Loading

வானம் 14

கோவில் பிரகாரத்தில் அமர்ந்திருந்தவளின் கண்களில் நீர்தடம் வற்றிப் போயிருந்தன. எத்தனை நேரம் அழுதாளோ அது உள்ளே இருந்த கடவுளுக்கே வெளிச்சம். கண்ணீர்த் தடத்தால் உப்பேறியிருந்த கன்னங்களை அழுந்தத் துடைத்துக் கொண்டவள், மனதில் ஏற்றிய தீர்மானத்தோடு கோவிலிருந்து புறப்பட்டாள் ரம்யா.

தோட்டத்தில் தென்னைமரத்தின் கீழே சோகமே உருவாய் அமர்ந்திருந்தாள் ரேவதி. அவளருகில் யாரோ அமரும் சப்தம் கேட்டும் அவள் திரும்பாமல் எங்கோ வெறித்துக் கொண்டிருக்க, “ரேவதி” என அவள் கைமேல் தன் கைகளை வைத்தவன் அவளது முகத்தை மறுகைகளால் தன்புறம் திருப்பினான் பிரஷாந்த்.

தண்ணீர் இறைக்க வந்தவன் ரேவதி அங்கு அமர்ந்திருப்பதை கண்டு அவளருகே வர, அவளோ எங்கோ வெறித்துக் கொண்டிருப்பதைக் கண்டு அவள் அருகில் அமர்ந்தான். அப்போதும் அவள் திரும்பாமல் இருக்கவே அவளது முகத்தை தன்புறம் திருப்பினான்.

“என்ன மா, ஏன் ஒருமாதிரி இருக்க?” என தாடையை பற்றி வினவ, அவளோ அவனது கரத்தை தன் இருகரங்களாலும் பற்றிக் கொண்டாள். நடுங்கும் அவளது கரங்களே அவளின் பயத்தை அவனுக்கு எடுத்துரைக்க, “இன்னும் அதையே நினைச்சிட்டு இருக்கியா ரேவதி? ப்ளீஸ் மா… இப்போ நடக்கிற எதுவும் நிஜம் இல்ல, கண்டிப்பா நமக்கு ஏத்த மாதிரி சூழ்நிலை மாறும்” என அவளுக்கு தைரியமூட்டினான் பிரஷாந்த்.

“இல்ல அத்தான். எனக்கு என்னமோ உள்ளுக்குள்ள படபடப்பா இருக்கு. ஏதாவது தப்பா நடந்துட்டா!” என அவன்முகம் நோக்கியவளின் கண்களில் அத்தனை பரிதவிப்பு.

“இன்னிக்கு ரம்யாவ பாத்தேன்” என்றவனை, விழிவிரிய நோக்கினாள் ரேவதி. தான் ரம்யாவுடன் பேசியதை அவளிடம் கூறியவன், “கண்டிப்பா இந்த கல்யாணம் நடக்காது மா. கண்டதையும் யோசிக்காம நீ பழையமாதிரி இருக்கணும், ப்ளீஸ்” என இறைஞ்சியவனுக்காக அவளது இதழ்கள் சற்றே விரிய தலை சம்மதமாய் ஆடியது.

அவன் மனமோ, தன் அம்மாவின் அடுத்தகட்ட நகர்வு எப்படியாக இருக்கும் என சிந்தித்துக் கொண்டிருந்தது. என்னதான் ரம்யா இந்த திருமணம் வேண்டாம் என்று கூறினாலும் அதற்கு தன் அம்மா சம்மதிப்பாரா என்ற ஐயமே அதற்கு காரணம்.

ல்லூரி முடிய தாமதமானதால் விடுதிக்குச் செல்லாமல் நேராக சூப்பர் மார்கெட்டிற்கு சென்றனர் சரயுவும் சம்யுக்தாவும். அவர்களது கல்லூரி பையும் உடன் இருக்க, சித்தார்த் கேள்வியோடு அவர்களை பார்த்தான்.

அவனது கேள்விக்கு எப்பொழுதும் சம்யுக்தாவே பதில் சொல்லி பழக்கப்பட்டிருந்ததால் அவள் காரணத்தைக் கூற எத்தனிக்கும் முன், சரயு பதிலளிக்கத் தொடங்கினாள்.

“இன்னிக்கு ஸ்பெஷல் கிளாஸ் இருந்துச்சு சித் சார். லேட்டானதால நேரா இங்கயே வந்துட்டோம்” என்றவள், “இங்க எங்களோட பேக்க வச்சுக்கலாமா சித்… சார்…” என பெயரையும் சாரையும் தனித்தனியாக இழுத்துப் பேச, குழப்பத்துடன் அவளை ஏறிட்டவனின் தலை சம்மதமாய் ஆடியது.

அவனது மேஜையின் அருகே இருவரது கைப்பையையும் சரயுவே வைக்க, ‘ஆரம்பிச்சுட்டாளா, ஆண்டவா!’ என சம்யுக்தா கடவுளை துணைக்கு அழைத்துக் கொண்டிருந்தாள்.

அதேநேரம் இதழிகாவும் அங்கு வந்துசேர அதன்பின் அவர்கள் இருவரும் ஒன்றாக ஐக்கியமாக, சரயுவிடம் மாறுதலை உணர்ந்த சித்தார்த் யோசனையுடனே அவனது பார்வை அவளை பின்தொடர, அதனை அறிந்தவளோ அவனது பார்வையை எதிர்கொண்டாள்.

அதனை எதிர்பார்க்காதவன் சற்று தடுமாற, அவளது புருவமோ ‘என்ன’ என கேள்வி எழுப்பியது. அவளது கேள்விக்கு அவனது நெஞ்சம் படபடக்க, பெருமூச்சொன்றை இழுத்து விட்டவன் வேகமாக தன் முன்னால் இருந்த நோட் ஒன்றை எடுத்து வேகமாக அதனை புரட்ட ஆரம்பித்தான்.

சரயுவின் இதழ்கள் குறும்பால் விரிய, தன் தந்தைக்கும் அவளுக்குமிடையே நடந்த சம்பாஷணைகளை அறியாத இதழிகாவோ, “ஏன் சரயு சிரிக்கிற, நான் சொன்ன ரைம்ஸ் நல்லா இல்லையா?” என முகத்தில் சோகத்தை அப்பிக்கொண்டாள். “அச்சோ கியூட்டி… உன் ரைம்ஸ் நல்லா இல்லனு சொல்லுவனா! நீ தான் கியூட்டி ஆச்சே. அப்போ உன் ரைம்ஸ்ம் கியூட்டா தான இருக்கும்!” என அவளை சமாதானப்படுத்தத் தொடங்கினாள்.

இதனை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்த சம்யுக்தாவிற்கோ அடிவயிறு கலகலக்க ஆரம்பித்தது. அதன்பின் அவர்களது வேலைகளை பார்க்கத் தொடங்கவும் சித்தார்த்தால் அங்கு அதற்குமேல் அமர முடியாமல் போக, நெற்றியை அழுந்த தேய்த்தவாறே வெளியே எழுந்து சென்றான்.

கடை வாசலில் நின்றிருந்தவனின் மனமோ அலைப்பாய்ந்துக் கொண்டிருந்தது. சரயுவின் பார்வை மாற்றம் அவனுள் பூகம்பத்தையே உருவாக்கி இருக்க, நெஞ்சம் படபடக்கத் தொடங்கியது.

இதே படபடப்பை இதற்கு முன் அனுபவித்தது அவனது ஞாபகங்களில் கறுப்பு வெள்ளை படமாக ஓடத் தொடங்கியது.

தேவிகாவின் கழுத்தில் மஞ்சள் நாணை அணிவிக்கும்போது அவனது நெஞ்சம் படபடத்துக்கொள்ள, தன் வாழ்வில் இன்னொரு ஜீவனும் பங்கெடுக்கப் போகின்ற எதிர்பார்ப்பும் மேலெழ காதலோடு நோக்கினான் காஞ்சிப்பட்டில் பவ்யமாய் தன்னருகே அமர்ந்திருந்தவளை.

குனிந்த தலை நிமிரமால் இருந்தவளை வெட்கமோ என எண்ணிக்கொண்டு அவளது கழுத்தில் மூன்று முடிச்சிட, அந்நொடிதனில் குடும்பஸ்தனான் சித்தார்த்.

அதன்பின் நடந்த சடங்கு, சம்பிரதாயங்கள் இருவருக்குமே உடற்சோர்வை கொடுக்கவும் இருவரும் பேசிக்கொள்ள சந்தர்ப்பம் அமையாமலே போய்விட்டன. திருமணம் முடியும் வரையுமே தேவிகாவுடன் அவன் பேச முற்பட, ஆனால் அதற்கான சந்தர்ப்பங்கள் அமையாமல் போய்விட்டன. சந்தர்ப்பங்கள் அமைந்தாலும் அது தடுக்கப்பட்டுவிட்டன என்றே கூறலாம்.

மிகுந்த எதிர்பார்ப்போடு அன்றிரவு தன் அறையில் காத்திருந்தான் சித்தார்த். பெண்கள் புடைசூழ, கையில் பால் சொம்போடு அவனது அறைக்குள் நுழைந்தாள் தேவிகா.

அறைக்குள் வந்தவளை தன்னருகே அமர சொல்ல, அப்பொழுது தான் குனிந்த தலை நிமிர்ந்தாள் தேவிகா. அவளது மனதிலோ அவளது தாயின் வார்த்தைகளே ஓடிக்கொண்டிருந்தன.

“இங்க பாரு டி. நம்ம என்னதான் ஆசப்பட்டாலும் நடக்க வேண்டியது தான் நடக்கும். அதுனால பழச எல்லாம் மறந்துட்டு மாப்பிள்ளையோட சந்தோசமா வாழப் பாரு. தங்கமான பையனா இருக்காப்டி. வாழ்க்கைய தொலைச்சுறாத”

அவளும் அந்த நிலைக்கு வந்திருந்தாள் என்றே கூறலாம். அவளது காதல் விவகாரம் தெரிந்தவுடனே அவளது வீட்டார் பேசி முடித்த சம்பந்தம் இது. முதலில் பெற்றோரை எதிர்த்து ஓடிப்போக நினைத்தவளுக்கு காதலன் கைவிரிக்க, இறுதியில் விதியே கதி என்று இதோ இன்று சித்தார்த்தின் மனைவியாக அவனது அறையில் அமர்ந்திருக்கிறாள்.

“ரொம்ப டயர்ட்டா இருக்கா தேவி?” என்றவனை நேர்கொண்டவளுக்கு என்ன பதிலளிப்பது என புரியாமல் திருதிருவென முழித்தாள். அவளது தடுமாற்றத்தை உணர்ந்தவன், “ஹேய், கூல்… கண்டிப்பா உனக்கு கம்போர்ட்டா இருக்காதுனு தெரியும். பட், அதுக்காக…” என இழுத்தவனை, நோக்கியவளுக்கு நெஞ்சம் படபடத்தது.

என்னதான் இந்த வாழ்க்கையை ஏற்றுக்கொள்ள அவள் மனம் ஒத்துழைத்தாலும் இப்போதைய அந்த முதலிரவு அறை சற்றே மிரட்டியது எனலாம். அவளது மிரட்சியை கண்டவனுக்கு தான் கூற வந்ததை தவறாக புரிந்துக் கொண்டாளோ என்றெண்ணி இதழ்களில் குறுநகை படர, “ரிலாக்ஸ் தேவி. உன் சம்மதம் இல்லாம இங்க எதுவும் நடக்காது” என்றவனின் குரலில் இதமான சந்தோச அலைகள் வீசின.

“அதுவந்து…” என அவள் தடுமாற, “நான் சொல்ல வந்தத முழுசா சொல்லி முடிக்கிறதுக்கு முன்னயே உன் கற்பனை குதிரைய தறிகெட்டு ஓட விட்டா எப்படி தேவி!” என பேசிக்கொண்டே காலைகளை மடக்கி சம்மணங்காலிட்டு அமர்ந்துக்கொண்டான் அவளை பார்த்தவாறே.

அவள் அவன் முகம் நோக்க, “நீ பயப்படற மாதிரி எதுவும் நான் பண்ண மாட்டேன். ஓகே வா, ப்ளீஸ் கொஞ்சம் பிரண்ட்லியா பேசலாமே” என்றவனின் குரலோடு கண்களும் அவளை பார்த்து இறைஞ்சின.

“சாரிங்க… அது, கொஞ்சம் பதட்டமா இருந்துச்சு…” என்றவள் மேற்கொண்டு பேச தயக்கமாக இருக்க அவனை தயக்கத்தோடு ஏறிட்டாள்.

“இட்ஸ் ஓகே தேவி. பெரியவங்க சடங்கு, சம்பிரதாயம்னு இதெல்லாம் ஏற்பாடு பண்ணிருக்காங்க. அதுக்காக எல்லாமே இப்பவே நடக்கணும்னு இல்ல. நம்மளும் இன்னும் ஒருத்தருக்கொருத்தர் புரிஞ்சுக்கவே ஆரம்பிக்கல. இதெல்லாம் தானா நடக்கணும்” என்றவன் ‘இதெல்லாம்’ என அவன் குறிப்பிடும்போது அவன் கண்கள் கட்டிலையும் அறையையும் வலம் வந்தது.

அவனின் வார்த்தைகள் அவளுக்கு நிம்மதியை அளித்தது போலும். சற்றே நிமிர்ந்து அமர்ந்தாள். சற்றுநேரம் பொதுவாக பேசியவர்கள் உடற்சோர்வால் நித்திராதேவி ஆட்கொள்ள முற்படுவதை உணர்ந்து உறக்கச் சென்றனர்.

ழைய நினைவுகளில் உழன்றுக் கொண்டிருந்தவனை நிகழ்வுலகிற்கு அழைத்து வந்தது பாண்டியனின் அழைப்பு. அதில் தன்னை மீட்டுக் கொண்டவன் பாண்டியனுக்கு பதிலளித்துவிட்டு மீண்டும் தன் இருப்பிடத்திற்கு வந்தான்.

இவ்வளவு நேரம் அவனது இருக்கையையே யோசனையுடனே பார்த்துக் கொண்டிருந்தவள் முகவாட்டத்தோடு வந்து தன் நாற்காலியில் அமர்வதைக் கண்ட சரயு, “ஏன் ஒரு மாதிரி இருக்காரு?” என வாய்விட்டு புலம்பினாள்.

அவள் அருகே இருந்த வாடிக்கையாளரோ புரியாமல், “என்ன சிஸ்டர் சொன்னீங்க?” என வினவும்போது தான் தான் வாய்விட்டு கூறியதை உணர்ந்தவள், “ஒன்னுமில்ல மேடம். நீங்க கேட்ட பொருள் இங்க இருக்கு” என கைகாட்ட, அவரும் அதற்குமேல் எதுவும் வினவாமல் தனக்கு தேவையானதை எடுத்துக் கொண்டிருந்தார்.

சரயுவிற்கு தன் மனதின்போக்கு தனக்கே பிடிபடாமல் இருந்தது. சம்யுக்தாவிடம் விளையாட்டாய் தான் சித்தார்த்தை காதலித்தால் என்ன என்று கூறியதாக அவள் எண்ணினாலும் அவள் மனமோ, ‘இல்லை உன் மனம் அறிந்தே அதை கூறினாய்’ என வாதிட குழப்பமான மனநிலையில் இருந்தாள்.

சில நாட்களாக அவனுடன் பேசாமல் இருந்தவள் இன்று தானே வலிய பேசவும் தற்போது அவனையே அவளது கண்கள் பின்தொடரவும் இன்னும் குழப்பங்கள் நீளத் தொடங்கின. “நான் என்ன பண்றேன்… சித்தார்த் கியூட்டியோட அப்பா. அவ்ளோ தான், வேற எதுவும் இல்ல” என தனக்குத்தானே கூறிக் கொண்டாலும் அவளது அனுமதியின்றி அவளது கண்கள் அவனைத் தான் பின்தொடர்ந்தது.

தன் மனதை ஒருநிலைப்படுத்த முயன்று வேலையின்புறம் கவனத்தை திசைத்திருப்பினாள் சரயு. அவளின் பார்வை தன்மேல் படிவதை உணர்ந்தவனுக்கு ஏனோ மனம் அலைப்புற்றது. இதை மேலும் வளரவிடக்கூடாது என எண்ணம் செல்ல, இதழிகாவை நினைத்தவனுக்கு அது சாத்தியமற்றது எனப் புரியவும் தலைவலி மேலும் அதிகரித்தது.

வேலை முடிந்து விடுதிக்கு வந்தவர்கள் இரவுணவை முடித்துவிட்டு தோழிகளோடு கதைத்துக் கொண்டிருந்தனர். சரயுவின் ஃபோன் ஒலிக்க, யாரென்று பார்த்தவள் “அண்ணா கூப்பிடறான், நீங்க பேசிட்டு இருங்க. நான் வந்தறேன்” என்றவள் அழைப்பை ஏற்றவாறே மொட்டைமாடிக்கு செல்லத் துவங்கினாள்.

“என்ன ண்ணா, அம்மா லூசுத்தனமா திரும்ப எதுவும் பண்ணிட்டு இருக்கா?” என எடுத்தவுடனே வினவ, “இல்ல குட்டிமா… இப்போ அமைதியா இருக்கிற மாதிரி தான் இருக்கு. ஆனாலும், மனசுக்குள்ள ஏதோ தப்பா படுது டா” என்றவனுக்கு உண்மையிலேயே ஏதோ தவறாகப்பட்டது.

என்னதான் அவன் ரேவதிக்கு தைரியமூட்டினாலும் அவன் மனமும் படபடத்துக் கொண்டிருந்தது தான் உண்மை. எங்கே அதனை தானும் வெளிப்படுத்தினால் ரேவதி இன்னும் கலங்கிப் போயிருவாளோ என்றெண்ணி அவளுக்கு சமாதானமூட்டினான் பிரஷாந்த்.

“ஏன் ண்ணா, அவ தான் இப்படி பயப்படறான்னா நீயுமா?” என்ற சரயுவிற்கு, “அப்படி இல்ல டா, இவ்ளோ நடந்துட்டு இருக்கும் போதும் என்னால நான் ரேவதிய தான் காதலிக்கிறேன், அவளத் தான் கட்டிப்பேனு அம்மாட்ட சொல்ற தைரியம் இல்லாம தான இருக்கேன். இந்த தைரியம் கூட இல்லாத என்னை…” என மேற்கொண்டு பேச முடியாமல் அவன் அமைதியாக,

“இத சொல்ல உனக்கு தைரியம் இல்லனு எப்படி ண்ணா சொல்லுவ! உன் காதல் விசயம் அம்மாவுக்கு தெரியும் தான… தெரிஞ்சே தான இந்த ஏற்பாடு பண்றாங்க. அப்போ நம்ம சொன்னாலும் அவங்க ஏத்துக்குவாங்கனு எப்படி நம்ப முடியும்? எமோஸ்னலா பிளாக்மெயில் தான் பண்ணுவாங்க. ரேவதி யாரு, அவங்க சொந்த அண்ணன் பொண்ணு. ஆனா, அவங்க இரத்தத்தையே ஏத்துக்க மனசு இல்ல. அந்த அளவுக்கு இதுல ஊறிப் போய்ட்டாங்க. ஆனா ஒன்னு, அவங்க என்ன பண்ண நெனச்சாலும் அது நடக்காது. நீ மொதல்ல தைரியமா இரு ண்ணா” என தன் உடன்பிறந்தவனுக்கு தைரியமூட்ட, அவனோ இன்னும் கலங்கிய மனநிலையிலேயே இருக்க முடிந்தளவு அவனை தைரியமூட்டியவள், பேசிக்கொண்டே மாடிக்கு வந்திருந்ததால் வானத்தில் தெரிந்த நிலவையே வெறித்துக் கொண்டிருந்தாள்.

எவ்வளவு நேரம் அவள் அப்படியே நின்றாள் எனத் தெரியவில்லை. சம்யுக்தா வந்து அவள் தோள் தொட்டு தன்புறம் திருப்பும் வரை வெற்றுப் பார்வையையே சுமந்திருந்தாள் சரயு.

“என்னடி, ஃபோன் பேசிட்டு வரேன்னு வந்தவ மொட்டை மாடில என்ன பண்ணிட்டு இருக்க?” என்றவள் தன் தோழியின் முக வாட்டத்தைக் கண்டவள், “அண்ணா என்ன சொன்னாங்க டி, அங்க எதும் பிரச்சினையா?” என்றாள் சம்யுக்தா.

“ப்ச், புதுசா என்ன பிரச்சினை வந்தறப் போகுது சம்யு. வழக்கமா நடக்கிறது தான். அண்ணா அம்மா பார்த்துருக்கிற பொண்ணு ரம்யாவ பாத்து பேசுனதா சொன்னான். அதே நெனப்புல நின்னுட்டு இருந்ததுல நேரம் போனதே தெரியல” என்றவள் மாடியின் கைப்பிடி சுவரில் சாய்ந்து நின்றுக் கொண்டாள் சரயு.

“ஓ… அந்த பொண்ணு என்ன சொல்லுச்சாம்?” என்றவளுக்கு பிரஷாந்த் ரம்யாவிடம் பேசியதைக் கூறியவள், “ஏன் என் அம்மா இப்படி பண்றாங்கனே தெரியல. பெத்த புள்ளையோட சந்தோசத்த விடவா அவங்க கொள்கை பெருசா தெரியுது!” எனப் புலம்ப, புரியாமல் நோக்கினாள் சம்யுக்தா.

“அன்னிக்கே நான் கேட்டேன், ஏன் அம்மா அண்ணா காதலுக்கு சம்மதிக்க மாட்டாங்கனு. நான் கேட்ட எந்த காரணமும் இல்லனு சொல்லிட்ட. அதத் தாண்டி வேற என்ன காரணம் அவங்க காதல ஏத்துக்க விடாம உங்க அம்மாவ தடுக்குது?” என்றவளுக்கு ஏதோ கூறி சமாளிக்க முற்பட்ட சரயுவை தடுத்தாள் சம்யுக்தா.

“எப்பவும் போல அப்புறம் சொல்றேனு ஓடாத. எனக்கு காரணம்னு தெரிஞ்சே ஆகணும். சொந்த மாமன் பொண்ணு, உங்கள மாதிரியே அவங்களும் வசதில குறைஞ்சவங்க கிடையாது. குடும்ப பிரச்சினையும் இல்ல. ஜாதகம் கூட பிரச்சினை இல்லனு சொல்லிட்ட. இதத் தாண்டி வேற என்ன காரணம் டி அவங்கள பிரிக்க நினைக்க? அந்த காரணத்த தெரியாம எனக்கு உண்மையாலுமே மண்டை வெடிக்கிற மாதிரி இருக்கு. தயவு செஞ்சு என்னனு சொல்லிரு” என்றவள் அதை தெரிந்துக்கொள்ளாமல் உன்னை விட மாட்டேன் என்பதுபோல் அவளது கரங்களை இறுகப் பற்றியிருந்தாள் சம்யுக்தா.

“ம்… சொல்றேன் சம்யு” என்ற சரயுவையே பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு அவளின் பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

_தொடரும்

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
12
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. மிகவும் அழகான நாவல். படித்து முடிக்கும் வரையிலும் கதையினை விட்டு நகர இயலாதவாறு வெகு சுவாரஸ்யமாக அமைந்தது கதையின் போக்கு. எழுத்தாளருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.