
பயணத்தின் இறுதிப்புள்ளி
அறிந்திருந்தால்…
ஆரம்பப்புள்ளியையே
அழித்து இருக்கலாமோ…!
முற்றுப்புள்ளி இட வேண்டிய
முறியும் உறவுகளுக்கு
மூன்று புள்ளிகளிட்டு
முடிச்சிட்டதன் முடிவுகள்
மணமுறிவுகளாக!!!
நீதிமன்ற வளாகத்தில் வீற்றிருந்தது அந்தக் கருப்பு நிற ரால்ஸ் ராய்ஸ் மகிழுந்து.
ஸ்டியரிங்கில் விரல்களைத் தட்டியபடி சீட்டின் பின்னால் சாய்ந்து கண் மூடி தவம் மேற்கொண்டிருந்தாள் அவள்.
முகத்தில் வேதனையோ கவலையோ எதுவும் இல்லை. உணர்வுகள் துடைக்கப்பட்ட பளிங்கு முகம். தந்தையின் குட்டி இளவரசியாக வலம் வந்தவள். இன்றோ, கணவனின் இளவரசியாக மாறிட இயலாத துரதிர்ஷ்டம்.
அதிலும் அக்கணவன் தனது நெருங்கிய நண்பன் எனும்போது, உயிரான நட்பையும் இழக்க வேண்டிய நிர்பந்தம்.
கனவிலும் நினைத்துப் பார்க்காத சுழல்களில் இந்த வாழ்வுத் தன்னைச் சிக்க வைக்குமென சிறிதளவும் எண்ணியிருக்கவில்லை அவள்.
“மேம்…” கார் கதவிற்குப் பின்னிருந்து அவளது வக்கீல் குரல் கொடுத்தார்.
“அடுத்து நம்ம தான்” என்றதும், முகத்தை அழுந்தத் துடைத்துக்கொண்டு காரில் இருந்து இறங்கினாள்.
சிவப்பு நிற குர்தியும், நீல நிற ஜீன்ஸும் அவளது வளைவுகளில் பாந்தமாக அடங்கிக் கொள்ள, குளிர் கண்ணாடியை அணிந்து கொண்டவள் வக்கீலின் பின் சென்றாள்.
“இதயாம்ரிதா விஷால்” என்ற பெயர் ஒலிக்கப்பட, விஷாலும் தனது வக்கீலுடன் அங்கு வந்தான்.
வந்தவன் அருகில் நின்றவளைத் திரும்பிப் பார்க்க, அவளோ அவன் புறம் திரும்பவே இல்லை.
“உங்க ரெண்டு பேருக்கும் வேண்டிய நேரம் கொடுத்தும் மியூச்சுவல் பிரிவிற்கு தயாராகி இருக்கீங்க. இதுல உங்க ரெண்டு பேருக்கும் விருப்பமா?” என வினவினார் நீதிபதி.
இருவரும் ஒப்புக்கொள்ள, நீதிபதி இதயாம்ரிதாவிடம் திரும்பி “உங்களுக்கு ஜீவானம்சமா என்ன எதிர்பாக்குறீங்க” எனக் கேட்டார்.
“எனக்கு எதுவும் வேணாம். மிஸ்டர் விஷாலுக்கு வேணுமான்னு கேளுங்க…” எனக் குத்திக் காட்ட விஷாலுக்கு சற்றே கோபம் எழுந்தது.
அவன் ஏற்கனவே தன்னிடம் என்ன கேட்கப்போகிறான் என்று அறிந்தவள் தான்.
ஏற்கனவே அவனது வக்கீல் வேண்டிய தாள்களை நீதிபதியிடம் சமர்ப்பித்து இருக்க, விஷாலுக்கு ஆதரவான வக்கீல் பேசத் தொடங்கினார்.
“இதயாம்ரிதாவோட தந்தை ராம்குமார் புகழ்பெற்ற நிவோரா காஸ்மெட்டிக்ஸ் தயாரிக்கும் தொழிலதிபர். அவர் உயிருடன் இருக்கும்போதே விஷால் தான் அவருக்கு பக்க பலமாக, தொழிலை அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்று இருக்கிறார் என்பதற்கான ஆதாரம் உங்களுக்கு சமர்ப்பித்து இருக்கிறேன் யுவர் ஹானர்.
மேலும், விஷாலுக்கும் இதயாம்ரிதாவிற்கும் திருமணம் நிகழ்ந்ததும் தொழிலை இருவருக்கும் சரிசமமாகப் பிரித்துக் கொடுத்து இருக்கிறார்.
ஆகினும், தனது மனைவியுடைய பாதி பங்கையும் விஷாலே நடத்தி இருக்கிறார். நிவோரா ப்ராண்ட், பல நாடுகளில் புகழ் பெற்றது என்று தாங்கள் அறிவீர்கள். அதே போல, விஷாலும் நிவோராவிற்கு ப்ராண்ட் மாடலாக இருந்திருக்கிறார். இத்தனை வருடங்களாக அவர் உழைப்பை கொட்டிய நிறுவனத்தின் ப்ராண்ட் அவரையே சேர வேண்டும். அதாவது நிவோரா ப்ராண்ட்டிற்கு சொந்தக்காரர் விஷாலாக இருப்பதே உசிதம் யுவர் ஹானர்” என்று தனது உரையை முடித்தார்.
இப்போதோ இதயாம்ரிதாவின் வக்கீல், “விஷாலுக்கு ஏதுவாக எனது கட்சிக்காரர் இதயாம்ரிதாவும் உழைப்பை கொட்டி இருக்கிறார் யுவர் ஹானர். ப்ராண்ட் மாடலாக, நிறுவனத்தில் பல வேலைகளை இழுத்துப் போட்டு செய்ததற்காகவே பிராண்ட் பெயரை உரிமையாக்கிக்கொள்ள நினைப்பது எந்த வகையில் நியாயமாகும். ராம்குமார் எழுதி வைத்த பாதி சொத்துக்களும் கூட, தனது மகளை அவர் இறுதி வரை கண் கலங்காமல் பார்த்துக் கொள்ளத் தானே தவிர மணமுறிவு செய்ய அல்ல” என்றதில் விஷால் வாயைத் திறந்தான்.
“சாரி யுவர் ஹானர். நான் டிவோர்ஸ் கேட்கவே இல்ல. அவங்களா டிவோர்ஸ் கேட்டு, என்கிட்ட இருக்குற சொத்துக்களை, என்னோட அடையாளத்தை வாங்கிட்டா இது எனக்கு எப்பேர்ப்பட்ட அடி. இப்ப கூட ஒன்னும் ஆகிடல. நான் தப்பு பண்ணேன்னு சொல்றதுக்கு எந்த ஆதாரமும் எதிர்க்கட்சிகிட்ட இல்ல. இந்த விவாகரத்தை ரத்து செஞ்சுட்டு தாராளமா ப்ராண்ட் நேம் யூஸ் பண்ணிக்கட்டும்” என்றான் அழுத்தமாக.
அதில் இதயாம்ரிதா அவனைத் திரும்பி ஒரு பார்வை பார்க்க, விஷாலுக்கு சர்வ நாடியும் அடங்கியது.
குற்ற உணர்வில் அவளைப் பார்க்க இயலாமல் திரும்பிக் கொண்டான்.
மாறி மாறி வாதம் செய்ததில் இதயாம்ரிதா வாயைத் திறக்கவே இல்லை.
இறுதியில், ப்ராண்ட் நேம் விஷாலுக்கே செல்ல, அடுத்த ஆறு மாதங்களுக்கு தாற்காலிகமாக இந்தப் பெயரை இதயாம்ரிதா பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும், பிறகு நிச்சயமாக பிராண்ட் பெயரை மாற்றி விட வேண்டுமென்றும் தீர்ப்பு அளித்து இருவருக்கும் விவாகரத்தும் சட்ட ரீதியாக வழங்கப்பட்டது.
தோற்றுப்போவது ஒன்றும் அவளுக்குப் புதிதல்ல. தோள்களைக் குலுக்கிக் கொண்டு வேகநடையுடன் கார்ல ஏறிப் பறந்து விட்டாள்.
—-
“கைஸ் கைஸ்…” கையில் காபியுடன் தனது நண்பர்களை நோக்கி ஓடி வந்தான் அகில். கண்ணாடி ஜன்னல்களால் மூடப்பட்டிருந்த ஏழு மாடிக்கட்டடம் அது. புகழ்பெற்ற நிவோரா காஸ்மெடிக்ஸ் பிரைவேட் லிமிடெட் கம்பெனியின் உயர்தர அலுவலகத்தின் ஏழாவது மாடியில் அமைந்திருந்தது புட் கோர்ட்.
அவசரமாக வந்து அமர்ந்த அகிலிடம் “எதுக்குடா இப்படி காசு குடுக்காம காபியை களவாடிட்டு வந்தவன் மாதிரி ஓடி வர்ற?” என வாரினாள் அவன் முன்னே அமர்ந்திருந்த மிதுனா. அவனது கல்லூரி தோழி.
“உங்களுக்குலாம் ஒன்னு தெரியுமா?” அகில் வழக்கம்போல கையைப் பிசைந்து கொண்டு ரகசியக் குரலில் பேச்சை ஆரம்பிக்க,
“தெரியுமே மச்சி” என்று வேகமாக ஆஜரானான் விதுரன்.
“தெரியுமா?” அகில் விழி விரித்துக் கேட்க,
“ம்ம் பிஜி படிச்சு முடிச்சு, இப்ப டாப் கம்பெனில இன்டெர்னா சேர்ந்துருக்குற எங்களுக்கு ‘ஒண்ணு’ன்னா என்னனு தெரியாம இருக்குமாடா அக்கி…” என வாயைப் பொத்தி நகைத்தவனின் வாயில் வடையை அடைத்து காண்டானான் அகில்.
மிதுனா நக்கலாய் சிரித்தபடி தோள்களில் விழுந்த கூந்தலை பின்னால் நகர்த்திக் கொண்டாள். பச்சை வண்ண காட்டன் சுடிதார் அணிந்து, தனது நீள கூந்தலை விரித்து விட்டு, நடுவில் மட்டும் சிறிய கிளிப் குத்தி இருந்தாள். கையில் ஒரு கருப்பு நிற கைக்கடிகாரம்.
இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் போதே, கையில் லெமன் ஜூஸை ஏந்திக்கொண்டு நெற்றியில் வியர்வைப் பூக்கள் பூக்க, மூச்சு வாங்க அவர்கள் முன் அமர்ந்தாள் பூமிகா.
இடை வரை தொங்கிய கூந்தலை பின்னி, பக்கவாட்டில் மஞ்சள் ரோஜாவை சொருகி இருந்தாள். தினமும் ஒரு நிறத்தில் ரோஜாப்பூ அவளது கூந்தலை அலங்கரித்து இருக்கும். படபடப்பிற்கு சொந்தக்காரி. சிறிய விஷயத்திற்கும் பயந்து பதறி வியர்த்து விடுவாள்.
இப்போதோ இத்தனை பெரிய விஷயம் தெரிந்தபின் அவளால் சாதாரணமாக இருக்க இயலவில்லை.
விதுரன் தற்போது தனது அழுத்த விழிகளில் குறும்பை ஏற்றி பூமிகாவைப் பார்த்தான். கூடவே அவளுக்கு கைக்குட்டையையும் கொடுத்தவன், “நீ என்ன ரன்னிங் ரேஸ் போயிட்டு வந்தவ மாதிரி இருக்க?” என்றான் கேலியாக.
“அடேய்… நானே நடந்த விஷயத்தைக் கேள்விப்பட்டு பதறிப் போயிருக்கேன்…” பூமிகா பற்களைக் கடிக்க,
அகிலோ, “உனக்கும் தெரிஞ்சுடுச்சா? எச். ஆர் பத்மபிரியா சொன்னாங்க தான…” எனக் கேட்டதும் “ஆமாடா” என்றாள் சோகமாய்.
“ஹே இப்ப எதுக்கு ரெண்டு பேரும் சோக கீதம் வாசிக்கிறீங்க?” மிதுனா வினவிட, ‘யாருக்கு வந்த கேடோ’ என்று விதுரன், பூமிகா வாங்கி வந்த எலுமிச்சை சாறைப் பருகினான்.
அகில் தான் முதலில் ஆரம்பித்தான்.
“நம்ம விஷால் சாருக்கும் அம்ரிதா மேடம்க்கும் டைவர்ஸ் ஆகிடுச்சாம்”
விதுரனோ, “டேய் சினிமாக்காரங்களுக்கும் கை நிறைய காசு வச்சுருக்கவங்களுக்கும் டைவர்ஸ் பண்றதுலாம் ஒரு சாதாரணமான விஷயம்டா. அவங்களுக்குலாம் பெர்சனல் பீலிங்ன்னு ஒன்னு இருக்கவே இருக்காது. அது மூலமா எப்படி மார்க்கெட்டிங் பண்ணலாம், அனுதாபம் தேடி படத்தை ஓட வைக்கலாம்ன்றது மட்டும் தான் இருக்கும். அதுவும் இல்லாம, இதை வச்சே ரெண்டு பேரும் பிசினஸை இன்னும் ரீச் பண்ணிடுவாங்க பாரு…” என்றான் ஏளனமாக. அவன் முகத்தில் ஒரு அசாத்திய வெறுப்பு.
அவனது கூற்றில் சமாதானமடையாத மிதுனா, “யாருக்கா இருந்தாலும் வலி ஒன்னு தான் விது. செலிபிரிட்டியா இருக்கறதுனால அவங்களோட வலி இங்க மார்கெட்டிங்கா போயிடுது. அதுக்கு அவங்களும் என்ன செய்வாங்க. அப்படி ஒட்டு மொத்தமா அவங்க உணர்வை விமர்சனம் செய்யாத” என்றாள் கண்டிப்பாக.
ஏற்கனவே இருவருக்கும் பிரபல இசையமைப்பாளருக்கு ஏற்பட்ட விவாகரத்து உரையாடலில் முட்டிக்கொண்டது. அதில் சின்ன வாக்குவாதங்கள் மனஸ்தாபங்களாக மாறியிருக்க, இப்போதும் அதையே தொடர விருப்பமற்று விதுரன் அவளது பேச்சை சட்டை செய்யாது மீண்டும் பழச்சாறில் புதைந்து கொள்ள, மிதுனாவிற்கு மெல்லக் கோபம் எட்டிப்பார்த்தது.
அகில் தான், “அட இப்ப பஞ்சாயத்து இது இல்ல…” என்றதும் இருவரும் அவனைப் பார்த்தனர்.
“ம்ம் ஆமா,” பூமிகா அவனைத் தொடர்ந்து, “விஷால் சாருக்கும் அம்ரிதா மேடம்க்கும் நடந்த பிரச்சினைல நிவோரா கம்பெனி பிராண்டும், தொழில் ரீதியான முக்கால்வாசி உரிமையும் விஷால் சாருக்கே போய்டுச்சு” என்றாள்.
மிதுனா, “ஆனா இது எல்லாம் அம்ரிதா மேமோட பரம்பரை சொத்து தான?” எனக் கேட்க,
“ம்ம் ஆமா. ஆனா விஷால் சார் சாமர்த்தியமா சொத்தைப் புடுங்கிட்டாரு. இதுல ஹைலைட் என்னென்ன, நிவோரா கம்பெனியோட ஹெட் ஆபிஸ் டெல்லில இருக்கு. விஷால் சாரோட மொத்த டீமையும் டெல்லிக்கு மாத்த போறாராம். இங்க ஒர்க் பண்ணிட்டு இருந்த தி பெஸ்ட் எம்பளாயீஸ், இன்க்ளூடிங் எம். டி, ப்ரொடக்ஷன் மேனேஜர், மார்க்கெட்டிங் டைரக்டர், ஆர் அண்ட் டி யோட சீப் டைரக்டர்னு எல்லாரையும் டெல்லிக்கு மாத்திட்டாரு.
அதுவும் இம்பார்ட்டண்ட் பொசிஷன்ல இருக்குற ஆளுங்களை எடுத்துட்டா இங்க எப்படி கம்பெனி ஓடும்? அதுவும் இல்லாம நம்மளை மாதிரி புதுசா சேர்ந்துருக்குற இன்டெர்ன அவரு சீண்ட கூட செய்யல. நம்மளே பெரிய கம்பெனி, இங்க இன்டெர்னா ஒர்க் பண்ணுனா நல்ல அனுபவம் கிடைக்கும், இங்கயே வேலை வாய்ப்பு நிறைய இருக்கும்னு தான சேர்ந்தோம். இப்ப நம்மளோட நிலைமை அந்தரத்துல ஊசல் ஆடுது. இன்னும் ஆறே மாசத்துல இங்க நிவோரான்ற ப்ராண்டும் இருக்காது. சொல்லப்போனா அம்ரிதா மேம் இந்த பிசினஸை இழுத்து மூடிடுவாங்கன்னு தான் வெளில பேசிக்கிறாங்க. ஏன்னா, அவங்களுக்கு இந்த பீல்டுல பெருசா இண்டரெஸ்ட் இல்லையாமே” எனக் கவலை கொண்டாள்.
விதுரனோ, “ப்ச்… இவங்களோட குடும்ப சண்டைல பலியாக போறது நம்மள மாதிரி சாமான்ய மக்களோட திறமையும் எதிர்காலமும் தான்” என எரிச்சலாக கூறி விட்டு எழுந்தவன், கீழே சென்று விட, மற்றவர்களும் பெருமூச்சுடன் வேலையில் புதைத்தனர்.
புதிதாய் வேலைக்கு சேர்ந்த பயிற்சி உதவியாளர்களுக்கு எல்லாம் ஒரே கேபின் தான் கொடுக்கப்பட்டிருந்தது.
அதில், நால்வரும் ஒவ்வொரு துறைக்கு கீழே வேலை பார்த்திருந்தனர்.
மிதுனா, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு துறையில் இருந்தாள். தயாரிப்புகளின் வடிவமைப்பு (லிப்ஸ்டிக், ஸ்கின் கேர், பர்ஃப்யூம்…).
பாதுகாப்பு சோதனை போன்ற வேலைகள் அவளுக்கு அடக்கம்.
பூமிகா, உற்பத்தி & தயாரிப்பு பிரிவில் இருந்தாள். காஸ்மெட்டிக்ஸ் மூலப்பொருள்களின் அத்தியாவசியம், அதன் தரக் கட்டுப்பாடு போன்றவற்றை ஆராயும் துறை.
அகில், மார்க்கெட்டிங் & பிராண்டிங் பிரிவின் கீழே இருந்தான். பிராண்டின் முகப்பு, விளம்பரத் திட்டங்கள். ஃபேஷன் ஷோ, இன்ஃப்ளூயன்சர் இணைப்பு என பல்வேறு வேலைகளைக் கற்றுக்கொள்ளும் துறை.
விதுரன், IT துறையில் இருந்தான். ஆன்லைன் சேல்ஸ், டிஜிட்டல் மார்க்கெட்டிங் மற்றும் பி. ஆர் மூலம் விளம்பரப்படுத்துதல் போன்ற வேலைகள் அவனுக்கு அடக்கம்.
நால்வருமே பயிற்சி காலத்தில் தங்களது பணியை சிறப்பாய் செய்ய ஆரம்பித்து இருக்க, தற்போது இடி விழுந்தது போல இருந்தது.
நிவோரா காஸ்மெடிக்ஸ் கம்பெனியில் வேலைக்குச் சேர்வதென்பது பல இளைஞர்களின் கனவாகிற்றே. தற்போது அந்தக் கனவில் ஆசிட்டை ஊற்றி விட்டது போல அனைத்தும் விஷாலுக்குச் சென்று விட்டதுடன், அவன் தங்களை நிராகரித்து விட்டுச் சென்றது பெரியதாக வருத்தியது.
மாலை தாண்டி வேலை நேரம் முடிந்தபின்பு மீண்டும் ஒரே கேபினில் நால்வரும் குழுமினர்.
விதுரன் தான், “கூடிய சீக்கிரம் வேற கம்பெனில அப்ளை பண்ணனும்” என்றிட, “இங்க ஆறு மாசம் ஒர்க் பண்ணனும்னு ரூல்ஸ் இருக்கே விது” என்றாள் பூமிகா.
“அதெல்லாம்…” விதுரன் பேச வரும் முன்னே பத்மபிரியா அவசரமாக அங்கு வந்தார்.
“கைஸ்… மேம் வர்றாங்க” என்றதும் மற்ற மூவரும் அவசரமாக எழுந்து கொள்ள விதுரன் மட்டும் அசட்டையாக எழுந்தான்.
எப்படியும் தங்களை வெளியில் அனுப்பி விடுவார்கள். பிறகெதற்கு மரியாதை என்ற ஏளனம் தான்.
வேக நடையுடன் குளிர் கண்ணாடியை கழற்றியபடி அங்கு வந்தாள் இதயாம்ரிதா.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.

விதுரன் ஓவர். ரிதா செம.