Loading

“அப்பறம் என்னாச்சு யக்ஷூ?” என்று தன் மனைவியின் பதிலைக் கேட்க அவசரப்பட்டான் அற்புதன்.

 

அதற்குப் பிறகு நிகழ்ந்தவை யாவும் அவளுக்குச் சாதகமானதாக அமையவில்லை என்பதை மனைவியின் கம்மிப் போனக் குரலிலேயே தெரிந்து கொண்டான் அவளது கணவன்.

 

“ம்ஹ்ம் சொல்றேன் ங்க” என்றவள், மீண்டும் தொடர்ந்தாள் யக்ஷித்ரா.

 

‘படி! படி!’ என்று தன்னை நெருக்கவில்லை என நிம்மதி

 அடைந்தாலும், அதிலும் மன அழுத்தம் வந்தது அவளுக்கு.

 

தந்தையின் குணம் என்னவென இப்போது வரை மகளுக்குப் புரியவில்லை தான்!

 

ஆனால், அதை தவிர வேறெதுவும் செய்யத் தெரியாமல் இருப்பது, அவளுக்கு மன அழுத்தத்தைக் கொடுத்தது.

 

அவ்வப்போது, நிவேதிதாவைப் பாட வைத்துக் கேட்டு அமைதியடைந்து விடுவாள் யக்ஷித்ரா.

 

இப்போதெல்லாம், அதுவும் அவளைச் சாந்தப்படுத்தவில்லை. 

 

“அம்மா! ஏதோ மனசை அழுத்துது!” என்று மீனாவிடம் கூறினாள் யக்ஷித்ரா.

 

அதைக் கேட்டவர்,’அதெல்லாம் வரலைன்னா தான் ஆச்சரியம்!’ என்பதைப் போல, வேதனையுடன் மகளைப் பார்த்தார் அவர்.

 

கணவனின் செய்கைகள் இவளை வெகு சீக்கிரம் இப்படியான மனநிலைக்கு மாற்றி விடும் என்பதை முன்னரே அறிந்திருந்தார். 

 

அதனால்,”பெரியப்பா இல்லைன்னா சித்தப்பா ஊருக்குப் போயிட்டு வர்றியா?” என்று அவளைத் தன் மேல் சாய்த்துக் கொண்டு கேட்டார் மீனா.

 

அன்னையின் தோளில் முகம் புதைத்துக் கொண்டவள்,”எங்க மிஸ் லீவ் கொடுக்க மாட்டாங்க ம்மா. அதுவும் எக்ஸாம்ஸ் வரப் போகுதே?” என்று வருத்தத்துடன் உரைத்தாள் யக்ஷித்ரா.

 

“அந்த ஸ்கூலில் எதுக்குத் தான் லீவ் கொடுப்பாங்க!” என்று சலித்துக் கொண்டாள் யாதவி.

 

சாதாரணமாகப் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு சில பள்ளிகளில் கூடுதல் கெடுபிடி இருக்கும். அவ்வளவு எளிதில் விடுப்புக் கொடுத்து விட மாட்டார்கள். 

 

“படிக்கனும், எக்ஸாம் எழுதனும் இதையெல்லாம் சொல்றவர்,அதை ஸ்ட்ரெஸ் இல்லாமல்‌ எப்படி பண்ணனும்னு சொல்ல மாட்டேங்குறாரே அம்மா?” என்று சோகமாக வினவினாள் யக்ஷித்ரா.

 

“நீ என்ன அக்கா இப்படி ஃபீல் பண்ணிட்டு இருக்கிற? என்னைப் பாரு, நான் அவர் பண்றதை எல்லாம் கேஷுவலாக எடுத்துக்கிறேன்ல? அப்படி இரு. அதுதான் உன் மென்டல் ஹெல்த்துக்கு நல்லது” என்று தமக்கைக்கு இலவசமாக அறிவுரை வழங்கினாள் யாதவி.

 

“அப்படி என்னால் இருக்க முடியலையேஏஏஏஏ!” என்று திடீரென தொண்டைக் கிழியக் கத்த ஆரம்பித்து விட்டாள் யக்ஷித்ரா.

 

அதில் அதிர்ந்து, உதறல் எடுக்கத் தன் அக்காவைப் பார்த்து பயந்து பின்னே நகர்ந்தாள் யாதவி.

 

“யக்ஷிம்மா! ஒன்னும் இல்லைடா” என அவளைத் தன் கை‌ வளைவில் வைத்துக் கொண்டு, சமாதானம் செய்தார் மீனா.

 

ஆனால், அவரிடமிருந்து திமிறி விலக யத்தனித்துப் போராடினாள் யக்ஷித்ரா.

 

“ஸ்ஸூ..‌. அமைதியாக இருடா! என்னடா ம்மா?” என்று மகளது தோளைத் தடவிக் கொடுத்து சாந்தப்படுத்த முயற்சித்தார் மீனா.

 

அதற்குள் அதிர்ச்சி தெளிந்து, சமையலறைக்குப் போய் அக்காவிற்காக குடிநீர் கொண்டு வந்தாள் யாதவி.

 

“முடியலையே ம்மா!!” என்று மீண்டும் மீண்டும் அதையே சொல்லி, சொல்லிக் கத்தினாள் யக்ஷித்ரா.

 

“தொண்டை வலிக்கும் டா ம்மா! கத்தாதே!” என அவளது தோளைத் தடவிக் கொடுத்தார் மீனா.

 

“ஆஆஆஆ!!!” என்று உரக்கக் கத்தி அழுகவும்,

 

யாதவியோ ஓடி வந்து யக்ஷித்ராவைக் கட்டிக் கொண்டு,”அக்கா! அழாதே! நான் இருக்கேன், உனக்காக நான் பேசுறேன். அமைதியாகு!” என்று அவளும் தமக்கையைச் சமாதானம் அடையச் செய்ய முயற்சிகள் மேற்கொண்டாள்.

 

மகள்கள் இந்தளவிற்கு அவதிப்படுவதைக் கண்டு கண்ணீர் வடித்தார் மீனா.

 

ஓரளவிற்குக் கத்தி முடித்து, நிதானம் ஆனாள் யக்ஷித்ரா.

 

அப்படியே தாயின் மேல் சரிந்து விழுந்தவளைத் தாங்கிப் பிடித்துக் கொண்டனர் அன்னையும், யாதவியும்.

 

“தண்ணீர் குடிக்கிறயா டா?” என்று அவளது முகத்தைச் சீர் செய்து கொண்டே கேட்டார் மீனா.

 

“வேண்டாம் மா. எனக்குப் பிடிக்கலை!” என்று அழுத்தமாக கூறினாள் யக்ஷித்ரா.

 

“சரிடா வேணாம். வா, ரெஸ்ட் எடு” என அவளை அறைக்கு அழைத்துப் போனார்கள்.

 

“பாலைச் சூடு பண்ணி எடுத்துட்டு வா யாது” என்று சின்ன மகளிடம் மெதுவாக கூறி அனுப்பினார் மீனா.

 

“வேணாம்னுச் சத்தமாகச் சொல்லக் கூட முடியலையே ம்மா!” என்று தாயிடம் கூறினாள் யக்ஷித்ரா.

 

“ஏன்டா ம்மா இப்படியெல்லாம் பேசுற? அம்மா இருக்கேன் டா! உன் கூட, யாது இருக்கால்ல?” என என்னென்னவோ சொல்லி அவளுக்கு நம்பிக்கை அளிக்கப் பார்த்தார் மீனா.

 

“வேணாம்! வேணாம் மா!” என்றாள் மகள்.

 

“சரி வேணாம்” என்று அவளுக்கு இசைந்து கூறினார்.

 

“யாது!” என்று சிறியவளை அழைத்தார் மீனா.

 

இதோ கொண்டு வந்துட்டேன் ம்மா” எனக் கையில் தம்ளருடன் அறைக்குள் வந்தாள் யாதவி.

 

“என்ன இது?” என்று அவளிடம் கேட்டாள் யக்ஷித்ரா.

 

“பால் அக்கா, குடிச்சிப் பாரு. பெட்டர் ஆக இருக்கும்” என்று மென்மையாக கூறினாள் தங்கை.

 

என்ன நினைத்தாளோ? ஒன்றும் சொல்லாமல், அதை வாங்கி படக்கென வாயில் சரித்துக் கொண்டாள்.நல்லவேளையாக, மிதமான சூட்டில் தான், அதைக் கொண்டு வந்திருந்தாள் யாதவி.

 

“கண்ணு சொருகுது, தலை வலிக்குதும்மா!” என்று அனத்தினாள் யக்ஷித்ரா.

 

அவளை மடியில் படுக்க வைத்துக் கொண்டவர்,மகளுக்கு இவ்வளவு மன அழுத்தம் கூடாது என முடிவு செய்தவர், அடுத்து செய்ய வேண்டியதை யோசித்து வைத்துக் கொண்டார் மீனா.

 

🌸🌸🌸

 

இந்த நிகழ்வின் முடிவு என்னவென்று கேட்காமல், மனைவியை இறுக அணைத்து விட்டு, அவளது நெற்றியில் தன் இதழைப் பதித்தவன், அதன்பின், முகம் முழுவதும் முத்தங்களை இறைத்து, தனது தவிப்பை, மனைவியிடம் காட்ட முயற்சி செய்தான் அற்புதன்.

 

கணவனுடைய இந்தச் செயல் அதிர்ச்சியைத் தந்தாலும், அதில் வெறுப்பு ஏற்படவில்லை யக்ஷித்ராவிற்கு.

 

மனைவியின் முகத்திலிருந்து தன்னுடைய இதழைப் பிரித்தெடுத்தவன், “ரொம்ப எமோஷனல் ஆகிட்டேன் மா! சாரி” என்றவன், அப்போதும் கூட அவளை விலகி நிற்கவில்லை.

 

“நான் உங்ககிட்ட ஒன்னுக் கேட்கலாமா?” என்றாள் அவனது மனைவி.

 

அவள் அதைக் கேட்டவுடன் அற்புதனின் முகம் தொங்கிப் போய், கண்கள் ஏமாற்றத்தைப் பிரதிபலித்தது.

 

  • தொடரும் 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்