Loading

குளிர்ந்த நீர் முகத்தில் பட்டதும் பதறி எழுந்த இதயாம்ரிதா எதிரில் நிற்பவனைத் தீயாக முறைத்தாள்.

சத்ய யுகாத்ரனோ இகழ்ச்சியுடன், “என் கேரியர் போச்சேன்னு ரொம்ப ஃபீல் பண்ணிட்டு இருந்தேன். ஆனா நல்லவேளை ஒரு குடிகாரிக்கிட்ட இருந்து காப்பாத்தப்பட்டுருக்கேன்னு நினைக்கும்போது மனசு நிம்மதியா இருக்கு. கடவுள் ஒரு விஷயத்தை நமக்குத் தராம போனா, அதுல இருக்குற நல்லதை புருஞ்சுக்கணும்னு நல்லா புரிஞ்சுக்கிட்டேன்” என்று ஏகத்துக்கும் அவளைக் குத்திக் கிழித்தான்.

அவனை மறுத்துப் பேசாமல் காட்டத்துடன் எரித்தவள், நேரத்தைப் பார்த்து அதிர்ந்தாள்.

“காட்! நைன் தர்ட்டிக்கு மினிஸ்டர் கூட மீட்டிங் இருக்கு” எனப் புலம்பியபடி அவசரமாக குளியறைக்குள் நுழைய, அவள் சென்ற திசையை சில நொடிகள் வெறித்தவன் அங்கிருந்து நகன்றான்.

சூடான நீர் தலையில் கொட்டியும் கூட, அவளுக்குத் தலைவலி அடங்கியபாடில்லை.

‘குடிகாரியாமே!’ அவனை மறக்க, அவனது எண்ணங்கள் புதைந்திருக்கும் தன்னை மறக்க, பெண்ணின் இலக்கணங்களை எல்லாம் உடைத்தெறிந்து, நடுவீதியில் குடிபோதையில் கிடந்ததெல்லாம் இவனுக்கெங்கு தெரியப்போகிறது!

பெண் பித்தனென்று அறிந்தும், அவனது நினைவுகளைக் கொல்ல இயலாமல் தன்னையே மழுங்கடிக்கும் இக்காதலை அழிக்க இயலாமல் தன்னையே சிறிது சிறிதாய் அழித்துக்கொள்வதெல்லாம் இவனறிந்தும் பிரயோஜனமில்லையே! தன்னைப் பைத்தியக்காரி என்று முத்திரைக் குத்தி விட்டுச் செல்வான்… அவ்வளவே!

ஷவரின் வழியே வழிந்த நீருக்கு அடியில் கண்மூடி தவமிருந்தவளின் மூடிய கண்ணிமைக்குள் காட்சியானான் அவளது ப்ரொஃபி.

————

சுற்றுலா முடிந்து சோகமே உருவாக கன்னத்தில் கை வைத்து அமர்ந்திருந்தாள் இதயாம்ரிதா.

அவளைக் கண்டும் காணாதவனாக அவளுக்கு பக்கவாட்டு இருக்கையில் அமர்ந்து கொண்ட சத்யா, அமைதியாய் ஒரு புத்தகத்தில் மூழ்கலானான்.

பேருந்தில் இருப்பவர்களின் சலசலப்புகள் சிறிது நேரத்தில் அடங்கி உறங்கி விட்டனர்.

அப்போதும் அவன் புத்தகத்தை மூடி வைத்தானில்லை.

அதில் கடுப்பான இதயாம்ரிதா, அந்தப் புத்தகத்தை வெடுக்கென பிடுங்கி, “பஸ்ல கூட படிக்கணுமா சார்… உங்க கடமை உணர்ச்சியைக் கண்டு எனக்கு கண் கலங்குது” என கலாய்த்தாள்.

“ஓங்கி விட்டேன் உண்மையாவே கலங்கும்” என்றவனின் அதட்டலை எல்லாம் அசட்டை செய்தவளாக, “ஒருத்தி சோகமா வர்றேனே என்ன ஏதுன்னு கேக்குறீங்களா…” என உதட்டைப் பிதுக்கினாள்.

“என்ன? ஏது?” கடமைக்காக கேட்டவனை முறைத்தவள்,

“எல்லாம் உங்களை கரெக்ட் பண்ண முடியலைன்ற சோகம் தான்” என்றதும் அவன் பதற்றமாக சுற்றி முற்றி பார்த்தான்.

“பதறாதீங்க. எல்லாரும் தூங்கிட்டாங்க… சரி சொல்லுங்க. நான் என்ன செஞ்சா நீங்க கரெக்ட் ஆவீங்க?” என்றவளிடம் பேச்சை வளர்க்காமல் காதில் ஹெட் போனை மாட்ட முயல, அவனைத் தடுத்தவள், “இது ஒன்னும் காலேஜ் இல்ல ப்ரொஃபி. இங்க காதல் பேசலாம் தப்பில்ல” என்று அவன் மட்டும் கேட்கும் குரலில் கூறியதில், “நடக்காத விஷயத்தைப் பத்தி பேசுறது வேஸ்ட்” என்றான்.

“ஏன் நான் லவ் பீஸ் இல்லையா? உங்களுக்கு வேணும்னா ரொமான்ஸ் வராம இருக்கலாம். உங்களுக்கும் சேர்த்து நான் நம்ம லைஃபை ரொமாண்ட்டிக்கா கொண்டு போறேன் ப்ரொஃபி” என்றதில், பெருமூச்சை வெளியிட்டவன் ஜன்னல் வழியே வெளியில் பார்வையிட்டான்.

அழகிய வெண்மேகங்கள் இரு மலைகளுக்கு நடுவில் வெட்கம் கொண்டு மறைந்துப் பின் அதனுடன் உறவாடுவதை போலொரு கற்பனை அவனுக்கு.

அவளுக்கும் அதனைச் சுட்டிக் காட்டியவன், “இங்க இருந்து பாக்கும்போது அந்த மேகமும் மலையும் அழகா இருக்குல்ல” என்றதும் அவளுக்கு குதூகலமாக விட்டது.

முதன்முறை கோபம் விடுத்து ரசனையாகப் பேசுகிறானே… ‘ஐயோ சாமி லவ்வாங்கி பேசுது’ என கோவைசரளாவின் பாணியில் தனக்குள் கிண்டலடித்துக் கொண்டவள், “ஆமா செம்மையா இருக்குல்ல…” என்றாள் அவளும் ரசித்து.

“இதே மேகத்தையும் மலையையும் நீ பக்கத்துல போய் பாரேன். ரெண்டும் தனி தனியா இருக்கும், ஒண்ணுக்கொண்ணு சம்பந்தமே இல்லாதமாதிரி. எதுவா இருந்தாலும் தூரத்துல பார்க்கும்போது அழகா ரசனையா தான் இருக்கும் இதயா. பக்கத்துல இருந்து பாக்கும்போது தான், அது வெறும் கவர்ச்சின்னு புரியும்…” என்றதில், காதை குடைந்து கொண்டாள்.

“இங்க என்ன சத்குரு சொற்பொழிவா நடக்குது. காதல் டாக் கேட்டா, தத்துவ டாக் பண்ணிட்டு இருக்கீங்க” என்றவளை தலை சாய்த்து முறைத்திட, அதுவும் அவளுக்கு ரசனையாய்!

“சரி நீங்க சொல்ற மாதிரி பக்கத்துல போய் பார்த்தா கவர்ச்சியாவே இருக்கட்டுமே. அதுக்கு முதல்ல பக்கத்துல பாக்கணுமே!” என்றாள் குறும்பு நகையுடன்.

“வாட்?” அவன் மெல்ல அதிர,

“ஐ மீன், பழகிப் பார்க்கணும்ல ப்ரொஃபி. அப்ப தான தெரியும்” எனக் கண் சிமிட்டினாள்.

“உங்கிட்ட பேசுறது வேஸ்ட்” என்றவன் வேறு இடம் மாறி அமர்ந்து கொள்ள, “இவரை கரெக்ட் பண்றதுக்குள்ள எனக்கு வயசு ஆகிடும்போல” என நொந்து கொண்டாள்.

இருந்தும் அவனைப் பின் தொடர்வதை விட்டு விடவில்லை.

அடுத்த மூன்று மாதங்களும் ‘ப்ரொஃபி ப்ரொஃபி’ என அவனைக் காணும் நேரமெல்லாம் கண்ணில் அம்பை விட்டு அவன் நெஞ்சை அசையச் செய்திருந்தாள்.

ஆனாலும் சிறு துளி புன்னகை கூட அவனிடம் பஞ்சமாகி இருந்தது.

“அவன் உன்னை மதிக்கவே மாட்டுறான்ல… அப்பறம் ஏண்டி அவன் பின்னாடி சுத்துற” விஷால் பொறுமையிழந்தான்.

“அவரு மதிக்காம போறது தான்டா. இன்னும் இன்டரஸ்டிங்கா இருக்கு. கெத்தா இருக்காருல!” என்றவளை கடுப்புடன் ஏறிட்டான்.

அந்நேரம் அவர்களிடம் ஓடி வந்த யாமினி, “உன் இன்டரஸ்ட் எல்லாம் இன்னும் ஒரு வாரத்துக்கு தான்…” என்றாள் நக்கலாக.

“ஏன்?” இதயாம்ரிதா குழப்பமாய் கேட்க,

“உன் பிரொஃபி வேலையை விட்டுப் போக போறானாம்…” என்றதும் திகைத்தாள்.

“எதுக்காம்?”

“அவன் எதுக்கு போனா என்ன… போக போறான் அவ்ளோதான் நிம்மதிடா சாமி…” என்றவளின் கூற்றை கவனிக்கத் தவறியவள், தன்னைக் கிண்டல் செய்வதாக எண்ணிக்கொண்டு,

“அப்பாடா… அவன் அப்படி காலேஜ விட்டுப் போனா நானும் டிஸ்கன்டின்யூ பண்ணிட்டு, அவன் கூட செட்டில் ஆகிடுவேன். இனிமே இந்த ப்ரொஃபஸர் ஸ்டூடண்ட் லவ் பண்ண கூடாதுன்னு அவனும் உருட்ட மாட்டான்ல” எனக் குதூகலித்தவளைக் கண்டு இருவரும் மெல்ல அதிர்ந்தனர்.

அவளோ நேராக ஸ்டாஃப் ரூம் நோக்கிச் சென்றாள்.

அங்கு தனது இருக்கையில் அமர்ந்து குறிப்பெடுத்துக் கொண்டிருந்த சத்ய யுகாத்ரனுக்கு தெரியும் எப்படியும் விஷயமறிந்து அவள் வருவாளென்று!

அதனாலேயே நிமிர்ந்து பாராமல் அமர்ந்திருந்தான்.

“பரவாயில்ல… நிமிர்ந்து பாக்காமலே நான் தான் வர்றேன்னு தெரிஞ்சுக்குற அளவு நமக்குள்ள அன்னியோன்யம் இருக்குல்ல!” எனக் குறும்பு மின்னக் கூறியதில், அவனிதழ்கள் புன்னகைக்கத் துடித்தது.

அதை அழகாய் மறைத்துக்கொண்டவன், “யார் வந்தாலும் நான் நிமிரப்போறது இல்ல. ஐ ஆம் பிசி” என்றான் புத்தகத்தின் பக்கத்தைத் திருப்பியபடி.

“நீங்க என்னைக்கு தான் ஃப்ரீயா இருந்துருக்கீங்க. சரி, இப்ப எதுக்கு நீங்க வேலையை விட்டுப் போறீங்க?” எனக் கேட்டாள் உரிமையாக.

“எனக்கு எக்ஸாம்ஸ் இருக்கு…”

“அது ஜனவரில தான. இன்னும் ஒரு மாசம் இருக்கே.”

“நான் ப்ரிப்பேர் பண்ணணும்!”

“சரி தான். ஆனாலும் இங்க இருந்தே ப்ரிப்பேர் பண்ணிருக்கலாம்…” என சோகமான குரலில் கூற, அவன் பதில் அளிக்கவில்லை.

“நான் சோகமா இருக்கேன்…” உர்ரென்ற முகத்துடன் அவள் கூற, கடினப்பட்டு பார்வையைப் புத்தகத்தில் பதித்தவன்,

“வெளில போய் எவ்ளோ சோகமா வேணாலும் இரு. உன் சோகம் உன் உரிமை” என்றான் கீழுதட்டைக் கடித்தபடி.

“திஸ் இஸ் டூ மச் ப்ரொஃபி. இதுக்குலாம் உங்களை செம்மயா செய்வேன்…” என விரல் நீட்டி எச்சரிக்க, “ஆல் தி பெஸ்ட்” என்றான்.

“ப்ச் ப்ரொஃபி… ஐ லவ் யூ. வொய் டோன்ட் யூ அண்டர்ஸ்டாண்ட் மீ!”

“இதயா!”

அவன் கண்டனத்துடன் நிமிர, “ப்ளீஸ் ப்ரொஃபி… கொஞ்சம் கன்சிடர் பண்ணுங்களேன்” என கையைக் கட்டிக்கொண்டு நின்றவளை ஒரு நொடி கண்ணில் நிரப்பியவன், “சரி ட்ரை பண்றேன்” என்றான் நாற்காலியில் சாய்ந்தபடி.

அதில் கண்கள் மின்னத் துள்ளிக் குதித்தவள் “வாவ் அப்போ அவுட்டிங் போலாமா?” எனக் கேட்டாள் வேகமாக.

“இரு இரு… வெள்ளிக்கிழமை எனக்கு லாஸ்ட் ஒர்க்கிங் டே. அன்னைக்கு ஈவ்னிங் காலேஜ் முடிஞ்சதும் பீச்ல மீட் பண்ணலாம். ஃபர்தர் டிஸ்கஷன் அங்க பண்ணிக்கலாம்… இப்போ…” என்று வாசலைக் கை காட்ட,

“இது போதும் எனக்கு இது போதுமே! வேறென்ன வேண்டும் இது போதுமே…” என்று அவன் முன்னே பாடிக்காட்டியவள்,
“வெயிட்டிங் ஃபார் வெள்ளிக்கிழமை… மங்கலம் பொங்க…” என்று மீண்டும் பாடியபடி வெளியில் சென்றவளைக் கண்டு அடக்கி வைத்திருந்த புன்னகையை வெளிக்காட்டினான் சத்ய யுகாத்ரன்.

——

“ச்சே இந்த வாரம் ஏன்டா இவ்ளோ ஸ்லோவா போகுது. என் ஆளோட ஒரு அவுட்டிங் போகணும்னு பூமியை வேகமா சுத்த வைக்க எதுவும் மெஷின் கண்டுபிடிக்கலையா” என்று எரிச்சல் கொண்டாள் இதயாம்ரிதா.

“நீ வேணும்னா ஒரு மெஷின் கண்டுபிடியேன்” பத்மபிரியா நக்கலடிக்க, “கண்டுபிடிக்கத்தான் போறேன். இந்த இடைப்பட்ட நாளை எல்லாம் ஸ்கிப் பண்ணிட்டு, டைரக்டா ப்ரொஃபி கூட ‘மேரேஜ் டே’க்கு டிராவல் ஆகிடனும்” என்றாள் கண்ணில் கனவு மின்ன.

மற்றவர்களின் அமைதி அப்போதும் அவளை உறுத்தவில்லை.

அந்நேரம் ராம்குமார் அழைத்ததில், அவரைப் பார்க்கச் சென்று விட்டாள்.

அலுவலகத்திற்கு சென்ற நேரம், அவரைப் பார்க்க ரிசப்ஷனில் காத்திருக்க விட்டார் அவரது பி. ஏ.

சிறிது நேரத்தில், அவரது அறையில் இருந்து ஒரு மாடல் வெளியேற, அவள் எந்த காரணத்திற்காக வந்தாளென்று அறிந்து கொள்ள இயலாத அளவு அவளொன்றும் முட்டாள் இல்லையே.

லேசாய் முகம் சுருங்கினாலும், தந்தையிடம் அதனைக் காட்டிக்கொள்ளவில்லை.

அவர் வேலை விஷயமாக, அந்த வார இறுதியில் யாரோ ஒரு முக்கிய புள்ளியிடம் விவாதிக்கப் போவதாகவும், அவளையும் உடன் வர சொல்லியதில் அதை பற்றி பேசி விட்டு கல்லூரிக்குத் திரும்பினாள்.

அங்கோ, நண்பர்களைக் காணவில்லை.

வகுப்பறை நண்பர்களிடம் கேட்க, “ஹே அம்ரி உன் ப்ரெண்ட்ஸ சத்யா சார் பிரின்சி ரூம்க்கு கூட்டிட்டுப் போய்ட்டாரு” என்று ஒரு பெண் சொன்னதும், அவசரமாக அங்கு விரைந்தாள்.

அங்கோ ப்ரின்சிபலின் முன்பு ஐவரும் நிற்க சத்யா அவர்களை முறைத்திருந்தான்.

“எக்ஸ்கியூஸ்மீ சார்…” என்று உள்ளே வந்த பெண்ணவள், எதிரில் நின்றவனை ஒரு முறை முறைத்து விட்டு விஷாலை இடித்தாள் “என்ன ஆச்சு” என்று.

“தேவை இல்லாம இவர் எங்க மேல பழி போட்டு இங்க கூட்டிட்டு வந்துட்டாரு” என்றான் ஷ்யாம்.

“வாட்? நான் பழி போட்டேனா? க்ளாஸ்ல உக்காந்து நீங்க ட்ரிங்க் பண்ணல? அண்ட் லிமிட் தாண்டி பேசல?” என்று கர்ஜித்தான்.

“என்ன லிமிட் தாண்டி பேசுனோம்? நாங்க செய்யாத தப்பை செஞ்சோம்னு சொன்னா வேற எப்படி பேசுறது” என்று விஷாலும் சீறினான்.

பிரின்சி தான் அவர்களை அதட்டினார்.

“இதோ பாருங்க இங்க இப்படியெல்லாம் கத்தக்கூடாது. காரணம் இல்லாம இப்படி எல்லாம் உங்களை வந்து நிக்க வைக்கணும்னு சத்யாவுக்கு என்ன அவசியம் இருக்கு…”

“சார் வேணும்னா என் பேக்ல செக் பண்ணுங்க. எங்ககிட்ட பாட்டில் இருக்கான்னு…” நிலோஃபர் எரிச்சலாய் கூறியதில்,

“சார் இவங்க வச்சுருந்தாங்க! க்ளாஸ்ல இண்டீசண்டா பிஹேவ் பண்ணுனாங்க” என்று சத்யா மொழிந்தான்.

“எங்க க்ளாஸ் ஸ்டூடண்ட்ஸ் எங்க மேல கம்பளைண்ட் பண்ணுனாங்களா?” இது யாமினி.

சத்யா “அந்த டைம்ல க்ளாஸ்ல யாரும் இல்ல…” என்றதும், “சோ இவரா தான் எங்கமேல பழி போடுறாரு சார்” என்று வாதாடினர்.

பத்மபிரியா பேந்த பேந்த விழித்துக் கொண்டு நின்றதில், அவளைப் பார்த்தான்.

“நீ சொல்லு பத்மபிரியா… க்ளாஸ்ல என்ன நடந்துச்சுன்னு” சத்யா கேட்டதும் வெலவெலத்தவள் “ஒ ஒன்னும் நடக்கலையே” என்று தடுமாற அவன் முறைத்து வைத்தான்.

நண்பர்களை கேள்வி கேட்பது இதயாம்ரிதாவிற்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை.

அவளே ப்ரின்சியிடம், “சார்… என் ப்ரெண்ட்ஸ் கண்டிப்பா கிளாசுக்கு லிக்கர் கொண்டு வந்துருக்க மாட்டாங்க. ஏதோ ஒரு மிஸ்அண்டர்ஸ்டாண்டிங்” என்றதும் சத்யா “உன் ப்ரெண்ட்ஸ் குடிக்கவே மாட்டாங்களா?” என்று சீறினான்.

அவளோ அவனை அமைதியாய் எதிர்த்து முதல்வரைப் பார்த்தே, “சார் என் ப்ரெண்ட்ஸ் குடிப்பாங்களா இல்லையான்றது அவங்க பெர்சனல். இங்க இப்ப, அவங்க குடிச்சுருக்காங்களா, லிக்கர் யூஸ் பண்ணிருக்காங்களான்றது தான் பிரச்சினை. இந்த விஷயம் இதுக்கு மேல சீரியஸா போச்சுன்னா, நானும் இதுக்கு மேல போக வேண்டியது இருக்கும்…” என்று மறைமுகமாக மிரட்டல் விடுத்தாள்.

“எதுவரைக்கும் மேடம் போவீங்க?” கண்ணைச் சுருக்கி சத்யா கேட்க,

“எதுவரைக்கு போக முடியுமோ அதுவரைக்கும்!” அமர்த்தலாய் பேசியவளைக் கண்டு முதல்வருக்கு எரிச்சல் சூழ்ந்தாலும், இவர்கள் படித்து முடிக்கும்வரையில் பிரச்சினை எழக்கூடாது என்ற எண்ணத்தில் “சத்யா இந்தப் பிரச்சினையை விடு. இனி இந்த மாதிரி நடந்தா பாத்துக்கலாம்” என்று விட்டார்.

விஷாலிடம் ஒரு வெற்றிப்புன்னகை. சத்யாவை நக்கலாய் பார்த்துக்கொண்டே இதயாம்ரிதாவின் மீது கையைப் போட்டுக்கொண்டு வெளியேற, சத்ய யுகாத்ரனுக்கு கோபம் பீறிட்டு எழுந்தது.

தங்களுக்காக சத்யாவை எதிர்த்தது ஒன்றே போதும் என்ற நிம்மதி அவர்களுக்கு. பத்மபிரியாவிற்கு மெல்லவும் விழுங்கவும் இயலாத நிலை.

“என் ஆளோட என்னடா பிரச்சினை உங்களுக்கு?” என்றவளின் கேள்வியில் விஷாலின் மகிழ்வு எல்லாம் புஸ்ஸென்று ஆனது.

“அவன் எங்களை சீப்பா நடத்துறான். இப்பவும் அவன் உனக்கு ஆளா?” யாமினி எரிச்சலாக கேட்க,

“அவன் என்னையே அப்படி தான் நடத்துறான். அவரோட வேலை அப்படி ஸ்ட்ரிக்ட்டா இருக்கணும்னு… என்மேல செம்ம காண்டுல இருப்பாரு. சரி நான் சரி பண்ணிக்கிறேன்…” என்றதும், அவளை முறைத்து விட்டு விஷாலைத் தவிர அனைவரும் கிளம்பினர்.
விஷால் மட்டும் அவளுடனே நடந்து வந்தவன், “அவன் ரொம்ப ஓவரா போறான்” என்று எரிந்து விழுக,

“அட விடுடா. ஏதோ மிஸ்அண்டர்ஸ்டாண்ட்டா இருக்கும். நீங்களும் லூஸ்டாக் விட்டுருப்பீங்க… நம்ம ப்ரொஃபி தான” என அவன் தோள் மீது கை போட்டுக்கொள்ள, அவனிடம் கனத்த அமைதி.

அவளுக்குப் பிடித்தவர்களை நண்பர்களுக்கும் பிடிக்குமென்று அவளாக நம்பிக்கொண்டாள் அதிகம் ஆராயாமல்.

“மச்சி… எனக்கு ஒரு டவுட்டு” அவளே தொடர,

அவன் என்னவெனப் பார்த்தான்.

“அதில்ல… அப்பா நம்ம எல்லார்கிட்டயும் கரெக்டா தான் இருக்காரு. எனக்கு நல்ல அப்பாவா இருக்காரு. சக்சஸ்ஃபுல் பிசினஸ்மேனா இருக்காரு. என் அம்மாவையும் நல்லாதான் பாத்துக்குறாரு. அப்பறம் ஏன் கேர்ள்ஸ் விஷயத்துல வீக்கா இருக்காரு. என் அம்மாவும் சைலண்ட் டைப் தான். பட் ரெண்டு பேரும் ஹேப்பியா தான இருப்பாங்க. பணத்துக்கும் புகழுக்கும் குறையே இல்லை… அப்பறமும் ஏன்டா?” எனக் கேட்டாள் வருத்தமாக.

“இந்தப் பசங்க சைக்காலஜி எல்லாம் உனக்குப் புரியாது அம்ரி” என்றவனை புரியாது பார்த்தாள்.

“அப்படி என்ன சைக்காலஜி?”

“பசங்க நீ வெளில பாக்குற மாதிரியே எப்பவும் இருக்க மாட்டாங்க. அவங்களுக்குன்னு பெர்சனல் பிரைவேட் லைஃப் இருக்கு. அது டோட்டலா வேற மாதிரி. அது முழுக்க முழுக்க அவங்களுக்கானது. எவ்ளோ கெத்தா இருந்தாலும் பொண்ணுங்கன்னு வரும்போது எல்லாருக்குள்ளயும் ஒரு வீக்னஸ் இருக்கும் அம்ரி, அங்கிள்க்கு மாதிரி…”

“அப்போ சத்யா அப்படின்னு சொல்றியா?” அவள் புருவம் சுருக்கிக் கேட்க,

“சத்யா இல்ல… எல்லா ஆம்பளைக்கும் பொண்ணுங்க வீக்னஸ் இருக்கு” என்றதும்,

“சத்யா அப்படி இல்லை விஷால்! அவர் கண்ணுல நான் நேர்மையை தான் பாக்குறேன்” என்றாள் விவாதமாக.

“உன் அப்பாகிட்ட நேர்மை இல்லையா? அவர் கண்ணுல நீ நேர்மையை பாக்கலையா?” அவளை ஆழமாய் சிந்திக்க வைத்தான்.

“உன் அப்பா நல்லவரு இல்லைன்னு நீ சொல்ல முடியாதுல. இந்த விஷயம் அவரோட பெர்சனல் பிரைவேட்… அதுக்குள்ள அவருக்கு எது பிடிச்சு இருக்கோ அதை செய்றாரு. அதே மாதிரி எல்லா பசங்களுக்கும் ஒரு அதே வீக்னஸ் இருக்கு. ஒரு பையனோட மனசு இன்னொரு பையனுக்கு தான் தெரியும். சத்யா இல்ல… எந்தக் கொம்பனா இருந்தாலும் அவன் ஃபிசிகல் பிளஷர்னு வந்துட்டா இப்படி தான் நடந்துப்பான்.”

“அப்போ லவ் லைஃப் எல்லாம் சும்மா கண்துடைப்பா?”

“உன் அப்பா உன் அம்மா கூட வாழாம இல்லைல?”

“அட போடா தெளிவா குழப்புற… பட் சத்யா அப்படி இல்ல. இருக்க மாட்டாரு…” என்று ஆணித்தரமாகக் கூறியவள், “சார் எப்படி?” என்று அவனை உறுத்து விழித்தாள்.

“நமக்கு ஒரு வாழ்க்கையே அந்தரத்துல இருக்கு. இதுல பிரைவேட் லைஃப் வேறயா. நான்லாம் ஒருவனுக்கு ஒருத்தின்னு வாழ்றவன்” என்றிட “அந்தப் பயம் இருக்கட்டும்” என்று எச்சரித்தாள்.

பின் நேராய் ஸ்டாஃப் ரூம் சென்றவள் அங்கு அவனைக் காணாது, ஆடிட்டோரியம் சென்றாள்.

அங்கு, சத்யாவின் ஆஸ்தான மாணவிகள் அவனைச் சூழ்ந்து நின்றனர்.

“எதுக்கு இந்த பார்மாலிட்டீஸ் எல்லாம்?” அவன் மென்மையாய் கண்டிக்க,

“சீனியர்… நீங்க எங்க புரொஃபசரா வந்ததும் நாங்க செம்ம ஹேப்பி ஆகிட்டோம். இப்ப பாதில போறேன்னு சொல்றீங்களே. வில் மிஸ் யூ” என ஒரு பெண் சோகக்குரலில் கூற, “நானும் உங்களை எல்லாம் ரொம்ப மிஸ் பண்ணுவேன்…” என்றான் அவனும்.

போதாத குறைக்கு அவனுக்கு பரிசுகள் வேறு கொடுத்து அவனை அன்பால் குளிப்பாட்டி விட்டனர்.

இதனைத் தள்ளி நின்று கையைக் கட்டிக்கொண்டு பார்த்திருந்த பெண்ணவளை அவனும் கண்டுவிட்டான்.

ஆகினும் அவர்களுடன் பேசி முடித்தபிறகே, இதயாம்ரிதாவிடம் வந்தான்.

கல்லூரி முடிந்து அனைவரும் கிளம்பி இருக்க, ஆடிட்டோரியம் காலியாக இருந்தது.

“என்ன?” சின்னக்கோபம் அவனிடத்தில்.

“உங்களுக்கு என் ப்ரெண்ட்ஸ் மேல என்ன கோபம்?” அவளும் அதே குட்டிக் கோபத்துடன் கேட்டாள்.

“உன் ப்ரெண்ட்ஸ் இல்ல… யாரா இருந்தாலும் எனக்கு ரூல்ஸ் ஒண்ணு தான். டிசிப்ளின் முக்கியம்.”

“தப்பு செய்யாதவங்களை எதுக்கு கண்டிக்கணும்?” அவள் அவளது விவாதத்தில் குறியாக இருக்க,

“எனக்கு என்ன பைத்தியமா? வெல், இதைப் பத்தி உங்கிட்ட டிஸ்கஸ் பண்ணனும்ன்ற அவசியம் எனக்கு இல்ல!” என்று விட்டு அவன் நகர எத்தனித்தான்.

“இதுக்குலாம் உங்களை சும்மா விட மாட்டேன் ப்ரொஃபி!” எப்போதும் போல கிண்டலாய் மிரட்டினாள்.

அவனோ சட்டென அவள் அருகில் வந்து, “இந்த மிரட்டலை எல்லாம் பிரின்சிகிட்ட வச்சுக்கோ. எங்கிட்ட வச்சுக்காத…” என்று உறுமினான்.

“உங்க கோபத்தைப் பார்த்து நியாயமா எனக்கு கோபம் அதிகம் ஆகனும். ஆனா, வர மாட்டுதே! வர வர உங்களால எனக்கு சொரணையே இருக்க மாட்டேங்குதுன்னா பாத்துக்கோங்க…” என்று விட்டு அவள் நகரப்போக, சத்யா அவள் கையைப் பிடித்தான்.

அதில் சில்லிட்ட தேகத்தின் அதிர்வுடன் அவனை வியப்பாக ஏறிட்டவளிடம் அவன் கோப முகம் மாறாமல், “சோ நாளைக்கு பீச் மீட்டிங் கேன்சல் தான?” என்றான் புருவம் உயர்த்தி.

“எதுக்காம்?”

“நமக்குள்ள எதுவும் செட் ஆகாதுல?”

“ஏன்? ஓ… இப்ப நடந்த மேட்டரா? இது வேறு அது வேறு ப்ரொஃபி. நாளைக்கு குட் பாயா பீச்க்கு வருவீங்கலாம் ஓகே?” என்று அவன் முன்னெற்றி முடிகளைக் கலைத்து விட்டு விட்டு, சின்னதொரு நகையுடன் அவனைத் தாண்டிச் செல்ல, அதே குறுநகை அவனிடமும் நளினமாய் வீற்றிருந்தது.

புது காதல் மலரும்
மேகா

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 41

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
42
+1
0
+1
3

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments