
அத்தியாயம் 28
இந்த மனம் ஒரு சைத்தான். நமக்கு தேவையானதை என்றுமே யோசிக்காது. எதிர்மறை எண்ணங்களை மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்கும். அந்த எதிர்மறை எண்ணங்களிலிருந்து விடுபட பல ஆக்கப் பூர்வமானதை கூறினாலும் மனம் அதை ஏற்காது. அதே கணம் அந்த எண்ணத்திலிருந்து வெளிவர மறுக்கும். தற்பொழுது நம் அபியும் இப்படியான எதிர்மறை எண்ணத்தில் தான் உழன்று கொண்டிருக்கிறான்.
உண்மையை சொல்லப்போனால் இங்கு எவருமே நிறை குடமென்று இல்லை. அனைவரிடத்திலும் சிறு சிறு குறைகள் இருக்க தான் செய்கிறது. அந்த வகையில் அபியும் அடக்கம். அபி மிஸ்டர் பெர்ஃபேக்ட் ரகமில்லை தான். ஆனால் இம்பெர்ஃபேக்ட் ரகமென்றும் கூறிவிட முடியாது.
நம் ஊரில் ஒரு பழமொழி உண்டு “பொண்டாட்டி செத்தா புது மாப்பிள்ளை…” என்று. அப்படியா இருந்தான் இவன்? இல்லையே…
மனைவியின் இறப்பிற்கு மூலக் காரணம் பணமென்று உணர்ந்த நொடியிலிருந்து அவனது பிள்ளைகளையும் சரி, அவனது தாயையும் சரி பணத்திற்காக மற்றவர்களிடம் கையேந்த விடவில்லை. அவர்களின் சந்தோஷத்திற்காக நேரம், காலம் பாராமல் உழைத்தான்.
‘பணமில்லாத ஒருத்தனுக்கு எதுக்கு டா குடும்பம், குழந்தையெல்லாம்…’ என கூறியவர்களின் முன்னால் தலை நிமிர்ந்து நிற்கிறான்.
தெரியாததை கற்றுக் கொண்டு, தெரிந்ததை மேலும் மெருகேற்றி கொண்டு, தன் ஆரம்பக்கட்ட தொழிலைத் தொடங்கியவன் இன்று பலரும் தேடி வந்து நட்பு பாராட்டும் அளவிற்கு உயர்ந்து நிற்கிறான் என்றால் சாதாரணமானது அல்ல…
ஒரு மனம் அவன் மீது எதிர்மறை எண்ணங்களோடு குற்றங்களை மட்டுமே முன் வைத்துக் கொண்டிருக்க… மற்றொரு மனம் அவனிற்கு ஊக்கத்தை அளித்து கொண்டேயிருந்தது.
இரு மனங்களின் போராட்டத்தில் எப்பொழுதும் போல எதிர்மறை எண்ணங்களை விதைக்கும் மனமே வெற்றிப் பெற்றது.அக்கணம் குற்ற உணர்வால் கண்களை இறுக மூடிக் கொண்டான்.
‘கண்ணை மூடிட்டா நீ பண்ணதெல்லாம் எதுவுமில்லைன்னு ஆயிடுமா?…’ என அதிகாரமாக கேட்ட மனதிற்கு பதில் சொல்லாமல் கண்களைத் திறந்தவன் நீண்ட நெடிய பெருமூச்சுடன் பிள்ளைகளைப் பார்த்தான்.
இருவரும் பூக்களை பறிப்பதில் மும்மரமாக இருந்தனர். “அப்பா,எனி டைம் ஆபிஸ்ல மட்டுமே இருக்கேன். அதிகமா உங்களோட டைம் ஸ்பெண்ட் பண்றது இல்லைன்னு உங்களுக்கு என்மேல கோபம் வரலையா?…” எனக் கேட்டான்.
‘அதை கேட்டு என்ன செய்ய போற? அவங்களோட இருக்க போறயா என்ன? ஜஸ்ட் ஒரு பேச்சுக்கு கேட்டுட்டு அதை அப்படியே விட்டுட்டு அடுத்த வேலையை பார்க்க போறவனுக்கு எதுக்கு இந்த தேவை இல்லாத கேள்வி…” எனக் கேட்ட மதியை மீறி, அக்கேள்வியை குழந்தைகளிடம் கேட்டான்.
பிள்ளைகள் இருவருக்கும் தந்தையின் கேள்வி புரிந்தும் புரியா நிலை தான். இருந்தும் குந்தவி தன் மழலை மொழியில் “அம்மா சாமிகிட்ட போகறதுக்கு காரணம், நம்மகிட்ட காசு இல்லைன்னு தானே ப்பா.இப்ப நமக்கு காசு வேணும்னா நீங்க ஆபிஸ் போகணும் தானே…” என்றோ ஒருநாள் பெரியவர் கூறியதை அப்படியே மழலை மொழியில் கூறினாள்.
மகளின் பேச்சில் கண்கள் இரண்டும் கலங்கி விட்டது அபிக்கு… அதை இளையவர்களுக்கு காட்டாமல் மறைத்தவன் பிள்ளைகளை பார்த்தான்.
“ஆரம்பித்துல நீங்க எங்களோட இருக்க மாட்டீங்கிறீங்கண்ணு கோபமா தான் இருந்தது. ஆனா நாங்க ஸ்கூலுக்கு போறதுக்கும், இவ்வளவு பெரிய வீட்டுல இருக்கறதுக்கும் நீங்க ஆபிஸ் போறது தான் காரணம்னு பாட்டி சொன்னாங்க…” என்றாள் மேலும்.
அவளது பேச்சில் சோழாவிற்கு என்ன புரிந்ததோ அவனும் “ஆமா அதனாலே தான் நாங்க உங்க மேல கோபமா இருக்கோம்…” என்றான் கொஞ்சிடும் மழலை குரலில்.
சிறுவனின் பேச்சில் கண்களில் தேங்கி நின்ற நீரும், இதழ்களில் மறைந்திருந்த சிரிப்பும் ஒரு சேர வெளிவந்தது. கண்களைத் தாண்டி கன்னத்தில் வழியும் நீரை துடைக்க கூட மனமின்றி இளையவர்கள் இருவரையும் இறுக்கமாக கட்டிக் கொண்டவன் “இரண்டு பேரும். அப்பாவை மன்னிப்பிங்களா?” எனக் கேட்டான் உடைந்த குரலில்.
தந்தையின் கண்ணீர் பிள்ளைகளையும் அசைத்து விட்டது போல. தந்தையின் இறுகிய பிடியில் இருந்தவாறே “அப்பா…” என்றனர் ஏக்கத்துடன்.
தன்னிலிருந்து பிரித்து பிள்ளைகளின் உச்சியில் வாஞ்சையுடன் முத்தமிட்டவன், அவர்களின் கல்லம் கபடமற்ற அன்பில் பாகாய் உருகித்தான் போனான். பிள்ளைகளின் கேசத்தை அழுத்திக் கோதிக் கொண்டே
“இனிமே அப்பா எப்பவும் உங்களோட தான் இருப்பேன். உங்களை தவிக்க விட மாட்டேன்…” இதுவரை காட்டாத அன்பையெல்லாம் அவர்களிடன் கொஞ்சி கொஞ்சி காட்டினான்.
தந்தையின் கம்பீரத்தையே பார்த்து வந்த குழந்தைகள், அழன் கன்னங்களில் கண்ணீரைக் கண்டதும் பிஞ்சு விரல்களை வைத்து கன்னங்களை துடைத்தவர்கள், “அழாதிங்கப்பா நீங்க அழுதா எனக்கும் அழுகை வருது…” என்று சொல்லி அவன் அழுகைக்கு தடை விதித்தனர்.
உதட்டைப் பிதுக்கி தலையசைத்து அவர்கள் கூறிய விதம் அனிதாவை நினைவுப் படுத்தியது அவனுக்கு. அதுமட்டுமல்ல அவர்கள் மீது எழுந்த வாசனைக் கூட மனைவியின் மீதிருந்த வாசனைப் போல் தான் தோன்றியது அபிக்கு…
இத்தனை நாட்களாக அவர்களோடு தான் இருக்கிறான் ஆனால் அவர்களிடத்தில் அவன் மனைவியை உணர்ந்ததே இல்லை…
தோளில் துண்டைப் போட்டுக் கொண்டு, என் துண்டை காணவில்லை என்று தெருவில் தேடிக் கொண்டிருந்த கதையாக, காற்றிலும், மழைச் சாரலிலும் தானே அவனது மனைவியை தேடிக் கொண்டிருந்தான். இன்று அவனது மனைவியை பிள்ளைகளிடத்தில் காணவும் அவர்களை இறுக அணைத்து கொண்டான். இனி உங்களை விட மாட்டேன் என்பது போல.
******
அதே சமயம் இங்கு வீட்டினுள் நுழைந்த ஆனந்தியைக் கண்டதும் “என்னாச்சு மா? ஏன் உன் முகம் இப்படி இருண்டிருக்கு…” எனக் கேட்டார் சீதா… சட்டென கேட்ட அவரது குரலில் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள்.
அவளது பயந்த முகத்தை பார்த்தவர் பெண்ணின் அருகில் சென்று அவளது கேசத்தை அழுத்திக் கோதிக் கொண்டே “என்னமா?…” எனக் கேட்டார்.
“ஒன்னுமில்ல…” என்பதை போல் தலையாட்டினாள்.
‘அபியை பார்த்து தான் இப்படி பயந்து வராளோ?…”என எண்ணியவருக்கு அன்றைய இரவில் முகம் முழுக்க சிவந்து “என்கிட்ட தப்பா நடக்க வந்தாரு. நான் நான் கத்தி…” பயத்தில் நடுங்கியப்படி பாதி மென்று மென்று கூறியவளின் முகம் நினைவு வந்தது சிதாவிற்கு.
அன்றைய தினம் இவளுள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என நினைத்தவர் “சரி முதல்ல உட்காரு…” என்று சோபாவில் அவளை அமர வைத்துவிட்டு சமையலறைக்குள் நுழைந்தார்.
அடுத்த சில நிமிடங்களில் அவரது கையில் லெமன் ஜூஸ் இருந்தது.
“இந்தம்மா முதல்ல இதை குடி…” என ஜூஸை நீட்டிட மறுக்காமல் அதனை வாங்கி பருகினாள்.
பாவையை இமைக்காமல் பார்த்து கொண்டிருந்த சீதாவோ மெல்ல பேச்சை ஆரம்பித்தார். “உன்னோட நிலைமை புரியுது மா, இருந்தாலும் சொல்றேன் நீ பயந்து ஓடி வர அளவுக்கு என் மகன் மோசம் இல்லை. அவனைப் பத்தி உனக்கே தெரியும்னு நினைக்கிறேன்” என்றதும் கண்களை இறுக மூடித் திறந்தாள். அவளுக்குமே இது தெரியுமே இருந்தும் ஒரு மனம் அன்றைய நாளை எண்ணி கலங்கிக் கொண்டே இருக்கிறது. அந்த கலக்கம் பயமாய் உருமாறி அவளை பந்தாடிக் கொண்டிருக்கிறது.r
ஆனந்தியின் அமைதியை உள்வாங்கிக் கொண்டே
“அன்னைக்கு அவன் நடந்துக்கிட்ட முறை தப்பு தான் இல்லைன்னு சொல்லல… அதுக்காக தினமும் பயந்துட்டே இருந்தா சரியாகிடுமா? ஒன்னு புரிஞ்சுக்க மா, நம்ம தப்பு செஞ்சா தான் பயப்படவே வேணும். நம்ம தப்பு செய்யலன்னா தைரியமா நின்னு பேசலாம். அவனைப் பார்த்து பயந்து ஓடி வராம நிமிர்ந்து நின்று தைரியமா பேசு” என்றதும் சரியென்று தலையாட்டினாள்.
“லெமன் ஜூஸ் பசங்களுக்கும் சேர்த்து தான் போட்டு வைச்சிருக்கேன். அவங்களை போயி கூட்டிட்டு வா?..” அவள் கையிலிருந்த டம்பளரை வாங்கி கொண்டே கூறினார்.
சற்று தயங்கினாலும் “ம்ம்…” என்றபடி மீண்டும் தோட்டத்தை நோக்கி நடந்தவள் இளையவர்களை அழைத்து கொண்டே தோட்டத்தில் நுழைந்தாள்.
****
அதே கணம் தன் பிள்ளைகளை அணைத்தபடி நின்றவன் காதில் “சோழா, குந்தவி…” என்ற ஆனந்தியின் அழைப்பு கேட்டது.
இளையாளின் குரலில் குழந்தைகளை தன்னிடமிருந்து பிரித்தவன் குரல் வந்த திசையை பார்த்தான்.
தங்களை நோக்கி தான் வந்து கொண்டிருந்தாள். அவளைக் கண்டதும் அன்றைய இரவின் நிகழ்வுகள் தன்னாலேயே கண்களுக்குள் வந்து விழுந்தன… ‘அன்னைக்கு அப்படி நடந்துகிட்டதுத் தப்பு தான் என்னை மன்னிச்சிடுன்னு’ மன்னிப்பு கேளு…’ என்று மனம் கட்டளையிட்டது. ஆனால் மதியோ ‘அவள் பேசின பேச்சுக்கு நீ பண்ணது சரி தான். மன்னிப்பு கேட்கிற அளவுக்கு வொர்த் இல்லை…’ என்றது.
ஏனோ இன்றைய மனநிலைக்கு மதிக் கூறுவது சரியென்று தோன்றாமல் மனம் கூறுவதே சரியென்று தோன்றியது அபிக்கு.. அதனாலயே மாயோளிடம் மன்னிப்பு கேட்க நினைத்தான்.
“பாட்டி ஜுஸ் போட்டிருக்காங்க வாங்க…” பிள்ளைகளிடம் மட்டுமே அவளது பார்வையும், பேச்சும் இருந்தது. ஆனந்தியின் கேள்விக்கு பதில் சொல்லாமல் தந்தையை பார்த்தனர் இருவரும்.
குழந்தைகளின் பார்வை தன் மீதிருப்பதை உணர்ந்தவன் ஆனந்தியின் மீதிருந்த பார்வையை அகற்றி குழந்தைகளைப் பார்த்து “போங்க…” என்பது போல் தலையசைத்தான்.
அவர்கள் இருவரும் ஆனந்தியை தாண்டி முன்னால் ஓடிட, அவர்களின் பின்னாலேயே அவள் நடக்க, இவனோ இல்லக்கிழத்தியை எப்படி அழைப்பது என்பதைப் போல் நின்றிருந்தான்.
மாயோள் வீட்டினுள் நுழையும் முன்பே அழைத்திட வேண்டும் என நினைத்தவன் “ஒரு நிமிசம் நில்லு…” என்றான். ஆடவனது குரலில் அத்தனை அதிகாரம் இருந்தது.
அவனது அதிகார குரலில் மங்கையின் உடலில் ஓர் நடுக்கம் சூழ்ந்தது. அதே கணம் அவளது மனதில் ஒருவித கோபம் எழுந்தது. அந்த கோபம் அன்றைய நாளை மீண்டும் மீண்டும் நினைவுப் படுத்தியது.
அதன் விளைவு ஆடவனது குரலை கேட்டும் கேட்காமல் முன்னால் நடந்தாள். பாவையின் இந்த செய்கை ஆடவனின் கோபத்தை தூண்ட போதுமானதாக இருந்தது.
சட்டென மூண்ட கோபத்துடன் பெண்ணின் முன் சென்று நின்றவன் “உன்னை தான் நிக்க சொன்னேன்…” என்றான் பல்லைக் கடித்துக்கொண்டு.
அவனை நிமிர்ந்து பார்த்தவளின் கண்களில் அத்தனை கோபம், அதை அப்படியே வார்த்தைகளில் தேக்கி “நீ நில்லுன்னா நிக்கறதுக்கும், படுன்னா படுக்கறதுக்கு வேற ஆளை பாரு. என்கிட்ட இந்த வேலையெல்லாம் வைச்சுக்காத…”என்று அவள் கைநீட்டி மிரட்டிய விதமும், பேசிய பேச்சும் அவனுக்கு மேலும் கோபத்தை கொடுத்தது.
“ஏய்…”என்று கையை ஓங்கிட, சட்டென ஆனந்தியின் விழிகள் கலங்கியது…
நுண்ணிடையாளின் கலங்கிய விழிகளை பார்த்தவன் “ச்சை…” என்றபடி அங்கிருந்த கல் பெஞ்சில் ஓங்கி அடித்தான். அதன் விளைவு ஏற்கனவே காயம் பட்டு குணமாகிக் கொண்டிருந்த இடம் மேலும் காயமடைந்தது.
அவனையும், அவனது கையையும் ஒரு பார்வை பார்த்தவள் வேகமாக அங்கிருந்து ஓடினாள். இங்கு அவனது கைகளில் இரத்தம் வழிய தொடங்கியிருந்தது.
***
நேராக தன் அறைக்குள் நுழைந்தவளின் எண்ணம் முழுவதும் அவன் மட்டுமே நிறைந்திருந்தான். “என்ன தான் இருந்தாலும் நீ இப்படி பேசியிருக்க கூடாது ஆனந்தி. உன்னை துரத்திட்டு வந்த அந்த நாலு பேரை விட, உன் மேல பழி போட்ட ஊர்காரங்களை விட, உன்னை தப்பா பேசின உன் அண்ணியை விடவா இவன் மோசம்?” எனக் கேட்ட மனதிற்கு பதில் சொல்லாமல் அமைதியாக அமர்ந்திருந்தவளின் எண்ணம் முழுவதும் அபியின் இரத்தம் வழிந்த கையில் மட்டுமே இருந்தது.
அக்கணம் அவளையும் அறியாமல் அவளுள் ஓர் மனிதாபிமானமும் எட்டிப் பார்த்தது… அதன் பின் வேறு எதைப் பற்றியும் யோசிக்காமல் முதலுதவி பெட்டியை எடுத்தவள் கார்டனை நோக்கி நடந்தாள்.
அங்கு அவனது கைக்கு முதலுதவி செய்து கொண்டிருந்தார் சீதா. நிமிடம் அவர்களையே இமைக்காது பார்த்தவள் அங்கிருந்து நகர்ந்தாள்.
அதற்கு பின்னான நிமிடங்கள் முழுவதும் ஆனந்திக்கு தன் அறையிலேயே கழிய அபிக்கு பிள்ளைகளோடு கழிந்தது.
“ஆனந்தி சாப்பிட வா மா…” என்று ஒன்றுக்கு இரண்டு முறை அழைத்து விட்டார் சீதா.
அதற்கு மேல் அறையிலேயே அமர்ந்திருந்தால் நன்றாக இருக்காது என நினைத்தவள் மடியிலிருந்த புத்தகத்தை டேபிளில் வைத்தபடி டைனிங் ரூமை நோக்கி நடந்தாள்.
அங்கு இளையவர்களோடு அபியும் அமர்ந்திருந்தான். அவளையும் அறியாமல் மெல்லிய தயக்கம் எழ அப்படியே நின்றுவிட்டாள்.
“ஏன் அங்கயே நின்னுட்ட வா மா…” தயங்கியப்படி நின்றவளை அழைத்தார் சீதா.
“ம்ம்..” என்றபடி அவர்களை நோக்கி நடந்தவள் அபிக்கு எதிரில் இருந்த நாற்காலியில் அமர்ந்தாள். மறந்தும் அவனை நிமிர்ந்து பார்க்கவில்லை அவள்.
“தோசை ஓகே தானே…” எனக் கேட்டபடி இரண்டு தோசையை அவளது தட்டில் வைத்தார்.
“போதும் மேம்…” என்றவள் சாப்பிட ஆரம்பிக்க, அதற்குள் பிள்ளைகள் இருவரும் உண்டு முடித்திருந்தனர்.
சோழா அமர்ந்தபடியே உறங்க ஆரம்பிக்கவும் “குந்தவி தம்பி தூங்குறான் பாரு….” என்றபடி அபியின் தட்டில் இரண்டு தோசையை வைத்தார்.
சிறியவளிடம் பதில் இல்லாமல் போகவும் மூவரின் கவனமும் பிள்ளைகளிடத்தில் சென்றது. குந்தவியும் கண்கள் சொருகி பாதி உறக்கத்தில் இருந்தாள்.
தலையில் தட்டிக் கொண்டே “சாப்பிட சாப்பிட எப்படி தான் தூக்கம் வருமோ. எல்லாம் அவன் அப்பனை மாதிரியே இருக்கு…” முனகி கொண்டே அபியின் தட்டில் சட்னியை ஊற்றியவர் சிறியவளின் கைகளை கழுவி விட்டு அவளை எழுப்பி விட்டு சோழாவை தூக்கிக் கொண்டார்.
“அச்சோ இருங்கம்மா நான் வரேன்…” என்றபடி ஆனந்தி எழவும்
“அட பொண்ணே, நீ உட்கார்ந்து சாப்பிடு. நான் என்னோட ரூமில இவங்களை படுக்க வைச்சுக்கிறேன்…” என்றவர் டைனிங் அறையை ஒட்டியப்படியிருந்த அவரது அறையை நோக்கி நடந்தார்.
இப்பொழுது அபியும், ஆனந்தியும் மட்டுமே அவ்விடத்தில்…
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
9
+1
+1
