15 – வலுசாறு இடையினில்
அடுத்த நாள் காலை வினிதா நங்கை வீட்டிற்கு வந்த போது வீடு பரபரப்பாக இருந்தது. எப்போதும் போல கல்லூரி செல்ல தயாராகி வந்தவள் அங்கு நடப்பது புரிந்தும் புரியாமல் வாசலில் நின்றாள்.
“ஹே வினிதா.. வா வா .. என்ன இவ்வளவு நேரம்.. வந்து உன் சினேகிதிய ரெடி பண்ணு.. இந்தா இந்த ஜாக்கெட் சரி பண்ணியாச்சி .. கொண்டு போய் அவகிட்ட குடு.. எனக்கு நிறைய வேலை இருக்கு.. அவ கூட நீ இருந்த எனக்கு கவலை இல்ல .. என்ன மச மச ன்னு நிக்கரவ? புடி .. அவங்க அப்பா அங்க கூப்பிடராரு “, என காமாட்சி அவள் கைகளில் ஒரு புத்தம் புதிய ஜாக்கெட் கொடுத்து விட்டு உள்ளே ஓடினார்.
வினிதா முகத்தில் எதுவும் காட்டிக் கொள்ளாமல் நங்கை இருக்கும் அறைக்கு நடந்தாள்.
“என்ன வினிதா .. ரொம்ப சாதாரணமா வந்து இருக்க .. ஃப்ரெண்ட் நிச்சயம் கலக்கலா வரணும் ல.. “, என ஒரு சொந்தக்காரர் கேட்டார்.
“சும்மா தான் .. கல்யாணத்துல ஜமாய்ச்சிக்கலாம் மாமா .. அத்தை எங்க நீங்க மட்டும் வயசு பிள்ளைங்க நடுவால கோபியர் கொஞ்சும் கிருஷ்ணனாட்டம் ஒக்காந்து இருக்கீங்க?”
“அட ஏன் புள்ள இப்போ அவள கூப்புடுரவ.. நான் சும்மா தோரணம் எல்லாம் சரியா இருக்கான்னு பாக்க தான் வந்தேன்.. “, என அவசரமாக மனைவி வருகிறாளா என பார்த்தபடி வெளியே ஓடினார்.
“இவன் எல்லாம் பெரிய மனுஷன்.. எல்லாம் இந்த ஊரோட சாபம்.. “, என முணுமுணுத்தபடி நங்கை இருக்கும் அறைக்கு வந்து சேர்ந்தாள்.
நங்கை முகத்தில் எந்த உணர்வும் காட்டாமல் வினிதாவை பார்த்துவிட்டு மீண்டும் வேறு பக்கம் திரும்பி சுவற்றை வெறிக்க ஆரம்பித்தாள்.
“என்ன நங்க நடக்குது இங்க ?”, என அவளை தன் பக்கம் திருப்ப பேச்சை ஆரம்பித்தாள்.
“எனக்கு சவக்குழி தோண்டராங்க வினி .. “, நங்கை பேச்சில் விரக்தி அளவுக்கு மீறி இருந்தது.
“அது எல்லாருக்கும் கல்யாணம்-ங்கற பேர்ல தோண்டிக்கிட்டு தான் இருக்கானுங்க.. யாரு மாப்ள?”
“தெரியாது”
“பேர் கூடவா சொல்லல ?”
“நேத்து நான் வந்ததும் இன்னிக்கி காலைல நிச்சயம் இனிமே காலேஜ் போகாத , படிக்காத.. பையன் பத்தாவது கூட முடிக்கல அதனால நீயும் இனிமே படிக்காதன்னு சொல்லிட்டு போயிட்டாங்க”
“அந்த மரமண்டைக்கு படிப்பு ஏறலன்னா நீயும் படிக்க கூடாதா?”, வினிதா கோபம் கொண்டு கேட்டாள்.
“உன் மாமன் மாறியே எல்லாரும் யோசிப்பாங்களா வினி? என் விதி இது தான் போல”
“லூசு மாறி பேசாத நங்க.. இதோட ஒண்ணும் முடிஞ்சிடாது.. யாருன்னு மொத பாக்கலாம்.. நீ மனச விடாத.. நீ நினைக்கற மாதிரி நீ கண்டிப்பா வாழ்வ.. அதுக்கு நான் பொறுப்பு”, என நங்கையை ஆசுவாசபடுத்திவிட்டு அவளை தயார் செய்தாள்.
“கைல ஒரு சூலாயுதம் இருந்த அம்மன் சிலை தான் டி நீ.. என் கண்ணே பட்டுரும் போல”, என அவளுக்கு திருஷ்டி கழித்தாள் வினிதா.
“ஹாஹா.. பொண்ண சாமியா பாக்கறாங்க இல்லைனா சொத்தா பாக்கறாங்க.. மனுஷியா யாருமே பாக்க மாட்டாங்க போல”
“கைல தான் சூலாயுதம் இருக்குல்ல ஒரே குத்து அத்தனை பேரொட கோடல் வயிறுன்னு அத்தனையும் வெளிய எடுத்துரு .. நீ ஏன் அவங்க நினைக்கறாங்கன்னு அதயே செய்யணும்.. நம்ம மாத்தி செஞ்சா என்ன? “, என வினிதா சிரித்தபடி கேட்டாள்.
நங்கை புரியாமல் அவளை பார்த்தாள்.
“என்ன பாக்கற எல்லாம் நீ எடுத்த பாடம் தான். கொஞ்சம் செயல் படுத்தி பாக்கலாம்ன்னு சொல்றேன்.. யாரு வாரான்னு மொத பாப்போம் அப்பறம் பேசிக்கலாம்.. நீ சிரிச்சமேனிக்கு நில்லு ஒரு போட்டோ எடுத்துக்கறேன்”, என வினிதா அவளை வித விதமாக போட்டோ எடுத்து வைத்து கொண்டாள்.
வினிதாவின் வரவினாலும் பேச்சினாலும் நங்கையின் மனம் சற்று இறுக்கம் தளர்ந்து இருந்தது.
“ஏய் வினிதா சாப்டியா? “, என கேட்டபடி காமாட்சி அங்கே வந்தார்.
நங்கை முழு அலங்காரத்தில் இருப்பது கண்டு, அவரது கண்ணும் மனமும் குளிர்ந்து தான் போனது.
நங்கை நல்ல உயரம், திடமான உடல்வாகு, ஆனால் நிறம் சற்று குறைவு என்பதாலே அவளை பெருதாக அவர் கண்டு கொண்டதில்லை. ராஜன் நல்ல சிகப்பு நிறம், வயதிற்கு மீறிய வளர்ச்சி என அவனை மட்டுமே தாய் தந்தை இருவரும் அதிகம் கவனிப்பார்கள்.
தேன் நிறத்தில் இருக்கும் நங்கை அவர்களை பொறுத்தவரை கருப்பு, அதுவும் பெண் என்பதால் இன்னுமே அவர்களின் மனதில் அவளை கீழே தான் இறக்கி வைத்து இருந்தனர்.
அந்த நிற வேறுபாடு நங்கையை சிறுவயதில் அதிகமாக தாக்கி இருந்தது. ராஜனின் கறுப்பி, கரிக்கட்டை , இதுபோன்ற அழைப்புகள் அவளை தாழ்வுமனப்பான்மை கொள்ள வைத்தது.
இன்றும் கூடஅவளின் மனதின் ஓரத்தில் அந்த எண்ணம் உண்டு. வளர வளர அப்பத்தாவின் உதவியாலும், படிக்கும் இடத்தில் கிடைத்த தெளிவினாலும் அந்த தாழ்வுமனப்பான்மையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக தன்னை தானே வெளியே கொண்டு வந்து இருந்தாள் எனலாம்.
இன்று பருவ வயதில் நிற்கும் நங்கையின் பாந்தமான கம்பீரமான அழகு, காமாட்சியை பூரிப்பு கொள்ள வைத்தது.
“என் கண்ணே பட்டுரும் போல தமிழு.. அம்புட்டு அழகா இருக்க நீ .. “, என கன்னம் வழித்து நெட்டி முறித்தார் காமாட்சி.
“உங்க பொண்ண கொஞ்சினது போதும் டிபன் என்ன? காலைல நான் சாப்பிடவே இல்ல.. இன்னிக்கி நிச்சயமின்னு எனக்கு ராத்திரி ஃபோன்லயாவது சொல்லி இருந்தா, நானும் அதுக்கு தக்கன ரெடி ஆகி வந்து இருப்பேன்ல “, என வினிதா முகத்தை திருப்பினாள்.
“எங்களுக்கே நேத்து ராத்திரி தான் டி தெரியும்.. இவ வந்த நேரத்துல தான் அவரும் வந்து சொன்னாரு. அப்போ இருந்து நிக்க நேரம் இல்ல தெரியுமா.. இந்த ராஜன் பையன் கிட்ட சொன்னேன் அவன் வேற வேலைல மறந்து இருப்பான். அதான் வந்துட்டல்ல, இங்க இருக்க பொடாவைய கட்டி ரெண்டு சங்கிலிய கழுத்துல போடு டி”
“உங்க வீட்டு சங்கிலி எனக்கு எதுக்கு.. இருக்கறதே போதும்.. என் அப்பா அம்மாவ கூபட்டீங்களா இல்லையா?”
“எல்லாருக்கும் ஃபோன் தான் செஞ்சி சொன்னாரு.. மணி 8 ஆகுது.. சீக்கிரம் சாப்டு நீங்க ரெண்டு பேரும் இங்கயே இருங்க.. கண்ட சிறுக்கி எல்லாம் உள்ள விடாதீங்க”
“அந்த சிறுக்கிங்கள நீங்க ஏன் கூப்பிடறீங்க ? அவங்கள ஒரு பக்கம் கூப்பிட்டு காவலுக்கு வேற நிக்கணுமா?”
“வாய கொற டி.. கற்றவன் பாவம்.. ரெண்டு பேருக்கும் கால பலகாரம் கொடுத்து அனுப்பறேன்.. பத்தரம் .. தமிழு அவளுக்கு ஒரு பொடவ எடுத்து குடுத்து ரெண்டு நகைய கழுத்துல மாட்டி விடு.. மாப்ள வீட்டுகாரங்களுக்கு மதியம் சாப்பாடு ஒரு தரம் சரி பார்த்து சொல்லிட்டு வரேன்.. மோகத்த கொஞ்சம் சிரிச்சமேனி வை”, என கூறிவிட்டு சென்றார்.
“நீங்க எல்லாம் வாய தொறக்காம போய் தான் நாங்க இந்த நிலமைல நிக்கறோம் .. அது மட்டும் உங்களுக்கு புரியமாட்டேங்குது.. “, என வினிதா வாய் விட்டே பொலம்பினாள்.
“இந்தா இத கட்டு வினி”, என நங்கை ஒரு புடவை எடுத்து கொடுத்தாள்.
“எனக்கு வேணாம் நங்க”
“கட்டு டி.. உன்ன தவிர யாரு கூடவும் எனக்கு இருக்க விருப்பம் இல்ல.. இல்லைனா பொடவ கட்டி சிங்காரிச்சி இருக்கறவள தான் துணைக்கு நிக்க சொல்வாங்க”
“என்கிட்ட தான் டி உன் வீரம் எல்லாம்.. நேத்து ராத்திரி வந்து நிச்சயமின்னு சொல்லிட்டு போறவங்க கிட்ட எதுவும் பேசிடாத.. இளிச்சவாச்சியாட்டம் நான் தானு உனக்கு கெடச்சி இருக்கேன்”
“புரிஞ்சிக்கரவங்க கிட்ட பேசலாம்.. எது சொன்னாலும் புரிஞ்சிக்க மாட்டேன்-ன்னு இருக்கரவங்க கிட்ட என்ன பேச சொல்ற? இந்தா கட்டு மொத ..” ,என தானே அவளுக்கு புடவை கட்ட ஆரம்பித்தாள்.
“இந்த வீரம் எப்ப என்னை தாண்டி வெளிய வரும் ?”, வினிதா நக்கலாக கேட்டாள்.
“இந்த வீட்ட தாண்டினா வரும்”, வெடுக்கென பதில் கொடுத்தாள் நங்கை.
“அப்போ கூட இந்த வீட்ல கடைசி வரைக்கும் வராதுன்னு சொல்ற.. கொஞ்சம் முயற்சி செஞ்சி தான் பாரேன் நங்க”
“என்ன டி என்னய பண்ண சொல்ற?”, நங்கை அலுத்தபடி கேட்டாள்.
“உனக்காக கொஞ்சம் பேசுன்னு சொல்றேன் நங்க.. கண்டிப்பா உங்கப்பன் நல்லவன கொண்டு வந்து நிறுத்தமாட்டான். அப்போ என்ன பண்ணுவ?”
“வரப்போ பாத்துக்கலாம் வினி”, என அமைதியாக கூறிவிட்டு சாப்பிட அமர்ந்தாள் வினிதாவையும் உடன் அமரவைத்து கொண்டாள்.
ஏகாம்பரம் பரபரப்பாக வாசல் நோக்கி மனைவியை அழைத்து கொண்டு சென்றார்.
இரத்தினம் முதல் காரில் இருந்து இறங்க, அடுத்த காரில் இருந்து பாண்டியும், மருதனும் இறங்கினர்.
அதற்கு அடுத்த வாகனங்களில் இருந்து பெரியவர்கள் முதல் பெண்கள் குழந்தைகள் என ஒரு பெரும் கூட்டமே இறங்கியது.
“நங்க.. இதுங்க மேலூர் கூட்டம் டி.. சும்மாவே இவனுங்க எல்லாம் ஓவரா பேசுவானுங்க. அத்தனையும் ரவுடி பயலுக.. ஒருத்தனுக்கும் மூளை வேலை செய்யாது.. இந்த ஊருலயா உங்கப்பன் போயும் போயும் மாப்ளைய பிடிக்கணும்?”, வினிதா அங்கு வந்து இறங்கிய மனிதர்களை பார்த்தே அவர்களின் குணம் முதல் பரம்பரை வரை கூறிவிட்டாள்.
“இந்த ஊர்ல இருக்கரவங்க மட்டும் ரொம்ப அறிவோ? எல்லாம் ஒண்ணு தானே”
“அடி இவளே.. நம்ம ஊர்ல பொண்ணுங்கள காலேஜ் வாசல் மிதிக்க உடறாணுங்க .. அவனுங்க ஊர்ல பத்தாவது பரீட்சை எழுத கூட விடமாட்டனுங்க டி.. இவனுங்கள வெளக்க புது வார்த்தை தான் கண்டுபிடிக்கணும் அப்படி ஒரு மூளை கெட்ட ஊரு அது..”
“ நடக்கறது நடக்கட்டும் பாக்கலாம்”, என நங்கை கூறிவிட்டு அமைதியாக அமர்ந்து விட்டாள்.
“ உங்கப்பன திட்ட கூட எனக்கு புது வார்த்தை தேவை தான் நங்க”
“நீ என்ன திட்டி என்ன ஆகிட போகுது? கம்முன்னு வந்து ஒக்காரு.. “
“இரு டி எந்த மொகரகட்ட மாப்ள-ன்னு பாக்கறேன்”
ஜன்னல் வழியாக வினிதா கண்ட வரை மாப்பிள்ளை என கூறும் தோரணத்துடன் யாரும் இருப்பதாக அவளுக்கு தெரியவில்லை. சபையில் எப்படியும் தெரிந்து விடும் என அவளும் நங்கை அருகில் சென்று அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தாள்.
“பொண்ணு எந்த ரூமுல இருக்கு ?”, என கேட்டபடி நான்கு பெண்கள் அந்த அறைக்கு வந்தனர்.
“இதான் பொண்ணா ? நம்ம ராயன விட நேரம் கம்மி தான்”, முதலில் உள்ளே வந்தவர்.
“ஆமாக்கா .. ரொம்ப ஒல்லியா வேற இருக்குது”, இன்னொருவர்.
“இதுக்கு நம்ம பானு எம்புட்டு நல்லா இருக்கும். அத விட்டுட்டு இங்க வராங்க .. என்ன தான் எங்க அண்ண அண்ணி நினைப்போ?”, என மூன்றாம் பெண்மணி கூறினார்.
இவர்கள் பேசும் விதத்திலேயே தெரிந்தது இவர்கள் மாப்பிள்ளையின் அத்தைமார்கள் என்று.
வினிதா அவர்கள் பேச்சை கேட்டு பல்லை நரநரவென கடித்து தன்னை அடக்கி கொண்டு இருந்தாள்.
“ஆமாக்கா.. எல்லாம் அண்ணி வேலையா தான் இருக்கும்.. வேணுமினே நம்ம பானுவ எடுக்காம இந்த புள்ளைய எடுக்க வந்து இருக்கு”, என மற்றவர் ஒத்து ஊதினார்.
“உனக்கு என்ன பேரு ?”
“எல்லாம் வாய்ல வர பேரு தான்.. நீங்க எல்லாம் கொஞ்சம் வெளிய இருங்க பொண்ணுக்கு பொடவை சரி பண்ணனும்”, என வினிதா பட்டெனகூறினாள்.
“மாப்ள தான் வரலியே அப்பறம் எதுக்கு சிங்காரிக்கணும்? எல்லாம் காலேஜ் படிக்கற திமுருக்கா .. பேரு நங்கையாம்.. காலைல அண்ணி சொல்லிச்சி..”
“படிச்ச பொண்ண எடுத்தா நம்ம பேச்ச எப்புடி மதிக்கும்? இந்த அண்ணனுக்கு அறிவே இல்ல .. “, முதல் வந்த பெண்மணி.
“சொல்றது மதிக்கர மாதிரி இருந்தா மதிக்கலாம்… “, வினிதா வாயிற்குள் முணுமுணுத்தாள்.
“சரி நாங்க போறோம்.. நெறமும் கம்மி, ஒடம்பும் இல்ல.. என்ன பொண்ணோ .. நம்ம ராயன இந்த பொண்ணு எப்டி சமாளிக்கும்? ரொம்ப கஷ்டம்” , என அவர்களுக்குள் பேசுவது போல சத்தமாக பேசியபடி வெளியே சென்றனர் நால்வரும்.
“இதுங்க போதும் இந்த கல்யாணத்த நிறுத்த.. நான் என் மாமன் கிட்ட விசாரிக்க சொல்றேன் இரு” , என அவர்கள் வந்த பொது எடுத்த போட்டோ அனுப்பி அவள் மாமன் வேல்முருகனுக்கு அழைத்தாள்.
“என்ன செல்லம் அதிசயமா கால் எல்லாம் பண்ற?”, என வேல்முருகன் முகம் முழுக்க சிரிப்புடன் பேசினான்.
“உன் கொஞ்சல் எல்லாம் அப்பறம் வச்சிக்க.. நான் நங்க வீட்ல இருக்கேன்”
“தெரியும் .. கேள்விபட்டேன்.. “
“மாப்ள யாருன்னு தெரியுமா?”
“தெரியும்”
“ஆளுங்க எப்படி?”
“கஷ்டம்”
“சரி அந்த வகைல பானு யாருன்னு விசாரிச்சி வை .. வந்து பேசறேன்”
“ஹே கண்ணு .. நீ சொல்றது சரி வருமா?”
“வரும் வரும்.. நான் சொல்றது பண்ணு .. உனக்கு போட்டோ அனுப்பி இருக்கேன்”
“என்ன அதிசயம் நான் கேட்டா கூட போட்டோ அனுப்பமாட்ட , நீயே இப்போ அனுப்பற”, வேல்முருகன் ஆச்சரியமாக கேட்டான்.
“எனைய வேற எதுவும் பேசவைக்காத மாமா.. அந்த குடும்ப ஆளுங்க போட்டோ.. அந்த இரத்தினம் மாப்ள வீட்டு ஆளுங்களோட வந்து இருக்காரு “, என வினிதா பொறிந்தாள்.
“சரி நான் பாத்துக்கறேன்.. நீ ஜாக்கரத .. அவனுங்க கண்ணு எல்லாமே ரொம்ப மோசமானது”
“ரொம்ப தான் அக்கறை உனக்கு”
“எனக்கு இல்லாம யாருக்கு டி அக்கறை இருக்கும்?”, என வேல்முருகன் சிரித்தபடி கேட்டான்.
:சரி நான் அப்பறம் பேசறேன்”, என வைத்துவிட்டு நங்கை அருகில் வந்து அமர்ந்து கொண்டாள்.
“யாரு டி ஃபோன் ல?”
“உங்கண்ணன் தான்”, என கூறியதும் இருவரும் சிரித்தனர்.
நங்கை நிறம் இல்ல…ஒல்லியா இருக்காள்னு உங்க நொண்ணன் நொண்ணி கிட்ட சொல்ல வேண்டியது தானே. அத விட்டுட்டு நங்கை கிட்ட பொலம்பிட்டு இருக்கீங்க. ஆளுங்களும் மூஞ்சியும்.
நீ கவலைப்படாத நங்கை நம்ம வர்மன் இருக்க பயமேன்.
இந்த மூணு டிக்கெட்டே வெச்சே கல்யாணத்தை நிப்பாட்டிடலாம்🤭🤭🤭🤭🤭