Loading

அத்தியாயம் 1

 

என்றும் பரபரப்பிற்குக் குறைவில்லாத சென்னை மாநகரம், மழையில் மூழ்கி இருந்தது. சில தெருக்கள் நீரால் நிறைந்திருக்க, அந்தப் பரபரப்பிற்குச் சற்றும் ஒன்றாத யாஷ் பிரஜிதனின் செயற்கை நுண்ணறிவால் உருவான பங்களா, அமைதியின் சின்னமாகக் காட்சியளித்தது.

 

“எலிசா… ஹாட் வாட்டர்!” என யாஷ் பிரஜிதன் குரல் கொடுக்க, அவனால் உருவாக்கப்பட்ட ஏ.ஐ குளியலறையில் மிதமான சூட்டில் தண்ணீரைத் தயார் செய்தது.

 

குளித்து முடித்து வந்தவன், ஏ.ஐ கண்ணாடி முன்பு நின்றான்.

 

முகத்தில் துளியளவும் இளக்கம் இல்லை. உணர்வுகளும் இல்லை.

 

பல நாள்களாக உபயோகப்படுத்தாத அவனது ரோபோக்களை, அவனே தற்போது தான் பயன்படுத்துகிறான்.

 

தன் முன்னே உணர்வற்று நின்ற தனது முதலாளியை, ஏ.ஐ கண்ணாடி ஸ்கேன் செய்தது.

 

“நான் உங்களுக்கு என்ன மாதிரியான ட்ரெஸ் செலக்ட் பண்ணட்டும்?” எலிசா குரல் கொடுக்க,

 

ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்டவன், “பிக் சம் பார்மல்!” என்றான். ஏற்கெனவே கம்பீரமும், கணீர் தொனியும் கலந்த அவனது குரல் தற்போது அழுத்தமும், ஆழ் அமைதியும் கலந்து மேலும் கணீரென இருந்தது.

 

“சாரி பாஸ். நீங்க ஸ்மைல் பண்ணுனா தான் உங்களுக்கு ட்ரெஸ் எடுத்துத் தர முடியும்…” என்றது எலிசா என்கிற ஆலம்பனா.

 

ஒரு கையை இறுக்கி மூடியவனின் நரம்புகள் புடைத்தது.

 

“எலிசா… ஜஸ்ட் டூ மை ஆர்டர்ஸ்!” என யாஷ் உத்தரவிட,

 

“யோவ் அரக்கா, சிரிய்யா!” என்றது எலிசா.

 

அதனைக் கேட்டு விழிகள் சிவக்க அந்தக் கண்ணாடியைக் காலால் எத்தி விட்டவன், “ஜஸ்ட் ஸ்டாப் இட்! ஸ்டாப்…” என்று கத்தினான் அந்த அமைதியைக் கிழித்துக் கொண்டு.

 

யாஷ் பிரஜிதனின் சத்தம் கேட்டு அவனது அறைக்கு ஓடி வந்த ஆதிசக்தி, “யாஷ், என்ன ஆச்சு?” எனப் பதறிட, உடைந்த ஆடவனின் மனது போன்றே கேட்பாரற்றுக் கிடந்தது அவனால் உருவாக்கப்பட்ட ஏ.ஐ கண்ணாடி.

 

“நீங்க எதுக்கு வந்தீங்க?” அவனிடம் கடும் சீறல்.

 

“என்னால உன்னை விட்டுட்டு அங்க இருக்க முடியல யாஷ்…” ஆதிசக்திக்குக் கண்ணில் நீர் நிரம்பி நின்றது.

 

“இத்தனை வருஷம் இருக்க முடிஞ்சுது தான?” அவனது விழிகளில் பளபளத்த கோபத்தில் உள்ளம் துடித்தது.

 

“உன்னை விட்டு இருக்க, என்னை நானே கஷ்டப்பட்டுப் பழக்கப் படுத்திக்கிட்டேன். இப்போ முடியலையே. ஏன் இந்த விதி, மறுபடியும் மறுபடியும் உன்னையும் என்னையும் பிரிச்சு வைக்கிதுன்னு எனக்குத் தெரியல.” என முகத்தை மூடி ஒரு மூச்சு அழுதார்.

 

அவரைச் சில நொடிகள் உணர்வின்றி, அசைவின்றிப் பார்த்தவன், “டோன்ட் க்ரை!” என்றான் அதிகாரமாக.

 

அவரோ அழுகையை நிறுத்தாது இருந்ததில், “ஐ செட் டோன்ட் க்ரை மம்மா…” என அறை அதிரக் கத்த, ஆதிசக்தியின் கண்ணீர் தானாய் நின்றது.

 

“கிளம்புங்க! நீங்க இப்ப இங்க இருக்குறது சரி இல்ல…” என்றவன், “ஆஹில்!” என ஒரு சத்தமிட, மறுநொடி அவன் முன்னே நின்றிருந்தான் ஆஹில்யன்.

 

தாயைக் கண்ணைக் காட்டி விட்டு அவன் விறுவிறுவென வெளியில் சென்று விட, ஆதிசக்திக்கு நின்று போன கண்ணீர் மீண்டும் வழிந்தது.

 

“ஆன்ட்டி!” ஆஹில்யன் கவலையாய் அவரைப் பார்த்தான்.

 

“என்னால முடியல ஆஹில்” என நெற்றியில் கை வைத்து உடைந்தார்.

 

“சரியாகிடும் ஆன்ட்டி. பாஸ் எதையும் சரி பண்ணாமல் விட மாட்டாரு. நீங்க இங்க இருந்து கிளம்புனா தான்…” என மென்று விழுங்க, ஆதிசக்தி பெருமூச்சு ஒன்றை இழுத்து விட்டு அங்கிருந்து கிளம்பினார்.

 

—–

 

“இன்னாயா, காய்கறி பூராம் அழுகிப் போயிருக்கு…” எனக் காய்கறி வண்டிக்காரனிடம் சண்டையிட்டுக் கொண்டிருந்தார் கதிரவனின் அன்னை பரமேஸ்வரி.

 

“ஏம்மா, காய முழுசும் ஒடச்சு ஒடச்சு எடுக்குறியே. எனக்குக் கிராக்கியாகுமா?” எனக் காய்கறிக் வண்டிக்காரர் சலித்துக் கொள்ள, “நீ மொதோ நல்ல காயா கொண்டு வாயா…” என்று அவர் திட்டும்போதே அவருக்குத் தெரியாமல் குனிந்தபடி மாடிக்கு ஏறிய பெண்ணவள், வீட்டுக் கதவை வேகமாகத் திறந்து சத்தம் வராமல் மூடினாள்.

 

“ஹப்பாடா!” எனக் கதவின்மீது சாய்ந்து நின்றவளைப் புரியாமல் ஏறிட்டான் நிவேதன்.

 

“என்ன நிதா, மறைஞ்சு மறைஞ்சு வர்ற?”

 

“அந்தக் காசிக் கடன்காரன் நம்மளைத் தான்டா தேடின்னுருக்கான். நீ ஆரம்புச்ச தொழிலே நாசமாப் போச்சு. இவன் என்னன்னா, கடன ஒடனே கேக்குறான்…” என நொந்து போகும்போதே, கதவை யாரோ படபடவெனத் தட்டும் சத்தம் கேட்டது.

 

நிவேதன் அரண்டு, “காசி தான் வந்துட்டான் போல நிதா…” எனப் பதற அதற்குள் கதவே உடையும்படிக் கத்தினான்.

 

“ஏய்! உள்ளாற அண்ணனும் தங்கச்சியும், இன்னா திட்டம் போட்டுக்கினுகீறீங்க? கதவைத் தொறக்கறீங்களா ஒடைக்கவா?” என்று மிரட்டியதில், நிவேதன் நிதர்ஷனாவைப் பின்னால் நகர்த்தி அவனே கதவைத் திறந்தான்.

 

அவன் திறந்த நொடியில், காசி நிவேதனின் நெஞ்சில் ஏறி மிதித்திருந்தான்.

 

“அய்யோ நிவே!” நிதர்ஷனா அவனைத் தூக்கப் போகும்போதே, “ஹான்… நான் பொம்பளைங்க மேல நார்மலா, கை வைக்கிறதில்லம்மே… தனியா இழுத்தாண்டு போய் தான் எல்லாம்!” என்றதில் நிதர்ஷனா எகிறினாள்.

 

“த்தோ பாருண்ணா… உன் வட்டிக்காச இன்னியும் ரெண்டே நாள்ல குடுத்துடுறேன். தேவையில்லாம பிரச்சினையாக்காம கெளம்பு…” என மிரட்டிட,

 

“பாருடா… நம்மளையே மிரட்டுதுடா இந்தப் பாப்பா…” என வெடிச் சிரிப்புச் சிரித்தான் காசி.

 

நிவேதனோ, “காசிண்ணா, உன் காச எப்படியும் நான் தந்திடுவேன். என் தங்கச்சிட்ட ராங்கா பேசாதண்ணா…” என்றதும், “இன்னாடா, அண்ணனும் தங்கச்சியும் இந்தக் காசியாண்டயே பாசமலரு பிலிம் ஓட்டுறீங்க. இந்தக் காசிக்கே ரூல்ஸ் போடுறீங்க. டேய்…” என அவனது அடியாள் ஒருவனை அழைத்தவன், “இந்தப் பயலை நம்ம குடோன்ல அடச்சுப் போடு. காசு தர்றவரை இந்தக் காசியோட ஜெயில்தான் அவனுக்கு.” என்றான் சீறலாக.

 

அதில் நிதர்ஷனா அதிர்ந்து விட, “ண்ணா… இதெல்லாம் சரில்ல.” எனும்போதே காசி தொடர்ந்தான்.

 

“இன்னியும் ரெண்டு நாள்ல நீ காசு கொண்டு வரலையின்னா, உன்னையும் தூக்கச் சொல்லிடுவேன் தங்கோ… ஆனா உனக்கு அந்தச் சிறை எல்லாம் இல்ல. என் மனசோட சிறைக் கதவு எப்பவும் தெறந்துருக்கும்.” என அசிங்கப் பார்வை ஒன்றை வீசிட, நிவேதனுக்கும் நிதர்ஷனாவிற்கும் வயிற்றில் புளியைக் கரைத்தது.

 

காசி, நிவேதனைக் கூட்டிச் சென்று விட, கதிரவன் விஷயம் அறிந்து பதறி அடித்து மாடிக்கு வந்தான்.

 

கூடவே பரமேஸ்வரியும் வந்தவர், “இதெல்லாம் சரிப்படாது. ஏதோ போனால் போகுதுன்னு இங்க இருக்க வச்சிருந்தா, கடன வாங்கிட்டு என் மானத்த வாங்குறீங்க. உன் அப்பனச் சொல்லணும். அந்த ஆளுக்கு அறிவே வர மாட்டுது…” என்று கதிரவனின் முதுகில் அடித்தார்.

 

“இருக்குற பிரச்சினைல இந்தம்மா வேற…” என எரிச்சலடைந்த நிதர்ஷனாவை ஏறிட்ட பரமேஸ்வரி, “போதும், நான் பார்த்த பாவமெல்லாம்… நீ படிச்சுக் கிழிச்சது வரை போதும். போய் வேலை கீல பார்த்துட்டு, வூட்டக் காலி பண்ணிட்டு என்னத்தியும் செய்ங்க ரெண்டு பேரும்.” என்று தன் பங்கிற்குப் பேசி விட்டுச் சென்றார்.

 

“ச்சை… இந்தக் காசிக் கழுசட, என்னைக்கு என்னாண்ட செமத்தியா வாங்கப் போவுதுன்னு தெரியல…” என்று தலையில் கை வைத்து அமர்ந்தாள்.

 

“கவலைப்படாத நிதா. எப்படியாச்சும் காசு பொரட்டலாம்.” என்ற கதிரிடம் “எப்படிப் பொரட்டுவ? ப்ச்! இதுக்குத் தான் தலையால அடிச்சேன், இந்த பிசினஸ் கருமாந்திரமெல்லாம் வேணாம்னு!” என்று புலம்பித் தள்ளினாள்.

 

இரு நாள்களும் கடந்தது. ஒற்றை ரூபாய் கூடப் புரட்ட இயலவில்லை.

 

காசிமேடு கடற்கரையில், தலையில் முக்காடைப் போட்டு அமர்ந்திருந்தாள் நிதர்ஷனா.

 

“ஏன் இப்புடி முக்காடப் போட்டுருக்க? ஏதாச்சும் வழியிருக்கும் நிதா…” என்றபடி கதிரவன் அவளருகில் அமர்ந்தான்.

 

“அடப் போடா… என்ன வழி இருக்கப் போகுது? இன்னும் கொஞ்ச நேரத்துல அந்தக் காசி நாதாரி என்னைக் கொத்தா தூக்கிடும்…”

 

“அப்படியெல்லாம் நடக்க விட மாட்டேன் நிதா… அப்பா வெளில பணத்துக்கு ஏற்பாடு செய்யறேன்னு சொன்னாரு, அம்மாவுக்குத் தெரியாம.” என்றபோது அவனது தந்தையே அழைத்தார்.

 

“தோ, அப்பா தான்… பணம் கிடைச்சுருச்சான்னு கேக்குறேன்.” என்றபடி அழைப்பை ஏற்றவனின் முகம் மாறியது.

 

சோகமாய் அலைபேசியை வைத்தவனின் முகம் பார்த்தே கண்டுபிடித்து விட்டவள், “ம்ம்க்கும், லட்சக்கணக்குல உன் அப்பாவால மட்டும் எப்படி ரெடி பண்ண முடியும்… ஐயோ! நிவே வேற என்ன செய்றானோ தெரியல. பேசாம நான் எங்கவாவது காணாம போயிடுறேன். நீ நிவேவைக் காசிக்குத் தெரியாம தப்பிக்க விட்டுடுறியா?” என்றாள் வேகமாக.

 

“அவனைத் தப்பிக்க வைக்கலாம், சரி… நீ எங்க போவ?” கதிரவன் முறைப்பாய் கேட்டான்.

 

“எங்கயோ, அந்தக் காசி கண்ணுல படாம கொஞ்ச நாள் ஜித்தன் ரமேஷ் மாதிரி மறைஞ்சு போற பவர் குடு முருகான்னு பால்காவடி தூக்கலாம்னு இருக்கேன்…” என்றவளை இன்னும் கொஞ்சம் பார்வையால் சுட்டான்.

 

அவளது கூற்று அந்த முருகனுக்கும் கேட்டது போல, அதிவேகத்தில் அம்பாசிடர் ஒன்று அவர்கள் முன் வந்து நின்றது.

 

அதில் இருந்து இறங்கிய நான்கு பவுன்சர்கள், கண்ணிமைக்கும் நொடியில் கதிரவனுக்கும் நிதர்ஷனாவிற்கும் மயக்க மருந்தைச் செலுத்தக் கதிரவன் நொடியில் மயங்கி விட்டான்.

 

“டேய்! டேய்! யாருடா நீங்க? காசி சொன்ன நேரம் முடிய இன்னியும் ரெண்டு மணி நேரம் இருக்கே…” என அரை மயக்கத்தில் உளற, “காசியா, அது யாரு?” என்ற ஒருவனின் கேள்வியில் “அப்போ நீங்க அவன் ஆள் இல்லையா… மிக்க மகிழ்ச்சி!” என்று மயங்கி விட்டாள்.

 

அவள் கண் விழிக்கும் நேரம், தேகம் குளிரில் நடுங்கியது.

 

கண்ணைக் கசக்கிக் கண் விழித்தவள், அதே அறையில் மற்றொரு மூலையில் கதிரவன் மயங்கி இருப்பதைக் கண்டு அதிர்ந்தாள்.

 

அதை விட, அந்த அறையைக் கண்டு இன்னுமாய் அதிர்ந்தாள்.

 

“ஆத்தாடி ஆத்தா! இதென்னடா, கடத்துனவன் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் ஓனரா இருப்பான் போல. இத்தாத்தண்டி இருக்கு ரூமே…” என வாயில் கை வைத்தாள்.

 

அவளது குரலில் கதிரவனுக்கு மெல்ல மயக்கம் கலைந்தது. கூடவே யாரோ கடத்தியது நினைவு வர, “டேய்! யாருடா நீங்க? என்னைத் தூக்கிப் பாருங்கடா” என்று கையை குங்பூ செய்வது போல வைக்க, அவனைக் கேவலமாகப் பார்த்தாள் நிதர்ஷனா.

 

“அதான் தூக்கிட்டானுங்களே! இதுல இது காசியாண்டருந்து நிவேவைக் காப்பாத்துமாம்…” எனத் தலையில் அடித்துக் கொண்டாள்.

 

அந்நேரம், அழுத்தக் காலடியோசை காதில் எதிரொலிக்க, கதிரவன் மிரண்டான்.

 

“யாரு கடத்துனான்னு தெரியல நிதா… ஒருவேளை, மாத்திக் கடத்தி இருப்பாங்களா?”

 

“அப்படியா தான் இருக்கும் கதிரூ… வந்ததுக்கு ஒரு டீ காபி தந்தா குடிச்சிட்டுக் கிளம்பலாம்.” எனும்போதே, முறுக்கேறிய புஜங்களுடன் உள்ளே நுழைந்தான் யாஷ் பிரஜிதன்.

 

“நிதர்ஷனா… ரைட்?” பெண்ணவளை மேலும் கீழும் ஆராய்ந்தபடி கேட்டவனின் விழிகளைக் கண் கொட்டாது பார்த்து வைத்தாள் நிதர்ஷனா.

 

“கேட்ட கேள்விக்குப் பதில்?” யாஷ் அழுத்தம் திருத்தமாகக் கேட்க, அவள் ஆமோதிப்பாகத் தலையாட்டியபடி குளிர் தாளாது போர்வையைப் போர்த்திக் கொண்டாள்.

 

தனது ஹேசல் நிறக்கண்களால், பெண்ணவளின் போர்வை நிறைந்த வதனத்தை மேலிருந்து கீழ் வரை ஸ்கேன் செய்தான். அதில் அழுத்தமும் அளவுக்கு அதிகமாக நிறைந்திருக்க, அவன் கண்ணையே வெகு நேரம் உற்றுப் பார்த்த நிதர்ஷனா, “கண்ணுக்கு லென்ஸ் வச்சுருக்கீங்களா சார்?” எனக் கேட்டு வைக்க அவளைப் புருவம் சுருக்கிப் பார்த்தான்.

 

கடத்தப்பட்டதற்கான பயமோ, பதற்றமோ அவள் முகத்தில் கிஞ்சித்திற்கும் தென்படவில்லை.

 

“சார்… இந்த ஏசி ரொம்பக் குளிருது. கொஞ்சம் குறைக்கச் சொல்லுங்களேன்.” என அவனுக்கே ஆர்டர் போட்டதில் அவளைக் கூர்மையாய் முறைத்தவன், அவள் மீதிருந்த பார்வையைத் திருப்பாமல், “எலிசா… செட் தி ஏசி டு 26 டிக்ரீஸ்” என்றதும்,

 

தன்னிடம் தான் ஏதோ கூறுகிறான் என எண்ணியவள், “நான் நினைச்சேன்… நீங்க மாத்திக் கடத்திட்டீங்கன்னு.” என்று இளித்து வைத்தாள்.

 

அதற்கும் கண்ணைச் சுருக்கிய ஒரு பார்வை தான் அவனிடம்.

 

“நீங்க எலிசான்ற பொண்ணுக்குப் பதிலா, நிதர்ஷனான்னு பேர் வச்ச என்னைக் கடத்திட்டீங்க, ரைட்டா சார்…” பெருமை பொங்கக் கூறியவளை பேண்ட் பாக்கெட்டினுள் கையை நுழைத்

துத் தீவிர பாவனையுடன் அளந்தவனின் இதழ்கள், அவளறியாது புன்னகைத்துக் கொண்டது. அதன் பின்னிருக்கும் வலியை அவளும் அறியும் நாள் என்றோ!

 

அரக்கன் தொடரும்…

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
2

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்