
அத்தியாயம் – 20
கண்ணில் கண்ணீர் வற்றிப் போய் முகம் எல்லாம் வீங்கிச் சிவந்திருக்க, தன்னவன் தாங்கிய காயங்களை அவளால் தாங்க இயலாது துடித்துப் போனாள்.
எவ்வளவு வலி! எத்தனை விரக்தி! எத்தனை அழுத்தம்! அந்தப் பிஞ்சு மனதில் ஆழ பதிந்திருந்தால் இப்போது வரை, உள்ளுக்குள் அனைத்தையும் அமிழ்த்தி, சாதாரண உணர்வுகளைக் கூட அனுபவிக்கத் தோன்றாமல், இறுகிப் போய் இருப்பான்.
அத்தனை உறவுகள் இருந்தும், அனாதையாய் இங்கு வாழ்ந்தவனுக்கு எத்தனை எத்தனை ஏக்கம் இருந்திருக்கும் என வெடித்து சிதறிய ஆராதனாவுக்கு, அவனை இப்போதே பார்த்து, தன் மடியில் தாங்கி, அவன் தலையைக் கோதி, அவனுக்குத் தாயாகவே ஆக வேண்டும் என்று பரிதவித்தாள்.
அவளைச் சுற்றி நின்ற அவளின் தோழிகள் அவளை அமைதிப்படுத்துவது கூட அவள் காதில் கேட்கவே இல்லை.
“நான் பார்க்கணும்… நான் தேவாவை பார்க்கணும். இப்பவே பார்க்கணும்.” என்று ஏதேதோ புலம்பியவளை,
அம்மு கன்னத்தில் தட்டி, “ஆரு இங்க பாரு. என்னைப் பாரு! ரிலாக்ஸ் ஆகு ஆரு… என்னாச்சு உனக்கு?” என்றாள் தவிப்பாக.
அவள் “அம்மு, நான் தேவாவை பார்க்கணும். இப்போவே பார்க்கணும். அவன் அவன் எவ்ளோ…?” என்று மேலும் பேச இயலாது வலியில் உடைந்து போனாள். மற்றவர்களுக்கும் திலகன் சொன்னது அதிர்ச்சியுடன் வேதனையைக் கொடுக்க, சில நாட்கள் உடன் இருந்தவளுக்கே இப்படி இருக்கிறதே… அவனின் நண்பர்கள் அறிந்தால் இதனைத் தாங்குவார்களா? என்ற எண்ணமும் மேலோங்கி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள,
வைஷு, “ஆரு, முதல்ல நீ பொறுமையா இரு. நீ இப்போ அவனைப் பார்த்து மட்டும் என்ன பண்ணப் போற? அவன் ஏற்கனவே கோபப்படுவான். இப்போ நீ இதெல்லாம் தெரிஞ்சுக்கிட்டன்னு அவனுக்குத் தெரிஞ்சா, எப்படி பிஹேவ் பண்ணுவான்னே தெரியாது!” என்றிட
தமி, “ஆமா ஆரு, தயவு செஞ்சு அமைதியா…” என்னும் போதே, அவள் “எப்படி அமைதியா இருக்குறது, ஹான்? அவன் எவ்ளோ கஷ்டப்பட்டுருப்பான்? நான் நான் என்ன பண்ண இப்போ?” என்று தலையைப் பிய்த்துக் கொண்டு, அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் திணறினாள்.
அவள் அழுவதை பார்க்க முடியாமல் மூவரும் குழம்ப, அம்மு அவளைப் பிடித்து நிமிர்த்தி, “இப்போவும் நீ தேவாவை லவ் பண்றியா ஆரு?” எனக்கேட்க, அதற்குச் சுட்டெரிக்கும் பார்வையை தான் பதிலாகக் கொடுத்தாள்.
அம்மு “முறைக்காத, பதில் சொல்லு! நீ இப்பவும் அவனை லவ் பண்றியா?” எனக் கேட்டாள்.
ஆரு “இப்போ மட்டும் இல்ல, எப்போவுமே அவனை மட்டும் தான் லவ் பண்ணுவேன். எப்போ? எப்படி? எதனால? அவனை நான் லவ் பண்ணேன்னு எனக்கே தெரியல… அவனோட அதிகப்படியான கோபமும், இறுக்கமும் என்னைப் பாதிச்சது தான் உண்மை. அதுவே அவன் மேல எனக்குக் காதலையும் குடுத்துடுச்சு…இப்போ வலியையும் சேர்த்தே.
என்னால நினைச்சு கூடப் பார்க்க முடியல அம்மு. அவன் கெத்தா, கோபமா, அழுத்தமா இருக்கான்னு நினைச்சேன். ஆனால் அவனுக்குள்ள இப்படியொரு வேதனையும் காயமும் இருக்குன்னு நான் நான் புருஞ்சுக்கவே இல்லை… என்னை என்னைத் தொடாதன்னு சொன்னான் அம்மு. நான் அவனைத் தொட்டப்போ அவன் முகம் அப்படி சுருங்குச்சு… அவ்ளோ கோபம் வந்துச்சு. சின்ன வயசுல நடந்த விஷயங்களால, அவன் எந்த அளவு பாதிச்சுருந்தா, இப்போ வரை லேசான தொடுதலைக் கூட, அவனால தாங்க முடியாம இருந்துருக்கும். நான் இப்போ என்ன பண்ண? அவனை எப்படி ஃபேஸ் பண்ணனும்னு கூட எனக்குப் புரியல அம்மு” என்று தலையில் கை வைத்துத் தேம்பினாள்.
அம்மு விடாமல், “இப்போவும் கேட்குறேன் நீ அவனை லவ் பண்றியா? ஒருவேளை அவனால வந்து” என்று கேட்க வருவதை கேட்க முடியாமல் திணற, வைஷுவும், தமியும் ‘எந்த நேரத்தில் எதைக் கேட்கிறாய்?’ என்று முறைத்தனர்.
அவள் மனதைக் கல்லாக்கி கொண்டு, “அவனால உன்னை லவ் பண்ண முடியலைன்னாலும், ‘ஈவன்’ உனக்கு ஹஸ்பண்டா இருக்க முடியலைன்னாலும், நீ அவனை லவ் பண்ணுவியா? இப்போ இது சரின்னு தோணுனாலும் ஃபியூச்சர்ல…” என்றவளை சப்பென அறைந்திருந்தாள் ஆராதனா.
“என்னடி நினைச்சுக்கிட்டு இருக்க, என்னைப் பத்தி? அவனை நான், என் உயிரா பார்த்துப்பேன். அவன் அவன் எனக்கு ஹஸ்பண்டாவே இருக்க வேணாம். என் என் பேபி மாதிரி, என் கூட எப்போவும் என்னைத் திட்டிகிட்டு என்னை அடிச்சுகிட்டு இருக்கட்டும். அவனைப் பத்தி தெரிஞ்சதும், நான் அவனை விட்டுட்டு போவேன்னு நீ எப்படிடி நினைக்கலாம்?” என்று கத்த,
அம்மு, “அப்போ அவனை எப்படி மாத்துறது, இதுல இருந்து வெளியில கொண்டு வர்றதுன்னு யோசி! எங்க ஆருவா…! எந்த நேரத்திலும் நீ நிதானத்தை இழந்தது இல்ல ஆரு. ஆனால் இப்போ இந்த நேரத்துல நீ நிதானமா எல்லாத்தையும் யோசிச்சு தான் ஆகணும். பொறுமையா யோசி. அடுத்து என்ன பண்ணலாம்னு… உன் மனசுல நீ என்ன நினைக்கிறன்னு தெரிஞ்சுக்கத்தான் நான் அப்படி கேட்டேன். நீ எந்த முடிவு எடுத்தாலும் எனக்கு சந்தோசம் தான். ஆனால் உன் காதலை விட எனக்கு உன் வாழ்க்கை முக்கியம்.” என்றவள் அங்கிருந்து நகன்று விட, வைஷுவும் தமியும் அவளுக்குத் தனிமை கொடுத்து, அம்முவின் பின் சென்றனர்.
அம்மு கண்ணீருடன் இருப்பதை பார்த்து, வைஷு “என்னடி அவளை ஸ்ட்ராங்கா இருக்க சொல்லிட்டு, நீ இப்படி இருக்க” என்றிட,
அவள் “எனக்குப் பயமா இருக்கு, வைஷு, அவன் ஒரு வேளை இவளை ஏத்துக்கலைன்னா? இவள் வாழ்க்கை?” என்றதும்,
தமி “கைஸ்… கண்டிப்பா ஆரு அவனை மாத்துவா. எனக்கு நம்பிக்கை இருக்கு. அவளுக்கு யோசிக்க டைம் குடுத்துருக்கோம்ல, அவளே அடுத்து என்ன பண்றதுன்னு யோசிப்பா… கண்டிப்பா, தேவாவும் ஆருவும் மேட் ஃபார் ஈச் அதர் கபிள்ஸ்ஸா இருப்பாங்க பாருங்க.” என்றவள்,
மனத்தினுள்ளேயே ‘கடவுளே! என் ப்ரெண்ட் வாழ்க்கை உன் கையில தான் இருக்கு. நான் சொன்ன வார்த்தையை மட்டும் பலிக்க வச்சுட்டா, உனக்கு 108 தேங்காய் உடைச்சு, அங்கப்பிரதட்சணம் பண்ணி, நாலு நாள் பட்டினி கூடக் கிடக்கிறேன்…’ என்ற வேண்டுதலை முன்னிறுத்தினாள்.
அதில் தெளிந்த வைஷுவும், “இந்த விஷயம் முக்கியமா நம்ம ஆளுங்களுக்கு தெரியக் கூடாது… தெரிஞ்சா உடைஞ்சு போய்டுவானுங்க.” என்றதும், அம்மு, “ஆமா வைஷு, அதுவும் விஷ்வா இருக்கானே உருண்டு புரண்டு அழுவான்… அவன் அழுகையை நிறுத்துறதுக்குள்ள நம்ம ஜீவன் தான் போகும்.” என்று இந்த விஷயம் வெளியில் கசியக் கூடாது என மூவரும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
அம்மு பேசியதில் மனதை ஒரு நிலைப்படுத்தி, அடுத்து என்ன செய்யலாமெனச் சிந்தித்தவள், சில நேர யோசனைக்குப் பிறகு, அவனை எப்படியும் மாற்றுவேன் என்ற முடிவுடனும், தெளிந்த முகத்துடனும் அவர்கள் முன் வந்து, “நான் தேவாவை பார்க்கணும்.” என்றாள்.
அதில் மூவரும் திகைத்து, பேச வரும் முன், அவளே அவனுக்கு போன் செய்தாள்.
“கிர் கிர்” என தேவாவின் பேண்ட் பாக்கெட்டிலிருந்து அவன் அலைபேசி அழைக்க, கையில் துப்பாக்கியுடன், அந்த போதை பொருட்களைக் கடத்தும் இடத்தில், யாரும் அறியாமல் மறைந்திருந்து, அங்கு அனைத்தையும் பார்வை இட்டான்.
சிவனும் அங்கு தான் நின்று, ‘இந்த தேவா ஆருவை இப்படி கூட்டிட்டு போய்ட்டான்… சே!’ என்று புலம்பிக் கொண்டு, அந்தப் பொருட்களைச் சீக்கிரம் எடுத்து வைக்கும் படி உத்தரவிட்டுக் கொண்டிருந்தார். அதனை மறுபுறம் நின்றிருந்த விஷ்வா படம் பிடிக்க, தேவா போன் அடித்துக் கொண்டே இருந்ததில், எடுத்து “ஹலோ” என்றான் கிசுகிசுப்பான குரலில்.
தேவாவின் குரலைக் கேட்டதும் தன்னிச்சையாகக் கண்ணில் நீர் சுரந்ததில், வம்படியாக அதனை உள்ளிழுத்தவள், “ஹலோ! நீ எங்க இருக்க?” எனக் கேட்டாள் அதே ஹஸ்கி வாய்ஸில். அது இசையின் குரல் என உணர்ந்தவன், “ப்ச், எதுக்குடி எனக்கு போன் பண்ணுன? என் போன் நம்பர் எப்படி உங்கிட்ட வந்துச்சு?” என்று அந்த நேரத்திலும் கேள்வி கேட்டவனிடம்,
“நீ பெரிய டிடெக்டிவ்னா… டிடெக்டிவ்வோட லவர் நான். அதுவும் ஒரு ஆராய்ச்சியாளர். எல்லாத்தையும் அலசி ஆராய்ஞ்சுட மாட்டோமா?” என்று திமிராகச் சொல்ல, அவன் கோபமாக போனை வைக்கப் போனான்.
“ஹே போனை வச்சுறாத, நீ இப்போ எங்க இருக்க?” எனக் கேட்டவளிடம், “ஏன்” எனக் கேட்க, “ப்ச் சொல்லு” என்றாள் பிடிவாதமாக. ‘இம்சை இவளோட’ என்றெண்ணியவன், “சொல்ல முடியாதுடி” என்று போனை வைத்து விட்டான்.
அருண், நிஷாந்த் இருவரும், வாசலில் மறைவான இடத்தில் நின்று, யாரும் வருகிறார்களா என்று உள்ளிருந்த இருவருக்கும் அறிவுறுத்த, அப்போது ஒரு ஆட்டோ ஒன்று அந்த பில்டிங்கின் முன் நிற்க, அதிலிருந்து ஆராதனா இறங்கினாள்.
‘ஐயோ, இவள் இங்க என்ன பண்றா?’ என இருவரும் வேகமாக அவளிடம் சென்று “ஆரு, நீ ஏன் இங்க வந்த?” எனப் பதட்டமாகக் கேட்க, “தேவா போன் இங்க இருக்கிறதா தான் காட்டுது. அதான் நானும் வந்துட்டேன். எங்க அவன்? உள்ள இருக்கானா?” என்றவள் உள்ளே செல்லப் போக,
அருண் “ஐயோ நாங்க ஒரு கேஸ் விஷயமா எவிடேன்ஸ் கலெக்ட் பண்ண வந்துருக்கோம்… சொன்னா கேளு, நீ போ!” என யாரும் வருகிறார்களா என்று திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டு கூற, அவள் “முடியவே முடியாது. நான் அவனை இப்போ பார்த்தே ஆகணும்… டோன்ட் ஒரி. நான் யாருக்கும் தெரியாம உள்ள போறேன்.” என்றவள், அவர்கள் கண் அசரும் நேரம் உள்ளேயே சென்று விட்டாள்.
“காட், இவள் போறாடா” என்று நிஷாந்த் பதற, அருண்,
“இந்த லூசுக்கு தேவாவே பரவாயில்ல. ஒண்ணாவது சொல்றதை கேட்குதுங்களா? விடு போய் அவன் கிட்ட செருப்படி வாங்கிட்டு வரட்டும்!” என்று கடுப்படிக்க,
“டேய், உள்ள அவளோட மாமா இருக்காருடா. அந்த ஆளைப் பார்த்தா அவள் எப்படி பிஹேவ் பண்ணுவான்னே தெரியல” என்றதும் தான், “ஆமால்ல” என்றவன் குழம்பி நின்றான்.
தேவா விஷ்வாவிடம் ‘எல்லாம் ஓகே வா’ என்று கண்ணைக் காட்ட, அவன் “டன்… ஆனால் அந்த ஷிவ் முகம் க்ளியரா தெரியல” என்று சைகை காட்டினான். அதில் அவன் அந்தப் பக்கம் போலாம் என்று சைகை காட்டும் போதே, அவனுக்கு அருகில் “எந்தப் பக்கம் போறது?” என்ற ஆருவின் குரல் கேட்கத் திகைத்துப் பார்த்தவன், “நீ இங்க என்ன பண்ற இடியட்?” என்றான் பல்லைக்கடித்துக் கொண்டு.
“உன்னைப் பார்க்கத்தான் வந்தேன்…” என்றவள் அவன் கையில் இருந்த துப்பாக்கியை வெடுக்கென வாங்கி, “இது ஒரிஜினலா? இல்ல தீபாவளி துப்பாக்கியா?” என்ற அதி முக்கியமான சந்தேகத்தை முன்வைக்க, அவன் அதனைப் பிடுங்கி, அவள் நெற்றியில் வைத்து, “சுட்டு, உன் மூளை வெளிய வந்தா தெரியும் ஒரிஜினலா? டூப்ளிகேடான்னு… எப்படிடி உள்ள வந்த?” எனக் கடுங்கோபத்தில் வினவினான்.
“ப்ச் ஒரு டிடெக்டிவ்வோட லவர்க்கு, யார்க்கும் தெரியாம உள்ள கூடவா வரத் தெரியாது. அப்டியே உன் போனை ட்ராக் பண்ணிட்டே வந்தேன். அது கரெக்டா இங்க கூட்டிட்டு…” என்று கூறும் முன்,
அவளைச் சுவற்றில் தள்ளி அவள் கழுத்தை பிடித்து இறுக்கினான். “இன்னொரு தடவை, லவர் அது இதுன்னு உளறிகிட்டு இருந்த, நான் மனுஷனாவே இருக்கமாட்டேன். என்னடி வேணும் உனக்கு என்கிட்டே இருந்து… ஹான்? நீ நினைக்கிறது எதுவும் என்கிட்டே இருந்து கிடைக்காது! உனக்கு லவ் பண்ணனும், படுக்கணும்னா வேற எவன் கிட்டயாவது போ. என்கிட்ட விளையாண்ட, நான் உன்னை சாவடிச்சுவேன்.” என்று கண்ணில் கனலை தேக்கிக் கூற, அவன் கழுத்தை இறுக்கியதில் மூச்சு விட முடியாமல் திணறியவள், அவன் பேசிய வார்த்தையில் உடைந்து, அவனை வெடுக்கெனத் தள்ளி, பளாரெனக் கன்னத்தில் அறைந்தாள்.
ஏதோ சத்தம் கேட்டதில், சிவன் அவர்களை நோக்கி வர, விஷ்வாவுக்கு இவர்கள் பேசியது கேட்க வில்லை என்றாலும், அவள் அடித்ததில் திகைத்து, இருவரையும் அவசரமாக தள்ளிக் கொண்டு வெளியில் வந்தான். வெளியில் வந்ததும் அவ்வளவு நேரம் அடக்கிய இருமலை வெளிப்படுத்திய அவளிடம்,
விஷ்வா “எதுக்கு அவனை அடிச்ச?” என்று கோபமாகக் கேட்டான். நிஷாந்த்தும் அருணும் இதனைக் கேட்டு அதிர, அவள் “நீங்கப் போங்க” என்றாள்.
விஷ்வா புரியாமல் ஏதோ பேசும்முன் “உங்களைத் தான் சொல்றேன் மூணு பேரும் காருக்குப் போங்க! இல்லைன்னா அவனுக்கு விழுந்த அடி உங்களுக்கும் விழும்…!” என்றவளின் கோபத்தில், தேவாவை செய்வதறியாது பார்த்து விட்டு, அந்தத் தெரு முனையில் நிறுத்தி இருந்த அவர்களின் காருக்குச் சென்றனர்.
தேவாவின் சட்டையைப் பிடித்தவள், “என்ன சொன்ன? லவ் பண்ணனும், படுக்கணும்னா வேற எவன் கூடையாவது போகணுமா? நான் ஏன் போகணும்? ஹ்ம்ம்?” என அவனைத் தீயாக முறைத்து வினவ, ஏற்கனவே அவள் அறைந்ததில் திகைத்திருந்தவன், தான் கேட்ட கேள்வியை அவள் திருப்பிச் சொல்லும் போதுதான், அந்தக் கேள்வியின் வீரியம் புரிய, அவளைப் பார்க்க இயலாமல் வேறு புறம் பார்த்தான்.
அவன் முகத்தைப் பிடித்துத் திருப்பியவள் “உன்னைத் தான் கேட்குறேன்! நான் ஏன் வேற எவன் கூடயோ போகணும்?” என்று அழுத்திக் கேட்க, அவள் கையைத் தட்டி விட்டவன், “என்னடி பிரச்சனை உனக்கு?” என்று கோபத்துடன் ஆரம்பித்தவன், அவளின் கூர் பார்வையில் திணறி, “சாரி” என்றான் தலையைக் குனிந்து கொண்டு.
அவனை நெருங்கி நின்றவள், “இங்க பாரு! நீ என்ன சொன்னாலும் நான் கேட்டுகிட்டு இருக்க மாட்டேன். ஏதாவது தப்பா பேசுன, அறைஞ்சு, உன் பல்லைத் தனியா கழட்டி, உன் கையில கொடுத்துடுவேன். இப்போ உனக்குச் சொல்றது தான்… நான் உன்னைத் தான் லவ் பண்றேன். எவன் கூடயும் போறதுக்கு நான் ஒண்ணும் ப்ராஸ்டிட்யூட் இல்ல. உன்னைத் தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன். நீ என் கூட குடும்பம் நடத்துறதும், நடத்தாததும் உன் இஷ்டம். உனக்குப் பிடிச்சாலும் பிடிக்கலைன்னாலும் என்னைத் தான் நீ கல்யாணம் பண்ணி ஆகணும்… காட் இட்?” என்று அவனையே மிரட்ட, எப்போதும் அடுத்தவரை மிரட்டியே பழக்கப் பட்டவன் இப்போது அவளின் அழுத்தத்தில் மிரண்டிருந்தான்.
திருதிருவென விழித்தவனை கண்டவளுக்கு கஷ்டமாக இருந்தாலும், அவனினுள் இருக்கும் பயத்தையும், காயங்களையும் வெளிக் கொண்டு வருவதற்கு இதனை விட்டால் அவளுக்கு வேறு வழியும் தெரியவில்லை. அன்பாகப் பேசினால் நிச்சயம் காது கொடுத்துக் கேட்க மாட்டான் என்று அவனை மிரட்டிப் பார்க்க, அவளே எதிர்பாராத அளவு அது அவனிடம் சரியாக வேலை செய்தது.
ஆனால், சில நொடிகளில் தன்னை மீட்டவன், “என்னால உன்னைக் கல்யாணம் பண்ணிக்க முடியாது. உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ!” என்றிட, அவள் “உன்னைக் கல்யாணம் பண்ணிக்க நான் எந்த அளவுக்கு வேணாலும் போவேன்…” என்னும் போதே, சிவன் வெளியில் வந்து விட, தேவா சட்டென அவளை இழுத்து சுவற்றின் பின் மறைய வைத்தான்.
அப்போது தான் அவள், சிவனையே கண்டு “மாமா” என முணுமுணுக்க, அவன் அவள் வாயைப் பொத்தி ‘ஷ்’ என்றவன், தற்காப்புக்காகத் துப்பாக்கியை எடுக்க, ஆனால் சிவன் காரில் ஏறிச் சென்று விட்டார். அதன் பிறகே, அவன் அவளை நெருங்கி நிற்கிறோம் என்றே உணர்ந்து, அவள் வாயில் இருந்து கையை எடுத்தவன், காருக்குச் செல்ல போக, அவனைத் தடுத்தவள்,
“என் மாமா இங்க எப்படி? நீங்க ஏதோ ஆதாரம் ரெடி பண்ண வந்துருக்கறதா, அருண் சொன்னான்? இங்க என்ன ஆதாரம் ரெடி பண்றீங்க?” என்றாள் புரியாமல். தேவா அவளையே சில நொடி பார்த்து விட்டு, சிவனை பற்றிச் சொல்ல, அவள் அதிர்ந்தே விட்டாள்.
சில நிமிடங்கள் அங்கேயே தலையில் கை வைத்து அமர்ந்தவள் ஏதோ யோசனையில் மூழ்க, “சோ என்னை வச்சு காரியம் ஆகணும்னு சொன்னது கூட, என்னை வச்சு அவருக்கு எதிரா ஆதாரம் ரெடி பண்ண, அப்படித்தான?” எனக் கேட்க, அவன் ‘என்ன? இவளோட ஷாக் இவ்ளோ தானா?’ என நினைத்து விட்டு, “ம்ம்” என்று தலையாட்டியதும் “சரி, நான் ஆதாரம் ரெடி பண்ணித் தரேன்.” என்றாள் யோசனையுடன்.
தேவா, “உனக்கு ஷாக் ஆகலையா? இல்ல உனக்கு ஏற்கனவே அவரைப் பத்தி தெரியுமா?” எனக் குழப்பமாகக் கேட்க, அவள் அவனை அமைதியாகப் பார்த்து “கொஞ்சம் தெரியும். ஆனால் அவர் இவ்ளோ பண்றாருன்னு எனக்குத் தெரியாது.” என்றாள் இறுகிய குரலுடன்.
அவளைப் புரியாமல் பார்த்தவனிடம் “அந்த மண் சம்பந்தப் பட்ட பிரச்சனையில மினிஸ்டர் மட்டும் இல்ல. அவனைத் தாண்டி வேற ஒருத்தரோட லிங்க் இருக்கோன்னு எனக்குத் தோணிக்கிட்டே இருந்துச்சு. அப்போ அந்த மினிஸ்டர் ஆளுங்க வேற என்னை ஃபாலோ பண்ணிகிட்டே இருந்தாங்க. அவங்க கண்ல மண்ணை தூவிட்டு, நான் அன்னைக்கு ராஜாங்கனை ஃபாலோ பண்ணேன்.
அப்போதான், அவன் சென்னையில இருந்த மாமா வீட்டுக்குப் போய் அவங்க கூடப் பேசிகிட்டு இருந்ததை பார்த்தேன். கூடவே, அந்த மண்ணையும் அவருகிட்ட கொடுத்து, ஏதோ பேசுனான் அந்த மினிஸ்டர்.
அப்போவே, எனக்கு மாமா மேல ஒரு டவுட் தான். எப்போவும் அவரு, அத்தையை சென்னை கூட்டிட்டு வந்ததே இல்லை. கூட்டிட்டு வந்தாலும் ரெண்டு நாளைக்கு மேல இங்க தங்க விட்டதும் இல்லை.
அவரு பண்ற பிசினெஸ் பத்தி, பெருசா வெளியில சொன்னது இல்ல. ஆனால் அவரு வேஷம் போடுறாரோன்னு எனக்குத் தோணுனதுல தான், என் வீட்டுல கூட சொல்லாமல் இந்த ரிசர்ச் பண்ண வந்தேன். நான் அவர் மேல சந்தேகப்படுறேன்னு காட்டிக்கவே இல்லை. ஆனால் அவருக்குத் தெரிஞ்சு இருக்குமோன்னு எனக்கு டவுட் இருக்கு” என்று யோசனையுடன் பேசியவளை விழி விரித்துப் பார்த்தவன்,
அவளின் அறிவையும், அந்த நேரத்திலும் பதட்டப்படாமல் ஆராய்ச்சி செய்ய முன் வந்த அவளின் நிதானத்தையும் கண்டு வியந்தான்.
அவளோ, தேவாவை பார்த்து “நான் உனக்கு ஹெல்ப் பண்றேன். ஆனால் ஒரு கண்டிஷன்” என்றாள் கையைக் கட்டிக் கொண்டு. அவன் என்னவென்று பார்க்க, “என்னை நீ கல்யாணம் பண்ணிக்கணும்.” என்றதில் அவளை முறைத்தான்.
“முடியாது. என்ன பண்ணுவ?” எனக் கேட்க, அவள் திமிராக “என் வேலையைக் காப்பாத்திக்க, உண்மையை வெளிய கொண்டு வரதுக்கு, என் மாமாவுக்கு எதிரா வேலை பார்த்த நான். உன்னைக் கல்யாணம் பண்ணிக்க, உனக்கு எதிராவே வேலை பார்க்க மாட்டேனா என்ன?” என்றவள், சற்று யோசித்து,
“உனக்கு உன் பிரெண்ட்ஸ்னா ரொம்ப பிடிக்கும்ல? அவங்க கழுத்துல கத்தி வச்சு, உன்னை என்னைக் கல்யாணம் பண்ணக்க சொன்னா… உன் பிடிவாதம் முக்கியம்ன்னு சொல்லுவியா? இல்ல, உன் பிரெண்ட்ஸ் முக்கியம்னு சொல்லுவியா?” என அழுத்தமாகக் கேட்க, அதிர்ந்து பார்த்தான்.
அவள் ‘நான் நிச்சயம் செய்வேன்’ என்ற ரீதியில் அவனைப் பார்க்க, அவன் அவள் கண்களைக் காண இயலாது, விறுவிறுவெனச் சென்று காரில் அமர்ந்தான். அவன் முகம் வெளிறி இருந்ததில், மற்றவர்கள் புரியாமல் அவர்களைப் பார்க்க, அவளோ சற்று சத்தமாகவே,
“லுக் கைஸ்! உங்க ப்ரெண்ட் என்னைக் கல்யாணம் பண்ணிக்கலன்னா… உங்க மூணு பேரையும் என் மாமாகிட்ட குடுத்துட்டு போய்கிட்டே இருப்பேன். அவரு உங்களைக் கொலையே பண்ணாலும், ஐ டோன்ட் கேர்!” என்றதில் அவர்களும் அதிர்ந்து தேவாவை பார்க்க, விஷ்வா தான், “காதல் செய்றது ஒரு கலை! காதலுக்காக செய்யலாமா கொலை!” என்று பயத்தில் உளறியதில், நிஷாந்தும் அருணும் அவனைத் தீப்பார்வை பார்த்தனர்.

