Loading

19

“நித்து…” என மிதிலாவின் இதழ்கள் முணுமுணுக்க, அவனின் அறை வாசலில் நின்றிருந்த நித்திலவள்ளியோ இருவரையும் பார்த்த பார்வையில் மிதிலாவிற்கு ஒருமாதிரியானது.

“கண்ட கருமத்தையும் என் பொண்ண வச்சுக்கிட்டு தான் பண்ணனுமா?” என முணுமுணுத்தவள் தர்ஷினியை தூக்கிக் கொண்டு அறையை விட்டு செல்ல,

ரகுநந்தனை எரிக்கும் பார்வை பார்த்தாள் மிதிலா.

‘எனக்கு மட்டும் எங்க இருந்து டா இப்படி வந்து தொலைறீங்க. கொஞ்சம் நேரம் கூட லவ் பண்ண விட மாட்டேன்ங்கிறீங்க’ என அவன் புலம்ப, மிதிலாவோ உடனே அங்கிருந்து கிளம்பினாள்.

தன் பிளாட்டிற்கு வந்த நித்திலவள்ளியோ, ஊர்மிளாவை திட்டி தீர்த்தாள்.

“அம்முவ ஏன் அவன் வீட்டுல விட்டுட்டு வந்த? உன்னால அவள பார்த்துக்க முடியலைனா சொல்ல வேண்டியது தான, நானே அவள பார்த்துக்குவன்ல” என கடுகடுத்துக் கொண்டிருக்க,

அவள் ஏன் கோபப்படுகிறாள் என்று புரியாமல், “என்னாச்சு அண்ணி? அத்தான் கிட்ட தான தர்ஷூ இருந்தா. அதுக்கு ஏன் இவ்ளோ கோபப்படறீங்க?” என்றாள் ஊர்மிளா.

“அந்த கருமத்தை என் வாயால சொல்லுணுமாக்கும். இனி என் பொண்ண அவன் தொடக்கூட கூடாது” என அவள் பொரிந்துக் கொண்டிருக்க, அப்பொழுது தான் வேலை முடிந்து வந்த அவளின் கணவன் கதிரவன்,

“என்னாச்சு நித்தி? ஏன் இவ்ளோ கோபம்?” என்றான்.

“எனக்கு எங்க இருந்து பிரச்சனை வரப் போகுது. எல்லாம் என் அண்ணனால தான்” என்றவள் அதே கோபத்துடன் கிட்சனுக்குள் சென்று பாத்திரங்களை உருட்டிக் கொண்டிருக்க, அவன் புரியாமல் தன் தங்கையை பார்த்தான்.

அவளும் தனக்கு தெரியாது என உதட்டை பிதுக்க, “பாப்பாவ பார்த்துக்க ஊர்மி. அவள நான் சமாதானப்படுத்தறேன்” என்றவன் சமையலறைக்குள் நுழைந்தான்.

அவளோ கோபத்தில் ஒவ்வொரு பாத்திரத்தையும் ‘நங்’ ‘நங்’கென எடுத்து வைத்துக் கொண்டிருக்க அவளை பின்னிருந்து அணைத்தவன்,

“என்னாச்சு நித்து…?” என்றான் கனிவுடன்.

‘நித்து ‘ இதே வார்த்தையை தானே அவளின் உதடுகளும் முணுமுணுத்தன என நினைத்தவள்,

தன் கணவனிடம் அங்கு தான் பார்த்தைக் கூற, “என் மச்சான் வாழ்க்கைல ஒரு நல்லது நடக்கப் போகுதா… சூப்பர், அப்போ நமக்கு கல்யாண சாப்பாடு ரெடினு சொல்லு” என அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தவாறே கூற,

“உண்மைலயே உங்களுக்கு வருத்தம் இல்லையாங்க?” என்றாள் நித்திலவள்ளி.

அவளை தன்புறம் திருப்பியவன், “ஏன் வருத்தப்படணும் நித்து? மச்சான் மனசுல அந்த மிதிலா பொண்ணு இருக்கிறப்போ என் தங்கச்சி கூட அவரு எப்படி நிம்மதியா சந்தோசமா வாழ்வாரு, சொல்லு. அந்த வாழ்க்கை அவருக்கு மட்டுமல்ல நம்ம ஊர்மிக்கும் நரகமா போய்ரும். உன்னை மாதிரியே தான் எனக்கும் முதல்ல கோபம் இருந்தது, ஆனா மச்சான் அடுத்த நாளே வந்து என்கிட்ட பேசுனாரு. அவர் சொல்றதுல உள்ள நியாயமும் எனக்கு சரினு பட்டுச்சு, அதான் அதுக்கு அப்புறம் அதப் பத்தி நான் எதுவும் பேசல. ஆனா, நீயும் அத்தையும் தான் அவன் மேல இன்னும் கோபத்தை இழுத்துப் பிடிச்சு வச்சுக்கிட்டு இருக்கீங்க” என்றான் கதிரவன்.

“இல்லங்க. எனக்கு நம்ம கல்யாணம் ஆனதுல இருந்து நம்ம ஊர்மி எங்க வீட்டுக்கு மருமகளா வந்தா நல்லா இருக்கும்னு தோணுனதால தான் அவங்க கல்யாணத்தப் பத்தி அம்மாகிட்ட பேசுனேன். ஆனா அண்ணா அந்த மிதிலா பொண்ண காதலிக்கிற விசயம் எனக்கு தெரியாது” என்றாள் நித்திலவள்ளி சற்று கவலையுடன்.

“ஆனா உன் அம்மாவுக்கு இது தெரியும் நித்து” என்க,

“அம்மா இப்போ தான் ரீசன்ட்டா சொன்னாங்க” என்றவள் தலை குனிய,

“அத்தைக்கு அந்த பொண்ணு மேல என்ன கோபம்னு தெரியல. அதுனால தான் நீ ஊர்மிய உன் அண்ணனுக்கு கேட்கவும் அத்தை சரினு சொல்லிட்டாங்க, அவங்க இன்னொரு கேள்வியும் கேட்டாங்க. எந்த ஊர்ல இருக்கா, என்ன பண்றானு ஒன்னுமே தெரியாதப்போ எப்படி அவளுக்காக என் மகன் காத்திருக்கிறத நான் சரினு சொல்லுவேன்னு கேட்டாங்க. நான் என்ன பதில் சொல்ல? அம்மா, மகன் பாடு. ஆனா உன் அண்ணன் வாழ்க்கை அந்த மிதிலா பொண்ணு கைல தான் இருக்கு, நீ கொஞ்சம் உன் கோபத்தை குறைச்சுக்கிட்டா நல்லா இருக்கும்” என்றான்.

“புரியுதுங்க. ஆனா, ஊர்மி இருக்க வேண்டிய இடத்துல இன்னொரு பொண்ண என்னால ஏத்துக்க முடியல. ஆனா மிதிலாவ அண்ணா எப்போ கண்டுபிடிச்சாங்க? வீட்டுக்கு வர அளவு எப்படி பழக்கம்?” என்றாள் யோசனையுடன்.

“அத நாம இன்னொரு நாள் உன் அண்ணன்கிட்டயே கேட்டுக்கலாம். அப்புறம் அந்த இடம் அந்த பொண்ணுக்கு தான் சொந்தம் நித்து, அந்த இடத்துல நம்ம ஊர்மிய வைக்கணும்னு நினைச்சது நம்ம தப்பு. அதுனால கண்டதையும் நினைச்சு குழப்பிக்காதா, உன் அண்ணன பார்த்தா ஒரு ஸாரி மட்டும் கேட்ரு” என்றவன்,

“ரொம்ப பசிக்குது நித்து, ஏதாவது செய்” என்றவன், உடைமாற்ற தங்கள் அறைக்குள் சென்றான்.

தன் கணவன் கூறியதையே மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்த்தவள், தன் கணவனுக்காக காஃபி போட ஆரம்பித்தாள் நித்திலவள்ளி.

தன் அறைக்கு வந்த மிதிலாவிற்கோ, நித்திலவள்ளி பார்த்த பார்வையை நினைத்து உடல் கூசியது.

அவள் என்ன நினைத்திருப்பாள்? அவளை பார்த்தவுடன் மிதிலா அடையாளம் கண்டு கொண்டாள்.

தர்ஷினி அவளுடைய மகளா? அதனால் தான் ரகுநந்தனை ‘மாமா’ என்றழைத்தாளா!

தெரிந்தவர் மகள் என்று தான் அவள் நினைத்திருக்க, தற்பொழுது அது நித்திலவள்ளியின் மகள் என்று தெரிந்தவுடன் குழப்பங்கள் சூழ்ந்தது.

அப்பொழுது ஊர்மிளா யார்? நித்திலவள்ளிக்கும் அவளுக்கும் என்ன சம்பந்தம். ஊர்மிளா தன் அண்ணனின் இல்லத்திற்கு விடுமுறைக்கு வந்தவள் என்று தானே ஒருமுறை கூறினாள். அப்படி என்றால் நித்திலவள்ளியின் நாத்தனார் தான் ஊர்மிளாவா?

எதிரெதிர் பிளாட்டில் அண்ணனும் தங்கையும் இருக்க காரணம் என்ன? அவள் யோசிக்க யோசிக்க தலை வலித்தது.

அவள் அந்த புகைப்படத்தை ரகுநந்தனின் அறையில் கண்ட அதிர்ச்சியில் இருக்க ரகுநந்தனின் நெருக்கத்தில் இருந்து விலக தோன்றாமல் அப்படியே நின்றிருந்தாள் மிதிலா.

ஆனால் நித்திலவள்ளி பார்த்த பார்வையின் அர்த்தம் என்ன? என அவள் மனம் வெகுமாக பாதித்திருந்தது.

ஷோஃபாவில் அமர்ந்திருந்த ரகுநந்தனை கண்ட சிரஞ்சீவி, “என்ன டா ஆச்சு? ஆமா இது என்ன உன் ரூம்க்கு முன்னாடி கிளாஸ் சிதறி கிடக்கு?” என அப்பொழுது தான் உள்ளே நுழைந்தவன் வினவ,

ரகுநந்தனோ அதற்கு பதிலேதும் அளிக்காமல் தன்னவள் பார்த்த அந்த பார்வையின் அதிர்ச்சியில் இருந்தான்.

‘இன்னும் அவள் மனதில் தான் கிருஷ்ணனாக மட்டுமே தான் இருக்கிறோம்’ என்ற நினைவே அவனுக்கு கசந்தது.

நொடிக்கொருமுறை அவள் மனம் ராமனை தேடினாலும் அவன் அருகில் இருந்தும் அவள் ஏன் தன்னை கிருஷ்ணனாக மட்டுமே பார்க்கிறாள் என்று தான் குழப்பம் ஏற்பட்டது.

அன்று அந்த விபத்து நடக்கும் போது என்னை பார்த்தவளின் கண்ணில் நிச்சயம் காதல் இருந்தது. என் அழைப்பினால் தான் அவள் மயக்கமடைந்தாள்.

இன்றும் அதே காதலை அவள் கண்ணில் கண்டேன். ஆனால் அடுத்த நொடியே வெறுப்பை சுமந்த பார்வை. ஏன்? இன்னும் அவள் மனதளவில் என்னை ராமனா ஏற்க மறுக்கிறாள்? என்ற கேள்வியே சுற்றி வந்தன.

அவள் மனதை புரிந்து கொள்வதற்குள் நித்திலவள்ளி வேறு வந்து பார்த்து, அதனை அவள் எவ்வாறு எடுத்துக் கொண்டாளோ! என்ற நினைவு ஒருபுறம்.

தங்கைக்கும் காதலிக்கும் இடையில் சிக்கி தவித்தான் ரகுநந்தன்.

தான் கேட்டும் பதில் வராமல் இருக்க, “டேய்… என்ன ஆச்சு டா ரகு?” என அவனை உலுக்க,

“நீ எப்படா வந்த?” என்றான் ரகுநந்தன் அவன் உலுக்கலில் தன்னை நிதானித்து.

“நான் உள்ள வந்தத கூட கவனிக்காம என்ன யோசனை டா? ஆமா, என்ன இது? கிளாஸ் உடைஞ்சுருக்கு?” என்றான் உடைந்திருந்த கண்ணாடி சிதறலைக் கண்டு.

“நித்து தான் உடைச்சா…” என்க, “அவ, ஏன் இங்க வந்தா? என்ன டா நடந்துச்சு?” என்றான் குழப்பமாய்.

நடந்த அனைத்தையும் கூற, “உனக்கு மட்டும் பிரச்சனை குழப்பமாவே தான் வருமா டா” என தலையில் கை வைத்தவன்,

“மிதிலாவும் உன்னை தான் காதலிக்கிறாங்க. உனக்காக தான் அவங்களும் பதினான்கு வருஷம் காத்து இருக்காங்க. ஆனால் ஏன், உன்கிட்ட தன் காதல வெளிப்படுத்தாம வெறுப்ப காமிக்கிறாங்க? அப்படி என்ன டா உங்களுக்குள்ள?” என்றான் சிரஞ்சீவி.

“தெரியல டா. எனக்கே குழப்பமா இருக்கு, அவ எந்த நேரம் என்னை கிருஷ்ணனா பார்க்கிறா, எந்த நேரம் ராமனா பார்க்கிறானே தெரியல” என்றவன், தலையில் கை வைத்த வண்ணம் ஷோஃபாவில் சாய்ந்தமர்ந்தான்.

அதே நேரம் கோபமாக கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தாள் நறுமுகை.

“அக்கா உங்கள பார்க்க வந்தாளா சார்?” என்றவள், அங்கு ஏதோ நடந்திருக்கிறது என உடைந்திருந்த கண்ணாடி கிளாஸே அவளுக்கு காட்ட அமைதியாக ரகுநந்தனை பார்த்தாள்.

“என்னை பார்க்க தான் வந்தா முகி” என அவன் கண்களை திறக்காமலே சாய்ந்த வண்ணம் கூற,

“எனக்கு அவள பார்க்கவே பயமா இருக்கு. எல்லார் கிட்டயும் சாதாரணமா இருக்கிறவ, உங்கள பார்த்தாலோ இல்ல உங்ககிட்ட பேசுனாலோ ஏதோ பைத்தியம் பிடிச்சவ மாதிரி ரூம்ல வந்து உட்கார்ந்துக்கிறா. என்ன தான் நடக்கிறது உங்களுக்குள்ள” என்றாள் நறுமுகை.

“அதான் அவனுக்கே தெரியலனு சொல்றான். இவங்க காதல் கதைய கேட்டா நமக்கு தான் பைத்தியம் பிடிக்கும்னு நினைச்சா, கடைசில இவங்க ரெண்டு பேருக்கும் பைத்தியம் பிடிச்சுரும் போல” என்றான் சிரஞ்சீவி.

ரகுநந்தனின் காலடியில் வந்து அமர்ந்த நறுமுகை, “என்ன மாமா ஆச்சு? ஏன் அவ இப்படி பிகேவ் பண்றா? அவள நான் எப்பவும் கிண்டல் பண்ணுவேன், ‘கடைசில உன்னை கீழ்பாக்கத்துல தான் சேர்க்கணும். அங்கேயும் போய் என் ராமன், என் ராமன்னு தான் புலம்பிக்கிட்டு இருக்க போறனு’, ஆனா அத உண்மையாக்கிருவீங்க போல. அவ உங்கள பார்த்த நாள்ள இருந்து நார்மலாவே இல்ல. மத்தவங்க முன்னாடி அவ நார்மலா இருந்தாலும் உங்கள பார்த்த அடுத்த நொடி ரொம்ப மனசு உடைஞ்சு போறா. என்ன தான் ஆச்சு? அவளுக்கு” என கண்களில் கண்ணீர் வழிய கேட்டவளை, தன்னருகே அமர வைத்தவன்,

“உன் அக்கா என்னை எந்தளவு காதலிக்கிறாளோ அதே அளவு என்னை வெறுக்கிறா கண்ணம்மா. வெறுப்புக்கும் விருப்புக்கும் நடுவுல மாட்டிக்கிட்டு முழிக்கிறா. அறியா வயசுல அவ என்மேல வச்ச காதல் இப்போ பெருசா முளைச்சு நிக்குது, அளவுக்கதிமான அன்பும் காதலும் கூட ஒருத்தர பைத்தியமாக்கும். இப்போ என் ஜானுவும் அதே நிலைமைல தான் இருக்கா” என்றான் ரகுநந்தன் பொறுமையாய்.

“கிருஷ்ணாவா அவ உங்கள வெறுக்கிறது அந்த பேருக்காக மட்டுமா மாமா?” என்றவளைப் பார்த்து புன்னகைத்தவன்,

“அது அவ கற்பனை முகி. அவ மனசுல கிருஷ்ணாங்கிற பேர வெறுத்தவ அதே பேர்ல நான் அறிமுகமாகவும் அந்த வெறுப்ப என்கிட்ட காமிச்சா. ஆனால் அதே நேரம் அவ விரும்புற ராமனாவும் என்னை பார்க்கிறவ நிஜத்துக்கும் நிழலுக்கும் இடைல மாட்டிக்கிட்டு தவிக்கிறா. உன்னை நாளைக்கு ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போறேன், அப்போ தான் ஜானுவோட மனநிலை உனக்கு புரியும்” என்றான் ரகுநந்தன்.

“ம்…” என்றவள், எழுந்து செல்ல பின் ஏதோ நினைவு வந்தவளாய், “அவ சீக்கிரம் என் அக்காவா எனக்கு கிடைப்பா இல்ல” என தயங்கியவாறே அவள் கேட்க,

“என் ஜானுவ அப்படியே உன்கிட்ட ஒப்படைப்பேன், போதுமா” என்றான் ரகுநந்தன்.

“ம்…” என தலையாட்டியவள், தங்கள் பிளாட்டிற்கு சென்றாள்.

இதுவரை அமைதியாக இருந்த சிரஞ்சீவி, “சத்தியமா ஏதோ புரியாத மொழி படம் பார்த்த மாதிரி இருக்கு டா. சுத்தமா புரியல” என்றான் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு.

அவனைக் கண்டு சிரித்தவன், “என் ஜானுவுக்கு இப்போ நான் மூணு ஆள் டா. ஒன்னு அவ விரும்புற ராமன், இன்னொன்னு அவ வெறுக்கிற கிருஷ்ணன். அப்புறம் ரகுநந்தன். அவ பார்க்கிற ஒவ்வொரு தடவையும் அவ கண்ணுக்கு நான் ராமனா தெரியறனா இல்ல மத்த ரெண்டு பேரா தெரியறனானு தான் பிரச்சனையே. பதினான்கு வருடம் அவ மனசுல சுமந்த காதல் தான் இப்போ இப்படி வந்து நிக்குது” என்றான் ரகுநந்தன்.

“ஆக உனக்கு மூணு பேரு. அது தான் அவங்களோட குழப்பம், சரியா?” என்றான் ஒரளவு நூலிழையைப் பிடித்து.

“ம்…” என புன்னகைத்தவன், “போக போக உனக்கே புரியும்” என்றவன் தன் அறைக்குள் சென்றான்.

இங்கு மிதிலாவோ, அதே புகைப்படத்தை தன் கரங்களில் வைத்துக் கொண்டு சுவற்றை வெறித்துக் கொண்டிருந்தாள்.

சென்னை

அம்பிகாவின் உடல்நிலை முன்னேற்றம் கண்டிருந்ததால் அவரை டிஸ்சார்ஜ் செய்திருக்க, அவரை வீட்டிற்கு அழைத்து வந்தனர் துகிலனும் ராஜாராமும்.

வீட்டினுள் நுழைந்தவுடன், “ஏங்க, நாளைக்கு கோயம்புத்தூர் போகலாம். டிக்கெட் போட்ருங்க” என்ற அம்பிகாவை பார்த்து இருவருமே அதிர்ந்தனர்.

“ம்மா, என்ன விளையாடுறீங்களா? உங்க ஹெல்த் கண்டிசனுக்கு இப்போ கோயம்புத்தூர் போனா அப்புறம் திரும்ப உங்களுக்கு தான் முடியாம போகும். இதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன்” என்றான் துகிலன்.

“அதான் கூட நீ இருக்கீல டா. என் மகன டாக்டருக்கு தான படிக்க வச்சேன், அப்புறம் எனக்கு என்ன கவலை டா” என்க,

“ம்மா… உங்க ஹெல்த்தோட என்னால விளையாட முடியாது, இதுக்கு நான் அனுமதிக்கவே மாட்டேன்” என்றான் கோபமாக.

“இல்ல டா. என்னால ரகுவ பார்க்காம இருக்க முடியல டா, அவன உடனே பார்க்கணும், ப்ளீஸ், டிக்கெட் போடு. உனக்கும் ஆஸ்பத்திரில லீவு கேளு” என்க, அவனோ தன் தந்தையின் முகத்தைப் பார்த்தான்.

அவரோ, எதுவும் பேசாமல் “டிக்கெட் போட்ரு துகி. ப்ளைட் டிக்கெட்டே போட்ரு, உன் அம்மா கார்லயோ இல்ல பஸ்லயோ இங்க இருந்து அவ்ளோ தூரம் டிராவல் பண்ண முடியாது” என்றவர் அத்தோடு பேச்சு முடிந்ததாய் அவர் அறைக்குள் செல்ல,

“ம்…” என்றவாறே மறுநாளே சென்னையில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் விமானத்தில் மூன்று டிக்கெட்கள் முன் பதிவு செய்தான் துகிலன்.

தன் அன்னை உறங்கிய பின் தன் தந்தையிடம் வந்த துகிலன், “அம்மா தான் புரிஞ்சுக்காம பேசறாங்கன்னா நீங்களும் ஏன் ப்பா எதுவும் பேசாம இருக்கீங்க?” என்றான்.

“இல்ல டா. அம்மா, மகன் சண்டை இப்போதிக்க முடியற மாதிரி தெரியல. ரெண்டு பேருமே அவங்க அவங்க பக்க நியாயத்த தான் நினைக்கிறாங்களே தவிர ஒருத்தரும் கீழ இறங்கி வர்ற மாதிரி தெரியல. மூணு வருஷம் ஓடிருச்சு டா உன் அண்ணன பார்த்து, பேசி. இத இப்படியே இன்னும் வளர விட வேண்டாம், அவளே ஏதோ முடிவு பண்ணி தான கோயம்புத்தூர் போகலாம்னு சொல்றா. போய் தான் பார்ப்போம். இப்பயாவது இதுக்கு ஒரு தீர்வு கிடைச்சா சந்தோஷம்” என்றார் ராஜாராம்.

அதற்கு மேல் தன் தந்தையிடம் பேச முடியாது என்பதால் தன் அண்ணனுக்கு தகவல் தெரிவிக்க அவனை அலைப்பேசியில் தொடர்பு கொண்டான் துகிலன்.

“சொல்லு டா…” என்ற தன் அண்ணனின் குரலில் ஏதோ வித்தியாசத்தை உணர்ந்தவன், “என்ன ண்ணா, ஏதாவது பிராப்ளமா?” என்றான் துகிலன்.

“புதுசா என்ன பிரச்சனை டா வந்தற போகுது, ப்ச்… நீ சொல்லு டா, அம்மா இப்போ எப்படி இருக்காங்க. வீட்டுக்கு வந்தாச்சா?” என்றான் ரகுநந்தன்.

“வந்தாச்சு ண்ணா. ஆனா கூடவே இன்னொரு பிரச்சனையும் உண்டாகிருக்கு இப்போ” என்றான் துகிலன்.

“இப்போ என்ன பிரச்சனை?” என்க,

“அம்மா நாளைக்கே கோயம்புத்தூர் வரணும்னு சொல்றாங்க ண்ணா. நான் எவ்ளோ சொல்லியும் கேட்கல, டிக்கெட் புக் பண்ணிட்டேன்” என்றான் சற்று கவலையுடன்.

“சரி டா. பார்த்துக்கலாம், உன் அண்ணி கூடிய சீக்கிரம் நம்ம வீட்டுக்கு வரப் போறா. அதுனால தைரியமா என் ஜானுவோட மாமியார இங்க கூட்டிட்டு வா” என்க,

“அண்ணா…” என்றான் துகிலன்.

“என்ன நடந்தாலும் சமாளிச்சு தான் ஆகணும் டா. இதுல ஜானுவுக்கு விருப்பம் இருக்கா இல்ல அவளோட மாமியாருக்கு விருப்பம் இருக்கானுலாம் இனி காலம் தாழ்த்துனா என் வாழ்க்கை இப்படியே தான் அந்தரத்துல தொங்கும்” என்றான் தீர்மானமாய்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
11
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்