Loading

அத்தியாயம்  17  ❤

மஹிமா தனது அளவான ஒப்பனைகளுடன் அறையில் இருந்து கீழே வந்தவுடன் தாய் அவளை வித்தியாசமாகப் பார்த்தார்.

அதைக் கண்டு கொண்ட மஹிமா” ஏன் என்னை வித்தியாசமா பாக்குறீங்க  ? “

சுவர்ணலதா ”   எப்பவுமே நீ  காஃபி குடிச்சுட்டு குளிக்கப் போகவே மத்தியானம் ஆகிரும். ஆனா இன்னைக்கு என்னடான்னா குளிச்சு ரெடி ஆகி வந்துருக்க.அதப்பாத்து தான் அசந்து போய் நிக்குறேன் “

மஹிமா ” அம்மாச்சி வரப் போறாங்கள்ல. அதான்.  அவங்க வர்றது அப்பாவுக்கு தெரியாதே  ? “

மஹிமா புருவம் உயர்த்தி கேட்க.

சுவர்ணலதா “அவருக்குத் தெரியாது. காலைலயே ஏதோ முக்கியமான மீட்டிங்னு கிளம்பிப் போய்ட்டாரு.அப்போ தான் உங்க மாமா ஃபோன் பண்ணி அம்மாவை கூட்டிட்டு வர்றேன்னு சொன்னாரு.எப்படியும் உங்க அப்பா வர ரெண்டு நாள் ஆகும்.அதுனால அம்மா இங்க சந்தோஷமா தங்குவாங்கள்ல  “

மஹிமா  ” அதானப் பாத்தேன். என்னடா நீங்க நான் காலேஜூக்குப் போகலனு சொன்னதுக்கு திட்டாம இருக்கிங்களேன்னு  நினைச்சேன். இதான் விஷயமா  ? எனக்கும் பாட்டிக் கூட ரொம்ப நாள் கழிச்சு சந்தேஷமா மனசு விட்டு பேசனும்னு ஆசைம்மா “

சோபாவில் அமர்ந்து கொண்டு தாயையும் அருகில் அமர்த்திக் கொண்டாள்.

சுவர்ணலதா ” மஹிம்மா ! இவ்ளோ நாள்ல உங்க அப்பாவைப் பத்தி, நீ என்னப் புரிஞ்சுக்கிட்ட ? “

  மகளை கூர்ந்து கவனித்துக் கொண்டே கேட்டார்.

.மஹிமா குழப்பத்துடன் பார்க்க,

சுவர்ணலதா ” சம்பந்தமே இல்லாத கேள்வினு பாக்குறியா ? இந்த நேரத்தில இந்த கேள்வி அவசியம் தான்.சொல்லு மஹி  “

திடிரென்று தாய் கேட்ட கேள்வியில் சற்று குழம்பினாலும் அவர் எதிர்பார்க்கும் பதிலை தன்னால் அளிக்க முடியுமா  ? என யோசித்தாள்.

மகளின் யோசனையைப் பார்த்த சுவர்ணலதா,

” இதுல நீ கன்ஃப்யூஸ் ஆகுறதுக்கு ஒன்னும் இல்ல.அப்பா உங்கிட்ட எப்படி நடந்துக்குறாருனு சொல்லு  ? “

மஹிமா அவரை முறைத்துக் கொண்டே,

” எங்கிட்ட தான ரொம்ப பாசமா நடந்துக்குறாரு. எனக்கு உடம்பு சரி இல்லைனா உருகிப் போயட்றாரு. ஆஃபிஸ் வேலையைக் கூட பாக்காம என் பக்கத்துலயே இருந்து என்ன நல்லா கவனிச்சுப்பாரு அப்பறம் எங் கூட உக்காந்து சாப்பாடு சாப்பிடுவாரு. என்னை எவ்ளோ சந்தோஷமா பாத்துப்பாரு.இல்லம்மா ?” என இழுத்தாள்.

அவள் கூறுவதைக் கேட்ட சுவர்ணலதாவின் முகம் சுணங்கிப் போயிற்று.ஏனென்றால் தன் தந்தை தன்னிடம் எப்படி எல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்பதை பட்டியலிட்டுக் கொண்டு இருந்தாள் மஹிமா.

ஆனால் அவ்வாறு நடக்கப் போவது இல்லை என்றும் சுவர்ணலதாவிற்கும் ஏன் மஹிமாவிற்கு கூட தெரியும்.அவளது மனதில் இருக்கும் வலிகள் கேலியாக வார்த்தைகளில் வெளிப்பட்டுக் கொண்டு இருப்பதை அறிந்தார் சுவர்ணலதா.

மஹிமா மேலும் ” என்னை விடுங்கம்மா. உங்கிட்ட அவர் நடந்துக்கறது தான் ஹைலைட் – யே.உன்னை ஒரு மனைவியா மட்டும் பாக்காம ப்ரண்டாவும் பாக்குறாரு உன்னை கிட்ட உக்காற வச்சு உங்கிட்ட கலந்து பேசி தான் எல்லா முடிவும் எடுப்பாரு.உன்னை கண் கலங்காமல் பாத்துக்குறாருல்லம்மா.இதுக்கு மேல அப்பா நம்மகிட்ட நடந்துக்கனும் சொல்லுங்க”

தாய்க்கு முதுகு காட்டி அமர்ந்து கொண்டு அவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்து கொண்டு இருந்தாள்..

அவள் பேசப் பேச சுவர்ணலதாவின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடி கன்னத்தை அடைந்தது.மகள் தன்புறம் திரும்பும் முன் அதை துடைத்துக் கொண்டார்.ஆனால் மஹிமாவோ இன்னும் தாயை திரும்பிப் பார்க்கவில்லை.அவளது தாடையில் கை வைத்து மஹிமா என அழைத்தார்.தாயின் கையைத் தட்டிவிட்டு கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

அவளும் அழுதிருப்பது தெரிய  ,

” சாரிடா மஹி  ! ”  அவளை சமாதானம் செய்ய முயன்றார்.

மஹிமா ” ஒன்னும் சமாதானம் பண்ண வேண்டாம். போங்க  “

அவரிடம் கோபித்துக் கொண்டாள்.

சுவர்ணலதா ” மஹி அம்மாவைப் பாரேன்..என்ன தான் நம்ம வீட்ல பிரச்சனை நடந்தாலும் அத நமக்குள்ளேயே வச்சுக்கனும்.யாருகிட்டயும் தப்பித் தவறிக் கூட சொல்லிடக் கூடாது சரியா !”

இப்போது புரிந்து விட்டது மஹிமாவிற்கு.தாய் எதைப் பற்றி தன்னிடம் வலியுறுத்த விரும்புகிறார் என்று.

மஹிமா ” நான் நம்ம வீட்ல நடக்குறது, முக்கியமா அப்பா நம்மகிட்ட நடந்துக்குற விஷயத்தைப் பத்தி அம்மாச்சிக்கிட்ட சொல்லக் கூடாதுனு  சொல்றிங்க அப்படித்தான  ? ” என்று கோப முகம் காட்டினாள்.

சுவர்ணலதா அதைப் பார்த்து வேதனைப்பட்டாலும் ” ஆமாடா . நீ எதைப் பத்தியும் அம்மாச்சிட்ட சொல்லக் கூடாது “

மஹிமா ”   ஏன் சொல்லக் கூடாது  ? அவங்க கிட்ட சொன்னா கூட தாத்தாவுக்கு விஷயம் தெரிய வாய்ப்பிருக்கு.அவர் வந்து அப்பாவை நாலு சாத்து சாத்தி நல்ல புள்ளையா மாத்துவாரு.ஆனா நீங்க இப்படி எல்லா விஷயத்தையும் சொல்லாம இருக்கனால தான் அவருக்கு குளிர் விட்டுப் போய் இப்படி காட்டு மிராண்டித்தனமா நடந்துக்குறாரு ” என்று கத்தினாள்.

சுவர்ணலதா ” ஷ் ! மஹி மெதுவாப் பேசு ”  கையைப் பிடித்து அழுத்தினார்.

மஹிமா ” கையை விடுங்கம்மா  ! “

அவரிடம் இருந்து தனது கையை உருவிக் கொண்டு, ” நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லுங்க.நான் ஏன் இங்க நடக்கற விஷயத்தையெல்லாம் அம்மாச்சிட்ட சொல்லக் கூடாது  ? “

சுவர்ணலதா ” ஏற்கனவே அவங்க என்னை உங்க அப்பாவுக்கு கல்யாணம் பண்ணி வச்சு பெரிய தப்பு பண்ணிட்டோமேனு ரொம்ப கஷ்டப்பட்றாங்க. இதுல இந்த விஷயம்லாம் தெரிஞ்சதுனா , இன்னும் அவங்களை கஷ்டப்படுத்துறா மாதிரி ஆகிரும்டா.அதுனால தான் எதுவும் சொல்லாதனு சொல்றேன்  “

மஹிமா எதுவும் பேசாமல் தாயை வெறித்துப் பார்க்க, ” அப்பாவுக்கு வேற உடம்பு சரியில்லையாம் அதுனால  ! “

மஹிமா ” நான் எதுவும் அம்மாச்சிட்ட சொல்ல மாட்டேன் “

அவருக்கு வாக்கு கொடுத்தாள்.அதில் நிம்மதி அடைந்த சுவர்ணலதா தன் தாயின் வருகை மஹிமாவின் காயம்பட்ட மனதிற்கு ஆறுதல் தரும் என்று உறுதியாக நம்பினார்.

வீட்டின்  காலிங் பெல் ஒலிக்க கதவைத் திறந்த சுவர்ணலதாவின் கண்களில் கண்ணீர் நிறைந்து நின்றது.அங்கே சந்திரா புன்னகை முகத்துடன் நின்றிருந்தார்.
” அம்மா  ”  அவரைக் கட்டித் தழுவிக் கொண்டார்.
“சுவர்ணாம்மா.. “மகளை ஆதரவாகத் தட்டிக் கொடுத்தார்.
சுவர்ணலதா அழுது முடித்து நிமிர , ” உள்ள வாங்கம்மா ” என அவரை வீட்டிற்குள் அழைத்துச் சென்றார்.
.அங்கே மஹிமா சோபாவில் அமர்ந்து  தாயுடன் வந்து கொண்டிருக்கும் அம்மாச்சியைப் பார்த்ததும் உணர்ச்சிப் பெருக்குடன் “அம்மாச்சி ” இத்தனை நாட்களாக கனத்து இருந்த மனதிற்கு ஆறுதல் தேடி அலைந்தவள் தன் பாட்டியிடம் அடைக்கலம் புகுந்தாள்.
சந்திராவும்  வெகு நாட்கள் கழித்து பேத்தியைப் பார்த்த சந்தோஷத்தில் இருந்தார்.சந்திராவை சோபாவில் அமர வைத்து அவரது மடியில் தலை சாய்த்து படுத்துக் கொண்டாள் மஹிமா.
சுவர்ணலதாவின் மனம்  இதைப் பார்த்ததும்  ஒரு வித நிம்மதி அடைந்தது.சந்திரா நிச்சயம் மஹிமாவிற்கு தைரியம் அளிக்கும் விதமாக பேசுவார் என சுவர்ணலதா அறிந்திருந்தார்.
ஏனெனில் அவர் சிறு வயதில் துவண்டு போகும் போதெல்லாம் தாய் மடி தேடியவர்… தன்னைப் பேல் தன் மகளும் அவரின் மீது பாசமாய் இருப்பது கண்டு மகிழ்ந்து போனார்.
அவர்களுக்கு எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டு, சுவர்ணலதா ” அண்ணா எங்க நீங்க மட்டும் தான் வந்திருக்கீங்க  ? “
சந்திரா பேத்தியின் தலையை கோதி விட்டுக் கொண்டே,” அவன் பையன் இங்க தான் வேலைப் பாக்குறான்ம்மா . என்னை வீட்டுக் கிட்ட இறக்கி விட்டுட்டு அவன் மகனைப் பாக்க கிளம்பிட்டான்”
சந்திராவை ஊருக்கு அழைத்து வந்தது சிவநாதன் அவர் சந்திராவின் தூரத்து உறவினர். சுவர்ணலதாவிற்கு அண்ணன் முறை. சுவர்ணலதாவின் குடும்பத்திற்கு அவர் மேல் மதிப்பு அதிகம். நாணயமான ஆள்.அவரின் உதவியால் தான் சந்திரா இன்று தனது மகளைப் பார்க்க ஊருக்கு வர முடிந்தது.
சுவர்ணலதா ”  அப்படியா  ! சரிம்மா. அண்ணனை சாப்பிட வர சொல்லுங்கம்மா  “
சந்திரா ” அதெல்லாம் நான் சொல்லி தான் அனுப்பி இருக்கேன் வந்துருவான்  “
சுவர்ணலதா ” அப்பா எப்படிம்மா இருக்காரு ?”
தந்தையின் நலனைப் பற்றிய அக்கறையுடன் கேட்டார்.அப்போது அவரது குரல் சற்று இறங்கியது.
சந்திரா ” அப்பாவுக்கு என்ன  ! நல்லா இருக்காரும்மா . மாப்பிள்ளை எப்படி இருக்காரு ? சந்தோஷமா பாத்துக்குறாரா  ? “
சுவர்ணலதா ”  அதுலாம் எந்த குறையும் இல்லம்மா. நீங்க பேசிட்டு இருங்க . நான் போய் உங்களுக்கு சாப்பாடு ரெடி பண்றேன் ” சமையலறைக்குள் நுழைந்தார்.
வீட்டு வேலைக்காரி ஒரு ட்ரேயில் ஜூஸ் கொண்டு வந்து அவரிடம் நீட்ட புன்னகையுடன் அதை வாங்கிப் பருகலானார்.
குடித்து முடித்ததும் தம்ளரை அருகில் வைத்து விட்டு பேத்தியிடம்,” மஹிக்குட்டி நல்லாப் படிக்குறிங்களா  ? “
மஹிமா ”  நல்லாப் படிக்குறேன் அம்மாச்சி. தாத்தாவையும் கூட்டிட்டு வந்துருக்கலாம்ல  ? “
சந்திரா ” அவருக்கு வயக்காட்டுல நிறைய வேலை இருக்கு மஹிக்குட்டி ! அதான் வர முடியல. அடுத்த தடவை பேத்தியைப் பாக்காம உங்களுக்கு அப்படி என்ன முக்கியமான வேலைனு திட்டி கூட்டிட்டு வர்றேன் “
மஹிமா ” நிஜம்மா  ! கூட்டிட்டு வரனும் பொய் சொல்லக் கூடாது “
சந்திரா ” கண்டிப்பாக கூட்டிட்டு வர்றேன் ராஜாத்தி “

– தொடரும்

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்