
ருத்ரன் தான் “சரி காயூ மா, இவ என்ன பண்ணுனா? நீ இப்போ இப்படி இருக்குறதுக்கு என்ன காரணம்?” என்றான்.
“இல்ல மாமா, அன்னைக்கு வந்தவ…”
“சொல்லு” என்றான்.
“இவருக்கு என் மேல விருப்பம் இருக்குன்னு எனக்குத் தெரியும். ஆனால், அவரோட விருப்பத்தை என்கிட்ட இதுவரை அவர் சொல்லல… அன்னைக்குக் கூட அவர் சாதாரணமா நின்னு பேசிட்டுப் போயிட்டாரு. அவர் போன உடனே இவ எங்க இருந்து ஒளிந்து நின்னு பார்த்தாளோ, தெரியல. அவர் போன அடுத்த செகண்ட் என் பக்கத்துல வந்து நின்னா…
இவ அன்னைக்கு வந்து பேசும்போது இவருக்கு ஏற்கனவே என்கேஜ்மென்ட் ஆகிட்டதாகவும், ரெண்டு மாசத்துல மேரேஜ் ஃபிக்ஸ் ஆகப்போகுது. இந்த நேரத்தில் அவரோட வாழ்க்கையை அதும், ஒரு பொண்ணோட வாழ்க்கையைக் கேள்விக் குறியாக்கி நான் கெடுக்கப் பார்க்கிறேன். அந்த மாதிரி சொன்னா…
ஏற்கனவே என் வாழ்க்கையை கல்யாண மேடை வரை வந்து உன் அக்கா கெடுத்தா… இப்போ, நீ என் அண்ணன் வாழ்க்கையைக் கெடுக்கப் பாக்குறியா? குடும்பத்தோட ஒரு முடிவு பண்ணி இருக்கீங்களா?
உங்களுக்கு சொந்தமா ஒரு வாழ்க்கை வாழத் தெரியாதா? அடுத்தவங்க வாழ்க்கையைப் புடுங்கி வாழ தான் ஆசைப்படுவீங்களா? இந்தப் பொழப்புக்கு குடும்பத்துடன் நாண்டுக்கிட்டுச் சாகலாம், என்று சொன்னா” என்றாள் காயு.
இப்பொழுது ருத்ரன் வேகமாக அடித்து இருந்தான் காயத்ரியை.
“அப்பவே இவர் சொன்னார், நீ ரெண்டு மூணு நாளா சரி இல்ல. அவர விட்டு ஒதுங்கிப் போறேன்னு, அதுக்கான காரணம் இவ தான் இல்லையா? இவ வந்து பேசின உடனே இவரை நேசிச்ச உன் மனசு இவரை விட்டு விலக நினைச்சிடுச்சு…
அப்ப உனக்குன்னு சொந்த புத்தி கிடையவே கிடையாதா? என்னோட காயுமா இப்படி இல்லன்னு இவ்ளோ நாளா நினைச்சுட்டு இருந்தேன். ஆனா, நீ அப்படித்தானே இருக்க…” என்றான்.
“இல்ல மாமா அது…”
“போதும் காயு” என்று விட்டு அதிரனைப் பார்க்க அடிப்பட்ட பார்வையோடு காயத்ரியைப் பார்த்துக் கொண்டு இருந்தான்.
“மேற்கொண்டு என்ன பண்ணலாம்னு நீங்களே முடிவு பண்ணுங்க” என்று மொத்தக் குடும்பத்தையும் பார்த்துச் சொல்லு விட்டு, ருத்ரன் அமைதியாக நின்று விட்டான்.
அப்போது தனா தான், “முதல்ல இவளை நம்ம வீட்டை விட்டு வெளியே துரத்துங்க, அதுக்கப்புறம் நம்ம குடும்ப விஷயத்தைப் பத்தி நம்ம பேசிக்கலாம்” என்று கோபமாகச் சொன்னாள்.
சரவணன் ஆனந்தியின் கையைப் பிடித்து வேகமாக அவள் கத்தக் கத்தக் காதில் வாங்காமல், தரதரவென இழுத்துக் கொண்டு சென்று வெளியே தள்ளி விட்டான்.
“எங்க வீட்டு வாசப்படி மிதிக்கிறதுக்கு முன்னாடி இனி ஒரு தரம் யோசித்து விட்டு வா… நாய் மாதிரி வீட்டுக்குள்ள நுழையாத” என்று விட்டுச் சரவணன் வீட்டுக்குள் வந்தான்.
வீட்டில் உள்ள பெரியவர்கள் அனைவரும் சிறிது நேரம் காயுவைப் பார்த்தார்கள்.
அவள் கொஞ்ச நேரம் அமைதியாகவே இருக்கச் செய்தாள்.
தனா தான் அமைதியாக இல்லாமல் தனது அத்தையின் அருகில் வந்தவள், “நம்ப காயுவுக்கு இவரைப் பிடிக்கும் அத்தை, பேசி முடிச்சிடலாம்” என்றாள் லேசான அழுகையுடன்.
முனுசாமி தான் தனது தொண்டையைச் செருமிக் கொண்டு, “பிள்ளை படிச்சிட்டு இருக்கு. உங்க வீட்டு பிள்ளைக்கும் வயசு கூடிட்டே போகுது.
இந்த வருஷம் படிப்பு முடிஞ்ச உடனே நம்ம கல்யாணத்தை முடிச்சிடலாம். மேற்கொண்டு ஆகுற வேலையை இனிக் கொஞ்சம் கொஞ்சமாக ரெண்டு வீட்டுப் பக்கமும் பார்க்கச் செய்யலாம். இப்போ சின்னதா நிச்சயம் மட்டும் வெச்சுக்கலாம்.
இல்ல, நிச்சயத்தைக் கல்யாணத்திற்கு முன்னாடி நாள் வச்சுக்கலாம் என்று முடிவு பண்ணினாலும், இப்போது பேசி முடிச்சிடலாம்” என்றார்.
காயத்ரி இப்பொழுது அதிரனைப் பார்த்தாள். ஆனால், அதிரனின் பார்வை என்னவோ கீழே தரையை தான் பார்த்துக் கொண்டிருந்தது.
அப்பொழுது அகிலா தான், காயத்ரியின் கையைப் பிடித்துக் கொண்டு, “ஏன் காயு இப்படிப் பண்ண? உனக்கு விருப்பம் இருந்தா வீட்டுலயே சொல்லி இருக்கலாம் இல்ல. மாமா சொன்னது தானே, இந்த வீட்லயே எங்க எல்லாரையும் விடத் தைரியமான ஆள் நீ தானே. சரி, ஒன்னும் இல்ல பாத்துக்கலாம் விடு” என்று காயு கையில் தட்டிக் கொடுத்தாள் அகி.
“சரி நிச்சயம் மட்டும் இன்னும் ஒரு வாரம் கழித்து வைத்துக் கொள்ளலாம்” என்று சொல்லிவிட்டு, இன்று வந்ததற்காகக் காயத்திரிக்கு பூ வைத்துவிட்டுச் சென்றார்கள் அதிரனின் பெற்றவர்கள்.
“இரண்டு திருமணத்தையும் ஒன்றாக வைத்துக் கொள்ளலாமா?” என்று முனுசாமி கேட்டதற்கு.
காயத்ரி ஒரே வார்த்தையாக, “இல்லை, அண்ணனுக்கும் தனாவுக்கும் ஃபர்ஸ்ட் முடிங்க. அதுக்கப்புறம் என்னோட கல்யாணத்தைப் பார்த்துக் கொள்ளலாம்” என்றாள்.
“ஏன்?” என்று கேட்க,
“எனக்கு ஒன்னும் அவ்ளோ வயசாகலை, அது மட்டும் இல்லாம கொஞ்ச நாள் போகட்டும் பெரியப்பா. ஒரே டைம்ல எதுக்கு?” என்றாள்.
“ஏண்டாம்மா, ஒரு நேரத்துல ரெண்டு பேருக்கும் கல்யாணம் முடிச்சுடலாமே” என்று கேட்டார்.
“இல்ல பெரியப்பா, அவ கல்யாணத்துல நான் இருந்து செய்யணும்னு எனக்குச் சில பல கனவு இருக்கும். அதேபோல அவளுக்கும் இருக்கும். இப்போ நான் அவ கல்யாணத்துக்கோ இல்ல, அவ என் கல்யாணத்துக்கோ எதையும் செய்ய முடியாமல் போயிடுமே” என்றவுடன் வீட்டில் உள்ள அனைவருக்கும் அது சரி என்று பட்டதால் அமைதியாகி விட்டார்கள்.
அது மட்டும் இல்லாமல், ஒரே நேரத்தில் ஒரே மணமேடையில் இரண்டு கல்யாணம் நடைபெற்றால் அதில் ஏதாவது ஒன்று தான் நிலைத்து நிற்கும், என்று எப்போதோ பெரியவர்கள் சொல்லிவிட்டுச் சென்றதை, நினைவில் கூர்ந்து சரி என்று அமைதியாகி விட்டார்கள்.
காயத்ரி மறுநாள் காலேஜ் செல்லும் வேளையில் அதிரனைப் பார்க்க நேரிட்டது.
ஆனால், அதிரன் இவளைக் கண்டும் காணாமல் விலகி விட்டான்.
காயத்ரிக்கு சிறிது வருத்தமாக இருந்தாலும், மாலை காலேஜ் முடிந்து வீட்டிற்குச் செல்லும் பொழுது பார்த்துக் கொள்ளலாம் என்று அமைதியாகி விட்டாள்.
தனா கூட முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு பெரிதாகப் பேசாமல் இருக்க,
அவளை எப்படியோ சரி கட்டி எப்பொழுதும் போல் பேச வைத்தாள் காயத்ரி.
மாலை காலேஜ் முடிந்து இருவரும் சென்று கொண்டிருக்கும் பொழுது இருவருக்கும் பின்னாடி வந்த அதிரன், இருவரையும் கண்டு காணாமல் இவர்களைத் தாண்டி முன்னாடி செல்ல,
“ஹலோ கெமிஸ்ட்ரி, கொஞ்சம் நிற்கிறது” என்றாள் தன்னுடைய துடுக்குத்தனம் சிறிதும் குறையாத காயு,
அவளைப் பார்த்து முறைத்து விட்டு ஒரு சில நொடி நின்றவன்,
“மரியாதையாகப் பேசி பழகு. பொது இடத்தில் எப்படிப் பேசணுமோ, அப்படிப் பேசு” என்றான் காயத்ரியை முறைத்துக் கொண்டு.
“இவ்வளவு நாளா பொது இடத்தில் தான் பேசினோம் என்று இவருக்குத் தெரியலையோ? இப்பதான் பொது இடத்தில் நின்று பேசுகிறோம் என்று தெரியுதோ?” என்றாள்.
“இவ்ளோ நாளா பேசுனது வேற இனி பேசப்போறது வேற. அது மட்டும் இல்லாம இவ்வளவு நாள நான் மட்டும் தான் உன் பக்கத்துல இருந்தேன். நமக்குள்ள மெதுவா தான் பேசிக்கிட்டோம். இப்படி ஊருக்கே கேக்குற மாதிரி இவ்ளோ வேகமா கத்திப் பேசவில்லை” என்றான்.
“சரி சரி, ஊருக்கே கேக்குற மாதிரி கத்தல சரியா?” என்று காயு சிரிக்க.
அவளை முறைத்துக் கொண்டு நின்றான்.
“நானும் பாக்குறேன், காலைலருந்து ஓவராப் போறீங்க. பார்த்தும் பார்க்காத மாதிரி” என்று கேட்டாள்.
“ஏன்? உன்னைப் பார்த்து இப்ப நான் என்ன பண்ணப் போறேன்?” என்றான் எங்கேயோ பார்த்துக் கொண்டு.
அவனால் அவளது கண்ணைக் கூடப் பார்க்க முடியவில்லை.
“அதை என்னைப் பார்த்துச் சொல்றது. எங்கேயோ பார்த்துட்டுச் சொன்னா யாருக்குச் சொல்றீங்கன்னு எனக்கு எப்படித் தெரியும்? என்றாள் விடாப்பிடியாக காயு.
அவளைத் திரும்பிப் பார்த்து முறைத்து விட்டு, “இப்போ உனக்கு என்னடி வேணும்?” என்றான்.
தனா தான் தன் கண்ணைச் சுழல விட்டுக்கொண்டு இவர்கள் இருவரும் பண்ணும் வேலையில் சுற்றி யாராவது பார்த்துத் தவறாக எண்ணி விட்டால் என்ன செய்வது? என்று முழித்துக் கொண்டு நின்றாள்.
“தனா சுத்தி சுத்தி என்ன பாக்குற?” என்று அதிரன் கேட்க,
“இல்ல சார், கொஞ்சம் லைட்டா பயம், அவ்வளவுதான்” என்றாள்.
இருவருக்குமே தனாவின் பதட்டத்தைப் பார்த்துச் சிரிப்பு வந்து விட்டது.
“இப்போ எதுக்கு ரெண்டு பேரும் சிரிக்கறீங்க?” என்று கேட்டாள்.
காயு தான் “நீ என்ன லூசா பக்கி? தினமும் இதே ரோட்டுல தானே போறோம். அப்பல்லாம் பார்க்காதவங்க. இப்ப மட்டும் பாத்துடுவாங்களா?”
“இல்லடி நேத்து அண்ணா என்னைத் திட்டுச்சு…”
“மாமாவா எதுக்கு?”
“எப்படியும் நான் தான் மாமாவை அன்னைக்குக் கூப்பிட்டு இருப்பேன். அப்போ தான் உன்கிட்ட சார் வந்து பேசி இருக்காருன்னு…
“இவர் வந்து பேசினதுக்கா? இல்ல, நீ அண்ணன் கிட்டப் பேசினதுக்கா?” என்று காயூ கேட்க,
“ரெண்டுத்துக்கும் தான்…” என்றாள் சிணுங்கிக் கொண்டே.
“சரி தனா நீங்க வீட்டுக்குக் கிளம்புங்க, நேரம் ஆகுது” என்று அதிரன் சொல்ல,
“கெமிஸ்ட்ரி கூப்பிட்டது நானு. நீ என்ன கிளம்பச் சொல்ற?”.
“இப்ப உனக்கு என்ன வேணும்” என்றான்.
“உங்க போன் நம்பர் கொடுத்துட்டுப் போறது. எத்தனை நாளைக்கு இப்படியே சுத்துறது?” என்று கேட்டாள்.
“எது?” என்று தனா பேந்தப் பேந்த முழித்தாள்.
“ஏண்டி உன்கிட்ட இவருடைய நம்பர் இருக்கா?” என்று காயத்ரி கேட்க,
“என்கிட்ட ஏன், இவர் நம்பர் இருக்கும்?” என்று காய்ந்தாள் தனா.
“அப்புறம் என்ன மூடிட்டு இரு” என்று தன் வாயில் கையை வைத்துக் காண்பித்த காயு அதிரனைப் பார்க்க,
”
அவளது கண்களை ஒரு சில நொடி உற்றுப் பார்த்தவன் எதுவும் பேசாமல் தனது வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பி விட்டான்.
“திமிரு தாண்டி கெமிஸ்ட்ரி உனக்கு. வரவரக் கொழுப்பு கூடிப் போச்சு. ஒருத்தி போன் நம்பர் கேட்டா தரேன், இல்ல தர முடியாதுன்னு சொல்லணும். அதை விட்டுட்டு முறைத்துப் பாத்துட்டுப் போனா என்ன அர்த்தம்?” என்றாள் வேகமாக.
அவளைப் பார்த்து முறைத்து விட்டு எதுவும் பேசாமல் கிளம்பி விட்டான் அதிரன்.
போகும் அதிரனை முறைத்து விட்டு, “சரி வண்டியில ஏறு, நேரம் ஆகுது வீட்டுல தேடுவாங்க” என்றாள் காயு.
“ஓ! மேடமுக்கு அதுவே, இப்போ தான் ஞாபகத்துல வருதோ?” என்று நக்கல் அடித்தாள் தனா.
“ஓவர் வாய் என்கிட்ட மட்டும் தான் இல்ல, வீட்ல இருக்க வேற யார் கிட்டயும் வாய் ஆடாத, ஏறுடி” என்று தனது தோழியைப் பார்த்துச் சிரித்தாள் காயு.
“காயு…” என்று சிணுங்கி விட்டு தனா வண்டியில் ஏற,
காயு தனது தோழியைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே “எங்
க அண்ணன் கிட்டையாச்சும் பேசுவியா? இல்ல அங்கயும் இப்படி உம்முனா மூச்சியா தான் இருப்பியா?” என்று அவளை வம்பு இழுத்துக் கொண்டே வீட்டிற்கு வண்டியை விட்டாள்.

