Loading

நிதர்ஷனாவின் சிரிப்பில் யாஷ் பிரஜிதன் அவளை முறைக்க, அவளோ அவன் புறம் மெல்லக் குனிந்து “பணக்கார உன் கேர்ள் பிரெண்டு சிரிக்க கூட மாட்டாங்களா அரக்கா” எனக் கிசுகிசுத்தாள்.

அதில் இட்லியை வாயில் வைத்த யாஷிற்கு சட்டென இருமல் வந்து விட, “அச்சோச்சோ” எனப் போலியாய் வருந்தியவள், அவன் தலையில் தட்டித் தண்ணீரை அவனுக்குப் புகட்டி விட்டாள்.

மற்றவர்களுக்கு அவனைக் கவனித்துக் கொள்ளும் அக்கறை தெரிய, அவனோ “ஓவர் பெர்பார்மன்ஸ் பண்ணாத. எனக்கு சில்வர் க்ளாஸ்ல வாட்டர் குடிக்கிற பழக்கம் இல்ல” என்றான் சிடுசிடுப்பை மறைத்தபடி.

“ஓஹோ…” என்றவள், “அத்தை” என பவ்யமாய் ஆதியை அழைக்க, ‘ஆண்ட்டி’ என்றே அழைப்பாள் என எண்ணியவருக்கு அவளது அழைப்பு நெஞ்சைத் தொட்டது.

“இல்ல… உங்க பையன், தங்க க்ளாஸ்ல தான் தண்ணி குடிப்பாராம்… கொஞ்சம் எடுத்து தர முடியுமா?” என்றிட, யாஷ் பிரஜிதனுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. பிறகே சில்வர் க்ளாஸ் பழக்கமில்லை என்று கூறியதில் தங்க க்ளாஸ் கேட்கிறாள் எனப் புரிய, “கடன்காரிய்ய்ய்ய்ய்” எனப் பல்லைக்கடித்தான்.

“தங்க க்ளாஸா?” கண்மணி குழப்பமாகக் கேட்க, “நோ… டாட்ஷா க்ளாஸ்… இட்டாலியன்ல மக் கப்க்கு அதான் அர்த்தம். அது உங்க காதுல தங்க கிளாஸ்னு கேட்டுடுச்சு” எனப் பொதுவாய் ஒரு விளக்கம் கொடுக்க, “அவ்ளோ தானா…” எனக் கண்மணி ஓடிச்சென்று மக்-கை எடுத்துக்கொண்டு வந்தாள்.

“நல்லா தமிழ் பேசுறீங்களே தம்பி…” கிருஷ்வேணி அவர் பங்கிற்கு அவனிடம் பேச்சுக் கொடுக்க, ஆதிசக்தியின் பார்வை மகனின் மீது படர்ந்தது.

அதை உணர்ந்தும் நிமிராதவனாக, “தமிழ் மட்டும் இல்ல 25 லாங்குவேஜ் பேசுவேன். அதுல தமிழும் ஒண்ணு!” என்றபடி நிமிர்ந்து தாயை நோக்கி அமர்த்தல் பார்வை வீச, அவர் சட்டென திரும்பிக் கொண்டார்.

தாய்க்கும் மகனுக்குமான பார்வை பரிமாற்றத்தை இளவேந்தனும் அறிவார்.

“கண்மணி… அண்ணனுக்கு இட்லி வை!” அவன் தட்டு காலியானதைக் கவனித்து மகளிடம் இளவேந்தன் உத்தரவிட,

“நோ தேங்க்ஸ்… ஐ ஆம் டன்” எனக் கண்மணியை நிறுத்தியவன், கண்ணைத் திருப்பி நிதர்ஷனாவைப் பார்க்க, அவளோ இன்றே உண்பது இறுதிநாள் என்பது போல இட்லியையும் தோசையையும் காலி செய்து கொண்டிருந்தாள்.

‘என்ன ஒரே வருத்தம்… பரோட்டாவும் சிக்கன் கறியும் போட்டுருக்கலாம்’ என மனதில் வருத்தப்பட்டுக் கொள்ள, அவள் எழும் வரை டேபிள் மேனர்ஸ் காக்கும் பொருட்டு அவனும் அமர்ந்திருந்தான்.

கிருஷ்ணவேணி “சாப்பாடு பிடிச்சு இருக்காமா…” எனக் கேட்க, ‘ம்ம்க்கும் உப்பும் இல்ல உரைப்பும் இல்ல.’ என நொந்து கொண்டவள்,

“ஓ! நல்லாருக்கே” என சிரித்து வைத்தாள்.

“உங்க ரெண்டு பேருக்காக உரைப்புலாம் கம்மியா போட்டேன்” என்றதும்,

“ஏன்…” எனக் கேட்டவள், “உங்களை நான் எப்படி கூப்பிடனும்?” என்று உறவுமுறையை ஆராய்ச்சி செய்தாள்.

“நான் உனக்கு பெரியம்மா முறை…” கிருஷ்ணவேணி புன்னகை முகத்துடன் கூற, “அப்போ இவர் எனக்கு பெரியப்பாவா?” என அழகேசனைக் காட்ட, அவர் பெரிய மீசையைப் பெருமையாக நீவிக்கொண்டார்.

யாஷ் பொறுமை இழந்து, “சாப்பிட்டியா? ஐ ஆம் வெயிட்டிங் பார் யூ…” என அதட்டும் தொனியில் கேட்க, “நீங்க ஏன் உக்காந்து என் மூஞ்ச பாத்துட்டு இருக்கீங்க. போய் கையை கழுவுங்க” என்றவள், “இந்தப் பொண்ணு எனக்கு தங்கச்சியா?” என்று சிந்தாமணியைப் பார்த்து கேட்டு பேச்சை வளர்க்க, யாஷ் பிரஜிதன் விழிகளில் நெருப்பைக் கக்கினான்.

‘என்ன திடீர்னு உடம்புலாம் எரியுது’ என்ற சந்தேகத்தில் கணவனைப் பார்த்து அசடு வழிந்தவள், ‘ஓ ஃபயரு இங்கிருந்து வருதா…’ என்றெண்ணத்தில் எழுந்து ஓடி விட்டாள் கையைக் கழுவ.

இருவரையும் விசித்திரமாகப் பார்த்து வைத்தனர் குடும்பத்தினர்.

ரித்திகா சிறு வயதிலிருந்தே பணத்திலும் தந்தையின் செல்லத்திலும் புரண்டவள் என்பது ஆதிசக்தி அறிந்ததே. ஓரிரு முறை சிறு வயதில் ரித்திகாவைப் பார்த்திருக்கிறார். பின் சமீபத்தில் அவளது உயிருக்கு ஆபத்து எனும் ரீதியான செய்தி துணுக்கில் அவளது புகைப்படம் முகம் மறைந்து தெரிந்தது.

ஆனால், அவள் இத்தனை எளிமையாய் பேசுவாளென்று எண்ணவில்லை. ஆகினும் யாஷைக் கவனித்த இளவேந்தன் கூட ரித்திகாவின் புறம் திரும்பாததை ஆதியும் கவனித்தார்.

அவரது உள்மன வேதனை அறிந்ததால், யாரும் அறியாமல் கணவனின் கரம் பற்றி ஆறுதலுரைத்தார்.

மகேந்திரன் எதுவும் பேசவில்லை. இறுகிய முகத்துடனே அமர்ந்திருந்தார்.

யாஷ் பிரஜிதன் ஆதி பேச வரும்முன்னே, “இனி எங்களுக்காக இங்க எதுவும் செஞ்சு கஷ்டப்பட வேணாம். நாங்க பாத்துக்குறோம்…” என்று முடிவாய் கூறி விட, மனமின்றி சம்மதித்தார்.

கதிரவன் தான், ‘ஐயோ திரும்ப நம்மளை மெஷினோட மெஷினா அடைச்சுடுவானோ’ என்ற கவலையில் நொந்து கொண்டான்.

மூவரும் அவர்களுக்கென ஏற்பாடு செய்திருந்த வீட்டிற்கு வர, உள்ளே நுழைந்ததும் கதவு சத்தமிட்டது. “வெல்கம் ஹோம்” என்று…

“இங்கயும் எலிசாவை தூக்கிட்டு வந்துட்டியா அரக்கா” என நெஞ்சைப் பிடித்தாள் அவள்.

“எதே அரக்கனா?” இப்போது கதிரவன் நெஞ்சில் கை வைத்தான்.

யாஷ் பிரஜிதனின் முகமே ரௌத்திரத்தின் சின்னமாக இருந்தது. அத்தனை நேரமும் கோபத்தை அடக்கி வைத்திருந்தான் போலும். வீட்டினுள் நுழைந்ததும் கதிரவனை நோக்கி, “கோ டூ யுவர் ரூம்” எனக் கர்ஜிக்க அவன் தலைதெறிக்க ஓடிவிட்டான். பின் திரும்பி நிதர்ஷனாவை எரியும் பார்வைதனில் வதம் செய்தான்.

“எ… எதுக்கு இப்டி மொறைக்கிறீங்க… நான் நல்லாதானே நடிச்சேன்” அவள் உர்ரென்று கேட்க,

“லூஸ் டாக் விடாதன்னு சொன்னேன்ல. அவங்கள்லாம் உனக்கு எந்த முறையா இருந்தா என்ன உனக்கு? லைஃப் புல்லா அவங்களை பார்த்துட்டா இருக்கப்போற. ரித்தி அன்வான்டட் பேச்சு யார்ட்டயும் வச்சுக்க மாட்டா.” என்றான் அதட்டலாக.

“இங்க யாராவது ரித்தியைப் பார்த்துருக்காங்களா?” அவள் அமைதியாய் வினவ,

“நோ” என்றான் எரிச்சலுடன்.

“அவள் கூட பழகி இருக்காங்களா?”

“நோ!”

“அப்பறம் என்ன? நான் ரித்தின்னு இப்போ எல்லாரும் நம்பிட்டாங்க. சோ, என்ன பேசுனாலும் ரித்தி இப்படி தான்னு அவங்களே முடிவு பண்ணிக்குவாங்க. என் வாய எவ்ளோ நாளைக்கு நான் அடைக்க முடியும்” இறுதி வரியை மட்டும் முணுமுணுப்பாய் உரைத்தாள்.

யாஷ் பிரஜிதனின் கண்கள் காட்டிய கூர்மையில் லேசாக நெஞ்சம் நடுங்க, “சரி இனிமே யார்ட்டையும் பேசல போதுமா…” என்றிட,

“டிஸ்கஸ்டிங்” என்று எரிந்து விழுந்து விட்டே அறைக்குச் சென்றான்.

அவனைப் போலவே அழகு காட்டியபடி அவன் பின்னே சென்ற நிதர்ஷனா, “எனக்கு ஒரு டவுட்டு” என ஆரம்பித்தாள்.

அவன் தனது சட்டையைக் கழற்றிக் கொண்டிருக்க, அப்படியே நின்றவள் கண்ணை மூடிக்கொண்டாள்.

“யோவ் கதவை சாத்திட்டு ட்ரெஸ் மாத்த மாட்டியா?”

“நீ கதவை நாக் பண்ணிட்டு வரமாட்டியா” அவனும் எதிர்கேள்வி கேட்டான்.

“இப்ப என்ன டவுட்டு” பேண்ட்டிலிருந்து டிராக் பேண்ட்டிற்கு மாறியபடி கேட்டதில், “உங்க அம்மா, அப்பா நார்மல் கலர்ல தான இருக்காங்க. அப்பறம் எப்படி நீ மட்டும் வெளிநாட்டுக்காரன் மாறி இருக்க?” என்றாள் சந்தேகமாக.

“அவங்க என் மம்மான்னு சொன்னேன். பப்பான்னு அவரை சொல்லவே இல்லையே…” என்றதும், “அப்டின்னா” எனக் கேட்டபடி திரும்பியவள் அவன் இன்னும் சட்டை அணியாததில் “யோவ் எவ்ளோ நேரம் ட்ரெஸ் மாத்துவ” என்றாள் கடுப்பாக.

“நான் ஒர்க் அவுட் பண்ணப் போறேன்…” என வெறும் டிராக் பேண்ட் மட்டும் அணிந்து விட்டுக் கூறிட,

“இந்நேரத்துலயா?”

“ம்ம்… ஹெவி டின்னர்” அவ்வறைக்கு உள்ளே இருந்தே ஒரு கதவைத் திறக்க, அங்கு பல உடற்பயிற்சி கருவிகளுடன் ஜிம் குளுகுளுவென இருந்தது.

“அய்யயோ” அவன் பின்னே சென்றபடி அவள் அதிர, “என்ன?” என்றான் புருவம் சுருக்கி.

“ஆளே இல்லாம ஏசி ஓடிட்டு இருந்துருக்கு போல… சில்லுன்னு இருக்கு பாருங்களேன்” என்றாள்.

“இங்க எல்லாமே சென்ட்ரல் ஏசி. ஜிம் டோரை ஓபன் பண்ணுன பியூ செகண்ட்ஸ்ல ஆட்டோமேட்டிக்கா இங்க இருக்குற ஏசி ஹை டெம்பரேச்சர்ல ஆன் ஆகி, தென் கொஞ்ச கொஞ்சமா குறையும்” எனக் கூறியபடியே “எலிசா” என சத்தம் கொடுக்க,

உடனடியாக தரை துடைக்கும் இயந்திரம் அதன் வேலையைச் செய்தது. அதைக் கண்டதும் ஓரமாக போடப்பட்டிருந்த சோபாவில் காலைத் தூக்கி அமர்ந்தவள்,

“இங்க தான் குப்பையே இல்லையே. அப்பறம் ஏன் இதை அவுத்து விட்டீங்க யாஷ்” என்றாள் கடுப்பாக.

“குப்பை இல்ல. உன் காலப் பாரு. நடுரோட்டுல வெறும் காலோட ஓடுன தூசி இந்த ஏசிக்குள்ள சுத்தும். பாத்ரூம்ல ஃபீட்க்கு போடுற லோஷன் இருக்கும் அதை போட்டு க்ளீன் பண்ணு” என அதிகாரமாய் கூறினான்.

“ரொம்பத் தான்… அப்படி ஒன்னும் என் கால் அழுக்கு பிடிச்சு இல்ல” என சிலுப்பியதில், “எலிசா… ஷோ மீ தி டஸ்ட்” எனச் சத்தம் கொடுத்தான் ட்ரெட் மில்லில் ஓடியபடி.

உடனே அந்த இயந்திரத்தில் இருந்து ஒரு சிறிய டப்பா போலான அமைப்பு வெளியில் வர, அதில் ஒரு வண்டி தூசி இருந்தது.

அவன் ஓடியபடி திரும்பி நிதர்ஷனாவை முறைத்திட, அவளோ “வீடுன்னு இருந்தா தூசி வரத்தான் செய்யும்…” என்றாள் சமாளிப்பாக.

“வாசோமோட்டர் ரைனைடிஸ்…” யாஷ் உரைத்ததும்,

“மோட்டர் போட்டு விடவா? எங்க இருக்கு சுவிட்சு” எனக் கேட்டாள் அப்பாவியாக.

அதில் ட்ரெட்மில்லில் இருந்து இறந்து வியர்வைத் துளிகள் நெஞ்சைத் தொட இடுப்பில் கரம் பதித்து நின்றவனின் தோரணை அவள் விழிகளுக்குள் அடைக்கலம்.

“என்னோட கண்டிஷன் பத்தி சொன்னேன். சார்ட் ஆஃப் நாசல் நெர்வ் டிஸார்டர்” என்றவன் அவள் விழித்ததும், “மூக்கு நரம்பு ரொம்ப சென்சிடிவ். சோ டஸ்ட், புகை இதெல்லாம் அஃபெக்ட் ஆகாம பாத்துக்கணும்” என்றான்.

“எதுவும் பெரிய நோயா இது? செத்து கித்து போய்ட மாட்டீங்கள்ல…” நிதர்ஷனா கன்னத்தில் கை வைத்துக் கேட்க,

பற்களை நறநறவெனக் கடித்தவன், “சீரியஸ் இஸ்யூ இல்ல. ஜஸ்ட் ஒரு கண்டிஷன் அவ்ளோ தான். டஸ்ட் அலர்ஜி மாதிரி. அண்ட் நீ சாகுறதை பார்க்காம நான் சாக மாட்டேன்” என்றான் திணக்கமாக.

“சீரியஸ் கண்டிஷனா இருந்தாலும் பரவாயில்ல… காசியை செட்டில் பண்ணிட்டு போய்டுங்க! அப்பறம் என் நடிப்பெல்லாம் இந்த ஏசி மாதிரி வீணாப்போயிடும்…” எனச் சொல்லி விட்டு அவள் அறைக்குச் செல்ல, அவள் சென்ற திசையையே காட்டத்துடன் ஏறிட்டவன் ‘இவள் உயிரே ஊசலாடிட்டு இருக்கு. எவனாவது ஷூட் பண்ண வருவான்ல அப்ப பாத்துக்குறேன்டி உன்ன’ எனக் கறுவினான்.

மறுநாள் காலையிலேயே கதிரவன் தனது கதிர்களை கதிரவனின் அறைக்குள் புகுத்த முற்பட, அவனோ கர்டைனையும் கண்ணையும் இறுக்கி மூடி இருந்தான்.

“எந்திரிச்சு மட்டும் என்ன செய்யப்போறோம்… அப்டியே தூங்கிட்டே இருப்போம்” என்றவனின் எண்ணத்தில் சிந்தாமணியின் குரல் மண்ணள்ளிப் போட்டது.

“ஹலோ மாமா… மாமா” என்று கதவைத் தட்டும் சத்தம் கேட்க, கீழறையில் தங்கி இருந்த கதிரவனுக்கு அவளின் குரல் நன்றாக கேட்டது.

“இன்னைக்கு எந்த ஏணியை எடுத்துட்டு வந்தாளோ” என்றெண்ணியபடி கண்ணைக் கசக்கியபடியே கதவைத் திறக்க முயல, திறக்கவே இயலவில்லை.

அருகிலேயே இருந்த பாடி கார்ட்ஸும் இல்லை.

அந்நேரம் “என்ன செஞ்சுட்டு இருக்க” என்ற யாஷின் கடுமையான குரல் கேட்க, பதறியடித்து திரும்பியவன் “அந்த சிந்தாமணி இன்னைக்கும் ஏணியோட வந்துடுச்சு போல சார்…” என்றான் வேகமாக.

“மத்தவங்க முன்னாடி சார்னு கூப்பிட்டு வைக்காத. கால் மீ யாஷ். அண்டர்ஸ்ட்டுட்” என்றிட, “அண்டர்டேக்கர்க்கு அண்டராயர் போட்டதுக்கு அப்பறம் முட்டி தெரியுதுன்னு ஃபீல் பண்ணவா முடியும்…” என முணுமுணுத்துக் கொண்டான்.

“வாட்?” யாஷ் பார்வையைக் கூர்மையாக்க, “அது… கதவை வேகமா தட்டுறாங்க யாஷ்” என்றான் மிரண்டு.

“ம்ம்” என உறுமியவன் கதவின் வழியே தனது கண்ணை ஸ்கேன் செய்து, விரலையும் ஸ்கேன் செய்திட, ஸ்லைடின் டோர் போல இரு பக்கமும் திறந்த கதவு சுவரினுள் மறைந்தது.

அதனை வெளியில் நின்றிருந்த கண்மணியும் சிந்தாமணியும் வியப்பாகப் பார்க்க, அவர்களை அர்த்தத்துடன் ஏறிட்டவன், “என்ன இன்னைக்கு திருட்டுத்தனமா லேடர் போட்டுப் பாக்க போறீங்களா” எனக் கர்ஜித்தான்.

கண்மணி சற்றே மிரள, சிந்தாமணிக்கு குளிர் பரவினாலும், “நாங்க ஏன் மாமா ஏணி போட்டுப் பாக்கணும். எங்களுக்கு உள்ள வர உரிமை இல்லையா என்ன… இல்லடி கண்மணி” என அவளையும் துணைக்கு அழைத்தாள்.

கண்மணி வார்த்தை வராமல் அரண்டு நின்றிருக்க,” யாருக்கும் என் ஸ்பேஸ்குள்ள வர உரிமை இல்ல” யாஷ் பிரஜிதன் முடிவாக உரைத்ததில் இரு பெண்களின் வதனத்திலும் சிறு வாட்டம்.

அந்நேரம் குளித்து முடித்து தலையைத் துவட்டியபடி அங்கு வந்த நிதர்ஷனா, “ஹாய்… காலங்காத்தால எங்க ஜாலியா கிளம்பிட்டீங்க?” எனக் கேட்டாள், இருவரும் பாவாடை தாவணி அணிந்திருந்ததைக் கண்டு.

‘பத்து மணி காலங்காத்தாலையாம்டி’ சிந்தாமணி கண்மணியிடம் முணுமுணுக்க, “என்ன விஷயம்” என்றான் யாஷ் பிரஜிதன்.

“அதை ஏன் வெளில நிக்க வச்சே கேட்குறீங்க யாஷ். உள்ள வாங்க” என்று இயல்பாக இரு பெண்களையும் அழைத்ததில், அவளைத் தனது கலப்படக் கண்களால் திருப்பி ஒரு பார்வை பார்க்க, அவள் ஆர்வத்தை குறைத்துக் கொண்டாள் அப்போதைக்கு மட்டும்.

சிந்தாமணியோ, “இது ஆவுறதுக்கு இல்ல. போய்டலாம்டி கண்மணி” எனக் கிசுகிசுப்பாய் அழைக்க, “ப்ளீஸ்டி” என்ற தோழியின் வருத்தத்தில் அவளும் அவமானத்தைத் துடைத்துக் கொண்டு நின்றாள்.

“ரெண்டு பேருக்கும் காது நல்லா கேட்கும் தான? என்னன்னு கேட்டேன்…” மீண்டும் குரலை உயர்த்தி யாஷ் கேட்க, கண்மணிக்கு அழுகையே வரும்போல இருந்தது.

“அது… வந்து… அண்ணா… கோ… கோவிலுக்குப் போறோம். அத அதான்… அண்ணியைக் கூப்பிடலாம்னு” எனத் திக்கித் திணறி சொல்வதற்குள் அவளது மூக்கு நுனி சிவந்து விட்டது.

அவளைப் பார்க்க பாவமாக இருந்ததில், “கோவிலுக்கு தான. நான் ரெண்டு நிமிஷத்துல ரெடியாகிட்டு வரேன்” என்று நிதர்ஷனா கூறியதில் கண்மணியின் முகம் மலர்ந்தது.

கையை இறுக்கி மூடி கோபத்தை அடக்கிய யாஷ் பிரஜிதன், “நீங்க போறதுன்னா எங்கயும் போங்க. எதுக்காகவும் இங்க வந்து நிக்காதீங்க புரியுதா. அவுட்!” என்று ஒரு பிங்கர் பிரிண்ட் பட்டனை அழுத்த கதவு தானாக மூடி விட்டது.

இரு பெண்களின் அதிர்ந்த முகமும் தெரிய கதிரவனுக்கும் நிதர்ஷனாவுக்கும் மனம் கேட்கவில்லை.

இங்கு சிந்தாமணியோ, “விடுடி… இவ்ளோ வருஷம் தள்ளி இருக்க வச்சுட்டாங்க நம்ம வீட்ல. திடீர்னு வந்து தங்கச்சின்னு உன்னையும், மாமா மகளேன்னு என்னையும் கட்டிப் பிடிக்க போறாரா என்ன? இங்கிருந்து போறதுக்குள்ள நம்மளை புருஞ்சுப்பாரு கண்மணி” என்றபோதே அவளுக்கு முணுக்கென கண்ணீர் கோர்த்தது.

“அண்ணன் பாசத்தை எதிர்பாக்குறது தப்பா சிந்தா… இடைல எவ்ளவோ முறை அவர்ட்ட பேச ட்ரை பண்ணுனேன். பேசவே முடியல. இப்போ தானா பார்க்க வாய்ப்பு இருந்தும் எட்டி தான் நிக்கணும்ல.”

“லூசு மாறி பேசாத கண்மணி. விவரம் தெரியாத வயசுல அப்பாட்ட போய்ட்டவருக்கு நம்ம மேல எப்படி பிடிப்பு இருக்கும். தாத்தாவாவது அவரை வரவைக்க முயற்சி பண்ணிருக்கணும். அவங்களுக்குள்ள நடக்குற பாலிடிக்ஸ்க்கு நம்ம என்ன செய்றது?” என சமன் செய்து அழைத்துச் சென்றாள்.

இங்கு நிதர்ஷனாவின் மீது கடும் கோபம் கொண்டு அறைய எத்தனித்தான் யாஷ் பிரஜிதன். அவளோ கருமணிகளைக் கூட அசைக்காமல் அவனைத் திமிர் பார்வை பார்க்க, “திஸ் இஸ் தி லாஸ்ட் வார்னிங். இன்னொரு தடவ என்னைக் கேட்காம அந்தப் பொண்ணுங்க கூப்புட்றாங்கன்னு தலையாட்டுன… கொன்னுடுவேன்” என்று எச்சரித்து விட்டே உள்ளே சென்றான்.

நிதர்ஷனாவோ தரை அதிர காலை தூக்கி வைத்து நடந்தபடி அவன் பின்னேயே சென்றாள்.

“நீங்க மனசுல என்ன நினைச்சுட்டு இருக்கீங்க… நீங்க நடிக்க தான கூப்பிட்டீங்க… நானும் நடிச்சுட்டு தான் இருக்கேன். அதுக்காக நீங்க சொல்றதை மட்டும் தான் பேசணும், நீங்க கண்ணசைச்சா மட்டும் தான் செயல்படணும்னு சொல்ல நான் ஒன்னும் நீங்க கண்டுபிடிச்ச ரோபோ கிடையாது. எனக்கு ஏ. ஐன்னு என் பேர் தெரியாத அப்பா, அம்மா பேரும் வைக்கல” என்று பொரிந்ததில் அவன் விழி இடுங்க தீயாகக் காய்ந்தான்.

“மொதல்ல நீங்க பார்வையில இருக்குற ஹீட்டை கம்மி பண்ணுங்க புரியுதா… சொம்மா எப்ப பாரு மொறைச்சுக்கிட்டு. அந்தப் பொண்ணுங்க எவ்ளோ பாசமா கூப்பிடுதுங்க. அதுவும் என்னையும் ஒரு ஆளா மதிச்சு கூப்புடுறதே எனக்கு பெருசு. என் வீட்டாண்ட, சிறுசு கூட என்னை மதிக்காது தெரியுமா. ஒங்களுக்கு கூப்ட்டு வச்சு மரியாதை குடுத்தா ரொம்ப தான் பண்றீங்க” எனப் பொங்கியதில் ஒரு நொடி அழுத்தம் திருத்தமாகப் பார்த்தவன்

“கிளம்பு டெம்பிள்க்குப் போகலாம்…” என்று விட்டு கீழே சென்றான்.

அங்கு இன்னும் கதிரவன் வாசலின் அருகில் நிற்பதைக் கண்டு கதவைத் திறந்து விட்டவன், “அந்தப் பொண்ணுங்களை பிடிச்சு எந்த கோவிலுக்குப் போறாங்கன்னு கேளு. கோ” என்று உத்தரவிட, கூண்டை திறந்து விட்ட சிட்டுக்குருவியாய் பறந்தான்.

‘வீடா இது… பகல்ல கூட லைட்டை போட்டு வச்சுருக்கானுங்க’ என்ற சோகம் அவனுக்கு.

இரு பெண்களையும் பிடிக்க அதே தெருவில் ஓடியவன், சில அடிகள் தூரம் சென்றிருந்த இருவரையும் நிறுத்தினான்.

“இந்தாமா ரெண்டு பேரும் நில்லுங்க” என்றதும் இருவரும் திரும்பி கதிரவனைப் பார்க்க, “உன் அண்ணே எந்தக் கோவிலுன்னு கேட்டாரு…” என்றதுமே கண்மணிக்கு அத்தனை நேரம் இருந்த சோர்வு முற்றிலும் நீங்கியது.

சிந்தாமணியோ, “பக்கத்துல இருக்குற அம்மன் கோவில் தான்… ரெண்டு தெரு தள்ளி” என்றிட, விவரம் கேட்டு விட்டு அதே ஓட்டத்துடன் யாஷிடம் வந்து கூறினான்.

“சரி நீ இரு” என்று மீண்டும் வீட்டினுள் அடைக்கப் போக, “எனக்கும் சாமி கும்பிடனும்” என்றான் பரிதாபத்துடன்.

“கடவுள் தூண்லையும் இருப்பாரு துரும்புலையும் இருப்பாருல…?” யாஷ் நெற்றியை நீவியபடி கேட்க, அவன் சொல்ல வரும் கருத்து புரிந்து, “இருப்பாரு. ஆனா இந்த வீட்ல இல்ல” என நக்கலாகக் கூறியதில், “இல்லன்னா பரவாயில்ல சுவத்தைப் பார்த்து கும்புடு” என்று நிதர்ஷனா கிளம்பி வரவும் அவன் கதற கதற கதவை பூட்டி விட்டுச் சென்றான்.

“கதிரையும் கூப்பிட்டுப் போயிருக்கலாம்ல?” வருத்தம் மேலோங்க நிதர்ஷனா காரில் ஏற, “உன் உயிர் நண்பன் உயிர் மேல உனக்கு அக்கறையே இல்ல கடன்காரி” என்றான் போலி அக்கறையுடன்.

‘என்ன இவன் பேச்சே தினுசா இருக்கு… நம்ம நாலு செண்டிமெண்ட் டயலாக் சொன்னதும் கூட்டிட்டு வந்துட்டான் சரி இல்லையே…’ என எண்ணிக்கொண்டிருக்கும்போதே ஒரு சில நிமிடத்தில் கோவில் வந்து விட்டது. கோவில் வாசலில் சிந்தாமணியும் கண்மணியும் நிற்க, “ம்ம் போயிட்டு வா”` என்றான் வெகு பாசத்துடன்.

‘என்ன இந்தக் கலப்படக் கண்ணுக்காரன் கண்ணுல கலப்படமான ஒரு நக்கல் தெரியுது’ என்ற யோசனையுடன் இறங்கி இருவரிடம் இணைந்திட, “அண்ணி இந்த ட்ரெஸ்ல அழகா இருக்கீங்க” என்றாள் கண்மணி.

‘கேட்டுக்கிட்டியாடா அரக்கா’ அவள் பார்வையாலேயே கணவனைப் பார்க்க,

காரினுள் அமர்ந்தபடியே இதனைக் கேட்ட யாஷ் பிரஜிதனுக்கு கேலிநகை மின்னியது.

கோவிலுக்குள் நுழைய இரண்டடி எடுத்து வைக்கும் போதே, முகத்தை மூடியபடி இரு ஆடவர்கள் கையில் துப்பாக்கியுடன் நிதர்ஷனாவை நெருங்கினர்.

கண்மணியும் சிந்தாமணியும் திகைத்து நிற்க, நிதர்ஷனாவோ “இன்னாங்கடா துப்பாக்கி வெடி வெடிக்கிறதுக்கு எல்லாம் மூஞ்சில மாஸ்க் போட்டுருக்கீங்க” என அதனை எடுக்கப்போக, யாஷ் பிரஜிதன் ஸ்டைலாக காரை விட்டு இறங்கி கார் பேனட்டின் மீது சாய்ந்து நின்றான்.

அவனைக் கண்டதும் மாஸ்க் அணிந்த ஒருவன் தடுமாற, மற்றொருவனோ “இவன் வரலைன்னு தானடா சொன்ன” என அதட்டினான்.

அவர்களை யோசிக்க விடாமல் நிதர்ஷனா, “ஆமா இதென்ன துப்பாக்கில டேப் போடலையா… அப்பறம் எப்படி வெடிக்கும்” என நிலை புரியாமல் சந்தேகம் கேட்க, யாஷ் அவர்களை நோக்கி அழுத்த எட்டு எடுத்து வைத்து, “கேட்குறாள்ல… எப்படி வெடிக்கும்னு சுட்டுக் காட்டுங்கடா” என்றான் நக்கலுடன்.

சொன்னதோடு நில்லாமல் எதிரில் நின்றவனின் கையில் இருந்த துப்பாக்கியைப் பிடித்து விட, அவனோ தடுமாறி அவனிடம் இருந்து விடுபட முயலும்போதே யாஷ் அவன் கையை வளைத்து துப்பாக்கியால் அவனது காலையே சுட்டுக்கொள்ள வைத்தான்.

வந்தவனின் காலில் இருந்து குருதி கொட்டியபிறகே அது நிஜ துப்பாக்கி என்றே உணர்ந்து உறைந்த நிதர்ஷனா, “யோவ்… என்னையா நெசமாவே ரத்தம் வருது. அப்போ இது பொம்மை துப்பாக்கி இல்லையா?” என்று நெஞ்சம் நடுங்கப் பார்த்தாள்.

யாஷோ அவளைப் போலவே உதட்டைப் பிதுக்கி, இன்னும் நான்கைந்து இடத்தில் சுட்டு வைக்க, அவன் வலி தாளாது துடித்தான். மற்றொருவன் பயந்து அங்கிருந்து ஓடி விட, நிதர்ஷனாவோ பயத்தில் யாஷையே இறுக்கிப் பிடித்துக் கொண்டாள்.

அவளைத் தன் கைவளைவில் வைத்துக் கொண்டு, அந்த மர்ம மனிதனின் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து, “என் வைஃப் மேல நான் இருக்கும்போதே கை வைக்கிற அளவு தைரியம்… உன்னோடவே கடைசியா இருக்கனும்” என்றவன் சற்றே துப்பாக்கியை கீழே இறக்கி வலது பக்க மார்பின் ஓரம் சுட்டு விட, அவன் சரிந்தான்.

நிதர்ஷனாவுக்கு அச்சத்தில் உடலெல்லாம் உதறத் தொடங்கிட, கண்மணி மயங்கியே விழுந்து விட்டாள் அதிர்ச்சியில்.

அன்பு இனிக்கும்
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
27
+1
107
+1
9
+1
4

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்