Loading

ஆடவனின் வெற்று மார்பில் முகம் முட்டி விருட்டென விலகிய நிதர்ஷனா, “ஒரு பொம்பளைப்பிள்ளை முன்னாடி இப்படியா சட்டை இல்லாம நிப்பீங்க?” என்றாள் முறைத்து.

“நீ பொண்ணுன்னு அப்போ அப்போ சொல்லு…” என ஏளனப் பார்வை பார்த்து விட்டு உடற்பயிற்சிக் கூடத்திற்குச் சென்றான் யாஷ் பிரஜிதன்.

கழுத்தை வெட்டிக்கொண்டவள், “மெத்தைல கால் வைக்காம எப்படி தூங்குறதாம்? இவனோட பெரிய இம்சை” எனப் புலம்பியபடி உறங்கிப்போனாள்.

அடுத்த இரு நாள்களும் வீட்டினுள்ளேயே கழிந்தது. நிதர்ஷனாவிற்கும் கதிருக்கு பைத்தியமே பிடிப்பது போல இருக்க, எத்தனை நேரம் தான் மெஷினுடன் பேசித் தீர்ப்பது.

“இன்னாடா எவ்ளோ நேரம் தான் உன் மூஞ்ச நானும் என் மூஞ்ச நீயும் பாப்ப. இந்த மெஷின் செஞ்சு தர்ற ஒரு சாப்பாடும் விளங்கல. வாழ்க்கையே வெறுத்துரும் போல” எனக் கடுப்புற்றாள்.

“பேசாம தப்பிச்சுப் போயிட்டு ஏரியா ஆளுங்களை கூட்டிட்டி வரட்டா?” கதிரவன் யோசனை மின்னக் கேட்க, அவளுக்கோ தன்னைத் துப்பாக்கியால் சுட வந்தவனைச் சுட்டு வீழ்த்திய யாஷ் பிரஜிதனின் கடுமை நினைவு வந்ததில்,

“இவ்ளோ நாள் நீ மூடிட்டு இருந்த மாதிரியே இனியும் இருடா. உன் ஓடிப்பிடிச்சு விளையாட்டை எல்லாம் ஸ்கூல்ல பண்ணதோட மறந்துடு” என்றாள் புலம்பலாக.

‘இவன் வேற நெலம புரியாம…’

கதிரவனோ, “சரி இந்த மஞ்சக்கயிறை நீயா கட்டிக்கிட்டியா?” எனக் கேட்க,

எச்சிலை விழுங்கியவள், “இல்ல தானா கழுத்தாண்ட உக்காந்துக்கிச்சு… உன்னாண்ட பேசுற நேரத்துக்கு நான் எலிசா கூட பாட்டுக்கு பாட்டு விளையாடி இருப்பேன்” என்று அறைக்கு ஓடிவிட்டாள்.

அவன் இக்கேள்வியைக் கேட்டு விட கூடாதென்றே அவனிடம் அவ்வளவாகப் பேச்சுக் கொடுக்காமல் கண்ணாமூச்சி விளையாடினாள்.

ஆனால் யாஷ் பிரஜிதனோ, தனது அலுவல் அறையில் பாதி நேரத்தையும், தனதறையில் எலிசாவுடன் ஏதேதோ ஆங்கிலத்தில் உரையாடி சில பொழுதுகளையும், உடற்பயிற்சி கூடத்தில் மீதி நேரத்தையும் கழித்து, பொலிவாக இருந்தான்.

“ஒனக்கு வீட்டுக்குள்ளேயே இருக்க போர் அடிக்கலையா கலப்பட கண்ணுக்காரா?” முடியாமல் கேட்டே விட்டாள் நிதர்ஷனா.

மடிக்கணினியில் புதைந்திருந்தவனோ, “போர் அடிக்கல. அப்போ அப்போ நீயும் தட் கதிரவனும் பேசுறது டிஸ்டர்பன்ஸ்ஸா இருக்கு” என்றதில் நெஞ்சில் கை வைத்தாள்.

“யோவ்… இப்படியே நாங்க ஆறு மாசம் இருந்தா, எங்களுக்கு பைத்தியம் பிடிச்சுடும். இங்க இருந்து போறப்ப, நேரா கீழ்ப்பாக்கத்தாண்ட வண்டிய வுட வேண்டியது தான்” என மிரண்டாள்.

“இப்ப என்ன செய்யணும்ன்ற” யாஷிடம் லேசான எரிச்சல்.

“பேச்சுத்துணைக்கு ஆள் வேணும்”

“அதான் எலிசா இருக்கே. அதுட்ட பேசு. பெஸ்ட் கம்பேனியன்!”

“எதே? எலிசா பேச நல்லா தான் இருக்கு. இதோ பாத்திரம் தேய்ச்சு தருது, வீடு தொடைச்சு உட்து, துன்ன சோறு கூட தருது… இவ்ளோ ஏன், பாட்டு பாடி தூங்க கூட வைக்கிது. அதுக்காக அதை ப்ரெண்டாக்க முடியுமா? கதிருக்கு வேற நம்ம நெசமாவே கல்யாணம் பண்ணது தெரியாது. தெரிஞ்சா அது ஒரு பக்கத்துக்கு வெட்டி டயலாக் பேசும். உண்மையை மறைச்சு அவனாண்ட பேசவும் ஒரு மாறிக்கா இருக்கு எனக்கு…” எனப் புலம்பித் தள்ள,

“நேரா விஷயத்துக்கு வா!” என்றான் நெற்றியைத் தேய்த்து.

“இங்கயே இருக்குறதுக்கு, உங்க அம்மா வீட்டுக்குப் போய் பேசிட்டு இருக்கலாமே. நல்லா பொழுது போகும்ல” என இளித்தபடி கேட்க, அவன் முகத்தில் ஒரு இறுகள்.

“அங்க போய் நீ எதையாவது உளறிக் கொட்டி நீ ரித்தி இல்லன்னு தெரியிறதுக்கா” கடுமையாய் யாஷ் கேட்க,

“ஐயோ சத்தியமா இல்ல அரக்கா. நான் நீட்டா பேசி, ரித்தியை ஓவர்டேக் பண்ணிடுவேன் பாரேன்” அவள் தலையில் அடிக்காத குறையாக சத்தியம் செய்தாள்.

“நோ வே!” முடிவாய் அவன் மறுத்து விட்டதில், “சரி அவங்களையாவது இங்க வந்துட்டுப் போக சொல்லு” என்றாள் பரிதாபமாக.

“லுக்… எனக்குன்னு ஸ்பேஸ் வேணும். வீட்ல ஹியூமன்ஸ் இருக்குறது எனக்குப் பிடிக்காது” என்றதில் தலையைச் சொறிந்தவள், “அப்போ ரித்தியைக் கட்டிக்கிட்டு என்னையா செய்வ?” என முறைப்பாக கேட்டாள்.

“அவளும் என்னை மாதிரி ஒரு ரிசர்ச்சர் தான். எனக்கும் அவளுக்கும் பேச நிறைய விஷயம் இருக்கும் பிசினஸ் ரிலேட்டடா. பட், தட் பேமிலியை எல்லாம் என்னால உள்ள விட முடியாது. அண்ட் மோர் ஓவர், இப்போதைக்கு இந்த ஏஐ நம்புறதே நல்லது நிதர்ஷனா. பிகாஸ், மனுஷங்க மாதிரி இது மாறாது” என்றவனின் முகத்தில் அத்தனைக் கடினத்தன்மை.

இமைகள் கொட்ட அவனையே பார்த்திருந்தவள், “இந்த டெக்னாலஜியை மட்டும் நம்பலாமா? கொஞ்ச நாள் முன்ன ஒரு நியூஸ் பாத்தேன். ஏஐ கூட பேசிட்டு இருந்த ஒரு பொண்ணுட்ட, ஆப்பை க்ளோஸ் பண்ணுனா பெர்சனல் போட்டோஸ நெட்ல போட்டுடுவேன்னு மிரட்டுச்சாமே… ஆறறிவு இருக்குற மனுஷனையே நம்ப மாட்டேன்னு சொல்ற. அறிவே இல்லாத இந்த ஏ. ஐயை மட்டும் எப்படி நம்புறதாம்?” என்றாள் உதட்டைச் சிலுப்பி.

“ஏ. ஐக்கு அறிவு இல்லைன்னு யார் சொன்னா? உணர்வு அறிவு, மொழி அறிவு, தர்க்க அறிவு (லாஜிக்கல் அண்ட் மேத்தமேட்டிக்ஸ்), உணர்ச்சி அறிவு , இயக்க அறிவு, முடிவெடுக்குற அறிவுன்னு இன்னும் நிறையவே இருக்கு. அஃப்கோர்ஸ் இது எல்லாம், நேரோ இன்டெலிஜென்ஸ்(narrow Intelligence ) தான். பட், வருங்காலத்துல வர்ற ஏ. ஐ மனுஷனைப் போல பிராட் இன்டெலிஜென்ஸ் கொண்டதா இருக்கும். என்னோட ரிசர்ச்சும் அது சம்பந்தப்பட்டது தான்” என்றவனை ஆ வென கன்னத்தில் கை வைத்துப் பார்த்தாள்.

“அண்ட் தென் நிதா, கண்டுபிடிப்புன்னு ஒன்னு இருந்தா அதுல பாசிடிவும் இருக்கும் நெகட்டிவும் இருக்கும். அதை பிரிச்சு பாக்குறதுக்கு தான நமக்கு ஜீசஸ் ஆறறிவ குடுத்து இருக்காரு. என்ன தான் பாம்பை பெட்டா வளர்த்தாலும் அதோட வாயில கையை வச்சா கொத்த தான செய்யும். நம்மளை வளர்த்தவருன்னு, கொத்தாம விடுற அறிவு பாம்புக்கு கிடையாது. அதே மாதிரி நம்ம உயிரைக் குடுத்து பாதுகாக்குற எந்த ஜீவன்கிட்டயும் லிமிட் அறிஞ்சு நடக்குறது மனுஷனோட பகுத்தறிவு. அந்த பகுத்தறிவு இல்லாம, இந்த ஏ. ஐ யை கண்டபடி யூஸ் பண்ணுனா, அது கொத்த தான் செய்யும்” என்றவனின் விளக்கத்தில் சபாஷ் போடவே தோன்றியது.

“சரிதான்… ஆனா இந்த மாதிரி அட்வான்ஸ்ட் ரோபோவெல்லாம் உங்களை மாதிரி பெரிய பெரிய ஆளுங்களுக்கு வேணும்னா யூஸ் ஆகும். ஏழை மக்களுக்கு இதுனால என்ன யூஸ் இருக்கும்?”

“நீ சொல்ற பெரிய பெரிய ஆளுங்க, உலகத்துல வெறும் ஒரு பெர்சன்ட் தான் இருக்காங்க. ஆனா அவங்க கண்ட்ரோல்ல தான் உலகத்தோடு 45 பெர்சன்ட் இருக்கு… இவங்களை ரீச் பண்ணுனா தான், கொஞ்ச கொஞ்சமா எல்லாமே பழக்கத்துக்கு வரும். ஸ்ஸீ… தமிழ்நாட்டுல முன்னாடி எல்லாம் பஸ்ல போறதுக்கே யோசிச்சு நடந்து போறவங்க இருந்தாங்க. இப்போ எலெக்ட்ரிக் பைக் எல்லாம் வந்துடுச்சு. பக்கத்து ஸ்ட்ரீட்க்கே பைக்ல போற மாதிரி மக்களோட மைண்ட்செட் எப்பவோ மாறியாச்சு. உன்ன மாதிரி யோசிச்சுட்டு இருக்குறதுலாம் மொத்தமே 20 பெர்சன்ட் தான்” எனத் தோளைக் குலுக்கிட,

“கவுன்டிங்ல ரமணா விஜயகாந்தை மிஞ்சிடுவீங்க போலயே. விட்டா என்னையவே மண்டையை கழுவி உங்க ரோபோவை வித்துருவீங்க போல…” என்றதில், “உங்கிட்ட சேல் பண்ணி என் ரோபோவைக் கஷ்டப்படுத்த விடமாட்டேன்…” போகிற போக்கில் அவளுக்கு குட்டு வைத்திட, இடுப்பில் கரம் கொடுத்து முறைத்தாள்.

அவனோ “தென், யார் அந்த ரமணா விஜயகாந்த்?” எனக் கேட்டிட, “ம்ம் என் ஒன்னு விட்ட அத்தைப் பையன்…” எனக் கொணட்டி விட்டு பால்கனிக்குச் செல்ல, யாஷ் பிரஜிதன் ‘சரியான இம்சை’ எனத் தலையாட்டிக்கொண்டான்.

பால்கனிக்குச் சென்றவளுக்கு கண்ணில் பட்டது பக்கத்து வீட்டின் பின்பக்கம் தான். அழகாய் செடிகள் நட்டு வைத்திருந்தார்கள்.

“ஹாய் கண்மணி…” பால்கனியில் நின்றே துணிதுவைக்கும் கல்லில் தனது தாவணியைத் துவைத்துக் கொண்டிருந்த கண்மணியை அழைத்தாள்.

ரித்திகாவான நிதர்ஷனாவைக் கண்டதும் கண்மணியின் முகம் பளிச்சிட, “ஹாய் அண்ணி… நீங்க ஓகே தான?” எனக் கேட்டாள்.

“ம்ம் உன் மயக்கம் ஒரு வழியா தெளிஞ்சுடுச்சா?” என்றதில் அசடு வழிந்தாள்.

“ஆமா வாஷிங் மெஷின் எல்லாம் இல்லையா கையில துவைச்சுட்டு இருக்க?” யாஷிற்கு கேட்டு விட கூடாதென்று சத்தத்தைக் குறைத்துப் பேசினாள்.

“இந்த தாவணி சாயம் போகும் அண்ணி. அதான் கையில துவைக்கிறேன்” என விளக்கமளித்த கண்மணியிடம், “அது மருதாணி செடியா?” எனக் கேட்டாள்.

“ம்ம் ஆமா” மேலிருந்து கீழ் வரை தலையாட்டியவள், “உங்களுக்கு அரைச்சு தரட்டா?” என்றாள் ஆர்வமாக.

“ஆமா நீங்க மருதாணி வைப்பீங்களா?” அதன்பிறகே கல்கத்தாவில் வளர்ந்தவள் மெஹந்தி வைத்து தானே பழகி இருப்பாளென்றே உறைத்தது.

“அதெல்லாம் வைப்பேனே. எனக்கு ரொம்பப் பிடிக்கும். நீ இலை மட்டும் பறிச்சுக் குடு நான் அரைச்சுக்குறேன்” என்றிட, “நான் அம்மில அரைச்சுத் தரேன் அண்ணி. மிக்சில போட்டா நல்லாருக்காது…” என்ற கண்மணி உடனடியாக மருதாணியைப் பறித்தாள்.

“நானே அம்மில அரைச்சுப்பேன் கண்மணி…” என்றவளை கண்மணி புரியாமல் பார்த்து வைத்தாள்.

“அட கல்கத்தால அம்மி கூடவா இருக்காது. நீ ஏன் எதுக்கெடுத்தாலும் இப்படி பார்த்து வைக்கிற…” என சிரித்தபடி சமாளித்தாள்.

“நீங்க செம்ம சிம்பிள் அண்ணி” வாயார புகழ்ந்த கண்மணியைக் கண்டு, “நானே அன்றாடங்காச்சி” என்று மனதினுள் முணுமுணுத்துக் கொண்டாள்.

“இருந்தாலும் புதுப்பொண்ணுக்கு நான் தான் அரைச்சு தருவேன்…” என்றவள், அதே பின் பக்கத்தில் போடப்பட்டிருந்த அம்மியில் அரைக்கத் தொடங்கினாள்.

“ஏய்… நீ துணியைக் காயப்போட்டுட்டு பொறுமையா பண்ணு. அவசரம் இல்ல” நிதர்ஷனா கூறியதும், “அதெல்லாம் பொறுமையா போட்டுக்கலாம்…” என சிரித்தவளிடம், “நீ படிக்கிறியா?” எனக் கேட்டாள்.

“ம்ம் ஆமா அண்ணி. பி. காம் செகண்ட் இயர். நானும் மணிமேகலையும் ஒரே க்ளாஸ் தான்…”

“ஓஹோ… எங்க அந்த ஏணி மேடமை காணோம்?” எனத் தேட, “அவள் மயங்கி மட்டும் தான் விழுகல அண்ணி. அன்னைக்குப் பார்த்த இரத்தக் களரில இருந்தே அவள் வெளில வரல. அதனால சைனீஸ் டிராமா பார்த்து மைண்டை மாத்த ட்ரை பண்ணிட்டு இருக்கா…” என்றதில் நிதர்ஷனாவும் சிரித்தாள்.

திடீரென கண்மணியின் முகம் மாறிவிட, “என்ன ஆச்சு?” என்றபடி மெல்லத் திரும்பியவள் அங்கு பால்கனி கதவின் மீது சாய்ந்து நின்றிருந்த யாஷ் பிரஜிதனைக் கண்டு விழித்தாள்.

கண்ணாலேயே அவளை உள்ளே செல்ல சொல்லிப் பணிக்க, அவள் அந்த மருதாணியையே ஏக்கத்துடன் பார்த்து விட்டு உள்ளே சென்றாள்.

அவனும் உள்ளே சென்று கதவைப் படாரென அடைக்க, அது கண்மணியையே அறைந்தது போல இருந்தது.

அறைக்குள் வந்த பொழுதில் விறுவிறுவென கீழிறங்கிச் சென்றிருந்தாள் நிதர்ஷனா. பின்னே அங்கேயே இருந்து யாஷிடம் திட்டு வாங்க அவளுக்கு என்ன பைத்தியமா?

இங்கு கதிரோ, தனது அறையில் இருந்த மூன்று ஜன்னல்களில் ஒவ்வொன்றையும் திறந்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தான். நல்லவேளையாக அன்றைய நாள் மாதிரி அலாரச் சத்தம் எதுவும் வரவில்லை.

மூன்றாவதாய் இருந்த ஜன்னலைத் திறக்க, இடையில் சிறு இடைவெளி விட்டு எதிரில் மற்றொரு அறை ஜன்னல் இருந்தது.

“ஓ இது பக்கத்து வீட்டு ரூமா…” என்றெண்ணி விட்டு கதவை அடைக்கப் போகும் போதே கவனித்தான்,

கட்டிலில் குப்புறப் படுத்து காதில் ஹெட் போனை மாட்டிக்கொண்டு அலைபேசியில் எதையோ உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த சிந்தாமணியை.

‘அப்படி என்னத்த பாக்குறா?’ என அவனும் அலைபேசியை உற்றுப்பார்க்க அதில் ஒரு சைனீஸ் ஜோடி, இதழ் முத்தம் பரிமாறிக்கொண்டிருந்தது.

“அவ்வ்வா…” வாயில் அடித்துக்கொண்ட கதிரவனின் சத்தம் கேட்டு பதறி எழுந்தாள் சிந்தாமணி.

கதிரவனைக் கண்டு அதிர்ந்தவள், “ஹெலோ இப்படி தான் அடுத்தவங்க ரூமை எட்டிப் பார்ப்பீங்களா?” அவள் காட்டமாகக் கேட்க, “இந்தப் பக்கம் என்ன இருக்குன்னுப் பார்க்க ஜன்னலைத் திறந்தேன். நீ அஜால் குஜால் பாத்துட்டு இருக்கன்னு தெரிஞ்சு, உணர்ச்சி வசப்பட்டு கத்திட்டேன்” என்றதில், “எதே அஜால் குஜாலா? அப்படின்னா…?” என விழித்தாள்.

“அதான், இப்ப பாக்குறியே… ஒரே கிஸ்ஸிங்கா!” அவளோ வெட்கப்பட்டு கூற,

“ஹலோ மிஸ்டர் கதிரவன், இது சைனீஸ் டிராமா. நீங்க நினைக்கிற மாதிரி ஒன்னும் இல்ல… சிம்பான்சிக்குத் தெரியுமா சைனீஸ் டிராமா அருமை…” என்றாள் முறைத்து.

‘நான் சிம்பான்சியா?’ கதிரவன் நொந்து கொண்டு, “சரி ஏதோ டிராமா சொன்னியே… அதை கொஞ்சம் லவுட் ஸ்பீக்கர்ல போட்டா நானும் பாப்பேன்ல” என இளித்து வைத்தான்.

‘எனக்கு வேற வழி தெரியல ஆத்தா’ கையில் அலைபேசியும் இல்லாமல் மனதினுள் புழுங்கினான்.

“உங்ககிட்ட போன் இருக்கும்ல…” சிந்தாமணி வினவ,

“இல்லையே இங்க டிவி கூட இல்லை… என் போன் ரிப்பேர் ஆகிடுச்சுன்னு குடுத்து இருக்கேன். கைக்கு வர லேட் ஆகுமாம்” எனப் பொய்யை அவிழ்த்து விட்டான். உண்மையைக் கூறி தர்ம அடி வாங்கும் தைரியம் அவனுக்கேது.

அவனை ஒரு மாதிரியாகப் பார்த்தவள், “லவுட் ஸ்பீக்கர்ல போட்டா என் அப்பா செருப்பை எடுத்துட்டு வருவாரு… இருங்க…” என்றவள் ப்ளூடூத் ஹெட் போனை எடுத்து வந்து அவனிடம் நீட்டினாள்.

“நான் வயர்ல கேட்குறேன். நீங்க வயர்லெஸ்ல கேளுங்க” என்று செட் செய்திட, நல்லவேளையாக தமிழில் ஓடியதில் ஜன்னல் பக்கம் ஒரு நாற்காலியை இழுத்துப்போட்டு அவனும் நாடகத்தில் புதைந்து விட்டான்.

“இதுக்கு முன்னாடி ஸ்டோரி என்ன?” என்றதில், அவள் ஆர்வமாக கதை கூறி இப்போது நடப்பது முதற்கொண்டு கூறிட, ஒரு மணி நேரம் போனதே தெரியவில்லை இருவருக்கும்.

கதிரவனோ அதில் மூழ்கி விட, “நீங்க சைனீஸ் டிராமா பாப்பீங்களா? இந்தக் கண்மணியைக் கம்பெனிக்கு கூப்பிட்டா வரவே மாட்டா” எனக் குறைபட்டுக் கொள்ள, “இதுவரை பார்த்தது இல்ல. இனி ஆறு மாசத்துக்கு பார்த்து தான் ஆகணும் போல…” என முணுமுணுத்தான்.

“அதுவரை போன் ரிப்பேர் ஆகி வராதா என்ன? புதுசு வாங்க வேண்டியது தான?” ரித்திகாவின் நண்பனும் பணக்காரனாகத் தானே இருப்பானென்ற எண்ணம் அவளுக்கு.

அசட்டுச் சிரிப்பை உதிர்த்து கொண்டவன், பதில் கூறாமல் சமாளித்திட, யாரோ சிந்தாமணியின் அறைக்கதவைத் தட்டும் அரவம் கேட்டது.

வேகமாக எழுந்தவள், “நான் போய் பாக்குறேன். மீதியை நாளைக்கு பாக்கலாம்…” என்று விட்டு கதவை நோக்கிச் சென்றுவிட்டு சட்டென அவன் புறம் திரும்பினாள்.

“டிராமா பாக்குற டைம் தவிர மத்த நேரம் ஜன்னலைத் திறந்தா கண்ணைக் குத்திடுவேன்” என மிரட்டி விட, ‘டிராமா பார்க்க கண்ணு வேணும்’ என்ற அச்சத்தில் ஜன்னலை நறுக்கென மூடி விட்டான்.

ஒரு எச்சரிக்கை உணர்வில் அவளும் ஜன்னலை மூடிக்கொண்டாள்.

சரியாக ஜன்னலை மூடும்போது கதிரவனின் அறைக்கு நிதர்ஷனா வர, “ச்சே ஒரு என்டெர்டெய்ன்மெண்ட்டை மிஸ் பண்ணிட்ட. சைனீஸ் டிராமா செம்மயா இருந்துச்சு” என்று சிலாகித்த கதிரவனைப் புரியாமல் பார்த்தாள்.

“நானே அந்த அரக்கனோட கண் அம்புல இருந்து தப்பிச்சு வந்துருக்கேன். இவன் வேற உளறுறான்” எனும்போதே அவன் ‘ஹெட் போனை மாட்டி காது கொயிங்குனு கேட்குது’ என தனக்குள் பேசியபடி குளியலறைக்குச் சென்றிட, வெளியில் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது.

‘ஒருவேளை கண்மணியா இருக்குமோ’ என ஆர்வத்துடன் நிதர்ஷனா கதவின் அருகில் செல்லும்போதே யாஷ் பிரஜிதன் வந்து விட்டான். அவனே கதவைத் திறக்க அங்கு கண்மணியும் சிந்தாமணியும் தான் நின்றிருந்தனர்.

ஒற்றைப்புருவம் உயர்த்தி யாஷ் வினவ, “அது… அண்ணா… அண்ணி மருதாணி கேட்டாங்க அதான்…” என ஒரு கிண்ணத்தை நீட்ட, “அவுட்!” ஒரே வார்த்தையில் அவளை சுக்கு நூறாய் உடைத்து விட்டு கதவை அடைத்தான்.

நிதர்ஷனாவிற்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது.

“என்ன தான்யா உன் பிரச்சினை. மருதாணி கூட வைக்க கூடாதா நானு. அந்தப் பொண்ணு அம்மில எவ்ளோ நேரமா அரைச்சுட்டு இருந்துச்சு தெரியுமா? சரியான கல்நெஞ்சக்காரன். உன்னைக் கல்யாணம் பண்ணிட்டு அந்த ரித்தி பொண்ணும் ரோபோவாட்டம் தான் வாழும் போல…” உதட்டைப் பிதுக்கியவளுக்கு தானாக தேம்பல் வந்தது.

அவள் ஆசைப்படுவதெல்லாம் வெகு சிறிய விஷயங்களுக்கு தான். அது சில நேரம் கிடைக்காமல் போகும்போது, எப்போதாவது அவளை மீறியும் இப்படி ஒரு சிறுபிள்ளைத்தனம் வெளிவந்து விடும். இந்த மருதாணிக்காக தமையனிடமே எத்தனை போராடி இருக்கிறாள்!

“அதான் ரித்தி சம்பந்தப்பட்ட எதிரிங்க யாருக்கும் நான் இங்க இருக்குறது தெரியாதுல… நீ வேணா பாரு… நான் அந்தப் பொண்ணுங்க கூட போய் இந்த தஞ்சாவூரைச் சுத்திப் பார்த்துட்டு தான் வரப்போறேன்” என்றவளின் தேம்பல் அதிகம் ஆக,

“தாராளமா போய் சாவு. ஐ டோன்ட் கேர்” என அவள் அழுகையெல்லாம் தனக்கு ஒரு பொருட்டே இல்லை என்பது போல தோளைக் குலுக்கிச் சென்று விட்டதில், அவள் உர்ரென்றே இருந்தாள்.

உணவு உண்ணும் போது எப்போது நண்பனிடம் அளவளாவுபவள் வாயை இறுக்கி மூடிக்கொள்ள, இரவு வரை பொறுத்தவன், “வாட்ஸ் ராங் வித் யூ?” என்றான் அவள் பேசாததும் அவனது மனநிலையைக் கொடுத்ததை உணராது.

“உன்னாண்ட பேச மாட்டேன் போயா…” எனக் கழுத்தை வெட்டியவள், உதட்டைக் குவித்துக் கொண்டே அறைக்குச் செல்ல அங்கும் பின்னாலேயே வந்தவனுக்கு, அவளது கோபமே வித்தியாசமாய் தெரிந்தது.

உரிமையாய் கோபம் கொண்டு சண்டை போடும் அளவு தன்னருகில் யாரையும் அவன் வைத்துக்கொண்டதில்லை.

“எலிசா ஒரு பாட்டு போடு…” அதனிடமும் கோபத்துடனே கூறினாள்.

எந்தப் பாடல் வேண்டுமென அது ஆங்கிலத்தில் வினவ, “ப்ச்… அது தெரிஞ்சா நான் ஏன் உங்கிட்ட வர போறேன்” எனக் கடுப்படித்தவள், அறைக்குள் யாஷ் வந்ததும், அவன் முகம் பாராமல் திருப்பிக்கொண்டாள். கோபமாக இருக்கிறாளாம்.

ஏனோ அவனே அறியாதவொரு சிறு முறுவல் அவனிடம்.

அவளை வெறுப்பேற்ற எலிசாவிடம் அவன் வேறு வேலை செய்ய சொல்லிப் பணிக்க, சிலுப்பிக்கொண்டவள், மெத்தையில் இருந்து எழுந்து பால்கனிக்கு கதவைத் திறக்க முயன்றாள். அது கப்சிப்பென அசைய மறுத்தது.

இதையும் மூடி வைத்து விட்டான் எனச் சினம் மீற எதிரில் யாஷ் இருப்பதாக எண்ணி கதவை ஓங்கி காலால் எத்த, அது அவளுக்கே வலியை அமைந்து, “ஐயோ அம்மா…” எனக் காலைப் பிடிக்க வைத்தது.

அவளது குரங்குச் சேட்டைகளும் கோபத்தில் செய்யும் குட்டிக்கரணங்கள் யாவும் அவனது கலப்படக் கண்களில் அடக்கம்.

“இப்ப என்ன பிரச்சினை உனக்கு?” யாஷ் கீழுதட்டைக் கடித்து சிரிப்பை அடக்கிக்கொண்டு கேட்க,

“எனக்கு என்ன பிரச்சினை. ஒரு பிரச்சினையும் இல்லையே. சொந்த தங்கச்சிக்கே இங்க மதிப்பு இல்ல. நான் எவளோ… எங்கிருந்தோ வந்தவ தான. உன்னாண்ட போய் நான் மனிதாபிமானத்தை எதிர்பார்க்க முடியுமா…: எனப் புலம்பியதில்,

“ஆஃப்டர் ஆல், அந்த கண்மணி கொண்டு வந்த ஏதோ ஒரு பொருள்காக இவ்ளோ கேவலமா எதுக்கு ரியாக்ட் பண்ற?” என்றவன், “இப்ப என்ன உனக்கு அது தான வேணும்? வாட்ஸ் தட்?” என்றான் இறங்கி வந்து.

“மருதாணி” இன்னும் கோபம் குறையாமல் அதே நேரம் அவன் கேட்டதும் வேகமாக கூறிட,

“அப்டின்னா?” என்றவனுக்கு இம்முறை புன்னகை படர்ந்தது. நொடியில் அது மறைந்தும் போனது.

அதனை தலையைக் குனிந்திருந்தவள் கவனிக்கவில்லை. அவன் கேட்டதும், “ஹா… மெஹந்தி போடுவாங்கள்ல” என அவள் விளக்கம் கொடுக்க, “ஃப்பூ… ஆஃப்ட்ரால் மெஹந்திக்கு தான் இவ்ளோ சீன் கிரியேட் பண்ணுனியா நீ!” என்றவன் உடனடியாக ஆஹில்யனுக்கு அழைத்திருந்தான்.

“இல்ல இல்ல. நீங்க சொல்ற மெஹந்தி இல்ல. உங்க அம்மா வீட்டுக்குப் பின்னாடி மருதாணி செடி இருக்கு. அதுல இருந்து வேணும்.”

“எல்லாம் ஒன்னு தான?” ஆஹில்யன் அழைப்பை ஏற்றும் அவன் இவளிடமே உரையாடிக்கொண்டிருந்தான்.

“இல்ல… மருதாணி ரொம்ப நாள் கையிலேயே இருக்கும். கண்மணி தான் அரைச்சு வச்சுருக்காளே அது வாங்கி குடுங்க…” என்றதில், அவனோ அவளை அழுத்தமாய் ஏறிட்டு, “ஆஹில், தட் மருதாணிச் செடியை வீட்டுக்கு கொண்டு வா…” என்று உத்தரவிட, மணி அப்போதே ஒன்பதைத் தொட்டிருந்தது.

“இந்த நேரத்துல செடியா?” ஆஹில்யன் தலையைச் சொரிய,

“அப்படியே அம்மிக்கல்லும் வேணும்” என்றிருந்தாளே பார்க்கலாம் ஆஹில்யனுக்கு தலையே சுற்றி விட்டது.

“ம்ம் யூ காட் தட் ரைட். அவள் கேட்குறதை கொண்டு வா” என்று யாஷ் கூறியதும், “பாஸ் பாஸ்… இது சென்னை இல்ல பாஸ். தஞ்சாவூரு. இந்த நேரத்துல மருதாணி இலை வேணும்னா யார் வீட்லயாவது திருடிட்டு தான் வரணும். அப்பறம் அம்மிக்கல்லுலாம் இப்ப கிடைக்காது பாஸ். காலைல ரெண்டையும் கொண்டு வந்துடுறேன்…” என்றதை அவளும் கேட்டிருந்தாள்.

“காலைல ஆகுமா?” என்றவள் மனமின்றி சரியென தலையசைக்க, அவளை அழுத்தமாய் ஏறிட்ட யாஷ் பிரஜிதன் அழைப்பைத் துண்டித்து விட்டு, அவளை இழுத்துக்கொண்டு தாய் வீட்டிற்குச் சென்று உறங்கி கொண்டிருந்தவர்களிடம் மருதாணிச் செடி கேட்டு நின்றதில் குடும்பமே அவனை ‘பே’ வென பார்த்திருந்து.

அன்பு இனிக்கும்
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
24
+1
116
+1
6
+1
9

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்