
அத்தியாயம் – 16
தேவாவையே பார்த்துக் கொண்டிருந்த ஆராதனா கனவுலகில் மூழ்க, தமி அவள் தோளை இடித்து, “அடியேய் ஏதோ சொல்ல வந்து சஸ்பென்ஸோட நிறுத்திட்டு ‘சைட்’ அடிச்சுட்டு இருக்க… அந்த அப்பாவியைக் கொஞ்சம் கவனி” என்று நிஷாந்தை கைக்காட்ட, அவன் அவளைப் புரியாமல் பார்த்திருந்தான்.
அவள் அப்போதும் தேவாவையே பார்க்கவும், பொறுமை இழந்த தேவா, “என்ன சொல்ல வந்த?” என்றான் அதட்டலாக. அதில் ‘அதைக் கொஞ்சம் அமைதியா கேட்டாத்தான் என்னவாம்?’ என்று முறைத்தவள், நிஷாந்திடம்,
“அன்னைக்கு நீ பண்ணுன ஆக்சிடென்ட் ஒரு உயிரைக் கொல்லல. காப்பாத்த தான் செஞ்சுருக்கு.” என்றாள். அதில் அம்மு தான், ‘ஐயோ, தேவா தள்ளி விட்டதுல இந்தப் புள்ளைக்கு தலையில எதுவும் அடி பட்டுடுச்சோ?’ என்று புலம்பிட, வைஷு “என்ன சொல்ற?” என்றாள் புரியாமல்.
“அன்னைக்கு அவன் ஆக்சிடென்ட் பண்ணது கண்மணி அத்தையைத் தான்” என்று வருத்தம் தோய்ந்த முகத்துடன் கூறியவளை ஆடவர் நால்வரும் திகைத்துப் பார்த்தனர்.
ஆராதனா மட்டுமே சென்னையில் விடுதியில் தங்கி கல்லூரி பயின்றாள். மற்ற மூவரின் சொந்த ஊருமே சென்னை தான். அவளின் மாமா சிவன், சென்னையில் வியாபாரம் செய்ய, அவர்களுக்கு, பல வருடங்களாகக் குழந்தை இல்லை. இருவருக்கும் ஆராதனா தான் செல்லம்.
அப்போது தான், அவளின் அத்தை கண்மணி கருவுற அதில் அந்தக் குடும்பம் அடைந்த மகிழ்விற்கு அளவே இல்லை. ஆனால் கரு வளர வளர, அவரின் கர்ப்பப்பை வலுவிழந்தது. முதலிலேயே அதனை கவனிக்காததால், ஐந்து மாதத்திலேயே அவருக்கு உடல் நிலை மோசமாக, சிகிச்சைக்கு சென்னை வந்திருந்தார். ஆனால் குழந்தையை உடனே எடுக்க வேண்டும் என்றும், இல்லை என்றால் கண்மணியின் உயிருக்கே ஆபத்து என்றும், மருத்துவர் கூறியதை கேட்டு அதிர்ந்த சிவன், “கண்மணி தான் எனக்கு வேண்டும். ஆபரேஷன் செய்து குழந்தையை எடுத்து விடுங்கள்.” என்றிட, கண்மணி மறுத்து விட்டார்.
இறந்தாலும் குழந்தையோடு இறந்து விடுகிறேன் என்று உறுதியாக இருந்தவரை, சிவனாலும் சரிப் படுத்த முடிய வில்லை.
அப்போது தான், ப்ராஜெக்ட்காக வெளியூர் சென்று விட்டு சென்னை திரும்பிய ஆராதனாவிற்கு, இந்த விஷயம் தெரிய வர, அத்தையை பார்க்கப் போகும் வழியில் தான், வைஷுவின் வீடு இருந்ததில் அவளையும் அழைத்துக் கொண்டு செல்லலாமென எண்ணி, அவள் வீட்டிற்கு வந்தாள். அப்போது தான் அவள் தற்கொலைக்கு முயன்றது.
அதன் பிறகு, அவளிடம் சரியாகக் காரணம் கூடக் கேட்க இயலாமல், ஆராதனா அத்தையை பார்க்கச் சென்று, அவரை சம்மதிக்க வைக்க முயல, அவரோ ஒப்புக் கொள்ளவே இல்லை. அன்று தான், “நான் மதுரைக்கே போறேன். நீயும் மாமாவும் சேர்ந்து என் மனசை மாத்த பார்க்காதீங்க. என்னால குழந்தையைக் கொல்ல முடியாது.” என்று தீர்மானமாகக் கூறிவிட்டு, விமான நிலையம் நோக்கிச் செல்லும்போது தான் அந்த விபத்து நடைபெற்றது.
“அன்னைக்கு அத்தையை ஆபரேஷன் பண்ண வைக்க எவ்வளவோ ட்ரை பண்ணோம். ரொம்ப கட்டாயப்படுத்துனா அதுனால ஸ்ட்ரெஸ் ஆகி அவங்களுக்கு பிபி ஏறி, அதுவும் பிரச்சனை ஆகுதுன்னு, பொறுமையா சொல்லிப் பார்த்தோம். ஆனால் அவங்க நாங்க சொன்னதை கேட்காம மதுரைக்கு கிளம்பிட்டாங்க. அன்னைக்கு அந்த ஆபரேஷன் மட்டும் நடக்கலைன்னா, குழந்தையோட சேர்த்து அத்தையும்…” என்றவளுக்கு வார்த்தை வராமல், தொண்டையில் சிக்கியது.
பின் தன்னை நிலைப்படுத்திக் கொண்டவள், “சோ, நீ நல்லது தான் பண்ணிருக்க. உன்னால எந்த உயிரும் போகல. முட்டாள் தனமா இதை நினைச்சுகிட்டு அவளைக் கஷ்டப்படுத்தாத! நமக்கு நடக்குற எல்லா கெட்டதுக்கும் பின்னாடி, ஏதோ ஒரு நல்ல விஷயம் இருக்கும். அது நம்ம லைஃபயே வேற திசைக்குக் கொண்டு போகும். அது மாதிரி நீ பண்ணுன கெட்டதுக்கு பின்னாடி ஒரு நல்லது தான் நடந்துருக்கு.” என்றதை கேட்ட நிஷாந்திற்கு சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை.
“நிஜமா, அப்போ.. என்.. என்னால, எந்தத் தப்பும் நடக்கலையா, ஆரு? நீ உண்மையா தான் சொல்றியா?” என்று நம்ப இயலாமல் கேட்டவனுக்கு, பல வருடமாக மனதை அழுத்திக் கொண்டிருந்த பெரும் பாரம் இறங்கியது போன்றதொரு உணர்வு. தேவாவுக்கும் தான். அவன் தானே கண்மணியின் விபத்தை நேராகப் பார்த்து மருத்துவமனையில் சேர்த்ததே. அதில், அவனைவிட உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டு இருந்தது தேவா தான்.
ஆனால், இதனால் சந்தோசப்பட முடியாமல் ஆண்கள் நால்வரும் ஒருவரை ஒருவர் அர்த்தத்துடன் பார்த்துக் கொள்ள, ஆருவிற்கு தான் ஒன்றும் புரியவில்லை.
“டேய், நான் எவ்வளவு பெரிய ஃபிளாஷ் பேக்க கஷ்டப்பட்டு சொல்லி, உன் காதலை சேர்த்து வைக்க நாக்கு தள்ள டயலாக் பேசிகிட்டு இருக்கேன்… இப்போயும் ஏண்டா காட்டுக்குள்ள தொலைஞ்சு போன காண்டா மிருகம் மாதிரி முழிக்கிறீங்க?” எனக் கடுப்படிக்க,
அதில் சிரித்த விஷ்வாவை முறைத்த தேவா, அவன் தலையில் பட்டென்று அடித்தான்.
“ஒரு ஐடி கார்ட ஒழுங்கா வச்சுக்க தெரியல… போ! போய் நிஷிதாவுக்கு இன்ஜெக்ஷன் போட்டுட்டு வா” என்று அடிக்குரலில் திட்டிட, அம்மு “எதுக்குடா அவனை அடிக்கிற? என் முன்னாடி என் செல்லத்தை அடிக்கிற வேலை எல்லாம் வச்சுக்காத…” என்றவளை தேவா விழி உயர்த்தி பார்க்க, விஷ்வா உடனே “உன் வேலைய மட்டும் நீ பாரு. யார் என்ன பண்ணனும் பண்ணகூடாதுன்னு நீ சொல்ல வேணாம்.” என்று படபடவெனப் பொரிந்து விட்டு வெளியில் சென்றிட, அம்மு “அடிங்க!” என்று அவன் பின்னேயே சென்றாள்.
அம்மு பேசியதில் சற்று முகம் சுருங்கிய தேவா, விஷ்வாவின் கூற்றில் சிறிதாய் இதழ் விரித்து விட்டு, உள்ளே செல்ல, ஆரு அவன் பின்னே சென்றாள். வைஷு எதுவும் பேசாமல் அறைக்குச் சென்றிட, அவள் மனம் நிச்சயம் காயப்பட்டிருக்கும் என உணர்ந்த நிஷாந்த், அவளைச் சமாதானம் செய்யும் பொருட்டு அவள் பின்னே சென்றான்.
தமி தான், “இதுங்க, ஆராய்ச்சி பண்ண வந்துருக்குங்களா இல்ல, கரெக்ட் பண்ணி கல்யாணம் பண்ணிக்க வந்துருக் குங்களான்னே தெரியல…” என்று தலையைச் சொரிந்து கொண்டு புலம்பினாள்.
அதில் குறுநகை பூத்த அருணை கண்டவள் “அது சரி பெங்களூர் போனதுக்கு அப்பறம், என்ன ஆச்சு” எனக் கேட்டாள் யோசனையாக.
அதில் அருண் அமைதி காத்திட, “அதான், எல்லாத்தையும் சொல்லிட்டீங்களே, மீதியையும் சொல்ல எதுக்குடா பத்து எபிசோட் இழுக்கிறீங்க?” என்று முறைத்தவளைக் கண்டு சிரித்தவன்,
“அப்பறம் என்ன? அங்க போனதும் முதல்ல என்ன பண்றது? ஏது பண்றதுன்னு தெரியாம முழிச்சோம். அந்த மினிஸ்டர் மேலயும், பெத்தவங்க இல்லாம வாழுறது என்ன அவ்ளோ பெரிய பாவமான்னு முதல்ல கோபப்பட்டோம்.”
தேவா தான், ‘யாரோ ஒருத்தர் ரெண்டு பேர் பண்ற தப்புக்காக நம்மளும் பழி வாங்குறேன்னு போய் அதே தப்பை பண்ணைக் கூடாது. அனாதைங்கன்னா எதுக்குமே லாயக்கு இல்லாதவங்கன்னு நினைக்கிறவங்கள நம்ம முன்னாடி, கைக்கட்டி நிக்க வைக்கணும்னு சொன்னான்.’
எத்தனையோ பசங்களை, ட்ரக்ஸ்க்கு அடிமையாக வச்சு, அவங்களை வச்சே கொலை கொள்ளை பண்ண வச்சு, அவங்க வாழ்க்கையாவே சீரழிக்கிறாங்க. அதைவிட, சில பசங்களை கடத்திட்டு போய், அவங்க ஆர்கன்ஸ எடுத்து வெளிநாட்டுக்கு வித்துடறாங்க. பசங்களுக்கே இந்த நிலைமைன்னா பொண்ணுங்களுக்கு?” என நிறுத்தியவனை திகைத்துப் பார்த்தாள்.
அவனே தொடர்ந்து “நினைச்சு கூடப் பார்க்க முடியல. முதல்ல எந்த அக்கறையும் இல்லாம, எந்த வித லட்சியமும் இல்லாம தான் வளர்ந்தோம். ஆனால் அந்த ஒரு நாள் இன்சிடென்ட் எங்களை ரொம்பவே மாத்திருச்சு.
எங்களை மாதிரி எத்தனை பசங்க பாதிக்கப்பட்டுருப்பாங்க. எத்தனை பேர் உயிரை இழந்துருப்பாங்க. அவங்களுக்கு ஏதாவது செய்யணும்னு நினைச்சோம்.
இந்த உலகத்துல இருக்குறவங்களை, நம்ம சொன்னதை செய்ய வைக்கணும்னா ஒன்னு பணம் இருக்கணும். இல்ல பதவி இருக்கணும். பணம் அப்போதைக்கு எங்களுக்குத் தேவையானது இருந்துச்சு. போலீஸ்க்கு ட்ரை பண்ணோம். ஆனால் அங்கேயும் ஊழல் தான். அங்க இருக்குற மினிஸ்டர் ஆளு ஒருத்தர் நிஷாந்தை பார்த்து, அப்பறம் அவன்கிட்ட எஸ்கேப் ஆகி, போதும் போதும்னு ஆகிடுச்சு.
அப்பறம் தான், இந்த டிடெக்டிவ் ஐடியா வந்துச்சு. உடனே பெங்களூர்லேயே கோர்ஸ் பண்ணி, ரெண்டு வருஷம் ஒர்க் பண்ணோம். அப்பறம் தான், தேவா கிட்ட இருந்த பணத்தை வச்சு, சின்னதா ஏஜென்சி ஸ்டார்ட் பண்ணோம். ஆனால் அது நாங்க நினைச்சு கூடப் பார்க்காத அளவுக்கு, எங்களுக்குப் பேரையும் புகழையும் கொடுத்துச்சு.” என்றான் பழைய நினைவுகளை அசை போட்டு.
இந்த நிலைக்கு வர அவர்களும் சும்மா இருக்கவில்லை. மக்களுக்கு அவர்கள் மேல் நம்பிக்கையை கொண்டு வர, ராத்திரி பகலாக உழைத்தார்கள். பல பல அவமானங்கள், தடைகளை மீறித் தான், இப்போது பெங்களூருவில் புகழ்பெற்ற டிடெக்டிவ்ஸாக இருக்கிறார்கள்.
காரில் ஏறி அமர்ந்த விஷ்வா, முகத்தை சுருக்கிக் கொண்டு காரை எடுக்க, அதற்குள் அவன் அருகில் வந்து அமர்ந்தவள் அவனை முறைத்தாள். விஷ்வா “நீ எதுக்கு ஏறுன? முதல்ல இறங்கு!” என்று கட்டளையாகச் சொல்ல, அது கூட அவளுக்குக் கொஞ்சி பேசுவது போன்றே இருந்தது.
அவன் தலையில் நறுக்கென்று கொட்டியவள், “அதென்னடா பேசிகிட்டு இருக்கும் போதே, நீ பாட்டுக்குக் கிளம்பி போற…” என்று மீண்டும் கொட்டியதில் அவன் தலையைத் தேய்த்துக் கொண்டு, “நீ எப்படி அவன் என்னை அடிக்கக் கூடாதுனு சொல்லலாம்? அதுக்கு உனக்கு என்ன ரைட்ஸ் இருக்கு? எனக்கு அவன் தான் எல்லாமே, மத்தது எல்லாமே அவனுக்கு அப்பறம் தான். புரிஞ்சுதா? தேவை இல்லாம இனிமே என்னை டீஸ் பண்ணாத? இறங்கிப் போ” என்று திரும்பிக் கொள்ள, அவன் ‘என்ன உரிமை இருக்கிறது’ என்று கேட்டதில், கண் கலங்கினாலும் அதனை மறைத்துக் கொண்டவள்,
அவன் சட்டையைப் பிடித்து, “எனக்கு என்ன உரிமைடா இல்ல. உன் மேல அவனைவிட எனக்கு எல்லா உரிமையும் இருக்கு” என்றதும், பட்டென்று காரை விட்டு இறங்கியவன் கோபத்தை அடக்கிக்கொண்டு நிற்க,
அம்மு சட்டென அவனைப் பின்னிருந்து அணைத்துக் கொண்டாள். “எனக்கு உரிமை இல்லைன்னு சொல்லுடா நான் போய்டுறேன்.” என்று கலங்கிய குரலில் கூறியவளிடம், வீம்பாக, “அவனைவிட இல்ல” என்றிட, அதில் அவன் முன்னே சென்றவள்,
“நான் எப்போ டா இல்லைன்னு சொன்னேன். எருமை… நான் அங்க என்ன சொல்ல வந்தேன் தெரியுமா? அவனை இங்க என் முன்னாடி அடிக்காத, ஐடி கார்டை தொலைச்சதுக்கு உள்ள கூட்டிட்டு போய், ஊமைக் குத்தா குத்துன்னு சொல்ல வந்தேன்.” என்றவன் அவள் ஜீன்ஸில் வைத்திருந்த அவன் கார்டை எடுத்து அவன் கையில் திணித்து,
“எதையும் முழுசா கேட்காத? இனிமே உங்கிட்ட ஏதாவது சொன்னா என்னை செருப்பால அடி…” என்றவள் மீண்டும் காரினுள் சென்று அமர்ந்து கொள்ள, விஷ்வாவுக்கு தான் ஐயோ என்றானது. காரினுள் சென்றவன், தலையைக் குனிந்து கொண்டு அமைதி காக்க, “சீக்கிரம் காரை எடு. அப்பறம் உன் பிரெண்டு வந்து அதுக்கும் கத்த போறான்.” என்றாள்.
அவன் “அம்மு” என்று பேச வர, “உங்கிட்ட இனிமே பேச்சு இல்ல. நான் என்ன பேசணுமோ, அதை அவன் கிட்ட பேசிக்கிறேன். முதல்ல காரை எடு!” என்றவளிடம் என்ன பேசுவது என்று புரியாமல், காரை எடுத்தவன்,
அவளைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டு வர, அவள் ஜன்னல் வழியே பார்வையை செலுத்தி “நிஷிதா யாரு? அவளை எதுக்கு கடத்துனீங்க” எனக் கேட்டாள்.
அதில் ‘மிரட்டிக் கேட்டா சொல்லிடுவோமா? கம்பெனி சீக்ரெட்… அதெல்லாம் வெளிய சொல்ல முடியாதுடி என் டொமேட்டோ…’என்று மனதினுள் எகத்தாளம் புரிந்தவன் அவள் திரும்பி அக்கினிப்பார்வை ஒன்றை பார்த்ததும், மடமடவென்று ஒப்பிக்க ஆரம்பித்தான்.
“நிஷிதா, போதைப் பொருளுக்கு அடிமையானவள். அவளும் வேறொரு ஆஸ்ரமத்தில் வளர்ந்தவள் தான். ஆனால் பணம் மற்றும் போதைக்கு ஆசைப்பட்டு, மினிஸ்டர்க்கு பணியாளாக வேலை செய்பவள். கல்லூரி பெண்களுக்கு, போதை மருந்தை விற்பதும் அவள்தான். மினிஸ்டருக்கு போதை மருந்தை தயாரித்து அனுப்பும் தொழிலதிபர் ஷிவின் கைக்கூலி சின்னாவின் நெருங்கிய தோழி. அவன் மூலம் அவளுக்கும் அவர்களுக்குள் நடக்கும் கொடுக்கல் வாங்கல்கள் தெரியும். அதனாலேயே அவளைப் பிடித்து வைத்து, சில ஆதாரங்களைச் சேகரித்துக் கொண்டிருக்கிறோம்.” என்றதில் ‘அடக்கடவுளே!’ என்று பார்த்தாள்.
வைஷு முகத்தை மூடிக் கொண்டு அழ, நிஷாந்த் “வைஷு” என்றழைத்தான். அவள் மேலும் கண்ணீர் விட “வைஷு ப்ளீஸ்” என்று கெஞ்சும் குரலில் அழைத்தவன், அவள் தொடர்ந்து அழவும், மென்மையாக “நவி” என்று அழைத்தான்.
அதில் சட்டென்று அழுகையை நிறுத்தியவள், அவன் முகம் எங்கும் முத்தமிட ஆரம்பித்தாள்.
“சாரி ஷான். என்னால தான உனக்கு இவ்ளோ கஷ்டம்…” என்னும் போதே, அவள் இதழில் விரலை வைத்துத் தடுத்தவன், “இல்ல நவி, உன்னால எனக்கு எந்தக் கஷ்டமும் இல்ல. ஆரு சொன்ன மாதிரி, எல்லா கெட்டதுக்கு பின்னாடியும் ஒரு நல்லது இருக்கு. அதே மாதிரி தான், நாங்க இந்த அளவுக்கு வளர்ந்துருக்கோம்னா, அதுக்கு காரணம் அன்னைக்கு நடந்த ஒரு கெட்டது தான்.
ஆனால் என்னால ஒரு உயிர் போய்டுச்சுன்னு ஒவ்வொரு நாளும் செத்துக்கிட்டு இருந்தேன். இப்போ தான் என்னால மூச்சே விட முடியுது. நீ என் லைஃப்ல வராம இருந்திருந்தா, நான் அன்னைக்கு ட்ரக்ஸ் யூஸ் பண்ணாம இருந்திருந்தா, மினிஸ்டர் என்னைக் கடத்தாம இருந்திருந்தா, நாங்க இவ்ளோ பொறுப்பா மாறி, நாலு பேருக்கு ஹெல்ப் பண்ணி, ஒரு நல்ல ஸ்டேஜ்ல இருந்துருக்க மாட்டோம். ஏதோ ஒரு வேலைக்குப் போய், நாங்களும் ஒரு மூலைல தான் இருந்துருப்போம். உன்னால நல்லது தான் நடந்துருக்கு நவி… என் நவி நால எனக்கு என்னைக்குமே கஷ்டம் இருந்தது இல்ல” என்றவனை கண்ணை மறைத்த நீர் படலத்துடன் பார்த்தவள்,
“இருந்தாலும் என்னால நீ?” என்றிட, ‘நானே இப்போதான் நிம்மதியா இருக்கேன். இவள் வேற விடாம பேசுறாளே?’ என நினைத்தவன்,
அவளை இறுக்கி அணைத்து, “நான் ரொம்ப ரொம்ப ஹாப்பியா இருக்கேன் நவி. என் குற்ற உணர்ச்சி தான் என்னை உங்கிட்ட இருந்து தள்ளி வைச்சுச்சு. இப்போ நான் தப்பு பண்ணலைன்னு தெரிஞ்சதே, ஒரு புது தெம்பு வந்த மாதிரி இருக்கு.” என மேலும் இறுக்கிட, பெண்ணவள் தான் அவன் அணைப்பில் திணறி விட்டாள்.
ஆனாலும், அவனிடமிருந்து விலகியவள் கண்ணச் சிவப்பை கட்டுப்படுத்தி, “நீங்க பெங்களூர்ல தான் இருந்தீங்கன்னா, இப்போ எதுக்கு இங்க வந்தீங்க ஷான். அந்த மினிஸ்டர் உன்னை அதுக்கு அப்பறம் தேடலையா? உனக்கு ட்ரக் குடுத்த அந்த வீணாப்போனவன் என்ன ஆனான்” எனக் கேள்விக்கணைகளை தொடுக்க,
அவன், “என்னை ஒரு வருஷமா தேடுனான். அதுக்கு அப்பறம் என்னை மறந்துட்டான். இப்போ தான் ரீசென்டா அவனுக்கு எதிரா இருக்குற நேர்மையான அமைச்சர்கள் எல்லாம், அவனோட ஊழலும், செய்ற தப்பும் தாங்க முடியாம அவனை எப்படியாவது உள்ள தள்ளணும்னு எங்களை ஹயர் பண்ணுனாங்க.
அவன் செய்ற எந்தத் தப்புக்கும் ஆதாரம் இல்லை. அது போலீஸ் கையில் கிடைச்சாலும் அதை அவன் ஒண்ணும் இல்லாம ஆக்கிப் போலீசை கைக்குள்ள போட்டுக்குவான். எங்களுக்கும் அவனைப் பழிவாங்க இதான் நல்ல சான்ஸ்ன்னு தோணுச்சு அதான், உடனே இந்த ப்ராஜெக்ட்டை எடுத்து இங்க வந்துட்டோம்.
என்னையவே கொலை பண்ணப் பார்த்தான், எனக்கு ட்ரக் குடுத்தவனை சும்மா விடுவானா? அவனையும் கொன்னுட்டான்.” என்றவனை அதிர்ந்து பார்த்தாள்.
லேப்டாப்பில் கவனத்தை பதித்து, கைகளும் கண்களும் அதில் தீவிரமாக மேய, தீயாக வேலை பார்த்துக் கொண்டு இருந்தவனுக்கு, எதிரில் கன்னத்தில் கை வைத்து நொந்து போய் அமர்ந்திருந்தாள் ஆராதனா.
கிட்ட தட்ட ஒரு மணி நேரமாக, அவனின் குடும்பத்தைப் பற்றியும், அவனிடம் எப்படி அவ்வளவு பணம் என்பது பற்றியும், மேலும் நடந்த பல விஷயங்களைப் பற்றியும் பல பல கேள்விகளைக் கேட்டு அதற்கு அவன் கொடுத்த அமைதி என்ற ஒரே பதிலைக் கேட்டுச் சோர்ந்து போனவள்,
“டேய் நான் எவ்வளவோ நேரம் பேசிகிட்டு இருக்கேன் வாயைத் திறக்குறியா நீ? இப்போ பதில் சொல்லப் போறியா இல்லையா?” என்றாள் பொறுமையிழந்து. அவன் ஒரு நொடி செய்த வேலையை நிறுத்தி அவளை நேராய் பார்த்து, “வெளிய போ” என்ற சொல்லைச் சிந்திவிட்டு மீண்டும் வேலையில் கவனமானான்.
அதில் அவள் கடுப்பாக எழுந்து அவன் அருகில் வந்து “இப்போ ஏதாவது சொல்லப் போறியா இல்லையாடா?” என்று அதட்டிட, அவன் சரியாக அவள் அடிபட்ட கையைப் பிடித்து வெளியில் தள்ளினான்.
ஏற்கனவே ரத்தம் வழிந்த இடத்தில் மருந்து போடாததால், இப்போது புதிதாக ரத்தம் வழிய ஆரம்பிக்க அவள் வலியில் கத்தினாள்.
அவன் உடனே கையை எடுத்து விட்டு, “இவ்ளோ நேரம் மருந்து போடாம என்னடி பண்ணிட்டு இருந்த…?” என்று பதட்டத்துடன் கடுகடுத்தவனிடம், “ஸ்ஸ்… தள்ளி விட்டதும் இல்லாம கேள்வி வேற கேட்குறீயா? ஆஆ” என வலியில் கையைப் பிடித்து உதட்டைப் பிதுக்கிவளுக்கு கண்ணில் நீர் கோர்த்தது.
அதில் பதறியவன், தன்னை தானே திட்டிக்கொண்டு, வேகமாக முதலுதவிப் பெட்டியை எடுத்து வந்து, அவள் கைக்கு மருந்து போட விழைய அவனின் அக்கறையில் அவனால் தான் அடிபட்டது என்பதை கூட மறந்து, அவனை ரசித்தவள் அவனைப் பார்வையாலே அளவெடுத்தாள்.
மை நிறத்தில் அவன் அணிந்திருந்த சட்டை, அவனின் கட்டுக்கோப்பான உடல் வாகுக்கும், அவனின் சற்று சிவந்த நிறத்திற்கு ஏதுவாகப் பாந்தமாகப் பொருந்தி இருக்க, கை முஷ்டி வரை இரு பக்கமும் சட்டையை ஏற்றி விட்டிருந்தான்.
இள நீல நிறத்தில் ஜீன்ஸை அணிந்திருந்தவன் சட்டையை டக்கின் செய்து, கண்ணில் எப்போதும் கூடிய கூர்மையுடனும் அழுத்தமாகச் சிவந்த உதடுகளுடனும்,
‘ஐ ஆம் பக்கா டிடெக்டிவ்’ என்று உணர்த்தும் விதமாக, தவறிழைத்தவர்கள் அவன் பார்த்ததும் உண்மையை உளர கூடிய இறுகிய முகத்துடனும் இருந்தவனை கண் கொட்டாமல் ரசித்துக் கொண்டிருந்தாள்.
ஏதோ தோன்ற அவளை நிமிர்ந்து பார்த்தவன், அவளின் விழி தன்னை ரசிப்பதில் ஒரு நொடி அதில் வீழ்ந்தும் விட்டான். அவள் அவன் பார்த்ததும், சற்று சிவந்து “ஜீன்ஸ்க்கு போய் சட்டையை டக்கின் பண்ணிருக்கு பாரு லூசு” என்றிட, சட்டெனச் சுயநினைவிற்கு வந்து தீச்சுட்டாற்போல் அவள் கையை விட்டவன், “வைஷ்ணவி.., தமயந்தி…” என்று உச்சஸ்தாதியில் கத்தினான்.
அவனின் ஆழ்ந்த, அழுத்தமான அதிர வைக்கும் குரலில் அவள் மிரண்டு நிற்க, ஆளுக்கொரு திசையில், பழைய நினைவுகளை, பேசிக்கொண்டிருந்த நால்வரும் அடுத்த நொடி அங்கு நின்றிருந்தனர். வைஷுவும், தமியும் திருதிருவென விழிக்க,
அவன் வைஷுவிடம் மருந்தைக் கொடுத்து, “அவளுக்கு அடி பட்டுருக்குல. இவ்ளோ நேரம் மருந்து போட்டு விடாம என்ன பண்ணீங்க ரெண்டு பேரும்… கூட்டிட்டு போங்க அவளை” எனக் கடுங்கோபத்தில் பொரிய, தமிக்கு கை, கால் எல்லாம் நடுங்கி விட்டது.
அவன் பேசியதில் முகத்தைச் சுருக்கிய ஆரு, “நான் கேட்ட கேள்விக்குப் பதில் கிடைக்காம, இங்க இருந்து என்னால நகர முடியாது!” என்று வீம்பாக நின்றாள்.
தேவா அவளின் அடி படாத கையைப் பிடித்து அவனின் அறைக்கு வெளியில் தள்ளி, “உன் லிமிட்ட க்ராஸ் பண்ணாத…!” என்று சீறியவன், “அருண்” என அழைக்க, அவன் சட்டென்று முன்னே வந்து என்னவென்று பார்த்தான்.
“இன்னும் மூணு நாள் டைம். அதுக்குள்ள ரிசர்ச் முடிச்சுட்டு இந்த நாலு பேரும் இங்க இருந்து கிளம்பிருக்கணும். எக்ஸ்டரா யாரவது ஏதாவது பேசுனா, அப்பறம் அந்த டைம் கூடக் குடுக்க மாட்டேன்… நடுக்காட்டுல கொண்டு போய் விட்டுட்டு வந்துடுவேன்.” என்று ஆராதனாவை பார்த்து எச்சரித்து விட்டுச் செல்ல, ஆரு, அவனைத் தீயாக முறைத்து,
“நீ என்னடா என்னைப் போகச் சொல்றது…? நான் உன்னைப் பத்தி தெரிஞ்சுக்காம இங்க இருந்து போகமாட்டேன்.” என கத்தினாள்.
அருண் “ஷ் ஆரு ப்ளீஸ் கத்தாத! அவன் காதுல விழுந்தா அடிச்சுப்புடுவான். நீ வா” என்றிட, ஆரு “அடிச்சுடுவானா அவன்? அவன் அடிக்கிற வரை நான் வேடிக்கை பார்த்துட்டு இருப்பேனா” என்னும் போதே, உள்ளே இருந்து சேர் பறந்து அவள் காலடியில் வந்து விழுந்தது.
அதில் மிரண்டவள், பயத்தை மறைத்துக் கொண்டு, “டேய்! எதுக்குடா உள்ள இருந்து உன் கோபத்தை காட்டுற? வெளிய வந்து, என் முன்னாடி காட்டுடா!” என மீண்டும் கத்த, வைஷுவும் தமியும் ‘உள்ள இருந்து வேற என்ன வரப் போகுதோ’ என்று அரண்டு அவளை அங்கிருந்து நகர்த்த முயன்றனர்.
அப்போதென்று பார்த்து, அம்முவும் விஷ்வாவும் அங்கு வர, அம்மு விறுவிறுவென தேவாவின் முன் நின்றாள். அவன் ஏற்கனவே கொலைவெறியில் நின்றிருக்க,
நடந்ததை அறியாத அம்முவோ விஷ்வாவை காட்டி “என்னடா வளர்த்து வச்சுருக்க இந்தப் பச்ச மண்ணை? ஒழுங்கா லவ் பண்ணைக் கூடத் தெரியல. உன்னை மாதிரியே சொல்ல வர்றதை கேட்காம அவசரக் குடுக்கையா இருக்கான்… ஒழுங்கா அவனுக்குப் புத்திமதி சொல்லி, எனக்கும் அவனுக்கும் கல்யாணம் பண்ணி வச்சுரு.” என மிரட்டியவளை, ஆரு ‘செத்தடி மவளே!’ என்று உள்ளுக்குள் அடக்கிய சிரிப்புடன் பார்க்க, தேவாவோ அம்முவை பார்வையாலேயே எரித்துக் கொண்டிருந்தான்.
அதில் அவளுக்கு லேசாகக் குளிர் பிறக்க, “சரி உடனே நீ எதுவும் சொல்ல வேணாம். அப்பறமா யோசிச்சு சொல்லு!” என்று விட்டு, விஷ்வாவை பார்க்க, அவனோ “உன் தலை எழுத்தை யாராலயும் மாத்த முடியாது, ஒன், டு, த்ரீ” என்று விரல் விட்டு எண்ணினான்.
‘இந்த லூசு ஏன் இப்போ கௌண்ட் பண்ணிட்டு இருக்கான்’ என யோசனையாக, தேவாவை பார்க்க, அவன் அங்கிருந்த கம்பியூட்டர் ஒன்றை கோபத்தில் அவளுக்கு அருகில் போட்டு உடைத்து, “கெட் அவுட்” என்று கத்தினான்.
ஆரு “சே ஜஸ்ட் மிஸ்… என்ன தேவா நீ கரெக்ட்டா கால்ல குறி பார்த்துப் போடக் கூடாது.” என்று சலிக்க, அரண்டு போய் நின்றிருந்த அம்மு, அவளை ‘என்ன ஒரு பேட் எண்ணம்’ என்று முறைத்து விட்டு, விஷ்வாவை ‘இந்தக் கருமத்துக்குத் தான் நீ கௌண்ட் பண்ணுனியாடா?’ என கண்ணாலேயே கேட்க, அவனோ சிரிப்பை அடக்கிக் கொண்டு, “கையில போடுவோம் காப்பு! உனக்கு நீயே வச்சுக்கிட்ட ஆப்பு!” என நக்கலடித்தான்.
அம்மு ‘நாசமா போனவனே! உன்னை லவ் பண்ணதுக்கு உன்னால என்ன பண்ண முடியுமோ அதைச் சிறப்பா பண்ணிட்ட…’ என்று அதிர்ந்து போய் வெளியில் வர, ஆருவின் கண்களோ அவனின் கோப முகத்தைத் தான் ரசித்தது.
ஏனோ அவன் கோபப்படும்போது அவனை அவளால் வெறுக்க இயலவில்லை. அவனின் கோபத்தை அடக்க வேண்டும் என்ற எண்ணம் தான் வளர்ந்து கொண்டே வந்தது. ஆனால் அது அவ்வளவு எளிதல்ல என்று, அவள் உணர வெகுநாட்கள் இல்லை என்பதையும், அதற்குப் பின் இருக்கும் காரணம் அவளின் உயிரைக் கூறு போடும் அளவு வலியைக் கொடுக்கும் எனவும், அவள் உணர தவறி விட்டது விதியின் விந்தையோ…!

