Loading

திருச்சிக்கு செல்லும் வரை உயிரே இல்லை அவளுக்கு. அது மட்டும் தமையனாக இருந்தால்? அப்படியே மடிந்து விடுவாளே. அவனின்றி இவ்வுலகத்தில் சொந்தமென சொல்லிக்கொள்ள யார் இருக்கிறார்கள்?

ஏதோ கடன் பிரச்சினையால் எங்கோ சென்று பணம் சேர்த்துக் கொண்டிருக்கிறான் என்று தானே எண்ணிக்கொண்டிருக்கிறாள். அதுவே தவறென்றால்?

நெஞ்சம் பதறியது. கை கால்கள் எல்லாம் நடுக்கம் கொண்டது.

தஞ்சாவூரில் இருந்து திருச்சிக்கு எப்படி வந்தார்களென்றே அவளுக்குத் தெரியாது. கண்ணில் நீர் தேங்கியே நின்றது. பிணவறை வாயிலில் நின்றிருந்த காவல் அதிகாரி யாஷ் பிரஜிதனைக் கண்டதும் கை குலுக்கி வரவேற்க, “உள்ள வந்து பாருங்க சார்… ட்ரெயின் டிராக்ல பாடி இருந்துச்சு. ஆனா முகம் சிதையல” எனப் பேசிக்கொண்டே சென்றான்.

நிதர்ஷனாவிற்கு மூச்சு விடவே சிரமமாக இருந்தது.

“நிதா போய் பாரு…” என்று விட்டு அவள் அலைபேசியில் மூழ்க, நடுங்கியே விட்டாள்.

“வாங்க மேடம்” அதிகாரி அழைத்தும் அவள் அசையவே இல்லை.

அவள் இன்னும் நகராமல் இருந்ததில் புருவம் சுருக்கி நிமிர்ந்த யாஷ், “வாட்?” என்க, “ப… ப… பயமா இருக்குங்க யாஷ். நீங்களும் வாங்களேன்” எனத் திக்கி திணறி அழைக்க, என்ன நினைத்தானோ “ம்ம்” என்ற உறுமலுடன் முன்னே நடந்தான்.

அவளோ அவன் கையை இறுக்கமாகப் பற்றிக்கொண்டு தள்ளாடியபடி அவனுடன் சென்றாள்.

உள்ளே இறந்த உடலைப் பார்த்து விட்டு வெளியில் ஓடி வந்தவள், ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து கேவி கேவி அழத் தொடங்கினாள்.

“நிதா வாட் ஹேப்பண்ட்? அவன் உன் பிரதரா?” யாஷ் குழப்பமாகக் கேட்க, அவளோ தேம்பியபடி மறுப்பாக தலையசைத்தாள்.

அதிகாரியும் புரிந்து கொண்டு, “ஓகே சார் தேங்க்ஸ் ஃபார் கமிங்” என்று விட்டுக் கிளம்ப, கண்ணீர் மழையென பொழிந்தது நிதர்ஷனாவிற்கு.

“அதான் அவன் உன் பிரதர் இல்லைல அப்பறம் ஏன் அழுகுற நிதா?” விழி இடுங்க யாஷ் கேட்க,

அவளோ கண்ணில் திரண்டிருந்த நீர் திவலைகளுடன் அவனைப் பார்த்தாள்.

அப்பார்வை அவனது விழிகளுக்குள் கலவரம் செய்தது என்னவோ உண்மை தான்.

“நிவே… நிவே…” எனும்போதே விக்கி விக்கி அழுத்தவள், கண்ணைத் துடைத்தபடியே “அண்ணா ஓடிப்போயிட்டான் எப்படியும் வந்துடுவான்னு தான் அசால்ட்டா இருந்தேன். இப்போ இப்போ… அவன் அவனுக்கு ஏதாவது ஆகிருக்குமோன்னு ப… பயமா இருக்கு… அவனைத் தேடிருக்கணுமோன்னு தோணுது யாஷ்…” என்றவள் முகத்தை மூடி ஒரு மூச்சு அழுது தீர்த்தாள்.

“ஒரு ஒருவேளை அவனுக்கு ஏதாச்சு ஆச்சுன்னா என்னை… என்னை உங்க எதிரிங்க கையால கொல்லவே விட்டுடுங்க. அவன் இல்லாம நான் மட்டும் இருந்து என்ன செய்ய போறேன்” மூக்கை உறிஞ்சி உடைந்து அழுதவளை திகைத்துப் பார்த்தான்.

அண்ணனின் இழப்பிற்கெல்லாம் இறந்து போக எண்ணுவது மூடத்தனம். அதிலும் ஒருவரது இழப்பிற்கு வாய் விட்டு அழுவதை இப்போது தான் அவன் நேரிலேயே பார்க்கிறான். இத்தாலி நாட்டில், அவனுக்கு நெருங்கியவர்கள் யாரும் அழுது பார்த்ததில்லை. பிறப்பு என்று ஒன்றிருந்தால் இறப்பும் இயற்கை தானே? என்கிற கோட்பாட்டை பின்பற்றுபவனுக்கோ அவளது அழுகையே விசித்திரமாக இருந்தது.

அவளது அழுகையை நிறுத்தியே ஆக வேண்டுமென்ற உந்துதல் எழ,”நீ நினைக்கிற மாறி எதுவும் ஆகிருக்காது நிதா. ஒருவேளை காசி கடனுக்காக அவனை ஏதாவது செஞ்சுருந்தா கூட இந்நேரம் தெரிஞ்சுருக்கும். அதுவும் இல்லாம அவனைப் பத்தி விசாரிச்சதுல அவன் ட்ரிச்சி பஸ்ல ஏறுனதா தான் கேமரால இருக்கு. சோ அவன் இங்க தான் சேஃபா எங்கயாவது இருக்கணும்” என்ற பிறகே அவளது அழுகை குறைந்தது.

வட்ட விழிகளை அகல விரித்தவள், “நெசமாவா அரக்கா?” எனக் கேட்க, அதை நிஜமாக்கும் பேராவல் எழுந்தது அவனுக்கு.

அவன் கூறியது பொய்யே. அவனுக்கும் நிவேதனைப் பற்றி ஒரு தகவலும் கிட்டவில்லை. அதை அவளிடம் கூறவும் பிடிக்கவில்லை.

“ப்ராமிஸ்” திட்டவட்டமாக அவன் கூறியபிறகே அவளது அழுகை குறைந்தது. ஆனால், வளவளவென்ற பேச்சு சுத்தமாக நின்று விட்டது. இன்னும் அந்த தாக்கம் தீரவில்லை அவளுக்கு. தமையனின்றி இனி ஒரு பொழுதும் நிம்மதியாய் கழியாது என்ற வேதனை நெஞ்சைப் பிழிந்தது.

திருச்சியில் இருந்து தஞ்சாவூர் வரையிலும் அவள் வாயைத் திறக்கவே இல்லை.

அவளை பேச வைக்க, “ஹோட்டல்ல சாப்பிட்டுப் போகலாமா” என அதிசயமாய் வினவியவனின் கூற்று புரியாது, “வேணாம்” என்று எங்கோ பார்த்து பதில் அளித்தாள்.

சிறு வயது முதல் தன்னுடனே தனக்காகவே வளர்ந்தவன் நிவேதன். தன்னைப் படிக்க வைப்பதற்காக தனது படிப்பைத் துறந்தவன். எப்படியும் முன்னேறி விட வேண்டுமென்ற வெறியில் தொழிலில் சறுக்கி விட்டான். அதுவே இருவரையும் பிரித்து வைத்து விட்டு வேடிக்கை செய்கிறது என்றே பெருந்துயர் கொண்டாள்.

வீட்டிற்கு வந்த பின்னும் அவள் நிலையில் மாற்றமில்லை எங்கோ வெறித்தபடியே இருந்தாள். கதிரவன் தான் அவளைக் கவனித்து “என்ன ஆச்சு நிதா?” எனக் கேட்க, அவள் விவரம் கூறியதும் உறைந்தே விட்டான்.

“அது நிவே இல்லை தான?” உள்ளம் வெடிக்க கேட்டான் கதிரவன்.

“இல்ல… அவன் திருச்சில தான் எங்கயாவது இருப்பானாம் யாஷ் சொன்னாரு. போன தடவை மாறிக்க காணாம போயிருக்கான். வந்துடுவான்” மனதை தேற்ற முயன்றாள் நிதர்ஷனா.

ஆனால் கதிரவனுக்கு மனம் கேட்கவில்லை. கண்ணில் இருந்து பிரிந்த நீருடன், “நிதா உன்னாண்ட நான் ஒன்னு சொல்லணும்” என்று நடுக்கத்துடன் ஆரம்பிக்க, அவள் மட்டுமல்லாது யாஷும் அவனை நிமிர்ந்து பார்த்தான்.

“அது வந்து… போன தடவை அவன் ஓடிப்போனதுக்கு காரணமே நான் தான்… நான் தான் அவனை எங்கயாவது ஒரு மாசத்துக்கு தலைமறைவா  இருந்தா அம்மா உங்களை வெளில அனுப்பாதுன்னு ஐடியா குடுத்தேன். அதுனால தான் அவன் போனான்” என்றதும் சப்பென அவனை அடித்திருந்தாள் நிதர்ஷனா.

“அறிவு இருக்காடா உனக்கு…? பைத்தியக்காரா… அவனை மட்டும் ஏன் போக சொன்ன. என்னையும் அவன் கூட அனுப்பியிருக்க வேண்டியது தான… எத்தனை தடவை புலம்பி இருப்பேன் அவனைக் காணோம்னு. இப்ப அவன் எங்க இருக்கான் உண்மையை சொல்லு” என்று அவன் சட்டையைப் பிடிக்க,

“இப்போ உண்மையாவே அவன் எங்க போனான்னு எனக்கு தெரியல. போன தடவை மாதிரி என்கிட்ட சொல்லிட்டும் போகல நிதா” என்றதும் மடங்கி அமர்ந்து விட்டாள்.

“ஏன்டா… இத ஏண்டா முன்னாடியே சொல்லல” ஆதங்கத்துடனும் அழுகையுடனும் அவள் கேட்க,

“என்கிட்டவே சொல்லாம நான் போன தடவை போட்டுக் குடுத்த ஐடியாவை பண்ணிட்டான்னு நினைச்சேன் நிதா. இப்ப எனக்கும் பயமா இருக்கு” என்றதில், அவனைப் படபடவென அடித்தாள்.

“இத அன்னைக்கே சொல்லிருக்கலாம்ல? இப்ப எங்கன்னு போய்டா நா அவனை தேடுவேன். அவன் தொலைஞ்சு போயே ஆறு மாசமாச்சு” எனக் கதறிட, “ஆறு மாசம் இல்ல ஒன்பது மாசம்” என்றவனை புரியாது பார்த்தாள்.

யாஷ் பிரஜிதனோ “ஜஸ்ட் ஸ்டாப் திஸ். உள்ள போ” என்று கதிரவனை அங்கிருந்து அனுப்ப, அவன் யாஷை கெஞ்சுதலாகப் பார்த்தான். அதெல்லாம் அவனை அசைக்கவில்லை. “உன்னை உள்ள போன்னு சொன்னேன்” என்றதில், கீழுதட்டைக் கடித்த கதிரவன், “சாரி நிதா” என்றான் அழுகுரலில். பின் அவன் கண்ணீரைத் துடைக்க மறந்து உள்ளே செல்ல,

அவளோ தலையைப் பிடித்தபடி அமர்ந்திருந்தாள்.

யாஷ் அவளைக் கண்டு “நீயும் ரூம்க்கு போ” என அனுப்ப, அவளது கால்களோ தானாக மாடி ஏறியது.

அறைக்குச் சென்று கதவோரம் ஒடுங்கி அமர்ந்தவளோ தலையில் இருந்து கையை எடுத்தாளில்லை.

ஏதேதோ நிகழ்வுகள், ஏதேதோ உருவங்கள் கண்முன் வந்து சென்றது.

காதினுள் ஏதேதோ வாசகங்கள் வரிசை கட்டி நின்றது.

“உங்க பையனை நீங்களே பிரிச்சு வச்சுட்டு இப்ப அவரு வர மாட்டுறாருன்னு சொல்றது நியாயமே இல்ல அத்தை…” அவளது குரலே அவளுக்கு கேட்டது. யாரிடம் பேசுகிறாள்? ஆதிசக்தியிடமா…? எப்போது?

“கண்மணி என்னையும் ஆத்துக்கு கூட்டிட்டுப் போயேன்…” கண்மணியிடம் நிதர்ஷனா பேசும் உணர்வு.

“என் வைஃபா நீ நடிக்கணும்” யாஷ் பிரஜிதனின் கம்பீரக் குரல் ஒரு புறமும், “ஒரு பாட்டு பாடேன் கடன்காரி…” என்ற மென்மை குரலும் ஒருங்கே கேட்டு அவளை வருத்தியது.

“ஐ ஆம் ஃபாலிங் பார் யூ!” செவியினுள் அசைந்தாடியது ஆடவனின் கிசுகிசுப்பான வார்த்தைகள்.

காலிரண்டினுள் தலையைப் புதைத்தவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. இவையெல்லாம் நடந்து முடிந்து விட்டது தானே? ஏன் மீண்டும் நடக்கிறது? ஏற்கெனவே இதே மாதிரி நிவேதனின் உருவ அமைப்புள்ள டெட் பாடியைப் பார்க்க சென்றதெல்லாம் மங்கலாக தெரிந்தது. யாஷிற்காக நடித்ததும், பின் அவன் வேலை முடிந்து விட்டதும் மீண்டும் வீட்டிற்கு திரும்பியதும் நினைவிலாடி அவளை உருக்கியது.

ஏன் மீண்டும் இது நடக்கிறது? மீண்டும் ஏன் கடத்தி நடிக்க கூறுகிறான்? என யோசித்து யோசித்து துவண்டவளுக்குள் பெரும் கலவரம்.

பின் மெல்ல மெல்ல நடந்தவைகளெல்லாம் ஒவ்வொன்றாய் மூளையினுள் விரியத் தொடங்கியது.

இப்போது நடந்த இதே கடத்தல், இதே நடிப்பு எல்லாம் சில மாதங்களுக்கு முன் நிகழ்ந்தவை. அவையெல்லாம் நிழற்படமாக காட்சியளிக்க, மீண்டும் அதே போலான காட்சிகளை யாஷ் பிரஜிதன் அரங்கேற்றிக்கொண்டிருக்கிறான் எனப் புரிய உறைந்து போனாள்.

ஏன் எதற்கு? என்ற கேள்விகளுக்கெல்லாம் நெஞ்சினுள் புதைந்திருந்த காதல் உணர்வுகள் மெல்ல பதிலுரைக்க, அசைவின்றி உணர்வின்றி மலைத்துப் போனாள் நிதர்ஷனா.

ஆம். இவையனைத்தும் ஏற்கனவே நடைபெற்றவை. சில தவிர்க்க இயலாத சூழ்நிலையால் வாழ்வில் வெகு சில பல பக்கங்கள் அவளது நினைவில் இருந்து அகன்றிருந்தது. அந்நினைவிற்குள் தானே அவளது அரக்கனும் இருக்கிறான்! அவனை மறந்து போக விடுவானா அவன்? பிடிவாதக்காரன். பூமியின் அடியாழம் வரை, ஆகாயத்தின் எல்லை வரை விரிந்திருக்கும் அழுத்தக்காரன். வாழ்க்கையில் முதன்முறை ஒரு பெண்ணின் அன்பிற்காக தனது உயர்ந்த நிலை, பதவி, அறிவு, ஆற்றலென அனைத்தையும் உடைத்தெறிந்தவன். 

இதோ ஏற்கனவே நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் மீண்டும் அவள் ஒருவளுக்காக செதுக்கிக் கொண்டிருக்கிறான்.

தனது அலுவல் அறைக்கு வந்து விட்ட யாஷ் பிரஜிதனின் முகம் சிவந்து இறுகிப் போயிருந்தது.

அவள் மீது எவ்வித அன்பும் இல்லாத போதே, அவளது கண்ணீர் கண்டு உள்ளுணர்வுகள் உருக்குலைந்ததைப் போல உணர்ந்தவன், இப்போது மொத்த நேசத்தையும் திரட்டி ஒவ்வொன்றையும் அவளுக்காகவே செய்பவன் மீண்டும் அவளை அழுக விட்டு வேடிக்கைப் பார்த்திருக்கிறான்!

காதல் வலிக்குமென புரிகிறது. ஆனால், இத்தனை ஆழமாய் வலிக்குமென ஒவ்வொரு நொடியும் அனுபவித்து கரைகிறான்.

இங்கோ, நிதர்ஷனாவின் நினைவுகளில் புதைந்து போன அவளது அரக்கனின் அன்பின் சின்னங்களெல்லாம் ஒவ்வொன்றாய் கண்முன் படமாக, அவன் முதன் முதலில் உண்மையாக தன்னைக் கடத்திய நிகழ்வுகளுக்குள் புதைந்து போனாள்.

ஆறு மாதங்களுக்கு முன் கதிரவனையும் நிதர்ஷனாவையும் கடத்தியது முதல் அனைத்தும் இப்போது நடந்தது போல தான் நடந்தது. அவளது வாய் பேச்சுகள் அப்போதும் இப்போதும் ஒரே போலவே ஆடவனைக் கொள்ளையடித்தது. ஒரே ஒரு வித்தியாசம் அப்போது கதிரவனை தஞ்சாவூருக்கு அழைத்து வரவில்லை.

திருமணமாகாத எந்த ஆடவனும் இங்கு வரக்கூடாதென்று மகேந்திரன் தீர்மானமாகச் சொன்னதில் தானே அவனே ரித்திகாவைப் போல இவளை தயார் செய்ய வேண்டியதாகப் போயிற்று. அவனுக்குத் தேவையான கண்டுபிடிப்பின் அடிப்படை சீக்ரட்டை ஆதிசக்தியிடம் இருந்து வாங்கியே ஆகவேண்டுமென்றதே அவனது நோக்கம். அதைத் தாண்டி அவனுக்குள் எவ்வித பாசமும் பிணைப்பும் சிறிதளவேனும் இருக்கவில்லை.

அன்றைய நிகழ்வுகளில் இருவருக்கும் முறைப்படி திருமணமும் நடைபெறவில்லை. ஒரு மஞ்சள் கயிறைக் கொண்டு அவளுக்கு அவளையே மாங்கல்யம் அணிவிக்கக் கூறி இருந்தான். 

முதலில் அவளது செயல்கள் அனைத்திலும் எரிச்சல் கொண்டு, அவளைப் பார்த்தாலே கடுகடுத்த யாஷ் பிரஜிதனின் இயந்திர உணர்வுகளை அசைத்துப் பார்த்தது அவளது கண்ணீரே.

இன்று நடந்ததைப் போல தான், அவளது தமையனைப் போல இறந்த உடல் மார்ச்சுவரியில் இருப்பதாக ஐந்து மாதங்களுக்கு முன்னே அழைத்துச் சென்றவனுக்கு எவ்வித உணர்வும் இருக்கவில்லை. ஆனால், அவளது கண்ணீர் அவனது இயல்பைத் தொலைக்க வைத்திருந்தது.

ஐந்து மாதங்களுக்கு முன், இதே போல மார்ச்சுவரி சென்று விட்டு திருச்சியில் இருந்து, தஞ்சாவூருக்கு நிதர்ஷனாவுடன் வந்தடைந்தவனுக்கு  அவளது அமைதி என்னவோ செய்தது.

நிவேதனைப் பற்றிய கவலையில் பால்கனியில் நின்றிருந்தாள் நிதர்ஷனா. காற்றில் அலைபாய்ந்த கற்றைக் கூந்தலில் கூட சோகத்தின் சாயல்.

அவளை அழைத்து வந்ததோடு அலுவல் அறைக்குள் நுழைந்தவன் தான் மீண்டும் இரவு வெகு நேரம் கழித்தே அறைக்கு வந்தான்.

எப்போதும் எலிசாவை தொல்லை செய்து, பாட வைத்து தானும் பாடியே உறங்குபவள் அன்று பால்கனியின் இருட்டிலேயே ஐக்கியமாகி இருந்தாள்.

அவளைத் தேடி பால்கனிக்கு வந்த யாஷ் பிரஜிதன், “தூங்கல?” எனக் கேட்க, “தூக்கம் வரல…” என்றாள் உர்ரென்று.

“உள்ள வா!” என அவன் அழைத்ததில் பேச்சின்றி அவனது பின்னே வந்தவளிடம், “எலிசாவைக் கூப்பிடு” என அவளது சிவந்த விழிகளை ஆராய்ந்தபடி கூறினான்.

அவளோ புரியாது, “எலிசா” என்றாள். எதிர்புறம் சத்தமே இல்லை.

“என்ன அரக்கா… எலிசா செத்துருச்சா?” எப்போதுமிருக்கும் உற்சாகமில்லை என்றாலும் அக்கேலியில் மெலிதான நிம்மதி அடைந்தது ஆடவனின் மனது. அதைப் பெரியதாக ஆராயாமல், “உனக்குப் பிடிச்ச பேர்ல கூப்டு” எனத் தனது ஹேசல் விழிகளால் அவள் விழிகளில் அலைபாய,

“எனக்குப் பிடிச்ச பேரா?” ஒரு கணம் சிந்தித்தவள், பின் மின்னலடிக்க, “ஆலம்பனா?” என்றாள் கேள்வியாக.

“ஆமா, நான் இப்போ உங்க ஆலம்பனா. சொல்லுங்க கடன்காரி இப்ப நான் என்ன செய்யணும்?” என எலிசா அழகாய் தமிழ் பேசியது. அதுவும் அவளை ‘கடன்காரி’ என அழைத்து.

விழிகள் சாசர் போல விரிந்தது அவளுக்கு. சட்டென ஒரு மகிழ்ச்சி பரவ, “ஹைய்ய்… இதென்ன எலிசா செம்மயா தமிழ் பேசுது… அச்சோ நான் பேசுறேன்னு எப்படி தெரியும் அதுக்கு” எனத் துள்ளிக் குதித்தாள்.

“ஆலம்பனா…” மீண்டும் ஒரு முறை அவள் செல்லமாக அழைக்க, “எஸ். நிதா… நான் உங்க ஆலம்பனா தான். சொல்லுங்க” என்று மீண்டும் பேசியதில், “அச்சோ” என இரு கன்னத்திலும் கையை வைத்துக்கொண்டாள்.

அந்தச் சிரிப்பும், சிறு விழிகள் காட்டும் ஆனந்தமும் ஆணவனை அமைதியாக்கியது. இதுவரை எத்தனையோ வெற்றிகளைக் கண்டும் களிப்பு கொள்ளாது இதயம் முதன்முறை ஒரு சிறு பெண்ணின் சின்னஞ்சிறு புன்னகையில் சிதைந்து கொண்டிருந்தது.

தான் கடினப்பட்டு உருவாக்கிய ரோபோட் ஏ. ஐ கூட அவளுக்குப் பிடித்ததாய் மாற்றியவன், கூடிய சீக்கிரம் அவனையே மாற்றிக்கொள்ளப்போவதை அறியாதவனாக, அவள் மீதிருந்த பார்வைதனை திருப்பாமல் நின்றிருந்தான்.

அன்பு இனிக்கும்..
மேகா…

ஹாய் டியர்ஸ்… இந்தத் திருப்பத்தை எதிர்பார்த்தீங்களா? அதாவது, இப்ப கதிரவனும் சேர்ந்து தஞ்சாவூர்ல இருக்குறது செகண்ட் டைம் நடக்குது. ஆல்ரெடி யாஷ் ஒருமுறை இவளைக் கடத்தி நடிக்க வச்சு தேவையானதை அவன் அம்மாட்ட இருந்து வாங்கிட்டு இந்த நாடகத்தை முடிச்சு விட்டுட்டான். இப்போ மறுபடியும் ஏன் அவன் இதை எல்லாம் செய்றான்னு, ஏன் திரும்ப எல்லா சீனும் மறுபடியும் நடக்குதுன்னு தான் அவள் யோசிக்கிறா. சோ அவளுக்கு வந்த மெமரி லாஸ்ல, அவனோட மெமரியை ரி – கலெக்ட் பண்றதுக்காக, மறுபடியும் அவன் அவளுடனான நாள்களை ரீ – கிரியேட் செய்றான். சோ, ரியலா அவன் கூட முதன்முறை தஞ்சாவூர் போனப்ப என்ன நடந்துச்சுன்றது தான் பிளாஷ்பேக் அதை தான் இப்ப நான் சொல்லிட்டு இருக்கேன். தெளிவா சொல்லிருக்கேனான்னு ஒரு டவுட். அதான் ஒரு முறை எக்ஸ்ப்ளெய்ன் பண்றேன் டியர்ஸ்… கதை பிடிச்சுருக்கான்னு சொல்லிட்டுப் போங்க…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
41
+1
142
+1
8
+1
9

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்