Loading

அத்தியாயம் 1

நேரம் ஆக ஆக பதறிய மனதை , முடிந்தளவிற்கு திடமாக வைத்துக் கொண்டு ,
கடிகார முள்ளின் இயக்கங்கள் இவனது இதயத்தின் துடிப்பின் அளவை அதிகரித்துக் கொண்டே இருந்தது.

” வீட்டுக்கு சீக்கிரமா வா – ன்னு சொன்னா கேக்குறதே கிடையாது. டெய்லி லேட்டாக வர்றதும் வேலையா வச்சுருக்கா ? இப்போ மொபைலும் எடுக்க மாட்டேங்கிறா ? “

இத்தனை புலம்பல்கள் இவனிடம் இருந்து , வந்த வண்ணமே இருக்க , அந்த புலம்பல்களுக்கு மத்தியிலும் அவளுக்கு தொடர்ந்து அழைப்பு விடுப்பதை மட்டும் அவனது கரங்கள் நிறுத்தவே இல்லை.

” கால் அட்டெண்ட் செய்யக் கூட தோனலயா ? இப்படி இருக்காதடி ! “

தொடர்ந்து முயன்று  கொண்டிருந்தவன் , அப்படியே தளர்ந்து சோஃபாவில் அமர்ந்து விட , அவனவளோ இன்னும் கால் அட்டெண்ட் செய்யவில்லை.

” ப்ச்… இவ ஏன் இவ்ளோ பொறுப்பே இல்லாமல் இருக்கா ? “

அவளைக் கடிந்து கொள்ளவும் தவறவில்லை அவன்.

மணமாகி சில நாட்கள் தான் ஆனாலும் ,  இவர்களுக்குள் தன்னால் வராத புரிதலை , வம்படியாக திணிக்கவா முடியும் ? ஆனாலும் மனைவியின் மேல் அக்கறை கொண்டவனாதலால் , அவளுக்கு எப்போதும் தன்னாலான பாதுகாப்பு உணர்வை வரவைத்துக் கொண்டு தான் இருப்பான்.

இவர்களது அரேன்ஜ்ட் மேரேஜ் என்பதால் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதில் , பிரயத்தனம் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

” ஒன்பது மணியும் ஆச்சு ! இன்னும் காணோம்.மனசெல்லாம் பதறிட்டு இருக்கு ! அட்லீஸ்ட் கால் அட்டெண்ட் பண்ணும்மா “

அவனது குரலில் தவிப்பு உணர்வே பிரதானமாக இருக்க , அந்த தவிப்பு அவனைத் தீயாக தகிக்கும் அளவிற்கு , அளவுக்கதிகமாகிக் கொண்டே போக , சட்டென்று நெற்றியில் தட்டிக் கொண்டான்.

” முன்னாடியே ப்ரிகாஷன்ஸ் யோசிச்சு செஞ்சிருக்கலாம் ! ” 

அவனது மனம் புத்தி சொல்ல , இதற்குப் பிறகாவது இந்த யோசனையை செயல்முறைப்படுத்தலாம் என்று நினைத்தான்.

அவர்களது திருமணத்திற்கு முன்னரும் , திருமணத்திற்குப் பிறகும் அவளைப் பற்றி சுற்றத்தாரும் , அவளது நண்பர்களும் சொன்னது அவளுக்கு இதுவரை காதலுணர்வு எவர் மீதும் வரவில்லை , காதலிக்கப்படவில்லை , காதலிக்கவுமில்லை. இந்த கல்யாணத்திலும் முற்றிலும் விருப்பம் என்றும் கூறியுள்ளாள்.

இவ்விஷயங்கள் இவனுக்கும் பொருந்தும். அற்புதனும் பள்ளிப் பருவத்தின் இறுதியிலும் , கல்லூரியிலும் எந்த பெண் மீதும் ஈர்ப்பென்பது தோன்றியதில்லை.

தன் வாழ்வாதாரம் ஸ்திரமான பிறகு , வீட்டில் பெரியவர்கள் பார்த்து வைத்து , திருமணத்தில் சம்மதம் சொல்லி , இருவரும் மணமகன் , மணமகளாக மேடையில் அமர்ந்து , ஐயர் சொல்லிக் கொடுத்த மந்திரங்களை காதில் வாங்கி அப்படியே கிளிப்பிள்ளை போல் ஒப்புவித்தப் பிறகு , அவளது கழுத்தில் மூன்று முடிச்சிட்டு இருந்தான் அற்புதன்.

இருவரின் மனதிலும் சம்மதம் இருந்தால் தான் தாம்பத்யமும் சாத்தியமும் கூட. எனவே ,
இவளது உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற நோக்கமும் , மனதைப் புரிந்து கொண்டு , இவளது விருப்பு , வெறுப்புகளைத் தெரிந்து கொண்டு அதற்கடுத்தபடியாக மற்றவை நிகழட்டும் என்ற புரிதலில் தெளிவாக இருந்தான் அவன்.

காதல் கல்யாணம் மட்டும் இல்லை , நிச்சயிக்கப்பட்ட திருமணம் கூட ஒரு விதத்தில் அழகாய் , மனதிற்கு சுகந்தமாய் இருக்கும் என்பதை மணமான கொஞ்ச நாட்களில் உணர்ந்து கொண்டான் அற்புதன்.

அழகாய் , ரம்மியமான காலைப்பொழுதில் இவனுக்கும் சேர்த்து , காஃபிக் கலக்குவதாகட்டும் , உடல்நிலை சரியில்லாத நாட்களில் சேயாய் தாங்குவதாகட்டும் , அக்கறையில் அமிழ்ந்து உருகிப் போன பொழுதுகள் ஏராளம்.

திருமணத்திற்குப் பின் அவள் வேலைக்குப் போக நினைக்கும் பொழுதும் , அவன் வேண்டாமென்று மறுக்கவில்லை. அது அவளது உரிமையாயிற்றே ! அதில் , தான் தலையிடலாகாது என்றும் அவளது சுதந்திரத்திற்கு எல்லையும் வகுக்கவில்லை அவன்.

இவனது பெற்றோர் ஊருக்குச் சென்றிருக்கும் வேளையில் , தான் அவள் வேலைக்குச் சென்று , இப்போது ஒன்பது மணியான பிறகும் வீட்டிற்கு வந்து சேரவில்லை.

அப்பா , அம்மா வீட்டில் இருந்திருந்தால் அவளை நினைத்துக் கலங்கி இருக்கவும் வாய்ப்புகள் அதிகம்.

சண்டை சச்சரவுகள் அற்று , சாந்த நிலையில் , போய்க் கொண்டு இருந்த இவர்களின் வாழ்வில் இந்த நாள் மிகக் கொடியது போலும்.

தங்கள் மணநாளில் இருந்து , இந்த நிமிடம் வரை நிகழ்ந்த அனைத்தையும் மனதில் ஓட்டிப் பார்த்துக் கொண்டவனுக்கு அவளில்லாத இச்சில மணி நேரங்களில் தவித்துப் போன தனக்கு அவளது அருகாமை எவ்வளவு முக்கியம் என்பதை தெரிந்து கொண்டான் அற்புதன்.

கைபேசியில் ஒலிர்ந்த இசையை ரசிக்க இது தருணமல்ல என்பதால் , தொடு திரையில் தெரிந்த பெயரைப் பார்த்ததும் , யோசியாமல் , காலை அட்டெண்ட் செய்து பேசினான்.

” ஹேய் யக்ஷித்ரா ! ஏன் இவ்ளோ நேரமா கால் அட்டெண்ட் பண்ணல ? சேஃப் ஆக இருக்க தான ? எங்க இருக்கன்னு சொல்லு நான் கிளம்பி வர்றேன். இன்ஃபார்ம் பண்ற பழக்கம் இல்லையா ? “

வரிசையாக கேள்வி கேட்டானேயொழிய , பதிலுக்கு செவி சாய்ப்பதாய் தெரியவில்லை.

” இருங்க ! பதில் வேணுமா ? இல்லை கேள்வி மட்டும் கேட்டுட்டு கால் கட் பண்றதா உத்தேசமா ? “

அவன் பொரிந்து தள்ளிய போதும் பொறுமையாக பதிலளிக்க முடிந்தால் அது இவளால் மட்டுமே சாத்தியம்.

எதிர்முனையில் இருந்தவனது இறங்கிய குரலில் இருந்து ,
” ம் சொல்லு ” என்ற வார்த்தைகள் வெளிப்பட்டது.

” வொர்க் இப்போ தான் முடிஞ்சுச்சு. வேலை நேரத்தில் டிஸ்டர்பன்ஸ் இருக்கக் கூடாதுன்னு மொபைல் சைலண்ட்ல இருந்துச்சு. வேலை முடிஞ்சுட்டதால , சைலண்ட் ரிமூவ் செய்துட்டு உங்க மிஸ்ட் கால்ஸ் பாத்தவுடனே கால் செய்துட்டேன்.இதுக்கு மேல எக்ஸ்ப்ளனேஷன்ஸை வீட்டுக்கு வந்து குடுக்குறேன் “

இவள் இந்தளவிற்குப் பேசியதே போதுமென்றாகிப் போனது அற்புதனுக்கு.

” சரி எக்ஸாக்ட் ஆக எப்போ வீட்டுக்கு வருவ ?”

அவள் வந்ததும் இரவு உணவுண்பது போல தயாராக்கி வைத்திருக்கவே அவன் இவ்வாறு கேட்டிருக்க ,
” அதான் எல்லாம் முடிஞ்சாச்சே . அதுக்குப் பிறகு எனக்கென்ன வேலை. சோ வந்துருவேன் “

அவள் பிரயாணம் செய்து கொண்டு இருப்பது , சாலையில் கடந்து செல்லும் அநேக வாகனங்களின் ஹாரன் ஒலிகளின் மூலம் , அவன் புரிந்து கொள்ள ,

” வீட்டுக்கு கிட்ட வந்துட்டியா ? “

இவன் இப்படி பேச்சை வளர்த்துக் கொண்டே போகக் காரணம் , இவ்வளவு நேரமும் அவளை எண்ணிப் பதறித் துடித்த இதயத்தை இதமாக்கத் தான் !  ஆனால் , அஃது அவளால் உணர முடிந்தால் நல்லது , இல்லையெனில் !

” இல்ல. நேரமாகும். கூட ஃப்ரண்ட் இருக்காங்க. அவங்களோட வண்டில தான் வர்றேன். வந்ததும் நானே சொல்றேன். கதவை மட்டும் திறந்து வைங்க போதும் ”
இவள் சொல்ல ,

அருகில் இருந்த தோழியோ ,
” ஹஸ்பண்ட் கிட்ட இந்த அளவுக்குக் கறாரா பேசக் கூடாதும்மா ”
இலவச அறிவுரை வழங்கினாள்.

” சரிம்மா ”
என்று மெல்லிய புன்சிரிப்பை மலர விட்டாள் இதழ்களில்.

” எழுந்தாச்சா ? ”
இவளது வார்த்தைகள் புரியாமல் ,
” என்ன ? ” என்று இவன் வினவினான்.

” உங்களை இல்லை. இங்க பேசிட்டு இருக்கேன்ங்க “என்று இவனுக்கு விளக்கினாள்.

” சரிங்க ”
இவனும் பதிலுக்கு இப்படி பேச , யக்ஷித்ராவுக்கு அப்போது அருகில் அத்தோழி இருந்திருக்கக் கூடாது என்று தோன்றியது.

ஏனெனில் , இவன் சரிக்கு சரியாய் பேசியது , இவளுக்கு எரிச்சலைக் கொடுப்பது போல்  இருக்க ,
” நான் வீட்டுக்கு வந்துட்டு நேர்ல பேசறேன் ”
என இவள் கூறிக் கொண்டு இருக்கும் போது ,
திடிரென்று மனைவியின் குரல் , சற்று அழுத்தமாக , அலறலோடு ஒலித்து.

” ஆஆஆ… விடு…..வலிக்குது. நேஹா நீயாச்சும் சொல்லு ! “

அந்த அலறலுக்குப் பிறகு , அற்புதனின் கஷ்டகாலமோ கால் கட் ஆனது.

அடுத்து யக்ஷித்ராவின் அலைபேசி எண்ணிற்குத் தொடர்பு கொள்ளும் போதெல்லாம் , சுவிட்ச் ஆஃப் என்ற குரல் கேட்க , அது இவனுக்கு கெட்டதுக்கான சமிக்ஞையாய் தோன்ற ,

” யக்ஷிம்மா ! “

சுவிட்ச் ஆஃப் ஆகி விட்டது எனவும் , இவனுக்குக் கை , கால்களில் இரத்தவோட்டம்  தடை செய்யப்பட்டது போன்ற நிலை !

தன்னை நிலைப்படுத்திக் கொள்ள நிமிடங்கள் சில தேவைப்பட்டது. அத்தோடு , அவளது அலறல் செவியில் ஆழமாய் இறங்கி , இதயத்தில் எதிரொலித்துக் கொண்டு இருக்க இவனுக்கு வீட்டிற்குள்ளிருக்கப் பொறுக்க முடியவில்லை.

அணிந்து இருந்த ஃபுல் பேண்ட் மற்றும் டீ ஷர்ட் உடனேயே வெளியே கிளம்ப யத்தனித்தவனுக்கு , அவளைத் தேடும் பணி அத்தனை எளிதாக  இருக்குமா ? என்று கூட யோசிக்கவில்லை.

அவனது யக்ஷித்ராவைக் காணும் வரையிலும் நிலை கொள்ளாமல் , இருக்கப் போகும் மனதிற்கு ,
“கண்டிப்பா கண்டுபிடிச்சுடுவேன் , யெஸ் கண்டுபிடிச்சுடுவேன் ”
என்று சமரசம் செய்து கொள்ளத் துவங்கி , இப்போது வீட்டின் வெளியே வந்தவன் ,
பூட்டுப் போடும் எண்ணத்தை எல்லாம் அந்த பரபரப்பைக் கொண்டுள்ள மூளை அவனுக்குக் கட்டளையிட மறந்து விட்டதோ ?

விறுவிறுவென வாசற்படிக்குச் சென்றவனது பாதங்கள் , இருசக்கர வாகனம் இருக்குமிடம் செல்ல , கண்கள் சாவி சொருகும் இடத்தில் பதிய , கரங்கள் சாவியைக் கொடுத்து வண்டியை இயக்கியது.

‘ இந்த ஒரு இரவில் இவனது இல்லாளைக் காப்பாற்ற வேண்டி , படு வேகத்தில் பறந்து கொண்டிருந்தவனது பைக்கை பேரொலியுடன் நிறுத்தியது குறுக்காக வந்த கார் ஒன்று.

ப்ரேக்கை மட்டும் அழுத்தாமல் , முன்னேறி இருந்தால் , அற்புதன் காரின் வீலில் மாட்டி இருப்பான் அவனது பைக்கோடு.

– தொடரும்

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்