Loading

அத்தியாயம் – 18

 தேவாவின் அறையையே தவிப்புடன் பார்த்திருந்த இசை, செய்வதறியாது நிற்க மற்றவர்களுக்கும் ஒன்றும் புரியவில்லை. ஆண்கள் மூவரும், தேவாவின் அறைக்குச் சென்று, “நீதான அந்தப் பேப்பர்ஸை கிழிச்ச! இப்போ எப்படி அது திரும்பி வந்துச்சு?” என்று கேட்க,

தேவா அமைதியாக, “நான் அந்தப் பேப்பர்ஸை கிழிக்கவே இல்ல. உங்ககிட்ட நான் காட்டுனது வேற பேப்பர்ஸ். அவளோடதை நான் தனியா எடுத்து வச்சுருந்தேன்.” என்றதும் ‘இதை ஏண்டா முன்னாடியே சொல்லல’ என்ற ரீதியில் மூவரும் அவனை முறைத்தனர்.

அதை உணர்ந்தவன் “ப்ச், உங்க கிட்ட சொன்னா,  நீங்க சும்மா இருப்பீங்களா? அந்த லூசுங்ககிட்ட போய் உளறி வச்சுருவீங்க. அப்பறம் அந்த இசை உளவாளி மாதிரி அந்தப் பேப்பரை தேடிகிட்டு அலையுவா?” என்று கடுப்படிக்க, விஷ்வா “அது சரி, அவளை வச்சு காரியம் ஆகணும்னு தான, நீ அந்தப் பேப்பரை அவள் கிட்ட குடுக்காம இருந்த, இப்போ மட்டும் எதுக்கு குடுத்த?” என்றான் சந்தேகமாக.

அதில் சற்று விழித்தவன், “அது… அவளால எந்தக் காரியமும் ஆக வேணாம்! இவ்ளோ பண்ண நமக்கு, அந்த ஷிவ்வ பிடிக்க எவ்ளோ நாள் ஆகிடப் போகுது? அவள் போகட்டும்!” என்றான் எங்கோ வெறித்துக் கொண்டு.

நிஷாந்த் “இல்ல தேவா… அவள் நினைச்சா அந்த ஷிவ்க்கு எதிரா நிறைய ஆதாரம் ரெடி பண்ணலாம். அதுக்கு தான” என்னும் போதே, “நான் வேணாம்னு சொல்லிட்டேன்… எல்லாரையும் கிளம்ப சொல்லுங்க இப்பவே” என்றவன், அதில் திகைத்தவர்களை அழுத்தமாகப் பார்த்து, “அவங்க போறது கஷ்டமா இருந்தா, நீங்களும் அவங்க கூடப் போங்க. நான் பார்த்துக்கிறேன்.” என்றதும் மூவரும் அவனைப் பார்வையால் சுட்டெரித்தனர்.

விஷ்வா “எந்தப் பிரச்சனையா இருந்தாலும் எங்களை கழட்டி விடுறதுல மட்டும் குறியா இரு…!” என்று கோபத்துடன் கூற, தேவா பெருமூச்சு விட்டு “இல்ல விஷ்வா! என்ன இருந்தாலும் அந்தப் பொண்ணுங்க உங்களை நம்புறாங்கல்ல சோ…” என்று பேசி முடிக்கும் முன்,

நிஷாந்த் “ஆரு கூடதான் உன்னை நம்புறாள், நீ அவளை லவ் பண்ணுவன்னு. அப்போ நீ மட்டும் அவளை அவாய்ட் பண்ணலாமா?” என்று நேரடியாகக் கேட்டு விட, அருணும் விஷ்வாவும் ‘நீ மட்டும் தான்,  இத்தனை நாளா  இவன் கிட்ட அடி வாங்காம இருந்த… இன்னைக்கு உன் பல்லும் உடையப் போகுது.’ என்று மானசீகமாக ஹை ஃபை கொடுத்துக் கொண்டனர்.

அவனைக் கோபத்துடன் முறைத்தவன் “எவளும் என்னை நம்ப வேணாம்… நான் சொன்னேனா? அவளை லவ் பண்ணச் சொல்லி?” என எரிமலையாய் பொங்கிட, அதில் அவனுக்கு உள்ளுக்குள் குளிர் எடுத்தாலும், 

“அப்போ, அவள் லவ் பண்றது உனக்கு ஏற்கனவே தெரியும் அப்படித்தான?” என்றான் கேள்வியாக, அவள் காதலிப்பதை கூறியதும் அவன் முகத்தில் எந்த அதிர்வும் இல்லை என்பதை உணர்ந்து.

தேவா அமைதியாக இருந்ததில் “சொல்லு தேவா? ஏன் அமைதியா இருக்க? அவள் உன்னை உண்மையாவே லவ் பண்றாள்… அது தெரிஞ்சும் நீ ஏன் அவளை போக சொல்ற…?” என்று கேட்டவனிடம், 

“எனக்கு அவளைப் பிடிக்கல. அவள் லவ் பண்ணா, அதுக்கு நான் எதுவும் பண்ண முடியாது…” என்றான் அழுத்தம் திருத்தமாக.

அருண், அவனை நம்பாமல் பார்த்து, “அவளை லவ் பண்ணலைன்னா… எதுக்கு நீ மட்டும் அவளை இசைன்னு கூப்பிட்ற? ஏன் அவளுக்கு நைட் போய் மருந்து போட்டு விட்ட?” எனக் கேட்க, மற்ற இருவரும் ‘இது வேறயா’ என்று தேவாவை பார்த்தனர்.

தேவா சிடுசிடுப்பாக “எந்தப் பேர் வாயில வருதோ, அதைச் சொல்லித் தான் கூப்பிட முடியும். அவளுக்கு மருந்து போட்டு விட்டது, என்னால அடி பட்டுச்சுன்ற எண்ணத்துல தான். இன்னும் வேற ஏதாவது கேள்வி இருக்கா?” என்றான் தீப்பார்வையுடன்.

விஷ்வா விடாமல், “தேவா நீ ஆருவை கல்யாணம் பண்ணிக்கோயேன். எப்படியும் நீ யாரையோ கல்யாணம் பண்ணிக்கபோற, அது ஏன் அவளா இருக்கக் கூடாது?” என்று எப்படியாவது அவனைச் சம்மதிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கில் கூற,

அவன், “நான் கல்யாணம் பண்ணிக்க போறேன்னு உங்கிட்ட சொன்னேனா…? நான் என்ன பண்ணனும்னு எனக்குத் தெரியும். நீ எதுவும் சொல்லத் தேவை இல்லை. உங்களுக்கு  வேணும்னா  போய் யாரை வேணாலும் கல்யாணம் பண்ணிக்கோங்க. ஆனா என்னை என்ன பண்ணனும், பண்ணக் கூடாதுன்னு சொல்ல யாருக்கும் எந்த உரிமையும் கிடையாது…கெட் லாஸ்ட்!” என்று பல்லை கடித்துக் கொண்டு சொன்னதில் மற்ற இருவரும் திகைத்திட, விஷ்வாவிற்கு கண் கலங்கி விட்டது.

“நாங்க உன் பிரெண்ட்ஸ்டா… உன் வாழ்க்கை மேல எங்களுக்கும் அக்கறை இருக்கு. எங்களைப் பார்த்தா என்ன உரிமை இருக்குனு கேட்ட?” என்று தொண்டையை அடைக்க வினவ,

“ஆமா… நான் சொல்லிருக்கேனா என்னைக்காவது? நீங்க என் பிரெண்ட்ஸ்ன்னு. நீங்கதான் சும்மா சும்மா என்கிட்ட வந்து பேசிகிட்டு இருப்பீங்க. இப்போவும் ஒட்டிகிட்டு டார்ச்சர் பண்றீங்க” என்று சத்தமாக ஆரம்பித்தவன் முணுமுணுப்புடன் முடிக்க, அதில் மூவருமே அதிர்ந்து விட்டனர்.

விஷ்வா அவன் சட்டையைப் பிடித்து, “நாங்க உன்கூட ஒட்டிக்கிட்டு, உன்னை டார்ச்சர் பண்ணுனோமாடா…? அப்பறம் எதுக்கு என்கிட்ட பாசமா இருந்த? அப்பறம், எதுக்கு அவன் ட்ரக்ஸ் யூஸ் பண்ணி, பிரச்சனையில் இருந்தப்ப,  ஹெல்ப் பண்ணுன? அப்படியே விட்டுட்டு போயிருக்க வேண்டியது தான…” என்று ஆதங்கத்துடன் கேட்க, தேவா கலங்கிய கண்களை கட்டுப்படுத்திக் கொண்டு, வேறு எங்கோ பார்த்தான்.

விஷ்வா அவன் முகத்தைத் திருப்பி “பதில் சொல்லு தேவா? நாங்க உனக்கு முக்கியம் இல்லையா? எங்களை நீ பிரெண்ட்ஸா பார்க்கலையா? நான் நான் யாரோவா உனக்கு?” என்று தேம்பிக் கொண்டு கேட்க, அதில் அவனைப் பார்க்க இயலாமல், அவன் கையை எடுத்து விட்டுத் திரும்பி நின்றான்.

‘சாரி டா! நான் இப்போ கொஞ்சம் அமைதியா பேசுனா… என்னை அவளுக்குக் கல்யாணமே பண்ணி வச்சுருவீங்க. அவள் பாவம்டா! என்னால அவளுக்கு எந்த சந்தோஷத்தையும் தர முடியாது. எதுவும் தெரியாம அவள் வாழ்க்கைய வீணாக்கிடாதீங்கடா!’ என்று மனத்தினுள்ளேயே மன்றாடியவனின் முகத்தில் வேதனை அப்பி இருந்தது.

அவர்கள் பேசியதை கேட்டுக் கொண்டிருந்த அம்முவும் வைஷுவும், ‘இவன் ஏன் இப்படி பேசிக் கஷ்டப்படுத்துறான்.’ என்று தேவாவின் முதுகை முறைக்க, தமி வருந்திய அருணின் முகத்தையே பாவமாகப் பார்த்தாள்.

தேவா திரும்பி நின்றிருந்தாலும், அங்கிருந்த கண்ணாடி ஒன்று அவன் முக வேதனையை அழகாக அவனின் இசைக்குப் பிரதிபலிக்க, ஏதோ யோசித்தவள், விஷ்வாவுக்கு ‘எதுவும் பேசாத வெளிய வா!’ என்று கண்ணைக் காட்டினாள்.

அதில், அனைவரும் வெளியில் சென்றிட, தேவா டொம்மென்று கதவை மூடி, அந்த அறையின் ஒரு ஓரத்தில் காலைச் சுருட்டி நடுங்கி கொண்டு அமர்ந்தான்.

 பல  வருடமாக  அவனுள் அமிழ்ந்து போய் இருந்த பயங்களும், காயங்களும் அவனைக் கீறி விட, அதனால் ஏற்படும் கோபம் கூட இப்போது இசையின் மேலிருந்த சிறு அன்பு பொறியினால், கண்ணீராக வெளிப்படவே விரும்பியது.

இருந்தும், தன்னை அழவே கூடாது என்று கட்டுப்படுத்திக் கொண்டவன், “போய்டு இசை! என் லைஃப்ல இருந்து போய்டு! உன்னை என் வாழ்க்கையில இருந்து போக வைக்க, நான் எந்த எல்லைக்கு வேணாலும் போவேன். உன்னையும் என் பிரெண்ட்ஸையும் நான் எவ்ளோ கஷ்டப்படுத்துனாலும் சரி, உன்னை என்ன விட்டு நிச்சயமா போக வைப்பேன்.” என்று சூளுரைத்தவனின் மனமோ ‘உன்னைப் பத்தி தெரிஞ்சா அவளே போய்டுவா!’ என்று இளக்காரமாக நகைக்க, அதில் வெந்து போனான்.

 

“நிச்சயமா நான் அவனை விட்டுப் போகமாட்டேன். அவன் என்ன பேசுனாலும் சரி! என்ன பண்ணாலும் சரி! அவன் என்னை லவ் பண்ணலைன்னு ஒத்த கால்ல நின்னாலும் சரி! அவனைக் கல்யாணம் பண்ணியே தீருவேன்.” என்று குரலில் அனலை கக்கி சொன்னவளை, மற்றவர்கள் செய்வதறியாது நோக்க, ஆடவர் மூவரும் அவன் பேசியதில் உள்ளுக்குள் உடைந்து போகினர்.

அம்முவுக்கு விஷ்வாவை பார்த்துக் கஷ்டமாக இருந்தாலும், “இப்போ தெரியுதா? யோசிக்காம பேசுனா எப்படி வலிக்கும்ன்னு.” என்று குத்தி காட்ட, அவளை அடிபட்ட பார்வை பார்த்தான். அவன் பார்வையில் கரைந்தவள், 

விஷ்வாவின் அருகில் சென்று,  “நீ ஃபீல் பண்ணாத விச்சு பேபி. நான் உன்னைக் கல்யாணம் பண்ணி உன் வீட்டுக்கு வந்ததும், டெயிலி அவனைக் கொடுமைப் படுத்தி பழி வாங்கிடறேன் ம்ம்?” என்றிட, அவன் அழுதே விட்டான்.

“அவன் என்னை என்ன உரிமை இருக்குன்னு கேட்குறான் அம்மு… நாங்க அவனுக்கு பிரெண்ட்ஸ்ஸே இல்லையாம்…” என்று தேம்ப நிஷாந்துக்கும், அருணுக்கும் அந்த வார்த்தை கண்ணில் நீரையே கொடுத்தது.

ஆரு “ப்ச்! இப்போ எதுக்கு இப்படி பீல் பண்ணிட்டு இருக்கீங்க? விஷ்வா அழுகையை நிறுத்து, இல்லை நானே அடிச்சுப்புடுவேன்… இப்போ என்ன? அவன் சொன்னா அதை உடனே நம்பிடறதா? அவன் வேணும்னே தான் அப்படி பேசிருக்கான். அது ஏன் உங்களுக்குப் புரியல?” என்றதும்,

 

அருண் “அவன் வேணும்னே தான் பேசுறான்னு எங்களுக்கும் தெரியும். ஆனால் பொய்யா கூட அதை எங்களால கேட்க முடியாது…” என்றவன் முகத்தைச் சுருக்க, அவர்களின் அன்பை கண்டு சிறிதாகச் சிரித்த ஆரு, “சரி மாம்ஸ். அவன் பேசுனது தப்புன்னு அவனையே உணர வைப்போம், கூல்” என்றதும், நிஷாந்த் “எப்படி” எனப் பார்த்தான்.

தமியும்,  வைஷுவுமோ முற்றிலும் எதுவும் புரியாமல், “என்ன  தெரிஞ்சு பேசுனானா ,ஏன்?” எனக் கேட்க, 

ஆரு “இவனுங்களுக்கு இப்ப தான் லவ் அது இதுன்னு லைஃப்ல ஒரு சந்தோசம் வருது. இவங்களுக்கு கிடைச்ச சந்தோசம் அவனுக்கும் கிடைக்கணும்னு என்னை அவன்கூட சேர்த்து வைக்க ட்ரை பண்றாங்கன்னு அவனுக்குத் தெரிஞ்சுருச்சு… அவனை ஒத்துக்க வைக்க இவனுங்க என்ன பண்ணுவானுங்க…? நீ ஓகே சொன்னா தான், நாங்க கல்யாணம் பண்ணிப்போம்ன்னு சொல்லி, ஆர்கியூ பண்ணுவாங்க. அப்போ இவனுங்க லைஃப் நல்லாருக்கணும்னு அவனும் அதை அக்செப்ட் பண்ணி தான் ஆகணும். அதான் இவனுங்க அந்த லெவலுக்கு போறதுக்கு முன்னாடி, சாரே ‘நீங்க என் பிரெண்ட்ஸ் இல்ல. நீங்க என்ன சொன்னாலும் கேட்கமாட்டேன்னு பிட்டைப் போட்ருக்காரு… அப்போ தான இவனுங்க ஃபீல் பண்ணி, அதுக்கு நீங்க ஆறுதல் சொல்லி. அப்பறம் அதுனால உங்களுக்குக் கோபம் வந்து, அவனை விட்டு வரச் சொல்லுவீங்க?” என்று அவனைத் துல்லியமாகக் கணித்து கூற, தமி வாயைப் பிளந்தாள்.

“ஹப்பா அவன் பேசுன ஒத்த வார்த்தையிலே இவ்ளோ விஷயம் இருக்கா? இது எனக்கு இப்போதான் புரியுது” என்றதும், ஆரு “அதான் நீ இன்னும் சிங்கிளாவே இருக்க” என்று கண்ணடித்ததில் அவளை முறைத்தாள். அம்முவும் வைஷுவும் அவன் எண்ணத்தை நினைத்து வியந்தனர்.

நிஷாந்த் “அவன் அப்படி நினைச்சது தான் உண்மை. அவனுக்கு ஒரு நல்ல விஷயம் நடக்காம,  கண்டிப்பா    நாங்களும் எங்க வாழ்க்கையை பார்க்கப் போறது இல்லை” என்றதும், 

ஆரு ‘இவனை என்ன செய்வது’ என்ற யோசனையில் மூழ்க, அப்போது எங்கிருந்தோ வந்த துப்பாக்கி குண்டு ஒன்று, தமியின் மிக அருகில் வந்து அங்கிருந்த மரத்தில் பாய்ந்து, மரத் தூள்களை தெறிக்க விட்டது.

சட்டென்று கேட்ட சத்தத்தில் மிரண்டவள் அருகிலிருந்த அருணின் தோளில் கண்ணை மூடிச் சாய்ந்து, அவன் கையை இறுக்கமாகப் பற்றிக் கொண்டாள். மற்றவர்கள் அதிர்ச்சியுடன் குண்டு வந்த திசையைப் பார்க்க, மேலும் சில குண்டுகள் அவர்களை நோக்கி வர, அனைவரும் அப்படியே கீழே அமர்ந்து விட்டனர்.

அருண் தமியின் கையை அழுத்தமாகப் பிடித்து, “ரிலாக்ஸ்” என்றவன், அவன் பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அவர்களை நோக்கிச் சுட எந்திரிக்க, தமி “போகாத அருண்! சுட்டுறப்போறானுங்க… ப்ளீஸ் போகாத” என்று மேலும் அவனைப் பிடித்து இறுக்க, அவன் தான் திணறிவிட்டான்.

எதிராளிகளோ மேலும் சடசடவெனச் சுட ஆரம்பித்ததில் அவர்களால் நிமிரவே முடியவில்லை. 

அம்மு “யாரு இவனுங்கல்லாம் எதுக்கு சுடறானுங்க?” என்று பயத்துடன் கேட்க, விஷ்வா, “எல்லாம் அந்த மினிஸ்டர் ஆளுங்க தான்…” என்றவன் துப்பாக்கியை எடுத்துச் சுட போக, அம்மு “உனக்குத் தோசையே ரௌண்டா சுடத் தெரியாது… உனக்கு எதுக்கு பேபி கன்னு?” என்று அந்த நேரத்திலும் அவனை வாரினாள்.

 

அவனோ ‘யாரை பாத்து என்ன கேக்குற’ என்று ஒருவனை நெற்றியில் குறி பார்த்துச் சுட, அவன் சரிந்து விழுந்தான். அதில் வியந்தவள், “நீ ஒரு மொக்கை பீசா இருப்பன்னு நினைச்சேன்… இப்படியொரு கன்னு பீசா இருப்பன்னு நினைக்கவே இல்லைடா…!”என்றதில், நிஷாந்த் கடுப்பாகி, “கொஞ்சம் அமைதியா இருக்கீங்களா? எல்லாரும் அந்த மரத்துக்குப் பின்னாடி போகலாம்… அவனுங்க பக்கத்துல வந்துட்டானுங்க!” எனும் போதே, மீண்டும் துப்பாக்கிச் சத்தம் கேட்டது.

இந்தச் சத்தத்தில் காதைப் பொத்தி, கண்ணை இறுக மூடி இருந்த ஆருவை நோக்கிக் குண்டு ஒன்று வர, தேவா சட்டென அவளைத் தன் பக்கம் இழுத்தான்.

அதில் மிரண்டவளை மேலும் குனிய வைத்தவன், லேசாக நிமிர்ந்து, எதிரிகளை ‘டப் டப்’ எனச் சுட்டதில், அங்கு வந்த பத்து பேரில் 6 பேர் சரிந்து விழுந்தனர். தேவா, நிஷாந்திடம் கார் கீயை எறிந்து “காரை எடுத்துட்டு காட்டுக்கு வெளிய போ… சீக்கிரம் எல்லாரையும் கூட்டிட்டு போ!” என்க, அனைவரும் தலையை நிமிர்த்தாமல் குனிந்த படியே அங்கிருந்து நகர, தேவா மீதி இருந்த ஆட்களையும் சுட்டு தள்ளினான்.

ஆனாலும், மேலும் ஆட்கள் வருவது போல் இருக்க, அவன் அவசரமாக அனைவரையும் அங்கிருந்து அனுப்பினான். ஆருவை உள்ளே ஏற்றி விட்டவன், “இவங்க நாலு பேரையும் சேஃப்பா ஒரு இடத்துல விட்டுட்டு, ஆஸ்ரமம்ல இருங்க. நான் கால் பண்ணி என்ன பண்ணனும்னு சொல்றேன். சீக்கிரம்!” என்று காரைத் தட்ட ஆரு, அவன் கையைப் பிடித்தாள்.

“நீயும் வா, தேவா!” என்று கெஞ்சும் விழிகளுடன் கூற, “இங்க எல்லா ஆதாரமும் இருக்கு. எல்லாத்தையும் விட்டுட்டு வர முடியாது. நிஷாந்த் காரை எடு…!” என்றான் உத்தரவாக.

“அப்போ என்னாலயும் போக முடியாது! என் ரிசர்ச் பேப்பர்ஸ் இங்க தான் இருக்கு.” என்று வீம்பு பிடித்தவளிடம்,

“இசை, அடிச்சுடுவேன்! எல்லாத்தையும் நான் எடுத்துட்டு வரேன். நீ போ!” என்றிட, “என் வேலையை நீ எதுக்கு பார்க்கணும்? அதை சேஃப் பண்ண வேண்டியது என் வேலை.” என்றவள் காரை விட்டு இறங்கி, “நிஷாந்த் நீ மத்தவங்களை கூட்டிட்டு போ…!” என்று கட்டளையிட, பாவம் அவனுக்குக் கிறுக்கு பிடிக்காத குறை தான்.

தேவா கோபத்துடன் “ஒழுங்கு மரியாதையா கிளம்பி போய்டு” என்று பல்லைக் கடிக்க, அவள் “முடியவே முடியாது!” என்னும் போதே, ‘இவனுக்கு இப்படி இருந்தாதான் சரி வரும்’ என்றெண்ணி நிஷாந்தும் காரை எடுத்துச் சென்று விட்டான்.

அதில் அவளை உறுத்து விழித்தவன், சப்பென்று அவள் கன்னத்தில் அறைந்தான். அவளோ இதை எதிர்பார்த்தேன் என்பது போல், கண்ணில் திரண்ட நீர் துளிகளுடன் ஆடாமல் அசையாமல் நிற்க, தேவாவிற்கு தான் ஐயோ வென்றிருந்தது.

“ஏண்டி என்னைச் சாவடிக்கிற? என்னதாண்டி வேணும் உனக்கு?” என்று கத்தியவனிடம், அமைதியாக “நீதான் வேணும்…!” என்றாள்.

தேவா அடக்கப்பட்ட கோபத்துடன், அவளை இழுத்துக் கொண்டு மீண்டும் குடிலுக்குச் சென்று, ராஜாங்கனுக்கு எதிராகச் சேர்த்து வைத்த ஆதாரங்களை எல்லாம் அவசரமாக ஒரு ஷோல்டர் பேகில் போட்டு, மறக்காமல் ஆருவிற்கு தேவையானதையும் எடுத்து வைத்தான்.

“நான்  ஏதாவது ஹெல்ப் பண்ணவா?” என்று மெல்லிய குரலில் கேட்டவளை, ஒரு பார்வை பார்த்து விட்டுக் கம்ப்யூட்டரில் இருந்த போதை பொருட்களை எடுத்து ஒரு பேகில் அடுக்கச் சொன்னான். 

அதில ‘பே’ வென விழித்தவள், அவன் அழுத்தப் பார்வையில் சிலுப்பிக்கொண்டு, சொன்னதை செய்தாள்.

‘கடவுளே, எவ்ளோ பெரிய ஆராய்ச்சி எல்லாம் பண்ணுன கை இது! கடந்த நாட்களாக இது குண்டு கண்டுபிடிக்கவும், போதை மருந்தைப் பேகுல போட்றதுமா போகுதே, வை திஸ் கொலைவெறி???” என்று தன்னையே நொந்து கொண்டாள். 

பின், அந்தப் பைகளை எடுத்துக் கொண்டு, ஆருவுடன் நிஷிதாவை கட்டி வைத்திருந்த மர வீட்டிற்கு வந்தான்.

ஆனால் அங்கு அவள் இல்லை. ஆரு “இங்க இருந்த அந்தப் பொண்ணு எங்க?” என்று திகைத்துக் கேட்க, தேவா யோசனையுடன் “அந்த ராஜாங்கன் தூக்கிட்டு போயிருப்பான்.” என்று விட்டு, அந்த மர வீட்டில் இருக்கும் இன்னொரு அறையைத் திறக்க, அங்கு இரு ஆண்கள் கட்டிப் போட்டு இருப்பதையும், அதிலும் ஒருவனுக்கு ரத்தமெல்லாம் வெளியில் வந்து, கிழிந்த நாராய் இருப்பதையும் கண்டவள்,  திகைத்து, அவனை எங்கோ பார்த்திருக்கிறோம்.. என்றெண்ணி உற்றுப் பார்த்தாள்.

அப்போது தான், அவன் மண்ணெடுக்க போகும்போது தன்னை தவறாகப் பார்த்தவன் என்று உணர்ந்து “என்னைப் பார்த்ததுக்கே அவனுக்கு இவ்ளோ அடியா?” என்று விழி உயர்த்தி நக்கலாகக் கேட்க, “உளறாத இவன் நம்மள ஃபாலோ பண்ணிட்டு வந்து, நம்ம இருக்குற இடத்தைக் கண்டுபிடிச்சுட்டான். அதான் இவனைப் பிடிச்சு வச்சுருக்கேன்.” என்றான்.

அவள் “ஓ! நான் நம்பிட்டேன்” என்று கேலி குரலில் சொன்னதும், 

 

தேவா அவளைப் பாராமல், அந்த போதை பொருள் பையை அந்த ரௌடியின் அருகில் சென்று போட்டு, மயங்கி இருந்த இன்னொருவனின் கட்டை அவிழ்த்து விட்டு, அவனை மர வீட்டிற்கு வெளியில் போட்டான்.

ஆரு, “மயக்கத்துல இருக்கிறவன் யாரு?” எனக் கேட்டதும், தேவா “அவன் தான், உங்களைப் பிடிச்சுட்டு வரச் சொல்லி ராஜாங்கனோட பிஏ சிவமணி ஃபிக்ஸ் பண்ணுன ஆளு…” என்று விட்டு, கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த மர வீட்டைக் கொளுத்தியதில் பதறி விட்டாள்.

“ஹே உள்ள ஒரு ஆள் இருக்கான்…!” என்றிட, தேவா “அவன் உயிரோட இருந்து எதுவும் சாதிக்க போறதில்ல வா!” என்று மற்றவனை அங்கேயே ஒரு ஓரமாகப் போட்டு விட்டு, அவளைக் கூட்டிக்கொண்டு ஓட, 

ஆருவுக்கு தான் பயத்தில் உடலெல்லாம் சில்லிட்டு ஒரு வித நடுக்கத்தை கொடுத்தது. சட்டென்று நின்றவன், அவளின் நடுக்கத்தை பார்த்து, என்னவென்று நோக்கினான்.

“ஏன் , அப்படிப் பண்ணுன  அவனை?” என்று எச்சிலை விழுங்கிக் கொண்டு கேட்க, “என்னைப் பத்தி வெளிய சொல்லியே ஆவேன்னு பிடிவாதம் பிடிச்சான்… கொன்னுட்டேன்.” என்று தோளைக் குலுக்கி சொன்னதில், அவள் அரண்டு விட்டாள்.

அதனை உணர்ந்தவன், “உன்னையும் கொல்ல நான் தயங்கவே மாட்டேன் இசை. என்கிட்டே தேவை இல்லாம வச்சுக்காத.” என்று மிரட்டி விட்டு, காட்டை விட்டு வெளியில் ஓட, அவள் தான் பிரம்மை பிடித்தவள் போல், உறைந்து போனாள்.

காட்டை விட்டு வெளியில் சென்றதும் ஒரு உயர் ரக கார் ஒன்று, அவர்கள் முன் வந்து கீறிச்சிட்டு நிற்க, உள்ளே இருந்து அவளின் மாமா சிவன் இறங்கினார். 

அவரைப் பார்த்தவள் “மாமா” என்று ஓடிச் சென்று, அவரை கட்டிக் கொள்ள, தேவா அமைதியாகக் கையை கட்டிக் கொண்டு, அவரைத் தீயாக முறைத்து “இசை” என்று அழைத்தான்.

அவள் திரும்புவதற்குள் அவர் கையில் மறைத்து வைத்த துப்பாக்கி ஒன்றை எடுத்து அவளின் முதுகில் வைத்து விட்டு, தேவாவை பார்க்க, அவன் “நோ” என்று அதிர்ந்து விட்டான்.

ஆரு சட்டெனத் திரும்பி “என்ன ஆச்சு” என்று தேவாவை பார்க்க, ஷிவ் என்கிற சிவன் அந்தத் துப்பாக்கியை மறைத்து விட்டு, 

“உனக்கு என்ன ஆச்சு ஆரும்மா… ஏன் இப்படி ஓடி வந்த? பாரு எப்படி டயர்டா இருக்கன்னு. வா நம்ம வீட்டுக்குப் போலாம்.” என்று அழைக்க, அவள் அப்போதும் தேவாவை பார்த்தாள்.

அவன் ‘போகாத இசை’ என்று மனதில் மன்றாடிக் கொண்டிருக்க, சிவன் “வாடாம்மா… தேவா சார்க்கு நிறைய வேலை இருக்கும். அவரு வேலை முடியிற வரை, நீ என்கூட இரு… என்ன தேவா, நான் சொன்னது சரி தான?” என்றதும் அவள் குழப்பமாக,

“உங்களுக்கு தேவாவை தெரியுமா, மாமா?” என்றாள். 

அவர் “ஏன் தெரியாது? போலீஸ் கூடக் கண்டுபிடிக்க முடியாத உண்மையை, சார் கண்டுபிடிச்சு வெளிச்சம் போட்டுக் காட்டிடுவாரே! தி நம்பர் ஒன், கிரேட் டிடெக்டிவ் தேவ செழியன் பத்தி எனக்குத் தெரியாதா?” என்று கண்ணில் நக்கலை தேக்கிப் பார்க்க, 

 

ஆருவோ, சற்று வியந்து அவனைப் பார்த்து விட்டு, ‘எப்படி மாமாவிடம் இவனை விட்டு விட்டு வரமாட்டேன் என்று சொல்வது’ எனக் குழம்பியிருக்க, அவனோ இசை அவன் அருகில் இருப்பதில், எதுவும் செய்ய இயலாது தவித்து நின்றான்.

Click on a star to rate it!

Rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்