Loading

நிமல் ரகுவை அடித்து துவைத்து ஊருக்கு வெளியில் தனித்து விடப்பட்ட காட்டிற்கு நடுவே உள்ள குடோனில் இருந்த அறையில் அடைத்து வைத்தான். (எல்லா கதைலையும் வருமே அதே குடோன் தான். ரகு கதையை முடிக்க ஒரு வாரம் வாடகைக்கு வாங்கிட்டு வந்தேன்.😁) 

நிமலின் அடியில் மயங்கி இருந்தவன், மயக்கம் தெளிந்து எழுந்து பார்க்க சுற்றிலும் இருள் மட்டுமே அவனுக்கு தெரிந்தது. மெல்ல மெல்ல வெளிச்சம் பரவ அவன் இருந்த அறையை சுற்றி பார்த்தவன் மிரண்டு தான் போனான்.

ஒருவர் மட்டுமே இருக்க முடியும் சிறிய அளவிலான அந்த அறையில் அவனை சுற்றி பணம் கட்டு கட்டாய் அடுக்க பட்டிருந்தது. முதலில் மிரண்ட ரகு அத்தனை அடி வாங்கி இருந்தாலும் பணத்தை பார்த்ததும் மதி மங்கி எப்படியாவது அனைத்து பணத்தையும் எடுத்து கொண்டு இங்கிருந்து வெளியேற வேண்டும் என்று தான் நினைத்தான். பணத்தினை எடுத்து தழுவி வாசம் பிடித்தவன் சுற்றி சுற்றி தேட அங்கிருந்து செல்ல வழியே இல்லை. பலம் இருக்கும் மட்டும் தப்பிக்க வழி தேடிட பாவம் அவனுக்கு விழி பிதுங்கியது தான் மிச்சம். (சும்மாவா பிளான் போட்டது யாரு நம்ம ஹீரோ ஆச்சே😍)

நேரம் ஆக ஆக சோர்ந்து போனானே ஒழிய அப்போதும் பணத்தை கட்டிபிடித்து கொண்டு தான் இருந்தான். அவன் ஆசையே அவனின் உயிரை சிறிது சிறிதாக குடிக்கத் துவங்கியது. இதை தானே நிமல் நடத்த நினைத்தான். அதன் படியே அனைத்தும் நடந்தது. இதில் பியூட்டி என்னவென்றால் நிமலின் கைவண்ணத்தில் கிடைத்த பரிசுகள் அனைத்தும் ரணரணமாய் வலித்தது ரகுவிற்கு. வலியில் கதற முடிந்ததே தவிர வேறு ஒன்றும் அவனால் செய்ய முடியவில்லை.. அன்றைய நாளும் முடிந்திட பசியும் தாகமும் அவனை முழுதாய் வாட்டி எடுத்தது. அவனை சுற்றி அவன் விரும்பிய பணம், அதுவும் அளவுக்குஅதிகமாய்…. அப்படி இருந்தபோதிலும் அவனுக்கு தேவையான எதுவும் கிடைக்கவில்லை.

 

இதோ நிமல் அந்த அறையில் அவனை அடைத்து வைத்து இன்றோடு மூன்று இரவு ஆகி விட்டது. பசி பட்டினியால் வாடி உடல் மெலிந்து ரகுவின் உயிர் உடலை விட்டு பிரிய காத்துக் கொண்டிருந்தது. அடுத்த இரு நொடிகளில் உயிரும் உடலும் தனித்தனியே பிரிந்தது.

 

பணம் மட்டுமே போதும் என்ற ரகுவின் உயிர் அந்த பணத்தோடே போய் சேர்ந்தது. 

 

என்றும் தீங்கான எண்ணங்கள் உயர்ந்ததே கிடையாது… நல்வழியில் வேர்வை சிந்தி சம்பாதித்த ஒரு ருபாய் கூட ஒரு கோடிக்கு சமமாம். ஆனால் தீய வழியில் சேர்க்கும் எத்தனை கோடியாய் இருந்தாலும் அது நல்வழியில் கிடைத்த அந்த ஒரு ருபாய்க்கு ஈடாகாதாம் என்று பட்டு திருந்தியவனுக்கு வேண்டும் என்றால் தெரியுமே தவிர, ரகுவை போன்றோருக்கு கடைசி வரை தெரியவே தெரியாது. ரகுவின் இந்நிலைக்கு அவன் மட்டுமே தான் காரணம். அவன் செய்த பாவத்தின் பலன் அவன் விரும்பியது மூலமே கிடைத்தும் விட்டது.

 

இனியாவது நிமல் நேத்ரா நல்லபடி வாழட்டும்.

இந்த சித்து சித்துனு ஒரு கேரக்டர் சுத்திட்டு இருந்துச்சி அது எங்க போச்சு??????? 

வாங்க போகலாம்…..

 

மருத்துவமனையில்,

சரணிடம் புலம்பிக் கொண்டிருந்தாள் நேத்ரா… அவளின் தவறான முடிவு தான் நிமலின் கோபத்திற்கு காரணம் என்று எவ்வளவு சொல்லியும் நேத்ரா அமைதியாகவில்லை. நம்ம ரோபோ சங்கர் சொல்வாரே…… அன்னிக்கு காலைல ஆறு மணி கோழி கொக்கரக்கோனு கூவிச்சு… அந்த மாதிரி சரண் என்ன சொல்லி சமாதானப் படுத்தினாலும் ஏண்டா சரண் நிமல் என்கூட பேசவே இல்ல… என்று சைகையில் மீண்டும் மீண்டும் ஆரம்பிக்க, சரண் தான் நொந்து போனான். ஒரு கட்டத்திற்கு மேல் முடியாமல் ” பாவி பாவி” நீ என்னடி தேன்ஞ்சி போன ரெக்கார்டு மாதிரி சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லிட்டு இருக்க…. இப்போ என்ன உன் புருசன் உன் கூட பேசணும் அதானே.. என்று கேட்க….. வேக வேகமாக தலையை ஆட்டினாள் நேத்ரா… 

வேகமாய் ஆட்டிய அவள் தலையிலேயே நங் நங் என்று கொட்டியவன், காலைல வீட்டுக்கு போய் நல்லா பேசிக்கோ… தயவு செஞ்சு இப்போ அமைதியா படுத்து தூங்கு.. என்று அவளின் தலை முடி வருடி தூங்கவும் வைத்தான்.

மறுநாள் காலையில் நேத்ராவை அழைத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தான் சரண். நிமலின் அம்மா ஆரத்தி எடுத்து அவளை உள்ளே அழைத்து வந்தவர்… ஆரத்தழுவி அன்பு மழையே பொழிந்து விட்டார். கூடவே நிமலின் அப்பாவும். புகழ் தான் முறைத்துக் கொண்டு நின்றிருந்தாள். அவளுக்கும் நேத்ரா மீது அதிக கோபம் தான்…. இருந்தும் அவளின் கெஞ்சலில் அவளும் நேத்ராவை அணைத்து அழுதே விட்டாள். 

ஆனால் அணைத்து, கொஞ்சி முத்தமழை பொழிய வேண்டிய நிமலன் அந்த இடத்திலேயே இல்லை என்பது தான் மிகப் பெரிய ஆச்சர்யம்….. எல்லோரின் அன்பும் பாசமும் நேத்ராவிற்க்கு ஆனந்தமாய் இருந்தாலும், தன்னவனின் பார்வை கூட இன்னும் கிடைக்க வில்லையே, அவன் தன் மேல் அவ்வளவு கோபமாக இருக்கிறானா என்று மிகவும் வருந்தினாள். அவள் வருந்துவது தெரிந்தாலும் யாரும் எதுவும் கண்டு கொள்ளவில்லை.

கீழேயே அமர்ந்து பேசினாலும் நொடிக்கு ஒருமுறை வீட்டின் மூலை முடுக்கெல்லாம் அவனைத் தான் நேத்ராவின் கண்கள் தேடியது. நேரம் கடந்ததே தவிர அவன் வரவே இல்லை. சோர்ந்த முகமாய் சரண் முகம் பார்க்க, உனக்கு இதெல்லாம் தேவை தான் என்பதை போல பார்த்து சிரித்தவன், 

சரி நேரா….. நீ உன் ரூம்க்கு போய் கொஞ்சம் ரெஸ்ட் எடு…. அப்புறம் பேசிக்கலாம் என்று அவளை அவளின் அறைக்கு அனுப்பி வைத்தான்.

அவள் அறைக்குள் சென்ற சில நொடிகளில் நிமல் என்ற நேத்ராவின் அதீதகதறல் தான் கேட்டது.

அறை உள்ளே நுழைந்த நேத்ரா கண்டது கண்கள் சிவந்து கோபத்துடன் முகம் இறுகி அமர்ந்திருந்த நிமலை தான். அவனை கண்டதும் நேத்ராவிற்க்கு உடல் நடுங்க ஆரம்பித்தாலும் வெளிக் காட்டாது நின்றிருக்க, அவளை ஏறிட்டு பார்த்த நிமல், ஒவ்வொரு வார்த்தையையும் ஏமாற்றத்தோடும் வலியோடும் பேச ஆரம்பித்தான்.

என்னை….. வேணாம்னு விட்டுட்டு போகனும்னு உன்னால எப்பிடிடி நினைக்க முடிஞ்சது, ஆங்… 

என் மேல கொஞ்சமாவது காதல் இருந்திருந்தா நீ என்ன விட்டு போகனும்னு நினச்சிருப்பயா…… எவ்வளவு பெரிய முடிவு எடுத்திருக்க நீ…

அப்போ என் மேல காதலே இல்ல, அப்படித்தானே. 

நான் உன்ன நம்பினேன் தெரியுமா…. என்ன விட்டு பிரிஞ்சி போனப்போ கூட, எப்படியும் நீ வந்திடுவனு நினைச்சிட்டு உனக்காகவே காத்திருந்தேன்….

ஆனா நீ என்ன கொஞ்சம் கூட நம்பாம, என்னால எந்த பிரச்சனையையும் தீர்க்க முடியாதுனு முடிவு பண்ணி தானே தற்கொலை பண்ண. நீ என்ன புரிஞ்சுக்கிட்டது அவ்வளவு தான் இல்ல….

போதும் டி என்னால முடியல, என் காதலை மறுபடியும் மறுபடியும் நீ விட்டுட்டு போகும் போது சத்தியமா என்னால அந்த வேதனைய அனுபவிக்க முடியல.

இப்போ சொல்லுறேன் எப்போ நீ தற்கொலை செய்ய முடிவெடுத்தயோ அதுக்கப்புறம் நானும் என் காதலும் இருந்து என்ன பிரயோஜனம், இப்போவே என்னோட முடிவ நான் தேடிக்கிறேன்….. என் காதல் என்னோடே போகட்டும்….

லவ் யூ அம்மு…………. என்று விறுவிறுவென போனவன் அருகிலிருந்த அறைக்குள் நுழைந்து கொண்டான்.

அவன் சொன்ன வார்த்தைகளிலே தான் எடுத்த முடிவு நிமலை எவ்வளவு காயப் படுத்தியிருக்கும் என்று நினைத்தவள், அவன் சொன்ன இறுதி வார்த்தையில் உறைந்து நின்று விட்டாள். அவன் அறையை விட்டுச் சென்றது கூட நினைவில்லாமல் நின்றிருக்க சில நிமிடங்கள் கழித்து தான் தன்னிலை அடைந்தால், அறையை சுற்றி முற்றி தேடி வெளியில் ஓடி வந்தவள் அடுத்த அறையை பார்க்க, அங்கே ஒரு கையில் கத்தியும் மறுகையில் இரத்தமுமாய் மயங்கிக் கிடந்தான் நிமல். 

அவனின் அந்நிலையை கண்ட நேத்ராவிற்க்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கிட, தொண்டை அடைத்த அடுத்த நொடி கத்தினாள் நிமல்…… என்று. தன்னால் தான் நிமல் இப்படி செய்தான என்று நினைத்து தேம்பி தேம்பி அழுதவள் அவளின் அழைப்பை கூட அறியவில்லை. 

ஆனால் அவள் அழைத்த அடுத்த கணம் நிமலின் மிக இறுகிய அணைப்பில் இருந்தாள் நேத்ரா. அவளை தன் பலம் கொண்டு அணைத்திருந்தான் நிமல். நொடிக்கு நொடி இறுக்கம் அதிகரித்துக் கொண்டு தான் இருந்தது. அவனின் கோபம், ஏக்கம், காதல் என அனைத்தையும் அணைப்பினில் வெளிப்படுத்தியவன் கண்களிலும் கண்ணீர் தான் வழிந்து கொண்டிருந்தது. 

 

அன்பே என் அன்பே உன் விழி பார்க்க

இத்தனை நாளாய் தவித்தேன்

கனவே கனவே கண் உறங்காமல்

உலகம் முழுதாய் மறந்தேன்

கண்ணில் சுடும் வெயில்காலம் உன்

நெஞ்சில் குளிர் பனிக்காலம்

அன்பில் அடை மழைக்காலம் இனி

அருகினில் வசப்படும் சுகம் சுகம் 

விழி திறந்து பார்த்த நேத்ராவின் விழிகளில் மீண்டும் நிமல் தன்னை தொலைத்திட இதமாய் இறங்கினான் இதழ் முத்தத்தில். தன் காதல் மொத்தமும் தன் கைகளுக்கு கிடைத்து விட்ட மகிழ்ச்சி நெடு நேரம் நீடிக்க, இதழணைப்பு இனியதொரு இல்லறமாய் நீண்டது…..

உண்மையில் நிமல் கைகளை வெட்டிக் கொள்ளவே இல்லை. அதிர்ச்சியில் சில நேரங்களில் பேச்சு வர வாய்ப்பிருக்கிறது என்ற மருத்துவரின் அறிவுரை படி சில ஏடா கூட வேலையை நிமலும் சரணும் செய்ய, அது சரியாய் வேலையும் செய்தது. நேத்ராவை அறைக்கு அனுப்பி வைத்ததும் எல்லோரும் கோவிலுக்கு சென்றிருந்ததால் நடந்தவை அனைத்தும் யாருக்கும் தெரியாது. நிமல் கூறிய வார்த்தைகள் அனைத்தும் அவனின் மனதிலிருந்து வந்தவை தான். உண்மை தானே அவனின் ஆழ்மனதின் வலிகள் தந்த வேதனைகள் கொஞ்சமா என்ன….

அனைத்திற்கும் மருந்தாய் இன்று அவன் காதல் அவன் கைகளில்….. அவளின் மை விழிகளில் மயங்கிக் கொண்டிருந்தான் நேத்ராவின் நிமல்….

காதல் கைகளில் கிடைத்த மகிழ்ச்சி இருவர் உள்ளத்தையும் தழுவ, இதுவரை இருந்த அனைத்து மன பாரங்களும் நொடியில் காணாமல் போனது நிமலிற்கும் நேத்ராவிற்க்கும்.

வாழ்வில் துன்பம், தடைகள் என எது வந்தாலும் முதலில் அதை தன்னவர்களுடன் பகிர்ந்தாலே போதும், அதற்கான தீர்வு கிடைத்துவிடும். இதை அறியா வரை எல்லோரும் நீதிமன்றங்களையும் தற்கொலையைத்தான் நாட வேண்டி வரும்.எத்தனை ஆயிரம் சஞ்சலங்கள் என்றாலும் நம்மவர்களின் ஒரு நிமிட அன்பான அரவணைப்பு போதும் எதையும் சந்திக்கலாமே. அதை விட்டு தீர்வு தீர்வு என்று தேடி என்ன செய்ய. சிறிது நேரம் துணையிடம் மனம் திறந்து பேசி பாருங்கள் போதும் வாழ்வில் எவ்வளவு பெரிய பிரச்சனையையும் தீர்த்து விடலாம். 

ஒரு நிகழ்வில் நான் கண்ட ஒரு உண்மை தான் இது.

இன்று அவசர கதியில் திருமணம் செய்து கொண்டோர் எல்லாம் பிரிந்து செல்வதற்கு முதற் காரணமே ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளா தன்மை தான். தன்னவர்களை பற்றி தெரிந்து கொண்ட எவரும் வீண் வாதம் புரிய மாட்டார்கள்…. ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்து போவார்களே தவிர, விட்டு விட்டு போக மாட்டார்கள். இன்றும் எத்தனையோ தொண்ணுறை தொட்ட தம்பதிகளும் இதே உலகில் சேர்ந்து வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். காரணம் அவர்களின் புரிதல் தான். தாத்தா கண்ணை காட்டினால் போதும், சேதி என்னவென பாட்டி அறிந்து விடுவார். அவர்களின் அன்பும் புரிதலும் தான் சாட்சி அவர்கள் வாழ்ந்த வாழ்க்கைக்கு. ஆனால் இன்றைய நிலையில் திருமணமான பலர் பிரிந்து தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இதை மாற்ற அவர்கள் நினைத்தால் மட்டுமே முடியும்.

நிமல் நேத்ரா கதையும் அப்படித்தான்.

நேத்ராவிடம் அளவுக்கு அதிகமாக காதல் இருந்தது, ஆனால் நிமலின் மேல் புரிதல் இல்லாமல் போனது. மனம் திறந்து அவளது கஷ்டங்களை கூறியிருந்தால் அப்போவே தோள் சாய்த்து தேற்றியிருப்பான். என்னை விட்டு அவன் எப்படி இருப்பான் என்ற புரிதல் இருந்திருந்தால் தவறாய் பிரிந்து செல்லவும், தற்கொலை செய்யவும் முடிவெடுத்திருக்க மாட்டாள். வீணாய் இரண்டு வருட பிரிவும் இருந்திருக்காது ஒருவரின் இறப்பும் இருந்திருக்காது. இதோ அவளின் மூலமே அவளின் தவறை எல்லாம் உணர்த்தி தன் காதலை மீண்டும் முழுதாய் பெற்றுவிட்டான் நிமல்.

காதலன் கைகளில் தன் முழு மனத்தையும் ஒப்புவித்து அவனின் அம்முவாய் மாறி போயிருந்தாள் நேத்ரா. இனி ஒரு காலமும் தான் செய்த தவறை மீண்டும் செய்ய மாட்டேன் என்று காதல் கொண்ட விழிகளுடன் அவன் முகம் பார்த்திருந்தாள் நேத்ரா.

நீண்டு கொண்டே சென்றாலும் திகட்டாத தெவிட்டாத அவனின் காதல் பார்வையில் அவளின் விழிகளில் காதல் வெட்கம் மையாய் பூசிக் கொள்ள, மீண்டும் மயங்கினான் அவளின் மை விழியிரண்டில்…

 

மருத்துவமனையில்,

 

தலையில் அடிபட்டு சேர்க்க பட்டிருந்த சித்துவின் நிலை அவள் செய்த பாவங்களின் பயனாய் அமைந்து போனது. கண்ணாடி டேபிளின் கூரிய முனை குத்தியதால் காயம் வெகு ஆழமாய் பட்டிருந்தது. காயம் சிகிச்சையில் குணமாகி இருந்தாலும் அவளின் நினைவுகள் அனைத்தும் அழிந்து போனது. பிறந்த குழந்தை போல் எதுவும் தெரியாமல் இருந்தவளின் நிலையை கண்ட பெற்றோருக்கு தான் மனம் தாளவில்லை, கூடவே என்றும் நாம் செய்த செயல் நம்மை மட்டும் அல்ல நம்மை சுற்றி இருப்போரையும் தான் வருத்துகிறது என்பதை புரிந்து கொண்ட அவர்கள் இனியாவது நல்ல குணநலன்களை சொல்லவேண்டும் என்று நினைத்து கொண்டார்கள். முதலிலேயே நற்பண்புகளை சொல்லிக்கொடுத்திருந்தால் இப்படி ஒரு நிலமை சித்துவிற்க்கு வந்திருக்காது பாவம்… என்ன செய்ய சிலருக்கு பட்டால் தானே புத்தி வரும்.

நிமல் வீட்டில் மாலை வேளையில் தான் எல்லோரும் வீட்டிற்க்கு வந்தனர். வந்தவர்களுக்கு ஆனந்த அதிர்ச்சியாய் ஓடி வந்து அன்பாய் பேசினாள் நேத்ரா…

அத்தை மாமா புகழ் என இதுநாள் வரை தன்னுள் தேக்கி வைத்த வார்த்தைகள் அனைத்தையும் கண்ணீருடன் அவர்களிடம் கொட்டிக் கொண்டிருந்தாள் நேத்ரா.

இறுதியாய் சரணை நோக்கி திரும்பியவள் கண்களில் தான் அத்தனை மகிழ்ச்சி…..

வாய் திறந்து அவள் அவனிடம் கூறிய வார்த்தையில் மொத்தமாய் ஆனந்தமானான் சரண்.

அன்பு காட்டி, சண்டையிட்ட உயிர் நண்பன். உனக்காக நான் இருக்கிறேன் என்ற அன்பு சகோதரன்.. இன்னும் ஆயிரம் அவளுக்கு. தான் கண்ட அத்தனை வேதனையையும் போக்கிய உறவாய் வந்தவனை எப்பிடி அழைப்பாள். 

கண்கள் மின்ன ஆனந்த பெருக்கில் நேத்ரா அழைத்த வார்த்தைக்கு அவ்வளவு மகிமை……..

“அப்பா” என்ற கூவலுடன் அணைத்துக் கொண்டவள், கண்ணீரில் அன்பை வெளிப்படுத்த… அப்படி அழைப்பாள் என்று எதிர் பார்க்காத சரணும் அதிர்ந்து கண்ணீரே விட்டு விட்டான்….

 

புறம் பேசி புண்படுத்தும் 

உறவுகளில்

புதிது பேசி ஆனந்தபடுத்தும்

உறவுகள்

கிடைத்தால்

வாழ்வில் அனைத்து வசமே…. 

என்றும்

அன்பெனும் பூவினில் 

வீசும் வாசமே…….

 

காலை 10.30 மணி… அந்த கல்யாண மண்டபம் முழுதும் அலைமோதும் கூட்டத்துடன் காணப்பட்டது. அனைவரும் பரபரப்புடன் காணப்பட, இரு ஜீவன்கள் மட்டும் தனக்கென்ன வந்தது என ஓரமாய் நின்று தீர்ந்து போன ஐஸ் கிரீமை தோண்டி தோண்டி சாப்பிட்டு கொண்டிருந்தது. அவர்கள் வேறு யாரும் இல்லை நம் நேத்ராவும் சரணும் தான். போட்டி போட்டு இருவரும் சாப்பிட்டு கொண்டிருக்க, 

நாளியாயிடுத்து சீக்கிரம் பொண்ணை அழச்சுண்டு வாங்கோ என்று ஐயர் ஒருபுறம் சத்தம் போட்டுக் கொண்டிருந்தார். அறையில் சென்று பார்க்க மணப்பெண்ணை காணவில்லை…. புகழும் எல்லா இடத்திலும் தேட…. சாவகாசமாக கையில் ஐஸ் கிரீம் டப்பாவை வைத்துக் கொண்டு பேசிய படி நடந்து வந்து கொண்டிருந்தனர்… நேரா மற்றும் சரண்….

அடேய் இன்னிக்கி அவளுக்கு கல்யாணம் டா…. இப்பிடி அவ கூட சேர்ந்து நீயும் லூட்டி அடிச்சுக்கிட்டு இருக்க.. சீக்கிரம் அவளை கூட்டிகிட்டு வாடா என்று அதி தீவிர மரியாதையுடன் அழைத்தது புகழ் தான்… வேறு யாரை… நம் சரணை தான்.

ஆம்… இன்று நிமலன் நேத்ரா இருவருக்கும் திருமணம். இருவருக்கும் மீண்டும் திருமணம் செய்து வைத்தால் பிரச்சனை தீரும் என்று ஜோசியர் கூற இதோ ஒரே வாரத்தில் ஊர் கூடி உறவுகள் வாழ்த்த… மீண்டும் ஓர் திருமணம்.

ஏற்கனவே நடந்தது தான் என்றாலும் மீண்டும் ஒருமுறை தன்னவனின் கைகளில் மாங்கல்யம் சூடிட ஆசை கொண்ட நேத்ரா ஆனந்தமாய் இருந்தாலும்.. ஏனோ பதட்டமாகவும் இருந்தாள். அவளின் பதட்டத்தை போக்க தான் இந்த ஐஸ் கிரீம் டிரீட்மெண்ட். 

அவசர அவசரமாக மேடை நோக்கி ஓடிய சரண் நிமலின் அவதாரத்தில் ஐம்புலன்களையும் அடக்கி அவனின் அருகில் ஒன்றும் அறியா பிள்ளை போல நின்று கொண்டான். எல்லோரும் பொண்ணு எங்கே… பொண்ணு எங்கே என்று காக்க வைத்த பின்னரே….. மங்கள பட்டு சரசரக்க.. பொன் ஆபரணம் பூட்டி…மல்லிகை மணம் பரப்பி தன் மன்னவனின் கைகோர்த்து அமர்ந்தாள் நேத்ரா. 

கெட்டிமேளம் கொட்டி உறவினர் அட்சதை தூவ மஞ்சள் பூசி, கண்ணுக்கு மையிட்டு தன்னை மயக்கும் மங்கையவளின் கழுத்தில் மங்கள நாண் பூட்டி மீண்டும் தன் மனைவியாய் ஏற்றுக் கொண்டான் நிமலன்.

அளவற்ற ஆனந்தத்தில் சுற்றிலும் அன்பு கொண்ட உள்ளம் நிறைந்திருக்க… ஆசைக் கணவனை அன்பாய் விழி உயர்த்தி பார்த்தவளிடம்…….

 

மயங்கினேன் மை விழியிரண்டில் என, அவள் மை விழிகளில் முத்தமிட்டான் அவளின் காதல் கணவன்.

 

 

                 நிமலன் ❤️ நேத்ரா

 

 

இனி அவர்கள் வாழ்வில் அனைத்தும் ஆனந்தமாய் அமையும் என்று வாழ்த்தி நாமும் விடை பெறுவோம்….

 

 

🙏🙏🙏💖💖💖💖💖சுபம்.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்