். 

“வேணாம் மணீஷ்.. என்னை விட்டுறு.. இது தப்பு.. நான் உன்ன காதலிக்கறேன்..” எனக் கூறி அழுதாள்.  

“நானும் காதலிக்கறேன் கிருபா.. இந்த அழகான உடம்ப மட்டும்..” எனக் கூறி மறைவான இடத்திற்கு இழுத்துச் சென்றான்.

அவளின் கெஞ்சல்கள் எல்லாம் அவன் காதில் விழவில்லை, மிருணாவைக் காட்டி பயமுறுத்தி அவளைப் வன்புணர்வு செய்ய முயன்றவனிடம் இருந்து தப்பித்துப் பாறையின் சரிவில் ஓடும்போது கால் இடறி, பள்ளத்தில் விழும்போதே அவளது உயிர் பிரிந்திருந்தது. அவளது துப்பட்டாவை  தனது காலில் கட்டிருந்த மணீஷும் சடுதியில் பள்ளத்தில் விழுந்தான்.  

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
9
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்