Loading

அத்தியாயம் 2

கதிரவனோ, “மாத்திக் கடத்துனாலும் ஒரு நியாயம் வேணாமா? எலிசான்னு பேர் வச்ச மாறியாருக்கு உன் மூஞ்சி…” என சந்தேகமாக வினவ,

“இத மட்டும் வக்கணையாப் பேசு!” எனப் பொருமியவள், “இன்னா சார் ஒங்க பிரச்சினை?” என்றாள் யாஷைப் பார்த்து.

பின் அவளே, “ஹோ, இப்ப எனக்கு ரொம்ப நல்லாப் புரிஞ்சுது…” என்று சிஐடி போலச் சிந்தித்தவள்,

“நான் முருகர்கிட்ட ஜித்தன் ரமேஷ் மாதிரி மறைஞ்சு போகணும்னு வேண்டுனது உங்களுக்குக் கேட்டுடுச்சு, அப்படித்தான? அவர்கூட உங்களுக்குப் பழக்கவழக்கம் இருக்கா?” என்றாள் தீவிரமாய்.

கதிரவன், “அவரைப் பார்த்தா மில்லர் கூடப் பழக்க வழக்கம் வச்சுருக்குற மாறிக்கா இருக்காரு. நம்ம நாட்டு முருகரை எல்லாம் தெரியுமா என்ன?” எனத் தலையைச் சொறிந்தான்.

இருவரும் மாறி மாறிப் பேசியதில் வெறியான யாஷ் பிரஜிதன், “ஸ்டாப் திஸ்…” என்றான் அடக்கப்பட்ட கோபத்துடன்.

பின் நிதர்ஷனாவை மீண்டுமொரு முறை பார்வையால் ஸ்கேன் செய்தவன், “உன்னால எனக்கு ஒரு காரியம் ஆகணும். அதை நடத்தலைன்னா, காசிகிட்ட மாட்டிருக்குற உன் அண்ணன் நிவேதன், என் கையாலதான் சாவான்!” என்றான் அழுத்தமாய்.

“இன்னாது?” அவனை ஒரு மார்க்கமாகப் பார்த்தாள் நிதர்ஷனா.

தமையனைக் கொலை செய்வதாய் சொன்னதற்கு, அவளிடம் பயமேதும் தென்படவில்லை என்பதைக் குறித்துக் கொண்டவன், “சிம்பிள்! எனக்கு ஒரு பேபி வேணும்!” என்றான் அமர்த்தலாய்.

அவனைக் கண் கொட்டாது பார்த்தவள், “பேபி வேணும்னா அமேசான்ல ஆர்டர் போடுயா… இங்க புள்ள பெத்துத் தரப்படும்னு போர்டு மாட்டிக்கினா அலையுறேன் நானு!” என மூச்சிரைத்தாள்.

“நான், தி எலைட் கம்பெனியோட சி.ஈ.ஓ. என்னோட ரிசர்ச்ல என் வைஃப் ஒரு பார்ட்டா இருந்தா… பட் அன்ஃபார்ச்சுனேட்லி, என் வைஃப் என்னை விட்டுட்டு என்னை மறந்துட்டுப் போயிட்டா. இப்போ என் ரிசர்ச் முடியிற ஸ்டேஜ்ல இருக்கு. அகைன், நான் அதை சப்மிட் பண்றதுக்கு என் வைஃபோட சிக்னேச்சர் வேணும்.” என்றபடி அவளை நோக்கிக் காலடி எடுத்து வைக்க, அவளோ அசையாது நின்றாள்.

“லூசாயா நீ… அதை ஒன் பொண்டாட்டியாண்ட போய் கேளு!” பிசிறிய குரலை அவனுக்குச் சிறிதளவும் சந்தேகம் வராதவாறு சரி செய்து கொண்டாள்.

“அவள் தான் என்னை மறந்துட்டுப் போயிட்டாளே!” பேண்ட் பாக்கெட்டினுள் கையை நுழைத்து அவள் முன் குனிந்தவனிடம், “அதுக்கு?” என விழித்தாள்.

“சோ, நீ என் வைஃபா நடிக்கணும்!” அவனது கலப்படக் கண்களில் கலப்படமாகிப் போனாள் அவள்.

எச்சிலை விழுங்கியவள், “யோவ்… நீ வெளிநாட்டுக்காரன் மாறிக்க இருக்க. நான் காஞ்சு போன கருவாடு மாறிக்க இருக்கேன்…” என அடுக்கி விட்டு, “வேற எவளையாச்சும் நடிக்கக் கூப்டு…” எனும்போதே குரல் உள்ளே சென்றது.

“நீ கிட்டத்தட்ட என் வைஃப் மாதிரி இருக்க… சோ, ஐ சூஸ் யூ!” என்றான் அசட்டையாக.

“பை தி வே… என் வைஃப் பேர் கேட்கலையே?” அவன் மூச்சுக்காற்று அவளது நெற்றியைத் தீண்டிப் பதம் பார்த்தது.

“எ…என்ன?” நெஞ்சம் தடதடத்தது அவளுக்கு.

ஓர் நொடி இடைவெளி விட்டவன், அவளுள் ஆழப் புதைத்த பார்வையினுடே, “ரித்திகா யாஷ் பிரஜிதன்!” என்றான்.

திகைப்பை வெளிப்படுத்திய அவளது நயனங்களில், சூடாய் ஒரு நெருப்புப் படலம்.

பற்களைக் கடிப்பது அவளது பாவனையில் புரிய, அவனது தங்க விழிகள் அவளைக் காட்டமாய் ஊடுருவியது.

‘அடப்பாவி! உலக உருண்டையை விட இவன் உருட்டுப் பெரும் உருட்டா இருக்கே…’ கதிரவன் பரிதாபமாய் நிதர்ஷனாவை ஏறிட்டான்.

இவர்களின் உரையாடலை சிசிடிவியில் பார்த்திருந்த ஆஹில்யன், நெஞ்சில் கை வைத்துக் கொண்டான்.

“அடேய் பாஸ்… என் வாழ்க்கைல குறுக்க விழுகுறதை நீ பார்ட் டைம் ஜாபா பார்த்துட்டு இருக்கடா!” எனப் புலம்பித் தீர்த்தான்.

“தோ பாருயா… கலர் கண்ணு வச்சுருக்குறவனான்ட எல்லாம் என்னால சகவாசம் வச்சுக்க முடியாது!” நிதர்ஷனா துள்ளிட,

“சரி! உன் பிரதருக்கு போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் ரெடி பண்ணச் சொல்றேன்…” எனத் தோளைக் குலுக்கிக் கொண்டு அங்கிருந்து சென்றதில், கதிரவன் அரண்டான்.

“நிதா, இவனைப் பார்த்தா சொன்னதைச் செஞ்சுடுவான் போல இருக்கான். இன்னாத்துக்கு வம்பு?”

கதிரவனைத் திரும்பி முறைத்தவள் பதில் பேசாது இருக்க, அவளை ஆழ்ந்து பார்த்த கதிரவன், “உனக்கு அவனை ஞாபகம் இருக்கா?” என்றான் சந்தேகமாக.

“எதை மறந்தேன், ஞாபகம் வைக்க?” உள்ளிருந்து கொட்டித் தீர்த்த வலி தனை மறைத்துக் கொண்டு வினவிட,

“அப்போ நீ மறக்கவே இல்ல?” எனத் தூண்டில் போட்டான் அர்த்தமாய்.

“பைத்தியமா நீ… நான் என்ன மறந்தேன்னு கேக்குறேன்? நான் பாட்டுக்குச் செவனேன்னு இருந்தேன். என்னைத் தூக்கினு வந்து அந்தக் கலப்படக் கண்ணுக்காரன் தான் ஒளறிட்டுக் கீறான்னா, நீயும் சொம்மா பசப்பிட்டிருக்க” எனச் சமாளித்து வைத்தவளிடம்,

“அப்போ நிவேவைக் கொலை செய்யறேன்னு சொன்னப்ப, நீ ஏன் எந்த ரியாக்ஷனும் காட்டல?” என மீண்டும் துருவினான்.

எச்சிலை விழுங்கியவள், ‘இந்த நாய்க்கு இவ்ளோ அறிவெல்லாம் இல்லயே. அந்த அரக்கன் தான் ட்ரெயினிங் குடுத்துருப்பான்…’ என்று மனத்தினுள் பொருமியபடி, “அப்படி அப்பட்டமா பயத்தைக் காட்டுனா, அவன் இன்னும் கொஞ்சம் கூட தான் கார்னர் பண்ணுவான். அதான், கெத்தை மெயின்டெயின் பண்ணுனேன்.” என மீண்டுமொரு சமாளிப்பு.

“ஆமா, நீ இன்னாத்துக்கு அவனுக்குச் சொம்பு தூக்கினு இருக்க? உனக்குத் தெரியுமா அவனை?” என ஒற்றைப் புருவம் உயர்த்திக் கேட்க,

அவளை நொந்து பார்த்த கதிரவன், “உனக்குத் தெரியாதுன்னா, எனக்கும் தெரியாது.” என்றான் அமர்த்தலாக.

‘நீ பேசலைடா… அவன் உன்னைச் செதுக்கி வச்சிருக்கான்.’ என்று மீண்டும் யாஷ் பிரஜிதனின் மீது கோபத்தைப் பொழிந்தாள். மனத்தினுள் தான். வெளியில் நிச்சலனமாகவே இருந்தது அவள் முகம்.

———–

“கண்மணி, அந்த வீட்டைச் சுத்தம் பண்ணிட்டியா?” ஆதிசக்தியின் கேள்வியைக் கவனியாது, எங்கோ வெறித்துக் கொண்டிருந்தாள் கண்மணி.

எத்தனை இன்பங்களை அள்ளித் தந்த நாள்கள் அது! இன்றேனோ ஏதோவொரு இறுக்கத்தின் பிடியில்.

கைக்கெட்டும் தூரத்தில், கரம் பிடிக்க வேண்டிய காதல் கானலாகி மறைந்து போனதும் ஏனோ!

மீண்டும் மீட்க இயலா நேசமவன்… மீண்டும் அவனைச் சந்திக்க நேருமென்று தெரியும் தான். ஆனால், அது இத்துணை வலியாகிக் குத்தும் என்று எதிர்பார்க்கவில்லை கண்மணி.

“கண்மணி!” ஆதிசக்தி அழுத்தமாய் அழைத்ததும் தான் நிகழ்விற்கு வந்தவள், “மா?” என்றாள் வேகமாக.

“என்ன யோசனை?” அவர் அர்த்தமாய் ஏறிட்டதும், “அது ஒன்னும் இல்லமா, அண்ணி திரும்பி வந்துடுவாங்களான்னு யோசிச்சுட்டு இருந்தேன்.” எனப் பொய்யுரைத்தவளுக்குத் தெரியாதா தமையனைப் பற்றி. அவளுக்காக மலையையே வளைத்து விடுபவனாகிற்றே. அவளை வளைப்பதா கடினம்?

“நான் அந்த வீட்டை கிளீன் பண்ணிட்டு வரேன்மா!” என்று யாஷ் பிரஜிதனும், நிதர்ஷனாவும் தங்கி இருந்த பக்கத்து வீட்டைச் சுத்தம் செய்யக் கிளம்பினாள்.

அங்கு ஏற்கெனவே சிந்தாமணி, சுண்டிய முகத்துடன் வேலைகளைத் தொடர்ந்து கொண்டிருக்க, “என்னைக் கூப்பிட்டிருக்கலாம்ல சிந்தா?” என்ற கேள்வியுடன் அவளும் இணைந்து கொண்டாள்.

சிந்தாமணி பதில் கூறாது தாவணியைப் பாவாடையில் சொருகிக் கொண்டு தூசி துடைக்க, அவளையே அளவெடுத்த கண்மணி, “கதிர் அண்ணாவைப் பார்க்கப் போறோம்னு சந்தோசம் இல்லையா உனக்கு?” என வினவினாள்.

“பார்த்துட்டா மட்டும்… அப்படியே லவ்வைப் பொழிஞ்சு தள்ளிடுவாராக்கும்!” எனச் சிடுசிடுத்தவள் சட்டென அமைதியாகி, “நிதா அக்கா இங்க வந்து செட் ஆனதும், அவருக்காகக் காத்திருக்குற பொண்ணைக் கல்யாணம் பண்ணிட்டுப் போகப் போறாரு. போகட்டுமே! எனக்கு என்ன வந்துச்சு…” என்று கோபப் பெருமூச்சுடன் பேச,

“இப்படித் தான் கோபத்தைக் காட்டுவ. ஆனா அண்ணா முகத்தைப் பார்த்ததும் வழிஞ்சு தள்ளுவ. உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதாக்கும்…” கண்மணி கிண்டல் செய்ததில்,

“நாங்கலாம் உள்ள ஒன்னு வச்சு வெளில ஒன்னு பேச மாட்டோம்.” என்றாள் சுள்ளென.

அதில் கண்மணியின் முகம் கறுத்து விட, அதன்பின் அவளிடம் இருந்து எவ்வித வாதங்களும் இல்லை.

——-

“இங்க இருந்து எப்படித் தப்பிக்கிறது?” என்ற தீவிரச் சிந்தனையில் இருந்தாள் நிதர்ஷனா.

கதிரவனோ, “இவன் சோறு தருவானான்னு தெரியல நிதா… நிவே வேற எப்படி இருக்கானோ?” என வெகுவாய் புலம்பித் தள்ள, திடமாய் அமர்ந்திருந்தவளை ஊடுருவியபடி அறைக்குள் நுழைந்தான் யாஷ் பிரஜிதன்.

அவனைக் கண்டு காட்டத்துடன் முறைத்தவள், “எங்கள வுடப் போறீங்களா இல்லையா?” என எகிறும்போதே தனது அலைபேசியில், நிவேதனை நால்வர் கொண்ட குழு அடித்துத் துவைப்பதைக் காட்ட அவள் துணுக்குற்றாள்.

“நீ லேட் பண்ற ஒவ்வொரு செகண்டும் உன் பிலவ்ட் பிரதரோட பிளட் வேஸ்ட் ஆகும். தென் யுவர் சாய்ஸ்!” எனத் தோளைக் குலுக்கிக் கொண்டான் யாஷ் பிரஜிதன்.

அவனைச் சலனமின்றி ஏறிட்டவள், “ஒரு பொண்ணைக் கடத்தி நடிக்கச் சொல்றியே, உனக்கு வெட்கமா இல்ல?” எனக் காரமாய் வினவ,

“இல்ல!” என்றான் அசட்டையாக.

அவளோ சினத்தை அடக்கிக்கொண்டு நிற்க, “இதுக்கே வெட்கப்பட்டா உன்கூட பேபி பெத்துக்குற பிராசஸ் எல்லாம் இருக்கே!” எனத் தனது ஹேசல் விழிகளால் அவளைக் கைது செய்யும் பணியைத் தொடர்ந்தான்.

“ஓ! ஆனா என்கூட ஒட்டி உறவாடத் தேவை இருக்காதே. ஐ.வி.எஃப்ல பெத்துக்கலாம்னு திட்டமோ?” முன்னொரு முறை கடத்தியபோது அவன் கூறியதை வைத்து அவனை லாக் செய்ய முற்பட,

“நான் உன்கூட ஐ.வி.எஃப் பத்திப் பேசுனது எல்லாம் எனக்கு ஞாபகம் இல்லையே!” என்றான் இடுப்பில் கையூன்றி.

“நீ மொத வாட்டிக் கடத்துனப்ப…” எனச் சொல்ல வந்தவள் இதழ்களை இறுக்கி மூடிக்கொண்டாள்.

நெஞ்சில் துளியாய் சிறு பயம்!

யாருடைய நிழலை உதறி விட்டுத் தவிர்த்து வந்தாளோ, அவனிடமே சரணடைய வைத்து விடுவானோ என்ற அச்சம் நெருடத் தனது நடிப்பைக் கண்டறிந்து விட்டால், இத்தனை மாதமும் அவனைப் பிரிந்திருந்ததற்கு அர்த்தமின்றி ஆகிவிடுமென்ற எண்ணத்தில், அனைத்தையும் விழுங்கிக் கொண்டாள்.

“என்னால ஒத்துக்க முடியாது!” அவள் மறுத்திட,

“உங்கிட்ட நான் பெர்மிஷன் கேட்கலை நிதர்ஷனா. என் வைஃபா நீ கொஞ்ச நாள் இருந்தே ஆகணும்!” என்றான் அழுத்தம் திருத்தமாக.

“கொஞ்ச நாள்னா?”

அவள் கேட்கும்போதே சுவரை ஒட்டி நின்றவளை இரு கையாலும் அணை கட்டியவன், “நமக்கு பேபி பிறக்குற வரைக்கும்.” என ஹஸ்கி குரலில் கூறியதில் அவள் விழிகள் அதிர்ச்சியில் தெறித்தது.

“அதுக்கு முன்னாடி ப்ராப்பர் பீலிங்ஸ் வரணும்! அதுக்கான வேலையை இப்ப இருந்தே ஸ்டார்ட் பண்ணிடலாம் தானே?”

ஏதோ வீடு கட்ட பிளான் அப்ரூவல் வாங்குவது போலக் கேட்ட அவனது கேள்வியே அவளைத் திகைக்க வைத்தது.

“வெளிநாட்டுக்காரன் மாறிக்க இருக்க… ஒன்னப் பார்த்தா பீலிங்ஸ் எல்லாம் வராது?” அவனை விலக்கி விட ஒற்றை விரலால் அவனது நெஞ்சில் தள்ளினாள்.

“ஓ! ரியலி? அதை டெஸ்ட் பண்ணிடலாம்.” என ஏளனக் குரலில் கூறி விட்டுச் சொடுக்கிட்டவன், ஒற்றை விரலைக் கதிரவனை நோக்கி நீட்டி வெளியில் செல்லச் சொல்ல, அவன் ‘நீ நடத்து ராசா’ என்ற ரீதியில் அறையை விட்டு வெளியேறி இருந்தான்.

“என்ன? என்ன டெஸ்ட் பண்ணப் போற?” நிதர்ஷனா திடுக்கிட்ட இதயத்துடன் நிற்க, அவனோ இருவருக்குமான இடைவெளியைக் குறைத்தான்.

“நான் உன்னை கிஸ் பண்ணுவேன். நீ ரியாக்ட் பண்ணக் கூடாது. உன் ஹார்ட் பீட் ரைஸ் ஆகக் கூடாது. ஹேண்ட் ஷிவர் ஆகக் கூடாது. இங்க இருந்து ஸ்வெட் ட்ராப்ஸ் வரக்கூடாது.” என அவளது நெற்றியோரம் சுண்டு விரலால் கோடிழுத்தான்.

பல மாதங்கள் கழித்து நாசி உணர்ந்த ஆடவனின் வாசம், அவள் கண்ணைக் கரிக்க வைத்தது.

இருப்பினும், இந்தக் காதல் இருவருக்கும் வேண்டாமென்ற நிலைப்பாட்டில் உறுதியை இழக்காதவள்,

“த்தோடா! இவர் பெரிய மிஸ்டர் இத்தாலி. இவரைப் பார்த்ததும் நாங்க அப்படியே உருகிடுவோமாக்கும்…” எனும்போதே அவனது வெப்ப மூச்சின் ஸ்பரிசம் உணர்ந்தது அவளது கன்னம்.

“நான் இத்தாலில இருந்து வந்தேன்னு உங்கிட்டச் சொல்லவே இல்லையே?” அந்தக் கூரிய விழிகள் அதீத சினத்துடன் அவளைக் கூறு போட, ஓர் நொடி அசைய மறந்தாள் நிதர்ஷனா.

“ஓ! உனக்கு சப்கான்ஷியஸ் மெமரி பவர் வந்துடுச்சோ?” நக்கலாய் வினவியவனின் புஜங்கள் இறுக, இரும்புக் கரம் தனைக் கொண்டு அவளது இரு கன்னத்தையும் இறுக்கிப் பிடித்தான்.

எதற்கும் பதில் கூறும் நிலையில் அவள் இல்லை.

சிறுகச் சிறுகப் பழகி வைத்த தனிமையைத் திடீரெனப் பறிக்க எண்ணும் ஆடவனின் அதிரடியில், கல்லாகச் சமைந்து நின்றவளுக்குப் பேச்சு நின்று போக, மறுநொடி அவனது இதழ் கவ்வலில் மூச்சும் நின்று போனது.

இமைகள் தானாய் மூடியதில், காந்தமாய் காலங்கள் பின்னோக்கி நகர்ந்தது.

ஆடவனின் சிவந்த வெற்று மார்பின் இதமான சூட்டில், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் நிதர்ஷனா. அதிகாலையிலேயே வழக்கம் போலத் துயில் கலைந்த யாஷ் பிரஜிதனுக்கு, அவ்விடியல் புதுமையாய் தோன்றியது.

தன்னை நெருக்கி அணைத்து உறங்கிக் கொண்டிருந்த நிதர்ஷனாவை, ஓர் முறை இறுக அணைத்தவனின் இதழ்களில் புன்னகை மிச்சமிருந்தது.

முந்தைய நாள் சர்ச்சில் நிகழ்ந்த திருமணமும், இரவின் நீளங்களும் அனிச்சையாய் நினைவடுக்கில் உதயமாக, “யூ ஆர் ஒண்டர்ஃபுல் ஆலம்பனா!” என முணுமுணுத்தான் ரசனையாக.

ஆடை துறந்த மேனிதனில் பார்வை அலைபாய, எப்போதும் இயந்திரமாய் எழுந்ததும் அடுத்தடுத்து வேலைகளில் மூழ்கிப் போகும் யாஷ் பிரஜிதன், இன்று தன்னவளை அணு அணுவாய் ரசித்திருந்தான்.

“கிரேஸி ஆன் யூ கடன்காரி!” என்றபடி அவளது இதழ் வரிகளில் கவரப்பட்டுக் குனிந்து, அவ்விதழ்களில் தனது உரிமையை நிலைநாட்டத் தொடங்க, அதில் உறக்கம் கலைந்து விட்டவளின் நயனங்கள் பெரியதாய் விரிந்ததில், விஷமப் புன்னகை அவனிடத்தில்.

அரக்கன் தொடரும்

மேகா

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 11

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
17
+1
3
+1
2

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்