Loading

திமிர் 14

 

இருவரும் பிரிந்து சுயநினைவு அடைவதற்குள், அவர்களை முழுவதும் ஆக்கிரமித்தது மழைநீர். கணுக்கால் தண்ணீரில் எழுந்து நின்றவர்கள், இருட்டின் வெளிச்சத்தில் எட்டிப் பார்த்தார்கள். கண்ணுக்கெட்டும் வரை நீர் நிரம்பி இருந்தது.

 

“அய்யய்யோ ஆர்மி! நம்ம சாகப் போறோம்.”

 

“வாய மூடுடி!”

 

“நாளைக்குக் காலையில நம்ம ஆவியா தான் இங்க உலாவப் போறோம்.”

 

“உனக்கு ஆசை இருந்தா தண்ணியில குதிச்சுச் சாவு. நான் வாழனும்.”

 

“சத்தமாப் பேசாத, எமன் சார் காதுல விழப் போகுது.”

 

“வாய உடைச்சிடுவேன்.”

 

“அப்பாவிப் பிள்ளைகிட்ட அதிகாரம் பண்ணாம, எப்படித் தப்பிக்கலாம்னு யோசி.”

 

“பைத்தியக்காரி! அதுக்கு தான் நேரம் கொடுக்காம டார்ச்சர் பண்றியே. கொஞ்ச நேரம் வாய மூடிட்டுச் சும்மா இரு.”

 

தண்ணீரின் வேகம் அதிகரித்தது. அந்த மர வீட்டைத் தாண்டி வெளியில் செல்வதற்கு வழி இல்லை. வீட்டிலும் ஏறி அமர இடமில்லை. இதற்குமேல் தண்ணீர் சூழக்கூடாது என்ற வேண்டுதல் மட்டுமே அவனிடம். பக்கத்தில் இருந்தவளுக்குப் பயம் அதிகரித்தது. எங்கும் நகராது, அகம்பனின் கையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாள். தன்னைப் பற்றிச் சிறிதும் கவலை கொள்ளாது, அவளைத் தனக்குள் சுருட்டி வைத்துக் கொண்டவன் அவளுக்காக மட்டுமே பயந்தான். அதுவும் முதல்முறையாக. இந்த மாற்றத்தை அறியாது, அங்கிருந்த ஒரே இருக்கையில் அவளை அமர வைத்தான்.

 

“இதுக்கு மேல தண்ணி வராதுன்னு நினைக்கிறேன். வந்தாலும், உன்னை எப்படியாவது காப்பாத்திடுவேன். பயப்படாம இருடி.”

 

அவன் கையை விடாது உடும்பு போல் தொற்றிக் கொண்டு, “பயமா இருக்கு ஆர்மி” என்றாள்.

 

குனிந்து அவள் முகம் பார்த்தான். பயத்தில் முகம் வெளிறி இருந்தது. அச்சத்தில் அரண்டு கொண்டிருந்தவளைத் தன் வயிற்றோடு சாய்த்துக் கொண்டு, “ஒன்னும் இல்லடி. உனக்கு எதுவும் ஆகாது. எனக்கு என்ன ஆனாலும், உன்னைப் பத்திரமாய் பார்த்துப்பேன்.” எனத் தலையை இதமாக வருடிவிட்டான்.

 

அன்னையின் கருவறைக்குள் இருப்பது போல் சுகமாக உணர்ந்தவள், அவன் வார்த்தையில் உள்ளம் மருகினாள். இவனுக்குள் இத்தனை மென்மையான குணம் இருக்கும் என்று சற்றும் எதிர்பாராதவள், அவை தனக்கு மட்டுமே கிடைத்ததில் குளிர்ந்து போனாள். இடுப்போடு கைகளைச் சுழற்றி அவனோடு நெருக்கமானவள், “உனக்கும் எதுவும் ஆகாது.” என்றாள்.

 

நின்ற கோலத்திலேயே அவளைத் தாங்கிக் கொண்டிருந்தான். பயம் அகன்று அவன் நெருக்கம் நேசத்தைக் கொடுத்தது அம்முவிற்கு. கட்டுடல் மேனியில் மூக்கை உரசிக் கிச்சுக் கிச்சு மூட்ட, “லூசு!” தலையில் அடித்தான்.

 

“கல்லு மாதிரி இருக்கடா”

 

“டா போடாதடி!”

 

“ம்ம்… போடுவேன்.”

 

“வாயைக் கடிப்பேன்!”

 

“எமன் சார்…”

 

“இம்சைக்குப் பொறந்தவளே! கொஞ்ச நேரம் சும்மா தான் இருந்து தொலையேன். நானே உன்னை எப்படி சேவ் பண்ணப் போறோம்னு பதட்டத்துல இருக்கேன்.”

 

மெல்ல விலகி அவன் முகம் பார்க்கத் தலை உயர்த்தியவள் வழக்கம்போல் அந்தக் கண்களில் தொலைந்து போனாள். எப்போதும் அவளை ஆட்சி செய்யும் அந்த விழிகளுக்குள், இன்று அவளைக் காப்பாற்ற வேண்டும் என்ற துடிப்பு மேனியைச் சிலிர்க்க வைத்தது.

 

“ஆர்மி…”

 

“ஹான்!”

 

“உன் கூட இருக்கும் போது ஒரு மாதிரி அழகா இருக்கு.”

 

அவளைப் பற்றிய கவலையை ஒரு நொடி அகற்றிவிட்டு முகம் பார்த்தான். மென்மையாகப் புன்னகைத்துக் கன்னம் இரண்டையும் கிள்ளி முத்தமிட்டவள், “உண்மையாவே உன்னைப் பார்க்கறதுக்கு முன்னாடி வரைக்கும், என் லைஃப்ல இல்லாத ஒன்னு இப்பக் கிடைக்குது. இதுவரைக்கும் எனக்கே தெரியல. உன்னைச் சந்திச்சதுக்கு அப்புறம் தான், என்னைச் சுத்தி இருந்த வெறுமை புரியுது. எதுவுமே வேண்டாம். இப்படியே உன் கூடவே இருந்துடவா…” எந்தப் போலித் தன்மையும் இல்லாமல், உள் மனத்தில் இருந்து உரைத்தாள்.

 

“நான் சாகப் போறவன்…”

 

“அது நடக்காது!”

 

“எப்படி அவ்ளோ உறுதியா சொல்ற.” என்றவனுக்கு அம்முவின் மீது சிறு துளிச் சந்தேகம் எழவில்லை.

 

“நீயும், நானும் சந்திக்கனும்னு கடவுள் போட்ட விதியா தான் நான் பார்க்கிறேன்.”

 

“எனக்கும் உன்கிட்ட என்னமோ ஒரு ஃபீல் இருக்கு. அதை என்னால மறைக்க முடியல. என்னையும் மீறி அது வெளிப்படுது. ஆனாலும் முழுசா உன்னை ஏத்துக்க மனசு வரல அம்மு. உன் வாழ்க்கைய அழிக்க என்னால முடியாது. உனக்குன்னு ஒரு லைஃப் இருக்கு. நான் போனதுக்கு அப்புறம் என்னை முழுசா மறந்துட்டு உன் வாழ்க்கையைப் பாரு.”

 

“இங்க வா…” என அவனைக் குனிய வைத்து நடுநெற்றியில் முத்தமிட்டவள், “முன்னாடி, பின்னாடின்னு எதைப் பத்தியும் பேச வேண்டாம். உன்னோட இருக்க இந்த நிமிசத்தை ரொம்ப விரும்புறேன். எனக்கு இது முழுசா கிடைச்சால் போதும். பியூச்சர்ல எது நடந்தாலும் அதைப்பத்தி எனக்கு எந்தக் கவலையும் இல்லை. இந்த செகண்ட் நான் உனக்காக, நீ எனக்காக.” என்றவளை அள்ளிக்கொண்டான் கையோடு.

 

“உன்ன விட்டுட்டு எப்படிடி போவேன்? என்னால என் மனசைச் சமாதானப்படுத்த முடியல. எனக்கு எதுக்கு இந்த நிலைமை? இந்த நிலைமையில நீ எதுக்கு? ஒண்ணுமே புரியல.”

 

அதற்கு மேல் அகம்பனைப் பேசவிட மனம் இல்லை அம்முவிற்கு. கீழ் இதழை உரசிக் கொண்டாள் தன் உதட்டோடு. எடுத்ததும் வேகத்தைக் கையாளும் காதலிக்கு ஈடு கொடுக்க, இருக்கையில் அமர்ந்து அவளைத் தன்மீது அமர்த்திக் கொண்டான்.

 

குருவிக்கூடு போல் அவனோடு சுருங்கித் தஞ்சமானவள், கஞ்சம் காட்டாது கருணை மழை பொழிந்தாள். கீழ் உதட்டை இழுத்து எச்சில் சுவை ஊறத் தின்றுத் தீர்த்தவள் மேல் உதட்டையும் அவ்வப்போது அள்ளி ருசித்தாள். நாக்கைச் சுழற்றி அவன், நாக்கோடு சண்டையிட்டுச் சமாதானம் செய்ய அதையும் முத்தமிட்டாள். உதட்டில் ஆரம்பித்த இச்சு சத்தம் உச்சந்தலையில் இருந்து பணியைத் தொடங்கியது.

 

தன்னைச் சொக்க வைத்த கண்களுக்கு மாறி மாறி முத்தமிட்டு, இமைகளை எச்சில் செய்தவள் அதிகம் ரசிக்காத மூக்கில் இரு முறை முத்தமிட்டு விலகினாள். ஒரு பெண் தன்னை ஆட்சி செய்வதைப் பிரமிப்போடு பார்த்துக் கொண்டிருந்தவன் உணர்வுகள் எக்கச்சக்கமாக எகிறி நின்றது. அதை இன்னும் தூண்டி விட்டாள் கன்னத்தைக் கடித்து.

 

முள் செடி போல் வளர்ந்திருந்த மீசைக்குள் எண்ணிலடங்காத முத்தங்களைப் பதுக்கி வைத்து விட்டு, மீண்டும் அவன் உதட்டிற்கு வந்தவள் அங்கேயே நிரந்தரமாகத் தங்கி விட்டாள். அவள் கொடுக்கும் இம்சைகளைத் தாங்க முடியாமல் தாங்கிக் கொண்டிருந்தவன் கைகள், மேனியைத் தழுவத் தொடங்கியது. இதழோடு குடித்தனம் நடத்திக் கொண்டிருந்தவள், அவன் கைகளின் காரியத்தால் இறுக்கி அணைத்துப் பயணத்தைத் தொடர்ந்தாள்.‌

 

கழுத்து வளைவுக்குள் புதைந்து மூச்சுக் காற்றைத் தொலைத்தவள் எண்ணமெல்லாம், ரகசியமாக ரசித்த அந்த மார்பை வருடுவது. விரல் கொண்டு வருடும் ஆசையை இதழ் கொண்டு வருடித் தீர்த்துக் கொண்டாள். மோகமுள் அகம்பனைக் குத்தியது. சொல்ல முடியாத உணர்ச்சிப் பெருக்குக்கு ஆளானவன், போதும் என்று அவளை இழுத்து லேசாகக் கீழே சாய்த்தான்.

 

விழுந்து விடப் போகும் பயத்தில், கழுத்தோடு கைகளை மாலையாக்கிப் பின்னிப் பிணைந்தவள் இதழை, நொடிப் பொழுதில் தனக்குள் அடக்கி வைத்து உறிஞ்சினான். இந்த முறை அவனுக்கு வழிவிட்டு அமைதி காப்பது அம்முவின் முறை. இஷ்டத்திற்கு எடுத்துச் செல்லப்படும் முத்தத்தால் நொந்து போனது அவள் உதடு. எரிச்சலில் விலகப் பார்க்கும் தன்னவள் தலையை இறுக்கமாகப் பிடித்து முத்தத்தைத் தொடர்ந்தான்.

 

சுற்றியும் சூழ்ந்த நீர், எச்சில் சத்தத்தில் அரண்டு தேங்கி நின்றது. அதற்குச் சிறிதும் மதிப்புக் கொடுக்காமல் ஒற்றை இருக்கையைப் படுக்கையாக மாற்றிப் பின்னிப் பிணைந்து கொண்டிருந்தார்கள். இருவரையும் விலக விடவில்லை முத்தம். நொடிக்கு நொடி அதன் வேகம் அதிகரித்து மூச்சுக் காற்றைத் தவிக்க விட்டது. கடைசியில் அந்தப் போரைக் கைவிட்டது தொடங்கிய அம்முவே!

 

அவனுக்கு ஈடு கொடுக்க முடியாமல் சோர்ந்து போனவள், போராடி உதட்டைக் காப்பாற்றி உடலையும் தன் வசமாக்கினாள். அவனை விட்டு விலகினாளே தவிர அவன் வாசம் விலகவில்லை. அவன் கொடுத்த முத்தம் நிம்மதியைத் தரவில்லை. நெருங்கச் சொல்லி உணர்வுகள் தூண்டியது. விலகியவளைச் சேர்த்தணைக்கச் சொல்லி அவன் ஆண்மை கட்டளையிட்டது. இரண்டிற்கும் நடுவில் போராடி நேரத்தைக் கடந்தார்கள்.

 

ஒரு வார்த்தைப் பேசாது, சுற்றியும் இருக்கும் இயற்கைச் சூழ்நிலையில் தங்கள் காதலை வளர்த்தார்கள். மனத்திற்கு இதம் கூடியது. வீரியம் குறைந்த மழையின் சத்தமும், தங்களைச் சூழ்ந்த தண்ணீரின் குளிரும், வீசும் காற்றும், மூலிகைச் செடிகளின் வாசமும் வரையறுக்க முடியாத இதத்தைக் கொடுத்து இருவரையும் கண் மூட வைத்தது.

 

மழை எப்போது நின்றதோ! இவ்விருவரும் எப்போது உறங்கினார்களோ! எல்லாம் அதன் வசப்படி அழகாக நடந்தது. சூழ்ந்த தண்ணீர் வெளியேற வழி தெரியாது, அவர்களுடன் தங்கிவிட்டது. வெள்ளப் பெருக்கின் தாக்கம், விடியலைத் தாமதமாகக் கொண்டு வந்தது. காதலியோடு கண்ணுறங்கியவன் கண்கள் விழித்தது. எழுந்து உடலை அசைக்க எண்ணியவனுக்குச் சற்றும் அது முடியவில்லை. குழப்ப ரேகையோடு, நன்றாக விழி திறந்து தன் மடியில் உறங்கிக் கொண்டிருப்பவளைப் பார்த்தான். அதன்பின் தான் அனைத்தும் ஞாபகத்திற்கு வந்தது அகம்பனுக்கு. இரவெல்லாம் இம்சை செய்துவிட்டு, ஒன்றும் அறியாதவள் போல் தூங்கிக் கொண்டிருக்கும் காதலியைக் கண்டுப் புன்முறுவல் பூத்தது.

 

அவள் தூக்கத்தைக் கெடுக்க விரும்பாது அதே நிலையில் அமர்ந்திருந்தான். நேரம் கடக்க முதுகு வலி பின்னி எடுத்தது. லேசாக அசைந்தவன், தூக்கத்தில் சிணுங்கும் அம்முவின் முகத்தில் அதை அப்படியே நிறுத்தி விட்டான். கண்ணிமைக்காமல் ரசிக்கும் இவளைத்தான், கொல்லத் துணியப் போகிறோம் என்பதை அறியாது சிலாகித்துக் கொண்டிருந்தான்.

 

மெதுவாக எழுந்தவள், அகம்பன் முகத்தில் விழித்தாள். நேற்று இரவு நடந்தது வெட்கத்தைக் கொடுத்தது. அவன் முகத்தைப் பார்க்க முடியாது எழுந்து தண்ணீரில் நின்றாள்‌. முட்டி அளவு தேங்கியிருந்த தண்ணீரில் இயல்பு திரும்பியது இருவருக்கும். அனைத்தும் நீரில் மிதந்து கொண்டிருந்தது.

 

அவர்கள் அணிந்திருக்கும் உடையைத் தவிர, வேறு எதுவும் உடுத்தும் படியாக இல்லை. ஆயாசமாக ஆளுக்கு ஒரு பக்கம் நின்று கொண்டு யோசித்தார்கள். அந்த மர வீட்டைச் சுற்றியும் நோட்டமிட்டுக் கொண்டிருந்தவள் விழிகளில் அவை விழுந்தது. காதல் கொண்டவள் மனம், வந்த வேலையை நினைவு படுத்தியது. குறுக்குப் புத்தியோடு அவன் என்ன செய்கிறான் என்று நோட்டமிட்டவள், தண்ணீரோடு தண்ணீராக மிதந்து கொண்டிருக்கும் அவன் பையைக் கையில் எடுத்தாள்.

 

“ஐயோ ரிப்போர்ட்!” என அவள் எடுத்த நேரம் அதைப் பிடுங்கிக் கொண்டான் அகம்பன்.

 

என்ன செய்வதென்று தெரியாமல், கைகளைப் பிசைந்து கொண்டிருந்தவள் நிம்மதிப் பெருமூச்சு விட்டாள், அனைத்தும் நீரில் நனைந்ததில். இத்தோடு மொத்தப் பிரச்சினையும் தீர்ந்தது என்று பெருமூச்சு விட்டவள் செவியில், “எதுக்கும் இருக்கட்டும்னு சாப்ட் காபி எடுத்து வச்சது நல்லதாப் போச்சு பாரு.” என்றது.

 

“சாப்ட் காபி வச்சிருக்கியா?”

 

“ஆமா அம்மு.”

 

“எ..எதுல?”

 

“லேப்டாப்ல!”

 

“வேற எதுலயும் வச்சிருக்கியா?”

 

“ம்ஹூம்.”

 

பலத்த யோசனையோடு இருக்கையில் அமர்ந்து கொண்டாள். வீணான அனைத்தையும் கண்டுகொள்ளாது மடிக்கணினியை ஆராய்ந்தான். அடுப்பின் மீது தூக்கி வைத்ததால் அவை தப்பித்திருந்தது. அனைத்தையும் அதே போல் வைத்திருக்க வேண்டும் என்று தாமதமாக வருந்தியவன், அதை ஆன் செய்தான். யோசனையை விடுத்துத் திருட்டுத்தனமாக அதைக் கவனித்தாள்.

 

நிச்சயம் கடவுச்சொல் வைத்திருப்பான் என்பதால் அவற்றை அறிய அவன் அறியாமல் பார்த்துக் கொண்டிருந்தவள், ‘ச்சைக்! சரியா பாஸ்வேர்ட் போடும்போது நகர்ந்துட்டான்.’ புகைந்து கொண்டாள்.

 

ரிப்போர்ட்டின் யோசனையில் உழன்று கொண்டிருந்தவளுக்குப் பல கட்டச் சிந்தனைகள். அவள் திட்டமிட்டபடி, இந்நேரம் அதை எடுத்துவிட்டு இங்கிருந்து சென்றிருக்க வேண்டும். வந்த வேலையைக் கவனிக்காமல், வேறு பாதையில் பயணித்துக் கொண்டிருக்கும் தவறு புரிந்து தன்னைத் தானே திட்டிக் கொண்டாள். மூளை தான் அவளைத் திட்டுகிறதே தவிர, மனம் அவனோடு இருக்கச் சொல்லி மன்றாடியது.

 

“ஓய்!”

 

“ஹான்!”

 

“நான் கொஞ்சம் வெளிய போயிட்டு வரேன்.”

 

“சரி!”

 

“அம்மு…”

 

“சொல்லு.”

 

“ஆர் யூ ஓகே?”

 

“எனக்கென்ன?”

 

“எந்தக் கேள்வியும் கேட்காமல் சரின்னு சொல்ற.”

 

“கொஞ்சம் டயர்டா இருக்கு.”

 

“சாப்பிட எதுவும் இல்லை. நான் போய் வாங்கிட்டு வரேன். அதுவரைக்கும் பத்திரமா இரு. மோஸ்ட்லி தண்ணில கால் வைக்காத. தவளை அது இதுன்னு ஓடும்.”

 

சுயநலச் சிந்தனையிலிருந்து வெளிவந்தவள், “எது!” எனக் கண்களை விரிக்க, “சொல்ல முடியாது, பாம்பு கூட வந்தா வரும்.” என்றான்.

 

“அய்யய்யோ! அப்ப நானும் உன் கூட வரேன்.”

 

“உன்னக் கூட்டிட்டுப் போனா கார் எடுக்கணும். அது ரொம்ப ரிஸ்க்கு. கொஞ்ச நேரம் தான், வந்துடுவேன்.”

 

இருக்க மாட்டேன் என்று அடம் பிடித்தவளை, “சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன். அதெல்லாம் எதுவும் வராது.” பொய்யாகச் சமாதானம் செய்துவிட்டுக் கிளம்பிச் சென்றான்.

 

அவன் சென்று விட்டதை உறுதி செய்துகொண்டு, மடிக்கணினியை ஆன் செய்தவள் கடவுச்சொல் தெரியாமல் குழம்பிப் போனாள். அவன் பெயர் உட்பட அவன் வீட்டில் இருக்கும் அனைவரின் பெயரையும், மாற்றி மாற்றிப் போட்டுப் பார்த்துச் சோர்ந்து போனவள் கோபத்தில் நகம் கடிக்கத் தொடங்கினாள்.

 

எதார்த்தமாக, அகம்பனின் போன் கண்ணில் விழுந்தது. அதைக் கண்டதும் யோசனை துளிர்விட, ஒரு எண்ணிற்கு அழைத்தாள். அவள் நேரம், அது உடனே எடுக்கப்பட்டது.

 

“ஹலோ யாரு?” என்ற கேள்விக்குத் தன் விபரத்தைப் பதிலாகக் கொடுத்தாள்.

 

“இவ்ளோ நாள் என்ன பண்ற? உனக்குக் கொடுத்த டைம் முடிஞ்சு ரொம்ப நாள் ஆகுது. உன்னை எப்படி காண்டாக்ட் பண்றதுன்னு தெரியாம தலை வெடிக்குது. உன்னோட போன் எங்க? போன காரியம் என்னதான் ஆச்சு?”

 

“வந்த முதல் நாள் ஒரு ஆக்சிடென்ட் ஆகி என்னோட திங்ஸ் எல்லாமே மிஸ் ஆகிடுச்சு. அவன் என் கூடவே இருக்கறதால எதுவும் பண்ண முடியல. ரிப்போர்ட் மழையில நனைஞ்சு வீணாப் போயிடுச்சு. பட், சாப்ட் காபி ஒன்னு லேப்டாப்ல வச்சிருக்கான். பாஸ்வேர்டு என்னன்னு தெரியல.”

 

“இவ்ளோ நாள் ஆகியும் பாஸ்வேர்டைக் கண்டு பிடிக்கலையா? உன்ன நம்பி எவ்ளோ பெரிய பொறுப்பைக் கையில கொடுத்திருக்கேன். இப்படி அசால்ட்டா பதில் சொல்ற?”

 

“பேப்பர் காப்பி இருக்குன்னு மட்டும் தான் எனக்குத் தெரியும். லேப்டாப்ல இருக்க விஷயமே கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் தெரிய வந்துச்சு.”

 

“சரி,‌ அந்த லேப்டாப்ப எடுத்துக்கிட்டு வந்துடு. மத்ததை நம்ம ஆளுங்க பார்த்துப்பாங்க.”

 

“ம்ம்.” என்றவளுக்கு அங்கிருந்து கிளம்ப மனமில்லை.

 

“இன்னைக்கு நைட்டுக்குள்ள, நீ அங்க இருந்து கிளம்பிடனும். இதுக்கு மேல அங்க இருக்கறது ரொம்ப ரிஸ்க்கு. லேப்டாப்ல மட்டும் தான் இருக்கா, இல்ல வேற எங்கயாவது வச்சிருக்கானான்னு ஒன்னுக்கு ரெண்டு தடவை கன்பார்ம் பண்ணிட்டு அந்த லேப்டாப்ப எடுத்துட்டு வா… நம்ம ஆளுங்க ரவுண்டானா கிட்ட வண்டியோட வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க.”

 

“இன்னைக்கு நைட்டுக்குள்ள எடுத்துட்டு வர முடியலன்னா என்ன பண்றது?”

 

“என்ன பண்ணுவியோ எனக்குத் தெரியாது. இன்னைக்கு ராத்திரி நீ அங்க இருந்து கிளம்பி இருக்கணும்.” என்ற கட்டளைக் குரலுக்குக் கட்டுப்பட்டுக் கைபேசியை வைத்தவள் அந்த எண்ணை அழித்தாள்.

 

போன் செய்திருக்கக் கூடாது என்றும், வந்த வேலையைக் கவனி என்றும், இரு வேறு மனநிலையில் சுழன்று கொண்டிருந்தவள், அவன் ஓசை கேட்டதும் அனைத்தையும் மறந்து, “ஆர்மி” துள்ளிக் குதித்து நீரில் மீனாக ஓடினாள்.

 

“என்ன உசுரோட இருக்க?”

 

“அப்போ ப்ளான் பண்ணித்தான் விட்டுட்டுப் போனியா?”

 

“எஸ் எஸ்…”

 

“கொலைகாரப்பாவி!”

 

“நான் போகும் போதே ரெண்டு மலைப்பாம்பு தண்ணில ஊர்ந்துட்டுப் போச்சு. எப்படியும் அதுங்களுக்குத் தீனியாகி இருப்பன்னு நம்பிக்கையா வந்தேன்.”

 

“எரும மாடே!”

 

“ஏண்டி அடிக்கிற, பிசாசு…”

 

“உன்னை நம்பியிருக்க, பச்சப்புள்ளைய இப்படிக் காட்டு விலங்குங்க கிட்ட விட்டுட்டுப் போயிருக்கியே, மனசாட்சி இருக்கா உனக்கு?”

 

“யாரு பச்சப்பிள்ளை?”

 

“உன் முன்னாடி நிக்கிறனே, நான் தான்” முகத்தைச் சுருக்கினாள்.

 

“இதெல்லாம் இந்தப் பச்சப் புள்ள பண்ண வேலைதான்.” என அங்கங்கே கடித்து வைத்திருக்கும் அவள் பல் தடத்தைக் காண்பித்தான்.

 

“டேய் லூசு!” என அவற்றை மறைத்தவள், “இதையெல்லாமா காட்டுவ…” சிடுசிடுத்தாள்.

 

“என்னடி பண்ணி வச்சிருக்க என்னை…”

 

“அப்படியெல்லாம் ஒன்னும் பண்ணல. சும்மா அங்கங்க பல் மசாஜ் அவ்ளோதான்!”

 

“வா… நாய்க்கறி வாங்கிட்டு வந்துருக்கேன், நல்லாத் தின்னுட்டு இன்னும் கடி.” என வாங்கி வந்த உணவை வாயில் திணித்தான்.

 

***

 

இருட்டத் தொடங்கியதும் பயம் கவ்வியது அம்முவிற்கு. தண்ணீர் லேசாகக் குறைந்திருந்ததே தவிர முழுவதும் வற்றவில்லை. கண்ணுக்கெட்டும் வரை தெரியும் நீரில், போவது ஒரு சவாலாக இருந்தாலும், அகம்பனை விட்டு ஒரு இன்ச் நகரக்கூட மனம் வரவில்லை. முரட்டுத்தனத்திற்குச் சொந்தக்காரன், தன்னிடம் கொஞ்சி அடங்கிப் போவதை எண்ணி மனம் மருகியது. முதல் காதல், அதுவும் அவளாகவே விரும்பி ஏற்படுத்திக் கொண்ட காதல் துரோகம் செய்யத் தடுமாறியது.

 

எந்தப் பக்கம் செல்வதென்று தெரியாமல் இருட்டைப் பார்த்துக் கொண்டிருந்தவள் பின்னால் நின்றவன், “என்னடி” எனக் கட்டி அணைத்தான்.

 

வழக்கம்போல் அனைத்துக் குழப்பமும் அவன் ஸ்பரிசம் பட்டதும் விலகியது. மென்மையாகப் புன்னகைத்துத் தன் கழுத்தைச் சுற்றி இருந்த கைகள் மேல் கை வைத்து, “என்ன வேணும்?” கேட்டாள்.

 

“ரொம்ப நேரமா வானத்தையே பார்த்துட்டு இருக்க”

 

“என்னன்னு தெரியல ஆர்மி. என்னைக்கும் அழகாத் தெரியுற இந்த இயற்கை, இன்னைக்குப் பயமாத் தெரியுது.”

 

அவளைத் தன் பக்கம் திருப்பிக் கன்னம் இரண்டையும் பிடித்து, “என்ன யோசனை?” இதமாகக் கேட்டான்.

 

“என்னை உனக்குப் பிடிக்குமா?”

 

“இதைத்தான் யோசிச்சிட்டு இருந்தியா”

 

“என்னை நம்புறியா?”

 

“என்னன்னு விவரமா சொன்னா தான, உனக்கு ஏத்த பதில் சொல்ல முடியும்.”

 

“இப்படியே உன் கூட இருக்கணும்னு மனசு ஆசைப்படுது.”

 

“அவ்ளோதான! என் அம்முக்காக இதைக்கூடச் செய்ய மாட்டேனா? நீயும் நானும் எப்பவும் இப்படித்தான் இருப்போம்.”

 

“உன்ன விட்டுப் பிரியுற சூழ்நிலை வந்தா?”

 

தன் மரணத்தை எண்ணிக் கவலை கொள்கிறாள் என்று தவறாக எண்ணியவன் மனம், அவள் மீதுள்ள காதலைக் குற்றமாகக் கருதியது. சுற்றி இருந்த கைகளை எடுத்தவன் அவள் முகம் பார்க்காது, “சாரி, இது எப்பவும் என் மனசுக்குள்ள இருக்கும். ஆனாலும் ஆசை… உன்னோட எண்ணம் தப்பு இல்ல அம்மு. சாகப் போறவனுக்காக உன் வாழ்க்கையை இழக்காத. என்னோட சுயநலத்துக்காக, இவ்ளோ நாள் உன்னை யூஸ் பண்ணிக்கிட்டதுக்காக மன்னிச்சிடு. இங்க இருந்து எப்ப வேணாலும் நீ போகலாம்.” வேக வேகமாக உள்ளே சென்று விட்டான்.

 

தான் ஒன்று பேச, அவன் ஒன்று புரிந்து கொண்டதைத் தாமதமாக உணர்ந்து அவனைத் தேடிச் சென்றாள். கனத்த இதயத்தோடு மிச்சம் இருக்கும் வாழ்வை எண்ணிக் கலங்கிக் கொண்டிருந்தான் அகம்பன். என்ன செய்வதென்று தெரியவில்லை. சென்று கொண்டிருந்த முற்றுப் பாதையில் பூத்த மலரை உதாசீனம் செய்ய முடியவில்லை. அதை எடுத்து நுகர்ந்து, ஆசையாக அணைத்துக் கொள்ளவும் வழியில்லை. இரண்டுக்கும் நடுவில் திண்டாடிப் போனவன் முன் நின்றாள்.

 

அவள் முகத்தைப் பார்க்கத் துணிவின்றித் தலை குனிந்தான். தாடையில் கை வைத்துத் தன்னைப் பார்க்க வைத்தாள். அவளைத் தவிர்க்க நினைத்தவன், முடியாது இடையோடு முகம் புதைக்க, நெருப்பின் மீது நிற்பது போல் இருந்தது அம்முவிற்கு. யாருக்குத் துரோகி ஆனாலும், இவனுக்குத் துரோகியாகக் கூடாது என்று முடிவெடுத்துத் தன்னோடு சேர்த்துக் கொண்டவள், அன்றைய இரவை அவனோடு கழித்தாள்.

 

இவைதான் தான் செய்த பெரிய தவறு என்று அறியாது விடியலைச் சந்தித்தாள். மழைநீர் முற்றிலும் வடிந்து இருந்தது. சேரும் சகதியும் மட்டுமே அந்த மரவீட்டையும் பாலத்தையும் அலங்கரித்து இருந்தது. ஒரே படுக்கையறையும் குறைந்து, ஒரே இருக்கை இருவருக்கும் படுக்கையறை ஆனதால் உடல் எங்கும் அசதி. சோம்பல் முறித்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த அவனைக் கண்டதும் தன் அசதியை மறந்தவள் அவன் மீது ஏறி அமர்ந்து,

 

“இப்பப் பண்ணு!” என்றாள்.

 

அவளைத் தோள் மீது சுமந்து கொண்டு உடற்பயிற்சி செய்யத் தொடங்கினான் அகம்பன் திவஜ். தன்னவனின் திடத்தை மெய் சிலிர்த்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் அம்மு. வேலை முடியும் வரை அழகாகத் தோள் மீது ஏற்றி வைத்திருந்தவன், சாமர்த்தியமாக நடந்து வந்து தேங்கி இருந்த சேற்றில் தூக்கி வீச, “அம்மா!” என்ற பெரும் அதிர்வோடு விழுந்தாள்.

 

“ஹா ஹா…”

 

முகம் சுருக்கி அவனை முறைத்துக் கொண்டிருந்தாள். அதில் இன்னும் நகைப்புக் கூடியது. கை நீட்டித் தூக்கி விடும்படி சைகை செய்தவளைக் கண்டு கொள்ளாது பாலத்தின் மீது ஏறினான். சேற்றுக்குள் புதைந்திருந்த கால்களை வலுவாக வைத்து அதிலிருந்து வெளி வந்தவள், ஒரே ஓட்டமாக ஓடி அவன் முதுகில் ஏறிக் கொண்டாள். ஒரு நொடி தடுமாறி, அவளைத் தாங்கியவன் கீழே இறக்கிவிட முயற்சித்தான். உடும்புப்பிடியாக ஒட்டிக் கொண்டவள் உச்சந்தலையைப் பிடித்து ஆட்ட, வலி பொறுக்க முடியாதவன் வலது கையைப் பின் சுழற்றி அவளை முன்னே இழுத்தான். பின்னால் இருந்தவள் முன்னால் வந்ததை நம்ப முடியாது கண்களை விரிக்க, தொப்பென்று கீழே வீசிவிட்டு நடந்தான்.

 

இரண்டாம் முறையாகத் தோல்வியுற்றவள் பழி தீர்க்கப் பின்தொடர, அவளை மீண்டும் மீண்டும் தோற்கடித்துக் கொண்டிருந்தான், மிகப்பெரிய தோல்வியைக் கமல் மூலம் சந்திக்கப் போவதை அறியாது.

 

 

அம்மு இளையாள்.

Click on a star to rate it!

Rating 4.1 / 5. Vote count: 20

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
14
+1
2
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்