
தேவா கேட்ட கேள்வியில் அம்மு என்ன சொல்வதென்று புரியாமல் நிற்க, தேவா விடாமல், “அவனை எதுக்கு நீ பார்க்குற? என்ன அவன் மேல உனக்குப் பரிதாபமா? தேவையில்லாம அவனை டீஸ் பண்ணுன!”
“யாரு சொன்னா பரிதாபம்ன்னு? உன் ஃப்ரெண்ட் பொம்பளை பிள்ளை மாதிரி உன்கிட்ட வந்து கம்பளைண்ட் பண்ணானாக்கும்? தைரியம் இருந்தா அவனை வந்து கேட்கச் சொல்லு. நான் அவனுக்குப் பதில் சொல்லிக்கிறேன்.” என்றாள் கோபமாக.
ஆரு “அம்மு என்ன நடக்குது இங்க?” என்று புரியாமல் கேட்க, தமி “அது ஒண்ணும் இல்லடி. மேடம் அந்தப் பச்சை மண்ணை லவ் பண்றாங்க…
அதுக்கு ‘சார்’ இந்த ‘சார்’ கிட்ட புகார் குடுத்து, இந்த ‘சார்’ நம்ம கிட்ட வந்து கேட்குறாரு” என்றதும்,
ஆரு ‘இது வேறயா?’ என்றெண்ணி தேவாவை பார்க்க, அவன் அம்முவை முறைத்துக் கொண்டிருந்ததில் அவளுக்குச் சிரிப்பு தான் வந்தது.
தேவா மேலும் ஏதோ கூற வர ஆராதனா, “அடடா! இது அவங்க ரெண்டு பேருக்கு உள்ள பிரச்சனை. இதைப் பத்தி அவங்களே பேசிக்கட்டும்…” என்றதும்,
தேவா “ப்ச்… என்ன தெரியும் உங்களுக்கு, லவ் பண்றேன்னு சொல்றதுக்கு ஹான்? ஏற்கனவே உங்க ஃப்ரெண்ட் எங்க நிம்மதியை கெடுத்தது பத்தாதா? லவ் பண்றாளாம் லவ்வு… லவ் பண்றதும், அப்பறம் கூப்பிட்டு வச்சு அசிங்கப்படுத்துறதும் உங்களுக்கு விளையாட்டா போச்சா? இன்னொரு தடவை அவனை டீஸ் பண்ணுன, அறைஞ்சு பல்லைக் கழட்டிடுவேன்!” என்று கையை ஓங்கி மிரட்டி, தீப்பொறி பறக்கப் பேசியவனைக் கண்டு அம்மு திகைத்துப் பார்க்க, வைஷூ அவன் பேசியதில் கண் கலங்கினாள்.
ஆராதனா, அவன் சென்ற திசையையே இதழில் மலர்ந்த சிறு சிரிப்புடன் பார்த்து, ‘ஃப்ரெண்ட லவ் பண்றேன்னு சொன்னதுக்கே இந்தக் குதி குதிக்கிறானே… அவனை லவ் பண்றேன்னு சொன்னா கொலையே பண்ணிடுவானோ?’ என்று அவள் அறியாமல் கற்பனை குதிரை எங்கெங்கோ தறிக் கெட்டு ஓட, அப்போது தான் தன் எண்ணம் செல்லும் பாதையை அறிந்து, நெஞ்சம் சில்லென ஒரு உணர்வைக் கொடுத்ததை கண்டு திடுக்கிட்டாள்.
‘ஓ காட் இந்த அடியேனுக்கு நல்ல புத்தியை குடு. ஊருக்குள் போறதுக்குள்ள இவன் கிட்ட செருப்படி வாங்கிட்டு போகாம இருந்தா சரி!’ எனத் தனக்குள் புலம்பிக் கொண்டிருக்க, அருண் அங்கு வந்தான்.
“சாரி அம்மு! அவன், விஷ்வா ஃபீல் பண்ணுனான்னு கடுப்புல பேசிட்டான்” என்றதும், அவள் “நான் என்ன விளையாட்டுக்கா இப்படி பண்றேன். நான் பார்த்தா அவனுக்குப் பிடிக்கலையா? அதை டைரக்ட்டா என்கிட்டே சொல்ல வேண்டியது தான? எதுக்கு இப்படி இவனை விட்டுத் திட்ட விடுறான்.” என்றவளுக்கு கண்ணிலிருந்து நீர் வழிந்தது, விஷ்வாவுக்கு தன்னை பிடிக்கவில்லையென நினைத்து.
ஆரு, “அம்மு! என்ன இது சின்னப் பிள்ளை மாதிரி அழுது கிட்டு… உனக்கு உண்மையிலேயே அவனைப் பிடிச்சிருக்கா?” எனக் கேட்டாள் கூர்மையாக. “நான் என்ன பொய்யா சொல்றேன்? உண்மையிலேயே நான் அவனை லவ் பண்றேன்…” என்று தலையில் அடித்து சத்தியம் செய்யாத குறையாகச் கூறிட,
தமி “அருண், இதெல்லாம் ரொம்ப ஓவர். விஷ்வா கூட நாங்க இங்க வந்தப்போ, இவளைப் பார்த்துக்கிட்டே தான இருந்தான். இப்போ என்னமோ இவன் வந்து திட்டிட்டு போறான்…” என்றாள் கடுப்பாக.
அருண், “தேவா கேட்டதை தான் நானும் கேட்கிறேன். அவனைப் பத்தி என்ன தெரியும்ன்னு லவ் பண்றேன்னு சொல்ற அம்மு?” என்றதும் ஆரு, “சரி டா ஒண்ணுமே தெரியாது தான். நீயாவது சொல்லித்தொலை. சொன்னா தான தெரியும்?” என்று கடுப்படித்தாள்.
அருண் மெலிதாய் புன்னகைத்து, “அவன் ஒரு பேபி ஆரு. எனக்கும் நிஷாந்த்க்கும் ஆசிரமம் வரும்போது விவரம் தெரியாது. எங்க அம்மா அப்பா யாருன்னு கூட எங்களுக்குத் தெரியாது. ரெண்டு வயசுல ஏதோ ஒரு குப்பை தொட்டில கிடந்தேன்னு என்னை அங்க தூக்கிட்டு போனாங்க. ஆனால் விஷ்வாவும் தேவாவும் அப்படி இல்ல. அவனுங்க அங்க வரும் போது 8 வயசு. அதுவரை அப்பா அம்மான்னு எல்லா சொந்தத்தோடையும் வாழ்ந்துட்டு வந்து திடீர்னு அதெல்லாம் உனக்கு இல்ல… நீ அனாதைன்னு சொன்னா எப்படி இருக்கும், அதுவும் ஒரு சின்னப் பையன் கிட்ட? விஷ்வாவுக்கு 8 வயசா இருந்தாக் கூட அவன் அங்க வரும்போது அழுதுகிட்டே தான் வந்தான். அவன் பிறந்ததும் அவனோட அப்பா வேற பொண்ணு கூட ஓடிப் போய்ட்டாரு. அவனுக்கு எல்லாமே அவங்க அம்மா தான். எப்போவும் அவங்க முந்தானையை பிடிச்சுகிட்டு தான் திரியுவான்.
ஒரு நாள் கடைக்குப் போகும்போது, ஏதோ ஒரு கார்க்காரன் அவங்களை அடிச்சு போட்டுட்டு நிக்காம போய்ட்டான். கண் முன்னாடி அம்மா செத்து கிடைக்கிறது கூடத் தெரியாம, ரொம்ப நேரம் ரோட்லையே அழுதுட்டு இருந்துருக்கான். அப்பறம் தான் அவன் சொந்தம் பந்தம்லாம் வந்து அவங்க அம்மாவை அடக்கம் பண்ணாங்க.
ஆனால், அவங்களை அடக்கம் பண்ணி ஒரு மணி நேரத்துல அவனை அனாதை ஆஷ்ரமத்துல விட்டுட்டாங்க. அம்மா இறந்துட்டாங்கன்னு உணரக் கூட, அவனுக்கு டைம் கொடுக்கல. அப்போ எங்களுக்கும் அதே வயசு தான். அவன் அம்மா இல்லைன்னு அழுகும்போது, இதுக்கு எதுக்கு அழுகுறான்னு தான் தோணும்.
ஏன்னா! நாங்க அந்த உறவைப் பார்த்ததும் இல்லை, அம்மா இருந்தா எப்படி இருக்கும்னு கூட எங்களுக்குத் தெரியாது… தேவாவும் எங்க கிட்ட பேசவே மாட்டான்.” என்றவன், அவன் இவர்களிடம் நண்பன் ஆனதை பற்றியும், இப்போது வரை விஷ்வாவின் குழந்தை மனதை பற்றியும், அம்மு பற்றித் தேவாவிடம் பேசியது வரை கூறியவன்,
அம்முவிடம், “அவன் சும்மா ஜாலியா பேசுவான் அம்மு அவ்ளோ தான். மத்த படி அவனுக்கு சரியா கோபப்பட கூடத் தெரியாது. ஆனால் அவனுக்கு தேவா தான் உயிர். அவனுக்கு என்ன கஷ்டமா இருந்தாலும் அவனோட ஒரே ஆறுதல் அவன் மட்டும் தான். தேவா திட்டினாலும் அடிச்சாலும் திரும்பி அவன் கிட்ட தான் வந்து நிற்பான். விஷ்வா மனசை புரிஞ்சுக்க கூடிய ஒரே ஆள் அவன் தான்.
விஷ்வாவுக்கு உன்னைப் பிடிச்சிருக்கு. ஆனால், அவனுக்கு அதை உணர தான் தெரியல. அதான் தேவா அவன சாமாதனப்படுத்தி உன்கிட்ட கேஷுவலாகப் பேசச் சொன்னான்… உன்கிட்ட பேசுனா நீ கண்டிப்பா அவனை அவனுக்கு உணர்த்துவன்னு நினைச்சான்…” என்று சொல்லி முடிக்க, நான்கு பேரின் கண்களும் கண்ணீரில் நிறைந்திருந்தது. வைஷுவிற்கு ஏற்கனவே இதெல்லாம் தெரியும் என்றாலும், மீண்டும் மீண்டும் மனம் காயப்படவே செய்தது.
அம்முவிற்கு, விஷ்வாவின் ஏக்கம் மனதை பிசைய, அவனுக்கு அனைத்துமாகத் தானே இருக்க வேண்டும் என மனம் அடித்துக் கொண்டது.
அதே நேரம், நால்வரும் அவர்களின் நட்பின் பிணைப்பைக் கண்டு ஆச்சர்யப்படவும் தவறவில்லை.
தமி, “ரொம்ப கஷ்டமா இருந்துருக்கும்ல ஆசிரமம்ல இருந்தது…” என்று கேட்டவளுக்கு அவன் கூறிய ‘அம்மா இருந்தால் எப்படி இருக்கும்ன்னு கூட எங்களுக்குத் தெரியாது’ என்ற வாசகம் இதயத்தில் ஆழமான காயத்தைக் கொடுத்தது.
“பழகிடுச்சு… ஒருவேளை அங்க இல்லாம இருந்திருந்தா மூணு ஃப்ரெண்ட்ஸ மிஸ் பண்ணிருப்பேன்.” என்றான் தலையைச் சாய்த்து. அவள், அவனின் நேர்மறை எண்ணத்தில் கீற்று புன்னகையை வழங்க…
ஆரு, “அம்மு அவனுக்குப் புரிய வைக்கணும்னு நினைச்சா? தேவா ஏன் இப்போ மிரட்டிட்டு போறான்?” என்று தொண்டையை அடைக்கக் கேட்க, அருண், “அவனுக்கு ஒரு பயம் தான். எங்க இவள் சும்மா சொல்லி அவன் ஹர்ட் ஆகிடுவானோன்னு. அதான், அவளை மிரட்டி ஸ்ட்ராங்கா இருக்காளான்னு செக் பண்ணான்.” என்றான் தோளைக் குலுக்கி.
ஆராதனா வியந்து, “நல்ல ஃப்ரெண்ட்” என்றாள் சிறு சிரிப்புடன். “ஹ்ம்ம்… ஆமா, நல்ல ஃப்ரெண்ட்ஸ்.” என்றவனைப் பார்த்து, “நான் உன்னைச் சொன்னேன். எதுவும் சொல்லாமலேயே எப்படி ரெண்டு பேரையும் புரிஞ்சு வச்சிருக்க கிரேட்…” என்றாள்.
அவன் வியப்பாகப் பார்த்து “தேவா, என்கிட்ட இதெல்லாம் சொல்லலைன்னு உனக்கு எப்படி தெரியும்?” என்க,
அவள் “ஹ்ம்ம், அவன் வாயைத் திறந்து பேசிட்டாலும்…!” என்று சிலுப்பிக்கொள்ள, அவன் மெல்லிய நகையுடன் அங்கிருந்து நகரப் போனான்.
ஆரு உடனே, “அருண்” என்றழைத்து, “தேவா பத்தி எதுவுமே சொல்லல. அவன் ஆஸ்ரமம் வர்றதுக்கு முன்னாடி எங்க இருந்தான். அவன் பேரெண்ட்ஸ்…” என்று இழுக்க, அருண் பெருமூச்சு விட்டு, “தெரியல” என்றான்.
அவள் “வாட் தெரியலையா?” என்று அவனை நம்பாமல் பார்க்க, “நம்பு ஆரு. நிஜமாவே எங்களுக்கு அவனைப் பத்தி எதுவுமே தெரியாது. ஏதாவது கேள்வி கேட்டாலும் எந்தப் பதிலும் சொல்லமாட்டான். அவனுக்கா பிடிச்சா பேசுவான். இல்லைன்னா எப்போவுமே சைலன்ட் தான். கோபம் மட்டும் கட்டுக்கடங்காம வரும்.
இப்போவாச்சு கொஞ்சம் பரவாயில்ல… சின்ன வயசுல எல்லாம், யாரவது பக்கத்துல வந்தாலே, வெறி பிடிச்சவன் மாதிரி பண்ணுவான். விஷ்வாவைத் தவிர எங்களைக் கூட ‘சம் டைம்ஸ்’ எக்ஸ்ட்ரா அவன்கிட்ட பேச விடமாட்டான். இப்போ வரை அவன் ஒரு புரியாத புதிர் தான். பட், அவன் தான் எங்களுக்கு எல்லாமே.” என்றிட,
அவளோ ‘ஏதாவது பதில் சொல்லுவான்னு இவன்கிட்ட கேட்டா! இவன் கூடக் கொஞ்சம் குழப்புறான்…’ என்று நொந்தாள். தமியோ, “எதுக்கு இந்தக் கடத்தல் வேல பார்க்கறீங்க.” எனக் கேட்க, “நீ விட்டா, என்கிட்ட வாக்குமூலம்லாம் கேட்ப… போய் ஆராய்ச்சி பண்ற வழியைப் பாரு பே…!” என்றவன் தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடி விட்டான்.
ஆருவிற்கு தான், அவன் சொல்லாமல் விட்டுப்போன விஷயங்களைக் கண்டுபிடிக்க வேண்டும் என மனது அடித்துக் கொண்டது. ‘யார்ரா நீ? உன் கோபத்துக்கு பின்னாடி என்ன காரணம் இருக்கு? உன் பிரெண்ட்ஸ்கிட்ட சொல்ல முடியாத அளவுக்கு உனக்குள்ள என்ன ரகசியம்?
சில்லி பாய்… சீக்கிரம் கண்டுபிடிக்கிறேன்’ என்று சற்று சத்தமாகவே முணுமுணுத்துக் கொண்டவளின் தலையில் தட்டிய தமி, “முதல்ல பண்ண வேண்டிய ஆராய்ச்சியை, கண்டுபிடிடி…” என்றிட, மற்றவர்களும் அந்த மண்ணை ஆராய்ச்சிக்கு உட்படுத்தினர்.
ஆனாலும், ஆராய்ச்சி வழி முறைகள் செய்ய, சில உபகரணங் கள் தேவைப்பட்டதால், அதனை வாங்க வேண்டும் என்ற நிலை வர, ஆரு “சரி நீங்க இந்த வேலையைப் பார்த்துகிட்டு இருங்க. நான் தேவாவை கூட்டிட்டு போய், தேவையானதை வாங்கிட்டு வரேன்.” என்று வேகமாகக் கிளம்ப, மூவரும் அவளை ஒரு மாதிரி பார்த்தனர்.
அவள், “வாட் யா? சீக்கிரம் வேலையை முடிக்கணும்ல…?” என்று நல்ல பெண் போலப் பேச, தமி “ஒருத்தி கூடச் சரி இல்லைடி. இதெல்லாம் எங்க போய் முடியுமோ, தெரியல…?” என்றதும், அம்மு “கல்யாணத்துல தான்” என்று கூலாகச் சொன்னதில், ஆரு சிரித்து விட்டு வெளியில் வந்தாள்.
அங்கு நால்வரும் எங்கோ கிளம்பிக் கொண்டிருப்பது போல இருக்க, ஆரு “தேவா, கடைக்குப் போகணும். சீக்கிரம் போய்க் காரை எடு!” என்றதில்,
அவன் “நான் என்ன, உனக்கு ட்ரைவரா? எங்க போற நீ?” எனக் கேட்டான். அவள் காரணத்தைச் சொல்லவும், “இன்னைக்கு எங்கயும் போக முடியாது… நாளைக்கு பார்த்துக்கலாம் உள்ள போ!” என்றான்.
அவளோ, “நாளைக்கு வரைக்கும் வெய்ட் பண்ண முடியாது. இன்னைக்கு ஸ்டார்ட் பண்ணாதான், நாளை மறுநாளைக்குள்ள முடிச்சு, அனுப்ப முடியும், வா வா!” என அவன் பதிலை எதிர்பாராமல் காரில் சென்று அமர,
தேவா “இவளை” என்று திட்டிக்கொண்டு, “விஷ்வா நீ இங்க இரு… நாங்க போறோம்.” என்றவன், அருணை நிஷிதாவின் இடத்திற்கு சென்று பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு, நிஷாந்தை மட்டும் அழைத்துக் கொண்டு சென்றான்.
விஷ்வா “டேய்! என்னடா இவன் பிளானை மாத்துறான்!” எனக் குழம்ப, அருண் “எப்படியும் அவன் சரக்கோட வந்துடுவான், யூ என்ஜாய் ஹியர்” என்று கண்ணடிக்க, அவன் அருணை முறைத்து, “வயல்ல விளையுது நெல்லு! புலி பசிச்சாலும் திங்காது புல்லு!” என்றான் கெத்தாக. பின்னிருந்து அம்மு, “குத்துனா உடையும் பல்லு!” என்று திமிராகச் சொல்ல, அவன் திரும்பிப் பார்க்காமலேயே பேந்த பேந்த முழித்தான்.
அருண், “தாங்க முடியல உங்க லொள்ளு! நான் கிளம்புறேன் தள்ளு!” என்று அவன் பங்கிற்கு கடியை சிதறிவிட்டு போக, விஷ்வா மெதுவாகத் திரும்பினான்.
அவள் அவன் பக்கத்தில் வந்து, “என்னடா, பெரிய இவனா நீ? உன்னை ‘சைட்’ அடிச்சா ஆள் கூட்டிட்டு வருவியா மிரட்ட? இப்போ கூப்புட்றா பாப்போம்.” என அவனை நெருங்க, அவனோ பின்னே நகர்ந்து கொண்டே சென்றான்.
அதற்கு மேல நகர இடம் இல்லாமல் சுவற்றில் மோதி நின்றவனின் இரு புறமும் கையை வைத்து அணை கட்டி நின்றவள் மெல்லிய குரலில், “விச்சு செல்லம்ஸ்! நீ என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ற! ஆனாலும் நீ அநியாயத்துக்கு நல்லவனா இருக்க கூடாது!” என்று அவனின் கன்னத்தைக் கிள்ள, அவன் மிரண்டு, “எதுக்கு இப்படி பக்கத்துல வர்ற…” என்றவன், தேவா பேசியதை மனதில் நிறுத்தி, “சும்மா மிரட்டாத, அப்பறம் நானும் மிரட்டுவேன்!” என்றான்.
அவள் “அஹான், அப்போ மிரட்டு செல்லம்ஸ்…” என்று கையை கட்டிக்கொண்டு பார்த்திட, அவன் அப்படியே நின்றான். அவள் கையில் கடிகாரத்தை பார்த்துக் கொண்டு, “எனக்கு நிறைய வேலை இருக்கு விச்சு செல்லம்ஸ். சீக்கிரம் மிரட்டு! நான் போய் வேலையைப் பார்க்கணும்ல” என்றவளிடம்,
“திடீர்னு மிரட்டச் சொன்னா? எப்படி வரும்… நீ போ நான் அப்பறமா டயலாக் யோசிச்சு மிரட்டுறேன்.” என்று பாவமாகச் சொல்லியவனைக் கண்டு சட்டெனச் சிரித்தவள், அவன் சட்டையைப் பிடித்து இழுத்து நெற்றியில் அழுந்த முத்தமிட்டு, “ஐ லவ் திஸ் பேபி விஷ்வா!” என ரசனையாகக் கூறி, அவன் முடியைக் கலைத்து விட்டுப் போக, அவன் பிரம்மை பிடித்தவன் போல் அப்படியே நின்றான்.
காரில் போகும்போது, ஆரு வாங்க வேண்டிய பொருட்களை எல்லாம் நினைவு படுத்திக்கொள்ள “ஹே! இந்தக் கடையில எல்லாம் இருக்கும். ஸ்டாப் பண்ணு!” என்றாள்.
தேவா அதனைக் கண்டுகொள்ளாமல் காரை ஓட்ட, அவனை முறைத்தவள், ‘சொல்றதை கேட்குறானா பாரு…’ என்று புலம்பும் போதே, அவளுக்கு ஃபோன் வந்தது.
அதில் மிளிர்ந்த எண்ணைப் பார்த்தவள் உற்சாகமாக ஃபோனை எடுத்து, “அத்தை” எனக் கத்த, எதிர்முனையில் கண்மணி, “இந்த அத்தையை இப்போதான் ஞாபகம் வருதாக்கும்? எப்படி ராசாத்தி இருக்க? வேல அதிகமா இருக்கா? ஒழுங்கா சாப்பிடுறியா?” என்று கேள்விகளை அடுக்க,
“அத்தை மூச்சு விட்டுக் கேள்வி கேளுங்க. நான் நல்லா இருக்கேன். வேலை எல்லாம் அதிகம் இல்ல. கரெக்ட் டைம்க்கு சாப்புடுறேன் ஓகே வா. நீங்க எப்படி இருக்கீங்க? மாம்ஸ் உங்களை ஒழுங்கா பார்த்திக்குறாரா இல்ல, வேலை வேலைன்னு ஓடுறாரா?” என்றாள்.
அவர், “ஹ்ம்ம் உன் மாமாவுக்கு வீட்ல தங்க எங்க நேரம் இருக்கு… சென்னைக்கும் மதுரைக்குமா தான் அலையுவாறு. சென்னையில கூட இருந்துடலாம், எதுக்கு அலையுறீங்கன்னு கேட்டா, ‘உனக்கு இங்க இருக்கத்தானே பிடிக்கும். எனக்காக ஏன் நீ வந்து அங்க தனியா கஷ்டப்படணும்’னு சொல்லுவாரு” என்று சற்று பெருமையாகவே சொல்லிட,
ஆரு புன்னகைத்து “மாமா சொல்றதும் சரி தான அத்தை. அப்போ மாமா சென்னைல தான் இருக்காரா?” எனக் கேட்டதும், அவர் “அட அதைச் சொல்லத் தான் போன் பண்ணி என்னென்னமோ பேசிகிட்டு இருக்கேன் பாரு.
உன் மாமா மெட்ராஸ்ல தான் இருக்காரு. உனக்கு நானே பண்ணுன பணியாரம்லாம் குடுத்து விட்டுருக்கேன். நீ போய் வாங்கிக்கிறியா? உன் மாமா மாதிரி நீயும் வேல வேலைன்னு கிடக்குற” என்று சலித்துக் கொள்ள,
“அத்தை, நான் இப்போ போய் மாமாவைப் பார்க்க முடியாது. நான் ஊருக்கு வந்ததும் கேட்குறதுலாம் செஞ்சு தரணும் டீல் ஓகே வா?” என்று அவரிடம் கொஞ்சும் போதே, கார் நிறுத்தப்பட்டிருந்தது.
‘இது மினிஸ்டர் இடம் ஆச்சே’ எனத் தனக்குள் குழம்பியவள், போனை வைத்து விட்டு, “தேவா இங்க எதுக்கு வந்த? அந்த மினிஸ்டர் என்னைப் பார்த்தான்னா அவ்ளோ தான். காரை எடுடா…!” என்க, அவன் “திருட வந்தேன்… இப்போ நீயும் வந்து ஹெல்ப் பண்ணு வா!” என்றதும், அவள் திகைத்து நிஷாந்தை பார்க்க, அவன் தலையைக் குனிந்து கொண்டிருந்தான்.
ஆரு “தேவா இதெல்லாம் ரொம்ப தப்பு. திருடுறதும் கடத்துறதும்லாம், ஒரு வேலையா? நீங்க தான் படிச்சு இருக்கீங்கள்ல ஒழுங்கா ஒரு வேலைக்குப் போறதுக்கு என்ன?” என்று அறிவுரை சொல்ல, அவன் அவளை எகத்தாளமாகப் பார்த்து, “ஒரு திருட்டுப்பூனையே திருட வேண்டாம் என்கிறதே?” என்று கேலி செய்ய, நிஷாந்த் சும்மா இல்லாமல், “அடடே! ஆச்சர்ய குறி!” என்று முடித்தான்.
அவனைப் பார்த்து ‘நீ வாடி வைஷு கிட்ட, உனக்கு மந்திரிக்க சொல்றேன்.’ என கடுகடுத்தவள், “என்னம்மோ பண்ணித் தொலைங்க, நான் வரல…” என்று அழுத்தமாக அங்கேயே அமர, தேவா நிஷாந்திடம் வரச்சொல்லி கண்ணைக் காட்டி விட்டு இறங்கிச் சென்றான்.
அவன் காரை நிறுத்தி இருந்த இடம், யார் கண்ணுக்கும் தெரியாமல் மறைவாக இருந்ததில் இவளைப் பார்க்க வாய்ப்பில்லை என்றாலும் அவளுக்கு வயிற்றில் புளியை கரைக்க, கார் கதவைத் திறக்க முயற்சித்தாள். அப்போது தான் அதனைப் பூட்டி விட்டுப் போனதே அவளுக்குப் புரிய, “டேய் தேவா எருமை… திருட்டு நாயே” என்று அவனைத் திட்டிக் கொண்டிருக்க, சில நிமிடங்கள் அங்கேயே கரைந்தன.
கார் டிக்கி திறக்கப்படுவது போல் இருக்க, திரும்பிப் பார்க்க, அங்கு இருவரும் கம்ப்யூட்டர்களை அடுக்குவதை கண்டு, ‘என்ன பண்றானுங்க இவனுங்க’ என்று முழித்தாள். பின், தேவா வண்டியை எடுத்துக்கொண்டு நேராகக் குடிலுக்கே வர, அப்போது அருண் போன் செய்ததில் “நான் உடனே வரேன்.” என்றவன், ஆருவை மட்டும் இறக்கி விட்டு விட்டு, நிஷிதாவின் இடத்திற்கு சென்றான்.
‘கடவுளே, இவனுங்க என்ன பண்றானுங்க… மினிஸ்டர் இடத்துலயே போய், திருடிட்டு இருக்கானுங்க’ என்று புலம்பியவள், ஒரு ஆர்வத்தில், அந்தக் கார் தடத்தின் பின்னேயே செல்ல, சில நிமிடத்தில் அங்கு ஒரு மர வீடு கண்ணில் பட்டது.
‘இவனுங்க சொன்ன மர வீடு இதுதானா?’ என்று எண்ணியவள், ஓசைப்படாமல் அங்குச் சென்று பார்க்க, தேவா நிஷிதாவிற்கு போதை மருந்தைக் கொடுப்பதை பார்த்து அதிர்ந்து விட்டாள்.
நடுக்கத்துடன், திரும்பி வந்த வழியே நடந்தவள், ‘இல்ல இருக்காது. கண்டிப்பா இவன் இப்படி பண்றதுக்கு பின்னாடி ஏதோ காரணம் இருக்கும். தேவா நல்லவன் தான். கண்டிப்பா தப்பு பண்ண மாட்டான்’ எனத் தனக்கு தானே, சமாதானம் கூறி கொண்டு, அவனைத் தவறாக நினைக்கக் கூட முடியாமல் திணறினாள்.
குடிலினுள்ளே வந்தவள், குழம்பி கொண்டே வேறொரு அறைக்குள் நுழைந்து விட, அங்கு அவர்கள் திருடி வைத்திருந்த நிறைய கம்ப்யூட்டர்கள் இருந்தது. அதனைப் பார்த்தவள், திரும்பி வெளியில் வரும்போது, தெரியாமல் அங்கிருந்த கீபோர்டு ஒன்றை தட்டி விட்டு விட்டாள்.
அதில் அது இரண்டாக உடைய, “அச்சோச்சோ” என்று அதனை எடுத்து வைக்கப் போக, அந்த கீபோர்டில் மாட்டி இருந்த ஜிப் கவர் ஒன்று அவள் கண்ணில் புலப்பட்டது. அதனுள் வெள்ளை நிற பவுடர் போன்று ஏதோ இருக்க அதனை எடுத்துப் பார்த்தவள் அதிர்ந்து விட்டாள்.
“ட்ட்ட்ரக்ஸ்??? ட்ரக்ஸ் கடத்துறாங்களா?” என இதயம் தாறு மாறாகத் துடிக்க, அங்கிருந்த கம்பியூட்டரை எல்லாம் உடைத்தாள். அதில் இருந்தும் மறைத்து வைக்கப்பட்ட, போதை பொருள் வெளியில் வந்து விழுந்தது. கை,கால் எல்லாம் கிடுகிடுவென நடுங்க, அதோடு காதல் கொண்ட மனது ஏமாற்றத்தைத் தாங்க முடியாமல் வெடித்து சிதற, கண்ணிலிருந்து, நீர் வழிந்தது. ஏமாற்றத்துடன் கூடிய கோபத்தில் வெளியில் வந்தவள், அப்போது தான் அங்கு வந்த தேவாவின் சட்டையைப் பிடித்து,
“என்னடா பண்ற நீ? ட்ரக் டீலரா டா நீ? யூ ஃபிராடு, சீட்… உன்னால எத்தனை பேர் இதை யூஸ் பண்ணி நாசமா போறாங்கன்னு தெரியுமாடா? நீ எல்லாம் எதுக்குடா உயிரோட இருக்க? எங்கயாவது போய் சாக வேண்டியது தான” என்று அவனைப் பளாரென அறைய, அவன் அமைதியாக நின்றான்.
கோபத்தை விட, அழுகையே அதிகம் வந்ததில், அப்படியே அமர்ந்து அழுதே விட்டாள். கோபத்திலும் பரிதவிப்பிலும் அவனை நினைத்து, தான் இன்னும் இன்னும் காயப்பட்ட போவதை, அவள் அறியவே இல்லை.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


TR madri rhyming words epdi ezhuthureenga..very nice 👍..