Loading

அத்தியாயம் 2

இன்னும் வசந்தி நகராமல் இருந்ததில் தட்டைக் தழுவியபடி அவரைப் பார்த்தவள், “எதுவும் பேசணுமாமா?” எனக் கேட்டாள் கணித்து.

“உங்கிட்ட நான் என்ன சட்டசபை வீடியோவா கேட்கப் போறேன். உன் கல்யாண விஷயம் தான் அகா…” என்றார்.

அவளோ, “ம்மா, ஒரு புது ப்ராஜக்ட் பிளான் பண்ணிருக்கேன். ஸ்கெட்ச் உங்களுக்கு வாட்சப் அனுப்புனேனே பார்த்தீங்களா?” எனக் கேட்டாள் ஆர்வமாக.

“பார்த்தேன் பார்த்தேன்… எல்லாம் சரி தான்! ஆனா நீ எவ்ளோ நாளைக்கு இப்படித் தனியாவே இருக்கப் போற… பணம் எப்ப வேணா சம்பாரிக்கலாம். கல்யாணம் எல்லாம் அந்த அந்த வயசுல நடந்துடனும் அகாம்மா.

பாரு… நானும் உன்னை மாதிரி தான், பி.எச்.டி முடிச்சு தான் கல்யாணம் பண்ணுவேன்னு அடம்பிடிச்சு 29 வயசுல கல்யாணம் பண்ணிக்கிட்டேன். உன் அப்பாவும் செட்டில் ஆகிட்டுத் தான் கல்யாணம் பண்ணனும்னு அவரும் லேட்டா கல்யாணம் பண்ணாரு. எங்க கேரியர் எங்களுக்குப் பிடிச்ச மாதிரி அமைஞ்சது தான். ஆனா ஒரு வயசுக்கு மேல உடம்பு ஒத்துழைச்சா தான் அந்தக் கேரியரையே நம்மளால கன்டின்யூ பண்ண முடியும்.

பாரு மூட்டு வலி வந்து நான் வாலன்டையர் ரிட்டயர்மெண்ட் வாங்குனது தான் மிச்சம். உனக்கு நாங்க பார்த்துப் பார்த்துப் பண்ண வேண்டிய நேரத்துல, நீ எங்களுக்காகப் பார்த்துப் பார்த்து ஒவ்வொண்ணும் பண்ற. இதே உன் குழந்தைக்கும் வர வேணாம்டா. சீக்கிரம் கல்யாணம் பண்ணிட்டு ஒரு பேரனோ பேத்தியோ பெத்துக் குடுத்தா எங்களுக்கும் ஒரு ரெஃப்ரெஷ்மென்ட் இருக்கும்ல!” என்றார் கனிவுடன்.

“ஐயோ அம்மா, நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு எப்போ சொன்னேன்? லோன் முடியட்டும்னு தான் வெய்ட் பண்ணேன். அடுத்த ப்ராஜெக்டும் சக்ஸஸ் ஆனா தான் கல்யாணம்னுலாம் அடம்பிடிக்க மாட்டேன் சரியா…”

“அப்போ தேதி பார்த்துடலாமா? ரிஷு வீட்ல இருந்து வரச் சொல்லட்டா. அவங்க ரொம்ப நாளாவே கேட்குறாங்க. கல்யாணம் பண்ணிட்டு ரெண்டு பேருமா சேர்ந்து மலையைக் குடைங்க. யார் வேணாம்னு சொன்னது…” என்றதும் அகமொழி சிரித்தாள்.

“சரி, நானே ரிஷுட்ட சொல்றேன்மா!” என்றவளுக்கு லேசாய் வெட்கமும் நிறைந்தது.

வேலையை முடித்து விட்டுப் படுக்கையில் விழுந்தவள், வாட்சப்பில் ரிஷானின் சேட் பாக்ஸைத் திறந்தாள்.

“தூங்கிட்டியாடா?” அவனும் அப்போது தான் அறைக்குச் சென்றிருந்தான்.

அகமொழியிடம் இருந்து வந்த குறுஞ்செய்தியைக் கண்டதும் அவன் விழிகளும் மின்னியது.

“இல்லடி! நீ தூங்கலையா? இன்னும் குகையைத் தான் டிசைன் பண்ணிட்டு இருக்கியா?” என்றான் கிண்டலாக.

அதில் புன்னகைத்தவள், “அம்மா கல்யாணம் பத்திப் பேசுனாங்க ரிஷு” என்றதும் அவனிடம் சின்னதாய் ஒரு ஆர்வம்.

“என்ன சொன்ன? குகையையும் கட்டி முடிச்சா தான் இந்த அற்பப் பதருக்கு வாழ்க்கை தருவேன்னு சொன்னியா?”

சத்தமாகச் சிரித்து விட்டவள், “உன் வீட்ல பேசச் சொல்லலாம்னு சொன்னேன்டா டுபுக்கு…” என்றாள்.

“வாவ்வ்வ்வ்!” அவனது குதூகலம் குறுஞ்செய்தியிலேயே தெரிந்தது.

பல முத்த ஸ்மைலிகளை அனுப்பிக் கொண்டே இருந்தான்.

“டேய்! டேய்! போதும்டா…” முகத்தை மூடிக்கொண்டாள்.

“நேர்ல தான் ரொமான்ஸ் பண்ண முடியல. சேட்ல கூடவா அகா… லவ்வ்வ்வ் யூ!” என்றான் இதய வடிவத்தை அனுப்பி.

“லவ் யூ டூ…”

“சரி, நாளைக்கே அப்பா அம்மாவை வரச் சொல்லட்டா?”

“நாளைக்கேவா? அங்கிளுக்கு ஆபிஸ் இருக்கும்ல. வீக்கெண்ட் பார்த்துட்டு வரச் சொல்லுடா!”

“அப்போ எங்கேஜ்மென்ட் பண்ற மாதிரியே வரச்சொல்றேன். ஆல்ரெடி பேசுனது தான… எதுக்குப் புதுசா ஒரு தடவை பேசிட்டு, அப்பறம் அகைன் நிச்சயம் பண்ண வந்துட்டு… டைம் வேஸ்ட்ல!” என்றதில் அவளுக்கும் சரியென்றே பட்டது.

“கரெக்ட் தான், அவங்களை அலைய வைக்க வேணாம். நீ பேசிட்டு, நிச்சயமே வைக்கச் சொல்லு. சிம்பிளா போதும் ரிஷு.”

“டன்! கல்யாணம் கூட சிம்பிளா நம்ம கிளாம்பிங்லயே வைக்கச் சொல்லிடலாம். இதுல பியூட்டி என்ன தெரியுமா?”

அவனது குறுஞ்செய்தியில் நாணம் மிக்க, “என்ன?” என வினவினாள்.

“நம்ம ஹனிமூனுக்குப் பெருசா செலவு பண்ண வேண்டியது இல்ல…” எனச் சிரிக்கும் எமோஜியை அனுப்பி இருந்தான்.

“அட கஞ்சப் பிசுனாரி!” அவளும் குலுங்கிச் சிரித்தாள். அவளது சிரிப்பிற்கு ஆயுள்காலம் குறைவென்று அறியாதவளாக.

———————

அவளிடம் விடைபெற்றுச் சென்ற இரவு, அடிமாலியின் மற்றொரு பகுதியில் அழகிய பகலானது. தலைமுறைகளின் பெருமையையும், பணத்தின் செழிப்பையும் ஒருசேரச் சுமந்து நின்றிருந்தது கேசவன் நாயரின் வீடு.

பழமையின் அழகை இழக்காமல், காலத்திற்கு ஏற்ற வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டிருந்த அந்தப் பிரம்மாண்டமான கேரள இல்லம், வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கே ஒரு செல்வந்தக் குடும்பத்தின் அடையாளத்தைப் பறைசாற்றியது.

சிவப்பு ஓடுகளால் வேயப்பட்டிருந்த சாய்வான கூரை… முன்புறம் அகலமாக விரிந்த வராண்டா… நடுவில் திறந்த வானத்தை நோக்கி அமைந்திருந்த முற்றம்… அதைச் சுற்றி நீண்டு சென்ற மரத்தூண்கள்!

“அமையா, ஓடாத நில்லு!” அவ்வீட்டின் மூத்த மருமகளான அன்விதா மகளை நோக்கி ஓடினாள்.

அவளோ அழகு காட்டி விட்டு, “ம்ம்ஹும்!” என ஓட்டத்தைத் தொடர்ந்தாள்.

“மோளே கீழ விழுந்துடப் போற!” அவ்வீட்டின் மூத்த தலைமுறையான கல்யாணியின் கூற்றை மதியாது ஓடியவள் விஷ்ணுவர்தனின் காலில் முட்டி நின்றாள்.

“டாடி!” தந்தையை நோக்கிக் கையைத் தூக்கியவளைப் புன்னகையுடன் அள்ளிக் கொண்டவன், “என்ன மோளே, காலைலயே ரன்னிங் ரேஸோ?” என்றான்.

“ம்ம்ம்ம் அமையாக்கு நோ புட்டு…”

“வேற எந்து வேணும் என்ட மோளுக்கு…”

“பிரியாணி!” எனக் கேட்டவளைக் கண்டு சிரித்தவன், “காலைலயேவா? அம்மா, உங்க பேத்திக்கு பிரியாணி செஞ்சு குடுங்க!” எனச் சத்தமிட்டான்.

“அதுக்கென்ன, தாராளமா செஞ்சுட்டா போச்சு!” சிரித்தபடி கையில் காபித் தட்டுடன் வந்தார் சுஜாதா.

செய்தித்தாளில் மூழ்கி இருந்த கணவன் கோபால கிருஷ்ணனுக்கு காபியை நீட்டியவர், மாமனார் கேசவ நாயருக்கும் மாமியார் கல்யாணிக்கும் சூப்பை நீட்டினார்.

“எந்தா மோளே… காபி கிட்டுமோ!” கேசவ நாயர் கெஞ்சலாகக் கேட்க,

“மார்னிங் டயட் சூப் மாத்திரமேன்னு நிங்களுடே கொச்சுமகன் தெளிவாயிட்டுப் பரஞ்ஞிட்டுண்டு அச்சா.. நீங்க எந்து பரயானெங்கிலும் அர்ஜிட்ட சம்சாரிக்கு…” என மிரட்டியதில் கோபாலகிருஷ்ணன் நமுட்டு நகை புரிந்தார்.

“இன்னும் நினக்கு சுகர் வந்தில்லான்னு அகங்காரத்தில் ஆடாதேடா!” என மகனைக் கண்டு முறைத்ததில்,

“அய்யோ… அவன் நல்லாருக்குறதை ஏன் கண்ணு வைக்கிறீங்க” எனக் கல்யாணி அதட்டினார்.

அந்நேரம் விஷ்ணுவர்தனின் காலுக்குக் கீழ் இருந்த துணிப்பையைப் பார்த்த சுஜாதா, “கொடைக்கானலுக்குக் கிளம்பிட்டியா விஷ்ணு?” எனக் கேட்டார்.

“ஆமாமா, ஞான் போனா தான் காரியம் நடக்கும்!”

“செரி, பார்த்துப் பத்திரமா போயிட்டு வா…” என்றதும், மற்றவர்களிடமும் சொல்லி விட்டு நகர்ந்தவன், தனது காதல் மனைவிக்கு வெறும் தலையசைப்பை மட்டும் கொடுத்து விட்டுச் சென்றான்.

“அம்மா… என்டே ப்ளூ கிளிப் எவிடெ இருக்கு?” மாடியில் இருந்து தனது இளைய மகள் அனகா சத்தம் கொடுத்திட, இங்கோ அமையா “பாட்டி பிரியாணி…” எனக் கேட்டுக் குடைச்சல் கொடுத்தாள்.

“நிங்கள் ரெண்டு பேரோட என்னால முடியலப்பா…” சுஜாதா பரிதாபமாகக் கூறும்போதே அவரை இன்னும் கொஞ்சம் தொல்லை செய்யவே காரில் இருந்து இறங்கினான் அவன்.

கருமை நிறைந்த அலையான கேசத்திற்குச் சொந்தக்காரன். ஒரு கையில் தனது பையையும், ஒரு கையில் அலைபேசியையும் வைத்திருந்தவனின் பார்வையில் அலட்டலும் அலட்சியமும் தாண்டவமாடியது.

வெளிர் நிறக் கன்னத்தில் திருஷ்டிப் பொட்டாய் கன்னத்தின் ஓரம் அமைந்திருந்த சிறிய மச்சம், அவனது ஒட்டு மொத்த அழகையும் பதுக்கி வைத்திருந்தது. அர்ஜித் அகன்.

“சித்தப்பா…” அமையா மீண்டும் தனது ஓட்டப் பந்தயத்தைத் தொடர்ந்து அவனை நோக்கி ஓடினாள்.

மகளைக் கண்டதும், பையைத் தரையில் வைத்தவன் முட்டியிட்டு அமர்ந்து அவளை அள்ளி அணைத்துக் கொண்டான்.

“என்டே மோளே… சித்தப்பனோட இவ்ளோ ஸ்நேஹமா, என்னை மிஸ் சேய்தோ?” எனக் கேட்டான் கம்பீரம் குறையா கொஞ்சும் குரலில்.

“நோ… மிஸ் பண்ணல. டாய்ஸ்!” என்றவளை, “எடீ… அப்போ என்னை மிஸ் செய்தில்லே!” எனக் கண்ணை உருட்டிக் கேட்டான்.

“ம்ம்ஹும் நோ…” அவள் அசட்டையாகத் தலையாட்ட, “அப்போ டாய்ஸும் நோ…” என நாக்கைத் துருக்கினான்.

“மிஸ் செய்து… மிஸ் செய்து!” என்று அவன் கன்னத்தைப் பிடித்துக் கிள்ளி ஆட்டியவள் முத்தமும் கொடுத்துத் தாஜா செய்திருக்க, “நானும் என் குட்டிப் பொண்ணை ரொம்ப மிஸ் பண்ணேன்!” என முத்தமிட்டவன் அவளுக்காக வாங்கிய விளையாட்டுப் பொருளைக் கொடுக்க, அதை வாங்கிக்கொண்டு மீண்டும் உள்ளே ஓடினாள்.

“வந்நதும் வராததுமா வாசல்லயே லஞ்சம் வாங்கிட்டாம்மா…” எனத் தாயிடம் குறைபட்ட மகனை அணைத்துக் கொண்ட சுஜாதா, “ராத்திரியே வந்துன்னு விஷ்ணு பரஞ்சானே, ரிசார்ட்ல ஏன்பா தங்குன? வீட்டுக்கு வராம் ஆயிருந்தல்லோ?” எனக் குறைபட்டார்.

கோபால கிருஷ்ணன் தான், “வீட்டுக்கு வந்தால் தான் நீ பத்துப் பொண்ணுங்க போட்டோவை நீட்டுறியே… அதான் அவன் எஸ்கேப் ஆயிட்டான் போலே!” என வார,

“யூ ஆர் ஜீனியஸ் அச்சா…” எனக் கண் சிமிட்டிய மகனை முறைத்த சுஜாதா, “நீ பரஞ்சாலும் பரஞ்சில்லெங்கிலும் பொண்ணு போட்டோ காணிக்கத்தான் போறேன்!” என முறுக்கினார்.

“இது நல்லாருக்கே… வயசுப் பொண்ணை வீட்ல வச்சுட்டு இந்தத் தடிமாடுக்குக் கல்யாணம் பண்ண நோக்குறது எல்லாம் குடும்ப கவுரவத்துக்கு இழுக்கு அல்லே?” கேட்டபடி மாடியில் இருந்து இறங்கினாள் அனகா. கல்லூரி இறுதி வருடம் படிக்கும் மாணவி.

அர்ஜித்தின் நண்பியும், எதிரியும் அவள் ஒருவளே!

“வேண்டாம் அனு… குறச்சு நாளேக்கு நின் வருங்காலப் புருஷன் குடும்பம் நிம்மதியா இருக்கட்டும். இப்போளே போய் அவங்களைக் கொல்லாதே…” அர்ஜித் தீவிரமாக உரைத்ததில் கொல்லெனச் சிரிப்பலை எழுந்தது.

“நோக்கு அச்சச்சா இவனை…” கேசவ நாயரிடம் குமுறினாள் அனகா.

“நோக்கிக் கொண்டு தான்மா இருக்கேன். சில நேரத்துல உண்மையை மீறிப் பேச பற்றுந்தில்லா மோளே…” என்ற கேசவ நாயருக்கு அர்ஜித் அகன் ஹைஃபை கொடுத்துக் கொள்ள கல்யாணி, “முதல்ல நீ உருப்படியா படிச்சு முடி. அப்புறம் பரயாம் கல்யாணம் பற்றி…” என்று அவள் தலையில் கொட்டினார்.

“அங்கங்க பொண்ணுங்க கல்யாணத்தைப் பத்திப் பெத்தவங்க எவ்ளோ விஷமிக்கிறாங்க தெரியுமா?” அனகா குறைபட,

“அது பொண்ணுங்க கல்யாணத்துக்குத் தான் அனு. நீ அந்த லிஸ்ட்ல இல்லா!” மீண்டும் கேலி செய்த தமையனைத் தீயாக முறைத்தாள்.

சுஜாதாவோ, “நீ பேச்சை மாத்தாத… எந்தினு நைட்டே வரல?” என மீண்டும் வினவினார்.

“ஜோலி ம்மா!” எனத் தோளைக் குலுக்கிக் கொண்டு தனது அறை நோக்கிச் செல்ல, இங்கோ அவர்களுக்குச் சொந்தமான ஹில்மிஸ்ட் ரிசார்ட்டில் விருந்தாளிகள் கூட்டம் நிரம்பி இருந்தது.

எம்.டிக்குச் சொந்தமான படுக்கையறையில் இருந்து கலைந்த உடைகளை அணிந்து கொண்டிருந்தாள் பெண்ணொருத்தி.

விடியும் வரையிலும் தன்னுடன் சல்லாபித்த முதலாளி, தான் கண் விழிக்கும் நேரம் அங்கில்லாது போக அறைக்கதவு படபடவெனத் தட்டப்பட்டது.

“நயனா… கதவைத் திற…” வாசலில் கேட்ட குரலிலேயே அது தனது தோழி ரேஷ்மா எனப் புரிந்து கொண்டவள் கதவைத் திறந்தாள்.

புயலாக உள்ளே வந்த ரேஷ்மா, “என்னடி, நேத்து நைட்டு எங்கனே இருந்தது?” எனக் குறும்பாகக் கேட்க, “கரெக்ட் செய்யாம்னு பார்த்தேன். அவன் வெளுத்தப்போவே (விடிஞ்சதும்) ஓடிட்டானே…” என்ற நயனாவிற்கு வடை போச்சே நிலை தான்.

இத்தனைக்கும், இரவு அத்தனை வலியையும் பொறுத்துக் கொண்டாளே. அப்படியும் சில முறை வலியில் அலறியவளை அவன் கண்டுகொள்ளவும் இல்லை.

“சார் கூட நீ மட்டும் தான் உறவாடுனதா நினைக்காத… போன மாசம் நான் இருந்தேன்.” எனச் சிலுப்பிக் கொண்டாள் ரேஷ்மா.

பின் அவளே, “செரி, ரொம்ப நேரம் இங்க நிக்காத… விடிஞ்சதுமே இங்க இருந்து போயிடணும். இல்லன்னா மேனேஜர் கத்துவான்…” எனத் தரதரவென அவளை இழுத்துச் செல்ல, நயனாவின் விழிகள் அந்தக் கசங்கிய படுக்கையை ஒரு முறை தழுவிச் சென்றது ஏக்கமும் உடல் வலியுமாக.

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 45

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
10
+1
39
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment