Loading

அத்தியாயம் – 17

தேவாவின் கோப முகத்தைக் கண்டு சுவாரஸ்யமாகப் பார்த்திருந்த ஆராதனாவை தமி தான் ‘அவன் என்னமோ ஆஸ்கார் அவார்டு குடுக்குற மாதிரி, இவள் என்ன இப்புடி பார்க்குறா?’ எனத் தலையில் அடித்து இழுத்துக் கொண்டு செல்ல, தேவா கதவை அறைந்து சாத்தினான்.

இந்த ரணகளத்தில் மாலையே ஆகி இருக்க, தேவா தவிர மற்றவர்கள் சில்லென ஓடிக் கொண்டிருக்கும் அந்த ஓடையின் அருகில் ஒவ்வொரு யோசனையில் நின்றிருக்க, வைஷுவும் நிஷாந்தும் அந்தச் சூழலை ரசித்தும், ஒருவரை ஒருவர் பார்வையால் தீண்டிக் கொண்டும் இருந்தனர்.

அப்போது தமி அவர்களுக்கிடையில் வந்து நின்று, நிஷாந்திடம் “மாம்ஸ், நீ எப்படி இவள் கிட்ட விழுந்த?” எனக் கேட்க, வைஷு அவளை முறைத்தாள். 

அவள் ‘மாம்ஸ்’ என்று அழைத்ததில் நிஷாந்தும் திகைத்து வைஷுவை பார்க்க, அவள் “நீ எதுக்கு டி அப்படி கூப்பிட்ற” என்று முகத்தைச் சுருக்கினாள்.

தமியோ “என்ன  வைஷு, இப்படி கேட்டுட்ட? உன் அப்பாவை நான் அப்பான்னு கூப்பிடுறேன். உன் அம்மாவை நான் அம்மான்னு கூப்பிடுறேன். அதே மாதிரி, உன் மாமாவையும் நான் மாமான்னு தான கூப்பிடனும் அதான முறை?” என்று நியாயம் பேச,

அம்மு கேலியாக, “அதான, அது மட்டும் இல்லாம நம்ம காலேஜ் படிக்கும்போது ஒரு சபதம் போட்டோமே ஞாபகம் இருக்கா? அதாவது, உன் ஆளை நானும், என் ஆளை நீயும் அண்ணன் நொண்ணன்னு கூப்பிடக் கூடாது, மாம்ஸ்ன்னு தான் கூப்பிடணும்னு” என்று உதட்டைக் கடித்து சிரித்தவள், “மாம்ஸ்” என்று நிறுத்தி நிதானமாக நிஷாந்தை அழைக்க, அவனுக்குத் தான் இதெல்லாம் புதிதாக இருந்தது.

மற்ற இருவருக்குமே அப்படி தான். இதில் அருண் தான் “அப்போ காலேஜ்ல போய்ப் படிக்கல…? யாரை எப்படி கூப்பிடலாம்னு டிஸ்கஸ் தான் பண்ணீங்க” என்று நக்கலாகக் கேட்க, தமி “அஃப் கோர்ஸ்” என்றாள் சிரிப்புடன்.

விஷ்வா அம்முவை பார்வையால் வருடிக் கொண்டு “அப்போ நானு?” என்று ஆர்வமாகக் கேட்க, தமியோ அவனை நக்கலாகப் பார்த்து, “காலைல போடுவோம் காபி! நீ ஒரு குட்டி பேபி!” என்க, அதில் அருணும் அம்முவும் ஒரு சேர தமியை முறைத்தனர்.

தமி “பேபி” என்றதில் அம்மு முகத்தில் தெரிந்த பொறாமையை கண்டு குதூகலித்தவன், “உன் பிரெண்டு ஒரு பாட்டி! என்ன பேபின்னு சொன்ன நீ பியூட்டி!” என்று தமியிடம் அம்முவை வாரியதில், அம்மு கொலைவெறிக்கே சென்று, விஷ்வாவை துரத்த ஆரம்பித்தாள்.

அவன் அவள் கையில் சிக்காமல் ஓடி ஒரு மரத்தடியில் சென்று ஒளிய, எங்க போனான் இவன்? என்று பார்வையால் அலசினாள். 

அப்போது சட்டென ஒரு கரம் அவளைப் பிடித்து இழுக்க, அதில் பதறியவள், இழுத்தவன் நெஞ்சிலேயே சென்று விழ, விஷ்வா அவளைக் குறுகுறுவெனப் பார்ப்பதை கண்டு படபடத்தாள்.

“எதுக்குடா இப்படி பார்க்குற?” என்று கேட்டதும், அவன் “பார்க்கல அம்மு, சைட் அடிக்கிறேன்.” என்று அவளைப் போன்றே சொல்ல, அதில் அவளுக்குத் தான் என்னவோ செய்தது.

அவனிடமிருந்து விலகியவள் “எனக்கு என்ன உரிமைன்னு கேட்டீல? இப்ப எதுக்குடா சைட் அடிக்கிற? கண்ணை நோண்டிக் கையில் குடுத்துடுவேன் பே!” என்று சிலுப்பி கொண்டு, அங்கிருந்து விட்டால் போதும் என, ஓடியே விட்டாள்.

அவன் பார்த்த பார்வையில், அவளுக்குத் தான் உதறல் எடுத்து விட்டது. விஷ்வா ‘கொய்யால எங்களுக்கும் இப்படி தான இருந்துருக்கும்? நீ வாடி உன்னை ‘சைட்’ அடிச்சே ஒரு வழி ஆக்குறேன்.’ என்று தனக்குள் சிரித்துக் கொண்டு, மீண்டும் அவர்களுடன்   ஐக்கியம் ஆனான்.

அதுவரை தேவா பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்த ஆரு, வேகமாக அருணிடம் வந்து, “அருண் மாம்ஸ்,  உன்  பிரெண்டை எப்படி கரெக்ட் பண்றது?” என்று கேட்க, அவனோ திகைத்துப் பார்த்தான். தமிக்கு தான் இதயத்தில் பெரிய அளவில் ஓட்டை போட்டதொரு உணர்வு வந்தது.

தமி “அவனை எதுக்கு அப்படி கூப்பிட்ற?” என்று சிணுங்கிட, ஆரு “நம் சபதம்! நம் உரிமை!” என்று நாக்கை துருக்கினாள். 

அவளுக்குத் தெரியாதா? தமிக்கு அருண் மேல் ஒரு க்ரஷ் இருக்கிறது என்று. அதனாலேயே அவளை  வெறுப்பேற்றினாள்.

ஆனால் ஆண்கள் மூவருக்குமே, எந்த உறவு முறையாக இருந்தாலும் உரிமையோடு அவர்கள் அழைப்பது, ஒவ்வொரு வித உணர்ச்சியின் பிடியில் வைத்திருக்க, ஆரு, “டேய் யப்பா! மறுபடியும் ஒரு செண்டிமெண்ட் சீன்க்கு போயிடாதீங்கடா! முடியல… இந்த தேவாவை எப்படி கரெக்ட் பண்றதுனே தெரிலடா… ரொம்ப டஃப் குடுக்குறான். ஏதாச்சும் ஐடியா குடுங்கடா?” என்று பாவமாகக் கேட்டிட, மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

நிஷாந்த், “ஆரு நீ உண்மையிலேயே பேசுறியா? இல்ல, அவன் கோபப்படுறதுனாள ஒரு ஆர்வத்துல இப்படி கேட்குறீயா?” என்றிட, மற்றவர்களும் அதே கேள்வியை முகத்தில் தாங்கி அவளைப் பார்த்தனர்.

“ப்ச், எனக்கு வேற வேலை இல்லையா? அதுவும் இப்படி ஒரு இக்கட்டான நிலைமையில நான் ஏன் அவனைப் பத்தி தெரிஞ்சுக்கணும்னு நினைக்கணும்?” என்று எதிர்கேள்வி கேட்டவள், நேரடியாக “ஐ லவ் ஹிம்” என்றதில் மூவருமே யோசனையுடன் செய்வதறியாது முழித்தனர்.

அம்மு, “அவன் என்னடி, சொல்லவர்றதை கூடக் கேட்காம இவ்ளோ கோபப்படுறான்…? நீ என்னன்னா இப்படி சொல்ற? முதல்ல நீ லவ் பண்றன்ற விஷயத்தையே அவன் பொறுமையா கேட்கணுமே?” என்க, 

விஷ்வா “கண்டிப்பா கேட்கமாட்டான். அவனுக்கு இதெல்லாம் சுத்தமா பிடிக்காது.” என்றதும்

ஆரு “என்ன லவ் பிடிக்காதா? லவ் பிடிக்காம இருக்கிறவன், உங்க லவ்க்கு எதுக்கு இவ்ளோ மெனக்கெடனும்? சப்போர்ட் பண்ணி பேசணும்…?” என்று புரியாமல் கேட்டிட, நிஷாந்த், “அவன் என்னைக்குமே நாங்க இது தான் பண்ணனும்னு கண்டிஷன் போட்டது இல்ல. எங்களுக்குப் பிடிச்ச விஷயத்துல அவன் குறுக்க வந்ததும் இல்ல. அவனுக்குப் பிடிக்கலைன்னா கூட” என்றான் அவளுக்குப் புரிய வைக்கும் நோக்கில்.

 

ஆரு பெருமூச்சு விட்டு, “சரி மாம்ஸ், அவனுக்கு உங்களைப் பத்தி மட்டும் இல்லாம எங்களைப் பத்தி கூட நல்லா தெரிஞ்சுருக்கு? ஆனால், உங்களுக்கு அவனைப் பத்தி எதுவுமே தெரியாதா?” என்று கேட்டிட, 

விஷ்வா “அவன் இதுவரை அவனைப் பத்தி எதுவுமே சொன்னதில்லை.” என்றான்.

அதில் அவனை முறைத்தவள் “அவன் சொன்னதில்லையா இல்ல நீங்க கேட்டதில்லையா?” என்றாள் அழுத்தமாக. அருண் “யாரு நாங்க கேட்டதில்லையாவா?” எனத் திகைத்து, “நான் 8 ஆவது படிக்கும் போது, அவன்கிட்ட போய் இங்க வரதுக்கு முன்னாடி எங்க இருந்த, உன் பேரெண்ட்ஸ் எங்கன்னு கேட்டேன்.” என்றதும் ஆரு ஆர்வமாகி “என்ன சொன்னான்” என்று கேட்டாள்.

“அமைதியா இருந்தான். நான் ரொம்ப ஃபோர்ஸ் பண்ணி கேட்டு, நீ சொன்னாதான் ஸ்கூலுக்கு போவேன் சாப்பிடுவேன்னு மிரட்டினேன்…” என்று இழுக்க, 

அவள் மேலும் ஆர்வமாகி “குட்! அப்போ ஏதாவது சொன்னானா?” என்று கேட்க, மற்ற பெண்களும் அவனை ஆர்வமாகப் பார்த்தனர்.

விஷ்வாவும் நிஷாந்தும் வாயைப் பொத்தி நகைக்க, அருண் முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு, “ம்ம் சொன்னான்… அப்போ நீ ஸ்கூலுக்கே போக வேணாம்னு சொல்லிப் பளார்ன்னு அறைஞ்சுட்டான்” என்று பாவமாகச் சொன்னதும், தமி கலகலவெனச் சிரிக்க ஆரம்பித்தாள்.

 

அருண் அவளை முறைத்ததும், ஆருவும் சிரிப்பை அடக்கிக் கொண்டு, “சரி அப்பறம் என்ன ஆச்சு…?” என்க, விஷ்வா “அப்பறம் என்ன? அவன் அடிச்சதுல இவன் கடவாய் பல்லு உடைஞ்சு, வாய் வீங்கி, உண்மையிலேயே ஒரு வாரம் ஸ்கூலுக்கு போக முடியாம, சாப்பிட முடியாம இருந்தான்.” என்றதும், அங்கு சிரிப்பலை பரவியது.

“அடக்கடவுளே! அவனுக்கேன் இவ்ளோ கோவம் வருது? சரி அவன் எந்தப் பொண்ணு கூடவும் பேசுனது இல்லையா? இல்ல அவன்கிட்ட எந்தப் பொண்ணும் பேசுனது இல்லையா?” எனக் கேட்டாள் அவனைப் பற்றிச் சிறிதாகவாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில்.

விஷ்வா, “ஏன் இல்ல? பெங்களூர்ல பொண்ணுங்க எல்லாம் அவன் பின்னாடியே தான் திரியுங்க… அதுலயும் எங்க ஆபிஸ்ல ஒர்க் பண்ற ஒரு பொண்ணு, அவனைத் தான் லவ் பண்ணுறேன்னு அவன் பின்னாடியே சுத்திகிட்டு இருந்துச்சு.” என்றான்.

அதில் ‘ஓ’ என்று சற்று வாடிய ஆருவை பார்த்த நிஷாந்த், “நீ ஃபீல் பண்ற அளவுக்குலாம் ஒண்ணும் நடக்கல. அதுவும் தேவாகிட்ட இதெல்லாம் எடுபடுமா?” என்றதும், அவள் மெலிதாய் குறுநகையை கொடுத்து விட்டு, “அவள் ப்ரொபோஸ் பண்ணுனாளா?” எனக் கேட்டாள்.

அருண் “ம்ம் பேஷா பண்ணுனாள் மகராசி, அப்பறம் ஹாஸ்பிடல்ல தான் அட்மிட் ஆனாள்…அவள் பாவம்! இத்தனைக்கும் அவன்கிட்ட ப்ரொபோஸ் கூடப் பண்ணல, அவன் பக்கத்துல போய் லேசா அவன் சட்டையைத் தான் பிடிச்சாள். அதுக்கு விட்டான் பாரு ஒரு அறை! அந்தப் பொண்ணு ரிசெப்ஷன்ல வந்து விழுந்துருச்சு.” என்றதும். ஆரு அவளுக்கு அடி விழுந்த ரீதியில் கன்னத்தில் கை வைத்து, திகைத்துப் பார்த்தாள்.

வைஷூ அப்போது தான் அவள் கையைக் கண்டு, “ஆரு, ஏன் கைல போட்ட கட்டை அவுத்த?” என்று பதட்டமாகக் கேட்க, “அவனுக்கே இவளோ அதுப்பு இருந்தா! எனக்கு எவ்ளோ இருக்கும்…? அவனால தான காயம் ஆச்சு அவன் தான் வந்துகட்டு போடணும்.” என்றாள் வீம்பாக.

நிஷாந்த் “ஆரு அவன் நம்ம வீம்பு பண்ணுனா இன்னும் பிடிவாதம் தான் பிடிப்பான். அவனைக் கொஞ்சம் விட்டுத் தான் பிடிக்கணும்.” என்றிட “எப்படி இத்தனை வருஷமா நீங்க பண்ணுன மாதிரியா?” என்றவள், “இனிமே அவனை எப்படி வழிக்குக் கொண்டு வரணும்ன்னு நான் பாத்துக்கிறேன்.” என்று தீர்க்கமாகக் கூறியவளை புரியாமல் பார்த்தனர்.

விஷ்வா “நீ என்ன பண்ணாலும் அவன் உனக்குக் கட்டு போடமாட்டான். முடியாதுன்னு சொல்லிட்டா முடியாது தான். எனக்கு என்னமோ இதெல்லாம் சரியா வரும்னு தோணல…” என்றான் யோசனையுடன்.

ஆராதனா அவனை முறைத்து “அப்போ அவன் கடைசி வரை இப்படியே இருந்தா ஓகே வா? அவனை மாத்த ஒரு சான்ஸ் கிடைச்சா அதையும் நெகடிவா பேசிட்டு இருக்க” என்றிட,

விஷ்வா “புரியாம பேசாத… அவன் லைஃப் உன்னால அழகாச்சுன்னா அதைவிடப் பெரிய சந்தோசம் எங்களுக்கு வேற எதுவுமே இல்ல. ஆனால் அவனை மாத்துறது ரொம்ப ரொம்ப கஷ்டம். கிட்ட தட்ட அவன் எங்ககிட்ட நல்லா பேசவே 5 வருசம் ஆச்சு. அதுக்கு அப்பறம் தான் ஓரளவாவது பேச ஆரம்பிச்சான். இப்போ வரை அவனைப் பத்தி எதுவுமே சொல்லாம அழுத்தமா இருக்கான். உன்னால அவன் கோபத்தை தாங்க முடியுமா? ஒரு தடவை, ரெண்டு தடவை இல்ல காலம் பூரா…? ஒருவேளை உன்னால அவனை மாத்த முடியலைன்னா உன் வாழ்க்கையும் வேஸ்ட் ஆகி, அவன் வாழ்க்கையும் வேஸ்ட் ஆகிடும்…” என்று அவன் எடுத்துரைக்க,

அருண் “ஆமா ஆரு அவன் சொல்றதும் கரெக்ட் தான். எங்களாலயே அவனை சமாளிக்க முடியாது சில நேரம். நீ எப்படி…?” என்று இழுக்க, அவளின் தோழிகள் குழப்பத்தோடு ஆருவை பார்த்தனர். அவள் அமைதியாக அவர்களைப் பார்த்து, “நான் எடுத்த முடிவுல இருந்து என் உயிரே போனாலும் மாறமாட்டேன்!” என்றாள் அழுத்தத்துடன்.

அம்மு “சரி டி நீ மாற வேண்டாம். இப்போ கட்டு போடலாம் இல்லைன்னா செப்டிக் ஆகிடும்.” என்று கையை பிடிக்கப் போக, 

ஆரு வெடுக்கெனக் கையை இழுத்து, “என் கையே போனாலும் பரவாயில்ல, நான் சொன்னா சொன்னது தான்…” என்று முடிவாகச் சொல்லிட, மற்றவர்கள் தான் திகைத்தனர்.

ஜன்னல் வழியே தெரிந்த நீரோடையின் அருகே இவர்கள் பேசிக் கொண்டிருப்பதை கண்ட தேவாவிற்கு அவர்கள் பேசுவது கேட்கவில்லை என்றாலும், ஆரு தான் ஏதோ பிரச்சனை செய்கிறாளென உணர்ந்தவன், “விஷ்வா” என்று அழைத்தான் சத்தமாக.

அடுத்த நொடி அவன் தேவா முன் நின்றிருக்க, “என்ன அங்க பிரச்சனை?” எனக் கேட்டான். “அது, ஆரு தான் கையில மருந்து போடமாட்டேன்னு பிடிவாதம் பிடிச்சுட்டு இருக்கா?” என்றதும், தேவா “ஏன்” என்று பார்த்தான்.

“இல்ல நீ தான் தள்ளி விட்டியாம். சோ நீ தான் மருந்து போடணுமாம்.” என்று தயங்கி கொண்டே கூறியவனை முறைத்தவன் “அவள் கையே போனாலும் பரவாயில்ல, என்னால மருந்து போட முடியாது! வெட்டியா நின்னு பேசிட்டு இருக்காம, போய் அவ வேலையை பார்க்க சொல்லு!” என்று சிடுசிடுத்தான்.

விஷ்வா “ப்ச் தேவா… அவளுக்கு ரொம்ப அடி பட்டுருக்கு…” என்று பேசவர, “உன்னைப் போன்னு சொன்னேன்.” எனக் கடுமையாகச் சொன்னதும், 

அவன் முகத்தைத் தொங்க போட்டுக் கொண்டு ஆருவிடம் விஷயத்தைச் சொல்ல, அவள் ரௌத்திரத்துடன் அந்த ஜன்னலைப் பார்த்தாள்.

அவள் கண்ணில் தெரிந்த கடுமையை சற்று ரசனையுடன் பார்த்த தேவா, “நீ நினைக்கிறது என்கிட்ட நடக்காது மை டியர் கேர்ள்…” என்றெண்ணி அவளறியாமல் அவளை மட்டுமே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.

இரவாகியும் கைச்சிவந்து வீங்கிப் போய் இருக்க, பெண்கள் மூவரும் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தும் அவள் அசையவே இல்லை. வைஷு தான் “சரி நீ கட்டு போட வேண்டாம். சாப்பிட வாச்சு செய்…” என்று சாதத்தை பிசைந்து ஊட்ட, அவள் அவளை முறைத்து விட்டு, திரும்பிக் கொண்டாள்.

“சாரி ஆரு! நான் அப்படி பண்ணது தப்பு தான். அதுக்காக இன்னும் எத்தனை வருஷத்துக்கு என்கிட்டே பேசாம இருப்ப, மன்னுச்சுடேன் ப்ளீஸ்…” என்க, அவள் நிஷாந்த்தை காட்டி, “இவன்லாம் ஒரு ஆளுன்னு இவனுக்காக எங்களை விட்டுட்டு போலாம்னு நீ எப்படி முடிவெடுக்கலாம்.” என்றதும், நிஷாந்த் “அடிப்பாவி” என்று பார்த்தான்.

அதில் ‘கிளுக்’ எனச் சிரித்தவள், “அவனுக்கு இது கொஞ்சம் ஓவர் தான் இருந்தாலும்…” என இழுக்க நிஷாந்த் வைஷுவை அடிக்கத் துரத்தினான்.

 

இவர்களின் ஆட்டமெல்லாம் முடிந்ததும் அனைவரும் உறங்கச் சென்றிட, நள்ளிரவில் மெல்ல ஆருவின் அறைக்குள் வந்தான் தேவா. அங்கு, பனிச்சிற்பமாக உறங்கிக் கொண்டிருந்தவளைக் கண்டவன், அவள் அருகில் ஓசைப்படாமல் சென்று அமர்ந்து, 

அவள் வாயில் வைத்திருந்த வலது கை கட்டை விரலை ‘இன்னும் விரல் சூப்பிக்கிட்டு இருக்கா’ என்று சிறு சிரிப்புடன் எடுத்து விட்டவன், அவளின் இடது கையை மென்மையாக எடுத்து, மருந்திட்டான்.

அதில் சுள்ளென வலியெடுக்க, முகத்தைச் சுருக்கியவளை கண்டவன், லேசாக அவள் தலையைத் தட்டிக் கொடுத்து “ச்சு ச்சு” என்று சிறு குழந்தையை உறங்க வைப்பது போல், அவளை நித்திரைக்குள் புகுத்தி விட்டு, மருந்திட்டு கட்டும் போட்டு விட்டவன், “என்கிட்ட பிடிவாதம் பிடிக்காத, இசை! எந்நேரமும் நான் இதே மாதிரி இருக்க மாட்டேன். ப்ளீஸ் லீவ் மீ…” என்று அதட்டலாக ஆரம்பித்தவன் கெஞ்சலாக முடித்திருக்க,

அவன் பேசியது கனவில் பேசியது போல் அவளுக்குத் தோன்றியதில், “விட மாட்டேன்டா திருட்டுபயலே” என்றவள், சிணுங்கி கொண்டு உறக்கத்தை தொடர, அதில் அவளை முறைத்தவன், “ஏன் இசை?” என்றான் சலிப்பாக.

அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கவும், “இசை ஏன்னு கேட்டேன்?” என்று மீண்டும் அழுத்தமாகக் கேட்டதில், கனவு என்றே நினைத்து, “ஏன்னா,  ஐ லவ் யூ தேவா…!” என்றவள், ஏதோ தோன்ற சட்டெனக் கண் விழித்து, சுற்றி முற்றி தேட எதிரில் யாருமே இல்லை.

 

‘இப்போ தேவா வந்தானா? இல்ல உண்மையிலேயே கனவா?’ எனக் குழம்பியவள் கையில் கட்டு போடப் பட்டிருப்பதை கண்டு, வைஷுவை முறைத்தாள். அவளின் அருகில் தான் தேவா முதலுதவிப் பெட்டியை வைத்து விட்டுச் சென்றிருந்தான்.

அதனால் அவள் தான் செய்திருப்பாளென நினைத்தவள், அந்தக் கட்டை எடுக்கப் போக, அதை அவிழ்க்கவே முடியவில்லை.

‘சே! ஏன் இவ்ளோ டைட்டா போட்டு விட்டுருக்கா?’ என்று அவள் தலையிலேயே நறுக்கென்று கொட்டி விட்டு மீண்டும் உறங்கி விட, அந்தக் குடிலில் இருந்து வெகுதூரம் ஓடி வந்த தேவா, இசை ஆராதனா சொன்ன வார்த்தையை எண்ணி உள்ளுக்குள் புழுவாகத் துடித்துக்கொண்டிருந்தான்.

இறுதியில் மரத்தடியில் சென்று அப்படியே அமர்ந்து விட்டவனின், மனதோ தீயாகக் காய்ந்து கொண்டிருந்தது. 

“ஏண்டி அப்படி சொன்ன? நான் என்னடி பண்ணேன் உனக்கு? ஏண்டி என்கிட்ட அப்படி சொன்ன?” என்று கடுங்கோபத்துடன் காலால் அந்த மரத்தை எத்தியவன், தலை முடியை இறுக்கமாகப் பற்றிக் கொண்டு, இயலாமையில் “ஆஆஆஆ” என்று கத்தினான்.

அதில் அந்தக் காடே அதிர்ந்து, அவன் அலறலை அவனுக்கே திருப்பி எதிரொலிக்க, அவன் கண்ணிலிருந்து நீர் துளி ஒன்று அவன் கையில் வந்து விழுந்தது.

காடு மேடு என கால் வலிக்கச் சுற்றித் திரிந்தவன், மறுநாள் துயில் கலைந்து ஓவியமாய் வெளியில் வந்த ஆருவிடம், இறுகிய முகத்துடன் சில காகிதங்களை நீட்டினான். 

 

அவள் புரியாமல் “என்ன தேவா இது?” என்று கேட்க, அவன் ஒவ்வொரு காகிதமாகக் காட்டி “இது நீ பண்ணுன ரிசர்ச் பேப்பர்ஸ். இது அந்த மினிஸ்டர்க்கு எதிரான சில ஆதாரம். என் ப்ராஜெக்ட்காக எடுத்து வச்சேன். 

இது உனக்கு கண்டிப்பா யூஸ் ஆகும். இதை ‘சென்டரல்’க்கு சென்ட் பண்ணிட்டு, சொல்லு. நான் அங்க எனக்குத் தெரிஞ்ச ஆளுங்களை வச்சு, எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் மூவ் பண்றேன். உங்க சஸ்பென்ஷனும் சீக்கிரம் கான்செல் ஆகிடும். இப்போ நீங்க எல்லாரும் கிளம்பலாம்.” என்று பேசி முடிக்க, அவள் அவனை புருவ முடிச்சுடன் பார்த்தாள்.

விஷ்வா வேறு சும்மா இல்லாமல், “நீ தான் அவ பண்ணுன ரிசர்ச் பேப்பர்ஸை கிழிச்சுட்டியே,  இது எங்க இருந்து வந்துச்சு?” எனக் கேட்க, ‘அவள் கேட்டாளா உன்கிட்ட’ என்று அவனை முறைத்தான்.

ஆருவோ “அடப்பாவி நீதான் கிழிச்சியா?” என்று நெற்றிக் கண்ணை திறந்து அவனைப் பார்க்க, தேவா திருதிருவென விழித்து விட்டு, “அதெல்லாம் எதுக்கு உனக்கு? அதான் இப்போ உனக்குத் தேவையானது வந்துருச்சுல… கெட் அவுட் ஃப்ரம் ஹியர்!” என்று கடுமையாகக் கூறியவன் அறைக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டான்.

‘யப்பா முறைக்கிறதுல நம்மள ஓவர் டேக் பண்ணிடுவா போல’ என்றெண்ணி, அறைக்கதவை லேசாகத் திறந்து பார்க்க, அவளோ அந்தக் காகிதங்களை விட்டு விட்டு, தேவாவின் அறையையே தவிப்புடன் பார்த்திருந்ததை கண்டு, மீண்டும் பட்டென்று கதவை அடைத்துக் கொண்டான்.

Click on a star to rate it!

Rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்