அசுரனின் நயனதிமிரே!
அம்மு இளையாள்
திமிர் 1
பல அடுக்குக் கொண்ட வணிக வளாகம், தோற்றுப் போய் நிற்கிறது வீட்டின் உயரத்தில். அதன் அழகில் மயங்கி, மதில் சுவரை ஒட்டி நின்ற கார் ஹாரன் அடித்தது. அத்தனை உயரக் கட்டிடத்திற்கு ஒரு காவலாளி போதுமா? சத்தம் கேட்டு, நான்கு காவலாளிகள் கதவுக்குள் கதவாகச் செதுக்கியிருந்த சின்னக் கண்ணாடியை விலக்கிக் கொண்டு பார்த்தனர்.
“மேடம் இருக்காங்களா?”
“இருக்காங்க.”
“நாங்க பார்க்கணும்.”
“அப்பாயின்ட்மென்ட் இருக்கா?”
“நாங்க ஹாஸ்பிடல் ஸ்டாஃப்.”
“யாராயிருந்தாலும், அப்பாயின்ட்மென்ட் இல்லாம உள்ள விடக்கூடாதுன்னு ஆர்டர்.”
“முக்கியமான விஷயம் பேசணும், கதவத் திறங்க.”
“சாரி சார். என்ன விஷயமா இருந்தாலும் மேடமோட பிஏ கிட்டக் கேட்டுட்டு, சொல்ற நேரத்துக்கு வாங்க.”
“ஹேய் இடியட்! எந்த வகையிலும் கான்டாக்ட் பண்ண முடியாமல் தான் இப்படி வந்து நிற்கிறோம். நாங்க மேடத்தோட ஹாஸ்பிடல்ல வேலை பார்க்கிற ஸ்டாஃப். ரொம்ப முக்கியமான விஷயம். இந்த விஷயத்தைச் சொல்ல விடாமல் தடுத்தீங்கன்னு தெரிஞ்சா உங்க வேலையே போயிடும்.” வந்தவர்கள் கத்திக் கொண்டிருக்க, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உயர்ரகக் கார் ஒன்று ஒய்யாரமாக வந்து நின்றது.
அதைக் கண்ட அனைவரும் வாய் பிளக்க, கண்ணாடியை இறக்கினான். மூர்க்கமான பார்வையோடு கதவைத் திறக்கக் கண் காட்ட, வந்தவர்களுக்குச் சொன்ன அதே பதிலையே அவனுக்கும் சொன்னார்கள் காவலாளிகள். நெருப்பில்லாமல் பற்றி எரியும் கண்ணைக் கருப்புக் கண்ணாடி அணிந்து மறைத்தவன், வண்டியைப் பின்னால் எடுத்தான். திரும்பிச் செல்கிறான் என அனைவரும் நினைத்திருக்க, மெதுவாகப் பின்னால் சென்றவன் அசுர வேகத்தில் முன் பாய்ந்து அந்த வீட்டின் கேட்டைச் சுக்கு நூறாக்கினான். வரும் வேகத்தை வைத்துச் சுதாரித்த அனைவரின் உயிரும் தப்பியது.
பெருத்த சத்தம் கேட்டுக் கொலையே நடந்தாலும் எட்டிப் பார்க்காத, வீடுகளில் இருக்கும் நபர்கள் எட்டிப் பார்த்தனர். பட்டாசு தீ விபத்தைத் தன் கார் மூலம் நேரடியாகக் காட்டியவன், காரை விட்டு இறங்கித் தனக்கு மறுப்புத் தெரிவித்த காவலாளிகளைப் பார்த்தான். எமனைப் பார்த்த அதிர்வோடு ஆளுக்கு ஒரு பக்கம் விழுந்து கிடக்க, ஏளனப் புன்னகை அவனிடம்.
“என்ன சத்தம்?” அவசரமாக ஓடி வந்தார் அஞ்சலை.
அவரைத் தாண்டிச் சென்றான். “யாருடா நீ?” என அவர் விசாரிக்க, கண்டு கொள்ளாமல் வீட்டிற்குள் இருந்த மின்தூக்கியில் நுழைந்தவன் பதினாறாவது எண்ணை அழுத்தினான்.
அஞ்சலைக்கு ஒன்றும் புரியவில்லை. வெளியில் வந்து காவலாளியிடம் விசாரித்தவர் தன் கணவரை அழைத்தார். மின்தூக்கியில் ஏறிய முரடன், பதினாறாவது மாடியில் சுகமாகத் துயில் கொண்டிருக்கும் அவள் முன்பு நின்றான்.
“என் தூக்கத்தைக் கெடுத்துட்டு, நிம்மதியா தூங்குறியா? இனி நிம்மதி என்ற வார்த்தையே உன் வாழ்க்கையில இருக்காதுடி.”
தீப்பிழம்பாக ஒவ்வொரு வார்த்தையும் வெளிவந்தது. தன் தூக்கம் இத்தோடு கலையப் போவதை அறியாத மதுணிகா, ஆழ்ந்த உறக்கத்தில் அமைதியாகப் படுத்திருக்கப் போர்வையை இழுத்தான். அவன் இழுத்த வேகத்தில் அரண்டு எழுந்தவள், சுதாரிக்கும் முன் ஓங்கிக் கன்னத்தில் அப்பினான். அரை மயக்கத்தில் எழுந்தவள் முழு மயக்கத்திற்குச் சென்றாள்.
கன்னத்தில் கை வைத்துக் கொண்டு, தலை சுற்ற அமர்ந்திருந்தவள் முடியைக் கொத்தாக அள்ளிக் கீழே தள்ளியவன், மெத்தையின் விளிம்பில் அமர்ந்து கால் மீது கால் போட்டான். தரையோடு தலை முட்டியதில் இன்னும் மயக்கம் கூடியது. என்ன நடக்கிறது என்று யூகிக்க முடியாமல் சில நிமிடங்கள் கழித்துக் கண் திறந்தவளுக்குக் கலியுக ராவணன் காட்சி கொடுத்தான்.
அவனைக் கண்டதும், இருந்த மயக்கம் அனைத்தும் தெளிந்து அரண்டு மிரண்டு எழ, “உன் பேர் என்னடி?” ஆங்காரமாக ஒலித்தது அவன் குரல்.
பயத்தில் எச்சில் விழுங்கப் பார்த்திருக்க, கன்னத்தில் வைத்திருந்த கை மீது ஓங்கி உரைக்க அடித்தான். வலியில் சுருண்டு விழுந்தவள் முடியை இழுத்துத் தன்னைப் பார்க்க வைத்தான்.
“உன் பேர் என்ன?”
“ம…மதுணிகா”
“ஹான்…”
“நா..நான்…”
பேச முயற்சிக்கும் வாயில் அடித்து ரத்தம் பீறிட வைத்தவன், கத்தும் அவள் கழுத்தில் கை வைத்து, “நான் கேட்டதுக்கு மட்டும் தான் பதில் சொல்லனும்.” என்றான்.
அடி மீது அடி வாங்கித் தெம்பில்லாமல் அமர்ந்திருக்கும் மதுணிகாவைத் தரதரவென இழுத்துச் சென்று மின் தூக்கியில் தள்ளினான். அங்கிருந்த கண்ணாடியில் மோதி, “அம்மா” என்று அலறிட, மனசாட்சி இல்லாமல் அந்தக் கண்ணாடி மீது அழுத்தி,
“என் அம்மாவத் துடிக்க வச்சிட்டு, அம்மான்னா கத்துற. அவங்க முன்னாடி உன்னை நாய அடிக்கிற மாதிரி அடிச்சுத் துண்டு துண்டா வெட்டிப் போட்டா தான்டி என் ஆத்திரம் அடங்கும்.” காதோரம் கர்ஜித்தான்.
“வலிக்குது.”
“இதுக்கேவா? இனி உன் வாழ்க்கையில் வலி மட்டும் தான்டி.”
மின்தூக்கி நின்றதும், அவள் முடியைப் பிடித்து வெளியில் தள்ளியவன் சாவகாசமாக வெளிவர, பதறிக் கொண்டிருந்த அஞ்சலை மகள் வந்து விழுந்த தோரணையில் நெஞ்சைப் பிடித்து விட்டார். ஓடிச்சென்று மதுணிகாவைத் தாங்க, “தள்ளு!” எனத் தள்ளி விட்டு அவர் பெண்ணை இழுத்துச் சென்றான்.
“டேய், யாருடா நீ? என் பொண்ண எதுக்குடா அடிச்ச. என் பொண்ண எங்கடா கூட்டிட்டுப் போற. என்னங்க, சீக்கிரம் வாங்க.”
“வரச் சொல்லு, அந்தப் பரதேசிய.”
“விடுடா அவளை…”
“உன் பொண்ணே விரும்பி என் வலையில விழுந்துட்டா. இனி அவளே நினைச்சாலும் போக முடியாது. நான் எங்க இருந்து விட.”
“மது, யாருடி இவன்? இவனுக்கும், உனக்கும் என்னடி பிரச்சினை. உங்க அப்பா வேற இவ்ளோ கத்தியும் கீழே இறங்காம இருக்காரு.”
“பொண்ண வேவு பார்க்க விட்டுட்டு, அந்தப் பரதேசி தூங்கிட்டு இருப்பான். அடிச்சு எழுப்பி ஹாஸ்பிடலுக்குக் கூட்டிட்டு வா.”
“அய்யய்யோ! என் பொண்ணு நெத்தில ரத்தம் வருது. அவளை விடுடா பாவி.”
“ஏய்!” என அவரைத் தள்ளி விட்டவன், “பொண்ணுக்கு மாமா வேலை பார்த்துட்டு வெட்கம் இல்லாம கத்துற. உன் புருஷன், அந்த மாமா பையனைக் கூட்டிட்டு வந்து சேருடி. உன் பொண்ணு துடிக்கப் போறதை ஜோடியா சேர்ந்து பாருங்க.” என அவளைக் காரில் தள்ளி விட்டு ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்தான்.
மதுணிகா இரத்தம் வழிந்த முகத்தோடு அவனையே பார்த்துக் கொண்டு வர, “சாவடிச்சிடுவேன், அப்படிப் பார்த்தேன்னா…” என இஷ்டத்திற்கு மாறி மாறிக் கன்னத்தில் அடித்தான்.
வலி பொறுக்க முடியாது மது கண்கள் கலங்க, “ஆட்டமாடி ஆடுற ஆட்டம், என் ஆட்டத்தைப் பார்க்குறியா.” எனப் பல்லைக் கடித்தவன் எங்கும் நிறுத்தாமல் வண்டியை இயக்கி மருத்துவமனை முன்பு நிறுத்தினான்.
கதவைத் திறந்து அவளைக் கீழே தள்ள, தன் மருத்துவமனை இருக்கும் கோலத்தைக் கண்டு உறைந்தாள். அவள் அதிர்வைக் கண்டவன் பரம திருப்தியோடு அவள் முன்பு நின்றான். தலை உயர்த்திய மது அடிபட்ட பார்வை பார்க்க, “நல்லா இருக்குல…” எனப் புன்னகையோடு தன் சட்டையின் கை பட்டனைக் கழற்றி விட்டு முட்டிவரை ஏற்றிச் சுருட்டினான்.
“என்ன பண்ணி வச்சிருக்க? எத்தனை பேஷன்ட் உள்ள இருந்தாங்க, தெரியுமா.”
“ச்சீ வாய மூடுடி. பெரிய அன்னை தெரசா! மத்தவங்களைப் பத்திக் கவலைப்படுறா. உள்ள இருந்தவங்கள்ல எத்தனைப் பேர நீங்களே நோயாளியா ஆக்கிப் படுக்க வச்சீங்களோ.”
“நீ பண்ணது ரொம்பப் பெரிய தப்பு.” என்றதும் நின்று கொண்டிருந்தவன் கீழே அமர்ந்திருந்தவள் கன்னத்தை விளாச, ஒரு அடி என்றாலும் உயிர் வலியைக் கொடுத்தது.
“என்னைப் பைத்தியக்காரனா சுத்த விட்ட இந்த ஹாஸ்பிடல், ஜென்மத்துக்கும் இப்படித்தான்டி இருக்கும். என் வாழ்க்கை அவ்ளோ சாதாரணமா போயிடுச்சா உனக்கு. எனக்கே உயிர் பயத்தைக் காட்டின உன்னை அணு அணுவா துடிக்க விட்டு, இந்த ஆஸ்பிட்டல் முன்னாடி புதைக்கிறது மட்டும்தான்டி என் லட்சியம்.
அம்பது வருஷச் சாம்ராஜ்யத்தை ஒரே ராத்திரில முடிச்சிட்டேன் பார்த்தியா. இந்த ஆஸ்பிட்டலுக்காகத்தான என்னை முட்டாள் ஆக்குன. இதுல இருந்து இனி ஒரு துரும்பு கூட உனக்குக் கிடைக்காது.” என்றவன் சொடக்கிட, அந்த மருத்துவமனையில் வேலை பார்த்த அனைவரும் மதுணிகா பின்பு நின்றார்கள்.
முதலாளியாக நடைபோட்டவள், வேலையாள்கள் முன்பு கூனிக் குறுகி அமர்ந்திருக்க, “என்னை செக் பண்ண டாக்டர்ல இருந்து, ரிப்போர்ட் ரெடி பண்ண நாய் வரைக்கும் வான்டடா முன்னாடி வந்து நின்னுட்டா, மத்தவங்க உயிர் தப்பிக்கும். இல்லன்னா மொத்தமா இவளோட சேர்த்து எரிச்சிடுவேன்.” என்றவன் கர்ஜனையில் அங்கிருந்தவர்களின் சர்வ நாடியும் அடங்கியது.
கண்ணாடியைக் கழற்றி விட்டு ஒவ்வொருவரையும் எடை போட, யாரும் வாயைத் திறப்பதாக இல்லை. நான்கு முறைக்கு மேலாக நடையாக நடந்தவன்,
“ரைட்! உங்களுக்குக் கொடுத்த டைம் முடிஞ்சு போச்சு. ஒட்டு மொத்தமா எனக்குச் செஞ்சதுக்கு அனுபவிங்க.” எனத் தன் ஆள்களுக்குக் கண்ணைக் காட்டினான்.
“யாரையும் எதுவும் பண்ணாத ப்ளீஸ். வேணும்னு அப்படிப் பண்ணல. பை மிஸ்டேக்கா நடந்த தப்பு. அவங்க பண்ண தப்புக்குச் சம்பளம் கூட வாங்கல. அதுவே அவங்களுக்கு ஒரு பெரிய தண்டனை தான்.” என்றவளை நேருக்கு நேர் காண ஒரு காலை மடக்கித் தரையில் அமர்ந்தவன்,
“ஏண்டி… என் மதிப்பு வெறும் சம்பளம் தானா? அவ்ளோ கேவலமான பிறவியா நான்… அதனாலதான், ரொம்ப ஈஸியா ஏமாத்துனியா.” அர்த்தமில்லாமல் வாதிட்டான்.
“நான் அப்படிச் சொல்ல வரல அ…” என்றவளின் கழுத்தைத் தன் உள்ளங்கையில் சுருக்கியவன்,
“சொல்லக்கூடாது. என் பேரைச் சொல்லக்கூடாது. இரக்கம் பார்ப்பேன்னு தப்புக் கணக்குப் போடாத. அப்படியே சிதைச்சிடுவேன்.” என விரல்களைச் சுருக்க மூச்சு முட்டியது மதுவிற்கு.
எழுந்து நின்று தன் வெள்ளை நிற ஆடையைச் சரி செய்தவன், “அவங்களுக்கும் சேர்த்து நீ தண்டனை வாங்கிக்கறியா?” எனக் குரோதமாகக் கேட்க, எம்மாதிரியான தண்டனையாக இருக்கும் என்று அவன் விழிகள் கூறியது. அடி வாங்கி அமர்ந்திருந்தவளுக்கு வேறு வழி இல்லை. மௌனமாகத் தலையசைக்க, வானம் பிளந்தது அவன் சிரிப்புச் சத்தத்தில்.
சுற்றி இருந்த அனைவரும், பயம் தெளியாது கலியுக ராவணனைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். தொடர்ந்து சிரித்துக் கொண்டிருந்தவன், பட்டென்று அதை நிறுத்தி அடங்காத ஆத்திரத்தோடு அவள் முடியைச் சுருட்டி, “வெல், கம் மை டியர் மதுணி…கா.” காருக்குள் தள்ளினான்.
கார் நின்றது ஆள் அரவம் இல்லாத இடத்தில். என்ன செய்யப் போகிறானோ என்று அச்சத்தில் மது இருக்க, இருக்கையைத் தளர்த்தி அவளைத் தள்ளினான். கை இரண்டையும் தலைக்கு மேல் உயர்த்திக் கட்டியவன் இதழோரம் தவழ்ந்த புன்னகையோடு அவள் மீது விழுந்தான்.
இறுக்கமாகக் கண் மூடிப் படுத்திருந்தாள் மதுணிகா. அவள் மீது புரண்டவன், இடையில் கை நுழைத்து ஆடையை விலக்க, “நோ!” என்ற சத்தம் அவளிடம்.
“என்னமோ புதுசு மாதிரி சீன் போடுற. பணத்துக்காகப் படுக்கிறவ தான நீ.”
“வாய மூடுடா.”
“ஹாஹா… பெரிய…” என அவள் கன்னத்தைப் பிடித்தவன் காதுக்குள் வார்த்தையை உமிழ்ந்தான்.
உடல் கூசியது மதுவிற்கு. அவன் முகத்தைப் பார்க்கப் பிடிக்காமல் கண்களை மூடிக்கொள்ள, “எங்கிட்டயும் நிறையக் காசு இருக்கு.” காதோரம் கிசுகிசுத்தான்.
“அளவுக்கு மீறிப் பண்ணிட்டு இருக்க. முதல்ல என் கையை அவுத்து விடு. இந்த மாதிரி நடந்துக்க அசிங்கமா இல்லையா உனக்கு.”
“எனக்கு எதுக்குடி அசிங்கம்? நினைக்கிறவன் கூட எல்லாம் போற உனக்கே அது இல்லாத அப்போ…”
“நான் யார் கூடப் போனதைப் பார்த்த? உனக்கு அவ்ளோ தான் மரியாதை! என்னால பாதிக்கப்பட்டிருக்கேன்னு அமைதியா இருக்கேன்.”
“கண்ணுக்குத் தெரிஞ்சு ஒருத்தன்… தெரியாம எத்தனையோ? யாரு கண்டா.”
“திஸ் இஸ் யுவர் லிமிட். மரியாதையா கைய அவுத்து விடு.”
“இல்லன்னா என்னடி பண்ணுவ?”
“உன்னால என் ஹாஸ்பிடல்ல எரிக்கவும், என்னை இந்த மாதிரிக் கட்டிப்போட்டு உன் ஆம்பளத் திமிரைக் காட்டவும் மட்டும்தான் முடியும். வேற ஒன்னும் புடுங்க முடியாது.”
கன்னத்தைத் தன் உள்ளங்கையில் அடக்கியவன், “வேற என்ன பண்ணனும்னு சொல்லுடி. உன் திமிரை அடக்க அதையும் பண்ணுவேன்.” என உதட்டருகே நெருங்க, “முதல்ல தள்ளு, ஒரு பொண்ணுகிட்ட எப்படி பிஹேவ் பண்ணனும்னு உங்க அம்மா சொல்லித் தரலையா?” என்றதும் கூந்தலுக்குள் ஐவிரல்களை நுழைத்து இழுக்க, வலியில் பல்லைக் கடித்தாள்.
“என் வேலையை முடிச்சிட்டுப் போற வரைக்கும் மூடிகிட்டுப் படுக்கணும்.” எனக் கட்டளையிட்டவன், அவள் கழுத்தில் விரல் வைத்து மூச்சு முட்ட அழுத்தினான். மூச்சு விடச் சிரமப்பட்டவள் நெளிய, விலகி இருந்தவன் அவள் மீது தவழ்ந்து முத்தமிட நெருங்கினான்.
போராடிக் கொண்டிருந்தாள் மதுணிகா. அவள் போராட்டம் எல்லாம் அவன் திடத்திற்கு முன் வீணானது. துள்ளும் கால்களைத் தன் ஒரு காலுக்குள் அடக்கி, முழு உடலையும் அவள் மீது எடை போட்டவன், அருவருப்பாகப் பார்க்கும் அந்தக் கண்ணை ஆனந்தமாக ரசித்துக் கொண்டு உதட்டைச் சுவைக்க நெருங்கினான்.
அவள் கண்ணில் எதிர்ப்புப் பலமானது. ஆணவமான பார்வையில் அதைக் கையாண்டவன், முத்தமிடுவதற்கு முன் இடைக்குள் கை நுழைத்து ஆடையை விலக்க, “ஏய்!” கத்தினாள்.
“இன்னும் ஆரம்பிக்கவே இல்ல, அதுக்குள்ள பெர்ஃபார்மன்ஸ ஸ்டார்ட் பண்ற. அவ்ளோ எக்ஸ்பீரியன்ஸ்.”
மொத்த உடலும் பற்றி எரிந்தது. அவன் பார்வையும், தனக்குச் சூட்டும் வார்த்தைகளையும் தாங்கிக் கொள்ள முடியாது புழுவாய் துடித்தாள். அதையெல்லாம் கண்டு கொள்ளாது கைகளை முன்னோக்கி நகர்த்தினான். உச்சக்கட்ட அருவருப்பில் படுத்திருந்தவள் விழிகளில் லேசான உவர்நீர் எட்டிப் பார்த்தது. அந்தக் கண்ணீர் அவள் கண்ணைத் தாண்டும் வரை, தன் வேலையை மூர்க்கத்தனமாகச் செய்து கொண்டிருந்தவன் முத்தமிட நெருங்கினான்.
ஒன்றும் செய்ய முடியாமல், கண்களை எவ்வளவு சுருக்க முடியுமோ அவ்வளவு சுருக்கி அவன் கொடுக்கும் அவஸ்தைகளைப் பொறுத்துக் கொள்ள, உதடும் உதடும் உரசியது. போராடத் தெம்பு இல்லாதவள் அமைதியாகப் படுத்திருக்க, “உன்ன மாதிரி ஒரு எச்சைக்கு நான் கேக்குதோ? வேணா வேணான்னுட்டு அமைதியாப் படுத்திருக்க. என் கால் செருப்புக் கூட உன்னைத் தீண்டாது.” என வெடுக்கென்று எழுந்தவன் கட்டுக்கடங்காமல் சிந்திக் கொண்டிருக்கும் கண்ணீரைக் கண்டு மனதிருப்தி அடைந்தான்.
தன் போராட்டங்களைத் தனக்குள் அடக்கியவள் கண் திறக்க, 500 ரூபாய் தாள்களைக் கட்டாக அவள் மீது வீசி, “என் கூடப் படுத்தா இல்ல, படுத்த மாதிரி நடிச்சாலே பணம் கிடைக்கும்.” என்று காரை விட்டு இறங்கினான்.
அவன் போகும் வரை அழுத்தி வைத்திருந்த கோபங்களைக் கத்தி ஆர்ப்பாட்டம் செய்து வெளிக்காட்டினாள். அத்தனையும் காரில் சாய்ந்து ரசித்துக் கொண்டிருந்தான். உள்ளே இருந்தவளின் மனக்கொதிப்புக் குறைவதாக இல்லை. வெளியில் இருந்தவனுக்கோ, அந்தக் கண்ணீரும் கதறலும் அவ்வளவு திருப்தியாக இல்லை. இன்னும் ஏதாவது செய்ய நினைத்தான்.
தன் கைபேசியில் இருந்து உதவியாளனுக்கு அழைத்தவன், “அந்த ஹாஸ்பிடல் ஷேர் ஹோல்டர் அத்தனைப் பேரையும் டார்கெட் பண்ணு. ஒத்துக்கிட்டா சுமுகமா ஹேண்டில் பண்ணு. இல்லனா நம்ம முறைப்படி கவனிச்சிடு.” என உத்தரவிட,
“ஓகே சார்.” என்றான் கமல்.
“அப்பாகிட்டப் பேசி, இவளோட அப்பங்காரனுக்குச் சொந்தமான எல்லா இடத்தையும் சுத்துப் போடச் சொல்லு. அந்தக் குடும்பமும் என் கண் பார்வையிலயே இருக்கணும்.”
“சார்ர்ர்…”
“என்னடா?”
“மேடமோட ஹிஸ்டரி…”
“என்னன்னு சொல்லு.”
மதுணிகா பற்றிய ரகசியத்தைக் கூற, “ஓஹோ! கரும்பு தின்னக் கூலியா? இப்படிப்பட்ட ஒருத்தி எனக்கு விளையாட்டுக் காட்டி இருக்கா பாரு… நேரம் பார்த்து என்ன பண்ணனுமோ அதை நான் பண்ணிக்கிறேன். இந்த விஷயத்தைப் பத்தி வேற யார்கிட்டயும் சொல்லாத.” என்றான்.
கமலிடம் பேசி முடித்தவன் காருக்குள் சென்று, “காசை எண்ணிட்டியா? நீ எதிர்பார்த்ததை விடக் கம்மியா இருந்தா சொல்லு, விசிறி மூஞ்சில அடிக்கிறேன்.” எனக் கண்களைச் சுருக்கிப் புன்னகைத்தான்.
“கைய அவுத்து விடுடா பொறுக்கி நாயே!”
“ம்ம்… நாய் என்ன பண்ணும் தெரியுமாடி.”
“உன்ன மாதிரி மிருகத்தனமா நடந்துக்காது. நீ எல்லாம் நல்ல வளர்ப்பே கிடையாது.”
கோபத்தை எல்லாம் தணித்து விட்டு, அவளை வெறுப்பேற்ற உள்ளே வந்தவன் சுள்ளென்ற கோபத்தில், தன் முன்னால் நீட்டி இருந்த அவள் கால்களைப் பற்றி இரக்கம் பார்க்காமல் கார் கதவில் இடித்தான். அவன் வேகத்தில் பட்டுப் போன்ற கால் நகம் இடிபட்டு வீங்கிப் போனது. வலிக்கு மேல் வலி, உள்ளத்திலும் உடலிலும். வாய் விட்டுக் கதறாமல் பல்லைக் கடித்து அந்த வலியை மது பொறுக்க,
“வளர்ப்பப் பத்தி நீ பேசுறியா. அதுக்கு உனக்குத் தகுதி இருக்கா? ராத்திரியானா கை தட்டிக் கூப்பிடுறவங்களுக்கும், உனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. அவங்களாவது தன்னோட தேவைக்கு வராங்க. நீ தேவைப்பட்டே வர…”
“வரம்பு மீறிப் பேசாத. எதுக்கு என்னை இங்க கூட்டிட்டு வந்திருக்க? உனக்கும் எனக்கும் இருக்க பிரச்சினைக்கும், நீ என்னை இப்படி வச்சிருக்கறதுக்கும் என்ன சம்பந்தம்?” என்றவளைக் கண்ணாடி வழியாகப் பார்த்து நகைத்தவன்,
“எல்லாம் நீ கத்துக் கொடுத்த பாடம் தான்.” என்றான்.
அவ்ளோ புரியாது விழிக்க, “அம்மு!” என்ற ஒரே வார்த்தையில் அனைத்தையும் புரிய வைத்தான்.
“எல்லாமே ஒரு ஆக்சிடென்ட். அதுல நீயும் தான் விருப்பப்பட்டு இருந்த. என்னமோ, உன்ன போர்ஸ் பண்ணிப் பண்ண வச்ச மாதிரிப் பேசுற. நான் அசிங்கமானவள்னா, அப்போ நீ யாருடா? நான்தான் ஒழுக்கம் கெட்டவள், நீ ஒழுக்கமானவன் தான… எதுக்கு அவ கூட அப்படி இருந்த.”
ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்தவன், ஒரே தாவாக அவள் மீது விழுந்து கன்னத்தைப் பற்றி, “அவ என்னை லவ் பண்றன்னு சொல்லி ஏமாத்துனாடி. அது நடிப்புன்னு தெரியாம உண்மையா வாழ்ந்துட்டேன். அதுதான் இங்க…” எனத் தன் நெஞ்சைக் குத்திக் காட்டி, “வலிக்குது.” என்றான்.
அவன் நெருக்கம் பிடிக்காது விலக மது போராட, “நீ என்னை ஏமாத்தினதை விட, அவள் என்னை ஏமாத்துனதைத் தான்டி ஏத்துக்கவே முடியல. உடம்பெல்லாம் எரியுது. என்னை எவ்ளோ முட்டாளா நினைச்சிருப்பிங்கல்ல. இந்த முட்டாள் யாருன்னு உனக்கும், அவளுக்கும் காட்டத் தாண்டி வந்திருக்கேன்.” என அவள் ஆடைகளைக் களைந்தான்.
அவன் செயலைச் சற்றும் எதிர்பார்க்காதவள் அரண்டு துள்ளிக் குதிக்க, அவள் துள்ளலைப் பொருட்படுத்தாது மேல் ஆடையைக் கழற்றித் தன்னோடு சேர்த்தணைத்து, “உன்ன மாதிரிப் பொண்ணோட சேவை, இந்த நாட்டுக்கு ரொம்பத் தேவை. உன் கூட இருக்கப் பெருசா எந்தக் காரணமும் வேணாம், பணம் போதும். நானும் எத்தனையோ பொண்ணுங்களைப் பார்த்திருக்கேன். கேவலம், ஒரு ரிப்போர்ட்டுக்கு இவ்ளோ கீழ்த்தரமா இறங்குன உன்ன மாதிரிப் பார்த்ததில்லடி.” என இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை எடுக்க ஆரம்பித்தான்.
ஒத்துழைப்புக் கொடுக்க மறுத்தவளை, ஒரு கையில் அள்ளிச் சுருட்டிக் கண் கூசும் புகைப்படங்களை எடுத்தவன், “கவலைப்படாத. பணம் இருக்கிறவனா பார்த்துத்தான் இந்த போட்டோ எல்லாத்தையும் அனுப்பி வைப்பேன். அது இருந்தால்தான, நீ ரெடியா இருப்ப.” என்றிடக் கை இரண்டும் கட்டப்பட்ட நிலையில், ஒன்றும் செய்ய முடியாமல் துடித்தாள்.
கண்ணில் வடியும் கண்ணீரைத் தன் நாவால் துடைத்தவன், தீண்டத் தகாதவன் தொட்டது போல் முகம் சுழிக்கும் அவள் கன்னத்தோடு கன்னம் வைத்து, “சும்மா சொல்லக்கூடாது. புடிக்காத மாதிரி நடிச்சாலும், நல்லா போஸ் கொடுக்கிற…” என்றிட, “இதுக்கு மேல எதுவும் பேசாத, என்னால கேட்க முடியாது.” அழ ஆரம்பித்தாள் மதுணிகா.
“ஹா ஹா… இனித்தான்டி எல்லாத்தையும் கேக்கப் போற.”
“எதுக்காகடா இப்படிப் பேசுற? என் மேல, கொஞ்சம் கூட இரக்கம் வரலையா உனக்கு. நீ பேசறதையும், நடந்துக்கறதையும் கொஞ்சம் கூட ஏத்துக்க முடியல.”
விரக்தியான இதழ் சுழிப்போடு, “நீ பண்ணதும் அப்படித்தான்டி. கண்ண மூடுனாலே அம்முதான் ஞாபகத்துக்கு வரா… அந்த வலியைக் கொடுத்தது நீதான. அதுக்கான தண்டனையை அனுபவிக்க வேண்டாமா? என்னை மாதிரி நீயும், நம்பிக்கைத் துரோகத்தால ஏமாந்து துடிக்கிற வரைக்கும் இப்படித்தான்டி நடந்துப்பேன்.” என்று விட்டு நகர்ந்து அமர்ந்தான்.
உடல் குலுங்க அழ ஆரம்பித்தாள் மதுணிகா. கண் மூடி இருக்கையில் தலை சாய்ந்திருந்தவன் செவிக்குள், அந்த அழுகை தெள்ளத் தெளிவாக விழுந்தது. எந்தப் பாவனையும் வெளிக்காட்டாது ஜடமாக அமர்ந்திருந்தவன் உள்ளத்தில் அவள் ஒருத்தி. அவள் கொடுத்த அன்பையும், ஏமாற்றத்தையும் தாங்க முடியாது மிருகமாக மாறி நிற்கிறான். அதற்குக் காரணமானவள் பக்கத்தில் துடித்துக் கொண்டிருக்கிறாள்.
இரு வேறு திசையில் பயணித்துக் கொண்டிருந்த இவ்விருவரையும், சேர்த்தது ஜீஎன் ஸ்பெஷலிஸ்ட் மருத்துவமனை. கண் மூடி அவனுடனான நிகழ்வுகளை அசைபோட்டாள். கண்காணிப்புக் கேமராவில் தெளிவில்லாத முகத்தைக் கண்டு யோசித்துக் கொண்டிருந்தவள், பக்கத்தில் அமர்ந்து இப்படிச் சித்திரவதை செய்வான் என்பதைக் கனவிலும் எதிர்பார்க்காதவள், அன்றைய நாளை நினைத்தாள்.
நான்கு பேர் செய்த தவறுக்குத் தண்டனையை தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறாள். தன் மருத்துவமனையைக் காப்பாற்றுவது மட்டுமே அவளது முதல் குறிக்கோளாக இருந்தது. அந்தக் குறிக்கோளில் முதல் பலியாடு தான்தான் என்பதை அறியாது, அம்மு என்றவளை வரவழைத்துத் திட்டத்தைக் கூறினாள்.