Loading

19 – வலுசாறு இடையினில் 

 

நிச்சயம் முடிந்து அனைவரும் சென்ற பின் வினிதா காமாட்சியிடம் வந்தாள். 

 

“அம்மா ..”

 

“என்ன வினிதா ? டீ போட்டு தரவா ? வேற ஏதாவது வேணுமா?”. என அடுப்படியை ஆட்கள் ஒழுங்குப்படுத்துவதை கவனித்தபடி கேட்டார். 

 

“அதுலாம் வேணாம்.. நான் வீட்டுக்கு கெளம்பரேன் மா “

 

“ஏன் அதுக்குள்ள போற? இரு சாயந்திரம் பலகாரம் போடறாங்க .. அதுக்கு அப்புறம் போவியாம்”

 

“அதுலாம் சாப்டற மாதிரியா இப்போ நெலம இருக்கு? “, வினிதா அலுத்தபடி பேசினாள். 

 

“வீட்ல நல்ல காரியம் தானே டி நடக்குது.. இப்போ பலகாரம் செய்யாம வேற எப்போ செஞ்சி தர்றதாம் ?”, என காமாட்சி அவளை பார்த்து கேட்டார். 

 

“ஓ.. இனிக்கி நடந்ததுக்கு பேரு நல்ல காரியம் ஆ ? “, என வினிதா இப்போது நேரடியாக கேட்டாள். 

 

“என்ன டி பேச்சு இது அபசகுணமா ? வாய்ல போடு”, என கண்டித்தார். 

 

“என் வாய்ல இல்ல .. நங்க தலைல நீங்க தான் மண்ண போடறீங்க ம்மா ..”

 

“ஏன் டி ? கல்யாணம் நல்ல விஷயம் தானே ? நம்மல விட அந்தஸ்தான ஆளுங்க. அவருக்கு சிநேகிதன் பையனாம்..”

 

“அதுலாம் சரி.. பையன் பொண்ணு பாக்கமாயே 4 நாள்ல கல்யாணம் வைக்கறது எல்லாம் இந்த ஊர்ல தான் நடக்கும்..”

 

“அதான் பையன் வேலை விஷயமா வெளியூரு போயிட்டாராம்.. 2 நாள்ல வந்துருவாரு-ன்னு நங்க அப்பா சொன்னாரு டி”

 

“பையன் குணம், மாப்ள வீட்டு ஆளுங்க குணம் எல்லாம் விசாரிச்சீங்களா ? பையன் போட்டோ கூடவா உங்களுக்கு காட்ட கூடாது? கட்டிக்க போறவளுக்கு கூட நீங்க இன்னும் எதுவும் காட்டல.. சொல்லல.. ஏன் ம்மா நீங்களும் இப்டி இருக்கீங்க?”, வினிதாவின் குரலில் கோபமும் ஆதங்கமும் கலந்து ஒலித்தது. 

 

“நான் என்ன டி பண்ணுவேன்? அவங்க அப்பா தான் எல்லாமே முடிவு எடுப்பாரு.. மறுத்து பேசி எனக்கு பழக்கம் இல்ல.. வீட்டு ஆம்பளைங்க எப்பவும் நமக்கு நல்லது தானே நினைப்பாங்க? எல்லாம் அந்த நம்பிக்கை தான்.. நம்ம வீட்டுக்குள்ளயே இருக்கோம். நமக்கு வெளி வெவரம் பத்தாது ல?”

 

“உங்கள யாரும் இப்போ நாட்டு நெலவரம் தெரிஞ்சி வச்சி கலெக்டர் வேலைக்கு போக சொல்லல.. நீங்க பெத்த பொண்ணு வாழ்க்கை நல்லா  இருக்குமா இல்லயான்னு கூட யோசிக்க மாட்டீங்களா? அவங்க பாட்டுக்கு பத்து நாள்ல கல்யாணம்-ன்னு  சொல்லிட்டு இப்போ நாலு நாள்ல கல்யாணம்-ன்னு  சொல்றாங்க.. எல்லாமே அவங்க இஷ்டம் தானா? நங்கை ஒண்ணும் பொம்மை இல்ல இங்க இருந்து தூக்கி வேற வீட்டு அலமாரில வைக்கறதுக்கு .. அவ மனச பத்தி யோசிச்சீங்களா ?”

 

“அது நாள் கொஞ்சம்  சுருக்கம் தான்.. அவகிட்ட தனியா என்ன கேக்கணும் டி? பெத்தவங்களுக்கு தெரியாத பிள்ளைக்கு எது நல்லது ? எது கெட்டதுன்னு ? “

 

“பையன் மகா குடிகாரன்.. அது தெரியுமா? ஏற்கனவே 2 கொலை செஞ்சி இருக்கான் அது தெரியுமா ?”, வினிதா தான் அறிந்த விஷயங்களை காமாட்சியிடம் கேள்வி கேட்பது போல கூறினாள். 

 

“என்ன டி சொல்ற?”, காமாட்சி அதிர்ந்து போய் கேட்டார். 

 

“ஒரு சண்டைல ஒடஞ்ச காலு இன்னும் கூடல.. கட்டு போட்டுட்டு நடக்க முடியாம தான் இருக்காரு நீங்க பாத்த மாப்பிள்ளை ..”

 

“இதுலாம் எனக்கு தெரியாது டி .. அவரு சிநேகிதன் பைய்யன்ன்னு மட்டும் தான் சொன்னாரு.. அவர மாதிரி தானே அவரு கூட பழகரவங்களும் இருப்பாங்கன்னு நான் நினைச்சிகிட்டேன் .. “, காமாட்சிக்கு பதற்றம் வந்தது. 

 

‘இந்த ஆளே மூளை கெட்டவன் இவன் கூட பழகரவனும் அப்டி இருந்தா உலகம் அடுத்த மாசமே அழிஞ்சி போயிடும்’, என மனதிற்குள் பேசிக்கொண்டு  காமாட்சியின் முக பாவனைகளை கவனித்துக் கொண்டு இருந்தாள். 

 

“என்ன டி கம்முன்னு நிக்கற.. ஏதாவது பேசு டி”, என வினிதாவை அழைத்தார். 

 

“நான் என்ன பேசறது ? நீங்க மாப்ள பாத்தா அழகு அப்டி இருக்கு.. இதுக்கு மேல என்ன பேசி என்ன ஆகிட போகுது.. நீங்களே அண்டாவுல பலகாரம் போட்டு திண்ணுங்க .. நான் கெளம்பறேன் .. அவ கல்யாணம் முடிஞ்ச அப்றம் அவ பரீட்சை எழுதறதுக்காவது ஏற்பாடு பண்ணுங்க.. இந்த ஒரு நல்ல விஷயமாவது அவளுக்கு கிடைக்கட்டும்.. இன்னொரு ஜென்மம் இருந்தா இந்த ஊர்ல மட்டும் பொண்ணா பொறக்கவே கூடாது..”, என கூறிவிட்டு வினிதா தன் இல்லம் நோக்கி நடந்தாள். 

 

காமாட்சி தீவிர சிந்தனையுடன் நங்கை இருக்கும் அறைக்கு வந்தார். இருளில் அமர்ந்து விட்டத்தை வெறித்தபடி அமர்ந்து இருக்கும் மகளின் நிலை முதல் முறையாக தாயின் கவனத்தை ஈர்த்தது. 

ஒவ்வொரு முறையும்  ஏகாம்பரமோ, காமாட்சியோ அடித்து விட்டால் இப்படி தான் அன்று இரவு முழுக்க விட்டத்தை வெறித்தபடி அமர்ந்து இருப்பாள். அப்போது எல்லாம் அவளின் பிடிவாதமாக தெரிந்த செயல் இப்போது முதல் முறையாக வேறு கோணத்தை யோசிக்க வைத்தது. 

 

மனம் நோகும் பொழுது எல்லாம் தான் அவள் இப்படி அமர்ந்திருக்கிறாள் என்பது காலம் கடந்த பின் அவளை பெற்ற தாயிற்கு புரிந்தது. 

 

“என்ன நங்க .. இருட்டுல ஒக்காந்து இருக்க?”, என கூறியபடி விளக்கை போட்டார். 

 

“வாழ்க்கையே இருட்டுல தான் இருக்கு.. கொஞ்ச நேரம் இருட்டுல ஒக்காந்தா ஒண்ணும் ஆகிட மாட்டேன்..”, என கூறி விட்டு கண்களை துடைத்து கொண்டு வேறு உடை மாற்ற எழுந்தாள். 

 

“ ஏன்டி இப்டி பேசற? உனக்கு தானே கல்யாணம் நிச்சயம் பண்ணி இருக்கு .. சந்தோஷமா இரு “

 

“சந்தோஷமா? என் வாழ்க்கைல அதுலாம் இல்ல ம்மா.. இருக்கவும் கூடாதுன்னு தானே இப்டி ஒரு பையனுக்கு கட்டி வைக்கறீங்க .. “, வினிதா கூறியது அனைத்தும் இவளும் கேட்டு இருந்தாள். 

 

“அது .. வினிதா சின்ன பொண்ணு அவளுக்கு வெவரம் பத்தாது.. உன் அப்பா எல்லாம் விசாரிச்சி தான் பண்ணுவாரு.. நீ அமைதியா இரு”, என சப்பை கட்டு காட்டினார். 

 

“நீ பையன நேர்ல பாத்து இருக்கியா ம்மா?”, இப்போதும் கணவனை விட்டு கொடுக்காமல் பேசும் தாயை பார்த்து கேட்டாள். 

 

“இல்ல..”

 

“அவங்க வீட்டுக்கு போய் இருக்கியா?”

 

“இல்ல”

 

“அவங்க வசதி எவ்ளோன்னு தெரியுமா?”

 

“நம்மல விட அதிகமின்னு அப்பா சொன்னாரு டி”

 

“நம்மல விட பல மடங்கு வசதி அதிகம். அப்டி பட்டவங்க என்னய ஏன் அவங்க வீட்டு மருமக ஆக்கணும்? அவங்க அத்தை பொண்ணுங்க எத்தன இருக்கு .. இல்ல அவங்க வசதிக்கு வேற பொண்ணா கிடைக்காது?”

 

“இது நம்ம அதிர்ஷ்டம் டி”

“எது ம்மா அதிர்ஷ்டம்ன்னு சொல்ற? இப்போ வந்து நாளைக்கு கல்யாணம் ன்னு சொன்னாலும் நான் கழுத்த நீட்டனும்.. இல்ல அவனோட சீப்புக்கு பொட்டு வச்சி பூ வச்சா கல்யாணம் முடிஞ்சதுன்னு அவங்க சொன்னாலும், கல்யாணம் முடிஞ்சதுன்னு நீங்க வீட்ட விட்ட தொறத்தி விற்றுவீங்க.. அப்றம் என் நெலம என்ன ? என்னய அவங்க கொண்ணு போட்டாலும் எனக்காக நீங்க யாரும் வர போறது இல்ல. கல்யாணம் செஞ்சி அனுப்பினா போதும் உங்க கடமை முடிஞ்சது.. போங்க போய் உங்க கடமையா பாருங்க “, என கோபம் கொண்டு கத்திவிட்டு குளியலறையில் நுழைந்து கொண்டாள் நங்கை. 

 

உள்ளே அவள் வாய் மூடி அழும் சத்தம் இவருக்கும் கேட்டது. கணவரிடம் பல விஷயங்களை பற்றி கேட்டு அறிந்து கொள்ள வேண்டும் என்று மனதில் தீர்மானித்து விட்டு வேலையை தொடர சென்றார். 

 

ஏகாம்பரம் மாப்பிள்ளை வீட்டு ஆட்கள் சென்றதும் இரத்தினத்தை அழைத்து கொண்டு வெளியே சென்றவர் இன்னும்  இல்லம்  திரும்பவில்லை. 

 

காமாட்சி வாசலில் ஒரு பார்வையும், பணி செய்பவர்களிடம் ஒரு பார்வையும் என அமர்ந்து இருந்தார். 

 

அப்போது அவர்களின் சொந்தக்கார பெண்மணி வீட்டிற்கு வந்தார், காமாட்சிக்கு தங்கை முறை கொண்டவர், பெயர் வாணி. 

 

“என்ன காமாட்சிக்கா .. பொண்ணுக்கு கல்யாணம் முடிவாகிடிச்சி.. ரொம்ப சந்தோஷம்.. பையன் எப்டி? என்ன படிச்சி இருக்காரு?”, என அவர் கேட்டார். 

 

“நம்ம மேலூர் ராஜதுரை மகன் தேவராயன் தான் பையன்..”, என காமாட்சி பொதுவாக கூற ஆரம்பித்தார். 

 

“மேலூர் ராஜதுரையா.. எனக்கு தெரியலக்கா.. ரொம்ப வருஷம் கழிச்சி ஊருக்குள்ள வந்ததால சட்டுன்னு ஞாபகம் வரல.. அப்பாவ கேட்டா தெரியும்..  சரி பையன் என்ன வேலை பண்றான்?”, என அவரும் அடுத்த கேள்விக்கு சென்று விட்டார். 

 

“விவசாயம் தான்.. 2 மில்லு ஓடுது.. தோட்டம் தொரவு ன்னு பெரிய பண்ணயம் பண்றாங்க “

 

“அப்படியா ரொம்ப நல்லது.. பொண்ணுக்கு புடிச்சி இருக்கா? பொண்ணு என்ன சொல்றா?”

 

“அவ சொல்றதுக்கு என்ன இருக்கு? இது அவங்க அப்பா பாத்து பண்றாரு ..”

 

“என்னக்கா நீ? நம்ம புள்ள படிச்ச புள்ள.. அதுக்கு நாலு விஷயம் தெரியும். அதுக்கும் மனசுல ஆசை இருக்கும் ல.. அது மனசுக்கு சரின்னு பட்டா தாணு அது வாழ்க்கை நல்லா இருக்கும்.. “

 

“நமக்கு அப்டியா டி செஞ்சாங்க?”, காமாட்சி எதிர்கேள்வி கேட்டார். 

 

“என்னக்கா பேசற நீ ? நம்ம காலம் வேற இந்த காலம் வேற..  கொஞ்சம் எல்லாரும் மாறுங்கக்கா.. பொட்ட புள்ள வாழ்க்கைய நிதானமா யோசிச்சி முடிவு பண்ணுங்க.. “

 

“எங்க இருக்கு நேரம் யோசிக்க? இன்னும் 4 நாள்ல கல்யாணம்ல.. “, என கூறியபடி காமாட்சியின் அம்மா அங்கே வந்தார். 

 

“என்ன பெரியம்மா சொல்ற ?”

 

“ஆமா டி வாத்தியார் மவளே.. பையனும் பாக்கல ஒண்ணும் பாக்கல.. வந்தாங்க நிச்சயம் பண்ணாங்க .. நாலு நாள்ல கல்யாணம்-ன்னு சொல்லிட்டு போயிட்டாங்க.. இதுல எங்க இருந்து யோசிக்கறது? புள்ள மனச கேக்கறது?”, என வருத்தம் தொணிக்க பேசினார் காமாட்சியின் அம்மா வேம்பு. 

 

“எதுக்கு பெரியம்மா இவ்ளோ அவசரமா கல்யாணம் வைக்கணும்? யாருக்கு என்ன கொற ?”

 

“போய் கேக்கணும் இவ புருஷன.. தாய் மாமன் சீர் பண்ணவாது நேரம் ஒத்துக்குவீங்களா இல்லயா?”, என மகளிடம் கேட்டார். 

 

“தாய்மாமன் நழுங்கு வச்சா தான் ம்மா எல்லாம் நடக்கும்..”, காமாட்சியின் குரல் உள்ளே சென்று விட்டு இருந்தது. 

 

“இன்னிக்கி எது தாய்மாமன் சம்மதம் கேட்டு நடந்துச்சி?”, என அவர் கேட்டதும் காமாட்சி பதில் பேச முடியாமல் அமைதியாக இருந்தார். 

 

“விடு பெரியம்மா.. மாமா எல்லாத்தையும் முடிவு பண்ணிட்டு தானே இவங்க கிட்ட சொல்லி இருக்காரு.. அக்கா மட்டும் என்ன பண்ணும்?”, என வாணி அக்கா முகம் வாடுவதை பார்த்துவிட்டு பதில் கொடுத்தார். 

 

“பொட்டச்சி நான் என்ன பண்றது? எல்லாம் ஆம்பளைங்க தான் பாத்து பண்ணுவாங்க “, என காமாட்சி தன்னிலை விளக்கம் கொடுத்தார். 

 

“பொட்டச்சின்னா என்ன அர்த்தமின்னு தெரியாமயே உன் வாழ்க்கை முடிஞ்சது.. வாழ்க்கைன்னா என்னனு தெரியாம என் பேத்தி வாழ்க்கைய முடிக்க போறீங்களா டி?”

 

“அம்மா..”, என குரல் உயர்த்தினார் காமாட்சி. 

 

“என்ன டி அம்மா? ஒரு அம்மாவா நீ உன் பொண்ணுக்கு எப்ப தான் நடப்ப? உன் புருஷனுக்கு பத்தினியா இருக்கறது ஒரு பக்கம் இருக்கட்டும். நீ பெத்த புள்ளைக்கு உன்னால எப்ப தான் நியாயம் செய்ய முடியுமின்னு சொல்லு ..”

 

“அவரு எல்லாமே பாத்து தான் பண்றாரு.. பொண்ணுக்கு அப்பா அவருக்கு தெரியாதது எனக்கு என்ன தெரிய போகுது? அவர மீறி நான் என்ன பண்றது?”

 

“போடி அறிவு கெட்டவளே.. ஒரு வீடுன்னா என்ன? ஒரு குடும்பம்ன்னா என்ன- ன்னு மொத புரிஞ்சிக்க.. நான் ஒண்ணும் கிறுக்கி இல்ல டி.. உன் அப்பத்தாகாரி அந்த பட்டம் கட்டி என்னைய வீட்ட விட்டு ஒதுக்கி வச்சா நான் பைத்தியம் ஆகிடுவேணா? ஆம்பள பொம்பள ரெண்டும் ஒண்ணா சரியான அளவுல கைக்கோர்த்து  நின்னா தான் குடும்பம் உருவாகும். ஒருத்தர் மேல ஒருத்தர் கீழ இருந்தா அடிமைத்தனம் தான் உருவாகும். உனக்கு சொல்றதுல ஒரு பிரயோஜனமும் இல்ல.. நகரு.. என் பேத்திய பாக்க போறேன்..”, என திட்டி விட்டு உள்ளே சென்றார். 

 

“என்னக்கா கண் கலங்கி நிக்கற?”, வாணி ஆதரவாக கேட்டார். 

 

“அம்மா இன்னும் அப்டியே தான் பேசுது.. அப்பா ரெண்டாவது கல்யாணம் செஞ்சி வீட்ட விட்டு ஒதுக்கி வச்சா கூட என்னைய பாத்துகிட்டது  எல்லாம் வேம்பு அம்மா தான்.. என்ன பெத்தவங்க எங்க அப்பாவுக்கு சேவகம் பண்ணவே நேரம் சரியா இருக்கும்.. கடைசில நோய் வந்து அவங்க ஏறந்த அப்பறம் கூட வேம்பு அம்மா இல்லாம அந்த குடும்பம் இப்பிடி இருந்து இருக்க  முடியுமா-ன்னு தெரியாது.. நம்ம ஊர்ல புரட்சி பேசினா யாருக்கு தான் புடிக்கும்? ஆனா இவங்க இன்னும் இப்டியே தான் இருக்காங்க.. யாருக்காகவும் மாறல.. அப்பாவுக்காக கூட மாறல.. என் அப்பத்தா இவங்கள மாறி இருக்க கூடாதுன்னு சொல்லி சொல்லி தான் என்னைய வளத்துச்சி.. அவங்க சொல்படி தான் நான் இப்போ வரை இருக்கேன்..  அதான் என் பொண்ணு மனசும் எனக்கு புரியவே இல்ல போல”, என கூறி கண்ணீரை துடைத்தார். 

 

“நம்ம புள்ளைக்கு எல்லாம் நல்லதா தான் நடக்கும்.. நீ கவல படாத.. வா உள்ள போய் வேலைய கவனிக்கலாம்.. நானும் இங்கயே தங்க தான் பைய தூக்கிட்டு வந்தேன்.. என் புருஷன் வழக்கம் போல வெளி ஊருக்கு போயிட்டாரு.. “ என இருவரும் பேசியபடி உள்ளே சென்று அடுத்து ஆக வேண்டிய வேலைகளை கவனித்தனர். 

 

“அம்மாடி முத்து .. “, என அழைத்தபடி வேம்பு பாட்டி அவள் அறைக்குள் சென்றார். 

 

“அம்மம்மா ..” என நங்கையும் அவரை கட்டிக் கொண்டாள். 

 

“எப்டி டி இருக்க? ஏன் மொகம் இப்டி வாடி போய் கெடக்கு? இன்னும் உன் அப்பன் புத்தி மாறவே இல்லயா ?”, என நேரடியாக விஷயத்திற்கு வந்தார். 

 

“என்ன சொல்றது அம்மம்மா ? அப்பத்தா இருந்த வரைக்கும் தான் நான் இங்க மனுஷி அவங்க போன அப்பறம் நீங்களும் இங்க வரது இல்ல .. நான் வெறும் ஜடம் தான் அம்மம்மா இவங்களுக்கு.. “, என இத்தனை ஆண்டு கால பிரிவை அவரை கட்டிகொண்டு போக்க முயற்சித்தாள். 

 

“என்ன செய்ய டி .. என் நெலம உன் மாமானுங்கள கரை சேக்கறத்துலயே இத்தன வருஷம் போயிடிச்சி.. உன் அப்பனுக்கு அந்த மாமன கண்டா ஆவாது..”, என அவளை சமாதானம் செய்தார். 

 

“மொத்தத்துல என்னைய எல்லாரும் தனியா தவிக்க விட்டுட்டீங்க போங்க “

 

“ஆமா டி ராசாத்தி.. உன் அப்பத்தா இருந்த தைரியத்துல தான் நான் இங்க வராம இருந்துட்டேன். அவளும் போன அப்பறம் நீ இந்த அளவுக்கு கஷ்ட படுவன்னு நான் யோசிக்காம விட்டுட்டேன்.. என்னைய மன்னிச்சிடு டி தங்கம் “, என அவளை தன் மடியில் படுக்க வைத்து பேச ஆரம்பித்தார். 

 

“பரவால அம்மம்மா.. உங்க ரெண்டு பேரால தான் நான் இன்னிக்கி இந்த மட்டுமாவது இருக்கேன்.. உனக்கு ஒரு விஷயம் சொல்லவா?” ,என எழுந்து அவரின காதில் தனக்கு வேலை கிடைத்த விஷயத்தை கூறினாள். 

 

“அப்புடியா? அடி என் தங்க முத்து.. கெட்டிக்காரி டி நீ.. நான் தான் சொன்னேன் ல அப்போவே நீ சொந்த கால்ல நிப்பன்னு..”, என அவளை கட்டிகொண்டு சந்தோஷத்தை வெளிப்படுத்தினார். 

 

“எங்க நின்னேன் ? பரீட்சை முடிஞ்சா தான் வேலைக்கு போக முடியும். இவங்க நாலு நாள்ல கல்யாணம் வச்சி இருக்காங்க.. “, என நங்கை அலுத்தபடி கூறினாள். 

 

“நீ ஏன் அதுக்குள்ள அவளோ தான் ன்னு நினைக்கற ? நம்ம கைல எதுவும் இல்ல தான்.. அதே மாதிரி தான் உங்கப்பன் கைலயும் எதுவும் இல்ல.. அவங்க நெனைக்கறது எல்லாம் நடந்துடுமா என்ன? எப்பவும் மனச தளர விட கூடாது. நமக்கு ஒரு வாய்ப்பு வரும் அப்போ கப்புன்னு அத புடிச்சிக்கணும்.. புரியுதா?”, என பெரியவராக அவளை தேற்றினார். 

 

“அதான் அப்பத்தா நானும் நினைச்சேன்.. அப்டி நினைச்சி தான் ஒரு பைத்தியக்கார தனமான யோசனை கூட பண்ணேன்.. ஆனா அப்டி பண்றதால ஒரு பிரயோஜனமும் இருக்காதுன்னு விட்டுட்டேன்”, என கூறிவிட்டு அவள் வீட்டை விட்டு செல்லலாம் என்று நினைத்ததை கூறினாள். 

 

“அசட்டு தனமா எதுவும் செய்யாத.. உங்கப்பன் இவ்வளவு அவசர பட என்ன காரணம்ன்னு மொத சொல்லு”, என கேட்டார் வேம்பு பாட்டி.    

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
11
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. அம்மம்மா அப்போவே வந்திருக்கலாம்😒😒😒 எல்லாம் நேரம் என்னத்த சொல்ல😶😶