
அத்தியாயம் – 15
தேவா போதைப் பொருள் கடத்துகிறான் என்பதை நம்ப இயலாமல் மனம் வலிக்க, கண்ணீருடன் அவனை அடிபட்ட பார்வை பார்த்தாள் ஆராதனா. தேவாவிற்கு அவள் அடித்தது கோபத்தைக் கொடுத்தாலும், அவளின் பார்வை ஏதோ செய்ய, அமைதியாக நின்றிருந்தான்.
அவளோ மீண்டும் அவன் சட்டையைப் பிடித்து “கேட்குறேன்ல வாயில என்ன வச்சுருக்க? சொல்லுடா! அந்தப் பொண்ணுக்கு டிரக்ஸ் குடுத்து என்னடா பண்ணீங்க? ச்சே! உன்னைப் போய் நல்லவன்னு நினைச்சேன் பாரு” என்று ஆத்திரத்துடன் கூறியதும், அவளின் கையை வெடுக்கென எடுத்து விட்டவன், “தள்ளி நின்னு பேசு!” என்றான் சம்பந்தம் இல்லாமல்.
அவள் கடுப்பாகி மேலும் அவனருகில் வந்து பேச, தேவா அவளைச் சடாரெனக் கீழேயே தள்ளி விட்டு, “ஏய் நான் நல்லவன்னு சொன்னேனாடி…? ஹான்? நான் திருடன், கடத்தல் காரன் தான். நீயா ஏதாவது நினைச்சுகிட்டா அதுக்கு நான் எதுவும் பண்ண முடியாது.” என்று கத்தியதில், மற்றவர்களும் வெளியில் வர, அவன் தள்ளி விட்டதில் அவளுக்கு அங்கிருந்த சேரின் முனை கையில் கீறி ரத்தம் வழிந்தது.
நிஷாந்த், “தேவா என்ன பண்ற? பாரு அவளுக்கு ரத்தம் வருது.” என்றிட, அவன் “ஐ டோண்ட் கேர்… நீ உள்ள போ!” என்றான் பல்லைக் கடித்துக்கொண்டு.
வைக்ஷு “உனக்கென்ன பைத்தியமா? இப்படி தள்ளி விட்டிருக்க…? நிஷாந்த், என்ன தான் நடக்குது இங்க” எனப் புரியாமல் கேட்க, ஆரு ரத்தம் வழிவதையும் பொருட் படுத்தாமல், தேவாவிடம் “உன் கூட இருக்கானுங்க பாரு இவனுங்களச் சொல்லணும்… யாருடா நீ? இவனுங்க மூணு பேரையும் ட்ரக்ஸ் யூஸ் பண்ண வச்சு, நீ தான கெடுக்குற…” என்று அவள் வாய்க்கு வந்ததை பேச, பெண்கள் மூவரும் “ட்ரக்ஸா?” என்று அதிர்ந்தனர்.
தேவா சலனமின்றி நிற்க, நிஷாந்த், “ஸ்டாப் இட்!” எனக் கத்தியவன், “இன்னொரு வார்த்தை ஏதாவது பேசுன நானே உன்னைக் கொன்னுடுவேன்! உனக்குத் தெரியுமா என்ன நடந்துச்சுன்னு?” என்று பேச வர,
தேவா “நிஷாந்த், நீ உள்ள போன்னு சொன்னேன்!” என்றான் உத்தரவாக.
அருணும், விஷ்வாவும் நிஷாந்தை அடக்க முயல, அவர்களைத் தள்ளி விட்டவன்,
“போதும் டா! என்னால நீங்க எல்லார்கிட்டயும் பேச்சு வாங்க வேண்டாம்.” என்றவன், ஆருவிடம் “நான் தான் ட்ரக்ஸ் யூஸ் பண்ணேன். என்னால தான் இதெல்லாம் இவன் பண்றான். போதுமா?” என வெறியாய் கத்திட, அதில் அவர்கள் உறைந்து விட்டனர் என்றால், வைஷுவிற்கு தன் காதையே நம்ப முடியவில்லை.
மெல்ல அவன் அருகில் வந்து “இப்போ நீ என்ன சொன்ன? ட்ரக்ஸ் நீ யூஸ் பண்ணியா? ஏன் மாமா?” என அவனை அதட்டிக் கூடக் கேட்க இயலாத இயலாமையில் விரக்தியுடன் கேட்க, தேவா நிஷாந்தை கடுமையாக முறைத்து விட்டு, கோபத்துடன் அறைக்குள் சென்று பளாரென அறைக்கதவை சாத்திக் கொண்டான்.
அம்மு, “ஹையோ தயவு செஞ்சு வாயைத் திறந்து தெளிவா ஏதாவது சொல்லுங்க…” என்று எரிச்சலானதும், நிஷாந்த் அன்று நடந்ததை கூறத் தொடங்கினான்.
வைஷுவின் அப்பா முத்துவேல், அவனை அவமானப்படுத்தி அனுப்பியதில், மனம் வெந்து செய்வதறியாது, கால் போன போக்கில் நடந்து ஆஸ்ரமம் வந்தவனை, அருண், “எங்கடா போன?” என்று கேட்கையில், விஷ்வா “இவன் வர வர சரியே இல்லடா…” என்றான் கேலியாக.
தேவாவும், “எங்க போன நிஷாந்த்? ஏன் முகம்லாம் ஒரு மாதிரி இருக்கு?” எனக் கேட்க, காதல் தந்த தோல்வியையும், தன் சொந்தமே, தனக்கு தந்த அவமானத்தையும் தாங்க இயலாது, முகத்தை மூடி அழுக ஆரம்பித்தான்.
அதில் பதறிய மூவரும், அவனிடம் விசாரிக்க, அப்போது தான் நடந்ததை கூறினான். அதில் திகைத்த மூவருக்கும் அந்தப் பெண்ணின் மேலும், அவள் குடும்பத்தின் மேலும் கடுங்கோபம் வர,
தேவா அவனைப் பிடித்து இழுத்து, “வாடா! அந்தப் பொண்ணு வீட்டுக்குப் போகலாம். அதெப்படி அவங்க உன்ன அப்படி பேசலாம்? நாங்களாம் இன்னும் உயிரோட தான இருக்கோம்? அப்பறம் எப்படிடா, நீ அநாதை ஆவ? அவள் யாருனு சொல்லு குடும்பத்தோட வச்சு எரிச்சுட்டு வரேன்.” என்று தீயாகக் கூறினான்.
அதில் நிஷாந்த், “வேணாம்டா. நீங்க யாரும் போக வேண்டாம். அவரு உங்களையும் இன்சல்ட் பண்ணுனா என்னால பார்க்க முடியாது. இந்த விஷயத்தை இப்படியே விட்ரலாம்…ப்ளீஸ்!” என்று கெஞ்சியதில்,
தேவா அப்போதைக்கு அவளைப் பாராமல் நாளைத் தள்ளிப் போட்டான். ஆனால், எப்படியாவது அவளையும் அவள் குடும்பத்தையும் பார்த்து உண்டு இல்லையென ஆக்க வேண்டும் என எண்ணிக் கொண்டிருந்தவனுக்கு நிஷாந்தின் நடவடிக்கை பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.
சரியாக சாப்பிடாமல், தூங்காமல், படிக்காமல் எந்நேரமும் தலையைக் குனிந்தே இருந்தவனை கண்டு, மூவரும் வருந்த, அவனை சரி செய்ய என்னென்னவோ முயற்சி செய்தனர். எப்போதும் விஷ்வா தான் அப்படி இருப்பான். இப்போது தன் கண் முன்னே தன் நண்பன் இப்படி இருப்பது அவனுக்கு வருத்தத்தைக் கொடுக்க, அவனுக்காகவே அவனிடம் ரைமிங்காகப் பேசி அவனைச் சிரிக்க வைக்க முயன்றான்.
அருண் கொஞ்சி பார்த்தும், தேவா மிரட்டிப் பார்த்தும், அவன் அவனின் நிலையிலிருந்து மாறவே இல்லை. வைஷுவின் பிரிவு, அவனுள் நிறைய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.
அன்று, கல்லூரியில் கடைசி பரீட்சை என்பதால், அனைவரும் தேர்வறையில் இருக்க, நிஷாந்த் ஏனோ தானோ என எழுதிக் கொடுத்து விட்டு, ஆஸ்ரமம் சென்று விட்டான். அப்படியே நடந்து கொண்டிருந்தவன், ஆஸ்ரமத்திற்கு பின் புறம் செல்ல, சிறு வயதிலிருந்து அவர்களுடன் வளர்ந்த புவனேஷ் என்பவன், அங்கு அமர்ந்து ஏதோ செய்து கொண்டிருப்பதை கண்டான்.
அவன் அருகில் சென்று “இங்க என்ன பண்ற” எனக் கேட்டதும், திருதிருவென விழித்த புவனேஷ், “இது சும்மா பால் பவுடர் தான். நீயும் வேணா சாப்பிட்டு பாரேன்!” என நீட்டினான்.
நிஷாந்த் மறுப்பாகத் தலையாட்டி விட்டு, அங்கிருந்து நகர போக புவனேஷ், “நீ லவ் பண்ண பொண்ணு நீ வேணாம்னு போய்ட்டாளாமே? இந்தப் பொண்ணுங்களே இப்படி தான். அதுவும் அநாதை பசங்கன்னா எங்கயும் மதிப்பு கிடையாது.
அவள் அப்பா உன்னை அனாதைன்னு சொல்லிட்டாரோ” என, பாவப்படுவது போல் கேட்டவன், அவர்கள் பேசுவதை வைத்து அரசல் புரசலாகக் காதில் வாங்கி இருந்தான். அதோடு, அந்த நால்வரையும் அவனுக்கு எப்போதுமே பிடிக்காது. ஒரு முறை அவன் விஷ்வாவை ஏதோ பேசப் போக, தேவா அவனை அடித்து விட்டான். அதில் இருந்தே இவர்கள் மேல் ஒரு வன்மத்தை வளர்த்துக் கொண்டவன், பல தவறான விஷயங்களையும் கற்றுக் கொண்டான். இப்போது நிஷாந்தின் பலவீனத்தை உபயோகித்து, அவனை அழிக்க நினைத்தான்.
நிஷாந்துக்கு வைஷுவின் நினைவு மேலும் தாக்க, இருந்தும் “நீ உன் வேலையை மட்டும் பாரு” என்று அவனை அதட்டியவனை பிடித்து அமர வைத்தவன், “நிஷாந்த் நம்மள யாரும் தப்பா நினைக்கக் கூடாதுன்னு நேர் வழியில போனா, எல்லாரும் இப்படி தான் நம்மளை கீழ போட்டு மிதிப்பாங்க. அதுவும் நமக்குலாம் இருக்க இடமும் கிடையாது. செத்தா அழுக ஒரு சொந்தம் கூடக் கிடையாது. இந்த சமுதாயம் தான் நம்மளோட எதிரியே. ஏதோ நம்மளை எல்லாம் ஏலியன்ஸ் மாதிரி பார்ப்பாங்க.” என்று மூளைச்சலவை செய்தான்.
“ப்ச் எதுக்கு இப்போ இதெல்லாம் பேசிட்டு இருக்க? விடு!” என்று நிஷாந்த் எழுந்திட, “இது நமக்கான லைஃப். இங்க நமக்குன்னு யாரும் எதுவும் தரமாட்டாங்க. நம்ம தான் எல்லாத்தையும் வம்படியா வாங்கி, நம்ம வாழ்க்கையை ரசிச்சு வாழணும். என்னைப் பாரு, டெயிலி 2 ஹவர்ஸ் தான் பார்ட் டைம் ஜாப் போறேன். ஆனால் கையில பணம் புரளும்.
நீங்க நாள் பூரா வேலை பார்த்தாலும், உங்க காலேஜ் பீஸ் கூடக் கட்ட முடியாது.” என்று எகத்தாளமாகச் சொன்னவனிடம், பணம் எப்படி புரளுகிறது என்பது மட்டும் அவர்களுக்குக் கேள்வி குறியே.
பின் அவனே, “என்ன? எப்படி என்கிட்ட இவ்ளோ பணம்னு பார்க்குறியா? சிம்பில், இந்தப் பவுடர நம்ம காலேஜ்ல வித்தா… பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும். இதை யூஸ் பண்ணா, நமக்குன்னு ஒரு உலகத்துல வாழலாம்.” என்று போதையில் ஏதேதோ உளற, நிஷாந்த் மூளையில் ஏதோ அபாய மணி ஒலித்தது.
“என்னடா இதெல்லாம், இது பால் பவுடர்ன்னு சொன்ன, என்ன இது?” என்று அதட்ட, “நீ ஒரே ஒரு தடவை, இதை யூஸ் பண்ணு நிஷாந்த். அப்பறம் வந்து என்னைத் திட்டு” என்று அவனுக்குச் சிறிது பௌடரை கொடுக்க, நிஷாந்த் மறுத்தும், அவன் பலவீனத்தைப் பயன்படுத்தி, புவனேஷ் அதனை உபயோகப் படுத்த வைத்து விட்டான். அதில் நிஷாந்திற்கு தலையைச் சுற்ற உடலெல்லாம் லேசாகி, ஏதோ பறப்பது போன்று இருந்தது. அதில் இன்னும் இன்னும் அதனைப் பயன்படுத்த வேண்டும் என்று தோன்ற, அவனிடமிருந்து வாங்கி உபயோகித்தான்.
புவனேஷ் “நான் சொல்லல, அப்படியே சொர்க்கத்துல இருக்குற மாதிரி இருக்கும். நம்ம காலேஜ்ல பசங்க பொண்ணுங்கன்னு பாதி பேரு, இதைத் தான் யூஸ் பண்றாங்க…” என்று அவனுக்குச் சற்று அளவுக்கு அதிகமாகவே கொடுத்து விட்டான்.
பரீட்சை எழுதிக் கொண்டிருந்த தேவா, அவசரமாக முடித்து விட்டு, நிஷாந்தின் தேர்வறைக்கு சென்று பார்க்க, அங்கு அவன் இல்லை என்றதும், உடனே அங்கிருந்து கிளம்பி விட்டான்.
அருணும் விஷ்வாவுக்கும் கூட அன்றையபொழுது மனமெல்லாம் நிம்மதி அற்று இருக்க, அவர்களும் தேவாவுடனே ஆஸ்ரமம் வந்து விட்டனர்.
நிஷாந்த் அளவு கடந்த போதையின் தாக்கத்தில், எங்கு இருக்கிறோம் எனத் தெரியாமல் அப்படியே நடக்க, ஆஸ்ரம வார்டன் ஒருவர் அவனைப் பார்த்து அதிந்து விட்டார். அவனைப் பிடித்து உலுக்கி, சுயநினைவுக்கு கொண்டு வர முயல, அவனோ என்ன செய்கிறோம் எனத் தெரியாமல் அவரையே அடித்து விட்டான். அப்போது, அங்கு வந்த மூவரும் இவனின் நிலையைப் பார்த்து சிலையாகி நின்றனர்.
அந்த வார்டன், அவனோடு சேர்த்து மற்ற மூவரையும் கேவலமாகத் திட்ட, தேவாவுக்கு என்ன நடக்கிறது என்றே புரிய வில்லை. ஆனால், நிஷாந்த் அதற்குள் சாலைக்கே சென்று விட்டான்.
அவனைப் பிடித்த தேவா, “நிஷாந்த என்னைப் பாரு! என்ன ஆச்சு உனக்கு? யாரு இதை உனக்குக் கொடுத்தா?” என்று அவனிடம் பேச்சு கொடுக்க முயல, “நான் போறேன் அந்த வைஷூவையும் அவ அப்பாவையும் கொலை பண்ணப் போறேன். என்னை விடு! நான் போறேன்.” என்று போதையில் உளறி, தேவாவை தள்ளி விட்டு, நடு ரோட்டில் நடந்தான்.
சட்டென்று அவன் நடு ரோட்டில் நடந்ததில், எதிரில் வந்த கார் ஒன்று தடுமாறி, அவனை இடிக்கக் கூடாது என்றெண்ணி வளைக்க, அருகில் வந்த வேன் இதனை எதிர்பாராமல் அந்தக் காரை அடித்துத் தூக்கியது. அதில் அதிர்ந்த தேவா இருவரிடமும் நிஷாந்தை பிடிக்கச் சொல்லி விட்டு, அந்தக் காரில் இருந்தவர்களை காப்பாற்றப் போக, அதனுள் ஒரு முதிர் பெண்மணி மட்டும் தலையில் அடிபட்டு, ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
ஒரு புறம் ஓட்டுநர் அடிபட்டுக் கிடக்க, உடனே ஆம்பு லன்ஸை வர வைத்தவன், ஓட்டுனரை ஏத்தி விட்டு, அந்தப் பெண் மணியைக் காப்பாற்ற முயலாமல், வீடியோ எடுத்துக் கொண்டு இருந்த கூட்டத்தை முறைத்து கொண்டு அவரைத் தூக்க, அப்போது தான் 5 மாத கர்ப்பிணி என்றே தெரிந்ததில், மேலும் ஆடிப் போய் விட்டான்.
உடனே, மருத்துவ மனையில் அவரைச் சேர்த்தவன், தலையில் கை வைத்து அமர்ந்து, ‘கடவுளே, ரெண்டு உயிருக்கும் எதுவும் ஆகக் கூடாது.’ என்று வேண்டிக் கொண்டிருந்தான்.
ஆனால் அவன் வேண்டுதல் பொய்த்தது போல், அந்தப் பெண்மணி பிழைத்து விட்டார் என்றும், வயிற்றில் இருக்கும் குழந்தை இறந்து விட்டது என்றும் மருத்துவர் கூறிட, அனைத்துமே தன் கை மீறி நடப்பதில் ஒன்றும் புரியாமல் கலங்கி நின்றான்.
அதற்குள் ஆஸ்ரமத்தில் போலீஸ் ரவுண்டப் செய்து, நிஷாந்தை பிடித்தது.
அருண் , “சார் , அவன் தெரியாம தான் சார் யூஸ் பண்ணிருப்பான். முதல்ல, இதை இவன்கிட்ட குடுத்தவனை போய் விசாரிங்க சார்.” என்றிட, அந்தப் போலீஸ் “என்கிட்டேயே எதிர்த்துப் பேசுறியா பொறுக்கிங்களா?” என்று நிஷாந்தை தரதரவென இழுத்துக் கொண்டு போக, விஷ்வாவும் அருணும் திகைத்து விட்டனர்.
தேவா சோர்ந்து போய் ஆஸ்ரமத்திற்கு வர, அப்போது தான், நிஷாந்தை போலீஸ் கூட்டிச்சென்று விட்டது என அறிந்து, அவசரமாக ஸ்டேஷன் செல்ல, அங்கு அவனே இல்லை.
அங்கிருக்கும் காவலர்களும் “நாங்க அப்படி யாரையும் அழைத்து வரவில்லை.” என்று விட, அவன் நிஷாந்தை காணாமல் உறைந்து விட்டான்.
நிஷாந்தை யார் அழைத்துச் சென்றிருப்பார்கள்? என்ன ஆனது அவனுக்கென்று புரியாமல் தவித்து நின்றவனிடம், ஒரு கான்ஸ்டபிள் வந்து ரகசியமாக,
“தம்பி, போதை மருந்து யூஸ் பண்ணி ஆஸ்ரமத்தில இருந்து கூட்டிட்டு வந்தாங்களே, அந்தப் பையனைத் தான தேடுற?” என வினவ,
தேவா “ஆமா சார். அவன் எங்க இருக்கான்னு உங்களுக்குத் தெரியுமா?” என்று பதட்டமாகக் கேட்டான். அவர் “ஏன் தம்பி, ட்ரக்ஸ் யூஸ் பண்ணுனா அமைதியா ரூம்குள்ள இருக்க மாட்டீங்களா?
இது வெளிய தெரிஞ்சு, உங்க ஆசிரமத்துல வேலை பார்க்குற ஆளு போலீஸ்ட்ட சொல்லி, மினிஸ்டர் வரைக்கும் போயிடுச்சு. இந்நேரம் உன் ப்ரெண்ட கொலையே பண்ணிருப்பாரு, அந்த மினிஸ்டர் ராஜாங்கன்” என்றிட அதிர்ந்து பார்த்தான்.
அவன் திகைத்தில், “பின்ன என்ன தம்பி? உன் பிரெண்டை பிடிச்சா, அவன் யாரு அவனுக்குப் போதை மருந்து குடுத்ததுன்னு சொல்லுவான். அவனைப் புடிச்சா, அவன் வேற ஒருத்தனை சொல்லுவான். இப்படியே இது கடைசில மினிஸ்டர் கிட்ட வந்து நிக்கும். ஏன்னா அவரு தான் காலேஜ் பசங்களையும், அநாதை பசங்களையும் போதைக்கு அடிமை ஆக்கி, அவங்களை வச்சு கொலை கொள்ளைன்னு பண்ணி, தீவிரவாதியா கூட மாத்துவாரு.” என்றதும், அவனுக்குக் கோபம் கொப்பளித்தது.
“அநாதை பசங்கன்னா அவனுக்கு அவ்ளோ கேவலமா போச்சா…!” என்று கோபத்துடன் கேட்டவனிடம், “அட என்ன தம்பி நீ விவரம் புரியாம இருக்க? அநாதை பசங்கன்னா கேட்க ஆள் இல்ல, சமுதாயமும் அவங்களை ஏத்துக்காது,
அதுனால அவங்களுக்கு சமூகத்து மேல ஒரு தப்பான எண்ணத்தை உருவாக்கி, கடைசியா நாட்டுக்கு எதிரா மனித வெடிகுண்டா கூட மாத்துவாரு அந்த ஆளு. ஏன்னா கேட்க ஆள் இல்ல…” என்றதில் தேவாவுக்கு ஆத்திரத்தோடு சேர்ந்து, நிஷாந்தை எண்ணிப் பயமும், ஒருபுறம் தோன்றி வதைக்க, “சார்! ப்ளீஸ் சார்! அவனை எங்க வச்சுருப்பானு சொல்லுங்க சார். எனக்கு என் ப்ரெண்ட் வேணும்.” என்று கெஞ்சினான்.
மினிஸ்டரை பிடிக்காத அந்த கான்ஸ்டபிளும், அவனுக்கு உதவும் பொருட்டு, “எப்போவும் இந்த மாதிரி தூக்கிட்டு போறவங்களை மினிஸ்டர் அவரோட பீச் ஹௌஸ்ல தான் வச்சுருப்பாரு. ஆனால் அங்க இருந்து தப்பிச்சாலும், அந்த ஆளு தேடிப் பிடிச்சாவது கொல்லவார்… நீ அந்தப் பையனைக் காப்பாத்துனா, எங்கயாவது கண் காணாத இடத்துக்குப் போய்டு. இந்த ஊர்ல இந்த ஸ்டேட்லயே இருக்காத.” என்று சொல்லி முடிக்கும் முன், தேவா அந்த இடத்திற்கு விரைந்தான்.
அங்கு நிஷாந்தை கட்டி வைத்திருக்க, ராஜாங்கன் அவனைக் கொலை செய்து கடலில் போடும் படி, உத்தரவிட்டு வெளியில் சென்று விட்டான். அவன் சென்றதை உறுதி படுத்திக் கொண்ட, தேவா, மெல்ல உள்ளே சென்று, அங்கிருந்திருவங்களை அடி வெளுத்து விட்டு, நிஷாந்த்தையும் கூட்டிக் கொண்டு ஆஸ்ரமம் வந்து விட்டான்.
அப்போதும் நிஷாந்த் போதை மருந்தின் தாக்கத்தில் மயங்கி இருக்க, தேவா வேகமாக இருவரின் பொருட்களையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்ததில், அருண் “மச்சான் என்னடா ஆச்சு?” என்றான் பதட்டமாக.
“அத சொல்ல நேரம் இல்ல. அந்த மினிஸ்டர் ஆளுங்க எப்போ வேணா எங்களைத் தேடி வரலாம். நாங்க உடனே கிளம்புறோம்…” என்றவன்,
இருவரிடமும் ஒரு விசிட்டிங் கார்டை கொடுத்து, “இங்க உங்க ரெண்டு பேருக்கும் வேலைக்குச் சொல்லிருக்கேன். போய் ஜாயிண்ட் பண்ணிருங்க, எங்களைப் பத்தி யாராவது கேட்டா தெரியாதுன்னு சொல்லிடுங்க…” என்று அவசரமாகக் கிளம்ப, விஷ்வா அந்த விசிட்டிங் கார்டை கிழித்து போட்டான்.
“என்னடா நினைச்சுட்டு இருக்க? என்னை விட்டுப் போறேன் போறேன்னு சொல்ற, போய்டுவியா நீ?” என்று அழுகுரலில் கேட்டிட, தேவா “புருஞ்சுக்கோ விஷ்வா! என்கூட வந்து, அந்த மினிஸ்டர்கிட்ட மாட்டுனா உங்களையும் கொலை பண்ணிடுவான். நீங்க ரெண்டு பேரும் இதுல தலை இடாதீங்க.” என்றதும்,
அருண், “இப்போ உயிரோட இருந்து மட்டும் என்ன நாங்க சாதிக்க போறோம், தேவா? ஏண்டா எங்களைப் பிரிச்சு பேசுற? என்ன வந்தாலும் நம்ம சேர்ந்தே சமாளிக்கலாம். நாங்களும் தான் வருவோம்!” என்றவனை விஷ்வா வழிமொழிந்து தேவாவை கண்டு கொள்ளாமல் அவர்களின் பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது தான் நடந்ததை அறிந்து, வெளியூர் சென்றிருந்த அந்த ஆஸ்ரம நிர்வாகி திலகன், அவசரமாக அங்கு வந்தார். அவர்களைப் பற்றி நன்கு அறிந்ததும் அவரே. “என்ன தேவா இதெல்லாம்? நிஷாந்த் ஏன் இப்படி பண்ணான்? இந்த வார்டன் வேற, ஊருல எல்லார் கிட்டயும் இவனைப் பத்தி தப்பா சொல்லிட்டு இருக்கான்” என்று புலம்பியவரிடம் தேவா நடந்ததை சொல்ல, அதில் அதிர்ந்து விட்டார்.
பின் சற்று யோசித்து விட்டு, “இருங்க வந்துடுறேன்.” என்று அறைக்குப் போனவர் கையில் ஒரு பையுடன் வந்தார். வந்தவர், “இங்க இருந்து நீங்க நேரா பெங்களூர் போங்க.” என்றவர்,
அங்கு, அவருக்குத் தெரிந்த ஒருவரின் கார்டை கொடுத்து, “இப்போதைக்கு அங்க போங்க. அதுக்கு அப்பறம் என்ன பண்றதுன்னு யோசிக்கலாம்.” என்று விட்டு, தேவாவிடம் அந்தப் பையைக் கொடுத்தார்.
தேவா, “ப்ச் சார், எனக்கு இது வேணாம்னு நான் ஏற்கனவே சொல்லிட்டேன்.” என்று அடம்பிடிக்க, “தேவா இது உனக்கு சேர வேண்டியது தான். அதுவும் இந்த டைம்ல, உங்களை நீங்க காப்பாத்திக்கணும்னா இந்தப் பணம் கண்டிப்பா தேவை. உனக்காக இல்லைன்னாலும், உன் பிரெண்ட்ஸ் உயிரைக் காப்பாத்தணும்னு நினைக்கிறீல. அவங்களுக்காக வாங்கிக்க” என்று ஒப்புக்கொள்ள வைக்க முயன்றதில், அருணும் விஷ்வாவும் புரியாமல் தேவாவை பார்க்க, அவன் இறுகி நின்றான்.
அவர், “அருண், இந்தப் பணம் தேவாவோடது தான். இவனுக்கு 18 வயசு வரவும் இந்தப் பணம் இவன்கிட்ட சேரணும்னு அவங்க தாத்தா உயில் எழுதி இருந்தாரு.
இவன் எனக்கு இந்தப் பணம் வேணாம்னு ஆஸ்ரமத்துக்கே குடுத்துட்டான். ஆனால் நான் இதுல இருந்த பணத்தை எடுக்கல. இப்போ உங்களுக்குக் கண்டிப்பா தேவைப்படும். இதை எடுத்துட்டு போகச் சொல்லுங்க.” என்றார் அவர்களை வைத்துக் காரியம் சாதிக்கும் நோக்கில்.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு, தேவாவை பார்த்தவர்கள், அவன் முகத்தில் தெரிந்த கடுமையை கண்டு, ஏதோ சரி இல்லையென உணர்ந்து, “அவனுக்கு இந்தப் பணம் வேணாம்னு நினைச்சா, எங்களுக்கும் வேணாம். எங்களை நாங்க காப்பாத்திப்போம்…” என்று விட்டு,
தேவாவிடம் “மச்சான், ரிலாக்ஸ்! நீ ஏன் இவ்ளோ டென்ஷன் ஆகுற? இந்தப் பணம் நமக்கு வேணாம். ஓகே வா? வா நம்ம போகலாம்.” என்றதும் தேவா உருகி விட்டான் என்றால், திலகனோ இந்த இக்கட்டிலும் பணம் வேண்டும் என்றெண்ணாமல், நண்பனின் உணர்வு தான் முக்கியம் என நினைக்கும் அவர்களின் நட்பினை கண்டு வியந்தார்.
“சரிப்பா, இதைக் கடனா வச்சுக்கோங்க, நீங்க சம்பாரிச்சு திரும்ப இதை இந்த ஆஸ்ரமத்துக்கே குடுத்துடுங்க போதுமா… இந்தா பிடி!” என்று தேவாவின் கையில் கொடுக்க, அவனும் அதனை வாங்கி கொண்டான்.
பின், அவர் சொன்னது போல், இரவோடு இரவாகப் பெங்களுர் சென்று விட, நிஷாந்தை மருத்துவமனையில் சேர்த்து மாற்று மருந்து கொடுத்தனர்.
அதற்கு அடுத்த நாள் தான் அவன் சுயநினைவிற்கே வந்து, நடந்தவற்றை எல்லாம் அறிந்து அரண்டு விட்டான். “தன்னால் தானா? தன்னாலா இவ்வளவு பிரச்சனை, அதிலும் ஒரு சிறு உயிர் தன்னால் போயிருக்கிறதே” என விரக்தியின் உச்ச நிலைக்குச் சென்றவனை, “இது எதிர்பாராத விபத்து” என்று சமாதானப்படுத்துவதற்குள் மூவரும் போதும் போதும் என்று ஆகி விட்டது.
அன்றிலிருந்து, தினமும் குற்ற உணர்ச்சியில் மறுகுபவன், தன் நண்பர்களுக்கும் தன்னால் தானே இவ்வளவு கஷ்டம் என்று நொந்தான்.
அந்தக் காட்டிலேயே பேரமைதி நிலவ, அந்த அமைதியை கதறி அழுத வைஷுவின் குரல் அதிர வைத்தது.
“என்னால தான மாமா? எல்லாமே என்னால தான. நான் தான் எல்லாத்துக்கும் காரணம். என்னால தான நீ ட்ரக்ஸ் யூஸ் பண்ண? என்னால தான நீங்க ஊரை விட்டுப் போனீங்க? நான் மட்டும் உங்க வாழ்க்கையில வராம இருந்திருந்தா? நீங்க நிம்மதியா இருந்துருப்பீங்கள்ல…” என்று முகத்தில் அடித்துக் கொண்டு அழுதவளை, அவள் தோழிகள் தடுக்க முயல, அவள் அழுது கரைந்தாள்.
“இல்ல வைஷு என்னால தான் எல்லாமே, நான் தான் முட்டாள்தனம் பண்ணிட்டேன்.” என்றிட, விஷ்வா “நடந்துக்கு யாரும் காரணம் இல்ல. இதெல்லாம் தலை எழுத்து. இப்படிலாம் நடக்கணும்னு இருந்துருக்கு, அதை யாராலயும் மாத்த முடியாது…” என்றதும்,
ஆரு “கரெக்ட் விஷ்வா, தெரியாம பண்ண தப்பு ஒரு விபத்து அவ்ளோ தான். நீங்க ரெண்டு பேரும் கில்டியா ஃபீல் பண்ண அவசியமே இல்ல.” என்று உறுதியாகச் சொல்லியும், இருவரும் மாறி மாறிப் புலம்ப, விஷ்வா அருணுக்கு யாரை சமாதானப்படுத்துவது என்றே புரியவில்லை. வைஷுவை பார்த்தாலும் பாவமாகத் தான் இருந்தது.
அதில் கடுப்பான அம்மு, “அட ச்சே! இப்போ என்ன? இவனுங்க என்ன தங்கம் வைரத்தைக் கடத்தி திருடனாவா இருக்கானுங்க?” என்று வைஷுவை அதட்டி விட்டு, நிஷாந்திடம் “ஒரு பிரைவேட் டிடெக்டிவ்ஸ் இப்டியாடா மூஞ்சை தூக்கி வச்சுருப்பீங்க?” என்று உடைத்து விட்டதில், விஷ்வா ‘இவளுக்கு எப்படி தெரியும்?’ என்று பேந்த பேந்த முழித்தான்.
ஆருவும் வைஷுவும் அவளைப் புரியாமல் பார்த்ததில், அம்மு விஷ்வாவின் ஐ டி கார்டை எடுத்துக் கொடுத்து, “இந்தத் திருடனுங்க நாலு பேரும் டிடெக்டிவ் ஏஜென்சி வச்சு நடத்துறானுங்க. கர்நாடகால ரொம்ப ஃபேமஸ் டிடெக்டிவ்ஸ்.” என்றவள்
“என்ன விச்சு செல்லம்ஸ், கரெக்ட் தான!” என்று விழியுயர்த்தி கேட்க, அப்போது தான் அவன் வைத்திருந்த ஐ டி கார்டையே தேடிட, அது கிடைக்காமல், தேவாவின் அறையை, பயத்துடன் பார்த்தான். தன்னால் தான் தெரிந்தது என்று தெரிந்தால் தன்னை அடி வெளுத்து விடுவான் என்ற பயம் தான்.
ஆரு “அடிப்பாவி! இதை ஏன் என்கிட்ட முன்னாடியே சொல்லல?” என்க, தமி “எங்க நீ சொல்லவிட்ட? அதுக்குள்ள பல பிரச்சனை போய்டுச்சு… நீயும் அவசரப்பட்டு அவனை அடிச்சு, அவன் உன்னைத் தள்ளி விட்டு, ஒரு ஃபிளாஷ் பேக் போய்” என்று பெருமூச்சு விட, வைஷுவுக்கும் நிஷாந்துக்கும் ஒவ்வொரு விதத்தில் அவர்களுக்கு இருக்கும் குற்ற உணர்ச்சி தாங்கவே முடியவில்லை.
ஆரு “நிஷாந்த்” என மென்மையாக அழைத்து, “நீ கில்டியா ஃபீல் பண்ண அவசியமே இல்ல. நீ நல்லது தான் பண்ணிருக்க.” என்றாள் மெதுவாக. அனைவரும் அவளைப் புரியாமல் பார்க்க, உள்ளிருந்து இவ்வளவு நேரம் அவர்கள் பேசியதை கேட்டுக்கொண்டிருந்த தேவாவும் யோசனையுடன் வெளியில் வந்தான்.
அவன் வரவும் சொல்ல வந்தததை மறந்து விட்டு தேவாவையே பார்த்த இசை ஆராதனா, ‘சும்மாவே ஆடுவான் இன்னைக்கு அடிக்க வேற செஞ்சுருக்கோம்… நமக்கு சங்கு கன்ஃபார்ம்’ என்று மிரண்டவள், அவன் நண்பர்கள் மேல் வைத்திருக்கும் நட்பின் ஆழத்தை கண்டு அவனையே ரசனையாகப் பார்த்தாள்.

