Loading

 

அத்தியாயம் – 1

காலை எப்பொழுதும் சத்தமாக இருக்கும் வீடு இன்று அமைதியாக இருக்க, படுக்கையில் இருந்த எழுந்தவனுக்கோ ஆச்சர்யமாக இருந்தது. அடுத்தடுத்து அவனுக்கு வேலை பின்னோடு நிற்க மற்றதை புறம் தள்ளி குளியலறைக்குள் புகுந்தான் இந்திரசேனன்.

குளித்து முடித்து வந்தவன் மணியை பார்க்க அது எட்டை நெருங்கியிருக்க வேட்டியை கட்டிக்கொண்டு நின்றவனின் பெயரை வாசலில் நின்று ஏலம் விட்டு கொண்டிருந்தது ஒரு வாண்டு.

“மாமா எங்க இருக்கீங்க? இந்திரா மாமா….. இந்திரா மாமா…. வெளியில வாங்க….. மாமா…. இந்திரசேனா மாமா……”

“அடியே சில்வண்டு எதுக்கு என்ற பேரை இப்படி ஏலம் விட்டுட்டு இருக்க? உள்ள வாடி நீனு இன்னைக்கு பரணில் தூக்கி போட்டு பூட்டி வைக்கிறேன்”

அதில் மிரண்ட அந்த சிறுமி, “ஆச்சி உன்னை காமாட்சியம்மா வீட்டுக்கு கூட்டிட்டு வர சொன்னாங்க. அதுக்கு தான் வந்தேன் நான் உன் செல்லமில்ல. அந்த பரனுல பல்லி இருக்கும் மாமா அதை பார்த்தா எனக்கு பயம்” என்றாள் கண்ணை உருட்டி.

“என்னத்துக்கு என்னை உன் ஆச்சி கூப்பிட்டு விட்டுருக்கு என்ன சேதி?”

“நானும் கேட்டேன் மாமா. அதெல்லாம் பெரியவங்க சமாச்சாரம் நீ வெரசா போய் மாமனை கூட்டி வானு தொரத்திருச்சு” என்றாள் பாவம் போல்.

“என் கருப்பட்டிக்கே சொல்லலையா? இரு நான் சட்டையை போட்டு வந்து என்னனு கேட்கிறேன்” என்று அவளை சமாதானம் செய்து உள்ளே சென்றவன் மனம் என்னவாக இருக்கும் என்பதையே திரும்பி திரும்பி யோசித்தான்.

பின் இருபுறமும் தலையை சிலுப்பி சமன் செய்து சட்டையை அணிந்தவன், அவனுக்கே உரிய வேக நடையில் நான்கு வீடு தள்ளியிருந்த அவன் மாமன் வீட்டை அடைந்திருந்தான்.

இவன் வரவிற்கு அங்கு ஒரு ஊரே கூடியிருக்க, புருவத்தை சுருக்கி அங்கிருந்த அவன் தாயை பார்க்க அவரோ அவன் பார்வையை தவிர்த்து வேறுபுறம் பார்த்தார்.

அதிலேயே புரிந்துக் கொண்டான் ஏதோ வம்புக்கு தன்னை இங்கு அவர் அழைத்திருப்பதை.

நேராக உள்ளே சென்றவன் கூடத்தில் இருந்த நாற்காலியில் அமர கூடியிருந்த கூட்டம் மொத்தமும் அவனை குறிவைத்தது.

‘என்னடா இது இதுங்க பார்வையே சரி இல்லை என்ன பெத்த தெய்வம் பெருசா எதையோ பண்ணியிருக்கும் போலயே. நம்ப இருக்க திசை பக்கம் கூட திரும்பல’ என்றவனின் எண்ணவோட்டம் இரு வித்தியாசமான கொலுசொலியில் மீண்டது.

வருவது யார் என்று தெரிந்தவன் திரும்பாமல் இருக்க, திருமண அலங்காரத்தில் அவன் மாமன் மகள்கள் இருவரும் அவன்முன் வந்து நின்றனர்.

‘இவளுங்க எதுக்கு இப்படி வந்து நிக்கிறாளுங்க? ஒரு வேளை பொண்ணு பார்க்க யாராவது வந்து இருக்காங்களா?’ என்று ஒருவித பதற்றம் தோன்ற அதை வெளிக்காட்ட விரும்பாதவன் சுற்றி பார்வையை படறவிட அதற்கான அறிகுறி ஏதும் இல்லாமல் போக மீண்டும் குழம்பி இம்முறை அவன் மாமனை பார்த்தான்.

அவன் பார்வையை உணர்ந்தவர், “இந்திரா! சித்தாராவுக்கும் பல்லவிக்கும் வயசாகிட்டே போகுது காலையில அக்காவும் அதே தான் சொல்லுச்சு உனக்கு ஒரு கல்யாணத்தை பண்ணனும்னு. என் வீட்ல ஒன்னுக்கு ரெண்டு பொண்ணு வைச்சுக்கிட்டு உனக்கு வெளியில பார்க்க உங்க அம்மாக்கு விருப்பமில்லை. ரெண்டு பேரும் காட்டுனா உன்னை தான் காட்டுவேனே ஒத்தக் காலுல நிக்குதுங்க. சொல்லி பாத்துட்டேன் கேக்கிற மாதிரி தெரியலை. ரெண்டுமே எம்பொண்ணுங்க தான் நீயே யாரை கல்யாணம் பண்ணிக்க போறேன்னு” என்று அவர் பேசுவதை கேட்டவனுக்கு ஆத்திரமாக வந்தது தன்னை பெற்றவள் மீது.

இப்படி ஒரு நிகழ்வு அமைய கூடாது என்று தானே கல்யாணம் வேண்டாம் என்று தள்ளிப் போட்டுக்கொண்டிருந்தான். அதை அவன் அன்னை மொத்தமாக உடைத்து இப்படி செய்ய இதன் பின்விளைவு பேரும் விபத்தாக தானே அமையும் என்று நினைக்கவே பதறியது அவன் மனம்.

நிலைமை கைமீறி போகும் முன் பேச அவன் ஆரம்பிக்க,

“மாமா என்னை தான நேசிக்கிற” என்று சித்தாரா கண்கலங்க கேட்டாள்.
“தங்கம் என்ன இது? எதுக்கு கண்ணை கசக்கிட்டு நிக்கிற நீ?” என்று அவன் எழுந்திருக்க,
“மாமா நான் தான உன் உசுரு?”

ஆம் என்று சொல் என்பது போல அவனை பார்த்தாள் பல்லவி.

இருவரையும் மாறி மாறி பார்த்தவனுக்கு ஒன்று நன்றாக புரிந்து விட்டது அவனது பதில் ஒரு இதயத்தை உடைக்கப்போவது உறுதி என்று.

பெரியவள் சித்தாராவும் சரி சிறியவள் பல்லவியும் சரி அவன்மேல் மலையளவு காதலை கொட்டி வைத்துள்ளனர்.

இருவரும் அவனது பதிலை எதிர்பார்க்க அவனோ இருவரையும் உணர்ச்சியற்று பார்த்துக் கொண்டிருந்தான்.

“இந்த கல்யாணம் நடக்கலைனா, நான் செத்துருவேன் மாமா” என்ற சித்தாராவை நெருங்கியவன் முன் வந்த பல்லவி,

“இந்த கல்யாணம் அவக்கூட நடந்தால் நான் செத்துருவேன் மாமா” என்று கூற அதிர்ந்து பார்த்தான் இந்திரசேனன்.

என்ன முடிவு எடுப்பது என்று தெரியாமல் விதிர்விதிர்த்து போயிருந்தான். இருவருள் ஒருத்தி அவன் மனம்கவர்ந்த காந்தள், இன்னொருத்தியோ மனதை வென்ற காரிகை. இருவருள் எவள் ஒருத்தி அவன் பாதி என்பது அங்கிருப்பவர் எவருக்கும் தெரியாது ஏன் தனக்காக சண்டைக்கொள்ளும் பாவைகள் கூட அறிந்திருக்கவில்லை.

தனது விருப்பத்தை கூறினால் ஒருத்தியின் உயிர் பிரிவது உறுதி என்பதால் ஒரு முடிவுக்கு வந்தான்.

“எனக்கு இப்பொழுது திருமணம் வேண்டாம். என் மாமா மகளுங்க ரெண்டு பேரும் வரிசைல நின்னாலும் என் மனசு அவங்க பக்கம் நிக்கல. கல்யாணம் பண்ண அவளுங்களுக்கு அவசரம்ன்னா அவங்க ஆத்தா அப்பன்கிட்ட சொல்லி வெரசா பாக்க சொல்லுங்க. நானும் மாமன் முறைக்கு என்ன செய்யணுமோ அதை செய்யறேன். இப்போ எனக்கு ஆக வேண்டிய சோலி ஆயிரம் இருக்கு இதுக்கு தான் ஆளவுட்டு கூப்டுவிட்டிகளோ” என்று இருவரையும் அழுத்தமாக பார்த்து சென்றவன் மனமும் முகமும் இறுகி போயிருந்தது.

அங்கிருந்து வீட்டுக்கு வந்தவன் மனம் முழுவதும் சொல்ல முடியாத அளவுக்கு கோவமே எஞ்சியிருந்தது.

அவன் மனமோ அவனது அன்னையை திட்டாமலில்லை.

‘ஏற்கனவே இவளுங்களுக்கு ஆட தெரியாது இதுல இந்த அம்மா வேற சலங்கையை கட்டிவிட்டு வேடிக்கை பார்க்குது. இதுக்கு எல்லாம் சீக்கிரமா ஒரு முடிவு கட்டணும்’ என்று நினைத்தவன் மனக்கண்ணில் ஒரு உருவம் அவன் பிம்பத்தில் தோன்றியது.
அதுவோ ‘கொஞ்ச இந்த பிரச்சனையை ஆறப்போடு உனக்கே ஒரு பதில் கிடைக்கும்’ என்று கூற, அவனும் வேறு வழியின்றி அவனது அரிசி மண்டிக்கு புறப்பட்டான்.

அவன் வெளியே வந்து வண்டியை எடுக்க வாசலில் ஒருத்தியும் சன்னல் அருகே ஒருத்தியும் அவனை விழி அகற்றாமல் பார்க்க, அவர்களை காணாமல் முதல் முறை அவன் சென்றிருந்தான்.

இந்த பாராமுகம் இருவருக்கும் ஒரு தாக்கத்தை கொடுத்தது.
இருவரும் கண்ணீரில் திளைக்க அவர்களது அன்னையோ பெற்ற மனம் தாளாது இருவரையும் வசைபாடியது.

“ஊரில இல்லாத அத்தை மவனா? இந்த கூறுக்கெட்ட சிரிக்கிங்களுக்கு எத்தனை தடவை சொல்லியிருப்பேன். அவன் தங்கம் பொம்மின்னு பாசமா வந்தாலும் உங்க ரெண்டு பேருல ஒருத்திய தான் கல்யாணம் பண்ணிப்பான். இப்படி ரெண்டு பேரும் மனசுல ஆசையை வளர்த்திக்காதிங்க அப்பறம் ரெண்டு பேருக்கும் இல்லாமல் போய்டுவானு. கேட்டாளுங்களா எல்லாம் இந்த மனுசனை சொல்லணும் எங்க அக்கா வீட்டுக்கு தான் மருமகளா போகணும்னு நிதமும் சொல்லி இப்படி மனசை கெடுத்து வைச்சிட்டாரே. நாளைக்கு அவன் கட்டிக்கலைனா செத்து போயிட்டா நான் என்ன பண்ணுவேன். அவனுக்கு மட்டுமே தெரியும் அவன் மனசுல எவ இருக்கான்னு? இன்னொருத்தி என்ன செய்ய காத்திருக்களோ? காளியாத்தா என் குலம் செழிக்க வந்தவளுங்க இப்படி பட்டமரமா போய்டுவாளுங்களோ?” என்று அவர் அழுக வந்தவர்கள் கிளம்ப, மிஞ்சியிருந்தது ஐவர் மட்டுமே.

“காமாட்சி என்னத்துக்கு நீ இப்படி ஒப்பாரி வைக்கிற மொத உள்ள போ” என்று ராமசாமி விரட்ட அவரை முறைத்தாரே தவிர எதுவும் பேசாமல் அவர்களது அறைக்கு சென்றுவிட்டார் மற்றவர்களை பார்க்காமல்.

அக்கா தங்கை இருவரும் அவர்களது அறைக்கு செல்ல, ராமசாமியும் விசாலாட்சியும் ஒருவரை ஒருவர் அர்த்தம் பொதிந்த பார்வை பார்த்து, அவரவர் வேலையை கவனிக்க சென்று விட்டனர்.

மதியம் வரை வேலையின் பிடியில் சிக்கி இருந்தவனுக்கு, நினைவுகள் ஏதுமில்லாது இருக்க அதை கெடுக்கும் வகையில் அவனது அலைபேசி ஓயாமல் அடித்தது.

எடுத்தவன் எதுவும் பேசாமல் மௌனமாக இருக்க மென்குரலில்
“ஹலோ மாமா” என்றாள் பல்லவி.
குரலை சற்று சரி செய்து, “சொல்லு பொம்மி” என்றான் பட்டும் படாமலும்.

“மாமா நெசமா நான் உன் மனசுல இல்லையா?” என்றவள் குரல் அழுக தயாராக இருக்க, அவனோ என்ன சொல்வது என்று தெரியாமல்,

“பொம்மி எனக்கு கடையில வேலை அதிகம் வீட்டுக்கு வந்து பேசுறேன்” என்று வைத்தவன் மனம் சொல்ல முடியாத அளவிற்கு வலித்தது.

கண்களை இறுக மூடி நின்றிருந்தவன் காதுகளுக்கு கொலுசு சத்தம் துல்லியமாக கேட்டது. கண்கள் திறவாமலே அவன் அறிவான் அதற்கு சொந்தக்காரியை.

அவள் உள்ளே வருவாள் என்று அவன் அமைதி காக்க அவளோ தயங்கி நின்றாள் வாசலிலேயே.
அதை பொறுக்கமுடியாதவன் அமைதியை உடைத்து,
“இன்னும் எவ்வளவு நேரம் அங்கேயே நிக்க போற தங்கம்?”

அவன் குரலில் இருந்த பரிவு அவளை உள்ளே அழைத்து சென்றது. நேரம் ஆனதே தவிர அவள் ஏன் வந்தாள் என்று அவளும் ஏன் வந்தாய் என்று அவனும் கேட்கவில்லை. ஒரு கட்டத்திற்கு மேல் சித்தாரா அதை உடைத்து பேசினாள்.

“மாமா இது வரை என்னையும் பொம்மியையும் பிரிச்சு பார்த்தது இல்லை. ஆனால் உன் மனசுக்குள்ள ஒருத்தி தான் இருக்கோம்னு எனக்கு தெரியும். நீயா வாயை திறந்து சொல்லாமல் எங்களால தெரிஞ்சுக்க முடியாது. நீ ஏன் மாமா இப்படி உன்னையும் ஏமாத்தி எங்களையும் ஏமாத்திட்டு இருக்க?”

ஆழ்ந்து மூச்செடுத்தவன், “நான் என்ன சொன்னாலும் உங்க ரெண்டு பேருக்கும் சம்மதமா?”

அவன் பார்வையில் தெரிந்த மாற்றத்தை அறிந்தவளாக, “நீ சொல்லுறதுல தெரியும், யாருக்கு கல்யாணம்? யாருக்கு கருமாதினு”

எதுவும் பேசாமல் அங்கிருந்து அமைதியாக சென்றவனை இயலாமையுடன் பார்த்தவளின் கண்களில் அத்தனை மையல்.
செல்லும் அவன் மனமோ இருத்தலைக்கொல்லியாக தவித்தது.

 

ரத்தினமாக அவன்………… 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  5 Comments

   1. Prabha Sakthivel

    இவங்க இரண்டு பேரும் இப்படி சொன்னா அவன் என்ன தான் பண்ணுவான்.🤔🤔மிக அருமை. 👌👌👌❤️❤️❤️வாழ்த்துக்கள் 💐💐💐

  1. ஒருத்தன கட்டிக்க ரெண்டு பேரும் சண்டபோட்டா பாவம் அந்த அப்பாவி ஜீவன் என்ன பண்ணும் இவ வேற ஆரம்பத்துலயே கல்யாணம் கருமாதின்னு ரொம்ப சீரியஸா பேசுறா.

  2. Abirami

   பாவம் நம்ம இந்திரசேனா, அவன் மனசுல யார் இருக்காங்களோ!!! இந்த பொம்மியும், தங்கமும் அவனை இப்படி கார்னர் பண்ணாம இருக்கலாம். அவனும் என்ன தான் செய்வான். பார்க்கலாம். நம்ம இந்திரசேனா மனசுல யார் இருக்கானு தெரிஞ்சுக்க ஆவலா இருக்கேன். சூப்பர் சுபா பேபி 😍😍😍😍

  3. Archana

   போட்டிக்கு இன்னொரு ஆளு வந்தா இந்திரா நிலமை என்ன ஆகும்😂😂😂😂😂 பாவம் பயபுள்ள🥺🥺.