Loading

அத்தியாயம் – 19

 சிவன், “ஆரும்மா வா போகலாம்!” என்று அவளைப் பிடித்து இழுத்தார். அவளுக்குத் தான் தேவாவை விட்டுச் செல்வது ஏதோ போல் இருக்க, “இல்ல மாமா, நாங்க இங்க ஒரு ப்ராஜெக்ட்காக வந்தோம். சோ… நான் அர்ஜென்ட்டா போகணும். நான் தேவா கூடப் போறேன், நீங்கப் போங்க…” என்றிட, சிவனின் முகம் கோபமாக மாறியது.

தேவா அவரை விழி உயர்த்தி, வெற்றிப் பார்வை பார்த்து, அவர் அசரும் நேரத்தில் அவளைத் தன் புறம் இழுத்து, “ஆமா மிஸ்டர் ஷிவ்” என ஆரம்பித்தவன், “ஓ சாரி மிஸ்டர் சிவன், நான் இசையைப் பத்திரமா, எங்க வேலை முடியவும் கூட்டிட்டு வரேன். உங்களுக்கு எதுக்கு சிரமம்…” என்று உள்குத்துடன் பேச, அவர் யோசிக்கும் முன் “போலாம் இசை” என அவளை இழுத்துக் கொண்டு நடந்தவன்,

போனில் யாருக்கோ தகவல் கொடுக்க, அடுத்து இரண்டு நிமிட நடையில் கார் ஒன்று அவர்கள் முன் வந்து நின்றது. அதில் இருவரும் ஏறிக்கொள்ள, இசை தேவாவை நினைத்து யோசனையில் இருக்க, தேவா, சிவனை நினைத்து யோசனையில் ஆழ்ந்தான்.

பின், ஆரு எதேற்றையாக ஓட்டுநர் இருக்கையில் பார்க்க அங்கு, மினிஸ்டரின் ஆள் ஒருவன் இருப்பதை பார்த்து, வேகமாக “தேவா! தேவா! இவன் மினிஸ்டர் ஓட ஆளு!

 

இவனை நான் அந்த ஆள் கூடப் பார்த்திருக்கேன். இவன் கார்ல போய் ஏறிருக்கோம்” என்று கிசுகிசுப்பான குரலில் கூறியவளின், குண்டு விழிகள் இன்னும் விரிந்ததில் அவன் சில நொடி விழுந்து எழுந்தான்.

ஆரு “ப்ச் தேவாஆஆ” என்று அவன் தொடையில் நறுக்கென்று கிள்ளியதில், அவள் கையை வெடுக்கெனத் தள்ளி விட்டவன், பளாரென அறைய,  கன்னத்தில் கை வைத்தவள் தான் சிலையாகி போனாள். “இப்போ, நான் என்ன பண்ணிட்டேன்னு என்ன அடிச்ச?” எனத் திகைத்தவளுக்கு அவனின் கோப முகம் அழுகையைத் தான் கொடுத்தது.

அவன் அடித்ததில் கன்னம் சிவந்து, அதில் கைத்தடம் பதிந்திருக்க, “எதுக்குடா இப்போ அடிச்ச? நான் என்ன பண்ணேன்… என் அம்மா கூட என்னை அடிக்கிற மாதிரி ஆக்ஷன் தான் பண்ணுவாங்க. இதுவரை அடிச்சதே இல்லை. நீ பொசுக்கு பொசுக்குன்னு அடிக்கிற… போடா!” என்று உதட்டைப் பிதுக்கியவள், ஏற்கனவே அவன் ஒருவனை எரித்ததில் மிரண்டிருந்தாள்.

இப்போது அவனை நினைத்து அவளுக்குப் பயம் தான் வந்தது. ஆனாலும், அவன்மேல் கோபம் மட்டும் வரமாட்டேன் என்று சதி செய்தது. தேவாவோ தலையில் கை வைத்து, நொந்து போய் இருந்தான். அவனால் கோபத்தையும் கட்டுப்படுத்த முடியவில்லை, அவள் காயப்பட்டு அழுவதையும் பார்க்க முடியவில்லை.

பைத்தியம் பிடிப்பது போல் இருந்திட, அவள் அருகில் சென்றவன் “இசை” என மென்மையாக அழைக்க, அவள் திரும்பவே இல்லை. “இசை! சாரி இசை… நான் வேணும்னு உன்னை அடிக்கல!” என்று, ஏதோ சொல்ல முயன்றவன் சொல்ல முடியாமல்,

“எனக்கே தெரில ஏன் அடிச்சேன்னு… என்னை யாராவது தொட்டா எனக்குப் பிடிக்காது… ஐ ஆம் சாரி!” என்று ஏதேதோ உளறியவன் புறம் குழப்பத்துடன் திரும்பியவள், அவனைப் புரியாமல் பார்க்க, தேவா சட்டென முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு, “சாரி…” என்று மீண்டும் சொல்லிவிட்டு, தள்ளி அமர்ந்தான்.

ஆரு தான், அவன்  நடவடிக்கையைக்  கண்டு குழம்பி விட்டாள். ‘ஒருவேளை ஸ்ப்ளிட் பெர்சனாலிட்டியா இருப்பானோ? தொட்டா கோபம் வருமா? ஏன் வரும்?’ என்று கடும் குழப்பத்துடன் தலையைப் பிய்த்துக் கொண்டிருந்தவளின், முகத்தைக் கண்டவன் பேச்சை மாற்றும் பொருட்டு, “எதுக்கு என்னைக் கூப்பிட்ட” என்று கேட்க, அவள், அந்தச் சிந்தனையைத் தற்போதைக்கு ஒத்தி வைத்து விட்டு, அவள் நினைத்ததை கூறினாள்.

அதற்கு அவன் குறுநகையுடன் “அவன் எங்க ஆளு தான். மினிஸ்டர்க்கு எதிரா ஆதாரத்தை ரெடி பண்ண, நாங்க ஆறு மாசமா வேலை பார்த்துட்டு இருக்கோம். அதுல அவன் இடத்துக்கே ஒருத்தனை வேலைக்கு அனுப்பி, அவனைப் பத்தின டீடைல்ஸ் கலெக்ட் பண்ண பிளான் பண்ணோம். அப்படி தான், இவனை அங்க வேலைக்குச் சேர்த்தோம். இவன் மூலமா தான், எங்களுக்கு எல்லா தகவலும் கிடைச்சுச்சு” என்றதும்,

அவள் “ஓ…ஆமா நீ ஏன் ட்ரக்ஸ் கடத்துன? அந்த மினிஸ்டர் இதுக்கு காரணம்னா அவன் ட்ரக்ஸ் கடத்தும்போது கையும் களவுமா பிடிச்சுடலாமே! எதுக்கு இவ்ளோ ரிஸ்க் எடுக்கணும்.” எனக் கேட்டவளிடம்,

 

“மினிஸ்டர் வெறும் பொம்மை தான். அவனுக்கு ‘கீ’ கொடுக்குறது, வேற ஒருத்தன். அவன் தான், ட்ரக்ஸ் தயாரிக்கிறது, விக்க ஏற்பாடு பண்றது எல்லாமே. இப்போ மினிஸ்டர தூக்கி உள்ள போடுறது பெரிய விஷயம் இல்ல. ஆனால் அந்த மினிஸ்டர் மாதிரி இன்னும் நிறைய பேர் உருவாகக் கூடாதுன்னு தான், இதெல்லாம் பண்ற மெயின் ஆளைப் பிடிக்கணும்னு முடிவு பண்ணோம்.

அதனால தான்,  உன் ரிசர்ச்  பேப்பர்ஸை, உங்கிட்ட கொடுக்கல. குடுத்தா, நீ அவனை உள்ள தள்ளிடுவ. அதுல அந்த முக்கியமான ஆள் பிளான் பண்ணி தப்பிச்சுடுவான். அப்படி ஆகிட கூடாதுன்னு தான், உன்னை ரிசர்ச் பண்ண விடாம தடுத்தேன். பட் உன் ரிசர்ச் பத்தி எனக்கு நிஜமாவே தெரியாது. நீ சொன்னதுக்கு அப்பறம் தான் அது அவ்ளோ முக்கியமானதுன்னே எனக்குத் தெரிஞ்சுது. அப்போவே கொடுக்கலாம்னு தான் நினைச்சேன். ஆனால் எனக்குக் கொஞ்சம் டைம் தேவைப்பட்டுச்சு, அந்த ஆளுக்கு எதிரா இன்னும் ஒரே ஒரு எவிடென்ஸ் ரெடி பண்ணிட்டா போதும் எல்லாரையும் உள்ள தள்ளிடலாம். அதுக்குள்ள தான் அவன் அதைக் கெடுத்துட்டான்.” என்றான் கோபத்துடன்.

“காட் இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? ஆமா யாரு அந்த இன்னொரு ஆள்” என்று புரியாமல் கேட்டிட,

தேவா “அது கூடிய சீக்கிரம் உனக்கே தெரியம். பட் ஒன் கண்டிஷன்…” என்றவன் சற்று நிறுத்த அவள் என்னவென்று பார்த்தாள்.

“இனிமே இங்க எமோஷன்ஸ்க்கு லாம் வேலை இல்ல… என்ன நடந்தாலும் அதை நீ அக்செப்ட் பண்ணிக்கணும். பண்ணுவியா?” எனக் கேட்டதும், அவள் அவனைக் காதலிப்பதை பற்றிப் பேசுகிறான் என்றெண்ணி, “உன்னை இழக்கிறது தவிர, எது நடந்தாலும் ஐ டோன்ட் கேர் அபௌட் தட்…” என்றிட அவன் திகைத்துப் பார்த்தான்.

“ப்ச், நான் என்ன பேசுறேன், நீ என்ன பேசுற இசை…?” என்று அவளை முறைத்தவனை அவளும் முறைத்து,

“சரி அதை விடு, என்னால உனக்கு என்ன காரியம் ஆகணும். உன் பிரெண்ட்ஸ் கிட்ட சொன்ன? நான் என்ன பண்ணனும்?” என்று கூர்மையாகக் கேட்க, அவன் கை எடுத்துக் கும்பிட்டு “உன் சங்காத்தமே தேவை இல்ல. உன்னை இப்போ மதுரைக்கு பிளைட் ஏத்தி விடறேன். ஒழுங்கா ஊர் போய் சேரு. உன் பிரச்சனையையும் சேர்த்து நானே சால்வ் பண்ணிட்றேன். உன்னை மாத்தி கடத்தாம இருந்திருந்தா எனக்கு இந்தத் தொல்லையே இல்ல!” என்று அவள் காதலிப்பதை நினைத்து முணுமுணுத்தான்.

“உன்னை யாரு மாத்தி கடத்த சொன்னது, என் ரிசர்ச் பேப்பர்ஸை மறைச்சு வைக்கச் சொன்னது? நீ ஆரம்பிச்சது தான் இதெல்லாம்.

இப்போ லவ் பன்றேன்னு சொன்னா மட்டும் உனக்குக் குத்துதா? அதெல்லாம் என்னால நீ இல்லாம ஊருக்குப் போக முடியாது. அதோட, நீ ஒண்ணும் எனக்கு ஹெல்ப் பண்ண வேணாம். எனக்குத் தெரியும் என்ன பண்ணனும்னு!” என்று சிலுப்பிக் கொள்ள, அவன் பெருமூச்சு விட்டான்.

பெண்களைக் கூட்டி செல்வதற்குள் ஆடவர்கள் தான் நொந்து விட்டனர். ஆராதனாவை விட்டு விட்டு வந்ததற்கு நிஷாந்தை உண்டு இல்லை என்று ஆக்கி விட்டனர் மூவரும். பின் ஒரு வழியாக அவர்களைச் சமாதானப்படுத்தி, அவர்கள் வீட்டிலேயே விடுகிறோம் என்று சொல்வதை பொருட்படுத்தாமல் அவர்களுடன் தான் வருவோம் என்று பிடிவாதம் பிடிக்க, பின், வேறு வழி இல்லாமல் அவர்களை ஆஸ்ரமத்திலேயே இறக்கி விட்டனர்.

அப்போது தேவா அவர்களை வெளியில் வரச் சொல்லியதில், மூவரும் கிளம்பப் போக, வைஷு அந்த ஆஸ்ரமத்தை தான் விழி விரித்துப் பார்த்தாள்.

“ஷான், இது நான் அன்னைக்கு பார்க்கும்போது பாழடைஞ்ச பங்களா மாதிரி இருந்துச்சு… இப்போ நியூ பில்டிங், ஸ்டடி ரூம், கார்டன்னு ப்பா! செம்மயா இருக்கு… எப்படி ஷான் இது?” என்று வியப்புடன் கேட்க, அவன் கீற்றுப் புன்னகையுடன், “எங்களோட கை வண்ணம் தான். இன்னும் தேவா இதுல நிறைய பண்ணிருக்கான். நான் உனக்கு வந்து காட்டுறேன்.” என்றவன்,

அவள் அருகில் வந்து மெதுவாக, “நவி, நீங்க கேட்டதுனால நாங்க இங்க கூட்டிட்டு வரல, ஆரு தான் மெஸேஜ் பண்ணி உங்களை இங்க விடச் சொன்னா… அவள் திலகன் சார் கிட்ட ஏதோ பேசணுமாம். பட் அவரு எதுவுமே சொல்லமாட்டாரு. நாங்க கேட்டப்பவே அவனைப் பத்தி எதுவுமே சொல்லல. அவள் தேவாவை விட ரொம்ப பிடிவாதம் பிடிக்கிறா! நீங்க அவளை வாட்ச் பண்ணிக்கோங்க.” என்று எச்சரிக்க, அவள் “ம்ம்” என்று தலையாட்டினாள்.

“விஷ்வா… டேய் விச்சு” என்று ஏதோ யோசனையில் இருந்தவனை உலுக்கிய அம்மு, “என்னடா நடக்குது இங்க? அந்த மினிஸ்டர் பாட்டுக்கு எங்களைத் தேடிகிட்டு இங்க வந்துடப் போறான். சின்னப் புள்ளைங்களை கூடக் கூட்டிட்டு போகாம, இங்க விட்டுட்டு போறேன்னு சொல்றீங்க” என்று முறைக்க,

 அவன், “நாங்க தான் உங்களை உங்க வீட்டுலயே விடுறோம்னு சொன்னோம்ல… இப்போ எங்க கூட வர்றது சேஃப் இல்ல அம்மு.” என்றான். “அது ஓகே டா,  இப்போ என்ன தான் பண்ணப் போறீங்க!” என்று குழப்பமாகக் கேட்க,

 அவன் “அம்மு! இப்போ  என்னால  எதுவும் சொல்ல முடியாது. ஆனால் கண்டிப்பா நடக்க போற விஷயம் ஆருவை அஃபெக்ட் பண்ணும். நீங்க அடம்பிடிச்சதுனால உங்களை இங்க கூட்டிட்டு வரல, தேவா தான் நீங்க அவள் கூட இருந்தா பெட்டெர்னு ஃபீல் பண்ணுனான். அதான்” என்றிட, அம்மு “ப்ச் எதையாவது புரியற மாதிரி பேசு…பேபி! நீ என்ன சொல்றன்னு எனக்கு சுத்தமா புரியல.” என்றாள் கடுப்புடன்.

விஷ்வா “அவளோட மாமா சிவன் நல்லவரு இல்ல, அதை மட்டும் மைண்ட்ல வச்சுக்கோ… அவளைப் பத்திரமா பார்த்துக்கோ” என்று விட்டு அவசரமாக வெளியில் செல்ல, அம்மு திகைத்து விட்டாள்.

ஆராதனா தேவாவை பற்றி நிச்சயம் திலகத்திற்கு தெரிந்திருக்கும் என்று நம்பியவள், அவரிடம் பேச வேண்டும் என நினைத்தே நிஷாந்திற்கு குறுஞ்செய்தி அனுப்பி, ஆஸ்ரமம் செல்லச் சொன்னாள்.

ஆனால் தேவா, அவளின் மாமா தான் குற்றவாளி என்று தெரிந்தால், அவளின் மனம் நிச்சயம் வருத்தப்படும் என்றுணர்ந்து அவளை ஊருக்கு அனுப்ப முயன்றான்.

அவள் பிடிவாதம் பிடிக்கவும், அவளைத் தனியே விடக் கூடாது என்றெண்ணி, அவர்களை ஆஸ்ரமமே அழைத்துச் செல்லும் படி, விஷ்வாவிற்கு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தான்.

இதில் தேவாவிற்கு புரியாத விஷயம், சிவன் ஏன் அவளின் மேல் துப்பாக்கி வைத்துத் தன்னை மிரட்டினான் என்பதே!

அவன் விசாரித்தது வரை, அவருக்குப் பிடித்த பெண் அவள் தான். அதனாலேயே அவளை வைத்து ஆதாரங்கள் சேகரிக்கலாம் என்று நினைத்தான். ஆனால் அவள் காதல் அது இது என்று சொன்னதும், அவளை அருகே வைக்க முடியாமல் கிளம்பச் சொன்னான்.

இதில் ஆண்கள் நால்வருமே அவள் இதை நினைத்து வருத்தப்படுவாளென நினைத்திருக்க, ஆனால் யாருமே எதிர்பாராத சம்பவம் ஒன்று அவள் மனதை சுக்கு நூறாக உடைத்தது.

தமி, அருண் கையைப் பிடிக்க, அவன் என்னவென்று பார்த்தான். “எனக்குப் பயமா இருக்கு அருண். நீ போகாத ப்ளீஸ். தேவாவை ஆருவை கூட்டிகிட்டு வரச் சொல்லு. மறுபடியும் ஷூட் பண்ண போறாங்க” என்று நடுங்கிட,

அவன் “ப்ச் அப்படிலாம் எதுவும் ஆகாது தமி. ஐ ஹேவ் டு கோ. அவங்க ஏதாவது பெருசா பண்றதுக்குள்ள, அவனுங்களை ஏதாவது பண்ணனும். இதுல உங்களை இழுக்க முடியாது புருஞ்சுக்கோ.” என்றான், அவளுக்குப் புரிய வைக்கும் நோக்கில்.

“என்னால உன்னை அனுப்ப முடியாது நீயும் புருஞ்சுக்கோ! அப்படி நீ போகணும்னா என்னையும் கூட்டிட்டு போ…” என்று கலங்கிய கண்களுடன் கூறியவள், அவனை இறுக்கி அணைத்துக் கொண்டாள். “எனக்கு நீ வேணும் அருண்… அந்த மினிஸ்டர் உன்னை ஏதாவது பண்ணிட்டா என்னால தாங்க முடியாது. எனக்கு நீ வேணும்.” என்று சொன்னதையே சொல்ல, ஒரு நொடி திகைத்தவன், பின், “தமி எனக்கு ஒண்ணும் ஆகாது… நான் என்ன போருக்கா போறேன். உன்னோட பெரிய அக்கப்போரா இருக்கு.” என்று கேலி செய்ய, அவள் அவனை விட்டு விலகி, கோப முகத்துடன் “ச்சி ப்பே…எங்கயோ போய்த்தொலை. எனக்கு என்ன?” என்று முறுக்கிக் கொண்டு நின்றாள்.

அவளைக் குறுஞ்சிரிப்புடன் பார்த்தவன், வெளியில் சென்று விட, அவள் மனதினுள்ளேயே அவனை வறுத்து எடுத்துக் கொண்டிருந்தாள்.

சில நொடிகளில் மீண்டும் அவளை நோக்கி வந்தவனை முறைத்து பார்த்தவளின் கன்னத்தில் நச்சென்று முத்திரையைப் பதித்தவன், “உனக்காக, நான் என்னைப் பத்திரமா பார்த்துப்பேன் தமி…” என்று கண் சிமிட்டி விட்டுச் செல்ல, அவள் தான் சிவந்து நின்றாள்.

தேவா “இறங்கி போ” என்று ஆருவுக்கு உத்தரவிட, அவனை முறைத்தவள், “எங்களுக்குத் தெரியும்!” என்று சிலுப்பிக் கொண்டு உள்ளே சென்றாள். அப்போது தான் அம்முவும் வைஷுவும் அவர்களுக்குத் தெரிந்த தகவல்களை ஒருவருக்கொருவர் பரிமாறி, குழம்பி நின்றகையில், ஆரு அந்த ஆஸ்ரமத்தையே சுற்றி முற்றி பார்த்து விட்டு, “ஹே கைஸ்! நீங்க ஏன் இப்படி சாணியை முழுங்குன மாதிரி மூஞ்சியை வச்சிருக்கீங்க!” என்று நக்கலடித்துக் கொண்டே வந்ததில் மூவரும் அவளை முறைத்தனர்.

அவள் ,அதனைக்  கண்டு   கொள்ளாமல் “சரி நான் போய் திலகன் சாரை பார்த்துட்டு வரேன்” என்று அவர்கள் தடுப்பதையும் பொருட்படுத்தாது அவர் முன் சென்று அமர்ந்தாள். அவரோ அவளை யாரென்று பார்க்க, “ஹாய் சார்… நான் உங்க ஆஸ்ரமம் டிடெக்டிவ்ஸ்ஸோட பிரெண்ட். பிரஸ் ரிப்போர்ட்டர்.” என்று ஏதோ ஒரு ஐடியை காட்ட, மூவரும் திருதிருவென விழித்தனர்.

ஏற்கனவே நிஷாந்த் அவரிடம், “எங்களுக்குத் தெரிந்த பெண் தான்.  உங்க  கிட்ட ஏதோ  பேசணும்னு  சொன்னா” என்று   மட்டும் சொல்லிருந்தான். அவர்களுக்குத் தெரிந்த பெண் என்பதால் அவரும் அவள் கேட்ட கேள்விக்குப் பொறுமையாகப் பதில் கூறினார். அவளோ நேரடியாகத் தேவாவை பற்றிக் கேட்டால் எதுவும் சொல்ல மாட்டார் என நினைத்து இப்படி மாற்றிப் பேசினாள். அது சரியாக வேலை செய்தது.

திலகன் “உங்களுக்கு என்ன வேணும்” என்று கேட்டிட, “ஆக்சுவல்லி சார்… நாங்க ஒரு டாக்குமெண்டரி ரெடி பண்ணலாம்னு இருக்கோம். அதாவது, ஆஸ்ரமம்ல இருக்குற குழந்தைங்க எந்த மாதிரி காரணத்துக்காக இங்க வர்றாங்க அப்படின்னு” என்கையிலேயே அவர், “இதுல கேட்க என்ன இருக்கு? பேரெண்ட்ஸ் நால கைவிடப்பட்டவங்க, பேரெண்ட்ஸ் இல்லாத பசங்கன்னு, இவங்க தான் இங்க வருவாங்க.” என்றார்.

“ஹ்ம்ம்… ஆமா சார், பொதுவா அப்படி தான் இருப்பாங்க. ஆனால் உங்க ஆஸ்ரமம்ல இந்த ஒரு ரீசன் மட்டுமில்லாமல், ஏதாவது வியர்ட் ரீசன் நால இங்க வந்தவங்க இருக்காங்களா…? ஈவன் பணக்கார பசங்களா இருந்தா கூட, சில நேரம்  இந்த மாதிரி ஆஸ்ரமம்ல வளர்றாங்க. அதுக்கு என்ன காரணம்?” என்று சுற்றி வளைத்துக் கேட்க,

அம்மு, ‘இதுக்கு  நீ, டைரக்ட்டா தேவாவப் பத்தி சொல்லுன்னே கேட்கலாம்டி’ என்று முறைத்தாள்.

அவளோ நிஜ பத்திரிக்கையாளராவே மாறி, வெகுதீவிரமாக அவரைப் பார்க்க, அவர் உண்மையிலேயே ஏதோ டாகுமெண்டரிக்காகக் கேட்கிறார்கள் என நினைத்து, “வித்தியாசமான காரணத்துனால இங்க நிறைய பேர் வந்துருக்காங்க… குறிப்பா ஒரு பையனோட கேஸ் என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுச்சு” என்றதில், அவள் “யாரு சார் அது” என்றாள்.

“என்கிட்டே பேர் லாம் கேட்காதீங்க… ப்ளீஸ்” என்றதும், அவள் “சரி சரி எங்களுக்கு நேம் லாம் வேணாம். ஜஸ்ட் இன்சிடென்ட் மட்டும் சொன்னாப் போதும்.” என்று நல்ல பிள்ளையாக ஆழம் பார்க்க, அவரோ, ஆஸ்ரமத்தில் ஒவ்வொருவர் பற்றியும் சொல்லலானார்.

அதில் நிஷாந்த், அருண், விஷ்வா என்று வரிசையாக அவர்கள் பெயரைச் சொல்லாமல் அவர்கள் ஆஸ்ரமம் வந்த காரணங்களைப் பற்றிச் சொல்ல, ‘கண்டிப்பா இந்த லிஸ்ட்ல நம்ம ஆளு வருவான்…’ என்று ஆர்வமாகி அவரைப் பார்க்க, அவர் சற்று பேசுவதை நிறுத்தினார்.

அவளோ ‘இந்த நேரம் பார்த்து இவர் பிரேக் போடுறாரே’ என்று எண்ணி, அவர் முகத்தையே பார்க்க அவளை ஏமாற்றாமல், வாயைத் திறந்தார். அவள் கூர்மையாகக் கேட்க ஆரம்பித்தாள்.

“இதெல்லாம் இல்லாம, நீங்க  கேட்ட மாதிரி,  வித்தியாசமான காரணத்தோடு ஒரு பையன் இங்க வந்தான். அவனா வரல, என் அப்பா தான் அப்போ இங்க நிர்வாகியா இருந்தாரு. அவரு தான் அவனைக் கூட்டிட்டு வந்தாரு.” என்று நிறுத்தியதில், “ஓ! எங்க இருந்து சார்?” என்று கேட்டவளிடம் “மனநல மருத்துவமனைல இருந்து!” என்றார் அமைதியாக.

அவரிடம் சீன் போடுவதற்காகக் கையில் வைத்திருந்த நோட்டையும் பேனாவையும் பட்டெனக் கீழே போட்டவள், “மெமெமெண்டல் ஹாஸ்பிடல்ல இருந்தா?” என்று திக்கி திணறிக் கேட்க, அவர் “ம்ம்” என்று தலையசைத்தார்.

“எத்தனையோ பெண் குழந்தைகளைப் பாலியல் தொல்லையிலிருந்து பாதுகாக்கணும்னு நினைக்கிறோம். ஆனால் நம்ம லூசுல விடுறது ஆண் பசங்களைத் தான். ஏன்னா அவங்களுக்கு அந்த மாதிரி எதுவும் நடக்காதுன்னு நம்ம ஆணித்தரமா நம்புறோம்.” என்று இடைவெளி விட, அவளோ எதற்கு இதைச் சொல்கிறார் என்று குழப்பமாக அவரைப் பார்த்தாள்.

 

திலகன், “என்னம்மா நான் சொல்றது புரியலையா? நான் சொன்னேனே மெண்டல் ஹாஸ்பிடல்ல இருந்து, என் அப்பா கூட்டிட்டு வந்த பையனைப் பத்தி, அவனைக் கொடூரமா பாலியல் வன்கொடுமை பண்ணிருக்காங்க.” என்றிட, அவளுக்குத் தான் ஒன்றுமே ஓட வில்லை.

அவரே தொடர்ந்து, “அதுவும் அவனோட அத்தையினால! அவனோட அப்பா அம்மா ரெண்டு பேருக்கும் ஒத்து போகலைன்னு, விவாகரத்து பண்ணிட்டாங்க. ஆனால் ரெண்டு பேருமே அவங்க பையனைப் பத்தி கவலைப்படல. ஏன்னா அவன் பையன். அவனே வளர்ந்து படிச்சுடுவான்னு அவங்களுக்கு ஒரு எண்ணம். ஆனால் சில வக்கிர புத்தி கொண்ட மனிதர்கள், அவங்களோட இச்சைக்காக அந்தப் பச்சை மண்ணுங்களை சிதைக்கிறாங்க…

அந்தப் பையன், அவன்  அத்தை வீட்டுல தான் வளர்ந்து இருக்கான். அவங்க அவனை கொடுமை படுத்தி, அவன் உடம்பு முழுக்க சூடு வச்சு, அவரோட இச்சைக்கு ஆளாக்கி, அதை அவன் வெளிய சொல்லப் போகும்போது, அவனோட பிறப்பு உறுப்பைக் கூட காயமாக்கி, அப்பறம் அவனே பைத்தியக் காரத்தனமா இப்படி பண்ணிக்கிட்டான்னு எல்லாரையும் நம்ப வச்சு, பைத்தியக்கார ஹாஸ்பிடல்ல கொண்டு போய்் போட்டுட்டாங்க.

ஆனால் உண்மையிலேயே சேர்க்க வேண்டியது அந்தப் பொண்ணை தான். இந்த மாதிரி பைத்தியங்கள்லாம் வெளிய நடமாடுறதுனால தான், இந்த மாதிரிப் பிஞ்சுகள் மனசளவுல உடைஞ்சு போயிடுறாங்க…” என்று கோபத்துடன் கூறியவர் பேசமுடியாமல் நிறுத்தியதில், பெண்கள் மூவருமே திகைக்க, ஆராதனாவிற்கு அசையக் கூட தோன்றவில்லை. அவள் கண்ணிலிருந்து மட்டும் நீர் வழிந்து கொண்டிருந்தது.

“என் அப்பா அந்த மென்டல் ஹாஸ்பிடல்க்கு எப்போவும் போய் அங்க இருக்குறவங்களை பார்த்துட்டு வருவாரு. அன்னைக்கு ஒரு நாள் அப்படி போனப்போ தான் அந்தப் பையனைப் பார்த்தார். எந்த இலக்கும் இல்லாம, உடம்பெல்லாம் காயத்தோட அமைதியா ஒரு மூலைல இருந்த அந்தப் பையனைப் பார்த்தவருக்கு, அவனைப் பைத்தியம்ன்னு நினைக்க முடியல… அவனை அங்க இருந்து மீட்டு, அவர் பொறுப்புல எடுத்துக்கிட்டு, வேற ஹாஸ்பிடல்ல போய்க் காட்டும்போது தான் அவன் நரக வேதனை அனுபவிச்சு இருக்கான்னே புரிஞ்சுது. அதுக்கு அப்பறம் கவுன்சிலிங் அது இதுன்னு என்னன்னவோ பண்ணி பார்த்தாங்க. ஆனால், அவன் மனசுக்குள்ள எதுவுமே போகல.

8 வயசு பிஞ்சுக்கு என்ன தெரியும். அட்லீஸ்ட் அவன் வயசு பசங்க கூட இருந்தா, அவன் கொஞ்சமாவது மாறுவானு தான் இங்க கூட்டிட்டு வந்தாங்க.

அப்போதான், அவன் வீட்டு ஆளுங்களை பத்தி விசாரிச்சு, அவங்ககிட்ட இவனைப் பத்தி சொல்லும்போது, பைத்தியக்கார பையன் எங்களுக்கு வேணாம்னு சொல்லிட்டாங்க.

என் அப்பா சொல்ல வர்றதை கூடப் பொறுமையா கேட்கல… ஆனால், அவனோட தாத்தா அப்போதான் கொஞ்ச நாளைக்கு முன்னாடி இறந்துருந்தாரு. அவருக்குப் பேரன் மேல ஏதோ பாசம் இருக்கும் போல! அவன் 18 வயசு வரவும், அவன் பேர்ல சில லட்சங்கள் கொடுக்கணும்னு உயில் எழுதி இருந்தார்.

அதைக் கூட அவங்க தர்ற ஐடியால இல்லை. என் அப்பா தான் வக்கீல வச்சு பேசி, அந்தப் பணத்தையும் கையோட வாங்கிட்டு வந்து, பேங்க்ல போட்டுருந்தாரு…

 

அப்பறம் கொஞ்சம் வருஷத்துல,  என் அப்பா இறக்கும் போது தான் இதெல்லாம் என்கிட்ட சொல்லி, அவனுக்குச் சேர வேண்டிய இந்தப் பணத்தை சரியாய் குடுத்துறணும்னு…” என்று அவர் பேசும் எதுவும் காதினுள் செல்லாமல், உயிரற்ற பொருளாய் அங்கிருந்து வெளியில் நடந்தவள், கால் போன போக்கில் எங்கோ நடக்க, மனமோ தேவாவை நினைத்தே உயிர் பிரியும் வலியை அனுபவித்துக் கொண்டிருந்தது. கண்ணிலோ கண்ணீர் மிதக்க, “எதுக்குடி என் மேலயே வந்து விழுகுற” என்ற அவனின் எரிச்சல் வாசகமும்,

“உன்னை ரேப் ஆ பண்ணேன்?” என்று அவள் கூறிய வார்த்தையில் அவன் முகத்தில் ஒருங்கே தோன்றிய வேதனையும், அவளை நடுக்காடென்றும் பாராது விட்டுச் சென்ற அவனின் கோபமும், “அவன் சட்டையைத் தான் பிடிச்சாள்,  அந்தப் பொண்ணு! விட்டான் பாரு ஒரு அறை” என்று அவனின் நண்பர்கள் கூறிய வாக்கியமும்… சில நேரங்களுக்கு முன்பு, “எனக்கு என்னைத் தொட்டு பேசுனா பிடிக்காது.” என்ற அவனின் சலிப்பான குரலும், அவளைக் கூறு போட, சுற்றி இருப்பவர்கள் அவளைப் பார்ப்பதையும் உணராது, அங்கேயே அமர்ந்து கதறி அழுதாள்.

அவனின் வேதனைகளும், காயங்களும் அவளைத் தூள் தூளாக நொறுக்கித் தள்ள, இங்கு, தேவா காரில் பின்னால் சாய்ந்து கொண்டு, “என்னை விட்டுப் போய்டு இசை… ப்ளீஸ்! இல்லைனா நான் உன்னைக் காயப்படுத்திடுவேன்!” என்று மனத்தினுள்ளேயே மன்றாடிக் கொண்டிருக்க, அவனறியாமல் அவன் கண்ணில் தேங்கிய ஒரு கண்ணீர் துளி காற்றில் பட்டுத் தெறித்தது.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
6
+1
2
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்