11
ஜானகி(ராமன்) – 11
“மையோ மரகதமோ மறிகடலோ மழைமுகிலோ
ஐயோஇவன் வடிவென்பதோர் அழியா அழகுடையான்”
என்ற கம்பராமாயணத்தில் கங்கைப் படலத்தில் அமைந்திருந்த பாடலை ஏற்ற இறக்கத்தோடு சுந்தரேசன் தன் மடியில் படுத்திருந்த மிதிலாவின் தலையைக் கோதியவாறே படித்துக் கொண்டிருந்தார்.
“மையோ, மரகதமோ, மறிகடலோ மழைமுகிலோ” என்ன மாதிரியான வார்த்தைகள்! இவன் நிறம் இருட்டா? மரகதத்தின் கரும்பச்சையோ, கடலின் கருநீலமோ கார்முகிலின் கறுப்பு நிறமோ… அடடா எதிலுமே அடக்க முடியவில்லையே, ஐயோ… வடிவத்தில் இவன் அழியாத அழகுடைவன் என்று கம்பர் வர்ணிப்பதை தன் வாய் மொழியில் கலியுக சீதையை தன் மடியில் தாங்கி ராமனின் அழகை கம்பரின் சொல்லாடல் மூலமாக வர்ணித்துக் கொண்டிருந்தார் சுந்தரேசன்.
‘மை, மரகதம், மறிகடல், மழை முகில் என்று எல்லாவற்றையும் சொல்லி, எதிலுமே இராமனின் அழகை அடக்க முடியவில்லை. இராமனின் அழகைச் சொல்ல வார்த்தை கிடைக்காமல் “ஐயோ” என்று கதறுகிறான் கம்பன். சொற்களுக்குள் இராமனை ஏன் அடக்க முடியவில்லை என்றால், சொற்பதம் கடந்த பரம்பொருள் அவன். அதனால் அவன் அழகை வார்த்தைகளால் வர்ணிக்க இயலவில்லை. ஐயோ என்று கதறுகிறார் கம்பர்’ என நினைத்தவளின் உள்ளம் தன் உயிரைக் காப்பாற்ற அவனின் உயிரை பணயம் வைத்த அவளைக் காப்பாற்றியவனின் முகம் கண்முன் நிழலாட அந்த ஒரு நிமிட அதிர்ச்சியில் அவள் உடல் தூக்கி வாரிப் போட்டது.
“மிது…” என அவள் முதுகை அவளின் தந்தை ஆதரவாக தடவ, “ஒன்னுமில்ல ப்பா… நீங்க சொல்லுங்க” என அவள் தன்னை ஒருவாறு சமன்படுத்திக் கொண்டு தன் தந்தையின் மடியில் படுத்த வண்ணம் அவரின் வாய் மொழியாக கம்பரின் ராமாயணத்தைக் கேட்டு கொண்டிருந்தாள்.
இதனை எல்லாம் கண்ட நறுமுகைக்கோ, என்ன செய்வது என்றே தெரியாமல் கையை பிசைந்தாள்.
அந்த ஒரு நொடி!. இன்னும் அதனை நினைக்கும் போது அவள் உயிர் அவள் உடலை விட்டு பிரிந்தது போல் இருந்தது.
அவள் கண்முன் நிழலாடின சாலையில் நடந்தவைகள்.
தன் அக்காவின் மேல் உள்ள கோபத்தில் அவள் சாலையைக் கடந்திருக்க இவளை சமாதானப்படுத்தும் நோக்கத்தோடு வந்த மிதிலாவோ எதிரே அசுர வேகத்தில் வந்து கொண்டிருந்த லாரியை கவனிக்கத் தவறி இருந்தாள்.
“ஜானு…” என்ற அழைப்பில் தான் நறுமுகையும் திரும்பி பார்க்க அப்பொழுது தான் அவளும் கவனித்தாள் அந்த லாரியை.
அவள் “மிது…” எனக் கத்துவதற்குள், லாரி அவள் அருகில் வந்திருந்தது. நறுமுகைக்கு ஒரு நிமிடம் அவள் உயிர் உடற்கூட்டிலிருந்து பிரிந்து சென்றது போல் இருந்தது.
ஆனால் மிதிலாவோ, பதினான்கு வருடங்கள் கழித்து கேட்கும் தன்னவனின், “ஜானு…” என்ற அழைப்பில் சுற்றம் முற்றம் மறந்திருந்தாள். அவள் கால்கள் நகர மறுத்திருக்க, அவளை ஒரு வலிய கரம் தன் பக்கம் இழுத்திருந்தது.
இவை அனைத்தும் கண் இமைக்கும் நேரத்திற்குள் நடந்தேற, அந்த லாரி அவர்களைக் கடந்து செல்லும் போது நறுமுகை தன் அக்காவை அந்த லாரி அடித்துச் சென்று விட்டதோ! என அவள் நினைப்பதற்குள் மயக்கம் வருவது போலிருக்க, அப்பொழுது தான் அவள் கண்டாள்.
மிதிலாவை காப்பாற்ற எண்ணிய அவனின் கரங்களை அந்த லாரி மோதிச் சென்றாலும் அவளை தன் நெஞ்சுக்கூட்டிற்குள் இறுக்கி பொக்கிஷமாய் வைத்து காப்பாற்றி இருந்தான், அவளை “ஜானு…” என அழைத்தவன்.
“மிது…” என அவள் ஓடி வருவதற்குள் அவர்களை சுற்றி ஒரு கூட்டம் கூடி இருக்க, மிதிலாவோ தன்னவனின் அழைப்பில் மூர்ச்சையாகி கிடந்தாள் அவனின் கரங்களில்.
கூட்டத்தை விலக்கி அவள் வரும் போது கண்டது, “ஜானு… ஜானும்மா… ப்ளீஸ் டி கண்ணத் திற… ப்ளீஸ் ஜானு” என கண்கள் முழுக்க கண்ணீர் படர்ந்திருக்க தன் கரங்களில் மூர்ச்சையாகி கிடந்தவளின் கன்னத்தை அவன் தட்டிக் கொண்டிருந்ததை தான்.
“மிது…” என அவன் அருகில் நறுமுகை செல்ல, “இந்த பா, கொஞ்சம் தண்ணிய அந்த பொண்ணு முகத்துல தெளிங்க. அதிர்ச்சில மயக்கம் போட்ருக்கும்” என்றார் அந்த கூட்டத்தில் இருந்த ஒருவர்.
அவர் கொடுத்த தண்ணீர் பாட்டிலை வாங்கியவள், தன் அக்காவின் முகத்தில் தெளிக்க அவள் இமைகள் திறக்க முயன்றது.
“ஜானு…” என்ற அழைப்பு அவள் உயிர் வரைத் தீண்டிச் செல்ல அவனின் சட்டையை அவள் கரங்கள் இறுகப் பற்றி இருந்தது.
“ஜானு… ப்ளீஸ் டி, என்னைப் பாரு ஜானு” என அவளை உலுக்கிக் கொண்டிருந்தான் அவன்.
நடப்பது அனைத்தும் கனவு போல் இருந்தது நறுமுகைக்கு.
தன் அக்காளின் உயிரைக் காப்பாற்ற தன் உயிரை பயணம் வைத்து இவர் காப்பாற்றுவதேன்? தன் உயிர் பிரிந்தது போல் இப்போது துடிப்பதேன்? எல்லாவற்றுக்கும் மேல் அவனின் ‘ஜானு…’ என்ற அழைப்பு அவளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
தன் இமைகளைத் திறக்க முயன்ற மிதிலாவோ, தன் அருகே கண்டவனின் முகத்தையும் அவனின் ஜானு என்ற அழைப்பிலும் மீண்டும் மூர்ச்சையானாள்.
அவளை தூக்கிக் கொண்டவன், “முகி ஆட்டோவ கூப்பிடு. ஜானு இன்னும் அதிர்ச்சில இருக்கா, உடனே ஹாஸ்பிட்டல் போகணும்” என படபடத்தான்.
அதற்குள் ஒரு ஆட்டோவை அருகில் இருந்தவர் அழைத்திருக்க அதில் ஏறியவன் அவளை தன் மடியில் தாங்கினான் அவன்.
அவனுடன் நறுமுகையும் மருத்துவமனைக்கு செல்ல, மயக்கத்தில் இருந்த மிதிலாவை செக் பண்ணிய மருத்துவர், “அவங்க அதிர்ச்சியில தான் மயக்கமாகிருக்காங்க, மத்தப்படி வேற ஒன்னும் இல்ல. அவங்க அதிர்ச்சி ஆகற அளவு என்ன நடந்துச்சு?” என்றார்.
நறுமுகை அங்கு நடந்ததைக் கூற, அவரோ “ஆக்சிடண்ட்ட விட அவங்க மனச வேற ஏதோ பாதிச்சுருக்கு. அதான் அவங்க திரும்ப மயக்கம் ஆகிருக்காங்க” என்றவர் தன் எதிரே நின்றவனின் கரங்களைப் பார்த்து விட்டு,
“சார் உங்களுக்கும் அடி பட்ருச்சா?” என்றவர், “நர்ஸ், இவருக்கு பஸ்ட் எய்ட் பண்ணுங்க” என்றார் அந்த மருத்துவர்.
அப்பொழுது தான் தன் கரங்களைக் கவனித்தான் அவன். மிதிலாவை இழுத்து தன் அணைப்பிற்குள் கொண்டு வந்த நேரம் லாரியின் ஒரு பகுதி அவன் கரங்களில் உரசி சென்றிருந்தது.
அதனால் ஏற்பட்ட காயங்களில் இரத்தம் கசிந்துக் கொண்டிருக்க அதனைக் கவனிக்க மறந்திருந்தான் அவன்.
நறுமுகையும் அப்பொழுது தான் அவனின் கரங்களைப் பார்த்திருக்க, அவன் முகம் நோக்கினாள்.
அவனின் பார்வை முழுவதும் பெட்டில் படுத்திருந்த மிதிலாவின் மேல் தான் இருந்தது.
நர்ஸ் அவனின் காயங்களுக்கு மருந்திட்டவள், “ரொம்ப வலி இருந்தா ஸ்கேன் பண்ண சொன்னாங்க சார் டாக்டர்…” என்க,
“வலி இல்லங்க…” என்றவனின் மனம் தன்னவளைக் கண்டு வலித்தது.
நர்ஸ் சென்றவுடன், மிதிலாவின் அருகில் சென்று அமர்ந்தவன் அவள் கரங்களை தன் கரங்களுக்குள் எடுத்து வைத்துக் கொண்டான்.
“ஜானு… பதினாலு வருசம் கழிச்சு இப்படி பட்ட சூழ்நிலைல உன்னை அப்படி கூப்பிட வச்சுட்டியே டி. எனக்கு நீ வேணும் ஜானு, உன் காதல் முழுக்க எனக்கே எனக்கா! மொத்தமா வேணும், என்கிட்ட வந்துரு ஜானு” எனப் புலம்பிக் கொண்டிருந்தான்.
நறுமுகைக்கு தான் தலையும் புரியாமல் வாலும் புரியாமல் அவனைப் பார்க்க, அவன் பார்வை முழுவதும் அவனின் ஜானு மேல் தான் இருந்தது.
சிறிது நேரத்தில், எழுந்து கொண்டவன் “முகி, அவ இன்னும் கொஞ்சம் நேரத்துல கண் முழிச்சுருவா. திரும்ப என்னைப் பார்த்தா மயக்கமாகிருவா, அதுனால நான் இங்க இருந்து கிளம்புறேன். நீ பத்திரமா அவள வீட்டுக்கு கூட்டிட்டு போ. வீட்டுல நடந்தத சொல்ல வேண்டாம், பயந்துருவாங்க. ஏதாவது சொல்லி சமாளிச்சுரு” என்றவன்,
தன் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்து அவள் கரங்களுக்குள் திணித்தவன் அவளின் பதிலை கூட எதிர்பார்க்காமல் அங்கிருந்து விரைவாக வெளியேறினான்.
‘என்ன டா நடக்கிது இங்க!’ என அவள் மனதினுள் நினைத்தவள் வாடிய மலராய் துவண்டு போய் பெட்டில் படுத்திருந்த தன் அக்காளைக் கண்டவுடன் அவள் அருகில் சென்று அமர்ந்தவள், அவள் தலையைக் கோதி விட்டாள்.
தன் இமைகளை கடினப்பட்டு திறக்க முயல, “மிது…” என்றாள் நறுமுகை.
அவள் கண்களோ சுற்றி முற்றி துளாவ அதனைக் கண்டவள் அவனைப் பற்றி பேசுவதைத் தவிர்த்து, “இப்போ எப்படி மிது இருக்கு?” என்றவளின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோட,
“எனக்கு ஒன்னும் ஆகல டி குண்டச்சி” என அந்த வலியினூடே சிரிக்க முயன்றாள் மிதிலா.
“என் உயிரே போய்ருச்சு டி குட்டச்சி. ஏன் டி, இப்படி பண்ண? நான் கோபப்பட்டா அதுக்காக எதிர்ல வர்ற லாரிய கூட கவனிக்காம தான் என் பின்னாடி வருவியா!” என அவள் அழுகையில் தொடங்கி கோபத்தில் முடிக்க,
“லூசு. உன்னை விட்டு அவ்ளோ சீக்கிரம் போய்ற மாட்டேன் டி குண்டச்சி, அப்பிடியே போனாலும் உன்னையும் சேர்த்து தான் கூட்டிட்டு போவேன்” என அவள் சிரிக்க முயல அவளை அணைத்துக் கொண்டாள் நறுமுகை.
அவள் முதுகை வருடிக் கொடுத்த மிதிலா, “என் உயிர் என்கிட்ட இருந்தா தான அது இந்த உடல விட்டு போக முடியும். அது பத்திரமா இருக்க வேண்டியவங்க கிட்ட இருக்கு, அதுனால லூசுத் தனமா எதையும் நினைக்காத” என இவள் அவளுக்கு சமாதானம் செய்தாள்.
சிறிது நேரத்திலே இருவரும் கிளம்ப, அவர்களிடம் வந்த நர்ஸ் “உங்க கூட வந்தவரு பில் கட்டிடாரு மேம்” என தகவல் கொடுக்க, மிதிலாவின் முகமோ யோசனையில் சுருங்கி விரிந்தது.
“என்ன நேம்ல அவரு பில் ஃபே பண்ணாருனு தெரியுமா?” என அவள் அந்த நர்ஸிடம் வினவ,
அவர் கூறிய பதிலில் அதிர்வது நறுமுகையின் முறையாயிற்று. ஆனால் மிதிலாவோ, அவள் எதிர்ப்பார்த்தது தான் நடந்திருக்கு என்பது போல் எதுவும் பேசாமல், தலையை அசைத்தவள் “தேங்க்ஸ்ங்க…” என்றாள்.
“அவருக்கு கொடுக்க வேண்டிய மாத்திரை, போகும் போது வாங்காம போய்ட்டாரு. இத நீங்களே அவர்கிட்ட கொடுத்துருங்க” என அவளிடம் ஒரு மாத்திரை கவரைக் கொடுக்க மிதிலாவோ கேள்வியுடன் நறுமுகையைப் பார்த்தாள்.
“அவருக்கும் கைல சிராய்ப்பு ஏற்பட்ருச்சு” என தயங்கியவாறே கூற, அவள் கண்களில் அடிபட்ட வலி. அதனைக் கண்ட நறுமுகையோ, “ரொம்பலாம் அடி இல்ல மிது, உன்னை அவரு இழுக்கும் போது அவர் கைய லாரி உரசிருக்கும் போல!” என்றாள்.
“ம்…” என்றாலும் அவள் கண்கள் பிரதிபலித்த வலியை அவளால் மறைக்க முடியவில்லை.
இதனை அனைத்தும் மறைந்திருந்து கவனித்தவனுக்கு நெஞ்சு அடைப்பது போல் இருந்தது.
“இவ்ளோ நாள் உன்னை மிஸ் பண்ணிட்டேன் ஜானு. ஆனா இனி மிஸ் பண்ணவே மாட்டேன். ஒரு தடவை உன்னை தொலைச்சே பதினாலு வருஷம் கழிச்சு இப்போ தான் கண்டுபிடிச்சேன், இனியும் உன்னை இழக்க நான் தயாரா இல்ல” என முணுமுணுத்தது அவனின் இதழ்கள்.
மிதிலாவும் நறுமுகையும் அங்கிருந்து ஆட்டோ பிடித்து கிளம்பும் வரை மறைந்து நின்று அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தவன், அவர்கள் கிளம்பியவுடன் தான் அவனும் அங்கிருந்து கிளம்பினான்.
வீட்டிற்கு வந்தவுடன், “காலேஜ் அதுக்குள்ள முடிஞ்சுருச்சா மிது, அதுக்குள்ள வந்துட்டீங்க?” என்றார் பூங்கோதை.
“இல்ல ம்மா, கொஞ்சம் தலைவலி. அதான் கொஞ்சம் சீக்கிரமே வந்துட்டோம்” என்றாள் மிதிலா.
நறுமுகை நடக்கும் அனைத்தையும் வேடிக்கைப் பார்ப்பவளாக மட்டும் மாறினாள்.
“ஏன் கண்ணு, ரொம்ப வலிக்குதா” என பூங்கோதை பரிவுடன் வினவ, “உன் கையால ஒரு ஸ்ட்ராங்கா காபி குடிச்சா போதும் ம்மா… தலைவலி பறந்து போய்ரும்” என்க,
வெளியே சென்றிருந்த சுந்தரேசன் அப்பொழுது தான் வந்தார். “வண்டிலயாமா வந்தீங்க, தலைவலியோடயா வண்டி ஓட்டுன மிதிலா?” என்றார் சுந்தரேசன்.
“இல்ல ப்பா, வண்டி காலேஜ்ல தான் இருக்கு. ஆட்டோ பிடிச்சு வந்துட்டோம் ப்பா, முகிக்கு இன்னும் லைசன்ஸ் வாங்காததால தான் அவள வண்டிய எடுக்க விடலப்பா. ஆட்டோ பிடிச்சு வந்தோம்” என அவர் கேட்க இருந்த கேள்விக்கும் சேர்த்து பதிலளிக்கும் தன் அக்காளைக் கண்டவளுக்கு சற்று ஆச்சரியத்தை அளித்தது.
மரண பயம் என்பார்களே, அந்த எல்லைக்கு சென்று மீண்டு வந்துள்ளாள். ஆனால் அதனை எல்லாம் கண்டு கொள்ளாமல் எப்பொழுதும் போல் இவளால் எப்படி பேச முடிகிறது என நினைத்தவளுக்கு அவளின் அடுத்த கேள்வி அதிர்ச்சியை அளித்தது.
“அப்பா, கொஞ்சம் நேரம் ராமாயண பாட்டு சொல்றீங்களா!” என்றாள் மிதிலா.
“இரு ம்மா, வரேன்” என்றவர் கை, கால், முகம் கழுவி விட்டு வந்தார் சுந்தரேசன்.
அதற்குள் மூவருக்கும் காஃபி கலக்கி கொண்டு வந்து கொடுத்தார் பூங்கோதை.
அதனை வாங்கி பருகியவள் சாய்வு நாற்காலியில் அமர்ந்த தன் தந்தையின் மடியில் தலை வைத்துப் படுத்தாள் மிதிலா.
அவர் கம்பராமாயணப் பாடலை தன் குரலில் ஆழ்ந்து கூறியவாறே அதற்கு பொருளும் கூறிக் கொண்டிருந்தார்.
அதுவரை பொறுமைக் காத்த நறுமுகை, தன் தாயிடம் சென்று “ஏன் ம்மா, உன் மகளும் புருஷனும் இப்படி ராமர் பைத்தியமா இருக்காங்க?” என்றாள் சற்று கோபமுடன்.
“உன் அப்பாக்கு கம்பரோட எழுத்துக்கள் ரொம்ப பிடிக்கும் முகி. அத சொல்லி சொல்லியே உன் அக்காவ வளர்த்தாரா அதான் அவரோட பழக்கம் அவளுக்கும் ஒட்டிக்கிச்சு. ரெண்டு பேருக்கும் அது தான் பூஸ்ட் மாதிரி. என்ன மாதிரியான சோகத்துல இருந்தாலும் சரி, சந்தோசத்துல இருந்தாலும் சரி உன் அப்பா ராமாயண புத்தக்கத்த எடுத்து அதுல மூழ்கிருவாரு. இப்போ அதையே தான் மிதுவும் பண்றா” என்றவாறே அடுப்படிக்குள் தன் வேலைகளை செய்து கொண்டிருந்தார் பூங்கோதை.
“ஆண்டவா, எப்படியோ என்னை இதுல இருந்து தப்பிக்க வச்சுட்ட. இல்லைனா அவள மாதிரி நானும் ராமன் பைத்தியமாகி சுத்திக்கிட்டு இருப்பேன்” எனப் புலம்பினாள் நறுமுகை.
மிதிலாவோ, தன் தந்தையின் வார்த்தைகளில் ஆழ்ந்து போயிருக்க அவளை மீண்டும் மீண்டும் “ஜானு…” என்ற அழைப்பு அலைக்கழித்துக் கொண்டிருந்தது.
ஒரு கட்டத்தில், “நான் கொஞ்சம் நேரம் படுக்கிறேன் ப்பா…” என்றவாறே அவள் எழுந்து சென்று படுக்கையில் விழ, நறுமுகையோ ஒரு முடிவுடன் வெளியே கிளம்பினாள்.
“எங்க மா போற முகி?” என்ற பூங்கோதையின் குரல் வர, “இங்க தான் மா. பத்து நிமிஷத்துல வந்துருவேன்” என்றவாறே வெளியே வந்தவள் மின்தூக்கியினுள் நுழைந்தாள்.
ஏழாவது தளத்திற்க்கு செல்லும் எண்ணை அழுத்தியவள் ஒரு முடிவுடன் நின்றிருந்தாள் நறுமுகை.
ஏழாம் தளமும் வந்து விட, அவளின் கால்கள் நேராக சென்று ரகுநந்தனின் பிளாட்டின் முன் நின்றது.
அவள் அங்கு நிற்கும் போது எதிர் பிளாட்டிற்கு வந்த ஒரு பெண் அவளை மேலிருந்து கீழாக அளவெடுத்தது.
‘இவங்க ஏன் இப்படி பார்க்கறாங்க!’ என நினைத்தவள்,
அழைப்பு மணியை அழுத்த, அப்பொழுது தான் கல்லூரியில் இருந்து வந்திருந்த சிரஞ்சீவி துண்டால் முகத்தை துடைத்த வண்ணம் வந்து கதவைத் திறந்தான்.
எதிரே நின்றிருந்த நறுமுகையை அவன் கேள்வியுடன் நோக்க, “நந்தா சார பார்க்கணும்” என்றாள் அவள்.
“அவன ஏன் நீ பார்க்கணும்” என எதிர்கேள்வி வர, அவளோ “அத அவர்கிட்டயே சொல்லிக்கிறேன்” என்றவாறே அவனைத் தாண்டி உள்ளே நுழைந்திருந்தாள்.
தன் அறையில் இருந்து வெளியே வந்த ரகுநந்தன், “யாரு டா…” என்றவாறே வந்தவன் நறுமுகையைக் கண்டு அங்கேயே நின்றான்.
“நான் வருவேனு எதிர்ப்பார்க்கலைல சார்…” என இழுத்தாள் நறுமுகை.
“அப்டிலாம் இல்ல நறுமுகை. என்ன விசயம் நறுமுகை?” என்றான் ரகுநந்தன் சற்று ஆச்சரியத்துடன்.
“நீங்க என்னை கண்ணம்மானு தான அன்னிக்கு கூப்பிட்டீங்க சார். இன்னிக்கு என்ன நறுமுகை?” என அவள் எதிர்கேள்வி தொடுக்க, அவர்களின் சம்பாஷணைகளை புரியாமல் விழித்தான் சிரஞ்சீவி.
“இப்போ என்ன தெரியணும் முகி?” என அவன் நேரடியாக வினவ,
“என் அக்கா வாழ்க்கைல ரெண்டே பேர் தான் நான் இதுவரை பார்த்திராத ஆட்கள். ஒன்னு அவள் விரும்புற ராமன், இன்னொன்னு…” என அவள் முடிப்பதற்குள்,
“கிருஷ்ணா…” என அவன் முடித்தான் ரகுநந்தன்.
“இந்த ரெண்டு பேருல நீங்களும் ஒருத்தர். யார் நீங்க?” என்றாள் நறுமுகை.
“அவ அளவுக்கதிமா வெறுக்கிற கிருஷ்ணா…” என்ற பதிலில் அங்கிருந்த இருவருமே அதிர்ந்தனர்.
_தொடரும்