Loading

அன்றைய இரவு சற்றே அவளது தமையனை மறந்து ஆலம்பனாவுடனே கேள்வி கேட்டு அதனைக் கொன்று கொண்டிருந்தான்.

உடனடியாக, அலெஸ்சாண்ட்ரோவிடம் இருந்து யாஷ் பிரஜிதனுக்கு அழைப்பு வந்தது.

அதில் தனியாக சென்று அழைப்பை ஏற்றவன், “எஸ் பப்பா” என்க,

“ஏன் எலிசாவோட பேரை மாத்துன யாஷ்?” அவர் இத்தாலி மொழியில் கோபத்தைக் கக்க,

“வொய் பப்பா. இட் லுக்ஸ் நைஸ் ஒன்லி ரைட்?” என்றான் அசட்டையாக.

“வாட்ஸ் தட் ஆலம்பனா? அண்ட் ஆல்சோ டமில் லேங்குவேஜ் எதுக்காக ஆட் பண்ணுன?”

“மை கிரியேஷன் மை விஷ்!” ஒரே வார்த்தையில் அவர் வாயை அடைத்து விட்டு அழைப்பைத் துண்டித்து விட, அலெஸ்சாண்ட்ராவிற்கு எரிச்சல் மிகுந்தது.

இங்கோ இரவு முழுதும் ஆலம்பனாவிடம் பேசித் தீர்த்து விட்டு, மறுநாள் காலையில் சோகத்தின் உருவாக அமர்ந்திருந்தாள் நிதர்ஷனா.

“வாட் ரித்தி?” உர்ரென்று இருந்தவளிடம் கேட்டான் யாஷ்.

முதன்முறை கடத்திய போது, அவளை வீட்டினுள்ளேயும் வெளியேயும் ‘ரித்தி’ என்றே அழைப்பான். அப்போது தான் மற்றவர்கள் முன் தடுமாற தேவையில்லை என்பதில் உறுதியாக இருந்தான்.

அவளும் தலையெழுத்தே என அவன் ‘ரித்தி’ என்று அழைக்கும்போதெல்லாம் நிமிர்ந்து பார்ப்பாள்.

இப்போதும் அதே போல நிமிர்ந்தவள், “நிவே பத்தி எந்த தகவலும் கிடைக்கலையா யாஷ்?” என்றாள்.

“இப்போதைக்கு அவன் சேஃபா இருப்பான் தட்ஸ் இட்…” என்றதில், “என்னவோயா… மனசே சரி இல்ல. கோவிலுக்குப் போயிட்டு வரட்டா?” எனக் கேட்டாள்.

“எனக்கு மீட்டிங் இருக்கு” அவன் ஆன்லைன் மீட்டிங்கிற்காக தயாராக, “நான் மட்டும் போயிட்டு வரேன். பக்கத்துல தான இருக்கு. நடந்தே போய்டுவேன்… இல்லன்னா கண்மணியைக் கூட்டிட்டுப் போகட்டா?” என்றதில் அவன் திரும்பி முறைத்தான்.

“உன் வாயை நம்ப முடியாது” என மறுத்தவனிடம், “நான் நீட்டா பேசிட்டு நீட்டா வந்துடுவேன் அரக்கா. ப்ராமிஸ்” எனத் தனது தலை மீது கை வைக்க, அதனைக் காதில் வாங்காமல் அலுவல் அறைக்குச் சென்று விட்டான் யாஷ் பிரஜிதன்.

“சாமி கும்பிட கூட இங்க சுதந்திரம் இல்லையாக்கும்” என அவன் செல்லும்போது முணுமுணுத்தது காதில் விழுக, அலுவல் அறைக்குச் சென்றவன் பின் மீண்டும் அவளிடம் வந்து “அரை மணி நேரம் தான் டைம்… கண்மணியைக் கூட்டிட்டுப் போ!” என்றதில் அவள் முகம் பிரகாசமானது.

“உனக்கு ஈரம் கொண்ட நெஞ்சம் அரக்கா!” என அவள் புகழ்ந்திட, “வாய்ல குத்துனா அதே ஈரம் அங்க இருந்து வரும்” எனக் காட்டத்துடன் உரைத்தவன் அங்கிருந்து சென்று விட, வேகமாக உடையை மாற்றிக்கொண்டு கோவிலுக்கு கிளம்பினாள்.

“கண்மணி… கண்மணி” வீட்டு வாசலில் நின்று கத்தினாள் நிதர்ஷனா.

“அண்ணி… உள்ள வாங்க” கண்மணி வேகமாக வந்து வரவேற்க, “அதுக்குலாம் டைம் இல்ல. வர்ரியா கோவிலுக்குப் போயிட்டு வரலாம்” எனப் பரபரத்தாள்.

“ஆனா அண்ணா?” கண்மணி தயங்க, “அவர் தான் போயிட்டு சீக்கிரம் வர சொன்னாரு” என்றதில் அவள் விழிகள் பளிச்சிட்டது.

“நிஜமாவா அண்ணி…” என வியந்தவள், “சிந்தா நீயும் வர்றியா?” என அழைத்ததில் மூவருமே கோவிலுக்கு கிளம்பினர்.

“பார்த்து போயிட்டு வாங்க” என்ற ஆதிசக்திக்கு வேண்டிய பாதுகாப்பு இல்லாமல் ரித்திகாவை அனுப்பி இருக்கமாட்டான் என்பது உறுதி தான். ஆகினும், மனம் கலக்கமாகவே இருந்தது.

அழகேசன், மூவரையும் காரில் இறக்கி விடுவதாக சொல்லியும் நிதர்ஷனா மறுத்து விட்டாள்.

“பக்கத்துல தான இருக்கு பெரியப்பா. நாங்க போய்க்கிறோம்…” என்று இரு பெண்களுடனும் கிளம்பி விட்டாள்.

மகேந்திரன் தான் சிடுசிடுத்தார். “உன் பையனுக்கு பொண்டாட்டியை கோவிலுக்கு கூட்டிட்டுப் போறதை விட அப்படி என்ன வேலை” என்று!

இங்கோ, கண்மணி மற்றும் சிந்தாமணியுடன் வளவளத்தபடி கோவிலை அடைந்தாள் நிதர்ஷனா.

“ரித்தி அக்கா… நீங்களும் மாமாவும் லவ் மேரேஜா?” என சிந்தாமணி ஆரம்பிக்க,

திருதிருவென விழித்தவள், “ஆ… ஆமா சிந்தா. லவ்வுன்னா லவ்வு உங்க வீட்டு லவ்வு எங்க வீட்டு லவ்வு இல்ல. ஊரு பட்ட லவ்வு…” எனப் பெருமையாய் கூறி விட்டு, ‘அவ்வ்வ்வ் அந்த அரக்கனை லவ் பண்றதுக்கு நான் நடுஜாமத்துல தூக்குப் போட்டுக்கலாம். தூக்கத்துல கூட தூசி துடைக்க சொல்லி சாவடிப்பான்’ எனத் தனக்குள் பொருமிக் கொண்டாள்.

கோவிலுக்குச் சென்றதும், தமையனின் நினைவு அதிகரிக்க கண்ணை மூடி மனமார வேண்டிக்கொண்டாள்.

“முருகா… என் அண்ணனைக் கண்ணுல காட்டிடு. ஓடிப் போயிருந்தா கூட பரவாயில்ல. நான் அவன்மேல் கோபப்பட மாட்டேன். ஆனா அவனுக்கு ஆபத்து வராமல் பார்த்துக்கோ முருகா. அவன் திரும்பி வந்துடுவான்ற என் நம்பிக்கையை பொய்யாக்கிடாத. நான் இதுவரை உன்னாண்ட எதுவும் கேட்டது இல்ல. எனக்கு என் அண்ணனை மட்டும் திருப்பி குடுத்துடு. ப்ளீஸ்…” என உள்ளம் உருக கடவுளிடம் மனபாரத்தை இறக்கி வைத்தவளுக்கு கண்ணில் நீர் கசிந்தது.

அதனை மற்ற இருவரும் பார்க்கும் முன் துடைத்துக் கொண்டவளுக்கு, மெல்ல பாரம் இறங்கிய உணர்வு.

அனைத்தும் சரியாகி விடும் என்ற நம்பிக்கையை கடவுள் சந்நிதியில் சரணடையும் அனைவருக்குள்ளும் புகுத்தி விடுவதே அனைத்துமானவனின் சக்தி.

“என்ன அண்ணி வேண்டுதல் எல்லாம் பலமா இருக்கு? சீக்கிரம் உங்க பிரச்சினை எல்லாம் சரியாகணும்னு தான” கண்மணி கேட்டதும், “என் பிரச்சினை உனக்கு எப்படி தெரியும்…” என விழித்தாள்.

“அதான், உங்களை உங்க அப்பாவோட எதிரிங்க கொலை பண்ணப் பாக்குறாங்களே. அதை சொன்னேன்…” கண்மணி கூறியதில், “ஓ அதை சொல்றியா?” என நிம்மதியானாள்.

“நீங்க என்ன நினைச்சீங்க?” சிந்தாமணி வினவியதில், “நா… நான் இதெல்லாம் ஒரு பிரச்சினையாவே பார்க்கல. அதான் என்கூட யாஷ் இருக்காரே” என காலால் நிலத்தில் கோலமிட்டாள். வெட்கம் கொல்கிறாளாம்!

இரு பெண்களும் தங்களுக்குள் சிரித்துக் கொள்ள, “சரி நீங்களும் அண்ணாவும் பர்ஸ்ட் எங்க பார்த்தீங்க?” எனக் கண்மணி கதை கேட்டதில், ஐயோ என்றிருந்தது நிதர்ஷனாவிற்கு.

“இங்க தான இருக்கப் போறேன் எங்க காதல் கதையை நிதானமா சொல்றேன்” என்று சமாளித்தவள், அவர்கது எண்ணத்தை திசை மாற்றும் பொருட்டு, “இங்க ஆறு குளமெல்லாம் இல்லையா கண்மணி?” எனக் கேட்டாள்.

“இங்க கோவில் குளம் இருக்கு அண்ணி” எனக் கண்மணி உரைத்ததும்,

சிந்தாமணி, “குளிக்கிறதுக்கு போகணும்னா, ஆத்தங்கரை இருக்குக்கா” என்றதில், “நல்லாருக்குமா?” என ஆர்வமாகக் கேட்டாள் நிதர்ஷனா.

“நீங்க ஸ்விம்மிங் பூல்ல குளிச்சு பழகி இருப்பீங்க… அங்க க்ளோரின் அதிகமா போட்டுருப்பாங்கள்ல… இங்க அந்த மாதிரி இல்லை. நேச்சரை அனுபவிச்சு குளிக்கலாம்” என சிந்தாமணி ஆசை காட்டி விட்டாள்.

‘ஸ்விம்மிங் பூல்ல நானு? கூவம் ஆத்துல கூட குளிச்சது இல்ல’ எனத் தனக்கு தானே பேசிக்கொண்டவள், பின் “ஹே கண்மணி என்னையும் ஆத்தங்கரைக்கு கூட்டிட்டுப் போயேன்…” ஆசையாகக் கேட்டதில்,

“அண்ணாவே ஏதோ மனசு இறங்கி உங்களை கோவிலுக்கு அனுப்பி இருக்காரு. பாதுகாப்பும் இல்ல அண்ணி” என்று மறுத்தாள் கண்மணி.

“அண்ணனுக்கும் தங்கச்சிக்கும் நான் ஏதாவது சொன்னா, அதை மறுக்குறதே வேலையா போச்சு” எனச் சிலுப்பிக் கொள்ள, கண்மணிக்கு வருத்தமாகப் போய்விட்டது. “அதில்லை அண்ணி… உங்க சேஃப்ட்டி முக்கியம்ல அதான்…” என்றபின்னே, “சரி அட்லீஸ்ட் குளத்துக்காவது கூட்டிட்டுப் போங்க” என்றாள்.

“அது கோவிலுக்குள்ள தான் இருக்கு அக்கா வாங்க…” எனச் சிந்தாமணி அழைத்துச் சென்றாள்.

குளத்தின் அருகில் சென்று படிக்கட்டில் அமர்ந்தார்கள் முவரும்.

“நீங்க ரெண்டு பேரும் படிக்கிறீங்களா?” நிதர்ஷனா கேட்க, “ஆமா அண்ணி, நான் பி காம் செகண்ட் இயர். இவளும் நானும் ஒண்ணா தான் படிக்கிறோம்…” என்றாள் கண்மணி.

“நீங்க என்ன படிச்சு இருக்கீங்கக்கா?” சிந்தாமணி கேட்க, “நான் பி. சி. ஏ” என்றதும் இருவரும் குழம்பினர்.

ஆனா நீங்களும் அண்ணாவும் ஒண்ணா தான் வேலை பாக்குறதா அம்மா சொல்லிட்டு இருந்தாங்களே அண்ணி…” எனக் கண்மணி கேட்டதும்,
‘அய்யயோ அவன் செய்ற வேலைக்கு என்ன படிக்கனும்னே எனக்கு தெரியாதே’ என நொந்தவள்,

“ஹா ஹா… படிப்புக்கும் அறிவுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு கண்மணி” எனச் சிரித்து சமாளித்தாள்.

“சரி தான்” என இருவரும் ஒப்புக்கொண்டனர். ‘ஆத்தாடி இதுக்கு மேல இதுங்ககிட்ட பேசுனா, உண்மையா உளறி அந்த அரக்கன்கிட்ட அடி வாங்கனும்’ என மிரண்டு “சரி கிளம்புவோமா?” என எழுந்தாள்.

“ஒரு நாள் அண்ணாகிட்ட பெர்மிஷன் வாங்கி உங்களை ஆத்தங்கரைக்கு கூட்டிட்டுப் போறேன் அண்ணி” சொல்லிக்கொண்டே கண்மணியும் எழ, “அதுக்கு மொத என் மாமன்காரன் உங்கிட்ட பேசணுமே” என நொடித்தாள் சிந்தாமணி.

அதில் கண்மணியின் முகம் சுருங்கிப் போனது.

“ஏன் அவர் உன்கூட பேச மாட்டுறாரு கண்மணி” நிதர்ஷனா கேட்டதும், “அவரால என்னைத் தங்கச்சியா ஏத்துக்க முடியலையோ என்னவோ…” எனக் கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டு புன்னகைத்தாள்.

அவளை விசித்திரமாக பார்த்த நிதர்ஷனாவிற்கு ஒன்றுமே புரியவில்லை. சரியாக குளத்தை விட்டு வெளியில் வரும் வேளையில், முகத்தை மூடி இருந்த நால்வர் கும்பர் பெண்களை அணைக்கட்டியது.

நிதர்ஷனா மிரண்டு, “டேய் யாருடா நீங்க?” எனக் கேட்கும்போதே ஒருவன் கத்தியை எடுத்து அவள் புறம் வீச, அதனை பிடித்து விட்ட நிதர்ஷனா, “கொய்யால நானும் பாத்துட்டே இருக்கேன். என்னைக் கோவிலுக்கு கூட வரவிடாம என்னையவே பாலோ பண்றீங்களாடா பாடி சோடாக்களா” என்று ஒருவனை அறைந்து விட, அவன் சுருண்டு தள்ளி விழுந்தான்.

சிந்தாமணியும் கண்மணியும் நிதர்ஷனாவை ‘பே’ வென பார்க்க, அவளோ ‘அய்யயோ கோபப்பட்டோமே…’ என்று பதறும்போதே மற்றொருவன் அவளைத் தாக்க அவனையும் இலாவகமாகத் தடுத்தவள், அவன் வயிற்றிலேயே ஒரு குத்து விட்டாள்.

“ஹே ரெண்டு பேரும் வாங்க. இவனுங்களை அடிச்சுப் போடலாம்” என அவர்களையும் அழைத்ததும் மிரண்டு நின்றார்கள்.

“யம்மா தெய்வங்களா… உங்களை என்ன ஸ்டண்ட் மாஸ்டர் மாதிரி ஃபைட் பண்ணவா சொல்றேன். சும்மா கண்ணை மூடிட்டு நாலு அடி அடிங்க. பயந்து ஓடிடுவானுங்க” எனும்போதே வேறொரு நால்வர் குழு அங்கு வந்து நிதர்ஷனாவைத் தாக்க வந்தவர்களை அடித்தது.

அதற்குள் அங்கு அதிவேகத்தில் யாஷ் பிரஜிதனும் வந்து விட, அந்நேரம் ஒருவன் யாஷ் குழுவினரிடம் இருந்து தப்பி மீண்டும் நிதர்ஷனாவை நோக்கி கத்தியுடன் வர, அவள் இலாவகமாகப் பிடித்து விட்டாள்.

“ண்ணோவ்… இந்தக் கத்திக்கு எல்லாம் நான் ஒர்த் இல்லண்ணா. சொன்னா கேளு. போய்டுண்ணா…” எனக் கெஞ்சிக்கொண்டே தடுக்க, அவனோ ‘ஏய்’ எனச் சத்தம் கொடுத்தபடி அவளைத் தாக்க முயன்று அவளது கையில் கீறி விட்டான்.

அடுத்த கீறல் போடும்முன்னே அவனைப் பிடித்து விட்ட யாஷ் பிரஜிதன், நொடியும் யோசியாது அவனது கையை உடைத்தே விட, பெண்கள் இருவரும் அலறி விட்டனர்.

நிதர்ஷனாவோ, “யோவ்… அவன் சோத்தாங்கையை ஒடைச்சுட்டியே. எப்படி சோறு துன்னுவான்?” எனப் பரிதாபமாகக் கேட்க, “அவனைச் சாப்பிட விட்டா, உன்னை அடுத்த வேளை சாப்பிட இல்லாம ஆக்கிடுவான் பரவாயில்லையா?” யாஷ் பிரஜிதன் விழிகளில் நெருப்பைக் கக்கினான்.

“சரி சரி உன் பயர அவன் மேல விடு” என்று அசட்டுச் சிரிப்பை உதிர்த்தவள், ‘என்னவோ எனக்கு நானே அடிக்க ஆள் செட் பண்ணுன மாதிரி என்னாண்ட பொரியிறான்…’ என உள்ளுக்குள் பொருமிக் கொண்டாள்.

இது பத்தாதென்று மேலும் இரு கார்களில் ஆள்கள் படையென திரண்டு வந்தனர். அவர்களை யாஷ் பிரஜிதனே அடித்து துவம்சம் செய்து, பதறி ஓடி வந்த ஆஹில்யனிடம் ஒப்படைத்தான்.

“இவனுங்க யாரு என்னன்னு இன்னைக்கு எனக்குத் தெரியணும். இல்ல… உன் சீட்டு கிழிஞ்சுடும்” என்றதில் ஆஹில்யன் நொந்தான்.

“கண்டிப்பா கண்டுபிடிச்சுடுறேன் சார்…” என்றவன் வந்தவர்களை தனது ஆள்களின் மூலம் காரில் அள்ளிப்போட, “செம்ம ஃபைட் யாஷ். புழுதி பறக்க ஃபைட்டெல்லாம் நான் படத்துல தான் பார்த்து இருக்கேன்…” என்றவளின் கையில் குருதி வழிந்தது.

அவளைத் திரும்பி முறைத்த யாஷ், “இதுக்கு தான் உன்னை வரவேணாம்னு சொன்னேன்” எனும்போதே அவனது மூக்கில் இருந்து இரத்தம் வழிந்தது.

அதில் திகைத்தவள், “யாஷ் உங்களுக்கு இரத்தம் வருது…” எனப் பதறி தனது துப்பட்டாவால் துடைக்கப் போக, அவனுக்கு லேசாய் மயக்கம் வருவது போல இருந்ததில், தள்ளாடியபடி காருக்கு விரைந்தவன் மூக்கைத் துடைத்து விட்டு மாஸ்க்கை அணிந்து கொண்டான்.

“தண்ணி தரட்டா?” என அவசரமாக காரில் இருந்து நீரை எடுத்துக் கொணர்ந்தவள், “இப்போ ஓகே வா யாஷ்?” என்றாள் பதற்றமாக.

“ம்ம்…” அவன் பலவீனமாய் காரில் சாய்ந்தபடி தலையசைத்தான்.

கண்மணிக்கு செய்வதறியாத நிலை. உரிமையாய் அவனை பிடித்து பதற கூட அவன் அனுமதி தரவில்லையே.

அருகில் வரும்போதே பார்வையால் எட்ட நிறுத்தி விடுகிறான்.

“ஆஸ்பத்திரிக்கு போலாமா அண்ணா. அடி பட்டதுல இரத்தம் வருதா?” எனக் கவலையாகக் கேட்க,

மறுப்பாக தலையசைத்தவனுக்கு இன்னும் தலை சுற்றியது.

நிதர்ஷனா “சிந்தா ஒரு ஆட்டோ பிடியேன்” என்றதும் பயந்து நின்றிருந்த சிந்தாமணி வேகமாக ஆட்டோவை அழைத்தாள்.

யாஷின் கையை கெட்டியாகப் பிடித்துக் கொண்ட நிதர்ஷனா, “உங்களுக்கு ஏதோ டஸ்ட் அலர்ஜி மாதிரி இருக்குன்னு சொன்னீங்களே அதுனால ரத்தம் வருதா?” என விழிகளை அகல விரித்துக் கேட்க, ஆமோதிப்பாக தலையசைத்தான்.

அதிகப்படியான புகை, தூசியெல்லாம் அவனுக்கு ஒத்துக்கொள்ளாது. மூக்கின் நரம்புகள் சற்றே பலவீனமாக இருப்பதால் எளிதில் குருதி வந்து விடும்.

“ஐயையோ… மாத்திரை எதுவும் போடணுமா இந்த டைம்ல” எனக் கேட்டுக்கொண்டே அவனை ஆட்டோவில் ஏற்றிட, “வேணாம். நீங்க போங்க. நான் கார்ல இருந்துட்டு சரியாகவும் வரேன்” என மறுத்தான்.

இன்னும் அவனால் கண்ணை நன்றாக திறக்க இயலவில்லை.

“முதல்ல வாங்க… கார்ல உக்காந்து தியானம் பண்ண போறீங்களா” அதட்டியபடியே தான் அவனை அழைத்து வந்தாள் நிதர்ஷனா. மற்ற இருவரும் வேறொரு ஆட்டோவில் வீட்டை அடைந்து விட, கண்மணி “அண்ணி அண்ணனை இங்க நம்ம வீட்டுல உக்கார வைங்க. உங்களுக்கும் அடி பட்டுருக்குல…” என்றதும் அவளுக்கும் அதுவே சரியென பட்டது.

அவனை கைத்தாங்களாகப் பிடித்தவள், ஆதிசக்தியின் வீட்டின் முகப்பில் இருக்கும் சோபாவில் அமர செய்து விட்டு, “மாத்திரை எதுவும் வேணுமா யாஷ்… இன்னும் கொஞ்சம் தண்ணி குடிக்கிறீங்களா?” என அவன் கையை பரபரவென தேய்த்தபடி கேட்டாள்.

தலையை அழுத்திப் பிடித்திருந்தவன், “நாசல் ஸ்ப்ரே இருக்கும். என் கப் போர்ட்ல” என்றான் முணுமுணுப்பாக.

அவனுக்கு அவளது பதற்றம் மட்டுமே காதில் நிறைந்து இருந்தது. அவனைக் கண்டதும் பயந்து தவித்து அருகில் வந்த தாயும் குடும்பத்தினரும் கருத்தில் நிலைக்கவே இல்லை.

பேரை மட்டும் கேட்டுக்கொண்ட நிதர்ஷனா, “நான் எடுத்துட்டு வரேன்” என்று சொன்ன சிந்தாமணியின் கூற்றை காதில் வாங்காமல் புயலாக வீட்டிற்கு ஓடினாள்.

நல்லவேளையாக அவளுக்கும் வீட்டின் பாஸ்வோர்டையும் கைரேகையையும் பதிய வைத்து சொல்லிக் கொடுத்திருந்தான்.

விறுவிறுவென மாடிக்கு ஏறியவளோ துளி துளியாய் அவள் கையில் இருந்து வழிந்த இரத்தத்தை பொருட்படுத்தவே இல்லை.

அவசரமாக அவனது கப் போர்டில் மருந்தை தேடியவள், மூக்கில் ஸ்ப்ரே செய்யும் மருந்தைக் கண்டுபிடித்து, அவசர கதியில் கதவை லாக் செய்து விட்டே அவனை நோக்கிச் சென்றாள்.

அதனை வாங்கி உடனே தனக்கு தானே மூக்கில் மருந்தை செலுத்திக் கொண்டவன் சில நொடிகள் தலையைப் பின்னால் சாய்த்து, தன்னை நிலைப்படுத்திக்கொள்ள முயன்றான்.

அவளுக்கோ அவனுக்கு என்ன சிகிச்சை செய்வதயென்றே தெரியாமல், மூக்கில் இருந்து வந்த குருதியில் பயந்து அவனது கையையும் தேய்த்து கொடுத்து விட்டு, காலில் அணிந்திருந்த சாக்சை கழற்றி காலையும் தேய்த்து கொடுத்தாள்.

இளவேந்தனோ, “ம்மா உன் கைல இருந்து இரத்தம் வருது பாரு…” என அத்தனை நாள்களும் அவளை பாராமல் தவிர்த்து வந்தவர், இப்போது பேசிட, அவளோ அதனைக் காதில் வாங்கியது போலவே தெரியவில்லை.

மகேந்திரன் தான், புருவம் சுருக்கி இருவரையும் பார்த்து விட்டு “பாதுகாப்பா வீட்லயே இருக்கறதை விட்டுட்டு எதுக்கு பிரச்சினையை தானா தேடி போகணும்” என்று சிடுசிடுத்தார்.

அழகேசன் தந்தையை அமைதி படுத்தி, “விடுங்கப்பா. கோவிலுக்கு போக நினைச்சது என்ன அவ்ளோ பெரிய குத்தமா?” என நிதர்ஷனாவிற்கு ஆதரவாக பேசி விட, அவளுக்கோ குற்ற உணர்வு அதிகரித்தது.

‘தன்னால் தானே இவன் இப்படி அரை மயக்கத்தில் கிடக்கிறான்…’

சில நாள்களுக்கு முன் என்றால் கூட , ‘ஐயோ கடனை அடிக்காம போய் சேர்ந்துடுவானோ’ எனப் புலம்பி இருப்பாள்.

இப்போதோ, அப்படி எண்ணக்கூட தோன்றவில்லை அவளுக்கு. காரணம் கேட்டால் கூட சொல்லத்தெரியாது.

‘எனக்காக எலிசா பேரை எல்லாம் மாத்துனான்ல…’ என அவளுக்காக செய்த சிறு செயலால் அவன் மீது ஒரு அக்கறை பிறந்திருந்தது அவளே அறியாமல்.

“யாஷ்… இப்ப ஓகே வா?” ஆதிசக்தி கண்ணில் நீர் வைத்து விட, கிருஷ்ணவேணி “குடிக்க காபி எடுத்துட்டு வரட்டாப்பா?” எனக் கேட்க, அவன் மெல்ல நிதானித்து நேராய் அமர்ந்தான்.

“எதுவும் வேணாம்…” யாரையும் பாராமல் பதில் அளித்தவன், “ஏய் ரித்தி என்ன பண்ணிட்டு இருக்க?” என நிதர்ஷனவை நோக்கி அதட்ட,

“அது… அது… என்ன செய்றதுன்னு தெரியல… அதான்…” என அவனைத் தொட்டதற்காக திட்டுகிறான் போல என்றெண்ணி கையை எடுத்துக் கொண்டாள்.

“சென்ஸ் இருக்கா. கைல இருந்து இரத்தம் வருது. ஃபர்ஸ்ட் எய்ட் பண்ணாம… இடியட்…” என்று நிமிர்ந்து கண்மணியை ஒரு பார்வை பார்த்தான்.

“இவ்ளோ நேரம் நின்னு வேடிக்கை பார்த்துட்டு இருந்தியா? ஃபர்ஸ்ட் எய்ட் பாக்ஸ் இங்க இருக்கா இல்ல எப்பவும் போல காயத்தை கண்டுக்காம விட்டுடுவீங்களா?” என்றான் தாய்க்கு குட்டு வைத்து.

அவனைக் கண்டுகொள்ளாது விட்டதற்கு குத்திக் காட்டுகிறான் எனப் புரிந்து வலித்தது அவர் இதயம்.

கண்மணி ஒரே ஓட்டமாகச் சென்று மருந்தை எடுத்து வந்திருந்தாள்.

தரையில் அமர்ந்து யாஷை திருதிருவெனப் பார்த்திருந்த நிதர்ஷனாவிடம், “மேல ஏறி உக்காரு மெண்டல்…” எனப் பல்லைக்கடித்த யாஷ், அவளது கைக்கு மருந்திட, “காட்டன் எடுத்து தர, இத்தாலில இருந்து யாரையும் கூட்டிட்டு வரணுமா” என அவளுக்கு அருகில் நின்றிருந்த சிந்தாமணியிடம் சீறினான்.

அதில் கைகள் நடுங்க, காட்டனை அவசர கதியில் எடுத்த சிந்தாமணி “இந்தாங்க மாமா” எனப் பரிதாபமாகக் கொடுத்தாள்.

மகேந்திரனுக்கு அவன் குரலை உயர்த்திப் பேசுவது சற்றும் பிடிக்கவில்லை. அதில் அவர் உள்ளே சென்று விட, அவனோ யார் இருக்கிறார்கள் என்றெல்லாம் துளியும் கண்டுகொள்ளவில்லை.

“இன்னொரு தடவை கோவிலுக்குப் போறேன். குளத்துக்குப் போறேன்னு சொன்ன ஓங்கி ஒன்னு விட்டுடுவேன்…” இப்படி காயத்தை வாங்கி கொண்டு வந்திருக்கிறாளே என்ற கோபத்தில் கையோங்கி மிரட்டிட, ஆதிசக்தி “யாஷ்” என்றார் அதட்டல் குரலில்.

அதில் கையைத் தன்னிச்சையாக இறக்கியவன், இன்னும் அவனையே கண்ணெடுக்காமல் பார்த்திருந்த நிதர்ஷனாவின் வாயில் ஒரு மாத்திரையைத் திணித்தான்.

முகத்தைச் சுளித்தவள், “இன்னாது இது?” எனக் கசப்பில் கதற,

“பெயின் கில்லர்” என்றவன் கண்மணி கொணர்ந்த நீர் குவளையை அவளிடம் நீட்டினான்.

“மாத்திரையை இப்படியா போடுவாங்க” என்றவள் வாயில் போட்டு இருந்த மாத்திரையை கையில் எடுத்து விட்டாள்.

“எதுக்குடி அதை முழுங்காம எடுத்த?” யாஷ் கர்ஜிக்க,

“உனக்கு மாத்திரை எப்படி போடணும்னே தெரியாதா. வாய் நிறைய தண்ணி வச்சுட்டு அப்பறம் தான் போடணும். இல்லன்னா கசக்கும்” என முகத்தை அஷ்டகோணலாக்க, “எப்படியோ போட்டு தொலை” என்று பல்லைக்கடித்தாள்.

ஆதிசக்தியோ, “நம்ம பேமிலி டாக்டரை வர சொல்லி ஒரு இன்ஜெக்ஷன் கூட போட்டு விடலாம் யாஷ். பெயின் குறையும்ல அவளுக்கு…” என்றிட,

“ஐயோ அதெல்லாம் வேணாம் அத்தை. எனக்கு வலிக்கவே இல்லை” என்று ஊசியைப் போட்டு விடுவார்களோ என்ற பயத்தில் பொய்யுரைத்தாள்.

“இப்போ தெரியாது ரித்தி. போக போக வலிக்க ஆரம்பிக்கும். டாக்டர்ட்ட கன்சல்ட் பண்றது பெஸ்ட்… மாமா டாக்டருக்கு கால் பண்ணு” என்று கணவனிடம் கூற தலையசைத்து இளவேந்தனும் அலைபேசியை எடுத்துக்கொண்டு தனியே சென்றார்.

இவர்களின் உரையாடல்களை காதில் வாங்கிய படி குவளையில் இருந்த நீரை யாஷும் குடித்திட,

நிதர்ஷனாவோ ‘அயோ இந்த அம்மா என்ன… விட்டா க்ளூகோஸ் எல்லாம் ஏத்தி விடும் போல’ என எரிச்சலுற்றவள், “இன்னாமா உன்னோட பேஜாரா போச்சு” என்று வழக்கம் போல பயத்தில் அவளது ஸ்லாங்கை எடுத்து விட, குடித்த நீரை எல்லாம் கீழே துப்பி விட்டான் யாஷ் பிரஜிதன்.

அன்பு இனிக்கும்
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
24
+1
109
+1
7
+1
8

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்